Thursday 5 January 2023

சுந்தர நபி {ஸல்} அவர்களுடன் சுவனத்தில்…

சுந்தர நபி {ஸல்} அவர்களுடன் சுவனத்தில்


சுவனத்தின் உயர் அந்தஸ்துக்களில் மிகவும் உயர்ந்தது மனிதர்களில் மிகவும் 
புனிதர்களான நபிமார்களுடன் இணைந்திருக்கும், தோழமை கொண்டிருக்கும்  அந்த உன்னதமான தருணம் தான்.

அதிலும் குறிப்பாக நம் உயிரினும் மேலான நமது நபி {ஸல்} அவர்களுடன் சுவனத்தில் வீற்றிருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்றால் எவ்வளவு மகத்தான பாக்கியமாகும்.

நபி {ஸல்} அவர்களுடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்த பல நபித்தோழர்களும் நபி ஸல் அவர்களுடன் சுவனத்திலும் வீற்றிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். அண்ணல் நபி ஸல் அவர்களிடம் ஆவலுடன் தெரிவித்தார்கள் என்கிற செய்திகளை எல்லாம் ஹதீஸ் கிரந்தங்களின் வாயிலாக நாம் அறிந்து வருகிறோம்.

فَقَالَ النَّبِيُّ 

 اسْأَلْ تُعْطَهْ اسْأَلْ تُعْطَهْ إِلَيْهِ أَبُو بَكْرٍ لِيُبَشِّرَهُ وَقَالَ لَهُ: مَا سَأَلْتَ اللَّهَ الْبَارِحَةَ َ: قُلْتُ

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ مُحَمَّدٍ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு நாள் இரவு  இஷாத் தொழுக்கைக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன்  நபவீக்கு வருகை தந்தார்கள்.

அங்கே உமர் (ரலி) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோரும் அமர்ந்து பேசிக்  கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகில் நபி {ஸல்} அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் சூரா அந்நிஸாவை  ஓதிக் கொண்டிருந்தேன். சூரா அந்நிஸாவின் நூறாவது வசனத்தோடு என் தொழுகையை நான் நிறைவு செய்தேன்.

தொழுது முடித்ததும் என்னை அழைத்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்  அப்துல்லாஹ்வே!அல்லாஹ்விடம் நீ விரும்பியதை கேள்! உனக்கு அல்லாஹ் நீ  விரும்பியதை வழங்குவான்! என இரு முறை கூறினார்கள்.

பின்பு,“யார் குர்ஆனை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கொண்டு வந்து  இறக்கியருளிய போது ஓதப்பட்டதைப் போன்று ஓத வேண்டும் என்று  விரும்புகின்றார்களோ அவர்கள் இப்னு உம்மி அப்த் (இது இப்னு அப்பாஸ் அவர்களின்  செல்லப்பெயர்) அவர்கள் ஓதுவது போன்று ஓதிக் கொள்ளட்டும்! என்றும் கூறினார்கள்.

மறுநாள் வைகறைத் தொழுகை முடித்து நான் அமர்ந்திருக்கும் போது என்னிடம்  வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த சோபனத்தை என்னிடம் கூறிய பிறகு  அப்துல்லாஹ்வே! நீ விரும்பியதை அல்லாஹ்விடம் கேள்! அல்லாஹ் நீ விரும்பியதை உமக்கு தருவான்! என நபி {ஸல்} அவர்கள் உம்மிடம் கூறினார்களே இன்றைய  அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ்விடம் நீர் என்ன துஆ செய்தீர்  கூறுங்களேன் என்று கேட்டார்கள்.

அதற்கு, நான் அல்லாஹ்வே! உன்னிடம் நான் நிலையான ஈமானையும், அழிந்து போகாத அருட்கொடைகளையும், உயர்வான சுவனத்தில் முஹம்மத் {ஸல்}  அவர்களோடு என்றென்றும் தோழமை கொள்கிற பெரும் பேற்றையும் கேட்கிறேன்  என்று நான் கேட்ட அந்த துஆவைக் கூறினேன்.                                                                          ( நூல்: தஹாவீ )

"முராஃபகத்தக்க ஃபில் ஜன்னா யாரஸூலல்லாஹ்" என்று நபித்தோழர்கள் அங்கலாய்த்து ஆவலாய் கேட்ட அந்த பாக்கியத்தை அவர்களின் உம்மத்தாகிய நாம் அவர்களிடம் கேட்காமலேயே இதோ இந்த அமலைச் செய்யுங்கள்! இந்த அமலைச் செய்தால் என் அருகே இப்படி சுவனத்தில் அளவளாவலாம் என்று நம்மை நோக்கி அழைத்துக் கூறிய அமல்கள் சில உண்டு. அந்த அமல்களில் ஒன்று தான் "அநாதைகளுடன் அழகிய முறையில் உறவாடுதல்" எனும் உயரிய பண்பாகும்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِيهِ عَنْ سَهْلٍ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “”நானும் அநாதையை பராமரிப்போரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்கு மிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள். அறி : சஹ்ல் பின் சஅத் (ரலி),  ( நூல் : புகாரி-5304 )

உலகப் போர் அனாதைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

அதாவது போரால் சூழப்பட்ட நாடுகளில் இருந்து அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்காக இந்த தினம் உருவாக்கப்பட்டது.

இந்த நாளின் நோக்கம், போரில் அனாதைகள் அல்லது மோதலில் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது வடகிழக்கில் 900,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதைகளாக இருந்ததாகவும் அவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் UNICEF மதிப்பிட்டுள்ளது. 

அனாதைகளான குழந்தைகளுக்கு கல்வி, உணவு, வீடு எதுவும் இல்லை. இப்படிப்பட்ட அனாதை குழந்தைகளுக்காகவே உலகப் போர் அனாதைகள் தினம் தொடங்கப்பட்டதாக ஐ.நாவின் யுனிசெஃப் தெரிவித்துள்ளது..

மேலும், இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான அனாதைகளையும், போலந்தில் 300,000 அனாதைகளையும், யூகோஸ்லாவியாவில் மட்டும் 200,000 பேரையும் உருவாக்கியது என்று அதிர்ச்சியூட்டும் ஒரு மதிப்பீடும் இருக்கிறது. ( தகவல்: https://www.uniquenewsonline.com/world-war-orphans-day-2022-theme-history/ )

போர் மட்டுமல்ல பல்வேறு காரணங்களால் அநாதைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர்.

சமீபத்திய COVID-19 காரணமாக உலகெங்கிலும் 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்  தங்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்துவிட்டதாக தி லான்செட்டில் (The Lancet) வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கணவன் இறந்த பிறகு அந்த குடும்பத்திற்கு இரண்டு பெயர்கள் வந்து விடும் ஒன்று மனைவியை விதவை என்றும், பிள்ளைகளை அநாதைகள், என்றும் அழைப்பார்கள். இது விரும்பியோ, விரும்பாமலோ,உலகில் நடந்து வருகின்றது. 

எனவே, இயல்பான மரணம் கூட ஒரு குழந்தையை அநாதையை உருவாக்கி விடும்.

சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். 

பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை அனாதை குழந்தைஎன்ற அடைமொழியுடன்  அழைக்கப்படுகிறது.

அனாதை என்பதற்கு தமிழ் அகராதியில்   திக்கற்றவன்’, ‘ஆதரவற்றவன்என்று பொருள்.

ஆதரிப்பார் அற்றவன் அனாதை’, ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அனாதை ஆவான்என இஸ்லாம் கூறுகிறது.

அநாதைகளைப் பொறுத்தவரை இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப்படுகின்றனர். இரண்டுமே அநீதம், பாவம் என்று இஸ்லாம் உரத்துக் கூறுகின்றது. 

அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுமார் 23 இடங்களில் அநாதைகள் குறித்து அவர்களின் உரிமைகள் கடமைகள் குறித்து பேசுகிறான்.

அந்த இடங்களில் எல்லாம் அனாதைகளுடனான தொடர்புகளில்  பல முக்கியமான அம்சங்களைப் பற்றி திருக்குர்ஆனின் வசனங்கள் கோடிட்டு காட்டுவதை அவதானிக்கலாம். 

1. அனாதைகளை அன்பால், அழகிய சொல்லாடலால் அரவணைப்பது,  2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை அறிவுசார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது, 3. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச் செய்வது. 4. அழகிய முறையில் உறவாடி அன்பை தழைத்தோங்க செய்வது. 5. அநீதி இழைக்க கூடாது. இப்படியான அம்சங்கள் தான் தகுந்த பாதுகாப்பையும், கல்வியையும், பொருளாதாரத்தையும் பெற்று ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து உடையவனாக மாற்றிக்காட்டுகிறது.

1. அநாதைகளுடன் அழகிய உறவாடலை இஸ்லாம் தூண்டுகிறது...

الإحسان إلى اليتيم خلق إسلامي رفيع حثنا الإسلام عليه وندبنا إليه , بل وجعله من أفضل الأعمال وأزكاها , قال تعالى : \" لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلائِكَةِ وَالْكِتابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمالَ عَلى حُبِّهِ ذَوِي الْقُرْبى وَالْيَتامى وَالْمَساكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقابِ وَأَقامَ الصَّلاةَ وَآتَى الزَّكاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذا عاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْساءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولئِكَ هُمُ الْمُتَّقُونَ (177) سورة : البقرة.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.                                        ( அல்குர்ஆன்: 2: 177 )

2. இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களிலேயே கவனம் செலுத்தப்பட்ட விவகாரம்...

ولقد جاء الإسلام واليتيم ليس له حظ في الحياة فأمر بإكرامه والإحسان إليه ,حينما هاجر المسلمون إلى الحبشة وأرادت قريش إرجاعهم , وقف جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ ، أمام النجاشي ملك الحبشة يشرح له محاسن الإسلام وأخلاقياته السامية فَقَالَ لَهُ : أَيُّهَا الْمَلِكُ ، كُنَّا قَوْمًا أَهْلَ جَاهِلِيَّةٍ ، نَعْبُدُ الأَصْنَامَ ، وَنَأْكُلُ الْمَيْتَةَ ، وَنَأْتِي الْفَوَاحِشَ ، وَنَقْطَعُ الأَرْحَامَ ، وَنُسِيءُ الْجِوَارَ ، يَأْكُلُ الْقَوِيُّ مِنَّا الضَّعِيفَ ، فَكُنَّا عَلَى ذَلِكَ ، حَتَّى بَعَثَ اللَّهُ إِلَيْنَا رَسُولاً مِنَّا ، نَعْرِفُ نَسَبَهُ وَصِدْقَهُ ، وَأَمَانَتَهُ وَعَفَافَهُ ، فَدَعَانَا إِلَى اللهِ لِنُوَحِّدَهُ وَنَعْبُدَهُ ، وَنَخْلَعَ مَا كُنَّا نَحْنُ نَعْبُدُ وَآبَاؤُنَا مِنْ دُونِهِ مِنَ الْحِجَارَةِ وَالأَوْثَانِ ، وَأَمَرَنَا بِصِدْقِ الْحَدِيثِ ، وَأَدَاءِ الأَمَانَةِ ، وَصِلَةِ الرَّحِمِ ، وَحُسْنِ الْجِوَارِ ، وَالْكَفِّ عَنْ الْمَحَارِمِ وَالدِّمَاءِ ، وَنَهَانَا عَنِ الْفَوَاحِشِ ، وَقَوْلِ الزُّورِ ، وَأَكْلِ مَالَ الْيَتِيمِ ، وَقَذْفِ الْمُحْصَنَةِ ، وَأَمَرَنَا أَنْ نَعْبُدَ اللهَ وَحْدَهُ ، لاَ نُشْرِكُ بِهِ شَيْئًا ، وَأَمَرَنَا بِالصَّلاَةِ ، وَالزَّكَاةِ ، وَالصِّيَامِ . أخرجه أحمد 1/201(1740) و\"ابن خزيمة\" 2260 .

மன்னர் நபித்தோழர்களை அழைத்து விசாரிக்கிறார்.

அவரிடம், மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம்.

சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அசிங்கமான மானக்கேடான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம்.

சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம்

அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம்.

பலமானவர்கள் பலவீனமானவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மையையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும்.

அவர் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என எங்களுக்குச் சொன்னார்.மற்றவைகளை விடச் சொன்னார். மரம் செடி கொடிகள் சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார்.

உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார். அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார். சொந்தபந்தங்களைச் சேர்த்து வாழவேண்டும் என்றார்.

அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார். இறைவனால் தடை செய்யப்பட்டதைத் தவிர்க்கச் சொன்னார். உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார்.

அசிங்கமான காரியத்தைத் தடுத்தார். பொய் சொல்லக் கூடாது என்றார்.

அனாதை சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார்.பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார்.

தொழச் சொன்னார். ஜகாத் கொடுக்கச் சொன்னார். நோன்பு வைக்கச் சொன்னார் என்று அப்படியே பட்டியல் போட்டு பேசுகிறார்.

3. அநாதைகளின் பொருளாதாரத்தை சுரண்டுவது, வரம்பு மீறுவது  பாவம் ஆகும்.

ولقد أكد القرآن الكريم على حقيقة الإحسان إلى اليتيم , وعدم الاعتداء على ماله , قال تعالى : \" وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (152) وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (153) سورة الأنعام .

وقال : \" وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا (34) سورة الإسراء .

மேலும் அநாதைகளின் சொத்துக்களை அழகிய முறையிலே தவிர நீங்கள் நெருங்காதீர்கள். ( 17 – 34 )

அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.                                          ( அல்குர்ஆன்: 6: 152 )

 

4. அழிவில் ஆழ்த்தும் பெரும் பாவம் என எச்சரிக்கை செய்கிறது..

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ:

( اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ، قَالُوا : يَا رَسُولَ اللهِ ، وَمَا هُنَّ ؟ قَالَ : الشِّرْكُ بِاللهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ.)\".أخرجه البخاري 4/12(2766) و7/177و((مسلم)) 1/64(175).

நாசமாக்கக் கூடிய ஏழு பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய போது, யாரஸூலல்லாஹ், அந்த ஏழு பாவங்கள் யாவை”? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர்.1. அல்லாஹுதஆலாவுக்கு இணைவைத்தல், 2. சூனியம் செய்தல், 3. அநியாயமாகக் கொலை செய்தல், 4. வட்டிப் பொருளைச் சாப்பிடுதல், 5. அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், 6. (தன் உயிரைக் காக்க) போரிலிருந்து படையினரை விட்டுப் புறமுதுகிட்டு ஓடிவிடுதல், 7. பரிசுத்தமான ஈமான் உள்ள-தீயவைகளை அறியாத அப்பாவிப் பெண்கள் மீது விபச்சாரம் புரிந்ததாக அவதூறு கூறுதல்என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

5. அநாதைகள் பராமரிப்பும்... அழகிய வழிகாட்டலும்...

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ (وَلاَ تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلاَّ بِالَّتِى هِىَ أَحْسَنُ) وَ(إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا) قَالَ اجْتَنَبَ النَّاسُ مَالَ الْيَتِيمِ وَطَعَامَهُ فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَشَكَوْا ذَلِكَ إِلَى النَّبِىِّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ (وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلاَحٌ لَهُمْ خَيْرٌ) إِلَى قَوْلِهِ (لأَعْنَتَكُمْ ). أخرجه أحمد 1/325 (3002) و(أبوداود) 2871.

அநாதைகள் செல்வத்தின் பக்கம் அழகிய முறையில் அன்றி நெருங்கக்கூடாது எனும் வசனமும், எவர் அநாதைகளின் செல்வத்தை அநியாயமாக உண்கிறாரோ எனும் வசனமும் இறக்கியருளப்பட்ட போது அநாதைகளைப் பராமரிப்பவர்களுக்கு சிரமமாக இருந்தது.

அப்போது பின்வரும் வசனம் இறங்கியது...

அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல்ல ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 2:220)

 

6. அநாதைகளை எவ்வகையிலும் இழிவு படுத்தக் கூடாது என எச்சரிக்கிறது.

وحذر القرآن من إهانة اليتيم وأذاه بأي نوع من الاهانة والأذى , قال سبحانه: \" فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ (16) كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ (17) وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (18) وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا (19) وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا (20) كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا (21) وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا (22) وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى (23) سورة الفجر .

وقال : \" فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ (9) سورة الضحى .

وقال : \" أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3) سورة الماعون .

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்எனக் கூறுகிறான். அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள். ( அல்குர்ஆன்: 89 : 15-20 )

அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்! ( அல்குர்ஆன்: 93: 6-10 )

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. ( அல்குர்ஆன்: 107: 1-3 )

அநாதையின் உரிமைக்காக கடைசி வரை போராடிய மாநபி {ஸல்}…

وروى عقيل عن ابن شهاب أن يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة أعطه نخلتك فقال لا فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال لا. فسمع بذلك أبو الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء أبو الدحداحة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت لليتيم إن أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم

ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

 

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன் என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள். 

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன் என்று கூறினார்கள்.

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ثم قتل أبو الدحداحة شهيداً يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب عذق مذلل لأبي الدحداحة في الجنة " .

வாய் மொழியாகச் சொன்ன அந்த உத்தரவாதத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உஹத் யுத்தகளத்திலே வீரமரணம் அடைந்து ஷஹீதாகக் காட்சி தந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களை ஆரத்தழுவி, தங்களது புனித மடியில் கிடத்தி விட்டு கனிகள் தரும் மதுரமான எத்தனையோ சோலைகள் சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றன என்று கூறி உறுதிபடுத்தினார்கள்.

                    ( நூல்:  الإستيعاب في معرفة الأصحاب,பாகம்:3, பக்கம்:102 )

 حكي عن بعض السلف قال كنت في بداية أمري مكباً على المعاصي وشرب الخمر فظفرت يوماً بصبي يتيم فقير فأخذته وأحسنت أليه وأطعمته وكسوته وأدخلته الحمام وأزلت شعثه وأكرمته كما يكرم الرجل ولده بل أكثر فبت ليلة بعد ذلك فرأيت في النوم أن القيامة قامت ودعيت إلى الحساب وأمر بي إلى النار لسوء ما كنت عليه من المعاصي فسحبتني الزبانية ليمضوا بي إلى النار وأنا بين أيديهم حقير ذليل يجروني سحباً إلى النار وإذا بذلك اليتيم قد اعترضني بالطريق وقال: خلوا عنه يا ملائكة ربي حتى أشفع له إلى ربي فإنه قد أحسن إلي وأكرمني. فقالت الملائكة: إنا لم نؤمر بذلك وإذا النداء من قبل الله تعالى يقول: خلوا عنه فقد وهبت له ما كان منه بشفاعة اليتيم وإحسانه إليه. قال: فاستيقظت وتبت إلى الله عز وجل وبذلت جهدي في إيصال الرحمة إلى الأيتام

ஸலஃபுகளில் ஒருவர் தனது வாழ்க்கையின் அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டார்.

என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் மிகவும் மோசமானதாகும். சதா குடியிலும் பாவத்திலும் கழிந்தது. ஒரு அநாதைச் சிறுவன் தான் என் வாழ்க்கையை மாற்றியமைத்தான்.

ஒரு நாள் ஒரு ஏழை அநாதைச் சிறுவனை நான் சந்தித்தேன். அவனோ அழுக்குடன் காட்சியளித்தான். அவனை அழுக்குகள் நீக்கி அழகிய முறையில் குளிக்க வைத்து, தூய ஆடைகள் அணிவித்து, அழகான உணவுகளை உண்ணக் கொடுத்து மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தி அனுப்பி வைத்தேன்.

அன்று இரவு உறக்கத்தில் கனவு. அந்த கனவில் மறுமை நாளின் மஹ்ஷர் பெருவெளி பாவியாகிய எனக்கு நரகம் தீர்ப்பாகி ஜபானியா மலக்குகள் காலில் சங்கிலியிட முனைந்தனர். 

அப்போது. அந்த அநாதைச் சிறுவன் "அல்லாஹ்வின் வானவர்களே! இவர் அநாதையான என்னுடன் அழகிய முறையில் பேருபகாரத்தோடு நடந்து கொண்டார். ஆகவே, இவரை விட்டு விடுங்கள்! அவருக்காக நான் இறைவனிடம் பரிந்துரை செய்கிறேன் என்றான். அதற்கு வானவர்கள் "உம் சொல்லைக் கேட்கவோ, உமக்கு பதில் தரவோ எங்களுக்கு கட்டளையிடப்படவில்லை" என்றார்கள்.

அப்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புறத்தில் இருந்து  வானவர்களை நோக்கி "அநாதையோடு அவர் அழகிய முறையில் நடந்து கொண்ட காரணத்திற்காக அவரை விடுவித்து விடுங்கள்! என்று ஒரு குரல் ஒலித்தது. திடுக்கிட்டு விழித்தேன். தவ்பாச் செய்து என்னை சீர்திருத்திக் கொண்டேன். மேலும், அநாதைகளுடனான உறவை கருணையோடு வலுப்படுத்திக் கொண்டேன்.

قال أنس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم: خير البيوت بيت فيه يتيم يحسن إليه وشر البيوت بيت فيه يتيم يساء إليه وأحب عباد الله إلى الله تعالى من اصطنع صنعاً إلى يتيم أو أرملة

அனஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:- வீடுகளில் சிறந்த வீடு அநாதைகள் நல்ல முறையில் நடத்தப்படும் வீடாகும். வீடுகளில் கெட்ட வீடு அநாதைகள் தீய முறையில் நடத்தப்படும் வீடாகும்.

அடியார்களில் அல்லாஹ்விடம் மிகவும் பிரியத்திற்குரியவர் அநாதைகளுக்காகவே அவர்களை அரவணைப்பதற்காகவே வேண்டி திட்டமிட்டு செயல்படுபவர்கள் ஆவர். ( நூல்: அல்கபாயிர் லி இமாமித் தஹபீ )

 وقال داود عليه السلام في مناجاته: إلهي ما جزاء من أسند اليتيم والأرملة ابتغاء وجهك؟ قال: جزاؤه أن أظله في ظلي يوم لا ظل إلا ظلي معناه ظل عرشي يوم القيامة

தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வோடு உரையாடும் போது "இறைவா! அநாதைகளையும், விதவைகளையும் உன் பொருத்தத்தை நாடி அன்புடன் அரவணைப்பவர்களுக்கு என்ன கூலியை நீ வழங்குவாய்?" என்று கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் "நிழலே இல்லாத அந்த நாளில் என் நிழலில் அவர்களை இடம் பெறச் செய்வதே அவர்களுக்கான கூலியாகும்" என்று கூறினான். ( நூல்: அல்கபாயிர் லி இமாமித் தஹபீ )

وقال رجل لأبي الدرداء رضي الله عنه: أوصني بوصية قال ارحم اليتيم وأدنه منك وأطعمه من طعامك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم أتاه رجل يشتكي قسوة قلبه فقال رسول الله صلى الله عليه وسلم إن أردت أن يلين قلبك فأدن اليتيم منك وامسح رأسه وأطعمه من طعامك فإن ذلك يلين قلبك وتقدر على حاجتك

ஒருவர் தமக்கு உமதேசிக்குமாறு அபுத்தர்தா ரலி அவர்களிடம் வேண்டி நின்றார். அதற்கு அபுத்தர்தா ரலி அவர்கள் "அநாதைகள் மீது கருணை காட்டுவீராக! உமக்கு அருகாமையில் அவர்களை அமர வைப்பீராக! நீர் உண்ணும் உணவையே அவர்களுக்கும் உண்ணக் கொடுப்பீராக! ஏனெனில் நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் "ஒருவர் நபி ஸல் அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து தமது உள்ளம் இறுகி விட்டதாக கூறினார். அந்த மனிதருக்கு தீர்வு சொல்லும் நோக்கில் நபி ஸல் அவர்கள் "தோழரே! உமது உள்ளம் இளகிட வேண்டுமானால் உன் அருகே அநாதைகளை நெருக்கிக் கொள்வீராக! அவர்களின் தலையை வருடி விடுவீராக! நீர் உண்பதையே அவருக்கும் உண்ணக் கொடுப்பீராக! அதன் காரணமாக உமது உள்ளம் மென்மையாகும். உமது இதர தேவைகளும் நிறைவேறும்" என்று கூறினார்கள். ( நூல்: அல்கபாயிர் லி இமாமித் தஹபீ )

அநாதைகள் மீது இரக்கம் கொண்டவர்கள் எல்லா காலத்திலும் இருப்பர்...

சமீபத்தில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்ற போரும், போரினால்  ஏற்பட்ட பாதிப்புகளும் உலகம் அறிந்தது. ரஷ்யா படைகள் வீசிய குண்டு மழையால் உக்ரைன் உருக்குலைந்தது. 100 நாட்களை கடந்தும் போரின் உக்கிரம் குறையவில்லை. இதனால் உக்ரைனில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து அநாதைகள் ஆகினர். அவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் அறக்கட்டளைக்கு 5 லட்சம் டாலர் நிதி தருவதாக அறிவித்தார் ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையாளரான டிமிட்ரி மொராடோவ்.  

ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையான நோவாவா கெசட்டேவின் நிறுவனர்களில் ஒருவரான டிமிட்ரி மொராடோவுக்கு கடந்த 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளரான மரியா ரெஸ்ஸாவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை அவர் பகிர்ந்துகொண்டார். கருத்துச் சுதந்திரத்தை  நிலைநாட்ட,  உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் பாடுபட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி மொராடோவுக்கும், மரியா ரெஸ்ஸாவுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உலகின் உட்சபட்ச பரிசாக கருதப்படும் நோபல் பரிசையே ஏலத்தில் விட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டியுள்ளார் ரஷ்யரான டிமிட்ரி மொராடோவ். 

நோபல் பரிசுடன் வழங்கப்பட்ட 175 கிராம் கொண்ட தங்க பதக்கத்தை ஆன்லைன் மூலம் ஏலம் விடுவதை கடந்த ஜூன் 1ந்தேதி தொடங்கினார். பதக்கத்தை தங்கமாக பார்த்தால் அதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம் டாலர்தான் ஆனால் அதில் இழையோடும் டிமிட்ரி மொராடோவின் மனித நேயம் விலைமதிப்பற்றது என்பதால் ஏலத்தொகை கிடுகிடுவென உயர்ந்தது. 

இறுதியாக 5.5 லட்சம் டாலர் அளவிற்கு அதாவது இந்தியா ரூபாயின் மதிப்பிற்கு சுமார் 43 கோடி ரூபாய் அளவிற்கு டிமிட்ரி மொராடோவின் நோபல் பரிசு ஏலம்போனது.   நோபல் பரிசை விற்று தான் அறிவித்ததைவிட அதிக தொகையை உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக கொடுத்தார்.  ( தகவல் : https://m.dinakaran.com/article/News_Detail/775951/amp )

அநாதைகளை அன்புடன் அரவணைப்போம்!! சுந்தர நபியுடன் சுவனத்தில் வீற்றிருப்போம்!! 

4 comments:

  1. இப்னு உம்மி அப்த் (இது இப்னு அப்பாஸ் அவர்களின் செல்லப்பெயர்) தவறாக பதிவாகி விட்டது. தவறுக்கு மன்னிக்கவும்! இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் செல்லப் பெயர்

    ReplyDelete
  2. ஹஜ்ரத் அல்ஹம்து லில்லாஹ் படிக்கும் போதே கண்களிள் கண்ணீர் வந்து விட்டது அற்புதமான பதிவு ஹஜ்ரத் அல்லாஹ் இன்னும் இன்னும் உங்களின் கல்வியில் பரகத் ணெய்வானாக

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    அருமையான விசயங்கள்

    ReplyDelete