Thursday, 24 November 2022

இஸ்லாத்தின் வழியாக உலகைப் பார்க்க விரும்புவோம்!!!

இஸ்லாத்தின் வழியாக உலகைப் பார்க்க விரும்புவோம்!!!


உலகின் விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் தொடர் மற்றும் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் விளையாட்டு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான விளையாட்டில் முதல் இடத்தில் உள்ளது. கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.

2010ஆம் ஆண்டு ஃபிபா செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பில் உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. 

வாக்கெடுப்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை கத்தார் தோற்கடித்திருந்தது. 

அப்போது முதலே உலக கோப்பை போட்டிகளை நடத்துவதை மிகப்பெரிய பெருமையாகக் கத்தார் அரசு கருதியது. மற்றொரு புறம் அந்நாட்டின் மீதான விமர்சனங்களும் எழத் தொடங்கின. 

லஞ்சம் கொடுத்துதான் இந்தப் போட்டிக்கான உரிமையை கத்தார் பெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விசாரணையில் அது நிரூபிக்கப்படவில்லை.

அதன் பிறகு தன்பாலின சேர்க்கைக்கு தடை, கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, மதுபானங்களுக்குக் கட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக கத்தாருக்கு எதிர்ப்பு எழுந்தது. 

ஆனால் அவற்றையெல்லாம் கடந்து 2022 பிபா உலகக்கோப்பை தொடர் அரபிய நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி  தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன 

போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் அணி உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாகப் பங்கேற்றுள்ளது.

அந்த அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், போட்டியை நடத்துவதையே மிகப்பெரிய பெருமையாகப் பார்க்கிறது. தொடக்க விழாவில் கத்தார் மன்னரின் உரையில் அந்தப் பெருமை தென்பட்டது என்றே கூறலாம்.

கடுமையான உழைப்பு...

நடைபெறும் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றிருக்கின்றன. இந்தப் போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகக் கோப்பைக்கு அனுமதி பெற்ற பிறகு கத்தாரில் புதிய கால்பந்து மைதானம், விமான நிலையங்கள், அதிநவீன விடுதிகள், மெட்ரோ போக்குவரத்து, சாலை என்று இந்தத் தொடருக்கு மட்டுமே அந்த நாடு 220 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவு செய்திருக்கிறது. இது இந்திய மதிப்பில் 17 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

 

கடந்தகாலங்களில் மற்ற நாடுகள் உலகக் கோப்பைத் தொடரை நடத்தச் செலவு செய்ததைவிட இந்தத் தொகை மிகவும் அதிகம். உதாரணமாக, 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற தொடரின்போது 11.6 பில்லியன் டாலர் செலவானதாகத் தரவுகள் கூறுகின்றன.

விமர்சனங்கள் எழ என்ன காரணம்?

கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானம் மற்றும் மைதானத்திற்கு வெளியே மதுபானம் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மது குடித்துவிட்டு மைதானத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர், ரசிகைகள் கண்ணியமான உடையை அணிந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டும். தூண்டும் வகையில் உடலின் அங்கங்கள் தெரியும்படி ஆடைகளை அணியக்கூடாது, உடலில் போடப்பட்டுள்ள டாட்டூக்கள் தெரியும்படியும் ஆடைகள் அணியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளை காரணம் காட்டி கத்தாரில் கால்பந்து போட்டி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடக்க விழாவில்....

ஃகானிம் அல் முப்தா எனும் மாற்றுத்திறனாளியின் அழகிய கிராஅத்துடன் விழாவைத் துவக்கிய கத்தார். சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய சமய சார்பற்ற நிகழ்வொன்றில் குர்ஆன் வசனம் முதன்முறையாக ஓதப்பட்ட நிகழ்வு எனும் வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

உலகின் எதிர்ப்பும்... ஆதரவும்..

கத்தாரின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு  எதிராக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். கத்தார் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அது கத்தார் நாட்டின் விதி. அமெரிக்காவில் தொடர் நடக்கும் போது இஸ்லாமிய நாடுகள் அங்கே சென்று பெண்கள் எல்லோரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அமெரிக்கா விதியில் அதற்கு இடம் இல்லை. அப்படி இருக்கும் போது கத்தார் விதி என்னவோ அதை அங்கு கலந்து கொள்ளும் வெளிநாட்டினர் மதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தான் தற்போதைய  ஃபிபா தலைவர் கியான்னி இன்பாண்டினோ முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.

அதில், இதை பற்றி ஏன் இப்போது பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. கத்தாரை குற்றம் சாட்டும் நபர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். நான் ஐரோப்பாவை சேர்ந்த ஒருவன். கடந்த 3000 வருடங்களாக ஐரோப்பியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று உலகிற்கே தெரியும். உலகம் முழுக்க அவர்கள் என்ன செய்தார்கள் என்று உலகிற்கே தெரியும்.

அதற்கு எல்லாம் சேர்த்த நாம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். கத்தாருக்கு கலாச்சார பாடம் எடுக்கும் முன் நாம்தான் உலகிற்கே மன்னிப்பு கேட்க வேண்டும்.

கத்தாருக்குள் எல்லோரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எல்லா மதத்தினரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எல்லா நிறத்தினரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாரும் தடுக்கப்படவில்லை. அதுதான் எங்களின் கோரிக்கை. எங்களின் கோரிக்கையை கத்தார் ஏற்றுக்கொண்டுவிட்டது, என்று கூறியுள்ளார்.

சவூதியில் மேற்குலக கலாச்சாரத்தின் சாயல்களான இன்னிசை நிகழ்வுகளைத் துவக்கி வைத்து பேசிய மன்னர் முஹம்மது பின் சல்மான் நூறாண்டு காலம் இஸ்லாத்தை தாங்கி, தூக்கிப் பிடித்து நின்றதால் நாங்கள் பின்தங்கி இருப்பதாக சவூதியின் இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் கூறினார்.

ஆனால், தற்போதைய ஃபிபா கால்பந்தாட்ட சர்ச்சை விவகாரத்தில் "இஸ்லாத்தின் வழியாகவே இந்த உலகின் அனைத்து காரியங்களையும் நாங்கள் பார்க்க விரும்புகின்றோம் " என்று கத்தாரின் இளவரசர் தமீம் பின் அமது அல்தானி கூறுகிறார் எனில் ஈமானிய நெஞ்சுரம் அழைப்பு பணியின் வெகுமதி அவரின் ஆழ்மனதில் பதிந்து இருப்பதை பறை சாற்றுகின்றது.

கத்தாரின் அணுகுமுறை பிழையா?

34 நாடுகளின் அணிகள், அந்நாட்டு ரசிகர்கள், உலகெங்கிலும் இருந்து இந்த விளையாட்டை ரசிப்பதற்காகவே வருகை தரும் பார்வையாளர்கள், ஃபிபா, ஒலிம்பிக் போட்டிகள் என்றாலே மது, மாது என கூதூகலமாக கேளிக்கையில் ஈடுபடும் பிரியர்கள் என அனைவரையும் கட்டுப்பாடுகளால் திகைக்க வைத்திருக்கும் கத்தாரின் இந்த அணுகுமுறை பிழையென்று ஒற்றை வார்த்தையில் கூறிட முடியாது.

சர்வதேச அளவிலான மக்களை இஸ்லாத்தின் மீதும், ஷரீஆவின் சட்ட திட்டங்களின் மீதும் பார்வையை திருப்ப வைத்துள்ளது. கவனக் குவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய கலாச்சாரத்தை, அடையாளத்தை முஸ்லிம்கள் கை விட வேண்டும் என்று நிர்பந்தித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தை அனுசரித்து போகும் படி சர்வதேச அளவிலான மக்களுக்கு கட்டுப்பாடுகள் மூலம் அறைகூவல் விடுத்துள்ள இந்த அணுகுமுறை உண்மையில் தஃவாஅழைப்புப்பணியில் ஓர் அம்சமாகவே, அல் இஸ்லாஹ் - நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் செயல்பாடாகவே ஒரு முஸ்லிம் பார்க்க வேண்டும்.

மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்கள் போல தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாவங்களிலிருந்தும், தீமைகள் புரிவதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்களும் வானவர்கள்  எனும் மலக்குமார்கள் மட்டுமே! ஆனால், மனிதனோ இயல்பிலேயே தவறு செய்யக்கூடியவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

ஆகவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும் தீமையை குறித்து எச்சரிக்கை செய்து, தீமைகளை செய்ய விடாமல் பாதுகாப்பது அனைத்து காலத்திலும் அவசியமாகும்.

நன்மையின் பால் அழைப்பதும்... தீமையை விட்டு தடுப்பதும்...

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

( அல்குர்ஆன்: 3:104 )

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. ( அல்குர்ஆன்: 22: 41 )

فَلَوْ لَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّـنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ اِلَّا قَلِيْلًا مِّمَّنْ اَنْجَيْنَا مِنْهُمْ‌ ۚ وَاتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِيْهِ وَكَانُوْا مُجْرِمِيْنَ‏

உங்களுக்கு முன் சென்ற தலை முறையினரில் நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர (மற்றவர்களிலும்) பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கக் கூடிய நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.                   ( அல்குர்ஆன்: 11: 116 )

لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ‌ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ‏

அவர்களின் பாவமான கூற்றை விட்டும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.                           ( அல்குர்ஆன்: 5: 63 ) 

حديث أنس 

 قال: قال رسول الله ﷺ

 انصر أخاك ظالمًا أو مظلومًا، فقال رجل: يا رسول الله، أنصره إذا كان مظلومًا، أفرأيت إذا كان ظالمًا كيف أنصره؟ قال: تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره.

ஒரு முறை நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும் சரி, அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே, அவனுக்கு நீ உதவி செய்’. உடனே நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது சரி. அது எப்படி அநியாயக்காரனுக்கு நான் உதவி செய்வது?’ என ஒரு நபித்தோழர் கேட்டார்.

அதற்கு நபியவர்கள், ‘அநீதி செய்வதில் இருந்து அவனை தடுத்து நிறுத்துவதே நீ அவனுக்கு செய்யும் உதவியாகும்எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).

 அநியாயக்காரனுக்கும் உதவி செய்என்று இஸ்லாம் கூறுகிறது. இது அவன் செய்யும் அநியாயத்திற்காக அல்ல. அநியாயத்தை அவன் விடுவதற்காக. அநியாயத்திலிருந்து அவன் விடுதலை பெற்று, நியாயவாதியாக மாறுவதற்காக.

ஒரு வகையில் கத்தாரின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் விளையாட்டின் பெயரால் மிகவும் இலகுவாக பார்க்கப்பட்ட பாவங்களையும், தீய செயல்களையும் தடுப்பதாய் அமைந்திருப்பதை மறுக்க இயலாது.

இன்னொரு வகையில் உலகின் கோடான கோடி கால்பந்து ரசிகர்களின் கவனத்தை இஸ்லாமிய மார்க்கத்தின் மீது திருப்பும், ஈர்க்கச் செய்யும் ஹிக்மத்தான தஃவா - அழைப்புப் பணியின் களமாக கத்தார் அரசு மாற்றி இருக்கிறது.

அழைப்பு பணியின் அவசியம்...

وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَاقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ (20) اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ (21) وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ (22) أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ (23) إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ (24) إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ (25) قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَالَيْتَ قَوْمِي يَعْلَمُونَ (26) بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ (27)

சூரா யாஸீன் அன்றாடம் நாம் ஓதி வருகிற சூரா. பல்வேறு பொக்கிஷமான கருத்துக்களை உள்ளடக்கிய இந்த சூராவில் கூறப்படும் நெகிழ்வான ஒரு சம்பவம்.

ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர்.

அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். ( அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன.) அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;

மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லைஎன்றார். அப்போது ஊர்மக்கள் நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.

என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்என்றார்.

ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டதுஇப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)

இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. மாறாக, தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. 

அவரின் அழைப்புப் பணியால் அவர் தன் சொந்த சமூகத்தின் எதிர்ப்பைச் சந்தித்தாலும், அதற்காகவே அவர் கொல்லப்பட்ட போதிலும் சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான் என்ற சோபனம் குறிப்பிடத்தக்கது.

அழைப்புப் பணியில் இருந்து ஒதுங்கி கொள்ள முடியுமா?

قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

(நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின்பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணைதுணைகளைவிட்டு) அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.( அல்குர்ஆன் 12 : 108 )

நபி {ஸல்} அவர்களின் பாதையில் பயணிக்கும் நீங்களும் நானும் செய்ய வேண்டிய பணி அழைப்புப் பணி என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? ( அல்குர்ஆன்: 41: 33)

அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

சுலைமான் (அலை) அவர்கள் தனது படையை பார்வையிட்டுக் கொண்டு வருகிறார்கள். அங்கே ஹுத் ஹுத் என்ற பறவையைக் காணவில்லை. அது தாமதித்து வந்தது. இந்தப் பறவை தாமதித்து வந்ததற்கான காரணத்தை கூறாவிட்டால், அதை அறுத்து விடுவேன் அல்லது கடுமையாக தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப்பறவை சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறியது. அதை அல்லாஹ், திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ (20) لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ (21) فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ (22) إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ (23) وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ (24) أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ (25) اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (26)

அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து; ”நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார். நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்என்றும் கூறினார்.

(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று, ”தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். ஸபாவிலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” ”நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்.

ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ”அல்லாஹ் அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று). ( அல்குர்ஆன்: 27: 20-26 )

இந்தச் செய்தியை கேட்டபின், அந்தப் பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் தஃவா செய்து, அவர் இஸ்லாத்தில் இணைந்ததாக அல்குர்ஆன் கூறுகின்றது.

قَالَتْ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (44)

இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்எனக் கூறினாள். ( அல்குர்ஆன்: 27: 44 )

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது.  இந்த உலகில் கலாச்சாரம் எனும் பெயரால் சர்வ சாதாரணமாக நிகழும் தீமைகளை கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப்பறவையை விட கீழானவர்களாக அல்லவா மாறி விடுவோம்!

அழைப்புப் பணியில் அண்ணல் நபி ..

நபி அவர்களின் அழைப்புப் பணி பல்வேறு வடிவங்களில், கோணங்களில் அமைந்திருந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

மதி நுட்பமான முறையில் அழைப்புப் பணியை மேற்கொண்டு நபி {ஸல்} அவர்கள் இந்த சன்மார்க்கத்தை ஒருவர் இருவரில் தொடங்கி ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் மனிதர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தார்கள். 23 ஆண்டுகளில்.

மக்காவில் அழைப்பு பணி:-

1)   மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.

2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்வரை தொடர்ந்தது.

3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி:- இது நபித்துவத்தின் பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.

மறைமுக அழைப்புப் பணி:-

நபித்துவத்தின் துவக்க கால கட்டத்தில் அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ (ரலி) என்பவரின் வீட்டை நபி அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

தாருல் அர்கம்...

இந்த வீடு ஸஃபா மலையின் கீழே, அந்த அநியாயக்காரர்களின் கண் பார்வைக்கும் அவர்களது சபைக்கும் தூரமாக இருந்தது. முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வீட்டில் முஸ்லிம்களுக்குக் குர்ஆனை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு அதன் பண்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்கு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மார்க்க கல்வியும் கற்று வந்தார்கள். புதிதாக இஸ்லாமிற்கு வர விரும்புபவர் அவ்விடத்தில் வந்து இஸ்லாமைத் தழுவுவார்கள்.

பகிரங்க அழைப்பு:-

மக்கா வாசிகளை ஒவ்வொரு கிளையார்களை தனித் தனியே கூட்டாக அழைத்து இறைச் செய்தியை சொன்னார்கள் நபி அவர்கள்.

பின்னர் ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகளை அவர்களின் கூடாரங்களில் சந்தித்து அழைப்பு பணியை மேற்கொண்டார்கள்.

இப்படியான சந்திப்பின் வாயிலாக மக்காவுக்கு வெளியேயும் இஸ்லாம் துளிர் விட ஆரம்பித்தது.

மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி:-

துவக்கமாக தாயிஃப் பயணம் அதைத் தொடர்ந்து மதீனாவின் மக்களுக்கு இஸ்லாமிய அழைப்பு. என நபி அவர்களின் அழைப்புப் பணி விரிவடைந்தது.

நபி அவர்களுக்கு ஹிஜ்ரத்தும் அதைத் தொடர்ந்து ஹுதைபிய்யாவும் இஸ்லாத்தை உலகின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் சென்றிட மிகப் பெரும் களமாக அமைந்தது.

தனி நபர்கள் மூலமாக, சிற்றரசர்கள் வாயிலாக, பல்வேறு நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக சத்திய சன்மார்க்கத்தை அழைப்புப் பணியின் துணை கொண்டு நிறைவாக்கினார்கள் நமது நபி அவர்கள்.

சில போது நபி அவர்களின் போதனை , சில போது நபி அவர்களின் நற்பண்பு, சில போது நபி அவர்களின் கனிவு, சில போது நபி அவர்களின் மன்னிக்கும் குணம், சில போது நபி அவர்களின் தயாளம் என்று பல்வேறு காரணங்களால் இஸ்லாம் அன்றைய உலகின் மக்களைக் கவர்ந்தது. இதயத்தில் இடம் பெற்றது.

அல்லாஹ்வும் அழைப்புப் பணிக்கான பல்வேறு அம்சங்களை அல்குர்ஆனில் அப்படித் தானே அடையாளப் படுத்துகிறான்.

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். ( அல்குர்ஆன்: 16: 125 )

1. சோபனமும் நன்மாராயமும் கூறுவது.

2. அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது.

3. மதிநுட்பமாகவும், விவேகமாகவும் செயல் படுவது.

4.அழகிய உபதேசங்களை கூறுவது.

5. மிக அழகிய முறையில் தர்க்கம் செய்வது.

6. கடந்த கால மக்களின்  வரலாறுகளை நினைவு படுத்துவது.

என அழைப்புப் பணியை மேற்கொள்ள பல்வேறு அம்சங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

அந்தந்த காலகட்டத்திற்கு எது பயன்படுமோ அவைகளை பயன்படுத்தி அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

நபி அவர்கள் ஸுமாமாவை வென்றது ஒரு வகை தஃவா என்றால், அதீ இப்னு ஹாத்திமை வென்றது வேறு வகை தஃவா இருவரும்  தேசத்தின் மன்னர்களாக இருந்தவர்கள்.

நபி அவர்கள் இக்ரிமா இப்னு அபீ ஜஹ்லை வென்றெடுத்தது ஒரு வகை தஃவா என்றால், அபூ சுஃப்யான், காலித் இப்னு வலீத் ஆகியோரை வென்றெடுத்தது வேறு வகை தஃவா. இம்மூவரும் இஸ்லாத்தை தகர்க்க வேண்டும் என்று சதா சிந்தித்தவர்கள். அதற்காக உழைத்தவர்கள்.

நபி அவர்கள் ஹிந்தாவையும் மன்னித்தார்கள், வஹ்ஷியையும் மன்னித்தார்கள், பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசியையும் மன்னித்தார்கள், சாவி தர மறுத்த உஸ்மான் இப்னு தல்ஹாவையும் மன்னித்தார்கள் மன்னிப்பு ஒன்று தான். ஆனால் மன்னிப்பின் வடிவங்கள் வெவ்வேறு. 

அபூதர் கிஃபாரி, வாயில் இப்னு ஹுஜ்ர், ஜரீர் இப்னு அப்துல்லாஹ், ஆகியோரின் வருகையின் போது மாநபி அவர்கள் வெளிப்படுத்திய நற்பண்புகள் வெவ்வேறு. பெருங்கொண்ட சமூகத்தின் பிரதிநிதிகள் இவர்கள்.

ஸகீஃப் கோத்திரம், தவ்ஸ் கோத்திரம் இருவேறு கோத்திரத்தாரின் வேண்டுகோள்களுக்கு மாநபி அவர்கள் செவி சாய்த்த விதம் வெவ்வேறு. 

ஆகவே நபி அவர்கள் தஃவா அழைப்புப் பணிக்கு என்று பல்வேறு ஹிக்மத்களை கையாண்டார்கள். முடிவில் இஸ்லாத்தை அங்கு கொண்டு போய் சேர்க்க முடிந்தது. பல்வேறு பயன்களை பெறவும் முடிந்தது.

கௌஸ் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் சிறு பிராயத்து நற்பண்பு ஒரு கொள்ளைக் கூட்டத்துக்கு ஹிதாயத் கொடுத்தது. அவர்களின் உபதேசம் லட்சக்கணக்கான மக்களுக்கு நேர்வழி கிடைக்க காரணமாய் அமைந்தது என்று பார்க்கிறோம். இதே கௌஸ் நாயகத்தின் வழிகாட்டலும் ஆன்மீக பயிற்சியும் தான் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) எனும் மாவீரருக்கு சிலுவைப் படை வீரர்களை வெற்றி கொள்ளச் செய்தது. பைத்துல் முகத்தஸ்ஸை மீட்டெடுக்கச் செய்தது.

துச்சமாக நினைக்காமல் மனம் திறந்து பாராட்டுவோம்!!!

முஅத்தா (முஃதா) போர்…. !
கிபி 629 – ஹிஜ்ரி 8 -ம் ஆண்டு ரோமானியர்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்தமாகும். பெருமானார் அவர்களின் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்துடன்  தூதுவராகச் சென்ற அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல் அஸ்தி (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்கு பகரம் வாங்குவதற்காக நடைபெற்ற யுத்தம் ஆகும்.

லட்சம் பேர் கொண்ட ரோமானிய படையை எதிர் கொள்ள 3000 பேர் கொண்ட படையை ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) தலைமையில் நபி அவர்கள் மதீனத்து மக்களோடு ஸனிய்யதுல் விதா எனும் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

விசேஷமாக மேற்கொண்டு இரண்டு தளபதிகளை முன்மொழிந்து நபி அவர்கள் அனுப்பிய படை.

நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்தது போன்றே மூன்று தளபதிகளும் ஷஹீதாகவே காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் ரோமானியர்களை எதிர் கொண்டது இந்த படை.

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தில் இஸ்லாமிய படையில் மொத்தம் 12 பேர்கள் ஷஹீது ஆனார்கள். (அவர்களின் நான்கு பேர் முஹாஜிரீன்கள். எட்டு பேர்கள் அன்சாரி தோழர்கள்)

முதல் நாளில் மட்டுமே முஸ்லிம் படைகள் நெருக்கடியைச் சந்தித்தது. அடுத்த ஆறு நாட்களும் காலித் (ரலி) அவர்களின் விவேகமான திட்டத்தால் ரோமானியர்கள் யுத்த களத்தில் இருந்து பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

யுத்தம் நடைபெற்ற இடத்தில் இருந்து பல மைல் தூரம் பின்னோக்கிச் சென்ற அவர்கள் ஒரு கட்டத்தில் புறமுதுகிட்டு ஓடத்துவங்கவே தொடர்ந்து அவர்களை துரத்திச் செல்லாமல் இஸ்லாமிய படையை இடையிலேயே வாபஸ் ஆக்கி மதீனாவிற்கு புறப்படுமாறு ஆணை பிறப்பித்தார்கள் காலித் (ரலி)

இந்த முடிவை சற்றும் எதிர்பாராத படை வீரர்கள் தளபதிக்கு கட்டுப்பட்டு மதீனா புறப்பட்டு வந்து விட்டனர்.


وجعل الناس يحثون على الجيش التراب ويقولون يا فرار فررتم في سبيل الله، قال فيقول رسول الله صلى الله عليه وسلم ليسوا بالفرار ولكنهم الكرار إن شاء الله»

இந்த செய்தியை அறிந்து கொண்ட மதீனாவின் மக்கள் படையை வரவேற்க மதீனாவின் எல்லையில் திரண்டிருந்த போது படை வீரர்கள் மீது மண்ணை அள்ளி வீசி "எதிரியின் தாக்குதலுக்குப் பயந்து படையை பாதியில் புற முதுகிட்டு ஓடி வந்து விட்டதாக" குறை கூறினர்.

அப்போது நபி அவர்கள் "இவர்கள் தாக்குதலுக்குப் பயந்து ஓடி வந்தவர்கள் அல்ல. அல்லாஹ் நாடினால் இவர்கள் மீண்டும் ஒரு முறை இந்த மார்க்கத்திற்காக களம் காண்பவர்கள்" என்று கூறினார்கள். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம்)

உலகில் ஆபாசங்களைத் தூண்டும் தீமைகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் அமைதியாக இருக்கும் போது, ஆபாசத்தை தடை செய்ய வேண்டிய இஸ்லாமிய நாடுகளில் சிலது தங்களுடைய நாடுகளில் ஆபாசத்தை திறந்து விட்டு வேடிக்கை பார்க்கும் போது தனியொரு நாடாக மிகப் பெரும் தீமையை எதிர்த்து களம் கண்டிருக்கும் , உலக நாடுகளுக்கு அழகான முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கும் கத்தாரை இந்த ஒரு நல்ல காரியத்தை துவக்கி வைத்ததற்காவது பாராட்ட வேண்டும்.

அழைப்புப் பணியின் மகத்துவம் அறிவோம்!!!

கைபர் போரின் போது கண் வலியால் பாதிப்பு அடைந்திருந்த அலீ (ரழி) அவர்கள் நபி அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது அவர் கண்ணில் தனது உமிழ் நீரைத் தடவி அவருக்காக அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் அவர் குணமடைந்து விட்டார்.

கைபர் போர்களத்தில், அலி (ரலி) அவர்களை தளபதியாக்கி, அவர்கள் கையில் கொடியை கொடுத்தார்கள் நபி அவர்கள்.

தனது கரத்தில் கொடியை வாங்கி கொண்ட அலி (ரலி) அவர்கள்,

அல்லாஹ்வின் தூதரே! அவர்களும் நம்மைப் போன்று ஆகும் வரை நான் போர் புரியட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் நீ நிதானத்துடன் சென்று அவர்களது முற்றத்தில் இறங்கு. பின்பு அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கொடு. அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைப் பற்றி எடுத்துச் சொல்.

فو اللَّهِ لأنْ يهْدِيَ اللَّه بِكَ رجُلًا واحِدًا خَيْرٌ لكَ من حُمْرِ النَّعم 

அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மேலானதாகும்என்று கூறினார்கள் ( நூல்: புகாரி )

கத்தாரின் தீமைகளுக்கு எதிரான இந்த முன்னெடுப்பை அல்லாஹ் கபூல் செய்தருள்வானாக!

எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து கத்தாரைக் காத்தருள்வானாக! இஸ்லாமிய ஷரீஆவின் அனைத்து வித சட்டங்களையும் அமுல்படுத்தும் தலை சிறந்த இஸ்லாமிய நாடாக அங்கீகரிப்பானாக! 

4 comments:

  1. சுப்ஹானல்லாஹ். மிக மிக அற்புதமான ஆக்கம். வல்லோன் அல்லாஹ் நிறைவான வெகுமதிகளை ஈருலகிலும் தந்தருள்வானாக!

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் கட்டுரை அழகு.மிக அழகு மிக மிக அழகு நிறைவான கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் பாராட்டுக்கள் மற்றும் ஏராளமான துஆக்கள்

    ReplyDelete