பசியில்லா உலகு அமைப்போம்!!
மனிதன் முதல் விலங்குகள் வரை பொதுவாக இருப்பது பசி. உயிர் வாழத் தேவையான உணவுகளை வயிறு நிறைய உண்டு பசியற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் விரும்புவோம்.
ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் உலகிலுள்ள அனைவருக்கும் பசியற்ற வாழ்க்கை அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை எனும் பதிலே கிடைக்கும். பசி மனித ஆரோக்கியத்தில் பேரழிவு தரும் மௌன ஆயுதமாகிறது. இது மனிதகுலத்தை ஆதிகாலத்திலிருந்து பாதித்த ஒரு உணர்வாகிறது.
இந்த நிலையை மாற்றி பசியற்ற உலகம் காண உலக பசி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1918 இல் நிறுவப்பட்ட ஹங்கர் ப்ராஜெக்ட் என்ற சர்வதேச அமைப்பால் உலகப் பசியின் நிலையான முடிவுக்காக
உலகப் பசி தினம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.
உலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர் என்பவைகளுக்கு அடுத்து உணவு வருகிறது. தேவையான அளவு உணவை கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.
உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர் இன்றும் பசியின் கோரப்பிடியிலேயே உள்ளனர்.
உலகெங்கிலும் 828 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதாவது 73 கோடியே 30 இலட்சம் பேர் நீண்டகால பட்டினி மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர், வாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆம், ஒவ்வொரு நாளும் ஐந்துக்கு ஒருவர் பசியால் உறங்கச் செல்கின்றனர். இந்த உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது, 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர்.
குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர்.
அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர்.
உலகில் பசிக்கொடுமைகள் பற்றி 2024 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை, பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. அதிலும் 6 நாடுகளை, அதாவது புருண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்சூடான், மற்றும் ஏமனை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக, அதாவது பசியால் மக்கள் துயருறும் நாடாக அறிவிக்கிறது.
2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024-ல் பசியால் துயருறும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சம் அதிகரித்துள்ளது. உலகில் 13 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பஞ்சத்தில் அல்லது பஞ்சத்தை ஒத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 90 இலட்சம் இதில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். ஏழ்மையும் பசியும் ஆப்பிரிக்காவில்தான் தங்கள் வசிப்பிடத்தை அதிக அளவில் கொண்டுள்ளன.
அபஸ அத்தியாயத்தின் 24 -ஆம் வசனம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கி இருக்கிற உன்னதமான ஒரு அருட்கொடையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டுகிறது.
فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِه
எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் (அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை) சிந்தித்துப் பார்க்கட்டும்!".
இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று உணவு. அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்னதாகவே அனைத்து உயிரினங்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தி வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
உயிரினங்களில் எந்த உயிரினமும் தமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன். ( அல்குர்ஆன்: 29: 60 )
وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
இன்னும், எந்த உயிரினமும் - அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தேதவிர பூமியில் இல்லை; மேலும், அவை தங்கும் இடத்தையும் அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்; இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11: 6 )
நபி ﷺ அவர்களின் பிரதானமான துஆக்களில் ஒன்றாக பின் வரும் துஆவும் இருந்தது.
عن أبي هريرة-رضي الله عنه مرفوعاً: «اللهم إني أعوذ بك من الجوع، فإنه بِئْسَ الضَّجِيعُ،
"யாஅல்லாஹ்! உன்னிடம் பசியின் கொடுமையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். ஏனெனில், அது உறக்கத்தை பாழாக்கி விடுகிறது" என்று.
பசியால் சோதிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களின் சமூகம் பசியுடன் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்விடம் இருந்து உணவுத் தட்டை பெற்றுத் தருமாறு வேண்டி நின்றனர்.
மேலும், தங்களுக்கு ஏன் உணவு தேவைப்படுகிறது? என்பதற்கான காரணத்தையும் அந்த சமூகம் முன் மொழிந்ததை அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.
اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக, உணவு மரவையை (ஆகாரத்தட்டை) இறக்கிவைக்க முடியுமா?" என்று சீடர்கள் கேட்டபோது அவர், "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ
அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ
மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானத்திலிருந்து எங்கள்மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களுக்குப்பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும், எங்களுக்கு உணவளிப்பாயாக! நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், அகிலத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான். ( அல்குர்ஆன்: 5: 112 - 115 )
பசியின் வலி...
أَخبَرنا أَبُو يَعْلَى، حَدثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، حَدثنا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَصَابَنِي جَهْدٌ شَدِيدٌ، فَلَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه، فَاسْتَقْرَأْتُهُ آيَةً مِنْ كِتَابِ اللهِ، فَدَخَلَ دَارَهُ وَفَتَحَهَا عَلَيَّ، قَالَ: فَمَشَيْتُ غَيْرَ بَعِيدٍ، فَخَرَرْتُ لِوَجْهِي مِنَ الْجَهْدِ، فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى رَأْسِي، فَقَالَ:"يَا أَبَا هُرَيْرَةَ"، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: فَأَخَذَ بِيَدِي فَأَقَامَنِي وَعَرَفَ الَّذِي بِي، فَانْطَلَقَ إِلَى رَحْلِهِ، فَأَمَرَ لِي بِعُسٍّ مِنْ لَبَنٍ، فَشَرِبْتُ.
ثُمَّ قَالَ: "عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ، ثُمَّ قَالَ:"عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ حَتَّى اسْتَوَى بَطْنِي وَصَارَ كَالْقِدْحِ، قَالَ: وَرَأَيْتُ عُمَرَ فَذَكَرْتُ له الَّذِي كَانَ مِنْ أَمْرِي، وَقُلْتُ لَهُ: مَنْ كَانَ أَحَقَّ بِهِ مِنْكَ يَا عُمَرُ؟ وَاللهِ لَقَدِ اسْتَقْرَأْتُكَ الآيَةَ وَلأَنَا أَقْرَأُ لَهَا مِنْكَ، قَالَ عُمَرُ: وَاللهِ لأَنْ أَكُونَ أَدْخَلْتُكَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي حُمْرُ النَّعَمِ. [7151]
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:- ”எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்(அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூ ஹுரைரா!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்’ என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனககு ஏற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு ‘மீண்டும் (அருந்துங்கள்)’ என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகி விட்டது. பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்து விட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்’ என்று சொன்னேன். உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
عن أنس بن مالك – رضي الله عنه – قال : قال أبو طلحة لأم سليم : لقد سمعت صوت رسول الله ضعيفاً أعرف فيه الجوع ، فهل عندك من شيء ؟ قالت : نعم ، فأخرجت أقراصاً من شعير ثم أخرجت خماراً لها فلفت الخبز ببعضه ، ثم دسته تحت يدي ولاثتني ببعضه ، ثم أرسلتني إلى رسول الله قال : فذهبت به فوجدت رسول الله في المسجد ومعه الناس ، فقمت عليهم ، فقال لي رسول الله ” أرسلك أبو طلحة ؟” فقلت : نعم قال : ” بطعام ؟ ” قلت : نعم . فقال رسول الله لمن معه : ” قوموا ” فانطلق وانطلقت بين أيديهم حتى جئت أبا طلحة فأخبرته ، فقال أبو طلحة : يا أم سليم قد جاء رسول الله والناس وليس عندنا ما نطعمهم ، فقلت : الله ورسوله أعلم ، فانطلق أبو طلحة حتى لقي رسول الله فأقبل رسول الله وأبو طلحة معه ، فقال رسول الله: ” هلم يا أم سليم ، ما عندك ؟ ” فأتت بذلك الخبز ، فأمر به رسول الله فقُمت وعصرت أم سُليم عكة فآدمته ثم قال رسول الله فيه ماشاء الله أن يقول ، ثم قال : ” ائذن لعشرة ” فأكل القوم كلهم والقوم سبعون أو ثمانون . [حديث صحيح : اخرجه البخاري ].
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், ‘நான் நபி ﷺ அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை இறைத்தூதர் ﷺ அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர் ﷺ அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று அவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன்.
அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) ‘உம்மு சுலைமே! இறைத்தூதர் ﷺ அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!’ என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி ﷺ அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர் ﷺ அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர் ﷺ அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறைத்தூதர் ﷺ அவர்கள் , ‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!’ என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர் ﷺ அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்’ என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்’ என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர். ( நூல்: புகாரி )
நமது நபி ﷺ அவர்கள்! பசியும்.... உணவும்...
நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர் நபி ﷺ அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )
நபி ﷺ அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )
وعن سعيدٍ المَقْبُريِّ، عَنْ أَبي هُرَيرةَ: أَنَّه مَرَّ بِقَومٍ بَيْنَ أَيْدِيهمْ شَاةٌ مَصْلِيَّةٌ، فَدَعَوْهُ، فَأَبى أَنْ يَأْكُلَ، وقال "خَرج رَسُولُ اللَّه ﷺ مِن الدُّنْيَا ولَمْ يَشْبَعْ مِنْ خُبْزِ الشَّعِيرِ" رواه البخاري
நபி ﷺ அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். நபி ﷺ அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன் என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார். ( நூல் புகாரி )
أنَّ جَارًا لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ فَارِسِيًّا كانَ طَيِّبَ المَرَقِ، فَصَنَعَ لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، ثُمَّ جَاءَ يَدْعُوهُ، فَقالَ: وَهذِه؟ لِعَائِشَةَ، فَقالَ: لَا، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، فَعَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: لَا، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، ثُمَّ عَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: نَعَمْ، في الثَّالِثَةِ، فَقَاما يَتَدَافَعَانِ حتَّى أَتَيَا مَنْزِلَهُ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார்.
அவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி "இவரும் (வரலாமா)?" என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), "இல்லை (வேண்டாம்)" என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் "இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)" என்று கூறிவிட்டார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் "இல்லை (வேண்டாம்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் "(அவ்வாறாயின் நானும்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள்.
அவர் மூன்றாவது முறை "சரி (வரலாம்)" என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர். ( நூல்: அஹ்மத் )
عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் வீட்டிற்கு அண்ணலாரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் ﷺ வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.
நான் நபி ﷺ அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த பின் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.
அப்போது, நபி ﷺ அவர்கள் “அபூஹுரைராவே! பசி தான் காரணம்” என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னை நோக்கி “அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன்! என்று அழுகின்றீர்கள்?” நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )
உயிரினங்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் தனது உணவையோ, இரையையோ வீணடிப்பதில்லை.
ஆனால், மனிதன் மட்டுமே உணவுப் பொருள்களை வீணடிக்கிறான். உலகின் உணவு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உணவு, அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது.
உலகில் 13 சதவீத உணவு, அறுவடைக்குப் பிறகும், சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்வதற்கு முன்பும், மளிகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்ற பிறகு 17 சதவீதம் உணவு வீணாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% சதவீதம் வீணாகிறது .
அதன் மதிப்பு 58000 கோடியாகும். ஒவ்வொரு நாளும் 15000 டன் வீடடிக்கப்படுகிறது என்றும் அதில் 3000 டன் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதற்கு தகுதியானவையாக இருக்கிறது என்றால் என்ன சொல்ல?
அமெரிக்ககள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் பாதியை வீணாக்குகின்றார்கள். அதன் மதிப்பு ஆண்டுக்கு 66.10 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது.
எனவே, உணவை வீணடிக்காமல், பசித்திருப்போரின், பட்டினி கிடப்போரின் தேவையறிந்து உணவை பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் செயல் படுவோம்.
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். ( அல்குா்ஆன்: 7: 31 )
உணவை வீணடிப்பது மட்டும் விரயம் அல்ல பெருமானார் ﷺ அவர்களின் வார்த்தையில் கவனம் குவிப்போம்!
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ مِنْ السَّرَفِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ ) رواه ابن ماجه
பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள்: “நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. ( நூல்: இப்னுமாஜா )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு எவ்விதச் சிரமமும் இன்றி நாம் பசித்திருக்கும் போது உணவளித்து வரும் தயாளத்தன்மைக்காக சாப்பிட்டு முடித்ததும் மாநபி ஸல் அவர்களின் வழியில் அல்லாஹ்வுக்கு அழகிய நன்றியை செலுத்துவோம்!
كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم إذا رفعتِ المائدةُ من بينِ يديْهِ يقولُ الحمدُ للَّهِ حمدًا كثيرًا طيِّبًا مبارَكًا فيهِ غيرَ مودَّعٍ ولاَ مستغني عنْهُ ربُّنا . الراوي : أبو أمامة الباهلي المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3456 | خلاصة حكم المحدث : صحيح |
நபி ﷺ அவர்கள் ( சாப்பிட்டு முடித்த பின் ) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது " அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா " என்று பிரார்த்திப்பார்கள்
பொருள் ( அதிகமான தூய்மையான வளமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது கைவிடப்படக் கூடாதது தவிர்க்க முடியாதது ஆகும் ) என்று அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள் ( நூல் : திர்மிதீ )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பசி பட்டினியில் இருந்தும், உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுத் தேவையில் இருந்தும் பாதுகாப்பானாக! வாழும் காலமெல்லாம் தடையில்லாத ரிஜ்கைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment