Thursday 10 November 2022

ஹாலோவீன் தின கொண்டாட்டங்களும்… மாறி வரும் சவூதியின் நிலையும்…

                                  ஹாலோவீன் தின கொண்டாட்டங்களும்

மாறி வரும் சவூதியின் நிலையும்…


ஹாலோவீன் தினம் எனும் பெயரால் சர்வதேச அளவில் கடந்த வாரம் நடைபெற்ற கொண்டாட்டங்களில் இரண்டு நிகழ்வுகள் முக்கியத்துவமும் கவனத்தையும் பெற்றிருக்கின்றன.

ஒன்று:- சியோலில் நடைபெற்ற  போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தென் கொரியத் தலைநகர் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. 

குறுகிய தெருக்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெருக்களில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், 270 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ( ஆதாரம்: தமிழ் திசை இந்து வலைதள நாளிதழ், 30/10/2022 )

மற்றொன்று:- சவூதியில் ஹாலோவீன் கொண்டாட்டம் தலைநகர் ரியாத்தில் boulevard இல் வியாழன் மற்றும் வெள்ளியன்று நடந்த "ஸ்கேரி வீக்கெண்ட்" சீசன் இல்  இடம் பெற்றன.

பார்வையாளர்கள் பயமுறுத்தும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ரியாத் boulevard இதற்கு இலவச நுழைவு வழங்கப்பட்டது.

சவூதியில் ஹாலோவீன் கொண்டாடுவதும், இது போன்ற கொண்டாட்டங்கள் நடைபெறுவது இதுவே முதல் முறை என பலர் சொன்னாலும் இதேபோன்ற நிகழ்வு இந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் Boulevard Riyadh City மற்றும் Winter Wonderland ஆகிய இடங்களில் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. இது முஸ்லிம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

கடந்த ஆண்டு 2021 டிசம்பரில் இதே சவூதியின் தலைநகர் ரியாத்தில்  2021 வரு­டத்தை வழி­ய­னுப்பும் நோக்­கிலும் 2022 ஐ வர­வேற்கும் வகை­யிலும் எம்டிஎல் பீஸ்ட் சவுண்ட்ஸ்டிராம் என்ற பெயரில் மின்னணு இசை நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெற்றது.  இதில் உலகின் பிரபல இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். 

இதில் சவூதியின் இந்த கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இஸ்லாமியப் பார்வையில் சரி தானா? என்று பார்க்கும் முன்பாக ஹாலோவின் வரலாறு குறித்து சுறுக்கமாக நாம் ஒரு பார்வை பார்த்து விடுவோம்.

வரலாற்றுப் பின்னணி...

இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நூற்றுண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த ஹாலோவீன் பண்டிகை அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ஜப்பான், கொரியா ஆகிய பல உலக நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.

கிறிஸ்தவ மதத்தில் ரோம கத்தோலிக்க கிறித்தவர்களால் புனிதர்களாகக் கருதப்படுபவர்களுக்காக இந்த தினத்தை கொண்டாட்ட தினமாக அக்டோபர் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

இந்த தினத்தை ஒட்டி கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஹாலோஸ் ஈவ் என்ற இந்த கொண்டாட்டம் ஹாலோவீன் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அறுவடை நாளை எப்படி பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடப் படுகிறதோ அதேபோல், துவக்க கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் அறுவடை நாளையும், வெயில் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்குவதை குறிக்கும் வகையிலும் ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் நாளடைவில் பேய்களுக்கான திருவிழாவாக மாற்றப் பட்டு விட்டது. 

தொடக்கத்தில் ஹாலோவின் நாளன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது மட்டுமே மக்களின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், பின்னர் அது பேய் வேடமிட்டு கொண்டாடும் நாளாக மாறிவிட்டது. உலகமயமாக்கலுக்கு பின் தற்போது இது மிகப்பெரிய வர்த்தகமாகவும் மாறிவிட்டது.

உலகின் பல நாடுகளில் அன்று விடுமுறை விடப்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் மக்களுக்கு வர்த்தகம் செய்கின்றன. மேலும், பார்ட்டி, கேளிக்கை என அந்த நாள் செலிபிரிட்டி நாளாக தற்போது மாறியிருக்கின்றது.

என்ன செய்கிறார்கள் மக்கள்?

இந்த நாளில் மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் இந்த ஹாலோவின் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் ஹாலோவின் பார்ட்டிகள் நடைபெறும். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் பேய்கள், ஆவிகள், அமானுஷ்யங்கள், சினிமாக்கள், கார்ட்டூன்களில் பார்த்த பயமுறுத்தும் உருவாங்களைபோல் வேடமிட்டு கலந்துகொள்வார்கள்.

ஹாலோவீன் பார்ட்டிகளில் கலந்துகொள்பவர்களை பயமுறுத்தும் வகையில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்வார்கள்.

குறிப்பாக நெஞ்சை பதற வைக்கும் பேய் படங்களை போடுவது, அதிர்ச்சியளிக்கும் சில உருவங்களை காட்டி பயமுறுத்துவது, பேய் இசையை ஒலிப்பது, பிராங்க் செய்வது என பல விசயங்களை காட்டிய பயமுறுத்துவார்கள். இப்படி திகிலோடும், கொண்டாட்டத்தோடும் ஹாலோவீன் பண்டிகை மேற்கத்திய நாடுகளில் கழிகிறது.                              ( ஆதாரம்: onindiatamil.com 30/10/2022 )

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற சவூதி மக்களின் மனோநிலை...

கடந்த ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

4 நாட்கள் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் திரண்டனர் என்று  சவூ­தியின் பொது பொழு­து­போக்கு அதி­கார சபையின் தலைவர் துர்கி அல் ஷெய்க் தெரி­வித்­துள்ளார்.. 

இவ்­வா­றான ஒரு நிகழ்வு இதற்கு முன்னர் ரியாதில் நடை­பெ­ற­வில்லை. மிகப் பெரிய மக்கள் திரள்,, இசை, வி.ஐ.பி. அறைகள், வழக்­கத்­துக்கு மாற்­ற­மான ஆடைகள் என அனைத்­துமே புதிய அனு­பவம் என இந் நிகழ்வில் பங்­கேற்ற சவூதி பெண் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேனலுக்குத் தெரி­வித்­துள்ளார். ( விடிவெள்ளி.காம், 27/10/21, AST News.com  22/12/21, )

மேற்கத்திய உடைகளை அணிந்து கொண்டு பெண்கள் ரேவ் பார்ட்டியில் இசைக்கேற்ப நடனம் ஆடினர். அது போல் ஆண்களும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு பார்ட்டியில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரச குடும்பத்தை சேர்ந்தவரும் ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்டவருமான இளவரசர் ஃபஹாத் அல் சவுத் கூறுகையில் உலக நாடுகளுடன் ஒற்று போக விரும்புகிறோம். 

இந்த 4 நாட்களில் தொழுகை நேரம் தவிர ரேவ் பார்ட்டி நடந்து கொண்டே இருந்தது. தொழுகை நேரத்தின் போது 15 நிமிடங்கள் அனைவரும் அமைதியாக பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு பார்ட்டிகளில் மகிழ்ந்தனர். (Oneindiatamil.com 21/12/21)

"இரு புனிதத் தலங்­களைக் கொண்­டுள்ள இந்த தேசத்தில் இவ்­வா­றான நிகழ்வுகள் நடப்பது எந்தளவு சாத்தியம்என

எதிர்ப்புகளும், அதிருப்தியான விமர்சனங்கள் எழுந்த போதிலும் பெரும்பாலான மக்கள் இதை வரவேற்றது தான் ஆச்சரியம் தந்தது.

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சவூதி மக்களின் மனோநிலை...

இந்த கொண்டாட்டங்களில் ஆண்கள் பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பயமுறுத்தும் வேடமணிந்து கலந்து கொண்டனர்.

அப்துல்ரஹ்மான் என்ற பங்கேற்பாளர்:- "இது ஒரு பெரிய கொண்டாட்டம், மகிழ்ச்சியாக உள்ளது இருக்கிறது... ஹராம் அல்லது ஹலால் அடிப்படையில், எனக்கு அதைப் பற்றி தெரியாது. நான் அதை வேடிக்கைக்காக மட்டுமே கொண்டாடுகிறேன், இதில் வேறு எதுவும் இல்லை. மேலும், நான் எதையும் நம்பவில்லைஎன்று அவர் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கலீத் அல்ஹர்பி என்ற பங்கேற்பாளர்:- "செயல்கள் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. நான் வேடிக்கை பார்க்க இங்கு வந்துள்ளேன்" என  கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் இந்த நிகழ்வை "பாதிப்பில்லாத பொழுதுபோக்கு" என்றும் கூறினர். ( யாழ்.காம் 30/10/2022 )

கலந்து கொண்ட மக்களில் பெரும்பாலனவர்கள்:- "பொழுதுபோக்குக்காக வேடிக்கைக்காக பங்கு பெற்றோம். பேய் பிசாசு பற்றிய நம்பிக்கையெல்லாம் இல்லை" என்று.

சவூதியின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

சவூதி அரேபியா இரண்டு விசயங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று, அதன் எண்ணெய் வளப் பொருளாதாரம். மற்றொன்று, அங்கு நிலவும் மதரீதியிலான கட்டுப்பாடுகள். தற்போது அவை இரண்டும் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன.

ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் சவூதியின் முகம் மாறிவருகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது; ஆண் துணையின்றி விடுதிகளில் பெண்கள் தங்கலாம்; ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லலாம்; பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு மாற்றங்களை சவூதி அரேபியா கொண்டு வந்தது? என்றால் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் சவூதியின் பட்டத்து இளவரசராக 35 வயதே ஆகும் முகம்மது பின் சல்மான் அறிவிக்கப்பட்டு அரியணை ஏறிய பின்னர் தான்.

முஹம்மது பின் சல்மானை சல்மான் அரியணை ஏற்ற காரணம்...

மற்ற மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே, சவூதி அரேபியா மிகப்பெரியளவில் இளைஞர் பட்டாளத்தை கொண்டிருக்கிற நாடாகும். அந்நாட்டில் உள்ள 32 மில்லியன் மக்களில் பெரும்பாலோனோர் 30 வயதுக்குட்பட்டோராவர்.

மக்கள்தொகையில் பெரும்பான்மையான இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களின் திருப்தியை பெறவும் தனது இளைய மகனான 32 வயது முகமது பின் சல்மானை இளவரசராக்கினார் சவூதி அரசர் சல்மான். எனவே, இளைஞர்களை கவரக்கூடிய திட்டங்களை வடிவமைத்து ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்தி வருகிறார்.

கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளின் நட்பையும் ராஜீய உறவையும் அனுபவித்து வருகிற சவூதிக்கு அவர்களை மகிழ்வூட்ட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்து வருவதை மறுக்க முடியாது. ஆகவே தான்  இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு தாராளமாக மேற்கத்திய கலாச்சாரத்தின் வாசலை திறந்து விட்டு அவர்களை திருப்திபடுத்த முனைந்துள்ளார் தற்போதைய அரசர் முஹம்மது பின் சல்மான்.

ஆகவே, முகம்மது பின் சல்மான் விசன் 2030’ என்ற திட்டத்தின் கீழ் சவூதியின் பொருளாதாரக் கட்டமைப்பையும், சமூகக் கட்டமைப்பையும் மேம்படுத்தும் முற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் பொருட்டு மார்க்க வரையறைகளையும் அங்கு நிலவும் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வருவதாகவும் மேற்குலகின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றார்கள்.

20-ம் நூற்றாண்டில் சவூதியை ஆண்ட ராஜ வம்சமானது ஆட்சிக்கு இரண்டு மூல ஆதாரங்களையே நம்பியிருந்தது. குவிந்துகிடக்கும் எண்ணெய் வளம் முதல் ஆதாரம். மார்க்க அறிஞர்களுடனான முறைசாரா ஒப்பந்தம் இரண்டாவது ஆதாரமாக இருந்தது.

ஆனால், இப்போது 21-ம் நூற்றாண்டில் அரசை நடத்துவதற்கான செலவையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எண்ணெய் வளத்தை மட்டும் சவூதி நம்பமுடியாது. ஏனெனில், தற்போது உலகு எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது.

மேலும், அரச குடும்பத்தில் புதிய தலைவர்களுடன் முன்பு போல் மார்க்க அறிஞர்கள் போதிய செல்வாக்கு செலுத்த இயலவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.

கொண்டாட்டங்கள் எனும் பெயரால்…

மார்க்கத்திற்கு எதிரான சிந்தனை ஒன்றோ அல்லது செயலோ புதிதாக இந்த சமூகத்தில் நுழையும் என்றால் அந்த சிந்தனையை எதிர் கொள்கிற விஷயத்தில் நம்முடைய ஈமான் ஹழ்ரத் அபூபக்ர் ரலி அவர்களின் ஈமானைப் போன்று இயங்க வேண்டும்.

மார்கத்திற்கு எதிரான அந்த சிந்தனை அல்லது செயல் இஸ்லாமிய அடிப்படையான அகீதாவில் - கொள்கையில் குழப்பம் ஏற்படுத்தி சமூகத்தின் கட்டமைப்பையே தகர்க்கும் என்றால், இறைநம்பிக்கையை சிதைக்கும் என்றால் அப்போது அபூபக்ர் (ரலி ) அவர்களின் இந்த ஈமானிய நிலையை நாம் கையில் எடுக்க வேண்டும்.

ஆம்! அபூபக்ர் ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த துவக்க நாட்களில் சமுதாயத்தில் சிலர் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு சிந்தனையை ஏற்படுத்தினர். 

ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ச்சியும், புரட்சியும் செய்து கொண்டிருந்தார்கள் சிலர். இன்னொரு புறம் பொய்யான தூதுவர்களின் பின்னால் முர்தத்தாக மாறிக் கொண்டிருந்தனர் சிலர்.

இந்தக் கட்டத்தில் அமீருல் முஃமினீன்  அபூபக்ர் (ரலி) அவர்களின்  வாயிலிருந்து வந்த ஈமானிய வார்த்தை..

"أينقص وأنا حي؟ 

 "நான் உயிருடன் இருக்கும் போது சத்திய சன்மார்க்த்தில் குறைவு ஏற்பட விட்டு விடுவேனா?"

"والله لأقاتلنَّ من فرق بين الصلاة والزكاة، فإن الزكاة حق المال، والله لو منعوني عناقًا كانوا يؤدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها".

எவர் தொழுகைக்கும், ஜகாத்துக்கும் மத்தியில் பிரிவை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களுக்கு எதிராக நான் போரிடுவேன்! மேலும், நபி {ஸல்} அவர்கள் உயிர் வாழும் காலத்தில் கொடுத்து வந்த ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறளவு  ஜகாத்தை தர மறுத்தாலும் அந்தக் கயவர்களை  எதிர்த்துப் போர் செய்யத் தயங்க மாட்டேன் ” என்று துணிச்சலாக பேசினார்கள்.

இது போன்றே நாம் வாழும் காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அசைத்துப் பார்க்கிற, பிற சமூக மக்களின் கொள்கையோடு ஒத்துப் போகிற சிந்தனைகளுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி நாம் துணிவோடு களம் காண வேண்டும்.

கொண்டாட்டங்களுக்கு இஸ்லாம் தடை விதிக்கிறதா?..

இஸ்லாத்தில் கொண்டாடி மகிழ்ந்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு இரண்டு பெருநாட்களைத் தவிர வேறு எதுவுமில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக அறிவித்து இருக்கின்றார்கள்.

மதீனாவாசிகள் அறியாமைக் காலத்தில் அவர்களாக பெருநாட்களை உருவாக்கி கொண்டாடி வந்தனர். இதை விட்டுவிட்டு அல்லாஹ் கற்றுக்கொடுத்த நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள்.  (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.  அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள்.  அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் )

ஹாலோவீன் கொண்டாட்டத்திற்கு மூலக் காரணியாக கிரிஸ்தவர்களின் இணைவைப்புக்கொள்கையே காரணமாக உள்ளது. எனவே ஹாலோவீன் கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்ப நாம் நடக்கக்கூடாது.

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ 

 مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “(மாற்று)  சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) | நூல் : அபூதாவுத் (3512)

யூதர்களையும் கிரிஸ்தவர்களையும் பின்பற்றுவது குறித்து நபி {ஸல்} அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

 

عن أبي سعيدٍ الخدري -رضي الله عنه- أنَّ رسول الله -صلى الله عليه وسلم- قال: "لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا يا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قالَ: فَمَنْ"،

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி {ஸல்} அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். ( அல்குர்ஆன்: 25: 72 )

  4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» رواه الترمذ

எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனேஎன நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் கூறினார்கள் (திர்மதி).

இவ்வளவு கடுமையான எச்சரிக்கை இருந்தும் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?

பேய் இருப்பது உண்மையாக இருக்குமோ?

பேய் பிசாசு போன்ற அமானுஷ்யங்களை பார்த்ததாக கூறும் போது பெரும்பாலான மனிதர்கள் கூறுவது என்னவென்றால்; நான் ஒரு வெள்ளை உருவத்தைப் பார்த்தேன், ஒரு கருப்பு உருவத்தைப் பார்த்தேன், வெள்ளை சேலைக் கட்டிய பெண்ணைப் பார்த்தேன், வெள்ளையாக ஆடை உடுத்திய பெண்ணைப் பார்த்தேன், புகையைப் போன்ற ஒன்று கடந்து செல்வதைப் பார்த்தேன், நெருப்பு பந்தைப் பார்த்தேன், இவ்வாறான பல அனுபவங்களைப் பற்றி கூறுவார்கள். 

இந்தியர்களை பொறுத்தவரையில் பேய்கள் என்பவை வெள்ளை ஆடையோ, புடவையோ கட்டிக்கொண்டு, காற்றில் மிதந்து கால்கள் இல்லாமல் அலையும் ஒரு அமானுஷ்யம். சீன நாட்டவர்களின் நம்பிக்கைகள் எவ்வாறு இருக்கிறது என்றால். சிவப்பு வர்ணம், அல்லது கருப்பு வண்ண ஆடைகளுடன் பேய்கள் உலாவும் என்று நம்புகிறார்கள். சில சீனர்கள் பேய்களால் நடக்க முடியாது, அவை குதித்து குதித்துத் தான் வரும் என்று நம்புகிறார்கள்.

 

மலாய்க்காரர்களோ பேய்கள் என்பவை, வெள்ளை நிற ஆடை உடுத்தியிருக்கும். சில பெண் பேய்கள் கையில் குழந்தை வைத்திருக்கும். சில பேய்கள் தலையில்லாமல் இருக்கும். சில பேய்கள் சிறு குழந்தைகள் போன்று இருக்கும். இவ்வாறான பல பேய்களை அவர்கள் நம்புகிறார்கள்.

ஆங்கிலேயர்களும் பேய் என்பது வெள்ளை ஆடை உடுத்தி இருக்கும். திருமணத்திற்கு போடக்கூடிய கவுன் போன்ற ஒரு ஆடையுடன் வலம்வரும் அல்லது வெள்ளை கோட்டு சூட்டுடன் வரும் என்று நம்புகிறார்கள்.

இங்கே ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை. புடவை கட்டிய ஒரு பெண் பேயை ஏன் ஆங்கிலேயர்கள் பார்ப்பதில்லை? ஏன் சீனர்கள் பார்ப்பதில்லை? அதைப் போலவே குதித்து குதித்து வரும் சீன பேயை ஏன் இந்தியர்கள் பார்ப்பதில்லை? ஆங்கிலேயர்கள் ஏன் பார்ப்பதில்லை? மலாய்க்காரர்கள் பார்க்கும் பேய்கள் ஏன் மற்ற இனத்தவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை?

உண்மையைச் சொல்வதானால், ஒரு இனத்தவர் பேயின் உருவம் என்று நம்பிக்கொண்டிருக்கும் உருவத்தை, மற்ற இனத்தை சேர்ந்த எவரும் பார்ப்பதில்லை. பார்த்ததாக யாரும் கூறுவதுமில்லை.

ஒரு இனத்தில் எவற்றை பேய்களின் உருவம் என்று அதன் மக்கள் நம்புகிறார்களோ, அந்த உருவத்தில் மட்டுமே பேய்களை; அந்த மக்கள் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் 95% பேய்கள் என்பவை மனிதர்கள் தாங்களாகவே கற்பனை செய்து கொண்ட உருவங்கள் மட்டுமே.

பேய்களைப் பற்றி ஒருவருடைய மனதில் என்னென்ன நம்பிக்கைகள் இருக்கின்றனவோ; எவற்றை பேய்களின் உருவம் என்று அவர் நம்புகிறாரோ; அவருடைய மனமானது கற்பனையில் அந்த உருவங்களை உருவாக்கி அவரிடமே காட்டுகிறது.

பேய்களை பார்த்ததாக சொல்பவர்களில் 95% மக்கள் உண்மையில் பார்த்தது என்னவென்றால்; அவர்களுடைய மனமானது உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்களை மட்டுமே.

பேய் பிடித்தல் - மருத்துவ உலகின் பார்வை

'பேய் பிடித்தல்' என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்கள் கிட்டத்தட்ட இருக்கவே முடியாது. இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்கள், மத தலங்களில் இதை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் செயல்கள் வாயிலாக மட்டுமின்றி திரைப்படங்களிலும் இதுகுறித்த காட்சிகள் இடம்பெறுவதுண்டு.

பொதுவாக, இறந்த ஒருவரின் ஆவி, உயிருடன் உள்ள மற்றொருவரின் உடலில் புகுந்து அவரை ஆட்டுவிக்கும் நிகழ்வே பேய் பிடித்தல் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பேய் பிடித்ததாக கூறப்படுபவர்கள், இயல்புக்கு மாறாக பேசுவதும், செயல்களை செய்வதும், நினைவுகளை இழந்தவாறும் காணப்படுவதாக அறியப்படுகிறது.

 

இந்த நிலையில், பேய் பிடித்தல் என்ற நிலையை மருத்துவ உலகம் எப்படி பார்க்கிறது என்று சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் ரம்யா சம்பத்திடம் கேட்டபோது, "இது முழுக்க முழுக்க மனநலம் சார்ந்த பிரச்னையாகவே மருத்துவத்துறை கருதுகிறது. ஒரு மனிதரின் உடலும் மனமும் ஒத்து செயல்படுவதே இயல்பாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இயல்புக்கு மாறாக ஒருவர் செயல்படுவதை மருத்துவத்துறையில் ஆளுமைச் சிதைவு (Dissociation) என்கிறோம். இதையே சமூகத்தின் சில அங்கத்தினர் பேய் பிடித்தல் என்று அழைக்கிறார்கள்" என்று கூறுகிறார்.

பேய் பிடித்தல் - மருத்துவத்துறை முன்வைக்கும் காரணங்கள்

இரவு நேரத்தில் வெளியே சுற்றல், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்லல், சமீபத்தில் அக்கம்பக்கத்தில் நேர்ந்த உயிரிழப்புகள் ஆகிய காரணங்களை சுற்றியே பெரும்பாலான நேரங்களில் ஒருவருக்கு பேய் பிடித்ததற்கான காரணம் கிராமப்புறங்களில் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், பேய் பிடித்தல் என்று கூறப்படும் நிலைக்கு ஒருவரின் ஆழ்மனதே காரணம் என்று விவரிக்கும் மருத்துவர் ரம்யா, "ஒருவர் மனரீதியாக ஏதோ ஒரு சம்பவத்தாலோ, செயலாலோ பாதிக்கப்படும்போதும் அல்லது தன் ஒருமைப்பாடு (Self-identity) வலுக்குறைந்து இருப்பவர்களுக்கும் உடலும் - மனதும் ஒரே நேர்கோட்டு பாதையில் இல்லாமல் இருக்கும்போது, இயல்புக்கு மாறான செயல்களை செய்கிறார்கள்" என்று கூறும் அவர், சில நேரங்களில் ஒரு நபரை சுற்றியுள்ளவர்கள் தங்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் நன்றாக உள்ள ஒருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறுவதும் உண்டு என்கிறார்.

இஸ்லாத்தின் பார்வையில்…

இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானது. ஆனால் மற்ற மதங்களில் பேய், பிசாசு உலா வர தாராள இடம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில்,

வல்ல பூதம் வாலாஷ்டிக பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப் பேய்களும்,

பெண்களைத் தொடரும் ப்ருமராட்சதரும்,
அடியேனைக் கண்டால் அலறிக்கலங்கிட….”  என்று வாசிக்கும் பேய்க் காப்பு  சஷ்டிக்கவசம் உள்ளன.   

கடவுளாகிய இயேசு கிறிஸ்த்துவை பிசாசு 40 நாள் சோதித்ததாக பைபிள் கூறுகிறது. (மத்தேயு-4:1) இயேசு கிறிஸ்து பேயோட்டிய சம்பவத்தையும் பைபிளில் காணலாம். (மத்தேயு-12:24) இஸ்லாம் மட்டுமே,பேய்,பிசாசு இல்லவே இல்லை என்று உறுதியாக கூறுகிறது.

படைத்த இறைவனுக்கு மட்டும் பயப்படுங்கள். படைப்பினங்கள் எதற்கும் பயப்படக் கூடாது என்பதே இஸ்லாம். மூட நம்பிக்கைகளுக்கு அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடமில்லை.

பேய்கள் என்றொரு படைப்பினம் இல்லை...

இறைவனது  படைப்பில் மூன்று இனம் மட்டுமே உள்ளது. முதலில் ஒளியால் (LIGHT) படைக்கப்பட்டவர்கள் மலக்குகள் (ANGELS), இரண்டாவது ஜின்கள்  (JINN) இவை நெருப்புக்கொழுந்தின் (FIRE-Smokeless Flame, (Plasma) மூலம் படைக்கப்பட்டவர்கள். ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் எப்பொழுதும் இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவனுக்கு துதி செய்பவர்கள். அவனது கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள்.

நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் சுதந்திர சிந்தனையுடன் படைக்கப்பட்டார்கள். மூன்றாவது களிமண்ணின் சத்தைக்கொண்டு படைக்கப்பட்ட மனிதனும் ஜின்களைப்போல பகுத்தறிவோடு படைக்கப்பட்டான். மனு, ஜின்களை படைத்த நோக்கத்தை அல்லாஹ் கூறுகிறான்.

ஜின்களையும்,மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.”                                      ( அல்குர்ஆன்: 52: 56 )

வாழ்வும்.. மரணமும்...

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (குர்ஆன் 67:2)

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.” (குர்ஆன் 99:7-8)

மரணம் என்பது எல்லோருக்கும் நிகழ விருக்கும் ஒரு நிகழ்வேயாகும் இதை தடுக்க எந்த சக்தியாலும் எந்த மனிதனாலும் இயலாத காரியமாகும்.

உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்என்று கூறுவீராக! (குர்ஆன் 32:11)

இறந்த பின் ஆன்மா என்னவாகிறது?...

மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆன்மா) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا ۖ فَيُمْسِكُ الَّتِي قَضَىٰ عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَىٰ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَِ

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.(அல்குர்ஆன் 39:42)

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!என்று கூறுவான்.

لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது".                                       ( அல்குர்ஆன்:23: 99, 100 )

ஆகவே, மரணத்தின் போதும் சரி மரணத்திற்கு பின்னரும் சரி மனிதர்களின் ஆன்மா படைத்த இறைவன் பொறுப்பில் இருப்பதாக மேற்கூறிய இறைவசனங்கள் சான்றளிக்கின்றன.

இதனையும் மீறி பேய் இருப்பதாக நம்புபவர்கள் மேற்கூறிய இறைவசனத்தை மறுத்தவர்கள் ஆவார்கள். ( நவூது பில்லாஹ்.. )

மண்ணறையில் ஆன்மாவின் நிலை…?

நல்ல மனிதர் இறந்து போனால்...

ஒரு அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனது தோழர்கள் திரும்பி செல்லும்போது அவன் அவர்களது காலடி ஓசையை செவியுறுவான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து, அவனை எழுப்பி உட்கார வைத்து இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய் என்ற நபி(ஸல்) அவர்கள் குறித்து கேட்பார். அவர் மூஃமினாக இருந்தால் இவர் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்று கூறுவார்.

அவனிடம் நரகத்தில் உள்ள உன்னிடத்தைப் பார் என்று கூறப்படும். பின்னர் அல்லாஹ் இதை மாற்றி உனக்கு சொர்க்கத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று கூறுவார். பின்னர் அவனின் கப்ர் 70அடி விசாலமாக்கப்படும்.அவன் இதைப்பற்றி தன் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு வருவதாக கூறும்போது புதுமாப்பிள்ளையைப் போல் உறங்கு என்று கூறப்படும்.  (அனஸ்(ரலி) புகாரி1374, அஹ்மத், அபுதாவூத்)

கெட்ட பாவியான மனிதன் இறந்து போனால்...

உலகில் வாழும் காலத்தில் பாவங்கள் செய்த நிலையில் இறந்து போன மனிதன் அவன் செய்த பாவத்தின் அளவுக்கு மண்ணறையில் தண்டிக்கப்படுகிறான் என்கிறது இஸ்லாம். அப்படி என்றால் அவன் ஆன்மா எப்படி உலகில் பேயாக சுற்றிக் கொண்டிருக்கும்.

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 40:46)

மார்க்க அறிஞர்களில் அநேகர் இந்த வசனம் மண்ணறை வேதனைக்குரிய ஆதாரமாகக் கருதுகின்றர்.

மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” ( நூல்: திர்மிதீ 2308 )  

 

அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் இவர் அல்லாஹ்வின்அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்எனக் கூறுவான்.

அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்எனக் கூறுவான். உடனே நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லைஎன்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால்அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி); ( நூல்: புகாரி: 1374 )

நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களின் (கூக்) குரலைச் செவியுற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(இவர்கள்) இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனைசெய்யப்படவில்லை. ஆனாலும், அது ஒரு (வகையில்) பெரிய (பாவச்) செயல்தான். இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இன்னொருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டு துண்டாகஅல்லது இரண்டாகப்பிளந்து ஒரு துண்டை இவரின் மண்ணறையிலும் மற்றொரு துண்டை இவரின் மண்ணறையிலும் (ஊன்றி) வைத்தார்கள். அப்போது இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி);( நூல்: புகாரி 6055 ) : புகாரி-6055 

இறந்து போனவர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும்....     

இறந்து போன மனிதன் நல்லவராக இருந்தாலும் கெட்டவனாக இருந்தாலும் அவர்கள் திரையிடப்பட்ட தனி உலகில் வாழ்வதாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது". ( அல்குர்ஆன்:23: 100 )

எனவே, இஸ்லாமிய கொள்கைகளுக்கும், இறைத்தூதர் {ஸல்} அவர்களின் வழிகாட்டலுக்கும் முரணான எந்தவொரு சிந்தனையை, செயலை உலகில் எவர் முன் மொழிந்தாலும், செயல்படுத்தினாலும், கொண்டாடி மகிழ்ந்தாலும் அது வழிகேடே! அது நரகிற்கு அழைத்துச் செல்லும் மாபாதகச் செயலே என்பதைப் புரிந்து கொள்வோம்!!!

இஸ்லாத்திற்கு எதிராக நடப்பதிலிருந்தும், ஈமானிலும், கொள்கையிலும் குழப்பம் ஏற்படுத்தும் எல்லா வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்தும் நம் அனைவரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காத்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்…

அடுத்த வாரம் “ தவிர்ப்போம் பிக்பாஸ் & பிராங்க் “

No comments:

Post a Comment