Tuesday 18 October 2022

நீங்களும் பேச்சாளராகலாம்!!!

 

மஸாபீஹுல் மிஹ்ராப்


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 16\10\2022 ஞாயிற்றுக் கிழமையோடு நமது மஸாபீஹுல் மிஹ்ராப் (vellimedaiplus.blogspot.in) ஜும்ஆ பயான் கட்டுரை தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 30 முப்பது லட்சத்தைக் கடந்து விட்டது.

இந்த தளத்தின் பார்வையாளர்கள், பயனாளர்கள், பகிர்பவர்கள், (comments) கருத்தாளர்கள் அன்பர்கள், நண்பர்கள் மேன்மைமிகு உலமாக்கள் அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹு ஃபீக்கும்

எந்தவொரு உலக எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆலிம் சமூகத்திற்கு ஏதாவது பணிவிடைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கிலே சாதாரணமாக 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் ஜும்ஆவில் இருந்து இந்த ப்ளாக்கிலே பயான் குறிப்புகளை கட்டுரைகளாக வழங்க ஆரம்பித்து இன்று 388  தலைப்புகள் பதிவேற்றம் செய்து 3000000 முப்பது லட்சம் பார்வையாளர்களைக் கடந்து உங்களின் அபிமானங்களையும், துஆவையும் பெற்றிருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்வாழும் காலத்தில் தொடந்து இந்த சேவையை பணிவிடையை உலமா சமூகத்திற்கு வழங்கிட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேரருள் புரிந்திட நீங்களெல்லாம் துஆச் செய்ய வேண்டும்.

2009 - 2012 கால கட்டத்தில் பயான் குறிப்புகளை A4 பேப்பரில் கையால் எழுதி, ஜெராக்ஸ் எடுத்து நான் பணி செய்து கொண்டிருந்த ஊருக்கு அருகில் இருக்கும் ஆலிம்களிடம் வழங்கி வந்தேன்.

2013 ம் ஆண்டு தாழையூத்து அபூபக்கர் சித்திக் ரலி பள்ளிவாசலில் இமாமாக பணி புரியும் போது என் ரூமுக்கு வருகை தரும் ஷேக் அண்ணன் அவர்கள்  இணைய வழியாக இந்த சேவையை எடுத்துச் சென்றால் அநேக ஆலிம்களுக்கு பயனாக அமையும் என்று சொன்னார்கள்.

இணைய வழி தொடர்பான எந்த அறிவும் அனுபவமும் இல்லாத அந்த நேரத்தில் எப்படி ஆரம்பிப்பது என்று அறிந்து தெரிந்து பயான் குறிப்பை A4 பேப்பரில் எழுதி மேலப்பாளையத்தில் இருந்த செர்ரி நெட் என்ற நெட் சென்டரில் கொடுத்து டைப் செய்து  அஷ்ரஃப் என்கிற நண்பர் ஒருவர் உதவியுடன் ப்ளாக் ஓப்பன் செய்து அதில் கட்டுரைகளை பதிவு செய்து வந்தேன்.

ஒரு கட்டுரை பதிவு செய்ய பக்கங்களைப் பொறுத்து 50 முதல் 75 வரை அப்போது செலவாகியது. தொடர்ச்சியாக ஒரு வருடம் இவ்வாறு எழுதி கடையில் டைப் செய்து ப்ளாக்கில் பதிவேற்றம் செய்து வந்தேன்.

2014 ல் களக்காடு கோட்டை பள்ளியில் இமாமாக பணியாற்றய போது எப்போதும் ஏதாவது எழுதித் கொண்டே இருப்பதைப் பார்த்த  சிங்கமபத்து இமாம் மௌலானா யூசுஃப் பாகவி அவர்கள் விவரம் கேட்க ப்ளாக் குறித்தும் பயான் பதிவு செய்வது குறித்தும் சொன்னேன்.

நீங்களே ஏன் டைப் செய்து பதிவேற்றம் செய்யக் கூடாது என்று கேட்டார்கள். அதற்கு கம்யூட்டர் வேண்டும் அதை வாங்க பணம் வேண்டும் இரண்டும் என்னிடம் இல்லை என்றேன்.

கம்யூட்டர் என்ன விலை என்று விசாரித்து சொல்லுங்கள்! பார்ப்போம் என்று யூசுஃப் பாகவி கூற விலை 30,000 முதல் 40000 வரை இருந்ததைக் கூறியதும் செகண்டஸ்ல விசாரிங்க என்று கூற 15000 ரூபாயில் செகண்ட்ஸில்  கம்யூட்டர் யூஎஸ்பி வாங்கி தந்தார்கள்.

அதன் பின்னர் டைப்பிங் தெரிந்து கொள்ள வெள்ளிமேடை சதக் மஸ்லஹி அவர்களைத் தொடர்பு கொண்டு டைப்பிங் படித்து மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தில் நானே பதிவேற்றம் செய்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை கூட நிறைய ஆலிம்கள் பல்வேறு கருத்துக்களை பின்னூட்டத்தில் ஆலோசனைகளாக தர ப்ளாக்கில் அரபு வார்த்தைகளை இணைத்து பயான் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியப் பெருமக்கள், தமிழகத்தின் தலை சிறந்த மேன்மக்களான உயர்ந்த ஆலிம் பெருமக்கள் குறிப்பாக மௌலானா அல்ஹாஜ் SS அஹமது பாகவி ஹழ்ரத்,  மௌலானா சதீதுத்தீன் பாகவி ஹழ்ரத், சிந்தனச் சரம் பீர் முஹம்மது பாகவி ஹழ்ரத் சமநிலை சமுதாயம் ஜாஃபர் பாகவி ஹழ்ரத், மௌலானா மஸ்வூத் ஜமாலி ஹழ்ரத், மௌலானா ஃபக்ருத்தீன் பாகவி ஹழ்ரத், மௌலானா அபூபக்கர் உஸ்மானி ஹழ்ரத், மௌலானா தோப்புத்துறை ஷாஹுல் ஹமீது பாகவி ஹழ்ரத், மௌலானா ஷாஹுல் ஹமீது வாஹிதி மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி ஹழ்ரத் ஆகியோர் உந்துதலையும், துஆக்களையும் நேரில் சந்திக்கும் போதோ தொலைபேசியில் பேசும் போதும் தந்து தொடர்ந்து சேவையாற்றிட ஊக்கமளித்து, தளத்தின் கட்டுரையின் நிறை குறைகளை சுட்டிக் காட்டினர்.

மேலும், இந்த சேவை செய்ய முடியாமல் தடை ஏற்படும் போது லேப்டாப் மற்றும் அதற்கான உபகரணங்களை சில உலமாக்கள் அவர்களின் சொந்த பொருளாதாரத்தில் இருந்து வாங்கித் தந்து இன்னும் எனக்கு பெரும் உதவியாக இருந்து  வருகின்றனர்.

மஸாபீஹுல் மிஹ்ராப் என்பது என் தனியொருவனின் முயற்சி மாத்திமல்ல. பல்வேறு உலமாக்களின் பங்களிப்பும் இணைந்ததாகும்.

குறிப்பாக, திருச்சி மௌலானா ஷரீஃப் யூசுஃபி ஹழ்ரத், மௌலானா சாதிக் யூசுஃபி ஹழ்ரத், மௌலானா முஹம்மது ஃபாளில் நாஃபிஈ, திருச்சி மௌலானா, நஸீர் மிஸ்பாஹி, மௌலவி அப்பாஸ் சுபூரி, மௌலானா, சதகத்துல்லாஹ் பாகவி, மௌலானா ஜியாவுர் ரஹ்மான் நூரானி, இன்னிசை வேந்தர் மௌலானா இஸ்மாயீல் சிராஜி, கள்ளக்குறிச்சி மௌலானா யாஸீன் ஃபைஜி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதன் வழியாக பயனடைகிற அனைவரின் பயனின் மூலமாக சிறந்த நற்கூலிகளை மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தின் உருவாக்கத்தில் தொடர் சேவையில் பங்களிப்பு செய்யும் அனைவருக்கும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

தமிழகத்தின் பல்வேறு ஆலிம்கள் இணைய வழியில் சேவையாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் vellimedaiplus blogspot யும் இணைத்தமைக்கு  அல்ஹம்துலில்லாஹ்!!!!

இணைய வழியாக சேவையாற்றும் ஆலிம்களின் பட்டியலை வெள்ளிமேடை மௌலவி சதக் மஸ்லஹி அவர்கள் தங்களது ப்ளாக்கில் பதிவு செய்துள்ளார்கள். அதில் 36 வது இடத்தில் இருக்கிறது நமது ப்ளாக்! அல்ஹம்துலில்லாஹ்...!!!

ssahamedbaqavi.blogspot.com
ulama.in
vellimedai.blogspot.com
www.adyaralim.com
usmanihalonline.blogspot.com
sadhak-maslahi.blogspot.com
www.maslahi.in
chittarkottaisunnathjamath.blogspot.com/
velliarangam.blogspot.com
vellimedainew.blogspot.com
pudukaiulama.blogspot.com
kadharmaslahi.blogspot.com
qaiyoombaqavi.blogspot.in
azeezbaqavi.blogspot.com
baqavi.wordpress.com
noushadbaqavi.blogspot.com
libas07.blogspot.com
lmt313.blogspot.com
chennaibaqavi.blogspot.com
nizamishahnoori-photos.blogspot.com
jamalinet.com
jamaligallery.com
ulamaa-pno.blogspot.com
kamalsiraji.blogspot.com
bavasiraji.blogspot.com
wwwkaniyuri.blogspot.com
pulmoddaihalithazeezi.blogspot.com
nifras786.blogspot.com
abbasriyazi.blogspot.in
khanbaqavi.blogspot.com
yousufsiddheeq.blogspot.com 
manbayee-alim.blogspot.com
faqrudeenbaqavi.blogspot.com
www.zubaisiraji.com
http://tableeghijamaathtamil.blogspot.com
vellimedaiplus.blogspot.com
shafiwahidhi.blogspot.com
http://dawoodiaalimkalsangamam.blogspot.com
http://warasathulanbiya.blogspot.com

நீங்களும் பேச்சாளராகலாம்!!!



என்னிடம் நிறைய ஆலிம்கள் பயானுக்கு குறிப்பு எப்படி எடுக்கின்றீர்கள் என்று கேட்கின்றார்கள். 

அந்த அடிப்படையில் இந்த தலைப்பில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மிகச்சிறந்த பணியைக் கையில் எடுத்திருக்கும் ஆலிம்களில் பலருக்கு   தாங்கள் சிறந்த பேச்சாளர்களாக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ஆனாலும்  பேச்சாளராக உருவாவதற்கு  பல விஷயங்கள் தடைக்கற்களாக இருப்பதை உணர முடிகின்றது.

இன்று மார்க்கப் பிரசங்கம் செய்யும் ஆலிம்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. ஆலிம் படிப்பை முழுவதுமாக படித்து முடித்தவர்கள் (அவர்கள் 7 வருட பாட திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு)

2. ஆலிம் படிப்பை முழுவதுமாக படித்து முடித்ததோடு (அவர்கள் 7 வருட பாட திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு) ஃபாளில், முஃப்தி, தவ்ரதுல் ஹதீஸ், துறை சார்ந்த M.phil  என்று மேற்கொண்டு சில ஸனதுகளைப் பெற்றவர்கள்.

3. ஆலிம் படிப்போடு   (அவர்கள் 5 வருட பாட திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு) உலகக் கல்வியையும் படித்தவர்கள்.

பயானுக்கு தேவையான குறிப்பும், பயானின் அமைப்பும்....

பொதுவாக ஆலிம்கள் மார்க்கப் பிரசங்கத்தை   இதழ்களில் வருகின்ற கட்டுரைகளின் மூலமோ அல்லது தங்களுக்குத் தேவையான தலைப்புகளை ஆடியோ, வீடியோவின் மூலம் பேச்சாளர்கள் பேசியவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டோ அல்லது  புத்தகங்களின் உதவியினாலோ, அரபு கிதாபுகளின் முதாலஆ  மூலமாகவோ தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் மார்க்கத்தை எடுத்துச் சொல்கிறார்கள்.

இந்த வகையில் நாம் எந்த காரணத்தைக் கொண்டும் பிறரோடு ஒப்பிட்டு அந்த ஆலிமைப் போல் பேச முடிய வில்லையே!? இந்த ஆலிமைப் போல் பேச முடியவில்லையே! என்று அங்கலாய்த்து கொள்ளக் கூடாது.

 

وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

 

انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ وَلاَ تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَهُوَ أَجْدَرُ أَنْ لاَ تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ  

عَلَيْكُمْ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். ( நூல்: முஸ்லிம் )

மாறாக, நாம் அதற்கென்று சில பிரத்யேக முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டாலே போதுமானதாகும்.

முதற்கட்டமாக நாம் நமது பேச்சாற்றல் மூலமாக இறை திருப்தியையும் மறுமைப் பேறுகளையும் ஆதரவு வைக்க வேண்டும். ஆசைப்பட வேண்டும். அத்தோடு முயற்சியும் செய்ய வேண்டும்.

وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.           (அல்குர்ஆன்: 17: 19 )

பேச்சுக்கலை...

பேச்சுக் கலை க்கு என தனி (டிகிரி) படிப்பே இன்று இருக்கிறது. 1928 -ஆம் ஆண்டு அமெரிக்காவில் 'டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நே ‌‌ஷனல்' என்ற அமைப்பு பொதுக் கூட்டங்களில் தன்னம்பிக் கையுடன் பேசுவதற்கும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும் தொடங்கப் பட்டது. 

உலகமெங்கும் 143 நாடுகளில் மொத்தம் 357,000 உறுப்பினர்கள் அந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.

இதற்கான பாடத்திட்டம் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 2020 ம் ஆண்டு முழுமையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு  இன்று தனிப் படிப்பாக கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.

பேச்சாற்றல் என்பதும்... 

சொற்பொழிவு என்பதும்....

பயான் - சொற்பொழிவு என்பது  ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ஸ்டைலில் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன், உரத்த சப்தத்துடன் சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆக்ரோஷமாகவும், அதே வேளையில்  கருத்தாழத்துடனும் இருப்பது அவசியமாகும்..

மக்களுக்குப் புரிகின்ற நடைமுறைத் தமிழில் பேசுவதோடு தேவையேற்படும் இடங்களில் இலக்கணத் தமிழில் பேசுவதையும் கடை பிடிக்க வேண்டும்.

பயானின் ஊடாக நகைச்சுவையையும் சிறிது கலந்து  தலைப்புக்குச் சம்பந்தமான குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை வடிவமைத்து  சொந்த கருத்துக்கள்  அதிகமில்லாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். 

இவையனைத்துமே ஒருவரது பயானில்  கலவையாக அமைந்திருந்தால் அவர் சிறந்த பேச்சாளரே! இப்படிப்பட்ட பேச்சாளர் ஒருவரால் மட்டுமே மிகவும் எளிமையாக மக்களிடையே மார்க்கத்தின் ஆழமான கொள்கைகளைக் கூட கொண்டு போய் சேர்த்து விட முடியும். இவ்வாறு பேச்சாற்றல் வழங்கப்பட்டவர்கள்  சிலரே!

அழகிய முன்னுரை, கருத்தாழம் நிறைந்த நடுப்பகுதி, ஆக்ரோஷமான முடிவுரை....

5 நிமிட பயானில் துவங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேற்பட்ட நிமிடங்கள் வரை பேசுகிற எந்த ஒரு பயானாக இருந்தாலும் சரி அந்த பயானில் முன்னுரை, நடுப்பகுதி, முடிவுரை என்று இம் மூன்றும் அமைந்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

முன்னுரை என்பது பயானின் நோக்கத்தையும்  முடிவுரை என்பது இதுவரை பேசிய செய்திகளை நினைவூட்டி மக்களை செயல்படவும் தூண்டும்! 

பயானின் நடுப்பகுதி நாம் சொல்ல வேண்டிய அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

எளிதாக புரியவைப்பதற்காகவும், நினைவில் வைப்பதற்காகவும் நடுப்பகுதியை ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாக, உள்தலைப்புகளைக் கொண்டதாக பிரித்துக் கொள்வது சிறந்ததாகும். 

ஒவ்வொரு பகுதியிலும் ஓரிரு குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், வரலாற்று நிகழ்வுகள் அதன் விளக்கங்கள் மற்றும் சமகால உதாரணங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் ஒரு நல்ல பயானை தருவதற்கு மிகச் சிறந்த ஒரு முன்னுரை - முகத்திமா மிக மிக அவசியமாகும்.

ஆரம்பத்திலேயே மக்களின் கவனத்தை தன்வசப்படுத்தி  செய்தியை சொல்வதற்கு, பேச்சுக்கலையில், கவனம்திருப்பி (Attention Grabber) என்று சொல்லப்படும். 

இதன் மூலம், அந்த உரையில் நல்ல தகவல்கள் இருக்கும் என்ற எண்ணம் மக்களின் மனங்களில் ஏற்படும்.

பெருமானார் ஸல் அவர்கள் தமது உரையில் "உங்களுக்கு நான் ஒன்றை அறிவித்துத் தரட்டுமா?", " ஒருவனின் மூக்கு மண்ணாகட்டும்!", "அல்லாஹ்வின்  மீது சத்தியமாக! இவன் முஃமினே கிடையாது!", "மூன்று விஷயங்கள் இருக்கிறது ", "மூன்று பண்புகள் உள்ளன", "மூன்று மனிதர்கள்" என்று கூறுவார்கள்.

இப்படி ஆரம்பமாகவே நபித்தோழர்களின் கவனத்தை தம் பக்கம் திருப்பி விட்டு நபித்தோழர்களுக்கு அந்த விஷயத்தை கூறுவார்கள்.

 

எனவே, உரையின் ஆரம்பத்தில் முக்கியமான தகவல்களை உள்ளடக்கிய அறிவியல் உண்மைகள், சமகால புள்ளிவிபரங்கள், அறிஞர்களின் கூற்று ஆகியவைகளைக் கூறி மக்களை தம்  பக்கம் திருப்ப வேண்டும்.

அதே போன்று நடுப்பகுதியில் தேவையான இடங்களில் அரபி வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

குர்ஆனுடைய வசனமும் மாநபி (ஸல்) அவர்களின் வார்த்தையும் ஈடில்லாத வகையில் மக்களை ஈர்க்கும் தன்மை உடையது. 

ஆகவே,  சம்பவங்களை கூறும் போது இடையிடையே அரபியில் கூற வேண்டும். இதுவே கேட்பதற்கு சுவையாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கும். மேலும், மார்க்க விஷயங்களை நன்கு அறிந்த தகுதியான ஆலிமிடமிருந்தே நமக்கான வாழ்வியலை கேட்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். மேலும், பயானை ஆர்வத்தோடு கேட்கவும் தூண்டும்.

முகத்திமா - முன்னுரை எப்படி முக்கியமானதோ அதே அளவுக்கு பயானின் முடிவுரையும் முக்கியமானதே!

முன்னுரையிலும், நடுப்பகுதியிலும் அருமையான கருத்துக்களை சொல்லிவிட்டு முடிவின் போது ஏனோ தானோ வென்று எதையெதையோ பேசி  உரையை முடித்தால், அந்த உரை தேவையான தாக்கத்தை ஏற்படுத்தாது. 

எனவே, முடிவுரையையும் மக்களை கவரும் வகையில் அமைப்பது கட்டாயமாகும்.

இதுவரை பேசியதைத் தழுவி   மையக்கருத்தை  வழியுறுத்தி  ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஒரு செய்தியையோ, ஒரு ஹதீஸையோ ஆக்ரோஷமாக சொல்லி, உற்சாகமாக உரையை முடிக்கவேண்டும். அல்லது, இதுவரை பேசியதைத் தழுவி  

இனி மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை கோடிட்டு காட்டும் தீர்வுகளை அடையாளப்படுத்தி  மக்களை செயல்படத் தூண்டும்  வகையில் சுறுசுறுப்பாக பேசி முடிக்க வேண்டும்.

நிற்க..

முதலில்....பேச்சாளராக வேண்டும் என்று விரும்புபவர்கள் நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். அன்றாட அரசியல் நிகழ்வுகளை உற்று கவனிக்க வேண்டும். சிறந்த பேச்சாளர்களின் பேச்சுகளைக் கேட்க வேண்டும் முதாலஆ செய்ய வேண்டும். குறிப்பெடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அழகியதோர் பயானுக்கு என்ன தேவை?..

பயான் செய்ய வேண்டும் எனில் தலைப்பு அவசியம். அந்த தலைப்பின் கீழ் சிறந்த முறையில் உரையாற்ற ஐந்து விஷயங்கள் தேவை.

1. குறிப்பெடுத்தல்.

2. திட்டமிடுதல்

3. அதற்காக பயிற்சி எடுத்தல்.

4. இடம் பொருள் அறிந்து பேசுதல்.

5. மக்களின் மனம் அறிந்து பேசுதல்.

 

முதலில் தலைப்பை முடிவு செய்ய வேண்டும் பின்னர், தலைப்பின் கீழ் என்னென்ன பேசவேண்டும்? எவ்வளவு நேரம் பேச வேண்டும்? என்பதை முடிவு செய்து விட வேண்டும். பிறகு குறிப்பெடுக்க ஆயத்தமாக வேண்டும்.

 1. குறிப்பெடுத்தல்.

மனதில் இருப்பதைக் கொண்டு ஒப்பேற்றிவிடலாம், ஞாபகத்தில் வருவதைக் கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மாபெரும் தவறாகும்.

போதுமான நேரத்தை ஒதுக்கி பயானுக்காக குறிப்புகளை எடுத்துப் பேசுவது தான் சரியானதாகும். அதிக அனுபவமுள்ள பேச்சாளர்கள் கூட, பெரும்பாலான நேரங்களில் பயானுக்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குறிப்புகளை எடுத்து, நினைவில் நிறுத்தி தான் பேசுகின்றனர், 

குறிப்புகளை எடுக்க கீழ்காணும் வழிமுறைகளை கையாளலாம்.

1. தலைப்பு சம காலம் தொடர்பானதாக, Hot topic ஆக இருந்தால் இன்றைய, நேற்றைய நாட்டு நடப்புகளை, செய்திகளை, அறிவியல் கூற்றுகளை, விஞ்ஞான ஆய்வுகளை பார்வையிட்டு. தலைப்பிற்கு சம்பந்தமான செய்திகளை சேகரித்துக் கொள்வது.

2. பிறகு குர்ஆன் வசனம், அதன் தப்ஸீர் - விரிவுரை,  ஹதீஸ் அதன் விளக்கம் போன்றவற்றை ஆதாரபூர்வமான  நூல்களில் இருந்து  தலைப்பிற்குத் தேவையான  செய்திகளை  குறித்துக்கொள்வது.

3. பிறகு அதற்குத் தோதுவான சரியான, ஆதாரப்பூர்வமான நிகழ்வுகளை (முன்வாழ்ந்த நபிமார்கள் - அவர்களின் சமூக மக்கள், நபித்தோழர்கள், தாபிஈன்கள், ஸலஃபுகள் இமாம்கள், இறைநேசர்கள் ஆகியோரின்) வரலாறுகளை குறித்துக் கொள்வது.

4. பிறகு, இதே தலைப்பில் இன்ன பிற அறிஞர்கள், பேச்சாளர்கள் பேசிய வீடியோக்களை ஓடவிட்டு,  தேவையெனில் ஓரிரு குறிப்புகளை எடுத்துக்கொண்டு, அவர்களின் ஒப்பு நோக்கை கவனித்து,  மிகமிக முக்கியமாக, அவர்கள் கூறும் தத்துவங்களை குறித்துக்கொள்வது. 

5. பிறகு, இணைய தளத்தில் (கூகுளில்) அந்த தலைப்பை டைப்செய்து, அதில் இடம் பெரும் கட்டுரைகளில் இருந்தும் தேவையானதை எடுத்து ஆதாரப்பூர்வமானதா என சரிபார்த்து, அதிலிருந்தும் குறிப்புகளை எடுத்துக்கொள்வது.

6. சேகரித்த அனைத்து குறிப்புகளையும், செய்திகளையும் ஒன்றினைத்து கோர்வை செய்வது.

2. திட்டமிடுதல்.

1. கோர்வை செய்த குறிப்புகள் அனைத்தையும் மீளாய்வு செய்து எவ்வளவு நேரம் பேசப்போகிறோம் என்பதற்கு தக்கவாறு சில குறிப்புகளை நீக்கியும், சில குறிப்புகளை கூடுதலாக இணைத்தும் மீண்டும் ஒரு முறை குறிப்புகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

 

2. எந்தெந்த விஷயங்களை, செய்திகளை எங்கே கூற வேண்டும்?. குர்ஆன் வசனத்தை ஹதீஸை எங்கே சொல்ல வேண்டும்? எப்படி கூற வேண்டும் என்பதை ஆர்டராக - வரிசைப்படுத்த வேண்டும்.

3. ஏற்ற இறக்கங்கள், நகைச்சுவை, ஆக்ரோஷமாக பேச வேண்டிய அனைத்தையும் மனக் கண்ணில் கொண்டு வர வேண்டும்.

4. முக பாவனைகள், உடல் அசைவுகள், கை சைகைகள் என அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும்.

5. தேவையில்லை என்று கருதும் நாம் நீக்கிய குறிப்புகளை சேகரித்துக் கொள்ள வேண்டும். அது இதே தலைப்பில் இன்னொரு முறை பேசுவதற்கு உதவும்.

3. பயிற்சி எடுத்தல்.

1. திட்டமிட்டடு தயார் செய்த இந்த குறிப்பை அப்படியே ஒரு முறை நாம் எப்படி பேச நினைத்திருக்கின்றோமோ அப்படி பேசி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும்.

1. அந்தந்த பகுதி மக்களின் பேச்சு, பழக்க வழக்கங்களைத் தெரிந்து கலாச்சாரங்களைப் புரிந்து அந்த அடிப்படையில் பேச வேண்டும்.

2. பயான் நடைபெறுகிற மஜ்லிஸ் - சபையின் சூழ்நிலை அறிந்தும் பேச வேண்டும்.

5. மக்களின் மனம் அறிந்து பேச வேண்டும்..

1. திருமண நிகழ்வு நடைபெறும் சபைகள், ஜனாஸா தொழுகைக்கு காத்திருக்கும் இரங்கல் சபைகள், பெண்கள் நிறைய கலந்திருக்கும் சபைகள், பேரணி, கண்டன ஆர்ப்பாட்ட களங்கள், மதரஸா மாணவர்கள், கல்லூரி பள்ளி மாணவர்கள் அமர்ந்திருக்கும் சபைகள், சமய நல்லிணக்க கூட்டங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் என நாம் பங்கு பெறும் சபைகளைப் பொறுத்து எதிரில் கேட்பாளர்களாக அமர்ந்திருப்பவர்களின் எண்ணவோட்டங்களை அறிந்து பேச வேண்டும்.

2. நாம் நினைத்ததை எல்லாம் குறிப்பு எடுத்துக் கொண்டு போனதை எல்லாம் இது போன்ற சபைகளில் கட்டாயம் பேசக் கூடாது.

மேற்கூறிய இந்த அம்சங்கள் அனைத்தும் நம்மிடையே இருக்கும் பட்சத்தில் தவிர்க்க முடியாத பேச்சாளராக நாம் மாறி விடுவோம்.

நிறைவாக...

கற்ற கல்வியை மறைத்தல் என்பது பெரும்பாவம் என்று மாநபி ஸல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني مالك عن ابن شهاب عن الأعرج عن أبي هريرة قال إن الناس يقولون أكثر أبو هريرة ولولا آيتان في كتاب الله ما حدثت حديثا ثم يتلو إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى إلى قوله الرحيم

அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்: நான் அதிக ஹதீஸ்களைக் கூறுவதாக மக்கள் சொல்லுகின்றார்கள். குர்ஆனின் இரண்டு ஆயத்துகள் மட்டும் இருந்திருக்காவிட்டால், நான் இவ்வளவு ஹதீஸ்களை அறிவித்திருக்க மாட்டேன்என்று கூறி அல்பகறாவில் 159, 160ஆம் வசனங்களைக் கூறினார்கள் அபூஹுரைரா ரலி அவர்கள்.

தங்களிடம்  மார்கத்தைக் குறித்து பிறர் கேட்காவிட்டால் அதற்காக ஸஹாபாக்கள் அழுதிருக்கின்றனர் என்கிறது வரலாறு. 

ஓர் ஊரில் தீனைக் குறித்த விஷயங்களை எவரும் கேட்காவிட்டால் அந்த ஊரைவிட்டே ஸஹாபாக்கள் சென்றிருக்கின்றனர் என்று குறிப்பிடுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். 

இவைகள் எல்லாம் எதைக் குறிக்கிறது? தான் கற்றதைப் பிறருக்குத் தெரிவிக்காமல் இருப்பது பாவம் என்று அவர்கள் எண்ணியதைத்தானே…! 

இதுதான் ஒவ்வொரு ஆலிமுக்குமான பாடம்….!  நான் வாழும் பூமியில் இறைவனின் தீனை பாதுகாக்க,  நிலை நாட்ட நான் என்ன பங்களிப்பு செய்துள்ளேன்…? 

கோடான கோடி முஸ்லிம்களில் நம்மை மட்டும் ஏன் அல்லாஹ் ஆலிமாக்கினான்? நம் பணி என்ன? பத்தோடு பதினொன்று, அத்தோடு நானும் ஒன்றுதானா…? அல்லது என்னிடமிருந்து இறைவன் எதையாவது எதிர்பார்க்கின்றானா…? என்று யோசித்து நம் சேவைகளை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மக்கள் நேர்வழியில் சென்றிட நம் பேச்சாற்றலை ஒரு கருவியாக பயன்படுத்தும் பேற்றை தந்தருள்வானாக!

5 comments:

  1. மிக்க அருமை அருமை

    ReplyDelete
  2. எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்கள் கல்வி ஞானத்தில் மேன்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்......

    ReplyDelete