Saturday 25 March 2023

பேராசை தவிர்ப்போம்! போதுமென்ற மனம் பெறுவோம்!!

 

பேராசை தவிர்ப்போம்! போதுமென்ற மனம் பெறுவோம்!!

ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:- 4.

 


நான்காம் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, மூன்றாம் நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம்.

இன்று ஓதப்பட்ட சூரா அந்நிஸா அத்தியாயத்தின் 32 –ம் வசனம் பின்வருமாறு பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ‌ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ‌ ؕ وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4: 32

அதாவது பேராசையை தவிர்க்குமாறு அல்லாஹ் ஆணையிடுவதை பறைசாற்றுகின்றது.

 மனிதனின் பேராசைக்கு ஓர் எல்லை இல்லை. குறைவான பணமும் சில ஆயிரங்களும் உள்ளவன் லட்சங்களைத் தேடுவான், லட்சங்களை அடைந்தவன் கோடிக் கணக்கில் தேடுவான். கோடியைத் தொட்டவன் மில்லியனையும் பில்லியனையும் ட்ரில்லியனையும் நோக்கி ஓடுவான். மனிதனது தேடலுக்கும் ஓடலுக்கும்  முடிவே இல்லை.

இறந்து மண்ணறையில் வைத்து மண்ணைப் போட்டு மூடும் வரை மனிதனின் பேராசை என்பது தொடரவே செய்யும்.

இப்பேராசையிலிருந்து யாரை அல்லாஹ் காப்பாற்றுகின்றானோ அவர் தான் இதிலிருந்து தப்பிக்க முடியும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பேராசையிலிருந்து பாதுகாத்து அருள்வானாக!

வசதி படைத்தவர்கள் வீடு கடை என்று கட்டுவதையும், கார் பைக் என்று வாங்குவதையும், இன்ன பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் பார்க்கும் வசதியற்றவர்கள் நாமும் இது போன்று வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதும், அதற்காக கடன் வாங்கி அவர்கள் போல வாழ எத்தனித்து இறுதியில் அதைக் கட்ட முடியாமல் திணறுவதும், கடன் கொடுத்தவன் முன்னால் கூனிக் குறுகி நிற்பதும், வாங்கிய கடனை வாரிசுகள் தலையில் சுமத்தி விட்டு குடும்பத்தார்களை நிராயுதபாணியாக விட்டுச் செல்வதற்கும் எது காரணம் என்று பார்த்தோமேயானால் சில காரணங்களை நாம் புரிந்து கொள்ளலாம்.

1.   பேராசை

நம்மைப் படைத்த அல்லாஹ் நமது  நிலைகளையும் நமதுதேவைகளையும்,  நம்மை விட நன்கு அறிந்தவன்.

அவன் நமக்குக் குறைவாகக் கொடுத்த போதிலும் அதில் நமது தேவையை நிறைவு செய்வான். அல்லது நமக்குச் சிரமத்தைக் தந்து சோதித்துப் பார்ப்பதற்காக நமக்கு அளவோடு தந்திருப்பான் என்று நாம் கருதிக் கொள்வோமேயானால் நமக்குக் கிடைத்திருப்பதில் நமக்கு முழு திருப்தி ஏற்பட்டுவிடும்.

நமக்கு திருப்தி ஏற்பட்டு விட்டால் நம்முடைய நிம்மதிக்கும் நம்முடைய மார்க்கத்திற்கும் எந்தப் பங்கமும் ஏற்படாது.

حدثنا سويد بن نصر أخبرنا عبد الله بن المبارك عن زكريا بن أبي زائدة عن محمد بن عبد الرحمن بن سعد بن زارة عن ابن كعب بن مالك الأنصاري عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه

 "ஒரு ஆட்டு மந்தையினுள் (நுழைந்த) அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அந்த மந்தையை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்கி விடும்" என்று நபி () அவர்கள் கூறியதாக கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : திர்மிதி 2298 )


حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقْرَأُ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) قَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِى مَالِى – قَالَ – وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلاَّ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ.

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்த போது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம் என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்" என்று நபி () அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் 5665 )

இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம்.

2. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளாமல் இருப்பது.


  حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ

"பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபி () அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : புகாரி 6435 )

3. போதுமென்ற மனம் இல்லாதது.


قال عبد الله بن عمرو -رضي الله عنه- قال رسول الله صلى الله عليه وسلم: "قَدْ أَفْلَحَ مَن أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بما آتَاهُ

யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார் என்று நபி () அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல் : முஸ்லிம் 1903 )

 عن النبي صلى الله عليه وسلم قال

 ليس الغنى عن كثرة العرض ، ولكن الغنى غنى النفس

"வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்" என்று நபி () அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : முஸ்லிம் 1898 )

செல்வம் சேர்ப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் அல்ல..

மறுமைநாளில் நடக்கும் வழக்கொன்றை நபிகளார் () தமது தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், “ இரண்டு வகையான மனிதர்களுக்கு இறைவன் ஏராளமான சொத்து, சுகங்கள், சந்ததிகளை அருளினான். மறுமையில், அந்த இரண்டு வகை மனிதர்களில் முதலாவது வகை மனிதக் கூட்டத்தாரை அழைப்பான். அவர்களில் ஒருவரை அழைத்து, என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படி செலழித்தாய்? என்று கேட்பான்.

அதற்கு அந்த மனிதரோ, “என்னுடைய சந்ததிகள் வறுமையில் பீடிக்கப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சி நான் அவற்றை என் சந்ததிகளுக்காக விட்டுவிட்டு வந்துவிட்டேன்!என்று பதில் சொல்வான்.

அதை கேட்டு இறைவன் இப்படி சொல்வான்: உண்மையைத் தெரிந்து கொண்டால் குறைவாகவே மகிழ்ச்சியடைவாய். அதிகமாகக் கண்ணீர் சிந்துவாய். உனது சந்ததிகளுக்கு எது வரக்கூடாது என்று அஞ்சினாயோ அதையே உமது சந்ததிகளின் மீது இறக்கிவிட்டேன்!

பின்னர், இரண்டாவது கூட்டத்தாரைச் சேர்ந்த மனிதனிடம், “என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படிச் செலழித்தாய்?” – என்று விசாரணை ஆரம்பமாகும்.

அதற்கு அந்த அடியான், “இறைவா நீ என் மீது சொரிந்த அருட்கொடைகளை உனது கட்டளைப்படியே அறவழிகளில் செலவழித்தேன். உனது எல்லையற்ற கருணையையும், அருளையும், பாதுகாப்பையும் மட்டுமே என் சந்ததிகளின் சொத்துக்களாய் விட்டு வந்தேன்!என்பான்.

இதைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் சொல்வான்: உண்மையை தெரிந்து கொண்டால், குறைவாகவே கவலை கொள்வாய். அதிகமாய் மகிழ்ச்சி அடைவாய். எவற்றை நம்பி உமது சந்ததிகளை விட்டு வந்தாயோ அவற்றையே நான் அவர்களுக்கு அருள்பாலித்துவிட்டேன்!

பேராசையில் இருந்து விடுபட...

1.   உலகம், உலக வாழ்வின் மீதான மதிப்பீட்டை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

وعن جابرٍ

أَنَّ رسولَ اللَّه ﷺ مَرَّ بِالسُّوقِ وَالنَّاسُ كنفتيه، فَمَرَّ بِجَدْيٍ أَسَكّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ، فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَكُونَ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟ فَقالوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟! ثُمَّ قَالَ: أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟ قَالُوا: وَاللَّه لَوْ كَانَ حَيًّا كَانَ عَيْبًا أنَّه أَسَكّ، فكَيْفَ وَهو مَيِّتٌ؟! فقال: فَوَاللَّه للدُّنْيَا أَهْوَنُ عَلى اللَّه مِنْ هَذَا عَلَيْكُمْ رواه مسلم.

ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ஆலியாவின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள் செத்துக் கிடந்த காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் அந்த ஆட்டை எடுத்து அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள் எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’ என்று கேட்டார்கள்.மக்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில் இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம்

அல்லாஹ்விடம் இவ்வுலகம் கொசுவின் இறக்கை அளவிற்கு மதிப்பு இருக்குமானால் ஓர் காஃபிருக்கு கூட அல்லாஹ் குடிக்க நீர் வழங்க மாட்டான் என்று நபி () அவர்கள் கூறினார்கள். நூல் :திர்மிதி

இவ்வுலகமே நிரந்தரமானது என்று நினைத்து நம்மில் பலரும்  எப்படியாவது செல்வத்தை சேர்த்து வாழ வேண்டும் என்று எண்ணுகிற சூழ்நிலைகளை பார்க்க முடிகின்றது. இதற்கான காரணம் இந்த உலகத்தை பற்றிய மதிப்பீடை நாம் புரிந்துக் கொள்ளாததே ஆகும்.

2. செல்வம் பெருகுவதை நாம் அலங்காரமாக, அடையாளமாக கருதுகிறோம்.

عن عمرو بن عوف الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح رضي الله عنه إلى البحرين يأتي بِجِزْيَتِهَا، فَقدِم بمالٍ من البحرين، فسمعت الأنصار بقدوم أبي عبيدة، فَوَافَوْا صلاة الفجر مع رسول الله صلى الله عليه وسلم فلما صلى رسول الله صلى الله عليه وسلم انصرف، فَتَعَرَّضُوا له، فتَبسَّم رسول الله صلى الله عليه وسلم حين رآهم، ثم قال: «أَظُنُّكُمْ سَمِعتم أن أبا عبيدة قَدِم بشيءٍ من البحرين؟» فقالوا: أجل، يا رسول الله، فقال: «أبشروا وأمِّلوا ما يَسُرُّكُم، فوالله ما الفَقرَ أخشى عليكم، ولكني أخَشى أن تُبْسَط الدنيا عليكم كما بُسِطَت على من كان قبلكم، فتَنَافسوها كما تَنَافسوها، فَتُهْلِكَكُم كما أهْلَكَتْهُمْ»

இறைத்தூதர் () அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா (காப்பு வரியை) வசூலித்துக் கொண்டு வரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள்.

இறைத்தூதர் () அவர்கள் (நெருப்பு வணங்கிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி() அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றினார்.

நபி () அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் இறைத்தூதர் () அவர்கள் புன்னகைத்துவிட்டு அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்று கூற அன்சாரிகள் ஆம் இறைத்தூதர் அவர்களே!என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி () அவர்கள் உங்களுக்கு நற்செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

3. நமக்கும் கீழ் நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ يَحْيَى أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِىُّ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ

 

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5670 

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ

செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி-6490 

4. இறைவனிடமே கேட்டுப் பெற்றுக் கொள்வோம்!

மரணம் ஒருவனைத் தேடுவதைப் போல அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட செல்வமும் அவனைத் தேடுகிறது.

عن أبي العباس عبدالله بن عباسٍ رضي الله عنهما قال: كنت خلف النبي صلى الله عليه وسلم يومًا، فقال: ((يا غلام، إني أعلمك كلماتٍ: احفظ الله يحفظك، احفظ الله تجده تجاهك، إذا سألتَ فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعـوك بشيءٍ لم ينفعوك إلا بشيءٍ قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يضروك بشيءٍ لم يضروك إلا بشيءٍ قد كتبه الله عليك، رُفعت الأقلام، وجفَّت الصحف))؛ رواه الترمذي وقال: حديث حسن صحيحٌ.

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்()அவர்கள் கூறுகிறார்கள் : உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்!

மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன. (நூல்:  திர்மிதீ-2516 (2440)

எது நமக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் விதித்து விட்டானோ அது நமக்கு எப்படியும் கிடைத்து விடும். ஏனென்றால் அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய செல்வத்தை நிர்ணயித்து எழுதி விட்டான். அவன் எதை எழுதினானோ அதுதான் கிடைக்கும். அதற்கு மேல் வேறொன்றும் கிடைத்து விடாது.

அல்லாஹ் நாடினால் இறைத்தூதர்களுக்கு வழங்கியதற்கு நிகரான பரக்கத்தை இறைத்தூதர் அல்லாதவர்களுக்கும் வழங்கி விடுவான் என்பதற்கு பின் வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரியா (அலை) அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் உணவு கொண்டு வருதற்கு முன்பே பள்ளிவாசலில் உணவு இருப்பதைக் காண்கிறார்கள். இது எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டபோது இது அல்லாஹ்விடமிருந்து எனக்குக் கிடைத்தது என்று மர்யம் (அலை) பதில் அளித்தார்கள்.

இது மட்டுமல்ல; அல்லாஹ் நாடினால் கணக்கின்றி கொடுத்து விடுவான் எனவும் அவர்கள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல; அனைவருக்கும் உரியது என்பதை இதன் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மர்யம் (அலை) அவர்களுக்கு இப்படி நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ் உணவளித்ததை சொல்லிக் காட்டுகிறான்.

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார். இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான் என்று (மர்யம்) கூறினார். ( அல்குர்ஆன்: 3: 37 )

அல்லாஹ் நாடி விட்டால் மனிதர்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையிலும் அல்லாஹ்விடமிருந்து செல்வம் வந்து சேரும் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏

65:3 وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான். ( அல்குர்ஆன்: 65: 2,3 )

இப்ராஹீம் (அலை) அவர்கள் பலைவனத்தில் தமது குடும்பத்தைக் குடியமர்த்திய போது பின் வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்.

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ

 اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!. ( அல்குர்ஆன்: 14: 37 )

எந்த இடத்தில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத ஓர் இடத்தில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவியையும், பச்சிளம் பாலகரையும் குடியமர்த்த எப்படித் துணிந்தார்கள்? அல்லாஹ் நாடினால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் உணவளிப்பான்; வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவான் என்று இப்ராஹீம் நபி அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம். ஆதலால் தான் இருகரம் ஏந்தி துஆவும் செய்தார்கள்.

அவர்களின் அசைக்க முடியாத இந்த நம்பிக்கைக்காக, அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்த அல்லாஹ் ஜம்ஜம் நீரூற்றை பரிசாக வழங்கினான். மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக ஜம்ஜம் நீரூற்று அமைந்துள்ளது.

 

அல்லாஹ் நம் அனைவரையும் பேராசையை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்!

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete