Thursday, 15 September 2022

ஆடம்பரத் திருமணங்கள்... தடுப்போம்! தவிர்ப்போம்!!

ஆடம்பரத் திருமணங்கள்...

தடுப்போம்! தவிர்ப்போம்!!



சமீப காலமாக தமிழக முஸ்லிம்களின் திருமணத்தில், தங்களுடைய பண பலத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை காண்பிக்கும் விழாக்களாக, திருமண நிகழ்வை மாற்றி விட்டார்களோ எனும் எண்ணும் அளவிற்கு ஆடம்பரத்தில், ஒருவரை ஒருவர் மிஞ்சி படாடோபமாக திருமணங்களை நடத்துகின்றனர். ஒரு சிலதே நம்முடைய கண்களுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக கவனைத்திற்கு வருகின்றது.

ஓர் முஸ்லிம் திருமணத்தை "இப்படித்தான் நடத்த வேண்டும்" என்ற வரையறையையும் ஒழுங்குகளையும் இஸ்லாம் நமக்கு  கற்றுத்தந்திருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது என்பதை அறிந்து வைத்துக் கொண்டே தான் இந்த ஆடம்பரங்களை சிலர் மிகவும் துணிந்து அரங்கேற்றி வருகின்றனர்.

ஆடம்பர திருமணங்கள் தேவையற்றவை' என, எந்த பள்ளிவாசல் நிர்வாகங்களும் வலியுறுத்திக் கூறுவதில்லை. ஆலிம்களும் புறக்கணிப்பதில்லை. இதனால், தான் நாளுக்கு நாள், திருமணங்களில் வீண் ஆடம்பரங்கள் அதிகரித்த வண்ணமாக உள்ளன.

அதற்கு மிக சமீபத்திய திருமண நிகழ்வில் நடைபெற்ற ஆடல் பாடல் நடன காட்சிகள் மிகப்பெரிய சான்றாகும்.

மார்க்கத்தின் சின்ன சின்ன வியங்களில் கூட மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொருவரும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு இடம் உண்டென்றால் அது இந்தத் திருமணம் ஆகும்.

ஒரு சுன்னத்தைப் செயல்படுத்துவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் சர்வசாதாரணமாக நாம் கண்டு வருகின்றோம்.

நிக்காஹ் குத்பா மற்றும் ஈஜாப் கபூல் ஆகியவற்றை நடத்தி விட்டு, ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பது என்னவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அந்நிய கலாச்சாரமும் தான்.

திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்களை இப்படி பட்டியலிடலாம்:- அழைப்பிதலுக்கான செலவுகளில் தொடங்கி, ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள், மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்,

மணமக்கள் அமரும் மேடை அலங்காரம், வீடியோ போட்டோவுக்கான செலவுகள்,

பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள், இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள், இறுதியில் விரயமாகி, வீணாகி குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு செலவுகள். இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன.

ழை குடும்பத்து திருமணங்கள் ரூ. 5 லட்சம்  முதல் 10 லட்சத்துக்குள் முடிகிறது. எளிய நடுத்தர வர்க்கத்து திருமணங்கள் 15 லட்சம் வரை அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி விடுகிறது. நடுத்தர வர்க்கத்து திருமணங்கள் ரூ.15 லட்சம் தொடங்கி ரூ.20 லட்சத்திற்குள் அனைத்தும் முடிகிறது. இதில் முன் கூட்டியே திட்டமிட்டு சேமித்து வைக்காமல், அதிரடியாக கடன் வாங்கி கல்யாணம் செய்பவர்களே பிரச்சினைகளில் சிக்குகிறார்கள். உயர் நடுத்தர வர்க்கத்தினர் ரூ.50 லட்சம் முதல் 60, 70 லட்சம் 1 கோடி என்று ஓரளவு தாராளமாக செலவு செய்கிறார்கள்!

1980-ம் ஆண்டு வரை திருமண விருந்து என்பது ஒரு வேளையோடு முடிந்துவிடும். மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அடுத்த வேளை உணவிற்கு இருப்பார்கள். அன்று போட்டோ எடுப்பதே பெரிய ஆடம்பரமாகத் தான் கருதப்பட்டது. 1980-களின் மத்தியில் அறிமுகமான வீடியோ எடுக்கும் பழக்கம் 1990-ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியது. இதே காலகட்டத்தில் தான் ரிசப்சன்எனப்படும் வரவேற்பு நிகழ்வை கல்யாணத்திற்கு முன்போ, பின்போ நடத்தி விருந்தளிப்பது வழக்கமானது. இது மாதிரி வைபவங்களில் சினிமா பாடல்களை பாடும் இசைக்குழுக்களும் இந்த காலகட்டத்தில் தான் பிரபலமடையத் தொடங்கின.

1990-ம் ஆண்டுகளில் தாராளமயம், உலகமயமாக்கல் போன்றவை அறிமுகமாயின. பணப்புழக்கமும் மக்களிடையே அதிகரித்தது. அதன் பிறகு தமிழகம் கண்ட முதல் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தான்! தமிழகமே வாய் பிளந்து அண்ணாந்து பார்த்த அந்த திருமணத்தை ஆடம்பரத் திருமணங்களுக்கான தொடக்க புள்ளியாக கருதலாம். அந்த திருமணம் அன்றைக்கு கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டது. ஏனெனில், ஆடம்பரம் என்பது அன்று ஒரு சமூக குற்றமாக கருதப்பட்டது. அதனால் தான் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களில் அதுவும் முக்கியமான ஒன்றாயிற்று. ஆனால் இன்றோ, ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம், தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து, அவை இயல்பான ஒன்றாகிவிட்டது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் ஆடம்பரத் திருமணங்களையே தனக்கான ஆதர்ஷமாக கொண்டு வளர்கிறது.

2000-ம் ஆண்டுக்கு பிறகு தான் பிரமாண்ட திருமண மண்டபங்கள் நகரங்களுக்கு வெளியே கட்டப்பட்டன. வி.ஐ.பி. வீட்டுத் திருமணங்களுக்கு நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நிற்கும் வசதி தேவைப்பட்டது என்பதால் நகரங்களுக்கு வெளியே பிரம்மாண்ட திருமண மண்டபங்கள் எழுந்தன! இன்னும் சில வி.ஐ.பி.க்கள் வெட்ட வெளியில் பிரமாண்டமான அலங்கார பந்தலை சில கோடி செலவில் சினிமா ஆர்ட் டைரக்டர்களை கொண்டு எழுப்பி திருமணங்களை நடத்தினர்.

2000-ம் ஆண்டுக்கு பிறகு திருமணங்களில் பேனர் வைப்பது என்பது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. திருமணங்களில் புகைப்படங்கள், வீடியோ போன்றவைகளை சினிமா பாணியில் பல லட்சங்கள் செலவழித்து எடுக்கும் பழக்கமெல்லாம் வந்தது.

ஆடம்பர விருந்துகள்

கல்யாண விருந்துகளில் பத்து, பனிரெண்டு வகைகளில் பரிமாறுவதெல்லாம் பத்தாம் பசலித்தனமாக்கிவிட்டது. நாற்பது, ஐம்பது வகைகள் தொடங்கி 100 வகைகள் வரை சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. பவ்வேஎன்ற பெயரில் திரும்பும் திசையெல்லாம் வித, விதமான உணவுகளை நிறைத்து வைத்து, விரும்பியதை வேண்டிய அளவு எடுத்து சாப்பிடலாம் என்றும், அல்லது மிகப் பெரிய வாழை இலையில் சாப்பிட, சாப்பிட வைத்து திணற அடிப்பது என்ற வகையிலும் சாப்பிட்டது பாதி, வீணாவது மீதி என விருந்துகள் இன்று அரங்கேறிக் கொண்டுள்ளன.

ஏழெட்டு விதமான இனிப்புகள், பெயர் தெரியாத பதார்த்தங்கள், சிப்ஸ், அப்பளம், வடகம், வடை, கட்லட் என எத்தனை உண்டோ.. அனைத்தும் இலையில் வைத்துக் கொண்டே இருப்பார்கள். பிறகு, விதவிதமான டிபன் வகைகள்! அவை முடிந்து சாப்பாடு வகைகளாக வெரைட்டி ரைஸ் அடுத்தடுத்து வைப்பார்கள். அப்புறம் நான்கைந்து விதமான ஐஸ்கிரீம்கள்! அடுத்து பீடா, அப்புறம் பழ சாலெட்டுகள்!

வீடியோ & ஃபோட்டோ...

மண மேடைக்கு எதிரே, இருக்கை போடப்பட்டிருக்கும். ஆனால், மேடையை மறைத்தபடி, கறுப்பு, வெள்ளை நிற குடைகளுடன், வீடியோ கேமராக்களுடன் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், அவர்களின் உதவியாளர்கள் நின்று மறைத்துக் கொள்வர். திருமணம் நடந்து கொண்டிருக்கின்ற அந்த நொடிப்பொழுதுகளில் இருந்து போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களின் ஆளுகையின் கீழ், மணமக்கள் வந்து விடுகின்றனர். பெயரளவுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து கூறி முடிந்ததும், மணமக்களை தனியாக அழைத்துச் செல்லும் இந்த நபர்கள், இருவரையும், சினிமா நாயகி - நாயகன் போல, விதவிதமான, 'போஸ்'களில் படம் எடுக்கின்றனர். அதிலும் சில நேரங்களில், எல்லை மீறி, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, உணவு ஊட்டுவது, மடியில் படுப்பது என, வீடியோகிராபர்களின் விருப்பங்களை, மணமக்கள் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது; அதையும், படக்காட்சிகளாக பதிவு செய்கின்றனர்.

உணவு & ஆடம்பரச் செலவுகள்...

உணவினை வீணாக்குதல் மற்றும் உணவு விரயம்  இவை இரண்டை பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பு சற்று குறைவு தான், food and Agriculture Organaisation இது  ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகும். இதன் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் பெரும்பான்மையான அளவு வீணாக்கப்படுவது தெரிய வந்தது அந்த ஆய்வின்படி, வருடந்தோறும் சுமார் 913 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறதாம். வீணாக்கப் படும் உணவுப் பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பைத் தாண்டுகிறதாம். ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.                                                    ( அல்குர்ஆன் 6: 141 )

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.”                       ( அல்குர்ஆன் 7: 31 )

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்”.                                                      ( அல்குர்ஆன்: 17:26,27 )

சிக்கனமாக திருமணம் செய்யுங்கள்

சிக்கனமான திருமணம் அருள்வளம் கொண்டது என்று இடம் பெறும் ஹதீஸ்

 

حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ‘ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً(احمد-24529)

சிக்கனமான திருமணமே அதிக அருள்வளம் பொருந்தியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: அஹ்மத் 24529 )

எளிமையான திருமணம்

عن أنس بن مالك -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- رأى عبد الرحمن بن عوف، وعليه ردَعْ ُزَعفَرَان. فقال النبي -صلى الله عليه وسلم-: «مَهْيَمْ؟ فقال: يا رسول الله تزوجت امرأة، فقال: ما أصدقتها؟ قال: وَزْنُ نواة من ذهب قال: بارك الله لك، أَوْلِمْ ولو بشاة».

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவிய போது தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள்.நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் (விவாகக் கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தைஎன்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா மணவிருந்து அளிப்பீராக!என்று கூறினார்கள். ( நூல்: புகாரி 5153 )

وقد قال الإمام أحمد :

حدثنا إسحاق ، أخبرنا مالك ، عن أبي حازم ، عن سهل بن سعد الساعدي ; أن رسول الله صلى الله عليه وسلم جاءته امرأة فقالت : يا رسول الله ، إني قد وهبت نفسي لك . فقامت قياما طويلا فقام رجل فقال : يا رسول الله ، زوجنيها إن لم يكن لك بها حاجة . فقال رسول الله صلى الله عليه وسلم : " هل عندك من شيء تصدقها إياه " ؟ فقال : ما عندي إلا إزاري هذا . فقال رسول الله صلى الله عليه وسلم : " إن أعطيتها إزارك جلست لا إزار لك ، فالتمس شيئا " . فقال : لا أجد شيئا . فقال : " التمس ولو خاتما من حديد " فالتمس فلم يجد شيئا ، فقال له النبي صلى الله عليه وسلم : " هل معك من القرآن شيء ؟ " قال : نعم; سورة كذا ، وسورة كذا - لسور يسميها - فقال له رسول الله صلى الله عليه وسلم : " زوجتكها بما معك من القرآن " .

أخرجاه من حديث مالك .

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!என்றார். நபி (ஸல்) அவர்கள், “உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!என்றார்கள்.

அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னார். இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டுத் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளதுஎன்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காதுஎன்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள்.

அவர் வரவழைக்கப்பட்ட போது, “உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், “இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளனஎன்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) ( நூல்: புகாரி 5030 )

இந்த அளவுக்குத் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ள இந்த மார்க்கத்தில் இன்று வரதட்சணை, ஆடம்பர விருந்துகள் போன்ற காரணங்களால் திருமணம் என்றாலே லட்சக் கணக்கில் பணம் வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இன்னிசைக் கச்சேரிகள், வாண வேடிக்கைகள், வண்ண வண்ண அலங்காரக் கார்கள், ஊரை வளைத்துப் போடப்படும் பந்தல்கள், பலவித உணவுப்பதார்த்தங்கள், வீடியோ கவரேஜ் என்று ஆடம்பரத் திருமணத்தின் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஒரு திருமணம் முழுமை பெற தேவையானவைகள்:-

மணமகன், மணமகளுடன்....

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)

2. இருநீதமுள்ள சாட்சிகள்

3. மணமகளின் முழுமையான சம்மதம்

4. மணமகளின் உரிமையான மஹர் தொகை

5. திருமண குத்பா & ஈஜாப் கபூல்

திருமண நிகழ்வில் மார்க்கத்துக்கு முரணாண காரியங்கள் இடம்பெற்றால்...

நிகாஹ் என்கிற ஸுன்னத்தான ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றோம் எனும் பெயரில் இத்தகைய ஆடம்பரங்களை, வீண் விரையங்களைச் செய்வோர் பித்அத்வாதிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இவர்கள் நிகாஹ் என்ற பெயரிலேயே இவற்றைச் செய்கின்றனர். ஆகவே, முதலில் நாம் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

عن حسان بن عطية رحمه الله قال ما ابتدع قوم بدعة في دينهم ألا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة ( رواه الدارمي)

ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள,;  மார்க்கத்தில் யார் புதினங்களைப் (பித்அத்களை) புகுத்துகின்றார்களோ, அவர்கள் புகுத்திய அளவு சுன்னாவை, மறுமை நாள் வரையில் அவர்களுக்கு திரும்பக் கிடைக்காமல் இறைவன் செய்து விடுவான்.

عن سهل ابن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم : إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم بظمأْ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال  بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدرى ما أحدك فأقول سحقاً سحقاً لمن غير بعدي

(متفق عليه)

கவ்தர் தடாகத்தின் முன்பாக நான் தான் முதல் ஆளாக நின்று கொண்டிருப்பேன். யார் யாரெல்லாம் அங்கு வருகை தருகின்றார்களோ அவர்களெல்லாம் அதில் நீர் அருந்துவார்கள். யாரெல்லாம் அங்கு ஒரு முறை வந்து நீர் அருந்தினார்களோ அவர்களுக்கு இனி எப்பொழுதும் தாகம் எடுப்பதை உணரவே மாட்டார்கள். அப்பொழுது சில பேர் அங்கு வருவார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றியவர்கள் என்பதையும் நான் கண்டு கொள்வேன்.

 அவர்களும் என்னை (நபி என) க் கண்டு கொள்வார்கள். ஆனால் அவர்கள் என்னை நெருங்கி வருவதனின்றும் (மலக்குகளால்)  தடுக்கப்படுவார்கள்.  (இதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்)

அப்பொழுது நான் அவர்கள் என்னுடைய சமுதாயத்தவர்கள் அல்லவா! என்னைப் பின்பற்றியவர்கள் அல்லவா! எனக் கூறுவேன். நபி முஹம்மது (ஸல்) அவர்களே உங்களுக்குப் (மரணித்த) பின்பு இவர்கள் என்னென்ன புதினங்களை உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், என்று எனக்கு அறிவித்துக் கொடுக்கப்படும்.

அதன் பிறகு நான் கூறுவேன், தூரப் போய் விடுங்கள் !! எனக்குப் பின்பு மார்க்கத்தில் புதினங்களைப் புகுத்தியவர்களுக்கும் எனக்கும் தூரம் இருப்பதே சிறந்தது எனக் கூறுவேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

தீமையைத் தடுப்பதுடன் மாற்றம் ஏற்படவும் முயற்சிக்க வேண்டும்

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ)). رواه مسلِمٌ.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை கையால் தடுக்கட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை நாவால் தடுக்கட்டும், அப்படியும் முடியவில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கட்டும். இந்த நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்”. (ஆதாரம்: முஸ்லிம் -78)

இப்படித்தான் மேற்கண்ட ஹதீஸை பெறும்பான்மையானவர்கள் மொழிபெயாப்புச் செய்வதுடன், அம்மொழிபெயர்ப்புக்கு ஏற்றார்போல் விளக்கத்தையும் கொடுக்கின்றார்கள்.

ஆனால், மேற்கூறப்பட்ட மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு சரியாக அமைந்தாலும் அதனை முழுமையான சரியான மொழிபெயர்ப்பாகக் கருத முடியாது. எனவே, இந்த ஹதீஸின் சரியான மொழிபெயர்ப்பு இப்படித்தான் அமைய வேண்டும்.

அதாவது:- ”உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை தன் கையால் மாற்றட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை தன் நாவால் மாற்றட்டும், அப்படியும் முடிவில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் மாற்றட்டும்…. ”

இந்த ஹதீஸில் வரும் யுகையர்(يُغَيِّر) என்ற வாசகம் மாற்றுதல்என்ற கருத்தைத் தரும்.

மாற்றுதல் என்பது அத்தீமையிலிருந்து அவனை தடுப்பது மாத்திரமில்லை மாறாக அவரை நன்மையின்பால் வழிகாட்டவும் உதவி செய்ய வேண்டும். இதனைத்தான் இஸ்லாமும் வேண்டி நிற்கின்றது. 

وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ (التوبة : 71)

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள்.” (அத்தௌபா: 71)

இப்படியான முஃமின்களின் பண்புகளுக்கு எதிர் மாறான பண்புகளையுடைய நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது;

اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ (التوبة : 67)

நயவஞ்சகர்களான ஆண்களும், நயவஞ்சகர்களான பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவங்களைத் தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள்.” (அத்தௌபா: 67)

ஆகவே, நாம் வெறுமனே நன்மையை ஏவுபவர்களாகவோ அல்லது வெறுமனே தீமையை தடுப்பவர்களாகவோ மாத்திரம் இருப்பதால் சிறந்தவர்களாகவோ, வெற்றிபெற்றவர்களாகவோ இருந்துவிட முடியாது. மாறாக, நன்மையை ஏவுவதுடன் தீமையையும் சேர்த்தே தடுப்பதின் மூலமே இப்பாக்கியத்தை அடைந்து கொண்ட முஃமின்களாகமுடியும்.

எனவே, இதன் மூலம் இந்த ஹதீஸ் எப்பொழுதும் ஒரு தீமையைக் கண்டால் அதனை தடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அதன்மூலம் ஒரு மாற்றத்தையும் சேர்த்தே எதிர்பார்க்கின்றது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُوتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ فَجَاءَتْ فَقَالَتْ إِنَّهُ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ فَقَالَ وَمَا لِي أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ فَقَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ قَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ أَمَا قَرَأْتِ وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا قَالَتْ بَلَى قَالَ فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ قَالَ فَاذْهَبِي فَانْظُرِي فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا فَقَالَ لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُهَا رواه البخاري

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?” என்று கூறினார்கள். இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, “உம்மு யஅகூப்எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது.

அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, “இப்படிப் பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லையா?” என்று கேட்டார்கள். அந்தப் பெண், “ஆம் (ஓதினேன்)என்று பதிலளித்தார்.

அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, “உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன்என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், “சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!என்று கூறினார்கள்.

ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழ மாட்டேன்என்று கூறினார்கள்.                               ( நூல் : புகாரி (4886) )

புறக்கணிக்கவும் தயாராக இருக்க வேண்டும்..

அபூமஸ்வூத்(ரலி­) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?” எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள். ( நூல்: பைஹகீ பாகம்:7, பக்கம் :268 )

என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி­) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா?” எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர்என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ர­) அவர்கள் உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லைஎன்றார்கள். மேலும் உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன்என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள். ( தப்ரானியின் கபீர் பாகம்:4, பக்கம்:118 )

மிகச் சாதாரணமாக நாம் நினைக்கின்ற இந்தக் காரணத்திற்கே நபி {ஸல்} அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் ம­லிந்து காணப்படும் திருமண விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன்.அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பிச் சென்று விட்டார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி) அவர்கள்.நூல்: நஸயீ – 5256

தன் சொந்த மகளின் வீட்டிலேயே மார்க்கத்திக்கு முரணான ஒரு காரியத்தைக் கண்டு அந்த விருந்தை ஏற்காமல் நபியவர்கள் சென்று விட்டார்கள் என்றால், இன்று நடக்கின்ற திருமண நிகழ்வில் எத்தனை தீமையான காரியங்கள் நடக்கின்றன? இத்தகைய நிகழ்விற்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணிக்கின்றோமா?

உங்களிடம் பணம் இருந்தால்

2022 மார்ச் 3 ம் தேதியன்று கேரள மாநிலத்தின் தலாயி என்ற பகுதியைச் சேர்ந்த சலீம் தன் பெண்ணான ரமீசாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தார். வந்தவர்கள் அனைவரும் வரதட்சிணை எதிர்பார்க்கவே அவர்களை தட்டிக் கழித்தபடியே இருந்தார். மேலும் பலர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்கள். 

"நமக்கு என்ன வசதி வாய்ப்பு இல்லையா? ஏன் இப்படி அல்லாடுகிறீர்கள்?"என்று கேட்டார் அவரது மனைவி ரூபினா."எல்லாம் காரணமாகத்தான்" என்று சொல்லி வந்தார் சலீம்.
         இறுதியாக அவர் எதிர்பார்த்தபடியே ஒரு மாப்பிள்ளை கிடைத்தார். திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.ரமீசாவின் திருமணத்தின் போது மேலும் ஐந்து பெண்களின் திருமணமும் அதே மேடையில் நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் இந்தத் திடீர் திருமணங்களைக் கண்டு வியந்து போனார்கள். ரமீசாவின் தந்தையான சலீம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே தனது மகளுக்கு வரதட்சணை வாங்காத ஒரு நபரையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் தனது மகளின் திருமணத்தை எளிமையான முறையில் நிகழ்த்தி, ஆடம்பர திருமணம் நடத்த ஆகும் செலவுக்கான பணத்தைக் கொண்டு பொருளாதாரத்தில் கீழ் உள்ள ஐந்து பெண்களுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி கேரள மாநிலம் வயநாடு, எடச்சேரி,கூடலூர்,மலப்புரம், மேப்பயூர் பகுதிகளிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்த ஐந்து குடும்பப் பெண்களைத் தேர்வு செய்து அவர்களது திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டார்.
           முனவர் ஷாப் என்பவர் தலைமையில் எளிமையான முறையில் திருமண விழா நடைபெற்றது. 6 பேரில் இரண்டு பேர் இந்து பெண்கள் மற்றும் நால்வர் இஸ்லாமியர்கள்..அதன்படி இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படியும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தன. இதனைத் தொடர்ந்து தன் மகள் உட்பட 6 மணப்பெண்களுக்கும் தலா 10 சவரன் நகையை சலீம் வழங்கினார். 6 பேருமே ஒரே மாதிரியான புடவையை அணிந்திருந்தனர்.

இஸ்லாம் காட்டித்தந்த வழியில் திருமணங்களை எளிமையாக நடத்துவோம்! பரக்கத்தைப் பெறுவோம்! ஆடம்பர திருமணங்களைத் தவிர்ப்போம்! தடுப்போம்! புறக்கணிப்போம்!!! 

4 comments:

  1. சிறப்பான தற்போது மிக தேவையான கருத்துக்கள் jazakkumullah Hazrath

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை, மிக அருமையான தகவல்கள் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. பாரக்கல்லாஹ் சிறப்பான தெளிந்த சிந்தனையோடு தரமான பதிவு தேவையான நேரத்தில் அல்லாஹ் உங்களின் கல்விஆற்றலை மேலும் மேலும் அதிகரிக்க ச்செய்வானாக ஆமீன்!

    ReplyDelete
  4. அருமையான அற்புதமான காலத்தின் கோலத்தில் அலைக்கலையும் சமுதாயத்திற்கு அவசியமான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி ஹஜ்ரத்

    ReplyDelete