Thursday 17 November 2022

கவனக்குறைவு… பெரும் ஆபத்து!

 

கவனக்குறைவுபெரும் ஆபத்து!

பிறப்பும், இறப்பும் உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்புத் துயரத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

அதன்விளைவுகள் உள, உடல் மாற்றங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. 

அது போலவே நமக்கு சற்றும் தொடர்பில்லாத சிலரின் மரணம் கூட நம்மை என்னமோ செய்து விடுவதை மறுப்பதற்கில்லை.

அது இயற்கை மரணமாக இருந்தாலும் சரி அல்லது  அகால மரணமாக இருந்தாலும் சரி.

நம் எல்லோரது மனதையும் ஏதோ ஒரு வகையில் பாதித்த மரணங்கள் நிறைய இருக்கிறது.

எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணித்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழ் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.

தமிழக முதல்வரே நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசின் உதவித் தொகைக்கான காசோலையையும் குடும்பத்தில் ஒருவருக்கான வேலைக்கு பணி நியமன ஆணையையும் வழங்கி வந்துள்ளார்.

என்ன நடந்தது?

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சார்ந்தவர் ரவிக்குமார். அவரது மகள் பிரியா சென்னை கடற்கரையில் உள்ள ராணிமேரி அரசு கலைக் கல்லூரியில், பி.எஸ்.சி உடற்கல்வி பிரிவில் படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள பிரியா மாவட்ட, மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சென்ற ஆண்டு பிரியாவின் வலது காலில் எலும்புகளை இணைக்கும் தசைநார் கிழிந்திருப்பது (Ligament tear) கண்டறியப்பட்டது. இப்பிரச்சினையின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பிரியாவிற்கு கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது. வலியால் அவதிப்பட்ட பிரியா-வை கொளத்தூர், பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நவம்பர் 7 ஆம் தேதி காலை பத்து மணிக்கு சிறிய துளைமூலம் அறுவை சிகிச்சை (arthroscopy) செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் பிரியா, வலி அதிகம் இருப்பதாக கூறியுள்ளார். வலது காலின் ரத்தப்போக்கை தடுப்பதற்கு பிரதானமான தமனியைச் (artery) சுற்றி டார்னிக் (Tourniquet) எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்பட்டுள்ளது. அதனால் அவருடைய கால்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, டார்னிக் கட்டப்பட்டியிருந்த பகுதிக்கு கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்ததுள்ளது. இதனை அறிந்த மருத்துவர்கள் பிரியாவை நவம்பர் 8 ஆம் தேதி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரியாவை பரிசோதனை செய்து பார்த்த போது வலது கால் உணர்விழந்து விட்டதாக கூறியுள்ளனர். வலது காலை தூண்டித்தால் மட்டுமே அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதன்படி கால் அகற்றப்பட்டு அழுகிய செல்களை அகற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், பிரியா நவம்பர் 15 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவ வல்லுநர் குழு, பெரியார் நகர் மருத்துமனை மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்றும் அவர்களை விருதுநகர் மற்றும் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்பட்டுள்ளனர். (வினவு 16/11/2022 )

மேலும், இந்த உயிரிழப்பு  தொடர்பாக காவல்துறை IPC ACT 174 (சந்தேக மரணம்)ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கவனக்குறைவு...

மருத்துவத்துறையில் நிகழும் மரணங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

அறியாமை (medical ignorance) அலட்சியம் (medical negligence) அகங்காரம் (medical arrogance) இம்மூன்றுமே மிகமிக ஆபத்தானவை.

2018 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அமெரிக்காவின் மரணங்களில், மூன்று  மரணங்களில் ஒன்றுக்கு அலோபதி  மருத்துவமனைகளில் தரப்படும் தவறான  சிகிச்சையே காரணம் என்கிறது.

2018  ஆம் ஆண்டு லான்சட் ஆய்வு ஒன்று இப்படிச் சொல்கிறது.

இந்தியாவின் மரணங்களில் நாளொன்றுக்கு 4,300 மரணங்கள் அலோபதி மருத்துவமனைகளின்  தவறான மருத்துவச் சிகிச்சையால் ஏற்படுகிறது. அதாவது ஆண்டொன்றுக்கு 50 லட்சம்!

இதுபோக , 36 லட்சம்  மரணங்கள் மருத்துவ (மருத்துவர் அல்லது மருத்துவமனையே) வசதி அருகாமையில் இல்லாமல் இருப்பதால் நடக்கின்றன என்கிறது.

பெரும்பான்மையான மருத்துவமனை மரணங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் நடக்கும் பல விஷயங்கள் பங்கு வகிக்கின்றன! அதாவது மருந்து ஒவ்வாமை(36%) தொடங்கி  அறுவை சிகிச்சை தந்த விதம்,அவசர சிகிச்சையை அணுகிய முறை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மருத்துவமனை மரணங்களில் அவசர சிகிச்சை மரணங்கள் தான் அதிகம். இவை ஒருவரது நோயால் ஏற்படுகிறதா அல்லது சிகிச்சையால் ஏற்படுகிறதா என்று குழப்பம் இன்றளவும்  மருத்துவ உலகில் தீரா விவாதமாகத் தொடர்கிறது.

 

 

 

நோய்களைக் குணமாக்கிக் கொள்வதற்காக மக்கள் மருத்துவத்தை நாடி பெரும் பணத்தைச் செலவு செய்து கொள்கின்றனர். ஆனால் மருத்துவ சேவையின் பல்வேறு மட்டங்களிலும் காணப்படும் அலட்சியங்களால் நோயாளிகள் பலர் மீள முடியாத பாதிப்புகளுக்கும் உள்ளாகி விடுவதுண்டு.

மருத்துவ சேவையில் உள்ள அலட்சியமும் கவனயீனமும் அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அதிகமாகவே உள்ளன. 

காலதாமதமான சிகிச்சை, தவறான மருந்துப் பிரயோகம், இரத்த மாற்aட்டின் போது ஏற்படும் தவறுகள் போன்றவற்றால் அநியாய மரணங்களும் சம்பவிப்பதுண்டு.

மருத்துவ நிபுணர்கள் தற்போது அவசரம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். பல தனியார் வைத்தியசாலைகளுக்கு சிறப்பு மருத்துவராக வருகை தருகின்றனர்.  

நோயாளிகளுக்கான மருத்துவத்தில் காண்பிக்கும் அக்கறையைப் பார்க்கிலும், அடுத்த வைத்தியசாலைக்கு நேரத்துக்குச் செல்வதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். ஒரே நாளில் கூடுதல் நோயாளர்களைப் பார்ப்பதே அவர்களது இலக்கு.

இத்தகைய அவசரத்தின் போது நோயாளர்களின் பிரச்சினை தொடர்பாக முற்றாகக் கேட்டறிவதோ, நோய் நிர்ணயம் செய்வதோ சாத்தியமற்றவையாகி விடுகின்றன. மருத்துவ நிபுணரின் ஆலோசனைக்காக பல ஆயிரம் ரூபா வரை செலவிடும் வறிய நோயாளிக்கு எத்தனை அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை புரிந்து கொள்வதற்கு அவ்வைத்தியருக்கு நேரமோ நிதானமோ இல்லை.

இது அலட்சியங்களில் முக்கியமானது. அப்பாவி நோயாளிக்கு நீதி கிடைப்பது எட்ட முடியாத தூரத்திலேயே உள்ளது. சில தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை ஏராளமான தவறுகள் பல்வேறு மட்டங்களில் நிகழ்கின்றன. எனவேதான் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கையானது பொதுமக்கள் தரப்பிலிருந்து நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமென்பது உயிர்காக்கும் சேவையாகும். அச்சேவையில் அலட்சியமும் சுயநலமும் மேலோங்கினால் நன்மைகளை மக்கள் எதிர்பார்க்க முடியாது.

நோயாளிகளின் உரிமைகள் என்ன?

சாதாரணக் காய்ச்சல் என்றால்கூட சிறப்பு மருத்துவர்களைத் தேடிப் போகிற காலம் இது. பல மருத்துவமனைகள், நோயாளிகளைப் பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கின்றன. என்ன சிகிச்சை, எவ்வளவு செலவாகும், சிகிச்சை முறையின் சாதக,பாதகம் என்னென்ன என்பவற்றைப் பற்றி எல்லாம் விளக்குவது இல்லை.

ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து, கையெழுத்துப் போட்டுக்கொடுக்கச் சொல்கின்றனர். கையெழுத்துப் போட்டால்தான் சிகிச்சை என்ற நிலையில், அதில் என்ன எழுதி இருக்கிறது என்றுகூடப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப் போடும் நிலைதான், பெரும்பான்மையான மருத்துவமனைகளில் உள்ளது. 

 

ஒரு மருத்துவமனைக்கு நோயாளியாகச் செல்லும்போது, நம் உரிமைகள் என்னென்ன எனத் தெரிந்துவைத்திருக்கிறோமா என்றால், இல்லை.

`மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் - 1948’தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. 

அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன. 

இந்தியாவில், 1995-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், மருத்துவ சேவையை, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கொண்டுவந்து, ஆணையிட்டதுதான் இந்தியாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. `பாதிக்கப்பட்ட நோயாளிகள், இந்தச் சட்டத்தின் கீழ், சேவைக்குறைபாடு தொடர்பான வழக்குகளை, மருத்துவர் மீதும், மருத்துவமனைகள் மீதும் தொடுக்கலாம்என்கிறது உச்ச நீதிமன்றம்.

நோயாளிகள், தங்கள் நோய் பற்றியும், மருத்துவச் சோதனை முடிவுகள், மருந்து, மாத்திரைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது கண்ணியமாகவும் கனிவாகவும்  இருக்க வேண்டும். எந்த வகையான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுரண்டல் போன்றவை இருக்கக் கூடாது.

அவரைப் பற்றிய ரகசியம், தனித்தன்மை, அவரது நம்பிக்கைகள், சமூக, கலாசார, மதரீதியான நம்பிக்கைகள் காக்கப்பட வேண்டும்.

நோயாளிக்கு இன்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பற்றி அவருக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் சொல்ல வேண்டும்.

சிகிச்சை பற்றியும், அதில் உள்ள அபாயங்கள், பாதிப்புகள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவரை, மருத்துவமனையைக் கேள்விகேட்கவும், தகுந்த விளக்கங்கள் பெறவும் உரிமை உள்ளது.

சிகிச்சை தொடர்பாக இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்துரை (ஒப்பீனியன்) பெறலாம்.

அறுவைசிகிச்சையின் பலன், பாதிப்புகள், செலவு உட்பட எல்லாவற்றையும் நோயாளியும், அவரது நெருங்கிய உறவினரும் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

அலட்சிய சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், சேவைக்குறைபாட்டுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு.

தரமற்ற மருந்து, தவறான மருத்துவ சிகிச்சை, போலி மருத்துவர்களிடம் இருந்து பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றுக்கான உரிமை.

உடல்நிலையைப் பொறுத்து உள் நோயாளியாகவே, வெளி நோயாளியாகவோ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் உரிமை.

ஒரு மருத்துவரின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் நோயாளிக்கு உரிமை உண்டு.

 

முறைகேடுகள் ஏதும் நடந்தால், நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் உரிமை.

தன்னுடைய பிரச்னைக்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினால், தற்போது பெறும் சிகிச்சையை நிறுத்திக்கொள்ள முழு உரிமையும் உள்ளது.

யாரிடம் புகார் செய்வது?

கிரிமினல் குற்றமாக இருந்தால், காவல் துறையை அணுகலாம்.

கவனக் குறைவு, சேவைக் குறைபாடு போன்ற குற்றங்களாக இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக, ஒழுங்குநெறி தவறிய குற்றமாக இருந்தால், காவல்துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை (Medical Council of India) அணுகலாம்.

கொடுக்கும் புகாரின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விதி நடந்து விட்டது என்று கடந்து போகலாமா?

حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ خُرَيْقٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ قَالَ: خَرَجْنَا فِي سَفَرٍ فَأَصَابَ رَجُلًا مِنَّا حَجَرٌ فَشَجَّهُ فِي رَأْسِهِ، ثُمَّ احْتَلَمَ فَسَأَلَ أَصْحَابَهُ فَقَالَ: هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا: مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ فَاغْتَسَلَ فَمَاتَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ: «قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ، إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ - أَوْ» يَعْصِبَ «شَكَّ مُوسَى - َعلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ» (سنن أبي داود 336 -

போருக்கு சென்றிருந்தார்கள்  சஹாபாக்கள். பகலிலே நடந்த போரிலே ஒரு நபித் தோழருக்கு தலையில் கடுமையான காயம், தலையே பிளந்து விட்டது. அந்த காலத்தில் என்ன வசதி இருக்கும் அதற்கேற்ப அவர்கள் அங்கே கட்டுப்போட்டிருந்தார்கள். இரவிலே தூங்கிய  ஸஹாபிக்கு  اِحْتِلَامُ - தூக்கத்திலே ஸ்கலிதம் ஏற்பட்டுவிட்டது, குளிப்பு கடமை ஆகிவிட்டது.

சுப்ஹுடைய தொழுகைக்கு எழுந்திருக்கும்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகில் இருந்த தோழர்கள் இடத்திலே கேட்ட போது எங்களுக்கு இதைப் பற்றி தெரியவில்லை. ஏதும் சலுகை இருக்கிறதா என்பதாக எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் குளித்து தான் ஆகவேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். 

அந்த சஹாபி குளிர்ந்த நீரிலே குளித்து விடுகிறார். காயத்தின் வழியாக தலைக்கு தண்ணீர் சென்றது. சுபுஹு தொழுகை முடிவதற்குள்ளே அவர் இறந்துவிடுகிறார். பிரச்சனையாகி விடுகிறது. சில ஸஹாபாக்களுக்கு தெரியவருகிறது. அவர்கள் கண்டிக்கின்றார்கள். பிறகு இதுகுறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்திலே புகார் வருகிறது.

அல்லாஹ்வின் தூதரே இப்படி நடந்துவிட்டது என்று. ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? என்ன கூறினார்கள் தெரியுமா?

قَتَلْتُمُوْهُ

அவரை நீங்கள் கொலைசெய்துவிட்டீர்கள் என்று சொன்னார்கள்.யாரைப் பார்த்து? நீங்கள் குளித்துத்தான் ஆக வேண்டும் என்று கூறிய அந்த தோழர்களைப் பார்த்து.

فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ

இது குறித்த சட்டத்தைப் பற்றி  நீங்கள் கேட்டிருக்க  வேண்டாமா? நீங்கள் மார்க்கத்தைப் பற்றி கேட்கும் போதுதான் அறியாமை போகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூது, எண்: 336.

நபி ஸல் அவர்கள் விதியில் உள்ளது தான் நடந்திருக்கிறது என்று கூறி கடந்து செல்ல வில்லை. மாறாக, நடந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கடிந்து கொண்டார்கள் என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.

கவனம் தேவை..

எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஒரு காரியத்தையும் ஒரு முஸ்லிம் கவனக் குறைவாக செய்து விடக் கூடாது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

கவனக் குறைவால் ஏற்படும் ஆபத்துக்களை அல்லாஹ் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பேசுகின்றான்.

கவனக் குறைவாக செயவ்படுவோராக இருக்கக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறான்.

وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ

"நீங்கள் கவனக் குறைவாக செயல்படுகிறார்களே அவர்களில் ஒருவராக ஆகி விட வேண்டாம்".                                            ( அல்குர்ஆன்: 7: 205 )

துஆ மறுக்கப்படுவதற்கான காரணங்களில் பிரதானமான காரணம்...

عَنْ عبد الله بن عمرو -رضي الله عنهما- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "القلوب أوعية، وبعضها أوعى من بعض، فإذا سألتم الله -عز وجل- يا أيها الناس فاسألوه وأنتم موقنون بالإجابة، فإن الله لا يستجيب لعبدٍ دعاه عن ظهر قلبٍ غافلٍ" رواه أحمد

"அல்லாஹ்விடம் கேட்டால் பதிலளிக்கப்படும், ஏற்றுக் கொள்ளப்படும் எனும் உறுதியுடன் துஆ கேளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கவனக் குறைவாக கேட்பவரின் துஆவிற்கு பதில் தரமாட்டான்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத்)

கவனக் குறைவு வந்து விட்டால் பல்வேறு தீய பண்புகள் அணிவகுக்க ஆரம்பித்து விடும் என்று அல்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ‏
اُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

"நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களின் விஷயத்தில் கவனக் குறைவாக  இருக்கிறார்களோ - அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்".( அல்குர்ஆன்: 10: 7-8 )

وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ ‌ۖ

 لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا

وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا

وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ‌ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ‏

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். ( அல்குர்ஆன்: 7: 179 )

கவனக் குறைவு சில போது பெரும் இழப்புகளை தரும்....

روى البخاري عن البراء بن عازب قال: لما كان يوم أحد ولقينا المشركين أجلس رسول الله صلّى الله عليه وسلّم أناسا من الرماة وأمر عليهم عبد الله بن جبير وقال لهم: «لا تبرحوا من مكانكم. إن رأيتمونا ظهرنا عليهم فلا تبرحوا، وإن رأيتموهم قد ظهروا علينا فلا تعينونا» .

قال: فلما لقيناهم هربوا حتى رأيت النساء يشتددن الجبل- أى يسرعن الفرار- يرفعن عن سوقهن، قد بدت خلاخلهن. فجعلوا يقولون- أى الرماة- «الغنيمة.. الغنيمة» فقال لهم أميرهم عبد الله بن جبير. أمهلوا. أما عهد إليكم رسول الله صلّى الله عليه وسلّم ألا تبرحوا أماكنكم؟ فأبوا- وانطلقوا لجمع الغنائم- فلما أتوهم صرف الله وجوههم وقتل من المسلمين سبعون رجلا» .

அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் 50 வில்போர் வீரர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் இந்த ஜபலுர் ருபாத்துக்கு உச்சியில் நிற்கவைத்தார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை வரும்வரை இந்த குன்றிலிருந்து கீழே இறங்காமல் எதிரிகளை நோக்கி அம்பெய்தி கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

முஸ்லீம்களை எதிர்த்து போரிட எதிரிகளால் முடியவில்லை. தங்கள் தலைவர்களும் கொடியை தாங்க கூடியவர்களும் கொல்லப்பட்டதால் நிராகரிப்போர் போரிலிருந்து பின்வாங்கி சென்றனர்.

இதைக் கண்டதும் வில்போர் வீரர்களில் பத்து நபர்களை தவிர அனைவரும் பெருமானாரின் கட்டளையை புறக்கணித்து குன்றிலிருந்து இறங்கி எதிரிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் பொருள்களையும் சேகரிக்க தொடங்கினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காபிர்களின் குதிரைப்படையினர் குன்றின் பின்பக்கமாக மலைமீது ஏறி முஸ்லீம்களுக்கு எதிராக போரிட தொடங்கினார்கள். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் ஆங்காங்கு சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இந்த சூழ்நிலையில் சிக்கி ஏராளமான முஸ்லீம் படையினர் வீரத்தியாகியாயினர்.

وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْءَاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ وَلَقَدْ عَفَا عَنكُمْ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். ( அல்குர்ஆன் 3: 152 )

நபி ஸல் அவர்களின் கட்டளையை செயல் படுத்துவதில் ஏற்பட்ட சிறிய அளவிலான கவனக்குறைவு எவ்வளவு பாரதூரமான விளைவுகளை உஹதில் ஏற்படுத்தியது என்றால் வெற்றியின் விளிம்பில் இருந்த படை படுதோல்வியை சந்தித்தது. 70 நபித்தோழர்கள் கடுமையான முறையில் கொல்லப்பட்டனர்.  நபி ஸல் அவர்கள் உட்பட போரில் பங்கேற்ற அனைவருக்கும் உடலில் சிறிய அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டன.

கவனக்குறைவு சில போது சிரமத்தில் ஆழ்த்தி விடும்....

ஹிள்ர் (அலை) அவர்களைத் தேடிச் சென்ற பயணத்தின் போது சிறிய கவனக்குறைவாக இருந்ததால் பயணத்தில் சிரமத்தையும் களைப்பையும் அடைந்ததாக குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا (60) فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا (61) فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا (62) قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا (63) قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا

       இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.

       அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.

       அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்என்று (மூஸா) கூறினார்.

அதற்கு அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!என்று பணியாள் கூறினார்.

 (அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள். ( அல்குர்ஆன்: 18: 60-64 )

கவனக்குறைவு சில போது நயவஞ்சகனாக ஆக்கிவிடும்...

أن رسول الله صلى الله عليه وسلم قال: "أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر، ولو يعلمون ما فيهما لأتوهما ولو حَبْوًا

உபை இப்னு கஅப்(ரழி) அறிவிக்கின்றார்: ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்: “”இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள் “”இல்லைஎன்று கூறினார். மீண்டும், “”இன்னவர் வந்தாரா?” என்று கேட்க, மக்களும் “”இல்லைஎன்று கூற, நபி(ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்” (நூல்:புஹாரி, முஸ்லிம்)

கவனக்குறைவு சில போது பெரும் குழப்பத்தில்  ஆழ்த்தி விடும்...

ﻗﻴﻞ: ﺇﻥ ﻫﺬﻩ اﻵﻳﺔ ﻧﺰﻟﺖ ﻓﻲ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﻘﺒﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻌﻴﻂ. ﻭﺳﺒﺐ ﺫﻟﻚ ﻣﺎ ﺭﻭاﻩ ﺳﻌﻴﺪ ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻌﺚ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﻘﺒﺔ ﻣﺼﺪﻗﺎ»ﺇﻟﻰ ﺑﻨﻲ اﻟﻤﺼﻄﻠﻖ، ﻓﻠﻤﺎ ﺃﺑﺼﺮﻭﻩ ﺃﻗﺒﻠﻮا ﻧﺤﻮﻩ ﻓﻬﺎﺑﻬﻢ- ﻓﻲ ﺭﻭاﻳﺔ: ﻹﺣﻨﺔ ﻛﺎﻧﺖ ﺑﻴﻨﻪ ﻭﺑﻴﻨﻬﻢ-، ﻓﺮﺟﻊ ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺒﺮﻩ ﺃﻧﻬﻢ ﻗﺪ اﺭﺗﺪﻭا ﻋﻦ اﻹﺳﻼﻡ. ﻓﺒﻌﺚ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺎﻟﺪ ﺑﻦ اﻟﻮﻟﻴﺪ ﻭﺃﻣﺮﻩ ﺃﻥ ﻳﺘﺜﺒﺖ ﻭﻻ ﻳﻌﺠﻞ، ﻓﺎﻧﻄﻠﻖ ﺧﺎﻟﺪ ﺣﺘﻰ ﺃﺗﺎﻫﻢ ﻟﻴﻼ، ﻓﺒﻌﺚ ﻋﻴﻮﻧﻪ ﻓﻠﻤﺎ ﺟﺎءﻭا ﺃﺧﺒﺮﻭا ﺧﺎﻟﺪا ﺃﻧﻬﻢ ﻣﺘﻤﺴﻜﻮﻥ ﺑﺎﻹﺳﻼﻡ، ﻭﺳﻤﻌﻮا ﺃﺫاﻧﻬﻢ ﻭﺻﻼﺗﻬﻢ، ﻓﻠﻤﺎ ﺃﺻﺒﺤﻮا ﺃﺗﺎﻫﻢ ﺧﺎﻟﺪ ﻭﺭﺃﻯ ﺻﺤﺔ ﻣﺎ ﺫﻛﺮﻭﻩ، ﻓﻌﺎﺩ ﺇﻟﻰ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺒﺮﻩ، ﻓﻨﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ، ﻓﻜﺎﻥ ﻳﻘﻮﻝ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﺘﺄﻧﻲ ﻣﻦ اﻟﻠﻪ ﻭاﻟﻌﺠﻠﺔ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ. (تفسير ابن كثير

முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (திருக்குர்ஆன் 49:6).

மேற்கூறப்பட்ட இறைவசனம் இறங்கியதன் பின்னணியை அறிந்துகொள்வோம். 

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு  வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் வலீத் பின் உக்பா (ரலி) இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது. இந்நிலையில் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் திரளாக ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.

இதைக் கண்ட வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள்  எதற்காக ஊரில் எல்லையில் திரண்டிருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட தான் இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்கள். மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் சுய எண்ணத்தின் அடிப்படையில் பின்வருமாறு கூறி விடுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், ஆகையால், அவர்கள் 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், எனவே, 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள். இந்த செய்திகளை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் உறுதியாக நம்பவில்லை. 

எனினும் நடந்தது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை உறுதி செய்வதற்காக  காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள்.

அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதைக் கண்டார்கள். இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் நிதானம் இறைவனின் செயல். அவசரம் ஷைத்தானின் செயல்என்று கூறினார்கள்.

மேற்கூறப்பட்ட சம்பவத்தில் அந்த நபித்தோழரின் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கவனக்குறைவால் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடைபெற இருந்தது. அவரின் இந்த செய்தியை நம்பி, நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டிருந்தால் அநியாயமாக ஒரு சமூகத்தாருக்கு அநீதி இழைத்தவர்களாக ஆகியிருப்பார்கள்.

ஆகவே, கவனக்குறைவு மற்றும் அலட்சியம் குறித்தான விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹு ரப்புல் ஆலமீன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த பரக்கத்தையும் மென்மேலும் தந்தருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் ஹதீஸ்களை நடப்பு நிகழ்வுடன் ஒப்பிட்டு விவரிக்கும் அழகோ அழகு அல்லாஹ் அருள்புரிவானாக!

    ReplyDelete