Thursday 26 January 2023

தனிமையில் இறையச்சம்!!!

தனிமையில் இறையச்சம்!!!

சிலர் சமூகத்தின் பார்வையில் இருக்கும் போதும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் போதும், நல்லவர்களாய், பத்தரை மாத்து  தங்கமாய் மிளிர்கிறார்கள். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதென்ன!!மார்க்கக் கடமைகளை ஆர்வத்தோடு  செவ்வனே செய்வதென்ன அப்படித்தான் இருக்கிறார்கள்; தீமைகளை விட்டும் காத தூரம் தள்ளி நிற்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் சமயங்களில், மார்க்கம் தடுத்த காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள். தங்களது கடமைகளிலும் பொறுப்புகளிலும் பொடும்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இத்தகைய அரை குறையான அல்லாஹ்வின் பயம் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அழகல்ல.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொதுவெளியில் இருக்கும் அல்லாஹ்வின் பயம் யாருமே பார்த்திடாத தனித்திருக்கும் சமயத்திலும்  நம்மிடம் இருப்பது அவசியம்.

ஏனெனில், அதுவே ஒரு  இறை நம்பிக்கையாளரிடம் இருக்கும் ஈமானுக்கும் இறையச்சத்திற்கும் முழுமையான சான்றாகும்.

அகிலத்தின் அருட்கொடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனைகளில் ஒன்று.

أن النبي صلى الله عليه وسلم كان يسأله ربه ويقول: «وأسألك خشيتك في الغيب والشهادة» (رواه النسائي، وأحمد، وابن حبان وغيرهم).

அல்லாஹ்வே! பொதுவிலும் மறைவிலும் உனக்கு பயந்து வாழும் பாக்கியத்தை உன்னிடம் கேட்கின்றேன்" என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )

தமக்கு அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை ஒன்றை நல்குமாறு வேண்டி நின்ற அபூதர் ரலி அவர்களுக்கு 

وقد أوصى بذلك أبا ذرٍ رضي الله عنه حين قال له: «أوصيك بتقوى الله في سِرِّ أمرك وعلانيته» (رواه الإمام أحمد).

அபூதர்ரே! உம் பொது வாழ்க்கையிலும் தனிமையிலும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை பகர்கிறேன்"! என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மது)

ஒட்டுமொத்தமாக இந்த முழு சமூகத்தின் கவனத்திற்கும் எச்சரிக்கை செய்யும் முகமாக

فقال عليه الصلاة والسلام: «اتق الله حيثما كنت» (من حديثٍ رواه الترمذي)

"நீங்கள் எங்கிருந்த போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

எனவே, தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் மிகவும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள்மறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களில்  வாயிலாக மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது,

 اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.    ( அல்குர்ஆன்: 67: 12 )

யார் தனிமையில் இறைவனை அஞ்சுகின்றாரோ அத்தகையவருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியைத் தயாரித்து வைத்திருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான்.

الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ‏

அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.  ( அல்குர்ஆன்: 21: 49 )

தனிமையில் அல்லாஹ்வைப் பயந்து பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்பவரே, மறுமை நாளையும் அஞ்சுபவர் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْ

தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.(அல்குர்ஆன்:35:18)

தனிமையில் தன்னைத் தானே பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவரைப் பரிசுத்தப்படுத்தும் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏

இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!  ( அல்குர்ஆன்: 36: 11 )

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கின்ற மரியாதைக்குரிய கூலிக்குச் சொந்தக்காரர்களாக மாறி விட முடியும் என்று அல்லாஹ் சான்று பகர்கின்றான்.

எச்சரிக்கை!!

தனிமையில் நாம் மட்டும் தான் இருக்கிறோம். நாம் செய்யும் பாவம் நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. யாரும் பார்க்க வில்லை என்று ஒருவன் நினைத்தால் அந்த நொடியிலேயே அவனிடம் குஃப்ர் - இறை நிராகரிப்பு ஏற்பட்டு விடுகிறது என்று பல்வேறு வசனங்கள் எச்சரிக்கின்றது.

 

وقال في سورة الحديد: {وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ} [من الآية:4]، وفي سورة النساء: {إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيباً} [النساء من الآية:1]. وفي سورة الممتحنة: {وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ} [الممتحنة من الآية:1]

يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ [الغافر -19]

... إلى آخر هذه الآيات.

"நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவனு(அல்லாஹ்வு)ம் இருக்கின்றான். நீங்கள் செய்வதை அல்லாஹ் (மிகத் தெளிவாக) பார்த்துக் கொண்டு இருக்கின்றான்". 

"திண்ணமாக! அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்".

"நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைப்பதையும், வெளிப்படையாக செய்வதையும் நான் மிகவும் அறிவேன்".

"அவன் (அல்லாஹ்) கண்கள் செய்யும் மோசடிகளையும், உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்". 

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வசனத்தில் அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுவான்.

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْا‌ۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.                       ( அல்குர்ஆன்: 58: 7 )

நாம் என்னதான் வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவனாக வலம் வந்தாலும், தனிமையில் மறைவான சூழலில் இருக்கும் போது இறைவனுக்கு அஞ்சி நடக்கவில்லையென்றால், மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ بْنِ حَدِيجٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ

«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا . قَالَ ثَوْبَانُ : يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا - أظهر مواصفاتهم - أَنْ لَا نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ ؟

قَالَ : أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنْ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا . رواه ابن ماجه»

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் திஹாமாஎனும் மலைகள் அளவுக்கு நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்என்று நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!என்றோம்.

அதற்கு நபியவர்கள் அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்என்று கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )

இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான வாசகத்தை நாம் உற்று நோக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதாவது, திஹாமா எனும் மலை அளவுக்கு நன்மை செய்தவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடுவான். அத்தகைய கைசேதப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து நபித்தோழர்கள் கேட்கும் போது, ஒற்றை வார்த்தையில், இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தார்கள்.

அதாவது, உங்களைப் போன்றே வணக்க வழிபாடுகளில், மார்க்க காரியங்களில் கவனமாக இருப்பார்கள். இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்; ஆனால் தனித்திருக்கும் போதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் தடை செய்யப்பட காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பார்கள்" என்று.

கண்ணியத்திற்குரியோர்!!

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’’ என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’’ என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி வெளிப்படையிலும் தனிமையிலும் பயபக்தியுடன் வாழ்கிறாரோ, அவரே மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள். மேலும், இறையச்சத்தின் முன்மாதிரி நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தனிமையில் இருந்த போதும் கூட, அல்லாஹ்வின் அருளால் தன்னுடைய கற்பை, தன்னுடைய எஜமானியிடமிருந்து தற்காத்துக் கொண்டார். இவரும் மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள்.

எனவே, தனிமையில் இறையச்சம் உள்ளவர்கள் கண்ணியத்திற்குரியவர்களாவர்.

وكان عمر بن الخطاب رضي الله عنه يسير في طريق ومعه الأحنف بن قيس، فمروا على راعي غنم فقال له عمر: يا راعي الغنم! بعنا شاة من هذه الغنم، فقال الراعي: إنني والغنم مملوكين لسيدي ولا أملك شيئاً، فقال: بعنا شاة وقل: أكلها الذئب، فرفع الغلام بصره إلى السماء وقال: وأين الله؟ فبكى عمر رضي الله عنه حتى اخضلت لحيته، وذهب إلى سيد هذا الراعي واشتراه وأعتقه، وقال: كلمة أعتقتك في الدنيا وأرجو الله أن تعتقك من النار يوم القيامة.

உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்களுடன் வீதியொன்றின் வழியாக சென்றார்கள்.  அப்போது அங்கே ஒரு இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் "இடையனே! இந்த ஆடுகளில் ஒரு ஆட்டை விலைக்கு தருகிறாயா?" என்று கேட்டார்கள்.

அதற்கவன் "நானும் இந்த ஆடுகளும் என் எஜமானனுக்கு சொந்தமானவர்கள்! நான் இந்த ஆடுகளுக்கு சொந்தக்காரன் அல்ல. எனவே, உங்களுக்கு நான் இதை விற்பனை செய்ய முடியாது' என்று கூறினான்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் "எங்களுக்கு ஒரு ஆட்டை விற்று விடு. உன் எஜமான் ஒரு ஆடு குறைகிறதே? அது எங்கே என்று கேட்டால் அந்த ஆட்டை ஓநாய் அடித்துச் சாப்பிட்டு விட்டது! என்று சொல்லி விடு"  என்றார்கள்.

அதற்கு அந்த இடையன் " வானத்தின் பக்கம் பார்த்தவாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கே சென்று விட்டான்? இந்த காரியங்களை எல்லாம் அவன் பார்த்துக் கொண்டு இருக்க வில்லையா?" என்று கேட்டான்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்"தங்களது தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள். பின்னர் அந்த ஆட்டு இடையனோடு சென்று அவன் எஜமானிடம் அவனை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள். 

பின்னர் அவனை நோக்கி "நீ சொன்ன ஒரு வார்த்தை உலகில் நீ விடுதலை பெறுவதற்கு காரணமாக அமைந்தது. அதே வார்த்தையால் நாளை மறுமையில் நரகில் இருந்தும் உமக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: பிதாயா வன் நிஹாயா, அல்பயானு வத் தப்யீன் )

جاء رجل إلى شقيق البلخي وقال له: إن ذنوبي كثيرة، وقلبي قاسٍ، وعيني متحجرة، ولا أبكي من خشية الله، وأقع في المعاصي فعظني، قال له: إذا أردت أن تعصي الله فاخرج من أرض الله قال: أين أذهب والأرض كلها لله؟ قال: إذا أردت أن تعصي الله فلا تأكل من رزق الله.

قال: ومن أين آكل إلا من رزق الله؟ قال: إذا أردت أن تعصي الله وأنت تسكن في أرضه وتأكل من رزقه، فاذهب إلى مكان لا يراك فيه أحد.

ஒரு மனிதர் ஷகீக் அல் பல்ஃகீ (ரஹ்) அவர்களிடம் வந்து, "நான் பெரும் பாவியாக இருக்கிறேன். என் இதயம் வறண்டு போய் விட்டது. என் கண்கள் அல்லாஹ்வைப் பயந்து அழ மறுக்கிறது. தொடர்ந்து பாவத்தில் மூழ்கிக் கொண்டே போகிறேன்!. எனக்கு உபதேசம் செய்யுங்கள்! நான் பாவத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்" என்றார்.

அப்போது, ஷகீக் (ரஹ்) அவர்கள்:- "உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வாழ்வதற்கு வழங்கி இருக்கும் இந்த பூமியில் இருந்து கண் காணாத ஏதாவது இடத்திற்கு சென்று விடு! என்றார்கள்.

அதற்கவர், "பூமி முழுவதும் அல்லாஹ்விற்கு உரியதாக இருக்கும் போது வேறு எங்கு நான் செல்ல முடியும்? என்றார்.

அப்படியென்றால், "உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வழங்கி இருக்கும் ரிஜ்கை உண்ணாதே!" என்றார்கள்.

அதற்கவர், உணவு முழுவதுமே அல்லாஹ் வழங்கியிருக்க வேறு எதை நான் உண்பேன்? என்று கேட்டார்.

அப்படியென்றால், "உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வழங்கி இருக்கும் ரிஜ்கை உண்டு, அவன் வாழ வழி செய்திருக்கும் இந்த பூமியில் இருந்து கொண்டு உன்னை யாரும் காணாத ஒரு இடத்திற்கு சென்று நீ பாவத்தை செய்! என்றார்கள்.

قال: وأين أذهب والله يراني في كل مكان؟ قال: إذا أردت أن تعصي الله وأنت تسكن في أرض الله وتأكل من رزقه وهو يراك، فإذا جاء ملك الموت يقول لك: قد حان موتك، فقل له: لا.

لن أذهب معك، أنا رجل لا أحب القبور، أنا أحب القصور والزوجات، أما القبور فليس فيها إلا وحشة، أنا لا أستطيع أن أنام في غرفة أو عمارة لوحدي، قال: لن يطيعني ملك الموت فيما أريد.

அதற்கவர், அல்லாஹ் அனைத்து இடங்களையும் பார்த்துக் கொண்டிருக்க நான் எவ்வாறு யாரும் காணாத இடத்திற்கு சென்று பாவம் செய்வது? என்றார்.

 

அப்படியென்றால், உனக்கு ஏதாவது பாவம் செய்ய தோன்றியது என்றால் அல்லாஹ் வழங்கி இருக்கும் ரிஜ்கை உண்டு, அவன் வாழ வழி செய்திருக்கும் இந்த பூமியில் இருந்து கொண்டு, அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் உனக்கு மரணம் நெருங்கி உன்னிடம் ரூஹைக் கைப்பற்றும் வானவர் வந்து உனக்கு "மரணம் அடையும் நேரம் வந்து விட்டது" என்று கூறும் போது, அந்த வானவரிடம் "நான் உம்மோடு வர மாட்டேன். மேலும், நான் மண்ணறையை விரும்புபவனும் அல்லன். மாடமாளிகைகளையும், அந்த மாளிகையில் அழகிய துணைவியரோடும் துயில் கொள்பவன் நான். மேலும், மண்ணறை என்பது தனிமையின் வீடு!, வெறுமையின் வீடு! அங்கு வந்து தங்குவதென்பதும் உறங்குவதென்பதும் என்னால் முடியாத காரியம் என்று நீ சொல்" என்றார்கள்.

அதற்கவர், என் வார்த்தைகளுக்கெல்லாம் ரூஹைக் கைப்பற்றும் வானவர் கட்டுப்பட மாட்டார்.

قال: إن أردت أن تعصي الله وأنت تسكن في أرضه وتأكل من رزقه وهو يراك، وتعرف أنه سيدعوك بالموت، فإذا أمر الله الملائكة يوم القيامة أن يأخذوك إلى النار فارفض أن تذهب معهم! وقل: والله لا أدخل النار، أنا رجل أريد الجنة، هل يطيعونك يوم القيامة؟ قال: لا؛ لأن الله يقول: {عَلَيْهَا مَلائِكَةٌ غِلاظٌ شِدَادٌ} [التحريم:٦] قال العلماء: غلاظ في الخلقة، شداد في الأخلاق.

قال صلى الله عليه وسلم: (والذي نفسي بيده! يؤتى بجهنم يوم القيامة تقاد بسبعين ألف زمام، مع كل زمام سبعون ألف ملك، وإن الملك الواحد ليأخذ بيده هكذا فيلقي سبعين ألفاً في النار).

ஒரு வேளை இதையெல்லாம் கடந்து மறுமையை அடைந்து உன் பாவத்தின் காரணமாக, அல்லாஹ் வானவர்களிடம்  உன்னை பிடித்து நரகில் போடச் சொல்வான். அப்போது நீ அந்த வானவர்களுடன் செல்ல மறுத்து விடு! பின்னர் அவர்களிடம் "நான் நரகத்திற்கெல்லாம் வரமாட்டேன். நான் சுவனத்தை விரும்பும் மனிதன். சுவனத்தில் தான் நான் இருப்பேன்" என்று சொல்! என்றார்கள்.

பின்னர், அவரை நோக்கி அந்த வானவர்கள் உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன்னை நரகில் இருந்து விடுவித்து விடுவார்களா?" என்று கேட்டார்கள்.

அதற்கவர், இல்லை அவர்கள் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள். மாறாக, அல்லாஹ் அருள் மறையில் கூறும் "அதில் (நரகில்) (குணத்தால்) கடுமையான (உடல் பலத்தால்) பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்". ( அல்குர்ஆன்: 66: 6 ) தன்மை கொண்டவர்கள். என்றும்,

 

நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர். மேலும், ஒரு வானவர் தனது கரத்தினால் எழுபதாயிரம் நபர்களை நரகத்தில் போடுவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்பதையும் நான் அறிவேன் என்று அவர் கூறுவார்.

அப்போது, ஷகீக் அல் பல்கீ (ரஹ்) அவர்கள் உன்னை சுவனத்தில் நுழைவதைத் தடுக்கும் பாவச் செயல்களைச் செய்வதில் தான் உனக்கு எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது!? உன்னை நரகத்தில் நுழையச் செய்யும் பாவங்களை செய்வதில் தான் உனக்கு எவ்வளவு ஆசை இருக்கிறது!?

தனிமையில் அமர்ந்து அல்லாஹ்விடம் அழுது மன்றாடி உன்னை தூய்மை படுத்திக் கொள்! என்று உபதேசம் செய்து அனுப்பி வைத்தார்கள்.  ( நூல்: அத் தவ்வாபீன் லி இமாமி இப்னு குதாமா ரஹ்... )

இதே சம்பவம் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வந்து ஒருவர் உரையாடியதாகவும் சில நூற்களில் காணப்படுகிறது.

இமாம் சுஃப்யான் இப்னு உயைனா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நம்முடைய வெளிரங்கம்  நம்முடைய உள்ரங்கம் பற்றி சொல்லக்கூடிய ஒரு அழகான வார்த்தையை பாருங்கள்;

يقول سفيان بن عُيَينة - رحمه الله -: "إذا وافَقتِ السَّريرة العلانية فذلك العدل، وإذا كانت السريرة أفضل من العلانية فذلك الفضْل، وإذا كانت العلانية أفضَل مِن السَّريرة فذلك الجور""صفوة الصفوة" (2: 234)

ஒரு மனிதன் நல்லதை பேசுகின்றான்; நல்லதின் பக்கம் அழைக்கின்றான்; அவனுடைய வெளிரங்கத்தை பார்த்தால் நல்லவனாக தோன்றுகிறது; அவனுடைய உள்ளமும் அப்படியே இருந்து விட்டால் அது நீதம்.ஒரு மனிதன் பேசுவதை விட அவன் வெளிப்படுத்துவதை விட அவனது உள்ளம் சிறப்பாக இருந்ததுவிட்டால் அதுவோ மிகப்பெரிய சிறப்பு; அதாவது அவனுடைய செயலில் வெளிப்படக்கூடிய தக்வாவை விட அவன் உள்ளத்தில் இருக்கக்கூடிய தக்வா சிறந்ததாக இருக்கிறது; அதுவோ மிகச் சிறப்பு.

அடுத்ததாக சொல்கிறார்கள்; (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்) நாம் இந்த குணத்தில் தான்   இருக்கிறோமா என்ற பயத்தில் நாம் இருக்க வேண்டும்; ஒரு மனிதன் பேசுகின்றான்; அவனது பேச்சு என்னமோ சிறப்பாக இருக்கின்றது; ஆனால் அவன் உள்ளம் அப்படி இல்லை;  அந்தரங்கம் அப்படியில்லை; வெளிப்படுத்துவது என்னவோ ஹஸன் பஸரியை போன்று, முஹம்மது இப்னு சீரினைப்  போன்று. ஆனால் அவனது உள்ளமோ பிர்அவ்னைப் போன்று இருக்கின்றது;  அவனுடைய உள்ளமோ காரூனுடைய உள்ளத்தைப் போன்று இருக்கின்றது; வெளிப்பாடுகள் பெரிதாக இருக்கின்றது; ஆனால் உள்ரங்கமோ கெட்டுப்போய் இருக்கின்றது; இதுதான் மிகப்பெரிய அநியாயம்; மிகப் பெரிய அக்கிரமம் என்றுகூறினார்கள். ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )

தனிமையில் இருக்கும் போது இதைச் செய்தால்....

وسأل فَيْضُ بْنُ إِسْحَاقَ الْفُضَيْلَ عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ:

 ﴿ مِنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ 

 قَالَ: "الْمُنِيبُ الَّذِي يَذْكُرُ ذَنْبَهُ فِي الْخَلْوَةِ فَيَسْتَغْفِرُ مِنْهُ.

ஃபைள் இப்னு இஸ்ஹாக் அல் ஃபுளைல் (ரஹ்) அவர்களிடம் "எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது)." என்ற காஃப் அத்தியாயத்தின் வசனம் குறித்து விளக்கம் கேட்கப்பட்ட போது "முனீப் - இறைவனை நோக்கிய இதயம் கொண்டவர் என்றால் தனிமையில் இருக்கும் போது தான் செய்த பாவங்களை நினைத்து சதாவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பவர் என்று பொருள்"  என்று கூறினார்கள்.


وفي الخلوات لذة المناجاة، يقول مسلم بن يسار: "مَا تَلَذَّذَ الْمُتَلَذِّذُونَ بِمِثْلِ الْخَلْوَةِ بِمُنَاجَاةِ اللهِ عَزَّ وَجَلَّ"،

முஸ்லிம் இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தனிமையில் அல்லாஹ்வோடு முனாஜாத்திஅல் ஈடுபடுபவர்கள் பெறுகிற இன்பத்தைப் போன்று வேறு எவரும் பெறுவதில்லை".


ويقول محمد بن يوسف: "مَنْ أَرَادَ تَعْجِيلَ النِّعَمِ فَلْيُكْثِرْ مِنْ مُنَاجَاةِ الْخَلْوَة".

முஹம்மது இப்னு யூசுஃப் (ரஹ்) அவர்கள் "விரைவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அருட்கொடைகளை பெற விரும்புபவர்கள் தனிமையில் அல்லாஹ்வுடனான முனாஜாத்தை அதிகரிக்கட்டும்" என்று கூறினார்கள்.


الخلوة عند الصالحين موطن محاسبة النفس واستصلاح عيبها، فقد عنّف عمر بن الخطاب رضي الله عنه أحدَ رعيته، ثم دخل بيته فافتتح الصلاة، فصلى ركعتين، ثم جلس، فقال: "يا ابن الخطاب، كنت وضيعاً فرفعك الله، وكنت ضالاً فهداك الله، وكنت ذليلاً فأعزّك الله، ثم حملك على رقاب المسلمين، لجأ رجل يستعديك فضربته، ما تقول لربك غداً إذا أتيته؟ "، يقول الأحنف بن قيس: فجعل يعاتب نفسه معاتبة ظننت أنه من خير أهل الأرض. رواه ابن عساكر.

அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் தங்களது பணியாளர் ஒருவரை ஏதோ ஒரு காரணத்திற்காக கண்டித்தார்கள். பின்னர் தமது வீட்டிற்கு சென்றார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்பு அமர்ந்து "கத்தாபின் மகன் உமரே! நீ தாழ்ந்த நிலையில் இருந்தாய்! அல்லாஹ் உன் நிலையை உயர்த்தினான். நீ வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தாய். அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கி உன்னை நேர் படுத்தினான். நீ இழிவானவனாக இருந்தாய்  அல்லாஹ் உனக்கு கண்ணியத்தை வழங்கினான். இப்போது உன்னை முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி கௌரவித்துள்ளான். ஆனால், நீயோ உன் பொறுப்பின் கீழ் தவறிழைத்த ஒருவனை இலகுவாக தண்டித்து விட்டு வந்து விட்டாய்! நாளை மறுமை நாளில் உம் இறைவனான அல்லாஹ்விடம் இந்த செயல் குறித்து முறையிட்டால் என்ன பதில் சொல்லப் போகிறாய்?" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு இருந்தார்கள்". இப்படித்தான் உமர் (ரலி) அவர்கள் தம்மைத் தாமே கடுமையாக கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். என்று கூறி விட்டு "நிச்சயமாக பூமியில் வாழ்பவர்களிலேயே உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்களாக நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: இப்னு அஸாக்கிர் )

ودمعة الخشية في الخلوة سبب للاستظلال بظل الله سبحانه يوم القيامة، يقول الرسول صلى الله عليه وسلم: "سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله"، ومنهم: "رجل ذكر الله خالياً ففاضت عيناه". رواه البخاري ومسلم. 

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான் என நபி ஸல் அவர்கள் கூறிய அந்த ஏழு கூட்டத்தாரில்
"தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் " இவர்களும் ஒரு கூட்டத்தார் ஆவார்கள்.

وتلاوة القرآن في الخلوة من أعظم ما يصلح القلب ويوفق لحسن الختام، لَمَّا حَضَرَتْ أَبَا بَكْرٍ بْنَ عَيَّاشٍ الْوَفَاةُ بَكَتْ أُخْتُهُ، فَقَالَ: لَا تَبْكِ؛ انْظُرِي إِلَى تِلْكَ الْخَزَانَةِ أَوِ الزَّاوِيَةِ الَّتِي فِي الْبَيْتِ قَدْ خَتَمَ أَخُوكِ فِي هَذِهِ الزَّاوِيَةِ ثَمَانِيَةَ عَشَرَ أَلْفٍ خَتْمَةٍ.

அபூபக்ர் இப்னு அய்யாஷ் (ரஹ்) அவர்களின் இறுதி நேரத்தில் சக்ராத்தின் போது அவரது சகோதரி அழுது கொண்டு இருந்தார். அப்போது அபூபக்ர் இப்னு அய்யாஷ் (ரஹ்) அவர்கள் "சகோதரியே! அழாதே! அதோ வீட்டில் இருந்த ஒரு குர்ஆனைக் காட்டி உம் சகோதரர் பதினெட்டாயிரம் முறை இந்த குர்ஆனை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார்". என்றார்.

وصدقة الخلوة أحرى ما يكون قبولها، كان علية بن زيد رجلاً من أصحاب النبيّ - صلى اللَّه عليه وسلّم -، فلما حضّ على الصدقة جاء كلّ رجل منهم بطاقته وما عنده، فقال علية بن زيد: اللَّهمّ إنه ليس عندي ما أتصدّق به، اللَّهمّ إني أتصدّق بعرضي على من ناله من خلقك، فأمر رسول اللَّه - صلى اللَّه عليه وسلّم - منادياً، فنادى: أين المتصدق بعرضه البارحة؟ فقام علية، فقال: قد قبلت صدقتك. رواه ابن مردويه والبيهقي في الشعب بنحوه وله شاهد صحيح كما قال الحافظ.

நபி {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கு புறப்படும் முன்பாக யுத்தத்திற்கு நிதி திரட்டும் முகமாக நபித்தோழர்களை அனுதினமும் ஆர்வமூட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பொருளாதாத்தை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த யுத்தத்தில் பங்கேற்க முடியாமலும், பொருளாதாரத்தை கொடுக்க முடியாமலும் ஏழ்மையில் வாடிய உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் இதற்காக மிகவும் வருந்தினார்கள். ஒவ்வொரு நாளும் தம் இயலாமையை நினைத்தும் கொடுக்க முடியவில்லையே என நினைத்தும் வேதனை அடைந்தார்கள்.

அன்றொரு நாள் தஹஜ்ஜத் தொழுது விட்டு "அல்லாஹ்வே! என்னுடைய மானத்தை உனக்காக தர்மம் செய்கிறேன். என்னுடைய இந்த நிலை கண்டு விமர்சித்தோர், கேலி பேசியோர் என உம் படைப்புகளில் என்னோடு நடந்து கொண்டவர்களோடு நான் மனம் பொறுத்தவைகளுக்காக நீ தரும் கூலியை உன் பாதையில் தர்மம் செய்கிறேன்! என்று அழுது மன்றாடினார்கள்.

அன்றைய சுபுஹ் தொழுகையின் ஜமாஅத் தொழுகையிலும் பங்கேற்றார். தொழுது முடித்ததும் நபி ஸல் அவர்கள் ஒரு நபித்தோழரை அழைத்து "இன்று அதிகாலை நேரத்தில் அல்லாஹ்விடம் இன்னின்னவாறு பிரார்த்தனை செய்த மனிதர் இங்கு இருக்கிறாரா?" என்று அறிவிக்கச் சொன்னார்கள். அந்த நபித்தோழர் அறிவித்ததும் "உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் எழுந்து தாம் தான் அப்படி பிரார்த்தித்ததாக" கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்"அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டான்" என்று கூறினார்கள். (நூல்: அல் இஸாபா )

தனிமையில் அல்லாஹ்வைப் பயந்து வாழும் நஸீபை நம் அனைவருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

4 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அருமையான குறிப்பு

    ReplyDelete
  2. மிக மிக அருமையான தலைப்பு அருமையான பல விஷயங்கள் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு எல்லா வகையிலும் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. மிக மிக முக்கியமான இந்த நேரத்தில் இந்த தலைப்பு முக அவசியமான ஒன்று

    Jazakkumullaah ஹஜ்ரத்

    ReplyDelete
  4. தரமான தலைப்பு,தேவைக்கு அதிகமாக தகவல்கள் பாரகல்லாஹு லக ஃபித்துன்யா வல் ஆகிரா....

    ReplyDelete