Thursday 20 October 2022

பெருந்தன்மையின் பிறப்பிடமாய் வாழ்ந்த பெருமானார் {ஸல்} அவர்கள்!!!

பெருந்தன்மையின் பிறப்பிடமாய்

வாழ்ந்த

பெருமானார் {ஸல்} அவர்கள்!!! 


நாகரீகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, கொள்கை கோட்பாடுகள் எதுவுமற்ற, மடத்தனமான மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கும், காலம் காலமாய் நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கைக்கும் எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக உளப்பூர்வமாக ஏற்று, வாழும் காலமெல்லாம் பிறழாது வாழ்ந்து உயரிய சமூகமாக மாற்றிக் கொண்டது என்றால், நிச்சயமாக! அந்த மக்கள் தம்முடன் கலந்து வாழ்ந்த பிற மத மக்களைப் பார்த்தோ, அவர்களின் மதங்களை ஆராய்ந்தோ இவர்களை விட இஸ்லாம் சிறந்தது, எனும் முடிவுக்கு வந்து ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக, நபி {ஸல்} அவர்கள் இறைத்தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தின் அவர்களிடம் கண்ட உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கச் செய்தது என்றால் மிகையாகாது.

உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேனே (ஆகவே நான் கூறுவது உண்மைதான் என்பதை) விளங்க மாட்டீர்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 10: 16) என்று அல்லாஹ் நபி {ஸல்} அவர்களின் நற்குணங்களைக் கொண்டு அந்த மக்களுக்கு அறை கூவல் விடுக்கக் கூறினான்.

இதையே அல்லாஹ் தனது திருமறையிலே, தமது தூதரின் மகத்தான வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூட்சமத்தை பின்வருமாறு கூறுகின்றான்.

 'நீர் கடின சித்தமுடையவராக இருந்திருந்தால் உம்மை விட்டு இந்த மக்கள் வெருண்டோடி இருப்பார்கள்' என்று கூறுகிறான்'. ஆக நபி(ஸல்) அவர்களை கடுமையானவராகவோ அல்லது முன்னுக்குப்பின் முரணாகவோ அந்த மக்கள் கண்டிருந்தால், அவர்களை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள். கொள்கையைப் பற்றியெல்லாம் அந்த தருணத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நற்குணம் அந்த மக்களை இஸ்லாத்தில் நுழையச் செய்தது மட்டுமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் நற்குணவாதியாகவும், நற்பண்புகளின் உறைவிடமாகவும் மாற்றியது.

மனித நேயம், மன்னிக்கும் மாண்புகள், பிறர் நலன் நாடல், விரோதிகளிடமும் உபகாரமாக நடந்து கொள்ளல், அழகாக பேசுதல், மலர்ந்த முகத்துடன் எவரையும் அணுகுதல், தவறு செய்தவர்களை சீர்திருத்தம் செய்தல், நன்மை செய்தவரை தட்டிக் கொடுத்து பாராட்டுதல், இயலாதோருக்கு கை கொடுத்து உயர்த்தி விடுதல், பலகீனமானவர்களை பலப்படுத்துதல், விவேகமானவர்களை ஊக்குவித்தல் என நற்குணங்களின் முகவரியாய் அடையாளமாய்  இந்த உலகில் வாழ்ந்தவர்கள் நமது நபி ஸல் அவர்கள்.

இறுதியில் நபி {ஸல்}  அவர்களைக் குறித்து  திருமறையில் "நபியே நீங்கள் மகத்தான நற்குணங்களை கொண்டிருக்கிறீர்கள்" என்று புகழ்ந்துரைக்கிறான்.  

அப்படி அவர்கள் கொண்டிருந்த நற்பண்புகளில் மகத்தான நற்பண்பு தான் பெருந்தன்மை எனும் நற்பண்பாகும்.

இத்தகைய நற்பண்புகளின் பிறப்பிடமாய் அவர்களை வாழத்தூண்டியது அல்குஆன் தான். ஏனெனில், நபி {ஸல்} அவர்களை வார்த்ததும் வடித்ததும்  அல்குர்ஆன் தான்.  ஆகவே தான். அவர்கள் மனித சமுதாயத்தை அழகிய பண்பிலும் அருங்குணத்திலும் வார்த்தெடுக்க முனைந்து, அதில் வெற்றியும் கண்டார்கள்

நபி (ஸல்) அவர்கள் எப்படி வார்த்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற ஆயிரமாயிரம் நிகழ்வுகள் வரலாற்று ஏடுகளில் அணிவகுத்து நிற்பதை ஆச்சரியத்துடன் நாம் காணலாம்.

பெருமானார் {ஸல்} அவர்கள் பேணிப் பாதுகாத்த போற்றிப் புகழ்ந்த ஒரு பண்பும், அருங்குணமும் தான் பெருந்தன்மை.

நபி {ஸல்} அவர்களைப்பற்றி  அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி)  குறிப்பிடும் போது,

فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ الْقُرْآنَ

குர்ஆன் தான் நபி (ஸல்) அவர்களின் குணமாக இருந்ததுஎன்று கூறுகின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )  (1233)

சாமானிய தொண்டர் ஒருவரோடு….

இன்று அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்கும் போது ஏழை எளிய மனிதர்களின் வீடுகளுக்குச் செல்வதும், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் என படம் காட்டுவார்கள். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டால் அதன் பிறகு அவருக்கு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே ஞாபகம் இருக்காது.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுதினமும் சாமானியர்களோடு பழகியதோடு அவர்களின் மனங்குளிர்ந்து போகும் அளவுக்கு, நெகிழ்ச்சியோடு நினைவு கூறும் அளவுக்கு மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள்.

أنَّ رجلًا مِن أهلِ الباديةِ كان اسمُه زاهِرًا وكان يُهدي إلى النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم الهَديَّةَ فيُجَهِّزُه رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إذا أراد أن يخرُجَ فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إنَّ زاهرًا بادِيَتُنا ونحن حاضِروه وكان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يُحِبُّه وكان دَميمًا فأتى النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يومًا وهو يبيعُ متاعَه فاحتَضَنه مِن خَلفِه وهو لا يُبْصِرُه فقال أرْسِلْني مَن هذا؟ فالتفَت فعرَف النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم فجعَل لا يَأْلو ما ألصَقَ ظَهرَه بصَدرِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم حينَ عرَفه وجعَل النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ مَن يشتري العبدَ فقال يا رسولَ اللهِ إذن تجِدَني كاسِدًا فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم لكنَّك عندَ اللهِ لَسْتَ بكاسِدٍ أو قال عندَ اللهِ أنت غالٍ

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாஹிர் இப்னு ஹராம் (ரலி) என்ற கிராமவாசி ஒருவர் நபி {ஸல்} அவர்களுக்கு தனது கிராமத்திலிருந்து அன்பளிப்புகளை எடுத்து வருவார். அவர் திரும்பும்போது நபி {ஸல்} அவர்களும் அவருக்கென பிரயாண தேவைகளைத் தயார் செய்து தருவார்கள். நபி {ஸல்} அவர்கள், ஜாஹிர் நமக்கு கிராமத்துத் தோழர்; நாம் அவருக்கு பட்டணத்துத் தோழர்கள் என்றார்கள். நபி {ஸல்} அவர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். அவர் அம்மை நோயால் முகம் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் கடைவீதியில் அவர் தனது பொருள்களை விற்றுக்கொண்டிருந்த பொழுது நபி {ஸல்} அவர்கள் பின்னால் வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அவரால் யாரென்று திரும்பிப்பார்க்க முடியவில்லை. அவர், “யாரது? என்னை விடுங்கள்என்று கூறிவிட்டு, திரும்பிப் பார்த்தபொழுது நபி {ஸல்} அவர்கள் என அறிந்து கொண்டார். உடனே நபி {ஸல்} அவர்களிடமிருந்து விலகாமல் அவர்களது நெஞ்சுடன் தனது முதுகைச் சேர்த்துக் கொண்டார். நபி {ஸல்} அவர்கள், “இந்த அடிமையை வாங்கிக் கொள்பவர் யார்?” என்று கூறத் தொடங்கினார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! விற்பதாக இருந்தால் என்னை மிகவும் விலைமதிப்பு குறைந்தவனாகக் கருதுகிறேன்என்று கூறினார். அல்லாஹ்வின் திருத்தூதர் {ஸல்} அவர்கள், “என்றாலும் நீர் அல்லாஹ்விடம் குறைந்த மதிப்புடையவர் அல்லர்என்றோ, “எனினும் அல்லாஹ்விடம் நீர் மிகுந்த மதிப்புடையவர்என்றோ கூறினார்கள்.                ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

எதிரிகள் தொடர்பு கொண்டு உதவி கோரிய போது

 وأنا أريد العمرة فماذا ترى ؟ ، فبشره رسول الله ـ صلى الله عليه وسلم ـ وأمره أن يعتمر .. فلما قدم مكة قال له قائل : صبوت 

خرجت من دينك

 ؟ ، قال

 لا ولكن أسلمت مع محمد رسول الله ـ صلى الله عليه وسلم ـ، ولا والله لا يأتيكم من اليمامة حبة حنطة حتى يأذن فيها النبي ـ صلى الله عليه وسلم ـ 

யமாமாவின் ஸுமாமா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நபி {ஸல்} அவர்களிடம் "நான் இப்போது மக்காவிற்குச் சென்று உம்ரா செய்ய விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார்.

பெருமானார் {ஸல்} அவர்கள் ஸுமாமா (ரலி) அவர்களை உம்ரா செய்ய அனுமதியளித்தார்கள். ஸுமாமா (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்றபோது அங்கே முஷ்ரிக்குகளில் ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா (ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதம் மாறவில்லை. மாறாக, இறைத்தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன்" என்று கூறினார். உம்ராவை முடித்து ஊருக்குத் திரும்ப தயாரான போது அங்கு நின்றிருந்த குறைஷிகளை நோக்கி “

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி {ஸல்} அவர்கள் அனுமதி தரும்வரை என்னுடைய நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது' என்று கூறினார்கள். 

كانت ميرة قريش ومنافعهم من اليمامة ثم خرج فحبس عنهم ما كان يأتيهم منها من ميرتهم ومنافعهم, فلما أضر بهم كتبوا إلى رسول الله

إن عهدنا بك وأنت تأمر بصلة الرحم وتحض عليها, وإن ثمامة قد قطع عنا ميرتنا وأضر بنا, فإن رأيت أن تكتب إليه أن يخلى بيننا وبين ميرتنا فافعل, فكتب إليه رسول الله

"أن خل بين قومي وبين ميرتهم".

சொன்னது போன்றே ஊருக்குச் சென்ற ஸுமாமா (ரலி) அவர்கள் கோதுமை தர மறுத்து விட்டார்கள். இதனால் அவதிக்குள்ளான குறைஷிகள் நபி {ஸல்} அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, ஸுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் ஸுமாமாவுக்குக் கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். கருணையே வடிவான நபி(ஸல்), குறைஷிகளின் கோரிக்கையை ஏற்று ஸுமாமா ரலி அவர்களுக்கு கடிதம் எழுதி பெருந்தன்மயோடு நடந்து கொண்டார்கள்.                     ( நூல்:  புகாரி )

இதே குறைஷிகள் தான் சில காலத்திற்கு முன்பு பெருமானார் {ஸல்} அவர்களையும், வயது முதிர்ந்த அபூதாலிப் அவர்களையும், உம்முல் முஃமினீன் கதீஜா (ரலி) அவர்கள் உட்பட நாயகத்தோழர்கள் அனைவரையும் உண்ண உண்வின்றி, உடுத்த உடையின்றி, குடிக்க நீரின்றி, மூன்றாண்டுகள் ஊர் நீக்கம் செய்து “அபூதாலிப் பள்ளத்தாக்கில்” தடுத்து வைத்தனர். ஆனால், நபி {ஸல்} அவர்களோ அதைப் பற்றி கடிதம் கொண்டு வந்தவரிடமோ, குறைஷிகளிடமோ சொல்லிக் காட்டவோ, குத்திக் காட்டவோ இல்லை. மாறாக, ஸுமாமா (ரலி) அவர்களை குறைஷிகளோடு அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதி தடுத்தார்கள்.

وعن أسامة بن زيد رضي الله عنهما ((أنَّ النبي صلى الله عليه وسلم ركب حمارًا، عليه إكاف، تحته قطيفة فدكية. وأردف وراءه أسامة، وهو يعود سعد بن عبادة في بني الحارث بن الخزرج. وذاك قبل وقعة بدر. حتى مرَّ بمجلس فيه أخلاط من المسلمين والمشركين عبدة الأوثان، واليهود، فيهم عبد الله بن أبي، وفي المجلس عبد الله بن رواحة، فلما غشيت المجلس عجاجة الدابة، خمر عبد الله بن أبي أنفه بردائه،ثم قال: لا تغبروا علينا، فسلم عليهم النبي صلى الله عليه وسلم ثم وقف فنزل؛ فدعاهم إلى الله، وقرأ عليهم القرآن، فقال عبد الله بن أبي: أيها المرء، لا أحسن من هذا، إن كان ما تقول حقًّا، فلا تؤذنا في مجالسنا، وارجع إلى رحلك، فمن جاءك منا فاقصص عليه. فقال عبد الله بن رواحة: اغشنا في مجالسنا؛ فإنا نحب ذلك، قال: فاستبَّ المسلمون والمشركون واليهود، حتى هموا أن يتواثبوا، فلم يزل النبي صلى الله عليه وسلم يخفِّضهم، ثم ركب دابته حتى دخل على سعد بن عبادة. فقال: (أي سعد، ألم تسمع إلى ما قال أبو حباب؟ يريد عبد الله بن أبي، قال كذا وكذا قال: اعف عنه يا رسول الله، واصفح، فوالله لقد أعطاك الله الذي أعطاك، ولقد اصطلح أهل هذه البحيرة أن يتوِّجوه، فيعصبوه بالعصابة فلما ردَّ الله ذلك بالحقِّ الذي أعطاكه، شرق بذلك، فذلك فعل به ما رأيت. فعفا عنه النبي صلى الله عليه وسلم  ))

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபதக்நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள்.

அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்இருந்தார். அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

(எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபி (ஸல்) அவர்களிடம் மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள்.

உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்என்றார்.

இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

 பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் சஅதே! அபூ ஹுபாப் அப்துல்லாஹ் பின் உபை சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான்.

இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்என்று கூறினார்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்தன்மையோடு அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

இத்தகைய பெருந்தன்மையை நபி (ஸல்) அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்தார்கள்.

عن أبي هُرَيْرَةَ - رضي الله عنه - قال: كان لِرَجُلٍ على النبيِّ صلى الله عليه وسلم سِنٌّ من الإِبِلِ، فَجَاءَهُ يَتَقَاضَاهُ، فقال: (أَعْطُوهُ)، فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا، فقال: (أَعْطُوهُ)، فقال: أَوْفَيْتَنِي أَوْفَى اللهُ بِكَ، قال النبيُّ صلى الله عليه وسلم: (إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً). 

وفي رواية: أنَّ رَجُلاً تَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَغْلَظَ له، فَهَمَّ به أَصْحَابُهُ، فقال: (دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً، وَاشْتَرُوا له بَعِيرًا فَأَعْطُوهُ إِيَّاهُ).

ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் தான் கொடுத்த ஒட்டகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது அவர் நபிகளாரிடம் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி அவரை தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி, அவரிடமே கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள் அவருக்குத் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயது உடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளதுஎன்றார்கள். அதற்கு நபியவர்கள் அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்லமுறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்என்று கூறி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி )

حضر مع المشركين موقعة بدر  في العام الثاني للهجرة (624م)، ونهى النبي محمد عن قتل ابو البختري . إلاّ أن الصحابي المجذر بن زياد البلوي قتله، ثم اعتذر إلى النبي فقال

والذي بعثك بالحق لقد جهدت عليه أن يستأسر فآتيك به فأبى إلاّ أن يقاتلني، فقاتلته فقتلته"، إذ أنه حين التقى به في ميدان المعركة قال زياد

 إن رسول الله  قد نهانا عن قتلك "، فقال أبو البختري:"وزميلي" (يعني زميله جنادة بن مليحة بنت زهير بن الحارث بن أسد الليثي الذي خرج معه من مكة)، فقال المجذر ما أمرنا رسول الله  إلا بك وحدك

، فقال أبو البختري

لا والله، ما نحن بتاركي زميلك

 لا والله، إذن لأموتن أنا وهو جميعا، لا تتحدث عني نساء مكة أني تركت زميلي حرصا على الحياة".

பத்ருப் போர் முடிந்திருந்த தருணம் அது. மாநபி {ஸல்} அவர்களும் மாநபித் தோழர்களும் மட்டில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பொன்னான தருணமும் கூட.

ஒருவரின் மனம் மட்டும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. எங்கே மாநபி {ஸல்} அவர்களின் கட்டளைக்கு மாறு செய்து விட்டோமோ? என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

மாநபி {ஸல்} அவர்கள் கேள்விபட்டால் என்ன சொல்லி விடுவார்களோ? என்று பரிதவித்துக் கொண்டிருக்கின்றது.

யாரும் நபி {ஸல்} அவர்களிடம் சொல்வதற்கு முன்னால், இதை யார் செய்தார்? என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டு விடும் முன்பாக நாமே சென்று மாநபி {ஸல்} அவர்களைப் பார்த்து நடந்த சம்பவத்தை, நிகழ்வின் பிண்ணனியை சொல்லி விட வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.

முஜத்தர் பின் ஸியாத் (ரலி) எனும் நபித்தோழர் மாநபி {ஸல்} அவர்களுக்கு முன்னால் வந்து நின்றார். துக்கத்தின் ரேகைகள் முகத்தில் படர்ந்திருந்தன.

 

அல்லாஹ்வின் தூதரே!” என்று அழைத்தார் முஜத்தர் (ரலி) அவர்கள். அந்த அழைப்பில் ஒரு பயம் இருந்தது. நபிகளார் திரும்பிப் பார்த்தார்கள். நபிகளாரைப் பார்த்ததும் அந்த பயம் கண்ணீராக கொட்டத் தொடங்கியது.

அல்லாஹ்வின் தூதரே! நடைபெற்ற போரில் அபுல் புக்தர் பின் ஹிஷாமை கொல்லக் கூடாது என்று நீங்கள் ஆணை பிறப்பித்திருந்தீர்கள். ஆனால் அவரை நான் தான் போரில் எதிர்கொண்டேன். போர்க்களத்தில் எனக்கு முன்னால் அவர் பல முறை வாளுயர்த்தி வந்தபோதெல்லாம் இயன்றவரை அவரை நான் தவிர்த்தேன்”.

அப்போது அவர் கேட்டார்: நீ ஏன் என்னோடு சண்டை செய்ய மறுக்கின்றாய்?” அதற்கு, நான் “உங்களை போர்க்களத்தில் கண்டால் கொல்லக்கூடாது என்று நபி {ஸல்} கட்டளையிட்டுள்ளார்கள்” என்றேன்.

என்னுடன், எனது நண்பன் ஜினாதா பின் மலீஹாவும் உண்டு. அவருக்கும் இது பொருந்துமா?” என்று கேட்டார். அதற்கு நான் “உங்கள் நண்பரைக் குறித்து நபிகளார் எதுவும் கூறவில்லை. ஆகவே அவரை நாங்கள் நிச்சயம் பொருட்படுத்தமாட்டோம்” என்று கூறினேன்.

அப்படியென்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து உங்களுடன் போர் செய்வோம். ஆபத்து வேளையில் நண்பரைக் கைவிட்டவன்என்று மக்கத்துப் பெண்கள் கூறும் இழி சொல்லை என்னால் கேட்க முடியாதுஎன்றார். “இவ்வாறு கூறிக்கொண்டே திடீரென அவர் என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்காக வந்தார். அவரை எப்படியாவது கைது செய்து உங்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விட வேண்டும் என்று நான் கடுமையாக முயற்சித்தேன். ஆனாலும், அல்லாஹ்வின் தூதரே! கடைசி வரை என்னால் இயலவில்லை. ஒரு கட்டத்தில் எனது உயிரைக் காப்பதற்காக அவரை நான் கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, கொன்று விட்டேன் அல்லாஹ்வின்தூதரே!” என்று கண்ணீர் மல்க கூறி முடித்தார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த விஷயத்தில் உங்களை நான் குற்றம் சுமத்த மாட்டேன். அபுல் புக்தரிக்கு நாம் செய்ய வேண்டிய பெரும் நன்றிக்கடனை நினைத்துதான் அவ்வாறு ஆணை பிறப்பித்திருந்தேதேன்” என்று கூறினார்கள். ( நூல்: இஸ்தீஆப், தபகாத் அல் குப்ரா, ஸியரு அஃலா மின் நுபலா )

என்ன நன்றிக்கடன் என்றால் ஷுஃபே அபூதாலிப் பள்ளத்தாக்கில் மக்காவின் முஷ்ரிக்குகள் பெருமானார் {ஸல்} அவர்களையும், நபித்தோழர்களையும் ஊர் விலக்கம் செய்து, உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை தடுத்து வைத்திருந்த தருணத்தில் மாநபி {ஸல்} அவர்களுக்கு ஆதரவாக பேசி, அப்போது மிகவும் மும்முரமாக எதிர்த்து நின்ற அபூஜஹ்லையும் அடித்து, மக்காவில் தொங்க விட்டிருந்த ஊர் நீக்க தீர்மானத்தை கிழித்தெறிந்து மாநபி {ஸல்} அவர்களுக்கும் மாநபித்தோழர்களுக்கும் ஊர் விலக்க தடை நீங்க அடிப்படை காரண்மாய் திகழ்ந்தார் அபுல் புக்தரி எனவே தான் அவரை கொல்லக் கூடாது என நபி {ஸல்} அவர்கள் போர்க்களத்தின் போது கண்டால் கொல்ல வேண்டாம் என கட்டளை பிறப்பித் திருந்தார்கள்.

அத்தகைய மனிதரை சந்தர்ப்ப சூழ்நிலையால் கொன்று விட்டு வந்து அழுது கண்ணீர் வடிக்கும் முஜத்தர் இப்னு ஜியாத் (ரலி) அவர்களோடு பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.

பெருந்தன்மை என்பது…

பெருந்தன்மை என்பது இறைவனின் ஓர் அருட்குணம். அந்த குணத்தை வெளிப் படுத்துவோருக்கு இறைவன் தனிமரியாதையை வழங்கி, மற்றவர்களின் முன்னிலையில் கவுரவிக்கின்றான்.

ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ‏

“(அவனே) அர்ஷின் அதிபதி - சிம்மாசனத்திற்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்”. (திருக்குர்ஆன் 85:15)

முன் சென்ற சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம் நீ உலகில் என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்என்று கூறினார். இதனால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

பெருந்தன்மையுடன் நடந்த இந்த மனிதரைப் பார்த்து இறைவன் பெருந்தன்மையுடன் நடப்பதற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். எனவே, என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்என வானவர்களிடம் கூறினான் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

அந்த மனிதர் உலகில் வாழும் காலங்களில் செய்த ஒரே நன்மையான காரியம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது மட்டும் தான். 

அவரின் பெருந்தன்மை இறைவனையே கவர்ந்துவிட்டது. அதற்கு பிரதிபலனாக இறைவன் அவரின் பாவங்களை தள்ளுபடி செய்ததோடு அவரை சொர்க்கத்திலும் பிரவேசிக்கச் செய்தான்.

பெருந்தன்மையாக நடப்பதற்கு இறைவனிடம் உயர்ந்த பதவியும், சிறந்த விருதும் கிடைத்துவிடுகிறது.

பெருந்தன்மையை வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும்  கடைபிடிக்க முடியும். அனைத்து உறவுகளிடையேயும் பேண முடியும்.

பெருந்தன்மையை கொடுக்கல் வாங்கலில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கேட்பதில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கொடுப்பதில் வெளிப்படுத்தலாம். வழக்காடுவதில் வெளிப்படுத்தலாம். தமக்கு தீங்கிழைத்தவரை மன்னிப்பதிலும் வெளிப்படுத்தலாம்.

தாய் தந்தை – மகன் மகள், சகோதரன் – சகோதரி, கணவன் – மனைவி, தலைவர் – தொண்டன், ஆசிரியர் – மாணவன், நண்பர்கள், உறவுகள், முதலாளி – பணியாள் என நம்முடன் பயணிக்கிற அனைத்து உறவுகளுடனும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள முடியும்.

இறைத்தூதர்களின் நற்பண்புகளில் ஒன்றான பெருந்தன்மை.

1.   இறைத்தூதர்களில் ஒருவரின் பெருந்தன்மை.

وعن عبد الله بن مسعود ـ رضي الله عنه ـ قال: ( كأني أني أنظر إلى النبي ـ صلى الله عليه وسلم ـ يحكي نبي من الأنبياء، ضربه قومه فأدموه، وهو يمسح الدم عن وجهه ويقول: اللهم اغفر لقومي فإنهم لا يعلمون )(البخاري).

 (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. "அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக் கிறார்கள்' என்று சொல்-க் கொண்டிருந் தார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி (3477) )

2.   ஈஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏

اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ‌ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏

ஈஸா (அலை) அவர்களுக்கு அவர்களின் சமுதாயத்தவர்கள் அவர்களைக் கொலை செய்வதற்கு எண்ணினார்கள். அதுமாத்திரமல்லாமல் அவர்களுக்கு பல கொடுமைகளையும் செய்து, அவர்களை அல்லாஹ்வின் இடத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் மீது இட்டுக்கட்டியும் கூட அவர்கள் அந்த மக்களை மன்னித்து பெருந்தன்மையோடு நாளை மறுமையில் அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் மன்னித்து விடுமாறு வேண்டுவார்கள். என்று அல்லாஹ் திக்குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான். 

"நீ எனக்குக் கட்டளையிட்ட படி "எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே.

அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.) ( அல்குர்ஆன்: 5: 117- 118 )

3. மூஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

மூஸா (அலை) அவர்கள் சமுதாயத்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததைப் போன்று உலகில் யாரும் மாறு செய்யவில்லை அதே போன்று அதிகமாக கருத்து முரண்பாடு கொண்டதும் இந்த பனூஇஸ்ரவேலர்கள் தான்.

மூஸா (அலை) அவர்களுக்கு சொல்லொனா துன்பத்தைக் அவர்கள் கொடுத்தும் கூட அவர்கள் அந்த மக்களை பெருந்தன்மையுடன் மன்னித்து  அல்லாஹ்விடம் பிராத்தனையும் செய்தார்கள் திருக்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான். 

وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا‌ ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ‌ ؕ اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ‌ؕ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا‌ وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ‏

நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். அவர்களைப் பூகம்பம் தாக்கிய போது "என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை. இதன் மூலம் நீ நாடியோரை வழி கேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழி காட்டுகிறாய். நீயே எங்கள் பொறுப்பாளன்.

எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்'' என்று (மூஸா) பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 7: 155 )

3. நாயன் அல்லாஹ் போற்றும் நல்லோர்களின் நற்பண்பே பெருந்தன்மை..

திருக்குர்ஆன் நபிகளாரின் அருமைத் தோழர்கள் பெருந்தன்மையை சிலாகித்துக் இவ்வாறு கூறுகிறது. 

அவர்களுக்கு முன்பே இறைநம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள்  நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். ( அல்குர்ஆன்: 59:09 )

عن أبي موسى الأشعري رضي الله عنه قال

 قال رسول الله صلى الله عليه وسلم

 (إن الأشعريين إذا أرملوا في الغزو أو قل طعام عيالهم بالمدينة جمعوا ما كان عندهم في ثوب واحد ثم اقتسموه بينهم في إناء واحد بالسوية، فهم مني وأنا منهم).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன். ( அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள். நூல்: புகாரி:2486 ) 

 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله - صلى الله عليه وسلم – قال : ( اشترى رجل من رجل عقاراً له ، فوجد الرجل الذي اشترى العقار في عقاره جرّة فيها ذهب ، فقال له الذي اشترى العقار : خذ ذهبك مني ؛ إنما اشتريت منك الأرض ولم أبتع منك الذهب ، وقال الذي له الأرض : إنما بعتك الأرض وما فيها ، فتحاكما إلى رجل ، فقال الذي تحاكما إليه : ألكما ولد ؟ ، قال أحدهما : لي غلام ، وقال الآخر : لي جارية ، قال : أنكحوا الغلام الجارية ، وأنفقوا على أنفسهما منه ، وتصدقا ) متفق عليه .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், "நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், "எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், "அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்;  தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார்.  ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி )

மீலாதை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்து பரவசத்தோடும் நபி நேசத்தோடும் பல்வேறு பிரசங்கங்கள், மாநாடுகள், மவ்லித் மஜ்லிஸ்கள், பேரணிகள் நடத்தி கலந்து சிறப்பித்து நபி {ஸல்} அவர்களின் மீதான பேரன்பை வெளிப்படுத்திய நாம் அவர்களின் நற்பண்புகளையும், நற்குணங்களையும் நம் வாழ்வில் கொண்டு வருவோம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நபி {ஸல்} அவர்களின் வார்த்தை மற்றும் வாழ்க்கையின் படி நடக்கும் நற்பேற்றைத் தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

No comments:

Post a Comment