Tuesday, 3 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 15. இபாதுர் ரஹ்மான்களின் குணம் பெறுவோம்!!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 15.

இபாதுர் ரஹ்மான்களின் குணம் பெறுவோம்!!!



14 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 15 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அந்நூர், அல் ஃபுர்கான், அஷ் ஷுஅரா ஆகிய சூராக்கள் ஓதப்பட்டுள்ளன.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அல்ஃபுர்கானின் 63 வது ஆயத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதுர் ரஹ்மான் எனப்படும் தனது விசேஷமான அடியார்களிடம் காணப்படும் சில பண்புகளை சிலாகித்து கூறுகிறான். 

63 முதல் 75 வரையிலான 13 வசனங்கள் ஊடாக சுமார் 13 பண்புகளை பட்டியல் இடுகின்றான். அதில் ஒன்று அவர்கள் செலவினங்களில் நடுத்தரமாக சிக்கனமாக செயல்படுவார்கள்.

وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا

அவர்கள் (தர்மம்) அல்லது செலவு செய்தால் அளவு கடந்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் செய்வார்கள். ( அல்குர்ஆன்: 25 : 67 )

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹ் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي هَارُونُ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرٌ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ زِيَادٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، «يَحْلِفُ بِاللهِ مَا عَالَ مُقْتَصِدٌ قَطُّ

இமாம் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் சொன்னார்கள்:- சிக்கனமாக செலவு செய்கிறவர் ஒருபோதும் பிறரிடம் தேவையாக மாட்டார் என்று.

செல்வத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களும் செல்வத்தின் மத்திய நிலையில் இருப்பவர்களும் செல்வத்தின் உச்சத்தில் இருப்பவர்களும் கால சூழ்நிலைகள் மாறக்கூடியவை என்பதை மறந்து விடக்கூடாது.

ஒருவர் ஏழ்மையான சூழலில் வாழ்வதால் அவர் வாழ்நாள் எல்லாம் ஏழையாக இருப்பார் என்றோ அர்த்தமல்ல. ஒருவர் செல்வச் செழிப்பான சூழலில் வாழ்வதால் அவர் வாழ்நாள் எல்லாம் செல்வந்தராக இருப்பார் என்றோ கருதி விடக் கூடாது.

மாறாக, ஏழையை செல்வந்தனாக ஆக்குவதும் செல்வந்தனை ஏழையாக்குவதும் அல்லாஹ் தனது ஞானத்தின் படி செய்து முடிக்கிறான். எல்லாம் இந்த உலகத்தில் ஒரு சோதனைதான். 

ஆகவே, பணம் இல்லாத போது பரிதவிப்பதும், நெருக்கடியான சூழலில் நிலை குலைந்து போவதும், பணம் வரும் போது பந்தா பண்ணுவதும் தவிர்க்க வேண்டும்.

தனது வருங்கால தேவைகளை கவனத்தில் வைக்க வேண்டும். தனது குடும்பம், தனது பிள்ளைகளின் எதிர்கால கல்வி, மருத்துவம் திருமணம் போன்ற பல தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஓரளவிற்கு நல்ல சேமிப்பு இருப்பதை மார்க்கம் குறை சொல்லவில்லை. ஸகாத்தை நாம் சரியாக கொடுத்துவிட்டால் நாம் செல்வத்தை சேமிப்பதில் மார்க்கம் நம்மை குற்றம் பிடிக்காது.

இந்த இறைவசனத்தில் இரண்டு தீய பண்புகளை விட்டும் அவர்கள் தவிர்ந்து வாழ்வார்கள் என்று அல்லாஹ் அடையாளப் படுத்துகின்றான்.

1) வீண் விரயம் செய்யாமல் வாழ்வார்கள். 2) கருமித்தனம் செய்யாமல் வாழ்வார்கள்.

இதற்கான காரணங்களை அல்லாஹ் இன்னொரு வசனத்தில் குறிப்பிடுவான்.

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا

(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர். ( அல்குர்ஆன்: 17 : 29 )

கருமித்தனம் செய்யும் போது பிறரால் நிந்திக்கப்படும் சூழலையும், வீண் விரயம் செய்யும் போது ஒன்றுமில்லாம் பரிதவிப்புக்கு ஆளாகும் சூழலையும் வாழ்க்கையில் எதிர் கொள்ள வேண்டி வரும்.

عبدالملك بن مروان عندما أراد أن يزوِّج ابنته فاطمةَ لعمرَ بنِ عبدالعزيز، امتحنه، وسأله هذا السؤال؛ ليعرف ميزانه في الحياة وكيفية عيشه؛ فقال له: يا عمر ما نفقتك؟ (أي: كيف تنفق مالك؟) فقال عمر بن عبدالعزيز: يا أمير المؤمنين، نفقتي حسنة بين سيئتين؛ ثم تلا هذه الآية: ﴿ وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا ﴾ [الفرقان: 67]؛ فالسيئة الأولى هي الإسراف، والسيئة الثانية هي الإقتار؛ وهو البخل، والحسنة التي بينهما: الوسطية والاعتدال في النفقة، فعلِمَ عبدالملك أهلية عمر للزواج بابنته فاطمة، فزوَّجها له.

கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் (ரஹ்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினார்கள். தமக்கு மருமகனாக வரப்போகிற அவருடைய Lifestyle - வாழ்க்கைப் போங்கு எப்படி இருக்கிறது? என்பதை பரிசோதிக்க விரும்பினார்கள். அதற்காக ஒரு முறை அவர்களை சந்தித்து உரையாடி விட்டு, உரையாடல் இடையே உமரே! உம்முடைய செலவு செய்யும் முறை என்னவோ? எப்படி செலவு செய்கிறீர்? என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் "அமீருல் முஃமினீன் அவர்களே! இரண்டு தீமைகளுக்கு மத்தியில் அழகிய முறையில் அமைந்த செலவு செய்கிறேன்" என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். தொடர்ந்து உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் முதலாவது தீமை வீண் விரயம் இரண்டாவது தீமை கஞ்சத்தனம், அழகிய முறையில் அமைந்த செலவு என்பது செலவு செய்வதிலே நடுநிலை மற்றும் மற்றும் மத்தியஸ்தமான நிலையாகும் என்று கூறி முடித்தார்கள்.

இதன் பின்னர் இது குறித்து தமது குடும்பத்தினருடன் பேசி தமது மகளுக்கு பொருத்தமான கணவர் இவர் தான் என்று முடிவெடுத்து உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களுக்கே தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் செய்து கொடுத்தார்கள்.

நமது பயன்பாட்டின் தேவைக்கு ஏற்ப நாம் செலவிட வேண்டும்..

இன்று நம்மிடையே நுகர்வுக் கலாச்சாரம் பெருகி விட்டது. நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளும் அடுத்த முறை தொடர்ந்து பயன் படுத்தும் பொருட்கள் அல்ல. மாறாக, பொருட்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, பைக், கார், மொபைல், கம்யூட்டர், லேப்டாப் என மின்னனு சாதனங்கள் வரை இந்த நுகர்வு கலாச்சாரம் பெருகி விட்டது.

நபி அவர்களின் வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அன்றாடத் தேவைகளுக்கான சாதனங்கள் எவ்வாறு இருந்தது என்பதை எடுத்துக் கூறும் இரண்டு வரலாற்று நிகழ்வுகள்....

وفي صَحيحِ البخاريِّ أنَّ عُمرَ بنَ الخطَّابِ دخَل عليه صلَّى الله عليه وسلَّم وهو في مَشرُبَتِه، فوَجَده نائمًا على حَصيرٍ ما بَيْنَه وبَيْنَه شَيءٌ، وتَحْتَ رَأْسِه وِسادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُها لِيفٌ، وقال عُمرُ: "فرَأيتُ أثَرَ الحَصيرِ في جَنْبِه، فبَكَيْتُ، فقال: ما يُبْكيكَ؟ فقُلْتُ: يا رسولَ اللهِ، إنَّ كِسْرى وقَيْصَرَ فيما هُما فيه وأَنتَ رَسولُ اللهِ. فقال: أمَا تَرضَى أن تَكونَ لهمُ الدُّنيا ولَنَا الآخِرَةُ؟"،

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்ததும் அவர்கள் தமது வேஷ்டியை தம் மீது நீட்டி (ஒழுங்குபடுத்தி)ப்போட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களது கருவூல அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு வாற்கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. 

(இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது கருவூல அறை; இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது கருவூல அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً ثَنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ حَشْوُهُ الصُّوفُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» ، قَالَتْ

 فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فُلَانَةُ الْأَنْصَارِيَّةُ دَخَلَتْ عَلَيَّ، فَرَأَتْ فِرَاشَكَ، فَذَهَبَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ» ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتْ: فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ فَوَاللَّهِ لَوْ

شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَزَّ وَجَلَّ مَعِيَ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ

ஒரு நாள் வெளியில் சென்றிருந்த மாநபி {ஸல்} அவர்கள் வீட்டிற்குள் நுழைகின்றார்கள். நபிகளாரின் புருவம் வியப்பால் உயர்கிறது. ஆம்! தாம் அமரும் இடத்தைப் பார்க்கின்றார்கள். அங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய புத்தம் புதிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டின் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த தமது அருமைத்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் காணும் இந்த விரிப்பு என்ன? எங்கிருந்து வந்தது? யார் தந்தது?” என அன்பொழுக வினவினார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்ஸாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். என்னோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுடைய விரிப்பைப் பார்த்து இது யாருடையது? எனக் கேட்டார். நான் அல்லாஹ்வின் தூதருடையது என்றேன். அதற்கு, அந்தப் பெண்மணி இந்த இத்துப்போன, கிழிசல் உடைய பழைய விரிப்பிலேயா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமர்வார்கள்? உறங்குவார்கள்?” என்று கேட்டு விட்டு நேராக வீட்டிற்குச் சென்றார். பின்னர், நீங்கள் காணும் இந்த அழகிய விரிப்பைக் கொடுத்தனுப்பினார்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்டதும் அண்ணலாரின் முகம் மாறிப்போனது. ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! விரிப்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றதே! அவசியம் திருப்பிக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அப்போது, அண்ணலார் ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!என்று நபி {ஸல்} அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் விரும்பி கேட்டால் இதோ இருக்கிற இந்த மலைகளை ( அருகில் தெரிந்த மலைகளை காட்டி) தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித் தந்து விடுவான்என்று கூறினார்கள்.

பொதுவாகவே நபி {ஸல்} அவர்கள் அன்பளிப்புகளை யார் கொடுத்தாலும் அக மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்தார்கள். இருந்தும் இங்கே அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்கின்றார்கள் என்றால்…? வேறொன்றுமில்லை, அந்தப் பெண்மணி அண்ணலாரின் மீது அனுதாபப்பட்டு அந்த விரிப்பைக் கொடுத்தார்கள்.

كان النبيُّ صلى الله عليه وسلم يسأل الله ويقول: {اللهم أسألك خشيتك في الغيب والشهادة. وأسألك كلمة الإخلاص في الغضب والرضى. وأسألك القصج في الفقر والغنى} رواه النسائي والحاكم. والقصد هنا هو: الإقتصاد والإعتدال.

நபி அவர்கள் "அல்லாஹ்வே! உன்னிடம் மறைவிலும், வெளிப்படையிலும் உன்னுடைய பயத்தை எனக்கு தர வேண்டும் என கேட்கிறேன். நல்ல திருப்தியான நிலையிலும், கோபமான நிலையிலும் தூய்மையான வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட வேண்டும் என கேட்கிறேன். ஏழ்மையான சூழலிலும், செல்வச் செழிப்பான சூழலிலும் நடுவு நிலைமையை எனக்கு தர வேண்டும் என கேட்கிறேன்" என்று நபி அவர்கள் துஆச் செய்தார்கள். ( நூல்: நஸாயி )

வீண் விரய செலவுகளை தவிர்க்க வேண்டும்..

عن أنس رضي الله عنه قال: ((أتى رجل من بني تميم رسولَ الله صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، إني ذو مال كثير، وذو أهل وولد وحاضرة، فأخبرني كيف أنفق؟ وكيف أصنع؟ فقال رسول الله صلى الله عليه وسلم: تُخرِج الزكاة من مالك؛ فإنها طُهرة تطهرك، وتصل أقرباءك، وتعرف حق السائل والجار والمسكين، فقال: يا رسول الله، أقْلِلْ لي، قال: ﴿ وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا ﴾ [الإسراء: 26]

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- பனூ தமீம் கிளையாரைச் சேர்ந்த ஒருவர் நபி அவர்களைச் சந்தித்து "அல்லாஹ்வின் தூதரே! நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு பெருமளவில் பொருளாதாரம் இருக்கிறது. நான் எப்படி செலவு செய்ய வேண்டும்? என்று கேட்டார். உம் செல்வத்துக்கான ஜகாத்தை வழங்கி வருவீராக! அது உம்மையும் உமது செல்வத்தையும் தூய்மையாக்கும்! மேலும், அந்த செல்வத்தின் மூலமாக உமது இரத்த உறவுகளை அரவணைத்து செல்வீராக! மேலும், ஏழைகள், அண்டை அயலார், பாத சாரிகள் மற்றும் யாசிப்போர் ஆகியோரை இனம் கண்டு அவர்களுக்கும் உமது செல்வத்தில் இருந்து செலவு செய்து வருவீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்"அல்லாஹ்வின் தூதரே! சற்று குறைத்துச் சொல்லுங்கள்!" என்றார். அதற்கு, நபி அவர்கள் அல்குர்ஆனின் சூரா இஸ்ராவின் 26 -வது வசனத்தை "இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்" ஓதிக் காண்பித்தார்கள். ( நூல்: அஹ்மத் )

கஞ்சத்தனம் தவிர்க்க வேண்டும்...

عَنْ أَبِي الهَيَّاجِ الأَسَدِيِّ رحمه الله قَالَ: (كُنْتُ أَطُوفُ بِالبَيْتِ، فَرَأَيْتُ رَجُلًا يَقُولُ: "اللَّهُمَّ قِنِي شُحَّ نَفْسِي". لَا يَزِيدُ عَلَى ذَلِكَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: "إِنِّي إِذَا وُقِيتُ شُحَّ نَفْسِي؛ لَمْ أَسْرِقْ، وَلَمْ أَزْنِ، وَلَمْ أَفْعَلْ". وَإِذَا الرَّجُلُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رضي الله عنه

அபில் ஹய்யாஜில் அஸதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் கஅபா ஆலயத்தை (தவாஃப்) வலம் வந்துகொண்டிருந்தேன். அப்போது, "அல்லாஹ்வே! என்னுடைய மனதை கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுவாயாக! என்று ஒரு மனிதர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்தேன். அதைவிட அதிகமாக அவர் எதுவும் கூறவில்லை. அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். அவர், என் மனதின் கருமித்தனத்திலிருந்து நான் காப்பாற்றப்பட்டால், நான் திருடாமலும் விபச்சாரம் போன்ற தீமைகளைச் செய்யாமலும் வேறு எந்தத் தவறுகளையும் செய்யாமலும் இருப்பேன்" என்றார். பிறகு (அவர் யாரென உற்று) பார்த்தபோது அந்த மனிதர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்தாம்" என்றார்கள். ( நூல்: நிதாஆத்திர் ரஹ்மான் லிஅபீபக்ரில் ஜஸாயிரீ )

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:-«أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ، دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللهِ» [رواه مسلم] -

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

عَنْ عَائِشَةَ رضي الله عنها: " أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لاَ يَعْلَمُ، فَقَالَ: (خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ، بِالْمَعْرُوفِ) رواه البخاري (5364)، ومسلم (1714).

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதராக இருக்கின்றார். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான பணத்தை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

சேமிப்பு இருந்தால் தான் அல்லாஹ்விற்கு பிடித்தமான வழியில் செலவு செய்ய முடியும்...

வாழ்க்கையில் சிக்கனமாக செலவு செய்தால் தான் செல்வத்தை சேமிக்க முடியும். சேமிக்கும் செல்வத்தைக் கொண்டு ஈருலகத்தின் நலவான காரியங்களுக்கு திறம்பட செலவு செய்யவும் முடியும்.

مَرَّ عبدالله بن عمر (رضي الله عنهما) مع أصحاب له في بعض نواحي المدينة، فوضعوا سُفرةً، فمرَّ بهم راعي غنمٍ، فسلَّمَ، فقال ابن عمر: هَلُمَّ يا راعي، هَلُمَّ، فأصِب من هذه السفرة، فقال: إني صائمٌ، فقال ابن عمر: أتصوم في هذا اليوم الحار وأنت في هذه الجبال ترعى هذه الغنم؟ فقال: أي والله أُبادر أيامي الخالية، فقال له ابن عمر - وهو يريد أن يختبر ورعه وتقواه -: بِعْنا شاةً من هذه الغنم نُعطيك ثمنها ونعطيك من لحمها، فقال: إنها ليستْ لي، إنها غنم سيدي، فقال ابن عمر: فما عسى سيدك فاعلًا إذا فقدها، فقلت: أكلها الذئب؟ فولَّى الراعي مدبرًا، وقد رفع أُصبعه إلى السماء، يقول: أين الله؟ فجعل ابن عمر يرددها: أين الله؟ أين الله؟ فلما قدم ابن عمر المدينة بعث إلى مولاه - مولى الراعي - فاشترى منه الغنم واشترى منه الراعي، فأعتق الراعي ووهب له الغنم". (رواه الاحمد فى الزهد، الداء والدواء لابن القيم )

 

ஒரு நாள் இப்னு உமர் ரலி அவர்கள் மதீனாவின் சுற்றுப் புறங்களை சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றார்கள். ஒரு மர நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து தேநீர் பருக அமர்ந்தார்கள். அப்போது அங்கே ஆட்டிடையன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டே இவர்களின் அருகே கடந்து சென்றான். கடந்து செல்லும் போது அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஸலாம் கூறினான். அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் அந்த ஆட்டியனை தம்மோடு அமர்ந்து சாப்பிட அழைத்தார்கள். அதற்கவன்"நான் நோன்பு நோற்றுள்ளேன்" என்றான். கடுமையான வெயில் காலத்தில், அதுவும் பாலைவன சுடு மணலில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் நீ நோன்பு நோற்றிருக்கின்றாயா? என்று ஆச்சர்யம் மேலிட கேட்டு விட்டு, நாங்கள் காசு தருகிறோம். உன் மந்தையில் இருக்கும் ஆட்டில் ஒரு ஆட்டை எங்களுக்கு நீ தந்து விடு. நாங்கள் அதை அறுத்து எங்களுக்கு போக மீதமுள்ள இறைச்சியையும் உனக்கு தந்து விடுகின்றோம்? என்ன சொல்கின்றாய்? தருகின்றாயா? என்று இப்னு உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.

அதற்கவன், இந்த ஆடுகளின் உரிமையாளர் நான் இல்லை. இது என் எஜமானின் மந்தை என்று பதிலளித்தான்.

அப்போது, இப்னு உமர் ரலி அவர்கள் இவ்வளவு பெரிய மந்தையில் ஒரு ஆடு இல்லாமல் போனதையா உன் எஜமான் கேட்கப் போகின்றார். அப்படியே கேட்டாலும் ஓநாய் இழுத்துச் சென்று விட்டது என்று கூறி விடு என்று கூறினார்கள்.

அதற்கு அந்த ஆட்டிடையன் ஏதோ சிந்தித்தவனாக வானத்தை நோக்கி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தி "அப்படி என்றால் அல்லாஹ் எங்கிருக்கின்றான்? (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கின்றான் என்ற கருத்து பட) என்று மூன்று முறை கேட்டான்.

அங்கிருந்து விடை பெற்று மதீனா வந்த இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் சேமித்து வைத்திருந்த பணத்தை தமது அடிமை ராஃபிஉ அவர்களிடம் கொடுத்து அந்த மந்தையின் உரிமையாளரிடம் ஒட்டுமொத்த மந்தையையும், அந்த இடையனையும் விலைக்கு வாங்கி வருமாறு கூறினார்கள். ராஃபிஉ அவர்களும் அது போன்றே செய்தார்.

பின்னர், அந்த இடையனை உரிமை விட்டு அந்த மந்தை முழுவதையும் அந்த இடையனுக்கே அன்பளிப்பாக வழங்கினார்கள். ( நூல்: அஸ் ஸுஹ்து லிஇமாமி அஹ்மத், அத் தாவு வத் தவாஃ லிஇமாமி இப்னுல் கய்யிம் )

சில நேரங்களில் நமது மனம் அல்லாஹ்விற்கு விருப்பமான அமல் ஒன்றைச் செய்ய விரும்பும். அப்போது அதற்கான செல்வம் நம்மிடம் இல்லை என்றால் அதை நாம் செய்ய முடியாமல் போய் விடும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி அவர்களைப் போலவே மிகவும் எளிமையாக வாழ்பவர், மிகவும் பேணுதலான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் எனினும் சிக்கனமாக செலவு செய்து சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆகவே தான் அவர்களால் அல்லாஹ் விரும்பும் உயரிய ஒரு அமலை செய்ய முடிந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ

 قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا، اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ. مُتَّفَقٌ عَلَيْهِ.

நபி அவர்கள் கூறினார்கள்: எவர் முஸ்லிமான அடிமை ஒருவரை விடுதலை செய்வாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விடுதலை செய்யப்பட்டவரின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக விடுதலை செய்தவரின் உறுப்புகளை நரகில் இருந்து விடுதலை செய்கின்றான். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

சேமிப்பு இருந்தால் தான் சந்ததிகளை கௌரவமாக வாழ வைக்க முடியும்..

ஒரு மனிதர் நபிகளாரின் அவையில் வந்து அல்லாஹ்வின் தூதரே! இரு தந்தையர்களில் யார் சிறந்தவர்? ஒருவர் மார்க்க விழுமியங்களோடு வாழ்கிறார், அத்தோடு தமது சந்ததியினருக்கு விசாலமான பொருளாதாரத்தையும் விட்டுச் செல்கின்றார்.

இன்னொருவர், மார்க்க விழுமியத்தோடு வாழ்கிறார். ஆனால் தமது சந்ததியினருக்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்தாமல் சென்று விடுகின்றார்என்று.

அதற்கு, “இருவரில் முதலாமவரே சிறந்த தந்தையாவார்என மாநபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: தர்ஃகீப் அத் தர்ஹீப் )

عن الزّهري عن عامر بن سعد بن أبيه أنّ رسول الله صلّى الله عليه وسلّم جاء يعوده عام حجّة الوداع من وجعٍ اشتدّ به، فقلت: (يا رسول الله، إنّي ذو مال ولا يرثني إلّا ابنة، أفأتصدّق بثلثي مالي؟

 فقال صلّى الله عليه وسلم: لا، قلت: فالشّطر يا رسول الله؟ قال رسول الله عليه الصلاة والسلام: لا، 

قلت: فالثّلث؟ 

فأجاب رسول الله صلّى الله عليه وسلم: الثّلث والثّلث كثير، إنّك إن تذر ورثتك أغنياء خيرٌ من أن تذرهم عالة يتكفّفون النّاس،

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: இறுதி ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி அவர்கள் இருந்தார்கள்.

அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன் எனக் கருதுகின்றேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை.

எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் வேண்டாம்" என்றார்கள்.

 

பின்னர் நான் பாதியைக் கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கும் நபி அவர்கள் வேண்டாம்என்று கூறிவிட்டு, வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்துவிடுங்கள். அதுவும் அதிகம்தான்.

ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும்!என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதுர் ரஹ்மான் எனும் அவனுடைய விசேஷமான அடியார்களின் நற்பண்புகளுடன் நம் அனைவரையும் வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment: