Saturday, 9 July 2022

தடம் மாறாத வாழ்க்கை! அதுவே தடம் பதித்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை!! ( ஈதுல் அள்ஹா பேருரை)

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

துல்ஹஜ் பிறை: 09
09/07/2022, சனிக்கிழமை

தடம் மாறாத வாழ்க்கை! அதுவே தடம் பதித்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை!! ( ஈதுல் அள்ஹா பேருரை)

மனிதர்களாகப் பிறந்த அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் தடுமாற்றம் என்பது நிகழக் கூடிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அத்தகைய தடுமாற்றமான சூழலில் ஒரு இறைநம்பிக்கையாளனாய் நாம் நன்கு நிதானமாக நடக்க கடமைப் பட்டுள்ளோம்.

தடுமாற்றங்களின் போது நாம் நிதானமாக நடக்க தவறி விட்டால் தடம் மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

இத்தகைய தடுமாற்றமான சூழல் இஸ்லாமிய கொள்கை சார்ந்த விஷயங்களிலோ, வணக்க வழிபாடுகள் சார்ந்த விஷயங்களிலோ, ஷரீஆவின் படி நடக்க வேண்டிய காரியங்களிலோ ஏற்படுமானால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் அவைகளை அணுக வேண்டும். அப்படி இல்லாது போனால் நம்முடைய நிலை அவ்வளவு தான்.

ஈமானை இழந்து, அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகி நரகின் அதள பாதாளத்திற்குள் வீசப்பட்டு விடுவோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் தடுமாற்றங்களின் போது தடம் மாறாமல் வாழ தௌஃபீக் செய்வானாக!

எத் தலைமுறைக்கும் முன்மாதிரியாய் வாழ்ந்து தடம் பதித்து செல்லும் மேன்மக்களில் ஒருவராக உங்களையும் என்னையும் வல்ல ரஹ்மான் ஆக்கியருள்வானாக!!

தடுமாறும் போது தடம் மாறுபவர்கள் குறித்து அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை மிகவும் அபாயகரமானது. அவர்களுக்கு நேறும் முடிவு மிகவும் ஆபத்தானது.

فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ

அவர்கள் தடம் புரண்ட போது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்து விட்டான். ( அல்குர்ஆன்: 61: 5 )

சத்தியத்தை விட்டு நாமாகத் தடம் புரண்டு விட்டால், அல்லாஹ்வே நம்முடைய உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடுவான் என்றும், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு காரியத்திலும் தடம் புரண்டு விட்டால் தடம் தெரியாமல் அழிந்து விடுவோம் என்றும் இறைவன் பகிரங்க எச்சரிக்கை செய்கின்றான்.

இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் காலங்களில், எல்லாக் காரியங்களிலும் நம்மை நாம் சீர்த்திருத்திக் கொண்டு தடுமாற்றம் ஏற்படும்போது, இறைவனின் கட்டளைகளை ஆழமாகப் பற்றிப் பிடித்தவர்களாக, தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் அழித்து விடுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

பலவீனமான மனிதர்களாகிய நாம் எந்தச் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அந்தச் சூழலில் சுதாரித்து, நிதானித்து இறைவனுக்குப் பயந்து தடுமாற்றத்தைத் தவிடு பொடியாக்கக்கூடிய ஒரு உபாயத்தை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்று ஈதுல் அள்ஹா தியாகத் திருநாள் இந்த நாளின் கதாநாயகர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், அன்னை ஹாஜர் அலைஹஸ்ஸலாம், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்.

இம் மூன்று மேன்மக்களும் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் தடுமாறும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

தடம் மாறாமல் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் இருந்தபடியால் அல்லாஹ் அவர்களின் வாழ்வை தடம் பதித்தவர்களின் வாழ்வாக கபூல் செய்தான்.

அவர்கள் அன்று தடம் பதிக்க வில்லை என்றால் இன்று நமக்கு ஈதும் இல்லை. உள்ஹிய்யாவும் இல்லை.

அன்னை ஹாஜர் அலைஹஸ்ஸலாம்...

1000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து ஷாமில் இருந்து அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத, இதற்கு முன் யாரும் வசித்ததற்கான எந்த தடயமும் இல்லாத அன்றைய மக்காவின் பாலைவன பகுதியில் தமது வயது முதிர்ந்த மனைவி ஹாஜரையும், அழுது மன்றாடி தவமிருந்து பெற்ற பச்சிளங்குழந்தையான இஸ்மாயீலையும் விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் செல்கின்ற கணவர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த செயல் அன்னை ஹாஜரின் மனதை ஒரு உலுக்கு உலுக்கியது. பதறித்தான் போனார்கள் அன்னை ஹாஜர் அவர்கள்.

கணவரே! என்று அழைக்கிறார்கள். இந்த அழைப்பு மூன்றாம் முறையைக் கடக்கிறது.

அன்னை ஹாஜர் தடுமாற்றம் தரும் அந்தச் சூழலில் இருந்து தம்மை உடனடியாக விடுவித்து, விரைந்து செல்லும் கணவரை நோக்கி உரத்த குரலில்

فقالت له : آلله أمرك بهذا؟ قال : نعم . قالت : إذا لا يضيعنا ، 

“அல்லாஹ் தான் உங்களுக்கு   இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க,  அவர்கள் ஆம்  என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர்  (அலை) அவர்கள், “அப்படியென்றால்  அவன் ஒரு போதும் எங்களைக்  கைவிடமாட்டான்” என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். 

நம் குடும்பச் சூழலோடு இந்த நிகழ்வைப் பொருத்திப் பார்ப்போம்.

நமது மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையுடன் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். திடீரென்று வாகனம் பழுதாகி நின்று விடுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடம், நடுநிசி நேரம் தூரத்தில் எங்கோ நாய்கள் குறைத்துக் கொண்டிருக்கும் சப்தம்.

கொஞ்சம் இந்த இடத்திலேயே காத்திரு! அருகில் ஏதாவது ஊர் இருக்கிறதா? என பார்த்து வருகிறேன். என சொல்லி விடுவோமோ? நாம்.

சொன்னதும் கேட்டு விட்டு நம் மனைவி தான் அங்கு நின்று விடுவாரா?

நம் மனம் எப்படி பதை பதைக்கும்?

ஆனால், தடுமாற்றம் தந்த அந்த சூழ்நிலையில் கூட அவர்கள் நாவிலிருந்து வெளிவந்த வார்த்தை அவர்களின் ஈமானிய தரத்தை உணர்த்துவதாக அமைந்தது.

ஆதலால் தான் அல்லாஹ் அன்னை ஹாஜர் அலை தண்ணீர் தேடி ஓடிய தடங்களை அவனின் மன்னிப்பையும் அருளையும் தேடி (ஸயீ) ஓடக் கூடியவர்களாக நம்மை ஆக்கியிருக்கிறான்.

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்...

பச்சிளம் பாலகராய் விட்டுச் சென்ற இஸ்மாயீல் அலை இப்போது ஓடியாடி விளையாடும் பதின்ம வயதை தொட்டு நிற்கிற பருவத்தில் தாம் விட்டுச் சென்ற தமது மனைவியையும் மகனையும் பார்க்க ஷாமில் இருந்துவருகை தந்தார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இப்போதும் இறைவனின் ஒரு கட்டளையைச் சுமந்தே வந்திருந்தார்கள். அந்த இறை கட்டளை கனவு வடிவத்தில் அமைந்திருந்தது.

மனைவி மகனோடு அளவளாவி விட்டு மனைவியை அழைத்து தாம் கண்ட கனவை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்ல, ஹாஜர் அலை அவர்கள் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியவர் நான் அல்லவே? என கூறி வளர்ந்து நிற்கும் தமது அருந்தவப்புதல்வன் இஸ்மாயீல் அலை அவர்களை நோக்கி கை காட்டினார்கள்.

அடுத்து நடந்த நிகழ்வை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

يقولُ
 ‏أهلُ العلمِ بالسِيَرِ أنّ إبراهيمَ لمّا أرادَ ذَبْحَ وَلَدِهِ قالَ لَهُ: ‏‏{إنْطلِقْ فَنُقَرّبْ قُرباناً إلى اللهِ عزَّ وجلَّ} فَأَخَذَ سِكّيناً ‏وحَبْلاً ثُمّ انطَلَقَ مَعَ ابْنِهِ حتّى إذا ذَهَبَا بَينَ الجبالِ قالَ لَهُ ‏إسماعيلُ: "يا أَبَتِ أينَ قُربانُكَ"

فَقَالَ: {يا بُنيَّ إنّي رأيتُ في المنامِ أنّي أذْبَحُكَ} فَقَالَ لَهُ: ‏‏"أُشْدُدْ رِباطِي حتّى لا أضّطَرِبَ واكْفُفْ عني ثِيابَكَ ‏حتّى لا يَنْتَضِحَ عليْكَ من دَمِي فَتَراهُ أُمّي فَتَحْزَنْ وأَسْرِعْ ‏مرَّ السّكِينِ على حَلْقِي لِيَكُونَ أَهْوَنَ لِلْمَوْتِ عَلَيَّ فإذا ‏أتيتَ أُمّي فاقْرَأْ عَلَيْها السّلامَ مِنّي

 فَأَقْبَلَ عَلَيْهِ إبراهيمُ ‏يُقَبّلُهُ ويبْكي ويَقُولُ: "نِعْمَ العونُ أنتَ يا بُنيّ على أمرِ اللهِ ‏عزَّ وجلَّ".

தமது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் மகனே! நான் அல்லாஹ்விற்காக குர்பானி ஒன்றை கொடுக்கப் போகின்றேன் நீயும் என்னோடு வர வேண்டும் என்று கூறி, அவரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு, கையில் ஒரு கத்தியும், கயிறும் சகிதமாக அருகில் இருந்த மலைக்குன்றுக்குச் சென்றார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

மலைக் குன்றின் உச்சியை அடைந்ததும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையிடம் “குர்பானி எங்கே?” என்று கேட்டார்கள்.

அப்போது, இப்ராஹீம் (அலை) அவர்கள் “மகனே! கனவில் உம்மை அறுப்பது போல் கண்டேன். அது குறித்து உமது அபிப்பிராயம் தான் என்ன என்பதைச் சொல்!” என்றார்கள்.

அதற்கு, இஸ்மாயீல் (அலை) 
அவர்கள் 
يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
“என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு,

என் தந்தையே! நான் விரண்டோடாமல் இருக்க என்னைக் கயிற்றால் கட்டிப் போடுங்கள். என் உதிரம் உங்கள் ஆடையில் தெறிக்காமல் இருக்க உங்கள் ஆடையை உயர்த்திக் கட்டிக் கொள்ளுங்கள். உதிரம் தோய்ந்த ஆடையோடு நீங்கள் வீட்டிற்குச் சென்று அந்த ஆடையை என் தாய் பார்த்தார்கள் எனில் மனமுடைந்து போய் விடுவார். என் கழுத்தில் கத்தியை வைத்து விரைவாக அறுத்து விடுங்கள்! நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் என் தாயாரிடம் நான் ஸலாம் சொன்னதாக சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்.

இதனைக் கேட்ட இப்ராஹீம் கலீலுல்லாஹ் அவர்கள் தமதருமை மகனாரை ஆரத்தழுவி முத்தமிட்டவாரே “என் அன்பு மகனே! அல்லாஹ்வின் கட்டளையை நான் ஏற்று நடப்பதற்கு மிக உயர்ந்த அளவிலே நீ உதவியிருக்கிறாய்!” என்று பெருமிதத்தோடு கூறினார்கள்.

எப்படியான சூழல் அது. வாழ்வைத் துவங்கியிருக்கிற, பதின்ம வயதை தொட்டு நிற்கிற இளஞ்சிறாரான இஸ்மாயீலை அழைத்துச் சொன்ன அந்த தருணம் தடுமாற்றம் தரும் தருணமே!

ஆனால், அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் எவ்வளவு வலிமையான வார்த்தைகள்?!!

يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
“என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்”.

முன்பு மனைவி சொன்னார்:-

فقالت له : آلله أمرك بهذا؟ قال : نعم . قالت : إذا لا يضيعنا ، 
“அல்லாஹ் தான் உங்களுக்கு   இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க,  அவர்கள் ஆம்  என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர்  (அலை) அவர்கள், “அப்படியென்றால்  அவன் ஒரு போதும் எங்களைக்  கைவிட மாட்டான்”.

இப்போது மகன் சொல்கிறார்:-
يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
“என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்”.

எங்கிருந்து இவர்கள் ஈமானில் இவ்வளவு உறுதியைப் பெற்றார்கள்.

அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் தம் கணவரிடம் இருந்தே இத்தகைய ஈமானிய உணர்வை, ஈமானிய உரத்தை, ஈமானிய உறுதியைப் பெற்றார்கள்.

ஆம்! கடந்த கால இப்ராஹீம் நபியின் வாழ்வே அவர்களின் முன்மாதிரியாகும்.

தந்தை கல்லெறிந்து கொல்வேன் என்றார். குடும்ப உறவுகளும் ஊர் மக்களும் பகமை பாராட்டி வெறுத்து ஒதுக்கினர். நாடாளும் மன்னனோ உயிரோடு கொளுத்துவேன் என்று சூளுரைத்தான்.

ஊரும் நாடும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து மாதக்கணக்கில் உருவாக்கிய மகத்தான தீக்குண்டம் கண் முன்னால் காத்திருக்கிறது.

அஞ்சா நெஞ்சோடு, ஈமானிய உறுதியோடு சற்றும் தடுமாறாமல் ஏகத்துவத்தை அதே கம்பீரத்துடன் எடுத்தியம்பிக் கொண்டிருந்தார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நாடும் நாட்டு மக்களும் ஆராவாரத்துடன் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தீக்குண்டத்தில் போடப்படுகிறார்கள்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைத்த ரப்பிடம் உரிமையோடு இப்படிப் பிரார்த்தித்தார்களாம்.

عن أبي هريرة قال : قال صلى الله عليه وسلم


இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில்! “யா அல்லாஹ் வணங்கப்படத் தகுதியானவன் வானத்தில் (உலகில்) நீ ஒருவனே! இந்தப் பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நிலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்தித்தார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் ஆபூயஃலா


இஸ்லாமிய வாழ்வியலை நெறியாக ஏற்றுக் கொண்ட பின் எந்த தடுமாற்றம் ஏற்பட்டாலும் தடுமாறாமல் இருக்கும் ஒருவரின் வாழ்க்கை எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பம் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.

இங்கே நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் தந்தையின் நெருக்கத்தை பெற்றிராத, நேரடியாக தந்தையின் அரவணைப்பை அடைந்திடாத இஸ்மாயீல் (அலை) அவர்களை ஈமானிய வாழ்வில் மிளிர வைத்தவர்கள் தனியொரு பெண்ணாக அன்னை ஹாஜர் அலை அவர்களே!

தந்தை எப்படி இருப்பார்? தந்தை என்ன செய்வார்? அவரின் இறை நம்பிக்கை எப்படி இருக்கும்? என எதையும் அருகில் இருந்து அனுபவித்து உணராத இஸ்மாயீல் அலை அவர்கள் சொன்ன பதில் தான் எவ்வளவு மதிப்பு மிக்கது!!?

இங்கே நாம் குடும்பமாகத் தான் வாழ்கிறோம். ஆனால்,  ஒருங்கிணைந்த இஸ்லாமிய குடும்பமாக வாழ்கின்றோமா? என்றால்?

இங்கு கேள்வி மட்டுமே மிஞ்சும்.

கணவர் தொழுகிறார். மனைவி மக்கள் தொழுவதில்லை. கணவன் மனைவி தொழுகின்றனர் பெற்றெடுத்த மக்கள் தொழுவதில்லை.

மக்கள் தொழுகின்றனர். கணவன் மனைவி தொழுவதில்லை. அல்லது மனைவி மட்டுமே தொழுகிறார் கணவனும் பெற்றெடுத்த மக்களும் தொழுவதே இல்லை.

இப்படியாக ஷரீஆவின் ஒவ்வொரு அம்சங்களிலும் நாம் கோட்டை விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எப்போது நாம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய குடும்பமாக, இப்ராஹீம் நபியின் குடும்பம் போன்று வாழ்கின்றோமோ அப்போது தான் நாம் கொடுக்கும் "குர்பானி" அர்த்தம் உடையதாய் அமையும்.

இந்த ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் நன்நாளில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய குடும்பம் அமைய சபதமேற்போம்!!

அல்லாஹ் நம் குடும்பத்தார்களை கபூல் செய்தருள்வானாக!!!

அனைவருக்கும் ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

மஸாபீஹுல் மிஹ்ராப்
மௌலவி பஷீர் அஹமது உஸ்மானி.







9 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. படிக்கையில் கலங்கித்தான் போனேன்....பாரகல்லாஹு...ஹழ்ரத்

    ReplyDelete
  3. மிக சிறப்பு தல

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் தரமான சம்பவம் மௌலானா

    இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமை அருமை அருமை

    ReplyDelete
  6. அல் ஹம்து லில்லாஹ் ஹழ்ரத் அல்லாஹ் உங்களின் வாழ்வியலிலும் உங்கள் குடும்பத்திலும் உங்கள் ஆயுலிலும் உங்கள் இல்மிலிலும் நிச்சயமாக அல்லஹ் பரகத் செய்வானாக

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
    ஈதுல் அள்ஹா தினத்தில் இந்த குறிப்புகள் அடிப்படையில் தான் பயான் செய்ய இருக்கிறேன். அருமையான தொகுப்பு.
    جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖👍

    ReplyDelete