Friday, 27 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 11. உறவுகள் நமது வாழ்வை வலு(ள)ப்படுத்தும் அருட்கொடைகள்!!

 அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 11.

உறவுகள் நமது வாழ்வை வலு(ள)ப்படுத்தும் அருட்கொடைகள்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் பத்தாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, 11 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

ரஹ்மத்தினுடைய முதல் பத்தை நிறைவு செய்து மஃக்ஃபிரத்துடைய பத்தின் துவக்க நாளில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய ரஹ்மத்தைப் பெற்ற மேன்மக்களில் ஒருவராக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! அவனுடைய மகத்தான மன்னிப்பைப் பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்!

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அர் ரஅதின் 21 வது வசனம் உறவுகளைச் சேர்ந்து வாழ்வதன் மகத்துவத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அறிவுடையோர் மற்றும் நல்லோர்களின் பண்புகளில் ஒன்றாக உறவுகளைச் சேர்ந்து வாழ்வதை குறிப்பிடுகின்றான்.

وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ 

மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.

இன்று நம்மிடையே உறவுகள் உடனான தொடர்பும் நெருக்கமும் எப்படி இருக்கிறது என்பதை நம் மனக் கண் முன்னே ஒரு முறை கொண்டு வந்து நிறுத்திப் பார்ப்போம்.

நூறு நபர்கள் அமர்ந்திருக்கும் ஒரு சபையில் உறவுகளைச் சேர்ந்து வாழ்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவுக்கு தான் நாம் உறவுகளுடன் தொடர்பிலும் நெருக்கத்திலும் இருக்கின்றோம்.

وأخرج البيهقي عن عبد الله بن أبي أوفى قال: " كنا جلوساً مع رسول الله صلى الله عليه وسلم عشية عرفة في حلقة فقال: إنا لا نحل لرجل أمسى قاطع رحم إلا قام عنا فلم يقم إذا فتى كان في أقصى الحلقة فأتى خالة له فقالت: ما جاء بك؟ فأخبرها بما قال النبي صلى الله عليه وسلم ثم رجع فجلس في مجلسه فقال له النبي صلى الله عليه وسلم ما لي لا أرى أحداً قام من الحلقة غيرك فأخبره بما قال لخالته وما قالت له فقال: اجلس فقد أحسنت ألا أنها لا تنزل الرحمة على قوم فيهم قاطع رحم" .

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- ஒரு நாள் நாங்கள் நபி அவர்களோடு சேர்ந்து சபையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது நபி அவர்கள் நேற்றைய பொழுதில் தம் உறவுகளில் ஒரு உறவை துண்டித்த எவரும் நம்முடன் இந்த சபையில் அமர வேண்டாம்" என்று கூறிய போது சபையில் கடைசி பகுதியில் இருந்த ஒரு இளைஞர் அந்த சபையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.

வெளியே சென்ற அவர் நேராக அவருடைய சாச்சி - தாயின் சகோதரி வீட்டிற்கு சென்றார். அவர் திடீரென தமது வீட்டிற்கு வந்ததை கண்ட அவரின் சாச்சி - தாயின் சகோதரி என்ன இப்போது வந்திருக்கின்றாய்? என்று வினவியதற்கு, நபி அவர்கள் சபையில் கூறியதை தெரிவித்து (தமது தவருக்காக வருத்தம் தெரிவித்து) அங்கிருந்து மீண்டும் வந்து முன்பு தாம் இருந்த இடத்தில் அமர்ந்தார்.

அப்போது, நபி அவர்கள் நான் இன்னின்னவாரு சொன்ன போது உம்மைத் தவிர வேறு யாரும் சபையில் இருந்து எழுந்து செல்ல வில்லையே? நீர் மட்டும் சென்று வருகின்றீரே? என்ன காரணம் என்று கேட்டார்கள்.

அதற்கவர், எனக்கும் என் சாச்சி - தாயின் சகோதரிக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் இருந்தது. அதை சரி செய்து விட்டு வந்தேன் என்று கூறினார். 

அப்போது நபி அவர்கள் "நீர் நல்லதே செய்தீர், அழகிய காரியத்தையே செய்துள்ளீர்" என்று கூறி விட்டு "எந்த சபையில் உறவைத் துண்டித்து வாழ்பவர் அமர்ந்திருப்பாரோ அந்த சபையில் அல்லாஹ்வின் ரஹ்மத்தை அல்லாஹ் இறக்குவதில்லை" என்று கூறினார்கள். ( நூல்: பைஹகீ )

இன்று நாம் எத்தனையோ மகிழ்ச்சியான, சுப காரியங்கள் நடைபெறும் வீடுகளைப் பார்க்கின்றோம். அந்த வீட்டாரின் நெருங்கிய இரத்த உறவுகள் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக, மனஸ்தாபம் காரணமாக, சண்டை சச்சரவு, கொடுக்கல் வாங்கல் காரணமாக அழைக்கப்படாமல் ஊரின், வெளியூரின் பெரிய மனிதர்களும் பிரபலங்களும் அழைக்கப்பட்டு வெகு விமரிசையாக அந்த சுப காரியங்கள் நடைபெறுவதைப் பார்க்கின்றோம்.

அந்த சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கேட்கப்படும் துஆக்களின் நிலையை எண்ணி நாம் கவலைப்பட வேண்டும்.

உண்மையில் அழைக்கப்படாத அந்த மனதின் ரணம் இந்த சமூகத்தில் எவராலும் உணரப்படுவதே இல்லை.

சாமானிய மக்கள் முதல் ஈமானிய உயர் மனிதர் வரை இந்த விஷயத்தில் நம்மில் பலரும் தோற்றுப் போய் தான் இருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் உறவுகள் விஷயத்தில் பாதுகாத்து அருள்வானாக! பெருந்தன்மையோடு மன்னித்து வாழ அரவணைத்துச் செல்ல அருள் புரிவானாக!

உறவுகள் விஷயத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த அளவுக்கு நெருங்கி வாழச் சொல்கின்றான் என்று பாருங்கள்.

நீங்கள் ஜகாத் கடமையான ஒரு செல்வந்தராக, அதை மிகக் கவனமாக நிறைவேற்றும் ஒரு ஈமான் தாரியாக, தான தர்மங்களை வாரி வாரி வழங்கும் வள்ளலாக இருக்கின்றீர்கள்.

உங்களிடம் போதுமான செல்வம் இருக்கிறது. உங்கள் தலைமுறைக்கும் தேவையான வசதி வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த நேரத்தில் நீங்கள் நீண்ட காலமாக எதிர் பார்த்த அல்லது எதிர் பார்க்கவே செய்யாத பாகப்பிரிவினை மூலம் ஒரு பொருளாதாரம், ஒரு சொத்து, அல்லது தங்க நகை இப்படி ஏதோ ஒன்று உங்கள் கைக்கு வந்து சேர்கிறது. அதை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அதை நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காட்டும் வழி இருக்கிறதே சுப்ஹானல்லாஹ்.. மிகவும் அலாதியானது! இதோ கேளுங்கள்!

وَإِذَا حَضَرَ ٱلْقِسْمَةَ أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينُ فَٱرْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًۭا مَّعْرُوفًۭا

பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உங்கள் உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். ( அல்குர்ஆன்: 4: 8 )

உடன் பிறந்தவர்களுக்கும், சொத்து பெற பாத்தியப்பட்ட உறவுகளுக்குமே சொத்து வழங்கிட மறுக்கும் இன்றைய சூழலில் சொத்துக்கு சம்பந்தமே இல்லாத உறவுகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிட கூறுகின்றான் என்றால் அந்த "உறவுகள்" எத்துணை மகத்துவமும் மாண்பும் நிறைந்தது என நாம் எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

உறவுகளை நாம் தேர்வு செய்கின்றோமா?

உலகில் மனிதர்களாகிய நமக்கு இடையே ஏற்படும் எந்த உறவாக இருந்தாலும் நட்பு உட்பட அனைத்து உறவுகளும் அல்லாஹ்வே நமக்காக தேர்வு செய்ததாகும்.

ஈமானிய சகோதரத்துவ உறவு...

وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءًۭ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَٰنًۭا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍۢ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். ( அல்குர்ஆன்: 3: 103 )

நட்பெனும் உறவு...

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا 

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.

இரு உறவுகளிடையே பிணைப்பை ஏற்படுத்துவது இறைவனின் தேர்வாகும்.

எந்த உறவாக இருந்தாலும் இரு தரப்பிலும் அல்லாஹ்வின் இணைப்பும் பிணைப்புமே பிரதான அம்சமாகும்.

وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 8: 63 )

அத்தனை உறவுகளில் முதன்மையான உறவு இரத்த உறவாகும். 

وَهُوَ الَّذِیْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِیْرًا 

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். ( அல்குர்ஆன்: 25: 54 )

இவர் உன் தந்தை, இவர் உன் சாச்சா, இவர் மாமா, இவர் உன் சகோதரன், இவர் உன் தாய், இவர் உன் மாமி, இவர் உன் சகோதரி, இவள் உன் மனைவி, இவர் உன் மச்சான் என்ற உறவு முறைகள் அல்லாஹ் செய்த தேர்வாகும். இந்தத் தேர்ந்தெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.

இபாதத் ஆகும்.

உறவுகளைப் பேணி வாழ்வது உலகியல் நோக்கங்களைத் தாண்டி மிகவும் புனிதமானது.

ஆம்! அது ஈமானோடும், அல்லாஹ்வுடனும் தொடர்பில் ஒரு மகத்தான ஓர் அம்சமாகும். பாக்கியமிழந்தவர்களைத் தவிர வேறு யாரும் உறவுகளை பாழ்படுத்த மாட்டார்.

عن أبي هريرة، عن النبي ﷺ قال: «من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه،

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ( நூல்: : புகாரி, முஸ்லிம் )

عن أبي هريرة –رضي الله عنه- قال: قال رسول الله –صلى الله عليه وسلم-: ........أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعك؟

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இரத்த உறவைப் பார்த்து யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உன்னைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்என்று கூறினான். என்று நபி அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்: புகாரி )

பகைமையைத் தொடராதே!

இன்று நம்மில் பலர் காலம் சென்றவர்கள் செய்த தவறுகளை மனதில் வைத்துக் கொண்டு அவர்களின் சந்ததியினர்களோடு பகைமை வளர்த்து வருகின்றனர். அது தவறான செயலாகும்.

நபி அவர்களோடு பெரும் பகையோடு வாழ்ந்த அபூலஹப், கடுஞ் சொற்களால் நபி அவர்களை விமர்சனம் செய்த அவரின் மனைவி என அவர்களின் துரோகத்தை தூர எறிந்து விட்டு அவர்களின் மகளோடு உறவைப் பேணிய மாநபி அவர்கள்.

روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .

அண்ணல் நபி அவர்களின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா பின்த் அபூலஹப் (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார் . அந்தப் பெண்மணி அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாகஅழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்து, ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும், உமது தாயின் தகாத செயலினாலும், அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும், தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லைஎன்று.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர், மிம்பரின் மீதேறி மக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.என்று கூறினார்கள்.

பின்னர், துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து எவர் உம்மை கோபப்படுத்துவாரோ, அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.என்று கூறினார்கள்.

பின்னர், இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா, தபகாத் இப்னு ஸஅத், அல் இஸ்தீஆப். )

மன்னித்து விட்டுத் தள்ளுங்கள்! பெருந்தன்மையோடு ஒட்டிச் செல்லுங்கள் 

عن أبي هريرة رضي الله عنه أن رجل جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن لي قرابة أصلهم ويقطعوني وأحسن إليهم ويسيئون إليَّ وأحلم عنهم ويجهلون عليَّ، فقال صلى الله عليه وسلم: « لئن كنت قلت فكأنما تسفهم المل، ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك» رواه مسلم.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் நபி அவர்களின் திருமுன் வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவுகள் இருக்கின்றார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் மிகச் சரியாக நிறை வேற்றி வருகின்றேன். ஆனால், அவர்களோ என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்கின்றேன்.

ஆனால், அவர்களோ என்னுடன் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர்.நான் அவர்களோடு பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் நடந்து கொள்கின்றேன். ஆனால், அவர்களோ என்னுடன் மிகவும் அறிவீனமாக நடந்து கொள்கின்றனர்என்று முறையிட்டார்.

அதற்கு, நபி அவர்கள் நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவதைப் போன்றதாகும்.

அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான்; இதே பண்பில் நீர் நிலைத்திருக்கும் வரை!என்று பதில் கூறினார்கள். ( நூல்:முஸ்லிம் )

தாயின் உறவை பேணிப் பாதுகாத்து வாருங்கள்!

உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்மைப் பெற்றெடுத்த தாயின் உறவுக்கு ஈடோ இணையோ இல்லை. ஆனால், அந்தத் தாயிடம் கூட இன்று எத்தனையோ மனிதர்கள் பகைமை வளர்த்து வருவதை பார்த்து வருகின்றோம்.

وروى البخاري في الأدب المفرد عن أبي الطفيل قال

 "رأيت النبي -صلى الله عليه وسلم- يقسم لحماً بالجعرانة، وأنا يومئذ غلامٌ أحمل عضو البعير، فأتته امرأةٌ فبسط لها رداءه، قلت: من هذه؟ قيل: هذه أمه التي أرضعته"، أي: هي حليمة السعدية -رضي الله عنها-، مد لها رداءه.

ஜிஇர்ரானா எனும் இடத்தில் நான் இறைச்சிகளை பங்கிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது வயது முதிர்ந்த பெண்மணி அந்த இடத்திற்கு வருகை தந்தார்கள். அப்போது அங்கிருந்த நபி அவர்கள் எழுந்து அவர்களை வரவேற்று தங்களின் மேலாடையை விரித்து அதிலே அமரச் சொன்னார்கள்.

வியப்போடு அதைப் பார்த்து நான் இவர் யார்? என்று கேட்ட போது இவர் ஹலீமா அஸ்ஸஅதிய்யா (ரலி) ஆவார். எனக்கு பால்குடித் தாயாவார்கள்என மாநபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: அல் அதபுல் முஃப்ரத் )

மாநபி {ஸல்} பிறந்த 6 மாதங்களுக்குப் பின்னர் பால்கொடுக்க ஆரம்பித்து, பால்குடி நிறுத்தும் வயதா 2 வயது வரை ஹலீமா (ரலி) அவர்கள் மாநபி அவர்களுக்கு பால் கொடுத்தார்கள். பின்னர், 50 மாதங்கள் பெருமானார் அவர்கள் ஹலீமா (ரலி) அவர்களின் பராமரிப்பில் வளர்ந்தார்கள். என அப்துல் ஹமீத் கதீப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பால் கொடுத்த செவிலித்தாயாரோடே இவ்வளவு மரியாதையோடு நடக்க வேண்டுமானால் நம்மோடு வாழ்ந்து வரும் நம் தாயோடு நாம் எப்படி நடந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உறவுகளை மதித்து வாழுங்கள்!

عن عائشة -رضي الله عنها- قالت استأذنت هالة بنتُّ خويلد -أخت خديجة- على رسول الله صلى الله عليه وسلم، فعرف استئذان خديجة، فارتاح لذلك، فقال: اللهمَّ هالة. قالت: فَغِرْت. فقلت: ما تذكر من عجوز من عجائز قريش، حمراء الشِّدقين، هلكت في الدَّهر، قد أبدلك الله خيرًا منها

ஹாலா பின்த்து குவைலித் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி இறைத்தூதர் அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே மாநபி அவர்கள் (கதீஜா ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, “இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்என்று கூறினார்கள்.

உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)என்று கேட்டேன். ( நூல்: புகாரி )

عاشت حسانة رضي الله عنها بعد أن غيّر النبي صلى الله عليه وسلم اسمها من جثامة إلى حسانة في المدينة عيشة كريمة تحت عناية النبي صلى الله عليه وسلم فكان يصلها ويرسل إليها الهدايا والعطايا فعن أنس رضي الله عنه قال كان إذا أُتِيَ بِشيءٍ للنبي صلى الله عليه وسلم يقولُ : «اذْهَبُوا بهِ إلى فُلانةَ ، فإِنَّها كانَتْ صَدِيقَةَ خديجةَ ، اذهبُو إلى بيتِ فلانةَ فإنَّها كانَتْ تُحبُّ خديجةَ» .

ஹஸ்ஸானா (ரலி) அவர்கள் மதீனாவில் பெருமானார் அவர்களின் அரவணைப்பில் மகத்தான வாழ்வு வாழ்ந்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பெருமானார் அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்புகள் வழங்கப்பட்டால் அதில் ஒரு பகுதியை என்னிடம் தந்து போய் கதீஜா (ரலி) அவர்களின் தோழியிடம் கொடுத்து வா! ஏனெனில், என் துணைவி கதீஜா (ரலி) அவர்களை நேசித்தவராக அவர் இருந்தார்என்று சொல்வார்கள்.

கடந்த கால உறவுகளை அரவணைத்து வாழுங்கள்!

عن عائشة رضي الله عنها قالت : جاءت عجوزٌ إلى النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وهو عندي فقال لها رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ : «من أنتِ ؟» قالت : أنا جثَّامةُ المُزنيَّةُ فقال : «بل أنتِ حسَّانةُ المُزنيَّةُ كيف أنتُم ؟ كيف حالكم ؟ كيف كنتُم بعدنا ؟» قالت : بخيرٍ بأبي أنت وأمِّي يا رسولَ اللهِ فلما خرجتُ قلتُ : يا رسولَ اللهِ تُقبِلْ على هذه العجوزِ هذا الإقبالَ فقال : «إنها كانت تأتينا زمنَ خديجةَ وإنَّ حسنَ العهدِ من الإيمانِ». (السلسلة الصحيحة

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னுடைய வீட்டில் நானும், நபி அவர்களும் அமர்ந்திருந்த போது மூதாட்டியொருவர் வருகை தந்து, மாநபி அவர்களைக் காண அனுமதி கோரினார்.

அப்போது, மாநபி அவர்கள் நீங்கள் யார்? என்று வினவினார்கள். அதற்கு, அந்த மூதாட்டி நான் தான் ஜஸ்ஸாமா அல் முஸனிய்யா என்று பதில் கூறினார்கள். வந்திருப்பது யார் என்பதை விளங்கிக் கொண்ட மாநபி அவர்கள் நீங்கள் ஹஸ்ஸானா அல் முஸனிய்யா என்று பெயரை மாற்றி விட்டு, அழகிய முறையில் நலம் விசாரித்தார்கள்.

நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது? எங்களுக்கு பின்னால் நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்? என்று அடுக்கடுக்கான விசாரிப்புகள்.

அதற்கு அந்த மூதாட்டி என் தாய் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! நலமாக இருக்கின்றேன்என்றார். சிறிது நேரத்திற்குப் பின் அவர் வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்றதும் ஒரு மூதாட்டிக்கு இவ்வளவு வரவேற்பும், உபசரிப்பும் தேவையா?” என்று கேட்டேன். அதற்கு, மாநபி அவர்கள் வந்து சென்ற அந்த மூதாட்டி அன்னை கதீஜா (ரலி) உயிரோடு இருக்கும் காலங்களில் எம் வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்தார்கள்என்று கூறி விட்டு கடந்த கால உறவுகளை பேணுவது ஈமானின் ஓர் அம்சமாகும்என்று கூறினார்கள். ( நூல்: அல் ஜாமிஉ )

நாம் எங்கே? அவர்கள் எங்கே?

தந்தையின் நண்பர்களின் உறவுகளைத் தொடர விரும்பிய, தொடர்ந்து உறவாடிய நபித்தோழர்களின் நன்மக்களான ஸஹாபிகள்.

كان عبد الله بن سلام مؤاخيًا لأبى الدرداء رضى الله عنهما. فلما مات عبد الله بن سلام ذهب ولده يوسف [3] إلى الشام ليسأل عن أبى الدرداء (تجديدًا للعهد، ورعاية للحرمة والألفة، وتأديةً للحقوق. فإن أبا الدرداء كان محبًّا لعبد الله بن سلام). فجاءه يوسف وهو يحتضر قد قارب مفارقة الدنيا. ففرح به أبو الدرداء.

பெருமானார் அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களையும் ஹிஜ்ரத் வந்த புதிதில் சகோதரர்களாக ஆக்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் உயிர் வாழ்கிற காலம் வரை இந்த உறவை மிகவும் பேணினார்கள்.

இந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் இறைவன் அழைப்பை ஏற்றார்கள்.

சில நாட்கள் கழித்து ஷாமில் வசித்து வருகிற அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்து, உறவை புதுப்பித்துக் கொள்ள அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களின் மகனார் யூஸுஃப் (ரலி) அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

ஆனால், அங்கே மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்தார் அபுத்தர்தா (ரலி) அவர்கள்.

யூஸுஃப் (ரலி) அவர்கள், அபுத்தர்தா (ரலி) அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து முடித்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் யூஸுஃபை நோக்கி என் சகோதரனின் மகனே! இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கின்றாயே ஏதாவது முக்கியமான வேலையா? என்று கேட்க, யூஸுஃப் (ரலி) அவர்கள் இல்லை! உங்களுக்கும் என் தந்தைக்குமிடையே இருந்த உறவை புதுப்பித்துக் கொள்ளவே இங்கு வந்தேன்!என்று பதில் கூறினார்கள்.

 

أخرج مسلم والترمذي عن ابن عمر رضي الله عنهما أنه كان إذا خرج إلى مكة أخذ معه حماراً له يتروح عليه إذا مل ركوب الراحلة، وعمامة يشد بها رأسه، فبينما هو يوماً على ذلك الحمار مر به أعرابي فقال له ابن عمر: ألست ابن فلان؟ قال: بلى فنزل ابن عمر عن حماره وأعطاه للرجل قائلا: اركب هذا ثم ناوله العمامة قائلاً: واشدد بهذه رأسك. ثم ودعه وانصرف فقال له بعض أصحابه: غفر الله لك، أعطيت هذا الأعرابي حماراً كنت تتروح عليه، وعمامة كنت تشد بها رأسك؟ فقال ابن عمر: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

 "إن من أبر البر صلة الرجل أهل ود أبيه بعد أن يولي –أي يموت- وإن أبا هذا كان وداً لوالدي عمر رضي الله عنه.

மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராமவாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள்.

தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார்.

(தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள். ( அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈமானின் அங்கமான, இபாத்களில் ஒன்றான உறவுகளைப் பேணி வாழ்கிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment