கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் வாழ விடுங்கள்!!!
இந்தியாவில் கடந்த
மே மாதம் நடைபெற்ற இரண்டு குழந்தைகளின் கொடூரமான கொலை நாட்டையே உலுக்கியுள்ளது
என்றால் அது மிகையல்ல.
சம்பவம்1:-
உத்தரப்பிரதேசத்தைச்
சேர்ந்த சுமித் மற்றும் ரதி ஆகிய தம்பதியினருக்கு ஆரவ் (வயது 1வயது,5
மாதம்) என்ற ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. கருத்து
வேறுபாடு காரணமாகச் சுமித் மற்றும் ரதி ஆகிய இருவருக்கும் இடையே தற்பொழுது
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு (Divorce Case) நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரதிக்கும் அவரது அத்தை
மகனான விராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் காதலைத்
தொடர்ந்து விராஜ்,
ரதியைத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து
வற்புறுத்தி வந்துள்ளான். ஆனால், தமக்கு ஒன்றரை வயதில் குழந்தை
இருப்பதால் தற்போதைக்குத் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி ரதி அவரது
கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விராஜ், குழந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான்.
கடந்த
வெள்ளிக்கிழமை (மே 29)
ரதி தனது பெற்றோர் வீட்டிலிருந்து அத்தை வீட்டிற்குச்
சென்றிருந்த போது,
அங்கு வந்த விராஜ், குழந்தை ஆரவ்விற்கு
மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி ஆசைவார்த்தை பேசி தூக்கிச் சென்றுள்ளான்.
தரையில் அடித்துக்
கொலை: செல்லும் வழியிலேயே மனிதாபிமானமின்றி அந்தக் குழந்தையைத் தரையில் தூக்கிப்
போட்டுப் பலமுறை கொடூரமாக அடித்துக் கொலை செய்ய முயன்றுள்ளான். குழந்தையின் அலறல்
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட விராஜ், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி, சிறிது தூரத்தில்
சாலையிலேயே வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டான்.
குடும்பத்தினர்
பதறியடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இக்கொடூரக் கொலை
குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளி
விராஜைப் பிடிக்க உடனடியாக 4 தனிப்படைகளை அமைத்துத்
தீவிரத் தேடுதல் வேட்டையில் நடத்தி துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். (
நன்றி: செய்திப் புனல்,
31/05/2026 )
சம்பவம் 2:-
கேரள மாநிலம்
நெடுமங்காடு அருகே பனவூர் பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒன்றரை வயது குழந்தை
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி
வந்தனர்.
முதலில் இயல்பான
மரணம் என கருதப்பட்ட இந்த வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கை
வெளியாகிய பின்னர் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அகிலா மற்றும்
அகில் தம்பதி. இவர்களுக்கு அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில்
குழந்தையின் தந்தை 2024-ல் உயிரிழந்தார். அதேவேளையில், அகிலாவுக்கு அஷ்கர் (31) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது லிவ்-இன்
உறவாக மாறியது.அகிலா தனது குழந்தையுடன் அஷ்கரோடு ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்
தான், மே 29-ம் தேதி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழைந்தை திடீரென மயங்கி
விழுந்திருக்கிறது.
குழந்தையை அஷ்கர்
உடனே திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தைக்கு
என்ன ஆனது என்று மருத்துவர்கள் கேட்டபோது, குழந்தை சாப்பிடும்போது
தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதாக அஷ்கர் கூறியிருக்கிறார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே குழைந்தை இறந்துவிட்டதால் மருத்துவர்களுக்கு
சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக
திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது.
புகாரின்பேரில்
வழக்கு பதிவுசெய்த போலீஸார், குழந்தையின் உடலை பிரேத
பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூறு ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
உடற்கூறு
ஆய்வறிக்கையின்படி,
குழந்தையின் உடலில் மொத்தம் 91 காயங்கள் இருந்துள்ளன. மேலும் விலா எலும்புகள் 7 இடங்களில் முறிந்திருந்ததுடன், மூளை மற்றும் மார்பு
பகுதியில் கடுமையான ரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்தது. இதுவே குழந்தையின்
உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், குழந்தையின் மார்பில் ஏறி மிதித்ததால் உள் உறுப்புகளில் கடுமையான பாதிப்பு
ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், குழந்தையின் கால்கள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் சிகரெட் லைட்டர் மூலம்
சூடு வைக்கப்பட்ட காயங்களும் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காவல்துறை
விசாரணையில்,
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழந்தை தொடர்ந்து
சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் இரண்டு கைகளிலும்
ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு காரணம் சைக்கிளில் இருந்து விழுந்தது என தாய் கூறியிருந்தார். ஆனால்
தற்போது அவையும் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையின்போது, தனது காதல் உறவுக்கு குழந்தை தடையாக இருந்ததாக அஷ்கர் ஒப்புக்கொண்டதாக
காவல்துறை தெரிவித்துள்ளது. குழந்தையை வெறுப்புடன் பார்த்த அவர், தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தை மீதான
கொடுமைகள் குறித்து தெரிந்திருந்தும் அதை தடுக்கவோ, காவல்துறைக்கு தெரிவிக்கவோ தவறியதாக தாய் அகிலா மீதும் குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ( நன்றி: ABP
NADU, 01/06/2026, தினசுவடு, 03/06/2026 )
கள்ளத்தொடர்பு கொலைகள்:-
மக்கள் தொகையை
எடுத்துக்கொண்டால் உலக அளவிலேயே நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 140 கோடி மக்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் 28 மாநிலங்கள்மற்றும் 8
யுனியன் பிரதேசங்கள் உள்ளன.
அதிக மக்கள்
தொகையை கொண்டிருக்கும்போது அதில் அதிக சவால்களும் நிறைந்திருக்கின்றன. இப்படி அதிக
மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களை வழிநடத்தும் அரசு என்னதான் பாதுகாப்பை உறுதி
செய்தாலும்,
சில நேரங்களில் கையை மீறிய குற்றங்கள் நடந்துகொண்டுதான்
இருக்கிறது.
இந்தியாவில் தேசிய
குற்ற ஆவணக் காப்பகம் (NCRB)
வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 24,000 முதல் 25,000 வரையிலான கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி, இந்தியாவில் கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு சுமார் 2.7 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில்
நடைபெறும் கொலைகளுக்குக் குடும்பத் தகராறு மற்றும் தனிப்பட்ட பகைக்கு அடுத்தபடியாக, 'கள்ளத்தொடர்பு'
மற்றும் 'காதல் விவகாரங்கள்' முக்கியக் காரணங்களாக உள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) Crime in India தரவுகளின் அடிப்படையில், தகாத உறவு மற்றும் காதல்
தொடர்பான கொலைகளின் முக்கிய விவரங்கள்
இந்தியாவில்
நிகழும் மொத்தக் கொலைகளில் சுமார் 10.1% கள்ளத்தொடர்பு
மற்றும் காதல் விவகாரங்கள் காரணமாகவே நடக்கின்றன.ஆண்டுதோறும் சுமார் 1,400 முதல் 1,500
வரையிலான கொலைகள் 'தகாத உறவு' (Illicit
Relationships) காரணமாகப் பதிவாகின்றன. ( நன்றி: விக்கிப்பீடியா )
குழந்தைகளை கொல்பவர்கள் யார்?
இந்த
தலைப்புக்குள் செல்வதற்கு முன்பாக இது போன்று மிகக் கொடூரமாக குழந்தைகளிடம் நடந்து
கொள்பவர்கள் யார்?
என்பதை நாம் முதலில் நம் மனதிற்குள் பதிய வைக்க
கடமைப்பட்டுள்ளோம்.
عَنْ
عَائِشَةَ ، قَالَتْ : " قَدِمَ نَاسٌ مِنَ الْأَعْرَابِ عَلَى رَسُولِ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالُوا : أَتُقَبِّلُونَ صِبْيَانَكُمْ ؟
فَقَالُوا: نَعَمْ ، فَقَالُوا: لَكِنَّا ، وَاللهِ ! مَا نُقَبِّلُ .فَقَالَ
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( وَأَمْلِكُ إِنْ كَانَ اللهُ
نَزَعَ مِنْكُمُ الرَّحْمَةَ ) رواه مسلم (2317)
.
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது: "கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால்,
நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை)
முத்தமிடுவதில்லை”
என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “அல்லாஹ்
உங்களிடமிருந்து கருணையை (இரக்கக் குணத்தை)ப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (
நூல்: முஸ்லீம் )
وعن
أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " قَبَّلَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ
بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا ، فَقَالَ الأَقْرَعُ : إِنَّ لِي عَشَرَةً
مِنَ الوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: (مَنْ لاَ يَرْحَمُ لاَ
يُرْحَمُ ) رواه البخاري (5997) ، ومسلم (2318)
.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது: நபி ﷺ
அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதை கண்ட அக்ரஃ பின் ஹாபிஸ்
(ரலி) அவர்கள்,
“எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில்
எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள்.
அதற்கு நபி ﷺ அவர்கள், “விஷயம் தெரியுமா?
கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லீம் )
குழந்தைகளை
கொஞ்சாதவர்களை,
அவர்களிடம் அழகிய முறையில் உறவாடாதவர்களை நபி ﷺ அவர்கள் "இரக்க மற்றவர்கள்" என்று
அடையாளப்படுத்தியுள்ளதை நாம் நபிமொழிகளில் காண்கிறோம்.
அப்படி என்றால்
இது போன்று குழந்தைகளை சித்ரவதை செய்து கொல்பவர்களை "இரக்கமற்ற
அரக்கர்களாகவே" நாம் நாம் அணுக வேண்டும்.
தகாத உறவு:-
இந்தியாவை
உலுக்கிய மேற் சொன்ன இரண்டு மாபாதகச் செயல்களிலும் தகாத உறவு (திருமணத்தின் மூலம்
அல்லாத உறவு) தான் அடிப்படை காரணமாக அமைந்துள்ளதை காவல்துறை விசாரணை மூலம் அறிய
முடிகிறது.
திருமணமான ஒருவர்
தன் மனைவி/கணவனைத் தவிர்த்து, பிறருடன் பாலியல் அல்லது
திருமண பந்தத்தை மீறிய உறவு (Adultery) வைத்திருப்பது
இந்தியாவில் கிரிமினல் குற்றம் அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இது
தண்டனைக்குரிய குற்றமல்ல.
முன்பு பிறர்
மனைவியுடன் உறவு கொள்ளும் ஆணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
வழங்கிய
இந்திய தண்டனைச்
சட்டத்தின் பிரிவு 497-ஐ ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரு மனமொத்த பெரியவர்கள்
திருமண பந்தத்தை மீறி உறவு கொள்வது கிரிமினல் குற்றம் ஆகாது என அறிவித்துள்ளது.
கிரிமினல்
குற்றமாக இல்லாவிட்டாலும்,
திருமண பந்தத்தின் புனிதத்தை மீறும் செயலாகக்
கருதப்படுவதால்,
பாதிக்கப்பட்ட கணவரோ அல்லது மனைவியோ [இந்து திருமணச் சட்டம், 1955-ன்] கீழ் விவாகரத்து கோர முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்
மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 27/09/2018 அன்று தீர்ப்பு
வழங்கியது. ( நன்றி: இந்து தமிழ் திசை 27/09/2018 )
இஸ்லாம் தகாத உறவை
கடுமையாக விமர்சிக்கிறது. அதை ஃபவாஹிஷ் - ஆபாசம், அருவருப்பான செயல் என்று எச்சரிக்கை செய்கிறது. ساء سبيل செய்யும் செயலில் ஆகக் கெட்டது என
அறிவுரை பகர்கிறது.
وَلَا
تَقْرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَسَآءَ سَبِیْلًا
நீங்கள்
விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது
மானக்கேடானதாகும். மேலும்,
(வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும்
இருக்கின்றது. (அல்குர்ஆன்: 17: 32 )
தகாத உறவை
மேற்கொள்ளும் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ மற்ற தீமையான காரியங்களில் ஈடுபடுவது
இயல்பாகவே நடக்கும் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
அதாவது அந்த
உறவுக்காக எந்த பாவமான காரியத்தையும் செய்ய முனைவார்கள் என்பது பொருளாகும்.
இங்கே இரண்டு
கொலைகளிலும் அது தான் நடந்துள்ளது. ஆம் தங்களது உறவுக்கு இடையூறாக குழந்தைகள்
இருக்கின்றார்கள் என்றே குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளன.
தகாத உறவுள்ளவர்களை திருமணம் செய்ய தடை விதித்துள்ளது இஸ்லாமிய மார்க்கம்.
اَلزَّانِیْ
لَا یَنْكِحُ اِلَّا زَانِیَةً اَوْ مُشْرِكَةً وَّالزَّانِیَةُ لَا یَنْكِحُهَاۤ
اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذٰلِكَ عَلَی الْمُؤْمِنِیْنَ
விபச்சாரன், விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும்
விவாகம் செய்ய மாட்டான்;
விபச்சாரி, விபச்சாரனையோ அல்லது இணை
வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது
முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. ( அல்குர்ஆன்: 24: 3 )
ஒரு ஆண் விதவைப்
பெண்ணையோ அல்லது விவாகரத்து செய்யபட்ட பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள தடையேதும்
விதிக்கவில்லை. மாறாக,
அது போன்ற பெண்களை திருமணம் செய்ய ஊக்குவிக்கின்றது.
இது போன்ற பெண்களை
திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் முந்தைய கணவர்கள் ஊடாக பெற்றெடுத்த
குழந்தைகளை பாரமாக கருத மாட்டார்கள்.
فقالت
ام سلمة:- إني مسنة وذات أيتام وشديدة الغيرة، فقال: أنا أسن منك، وعيالك عيال
اللهّٰ ورسوله، وأدعو اللهّٰ لك فيذهب عنك الغيرة، فدعا لها فكان كذلك.
நபி ﷺ அவர்கள் கணவரை இழந்து வாழ்ந்து வந்த உம்மு ஸலமா ரலி
அவர்களை திருமணம் (மறுமணம்) செய்ய முடிவெடுத்து ஒருவரின் மூலம் பெண் கேட்டு விட்ட
போது, உம்மு ஸலமா ரலி அவர்கள் "தமக்கு அதிகம் கோபம் வரும், தாம் வயது அதிகமான பெண் எனவும், முந்தைய கணவர் அபூஸலமா
ரலி அவர்கள் மூலம் குழந்தைகள் இருக்கின்றார்கள்" என்று நபி ﷺ அவர்களிடம் கூறுமாறு பெண் கேட்டு வந்த பெண்ணிடம் கூறி
அனுப்பினார்கள்.
அதற்கு நபி ﷺ அவர்கள் "உம்மு ஸலமா ரலி அவர்களை விட தாம் அதிக
வயதுள்ளவர் என்றும்,
அபூஸலமா ரலி அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் அல்லாஹ்
மற்றும் அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களின் குடும்பத்தினர் என்றும், கோபம் குறைவதற்கு
அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகவும்" என்று அந்த பெண்ணிடம் கூறி அனுப்பினார்கள்.
( நூல்: புகாரி )
அபூஸலமா ரலி
அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளை தம் குடும்ப குழந்தைகளாக தாம் பார்த்துக்
கொள்வதாக நபி ﷺ
அவர்கள் கூறியதை நாம் இங்கு கவனிக்க கடமைப் பட்டுள்ளோம்.
எனவே, ஒரு விதவைக்கு அல்லது விவாகரத்து செய்யபட்ட பெண்ணுக்கு வாழ்வளிக்க முன் வரும்
ஒருவர் முந்தைய கணவர் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளை தமது குடும்ப குழந்தைகளாக கருத
வேண்டும்.
ஆனால், நடந்த கொலைச் சம்பவங்களில் முந்தைய கணவர் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளை
தங்களது உறவுக்கு தடையாக,
பாரமாக கருதியதன் மூலம் அந்த இரு ஆண்களும் தவறான உறவு
கொள்ளும் - விபச்சாரம் செய்யும் நோக்கத்துடனே அந்த பெண்களை நெருங்கி உள்ளனர்
என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
குழந்தைகளை கொல்வது:-
குழந்தைகளை
கொல்வதை இஸ்லாம் இயற்கைக்கு மாறான செயல் என்றும், பூமியின் இயல்பை கெடுக்கும் செயல் என்றும் பூமியில் கலகம் ஏற்படுத்தும் செயல், குழப்பத்தை தூண்டும் செயல் என்றும் வன்மையாக கண்டிக்கின்றது.
அல்குர்ஆனில்
குழந்தைகள் கொலை குறித்து இரண்டு விதமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்று ஃபிர்அவ்ன்
செய்த "ஆண் குழந்தை கொலைகள்" இரண்டு அறியாமைக்கால மக்கள் செய்த
"பெண் குழந்தை கொலைகள்" ஆகும்.
وَاِذْ
نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ
یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ وَفِیْ ذٰلِكُمْ
بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ
உங்களை கடுமையாக
வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம்
விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண்
மக்களை கொன்று,
உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது. (
அல்குர்ஆன்: 2:
49 )
وَاِذَا
بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنثى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ
அவர்களில்
ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம்
கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
یَتَوَارٰی
مِنَ الْقَوْمِ مِنْ سُوْٓءِ مَا بُشِّرَ بِهٖ اَیُمْسِكُهٗ عَلٰی هُوْنٍ
اَمْ یَدُسُّهٗ فِی التُّرَابِ اَلَا سَآءَ مَا یَحْكُمُوْنَ
எதைக் கொண்டு
நன்மாராயங் கூறப்பட்டானோ,
(அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்)
சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்);
அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? ( அல்குர்ஆன்: 16:
58, 59 )
குழந்தைகளை கொல்ல தடை:-
عَنِ
ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً
فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَنَهَى
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ
وَالصِّبْيَانِ»
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர் ஒன்றில்
பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின்
தூதர் ﷺ அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை
செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),( நூல்: புகாரி )
நபி ﷺ அவர்கள் போர்களத்தில் கூட குழந்தைகள் மீது கொடூரத் தாக்குதல், கோரத் தாக்குதல் நடத்தி
கொலை செய்ய தடை செய்தார்கள்.
இஸ்லாமிய
மார்க்கத்தை நபி ﷺ
அவர்கள் மக்களுக்குப் போதித்த காலத்தில், பெண் குழந்தைகள் உயிருடன்
புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்படும் இளம் பிஞ்சுகளைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்
என்ற எச்சரிக்கையை இஸ்லாமிய மார்க்கம் மக்களிடம் கூறியது.
وَاِذَا
الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْ بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْۚ
என்ன
பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்
போது, ( அல்குர்ஆன்: 81:8,9
)
وَلَا
تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْیَةَ اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِیَّاكُمْ
اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِیْرًا
நீங்கள்
வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் -
அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.( அல்குர்ஆன்: 17:
31 )
قُلْ
تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ
شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ
اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ
“வாருங்கள்! உங்கள் இறைவன்
உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக்
காண்பிக்கிறேன்;
எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து
உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; ( அல்குர்ஆன்: 6: 151 )
عن
بريدة رضي الله عنه قال: "…ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنَ
الْأَزْدِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، طَهِّرْنِي. فَقَالَ: (وَيْحَكِ،
ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ، وَتُوبِي إِلَيْهِ).
فَقَالَتْ:
أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ.
قَالَ:
(وَمَا ذَاكِ؟)
قَالَتْ:
إِنَّهَا حُبْلَى مِنَ الزِّنَى، فَقَالَ: (آنْتِ؟) قَالَتْ : نَعَمْ.
فَقَالَ
لَهَا: (حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ)
قَالَ:
فَكَفَلَهَا رَجُلٌ مِنَ الْأَنْصَار، حَتَّى وَضَعَتْ، قَالَ: فَأَتَى النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: قَدْ وَضَعَتِ الْغَامِدِيَّةُ.
فَقَالَ:
(إِذَنْ لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ)
فَقَامَ
رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ، قَالَ:
فَرَجَمَهَا" أخرجه مسلم(5/118).
"அஸ்த்” குலத்தின் ஒரு கிளையான "ஃகாமித்” கோத்திரத்தைச் சேர்ந்த
ஒரு பெண்மணி வந்து,
"அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்"
என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி
மீளுவாயாக" என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண், "மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி
அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார். நபி (ஸல்)
அவர்கள் "என்ன அது?"
என்று கேட்டார்கள். அப்பெண், "நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நீயா (அது)?"
என்று கேட்டார்கள். அப்பெண் "ஆம்" என்றார். நபி
(ஸல்) அவர்கள்,
"உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)" என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை
அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள்,
"நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்போவதில்லை.
பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை
விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில்
ஒருவர் எழுந்து,
"அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி
தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ( நூல்: புகாரி )
கல்லெறி
தண்டனைக்குரிய விபச்சாரம் செய்து விட்ட ஒரு பெண்ணுக்கு வழங்கவிருந்த தண்டனை
வயிற்றில் வளரும் குழந்தைக்காக தண்டனையை தள்ளி வைத்தார்கள் நபி ﷺ அவர்கள்.
குழந்தைகளை கொன்றால் என்ன தண்டனை?
اِنَّ
فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ
طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ
اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ
நிச்சயமாக
ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன்
விட்டும் வைத்தான்;
நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். (
அல்குர்ஆன்: 28:
4 )
ஃபிர்அவ்னுடைய
செயலை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டித்து அவனை "நிச்சயமாக அவன் குழப்பம்
செய்வோரில் ஒருவனாக இருந்தான்" என்று குறிப்பிடுகின்றான்.
பூமியில் குழப்பம் செய்வோருக்கான தண்டனை குறித்து கூறும் போது..
اِنَّمَا
جَزٰٓؤُا الَّذِیْنَ یُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَسْعَوْنَ فِی
الْاَرْضِ فَسَادًا اَنْ یُّقَتَّلُوْۤا اَوْ یُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ
اَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ یُنْفَوْا مِنَ الْاَرْضِ ذٰلِكَ
لَهُمْ خِزْیٌ فِی الدُّنْیَا وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ
அல்லாஹ்வுடனும்
அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து
கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்)
கொல்லப்படுதல்,
அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு
கடத்தப்படுதல்;
இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. ( அல்குர்ஆன்: 5: 33 )
எனவே, குழந்தைகளை கொடூரமாக கொல்லத் துணிந்த இரக்கமற்ற அரக்கர்களுக்கு சாவு தான்
தண்டனை ஆகும்.
உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கி உடனடியாக தூக்கில்
போட வேண்டும்.
குழந்தைகள் கொலைக்கு எதிராக குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்...
وعن
أسماء بنت أبي بكر -رضي الله تعالى عنهما- قالت: رأيت زيد بن عمرو بن نفيل قائماً
مسنداً ظهره إلى الكعبة، يقول: يا معاشر قريش والله ما منكم على دين إبراهيم غيري،
وكان يحيى الموؤدة، يقول للرجل إذا أراد أن يقتل ابنته: لا تقتلها أنا أكفيك
مؤنتها، فيأخذها، فإذا ترعرعت، قال لأبيها: إن شئت دفعتها إليك، وإن شئت كفيتك
مؤونتها"[رواه البخاري:3828].
அஸ்மா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவ
காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும்
இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடக்க வில்லை என்று சொல்லிக்
கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார்.
எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன் என்று
சொல்லிவிட்டு,
அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார்.
அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம்(சென்று), நீ விரும்பினால் இவளை
உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது
செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்)க் கொள்கிறேன் என்று சொல்வார். (
நூல் : புகாரி )
நபித்துவம்
வழங்கப்படுவதற்கு முன்பாகவே, வஹீ இறங்குவதற்கு
முன்பாகவே,
இறைச் சட்டங்களும் தண்டனைகளும் உருவாகுவதற்கு முன்பாகவே
மக்காவில் "பெண் குழந்தை கொலைக்கெதிரான ஓர் குரல்" அறியாமைக்
காலத்திலும் ஓங்கி ஒலித்தது.
தன் சமூகம் ஒரு
குழந்தையை மண்ணுக்குள் புதைக்கத் தயாராகும்போது, அவர் அந்தக் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொள்வார்.
"அவளைக் கொல்லாதே!
அவளுடைய செலவுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று கூறுவார். தனக்குச்
சொந்தமில்லாத ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த
மனிதர் அவர்.
அவர் தான் ஸைத்
இப்னு அம்ர் இப்னு நுஃபைல் (ரலி) ஆவார்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் குழந்தைகளை கொஞ்சும், அவர்களுடன் அழகிய முறையில் உறவாடும், நற்பேற்றை நம்
அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

الحمدلله...ماشاء الله تبارك الله
ReplyDeleteதக்க தருணத்தில் தலைப்பு
மாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்
ReplyDelete