Thursday 29 September 2022

நபி ﷺ அவர்களின் அற்புதப் பிறப்பும்! நபி ﷺ அவர்களின் அளவிலாச் சிறப்பும்!!

 

நபி அவர்களின் அற்புதப் பிறப்பும்!

நபி அவர்களின் அளவிலாச் சிறப்பும்!!


உலகத்தில் ஏழு  பிறப்புகள் எதிர் பார்க்கப்பட்டது. ஆறு மனிதர்களில் ஒன்று உயிரினத்தில் என்று குர்ஆன் சொல்கிறது.

ஒவ்வொரு பிறப்புக்கு பின்னரும் மகத்தான பிண்ணனியும் வரலாறும் இருப்பதை அல்குர்ஆன் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும் அற்புதங்களைச் சுமந்ததாகவே அமைந்தது.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளான இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனார் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் மூவருமே பிறப்பதற்கு முன்பே இவர்களின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பு - சோபனம் இறைவன் புறத்திலிருந்து வந்திருந்தது.

ஒரு பிறப்பு இரு வேறு சமுதாய மக்களின் (கிப்தீ - பனீ இஸ்ராயீல்) எதிர்பார்ப்பாக இருந்தது. அது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு.

ஒரு பிறப்பு மாபெரும் ஒரு சமுதாயத்தின் (பனீ இஸ்ராயீல்) எதிர்பார்ப்பாக இருந்தது. அது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு

உயிரினத்தின் அந்த பிறப்பும் கூட  ஒரு சமுதாய மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் சூழ் ஒட்டகத்தில் இருந்து பிறந்த ஒட்டகக் குட்டி.

இதில் ஒரேயொரு பிறப்பு மட்டுமே உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, ஆன்மாவின் உலகிலிருந்தே உலகம் தோன்றியதிலிருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களால் அந்த நபிமார்களின் சமுதாய மக்களால்  எதிர் பார்க்கப்பட்டது.

ஆம்! அந்த பிறப்பு மாநபி அவர்களின் பிறப்பாகும்.

இந்த ஆறு பிறப்புகளுக்குப் பின்னாலும்  அழுத்தமான ஒரு செய்தி நமக்கு உணர்த்தப்படுகிறது. பிறப்பு என்பது அவ்வளவு சாதாரணமாக கடந்து போகிற நிகழ்வு அல்ல. பிறப்பு என்பது சில போது சரித்திரமாகவும், சாதனையாகவும் அமையும்.

உலகத்தில்  பிறக்கிற எல்லோரும் ஒரு முறையே தான் பிறக்கிறார்கள். ஆனால், ஒரேயொருவர் மட்டுமே பிறந்த அந்த கணத்தில் இருந்து இந்த உலகை விட்டு சென்றதன் பின்னரும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

ஆம்! மாநபி அவர்களின் ஒரு செயல், ஒரு சொல், ஒரு அங்கீகாரம், ஒரு நடைமுறை இந்த உம்மத்தில் ஒருவர் செயல் படுத்தும் போதெல்லாம் நமது நபி அவர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இதை பின் வரும் இரண்டு இறை வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ‌ؕ

அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் ( அல்குர்ஆன்:  49: 7 )

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏

(நபியே!) நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. ( அல்குர்ஆன்: 8: 33 )

குர்ஆன் என்பது முக்காலத்திற்கும் பொருந்துகிற, நடைமுறையில் இருக்கிற வேதமாகும். நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு வசனங்களும் இறக்கியருளப்பட்டாலும் ஒரு ஸுன்னத் உயிர் கொடுக்கப்படும் போது உள்ளபடியே நம் உள்ளுணர்வோடு நமது நபி அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

 

واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)

 

நபியே நினைவு கூறுவீராக! அல்லாஹ் நபிமார்களிடம் உறுதிமொழி வாங்கிய போது, நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்திருக்கிறேன்.பின்னர் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் வருவார். நீங்கள் அவர் மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்ய வேண்டும் என்று கூறினான். ( அல்குர்ஆன்: 3: 81 )

உங்களுக்குப் பின்னால் ஒரு நபி வருவார். அவர்களை ஈமான் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு தான் அத்தனை நபிமார்களும் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் நபித்துவத்தின் ஒரு அம்சமாகவே அது இருந்தது.

உலகத்தில் பிறக்கிற எல்லோருக்கும் அவர்களின் பிறப்பு ஒரு நிகழ்வு ஆனால், நமது நபியின்   பிறப்பு ஒரு சிறப்பான அற்புதங்கள் பல நிறைந்த ஒரு சரித்திரம். வல்லோன் அல்லாஹ் அவர்களின் அற்புதமான பிறப்பை சுமந்து நிற்கும் இந்த மாதத்தில் அவர்களின் மாண்புகளையும், சிறப்புகளையும் விளங்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்!  

நபி அவர்களின் பிறப்பு அருட்கொடை:-

நமது நபி அவர்களின் பிறப்புக்காகவே இந்த உலகில் அல்லாஹ் மகத்தான ஒரு குடும்பத்தின் பிறப்பு நிகழ்வுகளையே நிகழ்த்தினான். அந்த குடும்பத்தில் இருந்தே உலகின் அநேக இறைத்தூதர்களை இந்த உலகிற்கு அருட்கொடையாக தந்தான்.

அந்தக் குடும்பம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஹாஜர் அலைஹஸ்ஸலாம் ஸாரா அலைஹஸ்ஸலாம்   இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் ஆவார்கள்.

ஆம்! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்கள் உதவியுடன் இறையில்லம் கஃபாவைக் கட்டி எழுப்பி விட்டு இப்படி ஒரு துஆவையும் கேட்கிறார்கள்.

எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்”. ( அல்குர்ஆன்: 2: 129 )

அல்லாஹ் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் இருந்து நபி அவர்களை நமக்கு வழங்கினான்.

இந்த உலகம் தோன்றும் முன்பிலிருந்தும் உலகம் தோன்றி நபிமார்கள் வருகை வந்ததிலிருந்து எப்படி நபி அவர்களின் வருகை எதிர் பார்க்கப்பட்டதோ அதே போன்று உலகம் தோன்றியதிலிருந்து உலக அழிவு நாள் வரை அல்லாஹ் எனும் பெயருக்கு அடுத்த படியாக நபி அவர்களின் பெயரும் சொல்லப்பட்டே வருகிறது.

 

لمَّا اقترفَ آدمُ الخطيئةَ قالَ يا ربِّ أسألُكَ بحقِّ محمَّدٍ لَما غفرتَ لي فقالَ اللَّهُ عزَّ وجلَّ يا آدمُ وكيفَ عرفتَ محمَّدًا ولم أخلُقْهُ قالَ لأنَّكَ يا ربِّ لمَّا خلقتني بيدِكَ ونفختَ فيَّ من روحِكِ رفعتُ رأسي فرأيتُ على قوائمِ العرشِ مكتوبًا لا إلهَ إلَّا اللَّهُ محمَّدٌ رسولُ اللَّهِ فعلمتُ أنَّكَ لم تضِف إلى اسمِكَ إلَّا أحبَّ الخلقِ إليكَ فقالَ اللَّهُ عزَّ وجلَّ صدقتَ يا آدمُ إنَّهُ لأَحَبُّ الخلقِ إليَّ وإذ سألتَني بحقِّهِ فقد غفرتُ لكَ ولولا محمَّدٌ ما خلقتُكَ

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களின் குற்றத்திற்காக தவ்பா செய்யும் போது என் இறைவா! "முஹம்மத்   அவர்களை உரிமையாக்கி கேட்கிறேன். என் குற்றத்தை மன்னிக்க மாட்டாயா? என்றார்கள்.  ஆதமே! நான் இன்னும் அவரைப் படைக்கவே இல்லையே?, எப்படி முஹம்மதை அறிந்து கொண்டாய்? என்று அல்லாஹ் கேட்டான். அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "என்னை உன் கையால் படைத்து உன் ரூஹை என்னில் ஊதிய போது என் தலையை உயர்த்திப் பார்த்தேன்.  பிரம்மாண்டமான அர்ஷின் தூண்களில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். படைப்புக்களில் உனக்கு மிகவும் பிரியமானவரைத் தவிர வேறு யாரையும் உன் பெயரோடு நீ இணைக்க மாட்டாய் என்று நான் அறிவேன்"  எனவே அவர் உனக்கு மிகவும் பிரியமானவர் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்காக என்னை மன்னித்து விடு என்று கேட்டேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ், ஆம்! ஆதமே! நீ உண்மையே சொன்னாய்! படைப்புகளிலேயே அவரே எனக்கு மிகவும் பிரியமானவர்! அவரின் உரிமையால் மன்னிப்பை கேட்டதினால் உன்னை நான் மன்னித்து விட்டேன்! அவர் இல்லையென்றால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்! என்று அல்லாஹ் கூறினான். ( நூல்: தலாயிலுன் நுபுவ்வா : 5/489 )

நபியின் பிறப்பு பேருபகாரம்:-

”அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது மெய்யாகவே பேருபகாரம் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை அதுவும் அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களை (அனைத்து அசுத்தங்களில் இருந்தும்) பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். மேலும், அவர்களுக்கு வேத அறிவையும், (உலக) ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு (இந்த நபியின் வருகைக்கு) முன் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருந்தனர்”.            ( அல்குர்ஆன்: 3: 164 )

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை). அரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். 

ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. 

ஆனால், இதே காலகட்டத்தில் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர்.

சுமார் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு அவர்களுக்கு முன் வாழ்ந்த வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. 

அந்த அளவுக்கு அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருக்கவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். 

குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் மூழ்கிக் கிடந்தார்கள்.. பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.

பல்லாண்டு ஊற வைத்த மதுப்பீப்பாய்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர்.

தந்தைக்கு பல மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இப்படி பங்கு போடுவதிலும், வேறு பல காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால், அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். 

அன்றைய அரபு நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும், சுருக்கமாகச் சொன்னால் மனிதர்கள் எனும் பெயரில் மிருகத்துக்கு நிகராக வாழ்ந்து வந்தார்கள்.

இவர்களின் இந்த இழி நிலைகள் பலதை குறித்து அல்குர்ஆனின் அல்அன்ஆம் அத்தியாயத்தில் 136 – வது வசனத்தில் இருந்து 165 –வது வசனம் வரை தொடர்ச்சியாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மனித வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வீழ்ந்து கிடந்தனர். 

இந்த நிலையில் தான் இறுதி நபியாக அந்த அரபு மக்களிடையே நமது நபி ஸல் வரும்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி ஸல் அவர்களின் பிறப்பை வருகையை பேருபகாரம் என்கிறான்.

நபி {ஸல்} அவர்களின் பிறப்பு ஈடேற்றம்:-

ஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதம் நடைபெற்ற யுத்தம் தான் ஹுனைன் யுத்தமாகும். மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியாகும்.                                                         

இதை அக்கம் பக்கத்திலுள்ள அநேக கூட்டத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஹவாஸின், ஸகீஃப் ஆகிய கோத்திரத்தார்களின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்திட அணி திரண்டனர்.                                           

முஸ்லிம்களின் மக்கா வெற்றியை ஏற்றுக்கொள்வதை பெரும் தன்மானப் பிரச்சனையாகவும், கண்ணியக்குறைவாகவும் கருதிய கைஸ், ஜுஷம், நஸ்ர், ஸஅத் இப்னு பக்ர், ஆகிய கோத்திரத்தாரும் கைகோர்த்துக் கொண்டனர்.

இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத் பொருட்கள் கிடைத்தன. 

கிட்டத்தட்ட ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகைகள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ஊக்கியா வெள்ளிகள், கனீமத்தாக {வெற்றிப் பொருளாக} கிடைத்தன.   கனீமத் பொருட்களை மாநபி {ஸல்} அவர்கள் பங்கு வைத்த போது, இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் {ரலி}, அபூ சுஃப்யான் {ரலி} போன்றோருக்கும், இன்னும் சில முஹாஜிரீன்களுக்கும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தார்கள்.

 புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் நிறைய கொடுத்தார்கள்.  

ஆனால், நீண்ட காலமாக தங்களோடு உற்ற துணையாக இருந்த அன்ஸாரிகளுக்கு அந்த அளவு வழங்கவில்லை.  இதனால் மன வருத்தமடைந்த சில அன்ஸாரிகள் பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி {ஸல்} அவர்கள் தங்களது கூட்டத்தினருக்கே வாரி வாரி வழங்குகின்றார்கள்என்று பேசினார்கள்.    

    فعندما دخل عليه سعد بن عبادة، قال: يا رسول الله إن هذا الحي من الأنصار قد وجدوا عليك في أنفسهم؛ لما صنعت في هذا الفيء الذي أصبت، قسمت في قومك وأعطيت عطايا عظاماً في قبائل العرب، ولم يكن في هذا الحي من الأنصار منها شيء! قال

 (فَأَيْنَ أَنْتَ مِنْ ذَلِكَ يَا سَعْدُ) قال

 يا رسول الله، ما أنا إلا من قومي قال

 (فَاجْمَعْ لِي قَوْمَكَ فِي هَذِهِ الْحَظِيرَةِ) قال

 فجاء رجال من المهاجرين فتركهم فدخلوا، وجاء آخرون فردهم، فلما اجتمعوا أتى سعد فقال: قد اجتمع لك هذا الحي من الأنصار، فأتاهم رسول الله -صلى الله عليه وسلم-، فحمد الله وأثنى عليه بما هو أهله، ثم قال

 (يَا مَعْشَرَ الْأَنْصَارِ: مَا قَالَةٌ بَلَغَتْنِي عَنْكُمْ؟ وَجِدَةٌ وَجَدْتُمُوهَا فِي أَنْفُسِكُمْ؟ أَلَمْ آتِكُمْ ضُلّالًا فَهَدَاكُمْ اللّهُ بِي؟ وَعَالَةً فَأَغْنَاكُمْ اللّهُ بِي؟ وَأَعْدَاءً فَأَلّفَ اللّهُ بَيْنَ قُلُوبِكُمْ؟) قَالُوا

 اللّهُ وَرَسُولُهُ أَمَنّ وَأَفْضَلُ. ثُمّ قَالَ (أَلَا تُجِيبُونِي يَا مَعْشَرَ الْأَنْصَارِ؟) قَالُوا

 بِمَاذَا نُجِيبُك يَا رَسُولَ اللّهِ؟ لِلّهِ وَلِرَسُولِهِ الْمَنّ وَالْفَضْلُ. قَالَ

 (أَمَا وَاَللّهِ لَوْ شِئْتُمْ لَقُلْتُمْ فَلَصَدَقْتُمْ وَلَصُدّقْتُمْ

 "أَتَيْتَنَا مُكَذّبًا فَصَدّقْنَاكَ، وَمَخْذُولًا فَنَصَرْنَاكَ، وَطَرِيدًا فَآوَيْنَاكَ، وَعَائِلًا فَآسَيْنَاكَ"، أَوَجَدْتُمْ عَلَيّ يَا مَعْشَرَ الْأَنْصَارِ فِي أَنْفُسِكُمْ فِي لُعَاعَةٍ مِنْ الدّنْيَا تَأَلّفْتُ بِهَا قَوْمًا لِيُسْلِمُوا؟، وَوَكَلْتُكُمْ إلَى إسْلَامِكُمْ، أَلَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ أَنْ يَذْهَبَ النّاسُ بِالشّاءِ وَالْبَعِيرِ وَتَرْجِعُونَ بِرَسُولِ اللّهِ إلَى رِحَالِكُمْ؟ فَوَاَلّذِي نَفْسُ مُحَمّدٍ بِيَدِهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمّا يَنْقَلِبُونَ بِهِ، وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَءًا مِنْ الْأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النّاسُ شِعْبًا وَوَادِيًا، وَسَلَكَتْ الْأَنْصَارُ شِعْبًا وَوَادِيًا لَسَلَكْتُ شِعْبَ الْأَنْصَارِ وَوَادِيَهَا، الْأَنْصَارُ شِعَارٌ وَالنّاسُ دِثَارٌ5، اللّهُمّ ارْحَمْ الْأَنْصَارَ وَأَبْنَاءَ الْأَنْصَارِ، وَأَبْنَاءَ أَبْنَاءِ الْأَنْصَارِ) فبكى القوم حتى أخضلوا لحاهم وقالوا

 رضينا برسول الله -صلى الله عليه وسلم- قسماً وحظاً، ثم انصرف رسول الله -صلى الله عليه وسلم- وتفرقوا                                             

 சூழ்நிலை வேறு விதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸஅத் இப்னு உப்பாதா {ரலி} அவர்கள் வேகமாக நபிகளாரிடம் வந்து அன்ஸாரிகளில் சிலர் உங்களின் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்கு கிடைத்த கனீமத் பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும், ஏனைய கோத்திரத்தாருக்கும் வாரி வழங்குனீர்கள்.

ஆனால், அன்ஸாரிகளுக்கு அந்த அளவுக்கு நீங்கள் வழங்கவில்லை. இது தான் அவர்களின் மன வருத்தத்திற்கு காரணம்என்றார்கள்.  அப்போது நபி {ஸல்} அவர்கள் ஸஅதே! நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.                                  

நானும் எனது கூட்டத்தாரில் ஒருவன் தானே!என்று ஸஅத் {ரலி} அவர்கள் பதில் கூறினார்கள்.                                  

 உடனே நபி {ஸல்} அவர்கள் சரி எனக்காக உங்கள் கூட்டத்தார்களை தடாகத்திற்கருகே ஒன்று சேர்த்துவிட்டு என்னை வந்து அழையுங்கள்என்றார்கள்.                            

அங்கிருந்து வெளியேறிய ஸஅத் {ரலி} அவர்கள் உடனடியாக தமது கூட்டத்தாரிடம் வந்து குறிப்பிட்ட தடாகத்தில் ஒன்று கூடுமாறு கட்டளையிட்டார்கள்.  அனைவரும் ஒன்று கூடினார்கள்.

அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் அங்கே அமர்வதற்கு ஸஅத் {ரலி} அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.   

 இது கேள்விப் பட்டு மேலும் சில முஹாஜிர்கள் அங்கு வந்தனர். ஆனால், ஸஅத் {ரலி} அவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டார்கள். 

அனைவரும் ஒன்று சேர்ந்ததும், நபி {ஸல்} அவர்களிடம் சென்று ஸஅத் {ரலி} அவர்கள் வாருங்கள்! அல்லாஹ்வின் தூதரே! அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்என்றார்கள்.                                                      

 நபி {ஸல்} அவர்கள் அங்கு வந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு ஓ! அன்ஸாரிகளே! உங்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்ட செய்தி உண்மையா? என் மீது நீங்கள் கோபம் அடைந்துள்ளீர்களாமே?...                                                        

 நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களுக்கு நேர்வழி காட்டினான்.

  நீங்கள் வறியோர்களாக, ஏழைகளாக இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களை செல்வச் சீமான்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், எதிரிகளாகவும் இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்.என்று கூறினார்கள். அதற்கு அன்ஸாரிகள் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான்.                                                      

அல்லாஹ்வும் அவன் தூதரும் எங்கள் மீது பெருங் கருணையோடும், பேருபகாரத்தோடும் நடந்து கொண்டனர்.என்று கூறினார்கள்.

பின்னர் மீண்டும் அன்ஸாரிகளை நோக்கி நபி {ஸல்} அவர்கள் ஓ! அன்ஸாரிகளே! நீங்கள் எனக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.  

அதற்கு அன்ஸாரிகள் அனைத்து கருணையும், பேருபகாரமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது எனும் போது நாங்கள் உங்களிடம் என்ன பதில் கூறப் போகிறோம்?    என்றார்கள்.

அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்படுத்தப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் உங்களை உண்மை படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு உதவியும், உபகாரமும் செய்தோம். சொந்த மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் பெரும் சுமையுடன் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவளித்தோம்.என்று ஒருவேளை நீங்கள் பதில் கூறலாம். 

அப்படிக் கூறினால் அதுவும் உண்மைதான். அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.   

 அன்ஸாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திற்காகவா நீங்கள் என் மீது கோபப்பட்டீர்கள்?” ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். மக்களில் சிலரின் இஸ்லாம் பூரணமாக வேண்டும் என்பதற்காக நான் அப்படி வாரி வாரி வழங்கினேன்.

 உங்களை உங்களது சங்கையான இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன். {உங்களது இஸ்லாம் மிகவும் வலிமை மிக்கது என்பதை நான் அறிவேன்}     

அன்ஸாரிகளே! மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள்? உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா?”

  இந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையாயின் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று, அன்ஸாரிகள் மட்டும் வேறு வழியில் செல்வார்களாயின் நான் அன்ஸாரிகளின் வழியில் தான் சென்றிருப்பேன். 

யா அல்லாஹ்! அன்ஸாரிகளுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், அவர்களின் சந்ததியினரின் சந்ததியினருக்கும் அருள் புரிவாயாக!”” என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முடித்தார்கள்.                                               

இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த அன்ஸாரிகளெல்லாம் தங்களின் தாடிகள் நனையுமளவுக்கு அழுதார்கள்.  

 அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கை நாங்கள் பொருந்திக் கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம்.என்றார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதன் பின்னர் அன்ஸாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். (  நூல்:தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:244,245,246., தப்ரானீ, ஹதீஸ் எண்:3994, முஸ்னத் அப்து ஹுமைத்,  ஹதீஸ் எண்:923. அஹ்மத், ஹதீஸ் எண்:11153. )

நபி {ஸல்} அவர்களின் அளவிலாச் சிறப்பு:-

நபி {ஸல்} அவர்களின் சிறப்புகளை சொல்வதென்றால் எங்கிருந்து எப்படித் துவங்குவது? எவைகளைச் சொல்வது? குர்ஆனிலும் நபிமொழிக் கிரந்தங்களிலும் அவ்வளவு செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒன்றிரண்டு செய்திகளை இந்த வார ஜும்ஆவில் பார்ப்போம்.

அல்லாஹ் நபியவர்களை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

நபி {ஸல்} அவர்களின் சிறப்புகளில் ஒன்று, அல்லாஹ் நபி தாவூது, மூஸா, ஸக்கரியா (அலை) போன்ற நபிமார்களை பல முறை நேரடியாக அழைத்துள்ளது போல், நபி {ஸல்} அவர்களை ஒரு முறை கூட குர்ஆனில் நேரடியாக, ‘யா முஹம்மதுஎன்று அழைக்கவில்லை. மாறாக, அல்லாஹ் நபியாக இருப்பவரே”, “போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே”, “போர்த்திக் கொண்டிருப்பவரேபோன்ற அன்பான வார்த்தைகளாலேயே அழைக்கிறான்.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாக்கிறான்

அல்லாஹ் பல முறை குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாத்துள்ளான். அது மட்டுமல்ல, அவன் நபியவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட குறிப்பிட்டு அவர்களையும் பாதுகாத்துள்ளான்.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களை நோக்கி, “விசுவாசிகளின் தாய்மார்கள்என்ற கௌரவமான அடைமொழியுடன் பேசும் வசனங்கள் உள்ளன. அதே போல, அவர்களுடைய வளர்ப்பு மகன் ஸைத்’ (ரலி) அவர்களின் பெயரும் குர்ஆனில் உள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு சம்பவத்தின் போது, அல்லாஹ் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை சூரா நூரில் 20 வசனங்களுக்கு மேலாக அருளி அவர்களுடைய கண்ணியத்தைக் காப்பாற்றினான்.

அல்லாஹ் நபி {ஸல்} அவர்களுக்கு ஆறுதல் அளித்தான்.

பல சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் கவலையாகவோ, துக்கமாகவோ இருக்கும் போதும், அல்லது நெருங்கிய உறவினரின் மறைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வசனங்களையும் சூராக்களையும் இறக்கியருளினான்.

சூரா ளுஹா, சூரா இன்ஷிரஹ், சூரா தாஹா, சூரா யூசுஃப், சூரா மர்யம் போன்றவைகள் நபியவர்களின் மனதிற்கு ஆறுதல் அளிப்பதற்காகவே அருளப்பட்டன.

ஏழு வானுக்கு அப்பாலிருந்து இறங்கிய அல்லாஹ்வுடைய சொந்த வார்த்தைகளால் இதயம் ஆறுதல் பெறும் அளவிற்கு அத்தனை உயரிய கண்ணியத்துக்குரியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அல்லாஹ் நபி {ஸல்} அவர்களின் உள்ளத்து உணர்வுகளுக்கும் உயிர்ப்பூட்டினான்..

நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் மதினாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற போது, கிப்லா மக்காவை நோக்கி இல்லாமல் ஜெருஸலத்தை நோக்கியே இருந்தது. அவர்கள் தொழும்போது மக்காவின் திசையில் முதுகைக் காட்டிக் கொண்டு தொழுவதை மிகவும் சிரமமாக நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். ஒரு நாள், அவர்கள் தொழுகையில் வானை நோக்கினார்கள். அவர்கள் துவாவோ, கோரிக்கையோ எதுவும் செய்யவில்லை, மேலே பார்த்தார்கள் அவ்வளவு தான். அவர்களுடைய உள்ளம் நாடியதை அல்லாஹ் அருளியது மட்டுமல்லாமல், அதை குர்ஆனிலும் குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ் தன் தூதரின் மேல் தனக்குள்ள அன்பை வெளிப்படையாக குர்ஆனில் பிரகடனப்படுத்துகிறான்.

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை. ( அல் குர்ஆன்: 2: 144 )

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நபி {ஸல்} அவர்களின் அற்புதமான பிறப்பை சுமந்து நிற்கும் இந்த மாதத்தில் அவர்களின் அளவிலா மாண்புகளையும், சிறப்புகளையும் விளங்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்!  

5 comments:

  1. மிக மிக அருமையான கட்டுரை அடியேன் மிகவும் அகம் மகிழ்ந்து துஆ செய்கிறேன் தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் மிக அற்புதமான கட்டுரை

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து புதிய செய்திகளோடு என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்த எங்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் இந்த கட்டுரை அல்லாஹ் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் நலன்களையும் வளங்களையும் தந்தருள்வானாக

    ReplyDelete
  3. ஒவ்வொரு வருடமும் புது புது விதமாக ஆய்வு மேற்கொண்டு நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகளை அறிமுகப்படுத்தும் விதம்
    எங்களை பிரமிக்க வைக்கிறது. மாஷாஅல்லாஹ் தங்களது முயற்சி களை அல்லாஹ் கபூல் செய்து மெம்மேலும் வளர அருள்புரிவானாக ஆமீன்.

    ReplyDelete
  4. அண்ணலார் வாழ்வின் நிகழ்வுகள் சிலவற்றை ஒரு புதிய பார்வையில் தந்துள்ளீர்கள். அல்லாஹ்
    கிருபை செய்வானாக.

    ReplyDelete