Sunday, 26 March 2023

விட்டுக் கொடு! உச்சம் தொடுவாய்!!

 

விட்டுக் கொடு! உச்சம் தொடுவாய்!!

ரமழான் – (1444 – 2023 ) – தராவீஹ் சிந்தனை:- 5.


ஐந்தாம் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, நான்காம் நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம்.

இன்று ஓதப்பட்ட சூரா அல் மாயிதா அத்தியாயத்தின் 28 முதல் 30 வரையிலான  வசனங்கள் பின்வருமாறு பேசுகின்றது.

لَٮِٕنْۢ بَسَطْتَّ اِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِىْ مَاۤ اَنَا بِبَاسِطٍ يَّدِىَ اِلَيْكَ لِاَقْتُلَكَ‌ ۚ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏

அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

 اِنِّىْۤ اُرِيْدُ اَنْ تَبُوْٓءَا۟بِاِثْمِىْ وَ اِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ‌ۚ وَذٰ لِكَ جَزٰٓؤُا الظّٰلِمِيْنَ‌ۚ‏‏

என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),

 فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَـتْلَ اَخِيْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِيْنَ‏

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.          ( அல்குர்ஆன்: 5: 28-30 )

நபி ஆதம் (அலை) அவர்களின் இரு மக்களிடையே (ஹாபீல் - காபீல்)  நடைபெற்ற நிகழ்வைக் காட்சிப் படுத்தும் வசனங்கள் இவை. இந்த உலகில் நடைபெற்ற முதல் கொலைக் குற்றமும் முதல் உயிர்ப்பழியும் இது தான்.

தன் சொந்த சகோதரர் மீது கொண்ட குரோதமும் தன் சொந்த சகோதரருக்கு விட்டுக் கொடுத்து நடக்க வேண்டிய தருணத்தில் தனக்கானதாக சொந்தம் கொண்டாடிய ஒருவரின் விவேகமற்ற செயலால் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தாங்கி நிற்கும் வசனங்கள் இவை.

இங்கே அல்லாஹ் சுட்டிக் காட்ட விரும்புவது பிறருக்கான ஹக்கை பிறருக்கு சொந்தமான ஒன்றை உனக்கானதாக கருதாதே! உனக்கானதாக, உனக்கே சொந்தமான ஒன்றாக இருந்தாலும் நீ அதை விட்டுக் கொடுத்து விடு! என்பதைத் தான்.

ஆம்! இந்த உலகில் இன்றளவும் நடைபெறுகிற பல்வேறு மனக்கசப்புகளுக்கும் பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும், குற்றங்களுக்கும் முழு முதற் காரணமாக அமைந்திருப்பது விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பது தான் என்றால் அது மிகையாகாது.

பொதுவாக நற்குணங்கள் குறித்து நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றோம்.

நற்குணங்களின் அவசியம் குறித்து நாம் கொஞ்சம் கூட கவலைப்படுவதும் இல்லை. ஆனால், நற்குணம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதை ஒரு சம்பவத்தில் மூலம் பார்க்கலாம்.

حدثنا عبد الله بن محمد قال حدثنا أبو عامر قال حدثنا عبد الجليل بن عطية عن شهر عن أم الدرداء قالت قام أبو الدرداء ليلة يصلى فجعل يبكى ويقول اللهم أحسنت خلقي فحسن خلقي حتى أصبح فقلت يا أبا الدرداء ما كان دعاؤك منذ الليلة إلا في حسن الخلق فقال يا أم الدرداء إن العبد المسلم يحسن خلقه حتى يدخله حسن خلقه الجنة ويسئ خلقه حتى يدخله سوء خلقه النار والعبد المسلم يغفر له وهو نائم فقلت يا أبا الدرداء كيف يغفر له وهو نائم قال يقوم أخوه من الليل فيتهجد فيدعو الله عز وجل فيستجيب له ويدعو لأخيه فيستجيب له فيه

உம்முத்தர்தா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:"
(
என் கணவர்) அபுத்தர்தா (ரழி) அவர்கள் இரவில் தொழும்போது அழ ஆரம்பித்தவர்களாக இறைவா என்னுடைய தோற்றத்தை நீ அழகாக்கி விட்டாய். ஆகவே என்னுடைய குணத்தையும் அழகாக்குவாயாகஎன்று காலை நேரம் வரும் வரை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போது நான் அபுத்தர்தாவே இரவு முழுக்க குறுகிய நற் குணம் பற்றியே நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்களே?” என்று கேட்டேன். அப்போது அபுத்தர்தா(ரழி) அவர்கள் உம்முத்தர்தாவே ஒரு முஸ்லிமான அடியானின் நற்குணம் அழகியதாக இருப்பின் அவனுடைய அழகிய நற்குணத்தால் சுவர்க்கத்தில் அவனை அது புகுத்திவிடும். அவனின் குணம் தீயதாக இருப்பின் அவனுடைய தீய குணம் அவனை நரகில் புகுத்திவிடும்.

ஒரு முஸ்லிமான அடியான் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் அவனுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படும்என்று கூறினார்கள். அபுத்தர்தாவே ஒருவன் தூங்கிக் கொண்டிருக்க அவனுக்கு எவ்வாறு பாவ மன்னிப்பு வழங்கப்படும்என்று நான் கேட்டேன். அவனுடைய சகோதரன் இரவில் நின்று வணங்கி தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறான் அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான்.

மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான். அவன் விஷயத்திலேயும் அவனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கிறான். என்று அபுத்தர்தா (ரழி) கூறினார்கள். நூல்: அல்அதபுல் முஃப்ரத் 290)

 

وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .

وقَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي عَاصِمُ بْنُ عُمَرَ بْنِ قَتَادَةَ ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ، قَالَ :

" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "

"سيرة ابن هشام" (2 / 86)

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: "உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)

 

தம் தந்தையைக் கொன்றவர்களிடத்திலும் ஹுதைஃபா (ரலி) அவர்கள் காட்டிய பரிவு மேலும் அவர்களின் பாவம் மன்னிக்கப்படவேண்டும் என்று அவர்கள் செய்த துஆ! இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம்.

حَدَّثَنِي ‏ ‏مَالِك ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏الضَّحَّاكَ بْنَ خَلِيفَةَ ‏ ‏سَاقَ خَلِيجًا ‏ ‏لَهُ مِنْ ‏ ‏الْعُرَيْضِ ‏ ‏فَأَرَادَ أَنْ يَمُرَّ بِهِ فِي أَرْضِ ‏ ‏مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ ‏ ‏فَأَبَى ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏لِمَ تَمْنَعُنِي وَهُوَ لَكَ مَنْفَعَةٌ تَشْرَبُ بِهِ أَوَّلًا وَآخِرًا وَلَا يَضُرُّكَ فَأَبَى ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏فَكَلَّمَ فِيهِ ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏فَدَعَا ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ ‏ ‏فَأَمَرَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَهُ فَقَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏لَا فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِمَ تَمْنَعُ أَخَاكَ مَا يَنْفَعُهُ وَهُوَ لَكَ نَافِعٌ تَسْقِي بِهِ أَوَّلًا وَآخِرًا وَهُوَ لَا يَضُرُّكَ فَقَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏لَا وَاللَّهِ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَاللَّهِ لَيَمُرَّنَّ بِهِ وَلَوْ عَلَى بَطْنِكَ فَأَمَرَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏أَنْ يَمُرَّ بِهِ فَفَعَلَ ‏ ‏الضَّحَّاكُ

ளஹ்ஹாக் பின் ஃகலீஃபா (ரலி) அவர்கள், அரீள் என்ற இடத்தில் இருந்து ஓர் நீரோடையைத் தோண்டி, அதனை முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களுடைய நிலத்தினூடாகக் கொண்டுவர நாடினார். மஸ்லமா (ரலி) அதனைத் தடுத்தார். அப்போது ளஹ்ஹாக் (ரலி) அவரிடம் கேட்டார்: ‘‘அது உங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்தானே... பின்னர் ஏன் நீங்கள் தடுக்கின்றீர்கள்?. முதாலவதாகவும் கடைசியாகவும் நீங்கள்தானே அதிலிருந்து பயனடைவீர்கள்?. அதன் மூலம் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப்போவதும் இல்லையே’’.

ஆயினும் மஸ்லமா (ரலி) சம்மதிக்கவில்லை. ஆகவே ழஹ்ஹாக் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து முறையிட்டார். மஸ்லமா (ரலி) அவர்களை அழைத்து, நீரோடைக்கான தடையை நீக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். அப்போதும் மஸ்லமா (ரலி), ‘‘முடியாது’’ என்று கூறினார். அதனைச் செவியுற்ற உமர் (ரலி) கூறினார்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணை! அந்த நீரோடையை நான் தோண்டத்தான் செய்வேன். அது உமது வயிற்றுக்கு மேலாகச் செல்வதாக இருந்தாலும் சரியே’’. பின்னர் அவருடைய நிலத்தினூடாக தோண்டுமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். ளஹ்ஹாக் (ரலி) அவ்வாறே செய்தார். ( நூல்: முஅத்தா லிஇமாமி மாலிக் )

விட்டுக் கொடுப்பவரையே அல்லாஹ் விரும்புகிறான்!

جثا رجلان على ركبهما يوم القيامة عند رب العباد سبحانه وتعالى، قال أحدهما: “يا ربي إنه قد ظلمني في الدنيا، خذ بحقي منه يا ربي”.

فيقول الله سبحانه وتعالى: “أعطه من حسناتك”.

الآخر: “لقد فنيت جميع حسناتي يا ربي”.

فيقول الأول: “فليأخذ من سيئاتي يا ربي”.

هنا يحزن النبي صلى الله عليه وسلم كثيرا بسبب دخول أحد من أمته النار بظلم لأخيه في الدنيا

நாளை மறுமையில் இரண்டு அடியார்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலை மாநபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடையே சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்போது ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முகத்தில் கவலை தோய்ந்த நிலையில் இருந்தது. 

இருவரில் ஒருவர் அல்லாஹ்வின் முன் வந்து நின்று "அல்லாஹ்வே! உலகில் வாழும் காலத்தில் இவர் எனக்கு அநீதம் இழைத்து வந்தார். ஆகவே, அதற்கான என் பங்கை நீ அவரிடம் இருந்து பெற்றுக் கொடு!" என்பார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட அடியானை நோக்கி "உன் நன்மைகளை அவனுக்கு வழங்கு"  என்பான். அதற்கவர், என் இறைவா! என் நன்மைகள் எல்லாம் அழிந்து போயிற்று" என்பார்.

இதைக் கேட்ட முதலாமவர் "அப்படியென்றால் அல்லாஹ்வே! அவரின் அநீதத்தை கணக்கிட்டு அதற்கு நிகரான என் பாவங்களை எடுத்து அவருக்கு வழங்கிடு" என்பார்.

இந்த தருணத்தில் தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தன் சகோதரருக்கு இழைத்த அநீதியால் நரகை நோக்கி செல்கிறாரே என்ற கவலை நபி ஸல் அவர்களை சூழ்ந்து கொண்டது.

فيقول الله سبحانه وتعالى للمظلوم الذي يريد أن يأخذ بحقه من أخيه: “انظر إلى الجنة”، فتنكشف له الجنة بما فيها من قصور وأنهار ومناظر بديعية، فيسأل الرجل ربه: “يا ربي لمن هذه القصور، لأي نبي أو لأي صديق أو لأي شهيد؟

فيجيبه خالقه: “كل هذا لمن أعطى ثمنه”.

فيسأله الرجل: “يا ربي ومن يملك ثمنها؟

فيجيبه رب العباد: “أنت تملك الثمن”.

قال: “وما ثمنها يا ربي؟

அப்போது அல்லாஹ் முதலாமவரை நோக்கி "அழகும், அழகிய காட்சிகளும் ஆறுகளும், கோட்டைகளும் கொண்ட சுவனத்தைக் காண்பித்து"இதோ! இந்த சுவனத்தைப் பார்!" என்பான்.

 

சுவனத்தின் ரம்மியமான அழகைக் கண்ட அந்த அடியார் "அல்லாஹ்வே! இந்த சுவனத்தை யாருக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". இது எந்த நபிக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". இல்லை, எந்த ஸித்தீக் - உண்மையாளருக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". இல்லை, எந்த ஷஹீத் - மார்க்கப் போராளிக்கு வழங்குவதற்காக வைத்திருக்கின்றாய்?". என்று கேட்பார்.

அதற்கு, அல்லாஹ்"இதன் விலையை யார் தருகிறார்களோ? அவருக்கு நான் வழங்குவதற்காக வைத்துள்ளேன்" என்பான்.

அப்போது அந்த அடியார், "யார் இந்த மாளிகையை விலை கொடுத்து வாங்க முடியும்?"  என்று வியப்புடன் கேட்பார்.

அதற்கு, அல்லாஹ் "உன்னால் கூட அதை விலைக்கு வாங்க முடியும்" என்று அல்லாஹ் சொன்னான்.

அதற்கவர், "என்னிடத்தில்  விலைக்கு வாங்கும் அளவுக்கு என்ன இருக்கிறது?" எனக் கேட்பார். 

قال سبحانه وتعالى: “العفو عن أخيك”، فقال: “لقد عفوت عنه يا ربي”.

فيقول رب العباد: “خذ بيد أخيك وادخلا الجنة”، وهنا ضحك النبي صلى الله عليه وسلم بفرحة.

அப்போது அல்லாஹ், "உன் சகோதரனை மன்னித்து தண்டிக்கப்பட வேண்டும் என்ற உன் மனோநிலையை விட்டுக் கொடுத்து விடு! " என்பான்.

அதற்கு அந்த அடியார் "இதோ! நான் மன்னித்து விட்டேன் " என் இறைவனே!" என்பார்.

அப்போது அல்லாஹ் "உன் சகோதரரின் கரங்களைப் பிடி! (அவர் பிடித்ததும்) நீங்கள் இருவரும் சுவனத்தில் நுழையுங்கள்" என்பான்.

இதை சொல்லும் போது நபி ஸல் அவர்கள் மகிழ்ச்சியால் சிரித்தார்கள். ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )

விட்டுக் கொடுப்பவருக்கு மன்னிப்பை வழங்குகின்றான் அல்லாஹ்..

عن ابن عمر – رضي الله عنهما – أنه كان مريضا، فاشتهى سمكة طرية، فالتُمست له بالمدينة، فلم توجد حتى وُجدت بعد كذا وكذا يوم، فاشتُريت بدرهم ونصف، وشويت، وحُملت له على رغيف، فقام سائل على الباب، فقال للغلام : لفها برغيف، وادفعها له .

فقال الغلام : أصلحك لله، اشتهيتها منذ كذا وكذا يوم، فلم نجدها، فلما وجدناها، واشتريناها بدرهم ونصف أمرت أن ندفعها له، نحن نعطيه ثمنها .

فقال : لفها، وادفعها إليه .

فقال الغلام للسائل : هل لك أن تأخذ درهما وتدع هذه السمكة ؟

فأخذ منه درهما، وردها، فعاد الغلام وقال له : دفعت له درهما وأخذتها منه .

فقال له : لفها، وادفعها إليه، ولا تأخذ منه شيئا، فإني سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : ” أيما امرئ اشتهى شهوة فرد شهوته ، وآثر بها على نفسه غفر الله له ” .

இப்னு உமர் ரலி அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவர்களின் மனம் பொரித்த மீன் சாப்பிட ஆவல் கொண்டது. 

ஆனால், மதீனாவின் எந்த கடை வீதியிலும் மீன் கிடைக்கவில்லை. எப்படியோ ஒரு நாள் ஒரு கடையில் ஒன்றரை திர்ஹம் கொடுத்து மீன் வாங்கி வந்து பொரித்து ரொட்டியோடு சேர்த்து சாப்பிட ஆரம்பிக்கும் போது வாசலில் ஒரு ஏழை உணவை யாசித்தார். அப்போது இப்னு உமர் ரலி அவர்கள் தம்முடைய பணியாளரிடம் அந்த ஏழையிடம் கொண்டு கொடுக்குமாறு கூறினார்கள்.

அதற்கு அந்த பணியாளர் "கடந்த சில நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட, விலை அதிகமாக கொடுத்து வாங்கிய மீனை சாப்பிடாமல் இப்படி ஏழையிடம் கொடுக்கச் சொல்கின்றீர்களே? என்று கொடுக்க மறுத்த போது இப்னு உமர் ரலி அவர்கள் ஏழைக்கு கொடுத்து விடுமாறு பணித்தார்கள்.

ஏழையின் அருகே வந்த அந்த பணியாள் இதோ ஒரு திர்ஹம் இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு உணவை என்னிடமே தந்து விடுகின்றீரா? என கேட்ட போது, அந்த ஏழை அதற்கு ஒத்துக் கொண்டு ஒரு திட்டத்தை பெற்றுக் கொண்டு உணவை திரும்ப கொடுத்து  விட்டார்கள்.

இதை இப்னு உமர் ரலி அவர்களிடம் தெரிவித்த போது இப்னு உமர் ரலி அவர்கள் அந்த உணவையும் அந்த ஏழையிடம் திருப்பிக் கொடுக்குமாறு பணியாளருக்கு உத்தவிட்ட பிறகு "நான் நபி ஸல் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் "ஒருவர் ஒன்றை விரும்பி அதை தனக்கானதாக ஆக்கிக் கொள்கிற நேரத்தில் இன்னொருவரின் விருப்பத்திற்காக விட்டுக் கொடுக்கின்றார் என்றால் அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்கிறான்" என்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையை விட்டுக் கொடுத்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்!

 

لما طُعِن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنهما قال لابنه عبد الله اذهب إلى أُمِّ المؤمنين عائشة رضي الله عنها فقل: يقرأ عمر ابن الخطَّاب عليك السَّلام، ثمَّ سلها أن أُدْفَن مع صاحبيَّ. قالت: كنت أريده لنفسي، فلأوثرنَّه اليوم على نفسي. فلمَّا أقبل، قال له: ما لديك؟ قال: أذنت لك يا أمير المؤمنين. قال: ما كان شيء أهمَّ إليَّ من ذلك المضجع، فإذا قُبِضت فاحملوني، ثمَّ سلِّموا، ثمَّ قل: يستأذن عمر بن الخطَّاب، فإن أذنت لي فادفنوني، وإلَّا فردُّوني إلى مقابر المسلمين..

உமர் (ரலி) அவர்கள் அபூ லுஃலுவுல் ஃபைரோஸி என்பவனால் குத்தப்பட்டு ஷஹீதாகும் நிலையில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது தம்முடைய மகன் இப்னு உமர் (ரலி) அவர்களை அழைத்து நேராக ஆயிஷா ரலி அவர்கள் சமூகத்திற்கு சென்று நான் ஸலாம் சொன்னதாக சொல்லிய பிறகு "என் தந்தை உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் அருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றாராம். நீங்கள் அனுமதி தருவீர்களா? என்று கேட்கச் சொன்னார் " என்று தம் மகனிடம் சொல்லி அனுப்பினார்கள்.

அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் இப்படி உமர் ரலி அவர்களின் ஆசையை தெரிவித்த போது உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள்  நான் எனக்கான இடமாக அதை ஆக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இப்போது உமர் (ரலி) அவர்களின் விருப்பத்திற்காக என் விருப்பத்தை விட்டுக் கொடுக்கின்றேன்" என்றார்கள்.

அங்கிருந்து விடைபெற்று தம் தந்தையின் அருகே வரும் போது ஆவல் பூக்க உமர் (ரலி) "உம்முல் முஃமினீன் உன்னிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு இப்னு உமர் ரலி அவர்கள் "சம்மதித்து விட்டார்கள்" என்று கூற, அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் "எனக்கு பெருமானார் (ஸல்) அவர்களின் அருகே கிடைத்த இந்த இடமே எனக்கு இந்த உலகில் உயர்ந்த அம்சமாகும் " என்று கூறினார்கள்.

பின்னர் தம் மகனை அழைத்து"நான் இறந்த பிறகு என் உடலை சுமந்து சென்று நபி ஸல் அவர்களின் அருகே அடக்கம் செய்ய முற்பட்டு ஏதோ ஒரு காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டால் முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வழங்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Saturday, 25 March 2023

பேராசை தவிர்ப்போம்! போதுமென்ற மனம் பெறுவோம்!!

 

பேராசை தவிர்ப்போம்! போதுமென்ற மனம் பெறுவோம்!!

ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:- 4.

 


நான்காம் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, மூன்றாம் நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம்.

இன்று ஓதப்பட்ட சூரா அந்நிஸா அத்தியாயத்தின் 32 –ம் வசனம் பின்வருமாறு பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ‌ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ‌ ؕ وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4: 32

அதாவது பேராசையை தவிர்க்குமாறு அல்லாஹ் ஆணையிடுவதை பறைசாற்றுகின்றது.

 மனிதனின் பேராசைக்கு ஓர் எல்லை இல்லை. குறைவான பணமும் சில ஆயிரங்களும் உள்ளவன் லட்சங்களைத் தேடுவான், லட்சங்களை அடைந்தவன் கோடிக் கணக்கில் தேடுவான். கோடியைத் தொட்டவன் மில்லியனையும் பில்லியனையும் ட்ரில்லியனையும் நோக்கி ஓடுவான். மனிதனது தேடலுக்கும் ஓடலுக்கும்  முடிவே இல்லை.

இறந்து மண்ணறையில் வைத்து மண்ணைப் போட்டு மூடும் வரை மனிதனின் பேராசை என்பது தொடரவே செய்யும்.

இப்பேராசையிலிருந்து யாரை அல்லாஹ் காப்பாற்றுகின்றானோ அவர் தான் இதிலிருந்து தப்பிக்க முடியும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பேராசையிலிருந்து பாதுகாத்து அருள்வானாக!

வசதி படைத்தவர்கள் வீடு கடை என்று கட்டுவதையும், கார் பைக் என்று வாங்குவதையும், இன்ன பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் பார்க்கும் வசதியற்றவர்கள் நாமும் இது போன்று வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதும், அதற்காக கடன் வாங்கி அவர்கள் போல வாழ எத்தனித்து இறுதியில் அதைக் கட்ட முடியாமல் திணறுவதும், கடன் கொடுத்தவன் முன்னால் கூனிக் குறுகி நிற்பதும், வாங்கிய கடனை வாரிசுகள் தலையில் சுமத்தி விட்டு குடும்பத்தார்களை நிராயுதபாணியாக விட்டுச் செல்வதற்கும் எது காரணம் என்று பார்த்தோமேயானால் சில காரணங்களை நாம் புரிந்து கொள்ளலாம்.

1.   பேராசை

நம்மைப் படைத்த அல்லாஹ் நமது  நிலைகளையும் நமதுதேவைகளையும்,  நம்மை விட நன்கு அறிந்தவன்.

அவன் நமக்குக் குறைவாகக் கொடுத்த போதிலும் அதில் நமது தேவையை நிறைவு செய்வான். அல்லது நமக்குச் சிரமத்தைக் தந்து சோதித்துப் பார்ப்பதற்காக நமக்கு அளவோடு தந்திருப்பான் என்று நாம் கருதிக் கொள்வோமேயானால் நமக்குக் கிடைத்திருப்பதில் நமக்கு முழு திருப்தி ஏற்பட்டுவிடும்.

நமக்கு திருப்தி ஏற்பட்டு விட்டால் நம்முடைய நிம்மதிக்கும் நம்முடைய மார்க்கத்திற்கும் எந்தப் பங்கமும் ஏற்படாது.

حدثنا سويد بن نصر أخبرنا عبد الله بن المبارك عن زكريا بن أبي زائدة عن محمد بن عبد الرحمن بن سعد بن زارة عن ابن كعب بن مالك الأنصاري عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه

 "ஒரு ஆட்டு மந்தையினுள் (நுழைந்த) அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அந்த மந்தையை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்கி விடும்" என்று நபி () அவர்கள் கூறியதாக கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : திர்மிதி 2298 )


حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقْرَأُ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) قَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِى مَالِى – قَالَ – وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلاَّ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ.

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்த போது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம் என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்" என்று நபி () அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் 5665 )

இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம்.

2. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளாமல் இருப்பது.


  حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ

"பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபி () அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : புகாரி 6435 )

3. போதுமென்ற மனம் இல்லாதது.


قال عبد الله بن عمرو -رضي الله عنه- قال رسول الله صلى الله عليه وسلم: "قَدْ أَفْلَحَ مَن أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بما آتَاهُ

யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார் என்று நபி () அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல் : முஸ்லிம் 1903 )

 عن النبي صلى الله عليه وسلم قال

 ليس الغنى عن كثرة العرض ، ولكن الغنى غنى النفس

"வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்" என்று நபி () அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : முஸ்லிம் 1898 )

செல்வம் சேர்ப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் அல்ல..

மறுமைநாளில் நடக்கும் வழக்கொன்றை நபிகளார் () தமது தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், “ இரண்டு வகையான மனிதர்களுக்கு இறைவன் ஏராளமான சொத்து, சுகங்கள், சந்ததிகளை அருளினான். மறுமையில், அந்த இரண்டு வகை மனிதர்களில் முதலாவது வகை மனிதக் கூட்டத்தாரை அழைப்பான். அவர்களில் ஒருவரை அழைத்து, என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படி செலழித்தாய்? என்று கேட்பான்.

அதற்கு அந்த மனிதரோ, “என்னுடைய சந்ததிகள் வறுமையில் பீடிக்கப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சி நான் அவற்றை என் சந்ததிகளுக்காக விட்டுவிட்டு வந்துவிட்டேன்!என்று பதில் சொல்வான்.

அதை கேட்டு இறைவன் இப்படி சொல்வான்: உண்மையைத் தெரிந்து கொண்டால் குறைவாகவே மகிழ்ச்சியடைவாய். அதிகமாகக் கண்ணீர் சிந்துவாய். உனது சந்ததிகளுக்கு எது வரக்கூடாது என்று அஞ்சினாயோ அதையே உமது சந்ததிகளின் மீது இறக்கிவிட்டேன்!

பின்னர், இரண்டாவது கூட்டத்தாரைச் சேர்ந்த மனிதனிடம், “என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படிச் செலழித்தாய்?” – என்று விசாரணை ஆரம்பமாகும்.

அதற்கு அந்த அடியான், “இறைவா நீ என் மீது சொரிந்த அருட்கொடைகளை உனது கட்டளைப்படியே அறவழிகளில் செலவழித்தேன். உனது எல்லையற்ற கருணையையும், அருளையும், பாதுகாப்பையும் மட்டுமே என் சந்ததிகளின் சொத்துக்களாய் விட்டு வந்தேன்!என்பான்.

இதைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் சொல்வான்: உண்மையை தெரிந்து கொண்டால், குறைவாகவே கவலை கொள்வாய். அதிகமாய் மகிழ்ச்சி அடைவாய். எவற்றை நம்பி உமது சந்ததிகளை விட்டு வந்தாயோ அவற்றையே நான் அவர்களுக்கு அருள்பாலித்துவிட்டேன்!

பேராசையில் இருந்து விடுபட...

1.   உலகம், உலக வாழ்வின் மீதான மதிப்பீட்டை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

وعن جابرٍ

أَنَّ رسولَ اللَّه ﷺ مَرَّ بِالسُّوقِ وَالنَّاسُ كنفتيه، فَمَرَّ بِجَدْيٍ أَسَكّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ، فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَكُونَ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟ فَقالوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟! ثُمَّ قَالَ: أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟ قَالُوا: وَاللَّه لَوْ كَانَ حَيًّا كَانَ عَيْبًا أنَّه أَسَكّ، فكَيْفَ وَهو مَيِّتٌ؟! فقال: فَوَاللَّه للدُّنْيَا أَهْوَنُ عَلى اللَّه مِنْ هَذَا عَلَيْكُمْ رواه مسلم.

ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ஆலியாவின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள் செத்துக் கிடந்த காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் அந்த ஆட்டை எடுத்து அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள் எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’ என்று கேட்டார்கள்.மக்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில் இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம்

அல்லாஹ்விடம் இவ்வுலகம் கொசுவின் இறக்கை அளவிற்கு மதிப்பு இருக்குமானால் ஓர் காஃபிருக்கு கூட அல்லாஹ் குடிக்க நீர் வழங்க மாட்டான் என்று நபி () அவர்கள் கூறினார்கள். நூல் :திர்மிதி

இவ்வுலகமே நிரந்தரமானது என்று நினைத்து நம்மில் பலரும்  எப்படியாவது செல்வத்தை சேர்த்து வாழ வேண்டும் என்று எண்ணுகிற சூழ்நிலைகளை பார்க்க முடிகின்றது. இதற்கான காரணம் இந்த உலகத்தை பற்றிய மதிப்பீடை நாம் புரிந்துக் கொள்ளாததே ஆகும்.

2. செல்வம் பெருகுவதை நாம் அலங்காரமாக, அடையாளமாக கருதுகிறோம்.

عن عمرو بن عوف الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح رضي الله عنه إلى البحرين يأتي بِجِزْيَتِهَا، فَقدِم بمالٍ من البحرين، فسمعت الأنصار بقدوم أبي عبيدة، فَوَافَوْا صلاة الفجر مع رسول الله صلى الله عليه وسلم فلما صلى رسول الله صلى الله عليه وسلم انصرف، فَتَعَرَّضُوا له، فتَبسَّم رسول الله صلى الله عليه وسلم حين رآهم، ثم قال: «أَظُنُّكُمْ سَمِعتم أن أبا عبيدة قَدِم بشيءٍ من البحرين؟» فقالوا: أجل، يا رسول الله، فقال: «أبشروا وأمِّلوا ما يَسُرُّكُم، فوالله ما الفَقرَ أخشى عليكم، ولكني أخَشى أن تُبْسَط الدنيا عليكم كما بُسِطَت على من كان قبلكم، فتَنَافسوها كما تَنَافسوها، فَتُهْلِكَكُم كما أهْلَكَتْهُمْ»

இறைத்தூதர் () அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா (காப்பு வரியை) வசூலித்துக் கொண்டு வரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள்.

இறைத்தூதர் () அவர்கள் (நெருப்பு வணங்கிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி() அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றினார்.

நபி () அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் இறைத்தூதர் () அவர்கள் புன்னகைத்துவிட்டு அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்று கூற அன்சாரிகள் ஆம் இறைத்தூதர் அவர்களே!என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி () அவர்கள் உங்களுக்கு நற்செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

3. நமக்கும் கீழ் நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ يَحْيَى أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِىُّ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ

 

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5670 

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ

செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி-6490 

4. இறைவனிடமே கேட்டுப் பெற்றுக் கொள்வோம்!

மரணம் ஒருவனைத் தேடுவதைப் போல அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட செல்வமும் அவனைத் தேடுகிறது.

عن أبي العباس عبدالله بن عباسٍ رضي الله عنهما قال: كنت خلف النبي صلى الله عليه وسلم يومًا، فقال: ((يا غلام، إني أعلمك كلماتٍ: احفظ الله يحفظك، احفظ الله تجده تجاهك، إذا سألتَ فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعـوك بشيءٍ لم ينفعوك إلا بشيءٍ قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يضروك بشيءٍ لم يضروك إلا بشيءٍ قد كتبه الله عليك، رُفعت الأقلام، وجفَّت الصحف))؛ رواه الترمذي وقال: حديث حسن صحيحٌ.

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்()அவர்கள் கூறுகிறார்கள் : உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்!

மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன. (நூல்:  திர்மிதீ-2516 (2440)

எது நமக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் விதித்து விட்டானோ அது நமக்கு எப்படியும் கிடைத்து விடும். ஏனென்றால் அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய செல்வத்தை நிர்ணயித்து எழுதி விட்டான். அவன் எதை எழுதினானோ அதுதான் கிடைக்கும். அதற்கு மேல் வேறொன்றும் கிடைத்து விடாது.

அல்லாஹ் நாடினால் இறைத்தூதர்களுக்கு வழங்கியதற்கு நிகரான பரக்கத்தை இறைத்தூதர் அல்லாதவர்களுக்கும் வழங்கி விடுவான் என்பதற்கு பின் வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரியா (அலை) அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் உணவு கொண்டு வருதற்கு முன்பே பள்ளிவாசலில் உணவு இருப்பதைக் காண்கிறார்கள். இது எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டபோது இது அல்லாஹ்விடமிருந்து எனக்குக் கிடைத்தது என்று மர்யம் (அலை) பதில் அளித்தார்கள்.

இது மட்டுமல்ல; அல்லாஹ் நாடினால் கணக்கின்றி கொடுத்து விடுவான் எனவும் அவர்கள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல; அனைவருக்கும் உரியது என்பதை இதன் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மர்யம் (அலை) அவர்களுக்கு இப்படி நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ் உணவளித்ததை சொல்லிக் காட்டுகிறான்.

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார். இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான் என்று (மர்யம்) கூறினார். ( அல்குர்ஆன்: 3: 37 )

அல்லாஹ் நாடி விட்டால் மனிதர்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையிலும் அல்லாஹ்விடமிருந்து செல்வம் வந்து சேரும் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏

65:3 وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான். ( அல்குர்ஆன்: 65: 2,3 )

இப்ராஹீம் (அலை) அவர்கள் பலைவனத்தில் தமது குடும்பத்தைக் குடியமர்த்திய போது பின் வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்.

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ

 اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!. ( அல்குர்ஆன்: 14: 37 )

எந்த இடத்தில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத ஓர் இடத்தில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவியையும், பச்சிளம் பாலகரையும் குடியமர்த்த எப்படித் துணிந்தார்கள்? அல்லாஹ் நாடினால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் உணவளிப்பான்; வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவான் என்று இப்ராஹீம் நபி அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம். ஆதலால் தான் இருகரம் ஏந்தி துஆவும் செய்தார்கள்.

அவர்களின் அசைக்க முடியாத இந்த நம்பிக்கைக்காக, அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்த அல்லாஹ் ஜம்ஜம் நீரூற்றை பரிசாக வழங்கினான். மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக ஜம்ஜம் நீரூற்று அமைந்துள்ளது.

 

அல்லாஹ் நம் அனைவரையும் பேராசையை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்!