மிஃராஜ் – விண்ணேற்றப் பயணம் தரும் சிந்தனை!!
நாம் வாழும் இந்த பேரண்டம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பது துல்லியமாக
இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, மட்டுமல்லாது அது விரிவடைந்து கொண்டு
இருப்பதாக அறிவியல் ஆய்வுகளும் விஞ்ஞான உலகும் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
பூமி, சூரியக் குடும்பம், அதை உள்ளடக்கிய ஆகாயம் எனும் பால்வீதி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான
பால்வீதிகள், பலகோடிக்கணக்கான விண்மீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள் இன்னும் பலவான விண்வெளி
பருப்பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பேரண்டத்தின் அளவு தற்கால கணக்கீடுகளின்படி
தோராயமாக 2500 கோடி ஒளியாண்டுகள்.
ஒரு ஒளியாண்டு என்பது ஒளித்துகளொன்று தடையின்றி தொடர்ந்து ஓராண்டுகாலம் பயணம்
செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அது தான் ஓர் ஒளியாண்டு தூரம்.
ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். அதாவது நொடிக்கு மூன்று
லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தொடர்ந்து நிற்காமல்
பயணம் செய்தால் நாம் வாழும் இந்த பேரண்டத்தின் மறுஎல்லையைச் சென்றடைய 2500 கோடி ஆண்டுகள் தேவைப்படும். இது ஒரு பேரண்டத்தைக்
கடப்பதற்கு தேவைப்படும் காலம், இதையும்,
இதுபோல் இன்னும்
ஆறு பேரண்டங்களையும் கடந்து சென்று மீண்டும் பூமிக்கு வந்த பேரற்புத நிகழ்வு தான்
மிஃராஜ் எனும் விண்ணேற்றப் பயணம்.
இந்த பேரண்டத்தின் உச்சகட்ட வேகம் என்பது ஒளியின் வேகம் தான். ஒளியைவிட
மிகைத்த வேகத்திற்கு ஒரு பொருளை முடுக்கமுடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு.
அறிவியலை விஞ்சிய, விஞ்ஞானத்தை மிஞ்சிய சாதனைப் பயணம்..
உச்ச வேகத்தில் பயணம் நிகழ்ந்திருக்கிறது என்று கொண்டாலும், ஓர் இரவு என்பது அதிகபட்சமாக 12 மணி நேரம். இந்த நேரத்தில் உச்சகட்ட
வேகத்தில் சென்றாலும் ஒருவரால் அதிகபட்சம் 1296
கோடி
கிலோமீட்டர்கள் தான் பயணிக்க முடியும். அதாவது 648
கோடி கிமீ
தூரத்திற்கு சென்று வரலாம்.
ஆனால், மாநபி (ஸல்) அவர்கள் சென்று
வந்திருக்கும் தூரமும், அப்படி செல்வதற்கு பயன் படுத்தி
இருக்கும் வேகமும் கற்பனைக்கு எட்டாததும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்திற்கு சவால்
விடும் வேகம் ஆகும்.
அடுத்து இந்த பயணத்தில் ஒவ்வொரு வானத்திலும் நபி ஸல் அவர்கள் சிறிது நேரம்
இளைப்பாறி அந்த வானத்தில் இருந்த நபிமார்களோடு உரையாடினார்கள்.
குறிப்பாக ஆறாம் வானத்தில் இருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான சந்திப்பு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதை நாம் அறிகிறோம்.
மேலும், சொர்க்கம் நரகம் மற்றும் அதன் காட்சிகள், அல்லாஹ்வுடனான சந்திப்பு மற்றும் உரையாடல் என இவை எல்லாம் நடந்தது இந்த 12 மணி நேரத்திற்குள்ளாகத் தான்.
எனவே, இந்த பயணத்தை சாமானிய, சாதாரண பயணமாக நாம் கருதிவிட முடியாது.
இது பேராற்றல் மிக்க படைப்பாளன் அற்புதம் நிறைந்த நபி (ஸல்) அவர்களுக்கு
பேரற்புதமாக வழங்கிய சாதனைப் பயணம் ஆகும்.
ஏனெனில், இந்த பயணத்தை நிர்ணயித்தவன் அல்லாஹ். பயண
ஏற்பாட்டை கட்டமைத்தவன் அல்லாஹ். பயண வழிகாட்டல் வழங்கியவனும் அல்லாஹ்.
ஆகவே, இந்த பயணம் குறித்த விஷயத்தில் ஒரு இறைநம்பிக்கையாளனாக
நம்முடைய நம்பிக்கை என்பது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களைப் போன்றே மிக உறுதியாக, ஒற்றை வார்த்தையில் அமைந்திருக்க வேண்டும்.
"நபி (ஸல்) அவர்கள் தாங்கள் மிஃராஜ் பயணம் சென்று வந்ததாகச் சொன்னால் நிச்சயம்
அவர்கள் சென்றே வந்திருப்பார்கள்”.
அந்த வகையில்
மிஃராஜ் பயணம் இந்த உம்மத்திற்கு இரண்டு சிந்தனைகளைத் தருகின்றது.
1. மிஃராஜ் – சமூகம் அடைந்த வளர்ச்சியின் பயணம். 2. நன்றியுள்ள
அடியாருக்கு நன்றியாளன் வழங்கிய நன்றிப் பயணம்.
1.
மிஃராஜ் – சமூகம் அடைந்த
வளர்ச்சியின் பயணம்...
மிஃராஜ் பயணத்திற்கான பிந்தைய முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சி
என்பது அபரிமிதமானது.
ஹிஜ்ரத் பயணம் அதன் பின்னரே நடந்தேறியது. சர்வதேச நாடுகளில் இஸ்லாம் சென்றதும், மக்கா வெற்றி கொள்ளப்பட்டதும் அதன் பின்னர் தான்.
ஹிஜ்ரத் க்கு பிந்தைய சமூகத்தின் கட்டமைப்பில் மிஃராஜ் பயணத்தின் பங்களிப்பு மகத்தானது.
அது வரையில் சமூகம் உணர்வு ரீதியாக பெற்றிருந்த இறைநம்பிக்கைக்கு உரமேற்றும்
வாய்ப்பும், செயல் வடிவம் கொடுக்கும் ஆற்றலும்
கிடைத்தது அங்கு தான்.
இது வரைக்கும் வஹீயை தூதுவர் மூலம் மட்டுமே பெற்று வந்த நபி இப்போது வஹீயை
கொடுத்தனுப்பியவனை எவ்வித துணையும் இன்றி சந்தித்து வந்திருக்கிறார்கள். பார்த்து
வந்திருக்கின்றார்கள். உரையாடி வந்திருக்கிறார்கள். இந்த உம்மத்திற்கு அவனிடம்
இருந்து அன்பளிப்பையும் ஸலாம் எனும் சோபனத்தையும் பெற்று வந்திருக்கிறார்கள்.
சுவனத்தின் இன்பங்களையும், நரகத்தின் கோரத்தையும் கண்டு
வந்திருக்கிறார்கள். எனவே, அந்த நபியின் பார்வைக்கு அந்த நபியின்
போதனைகளுக்கு, அந்த நபியின் வாழ்க்கைக்கு முன்பை விட
இப்போது கூடுதல் ஷக்தி இருப்பதை உணர்ந்து அந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
தொழுகை எப்படி தொழ வேண்டும்?
உதாரணத்திற்கு தொழுகையை எடுத்துக் கொள்வோம். எப்படித் தொழ வேண்டும்? என்ற வினாவிற்கு நபிமொழியில் இரண்டு
பதில்கள் காணப் படுகிறது.
1.
இஹ்ஸான்
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் மனித தோற்றத்தில் வந்து கேட்ட கேள்விகளும் அதற்கு நபி
ஸல் அவர்கள் அளித்த பதில்களும் அடங்கிய நீண்ட ஹதீஸில் இருந்து...
قَالَ :
مَا الْإِحْسَانُ؟ قَالَ : (( أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ
لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
))
ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன் இஹ்ஸான் என்பது
அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன்
உன்னைப் பார்க்கிறான். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) ( நூல் : முஸ்லிம் (9) )
2. நபி ஸல் அவர்கள் தொழுததைப் போன்று...
عن
النبي صلى الله عليه وسلم قوله :”صلوا كما رأيتموني أصلي“،
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள்” ( நூல்: புகாரி).
நபித்தோழர்களான
ஸஹாபாக்களின் தொழுகைகள் நபி ஸல் அவர்கள் தொழுகையைப் போன்றே அமைந்திருந்தது.
ஆம்! அல்லாஹ்வைப்
பார்த்த கண்களோடு தொழுத பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகை எப்படி இருக்கும்.
ஆகவே, தான் தொழுகையை எப்படி தொழ வேண்டும் என்பதற்கான அடிப்படையாக இந்த இரண்டையும்
குறிப்பிட்டார்கள்.
வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும்..
இதே போன்று தான் நபித்தோழர்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகினார்கள்.
அபூலுபாபா என்கிற
நபித்தோழர் விஷயத்தில் அபுத்தஹ்தாஹ் ரலி அவர்கள் 100 பேரீச்சம் மரம் நிறைந்த செழிப்பான தோட்டத்தை ஒரு மரத்திற்கு பகரமாக
உரிமையாளரிடம் வழங்கி
நபி ஸல் அவர்களிடம் அதற்கான உரிமத்தை வழங்குவார்கள்.
இங்கே,
அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தங்களது பெரும் தோட்டத்தை ஒரு மரத்திற்காக இன்
முகத்துடன் வழங்குவதற்கு ஒற்றைக் காரணம் தான் இருந்தது.
ஆம்! அந்த ஒரு மரத்தை அவருக்காக விட்டுக் கொடுங்கள்!
சுவர்க்கத்தில் ஒரு தோட்டத்தை பெற்றுத் தருவதற்கு நான் பொறுப்பேற்கிறேன்!"
என்று அந்த தோட்டத்தின் உரிமையாளரிடம் சொன்ன நேரத்தில் அருகில் இருந்து கவனித்துக்
கொண்டிருந்த அபுத்தஹ்தாஹ் ரலி அவர்களுக்கு "சுவர்க்கத்தையும் அதன் அழகையும், சுவர்க்கத்து தோட்டத்தின் அழகையும் கண் குளிர கண்ட கண்களைப் பெற்றவர்கள் என்
நபி ஸல் அவர்கள்" என்ற ஒற்றைக் காரணம் தான்.
தொழுகை, ஸதகா மட்டுமல்ல வாழ்வின்
அத்துனை துறைகளிலும் நபி ஸல் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அவ்வாறே
நபித்தோழர்கள் நடந்து கொண்டனர்.
துருக்கி நில
நடுக்கம் அது ஏற்படுத்திய பாரிய அளவிலான விளைவுகளை நாம் ஊடகத்தின் வழியாக அறிந்து
வருகிறோம்.
மாநபி {ஸல்}
அவர்கள் வாழும் காலத்தில் ஒரு முறை பூமி குலுங்கிய போது நபி {ஸல்} அவர்கள் என்ன
செய்தார்களோ?
அதே போன்று உமர் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில்
பூமி குலுங்கிய போதும் செய்தார்கள்.
ஆம்! மாநபி ஸல் அவர்கள் பூமியிடம் பேசினார்கள். அதே போன்று
உமர் ரலி அவர்களும் பூமியோடு பேசினார்கள்.
அந்த அளவுக்கு நபி {ஸல்} அவர்களின் செயல்பாடுகளை நபித்தோழர்கள் உள் வாங்கி இருந்தனர்.
فيَرْوي
أنَسُ بنُ مالكٍ رَضيَ اللهُ عنه أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ صَعِدَ
ذاتَ مرَّةٍ جبَلَ أُحدٍ - وصَعِدَ أبو بَكرٍ، وعُمَرُ، وعُثمانُ رَضيَ اللهُ عنهم
معَه فوقَ الجَبلِ، فرجَفَ الجَبلُ بهم، فقال النَّبيُّ صلَّى اللهُ عليه
وسلَّمَ للجَبلِ: «اثبُتْ أُحدُ؛ فإنَّما عليكَ نَبيٌّ، وصِدِّيقٌ، وشَهيدانِ»،
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3675, 3686
وفي
مناقب عمر لابن أبي الدنيا «أن الأرض تزلزلت على عهد عمر، فضرب يده عليها، وقال:
ما لك؟ ما لك؟ أما إنها لو كانت القيامة حدثت أخبارها، سمعت رسول الله صلى الله
عليه وسلم يقول: إذا كان يوم القيامة فليس فيها ذراع ولا شبر إلا وهو ينطق».
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு முறை நில நடுக்கம் ஏற்பட்ட போது உமர் (ரலி) அவர்கள் "பூமியின் மீது கையை வைத்து அடித்து"உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் இவ்வாறு குலுங்குகிறாய்?
கியாமத் வந்து விட்டால் பூமி குலுங்கும் அது தன்னுள் புதைத்து வைத்துள்ள ரகசியங்களைச் சொல்லும் என்று நபி ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் அபீ ஷைபா, அல் இஸ்தித்கார் லி இமாமி இப்னு அப்துல் பர் (ரஹ் )
எதற்கும், எப்போதும் தயாராகவே...
நபித்தோழர்களிடம், ‘நாளை போருக்கு செல்லும் இன்னின்ன நபர்கள் போர்க்களத்திலேயே எதிரிகளால் வெட்டி
வீழ்த்தப்படுவார்கள்’
என்று சொன்ன பிறகும் கூட கொஞ்சம் கூடப் பின்வாங்காமல், ஓடி
ஒளியாமல் போரிலே பங்கெடுத்து
எனக்கு உயிரோ, குடும்பமோ, பொருளாதாரமோ,
மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ இவர்களையெல்லாம் விட நான் நேசிக்கும் உன்னத மார்க்கத்திற்காக உளப்பூர்வமாக
களமாடி, போராடி உயிர் நீத்து நிரூபித்திருக்கின்றார்கள் நபித்தோழர்கள்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களின் காலத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளன அவற்றில் மிக முக்கியமான ஒரு போர் தான் முஅத்தா என்ற போர்.
இந்தப் போரில்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} கலந்து கொள்ளவில்லை. மாறாக, போரில் மக்களைத் தலைமை ஏற்று
அழைத்து செல்லக்கூடிய,
படையினுடைய தலைவர்களை நியமித்துப் போருக்கு
அனுப்புகிறார்கள்.
படை கிளம்புவதற்கு
ஒரு நாளுக்கு முன்னதாகவே இந்தப் படைத்தளபதிகளை நியமிக்கின்றார்கள். ஒரு நாளுக்கு
முன்னதாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சொன்ன வார்த்தை கூடியிருந்த அத்தனை தோழர்களையும் மிகுந்த கவலையிலும், வருத்தத்திலும் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) அறிவித்தார்:
روى البخاري في المغازي-، ثم قال
"إن أصيبَ زيد
فجعفر بن أبي طالب على الناس، فإن أصيب جعفر فعبد الله بن رواحة على الناس"،
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக
நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைத் கொல்லப்பட்டால்
ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
(தலைமையேற்கட்டும்)” என்று கூறினார்கள்.
( நூல்: புகாரி 4261 )
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) எந்தப் போரிலும் பயன்படுத்தாத ஒரு வார்த்தையாக, ‘கொல்லப்பட்டுவிட்டால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம்
பெயர் சொல்லி அறிவிக்கப்பட்ட அந்தத் தோழர்கள் போர் முடிந்து திரும்புவதற்கு
வாய்ப்பு இல்லை என்பதை விளங்க முடிகின்றது.
அனஸ்
இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்;
وكان الرسول صلى الله عليه وسلم وهو في المدينة يُشاهد المعركة
عن طريق الوحي الذي تنزل به جبريل –عليه السلام-، فجمع المسلمين، وأمر منادياًت
يُنادي فيهم، فاجتمعوا ثم أخبرهم عن إخوانهم المجاهدين، فقال
"أخذ الراية زيدٌ
فقال حتى قتل شهيداً، ثم أخذها جعفرٌ فقاتل حتى قتل شهيداً"، ثم صمتَ صلى الله عليه وسلم حتى تغيرت وجوهُ الأنصار، وظنوا أنه
كان في عبد الله بن رواحة بعض ما يكرهون، فقال
"ثم أخذها عبد
الله بن رواحة، فقاتل حتى قُتل شهيداً".
ثم قال
"لقد رُفعوا إليَّ في الجنة فيما يرى النائمُ على
سرير من ذهب، فرأيت في سرير عبد الله بن رواحة ازوراراً عن سريري صاحبيه، فقلتُ:
بم هذا؟ فقيل لي: مضيا وتردد بعض التردد، ثم مضى. ثم أخذ الراية سيف من سيوف الله؛
يعني:خالد، حتى فتح الله عليهم"
رواه أحمد.
(மூத்தா போரின்போது போர்கள் நிகழ்ச்சிகளை மதீனாவில்
இருந்தபடியே நேர்முக வர்ணணையாக விவரித்து) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள். உரையில் ‘‘இப்போது (இஸ்லாமிய சேனையின்) கொடியை ஸைத் இப்னு ஹாரிஸா
எடுத்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்
எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் இப்னு வலீத்
(நம்முடைய) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்தார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை
அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு ‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு
மகிழ்ச்சியளிக்காது” என்றோ’ (இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு
மகிழ்ச்சியளிக்காது” என்றோ சொன்னார்கள். மேலும் இதைச் சொல்லும்போது நபி(ஸல்)
அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன. ( நூல்: புகாரி: 3063 )
ஆகவே, முஸ்லிம்
சமூகத்தின் ஆன்மீக, அறிவு, கலாச்சார, நாகரீக, பண்பாடு என அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சி
என்பது மிஃராஜ் பயணத்திற்குப் பிறகு தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
நாமும் நமக்கான
படிப்பினைகளை மிஃராஜ் பயணத்திலிருந்து பெற்றுக் கொண்டு நமது செயல்பாடுகளை அமைத்துக்
கொள்ளும் போது வளர்ச்சியை நோக்கி விரைந்து செல்லலாம் இன்ஷா அல்லாஹ்…
2.
நன்றியுள்ள
அடியாருக்கு நன்றியாளன் அல்லாஹ் வழங்கிய நன்றிப் பயணமே மிஃராஜ்..
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் தன்னை பல்வேறு விதமாக அல்குர்ஆனில் அறிமுகம் செய்வான். தன்னை ஷாக்கிர் - நன்றியுணர்வுடன் நடந்து கொள்பவன் என்றும் அறிமுகம்
செய்கிறான்.
அவனுடைய அழகிய
திருப்பெயர்களில் ஒன்றாக ஷாக்கிர் என்பதையும் சூட்டி இருக்கின்றான்.
அல்லாஹ்
நன்றியுடன் நடந்து கொள்வான் என்றால் அடியானின் குறைவான அமலுக்கும் கூட நிறைவான, பன்மடங்கு கூலியை வழங்குவான் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று மேதகு அறிஞர்
பெருமக்கள் விளக்கம் தருவார்கள்.
وأشار
أيضاً إلى أن الله تعالى يشكر العبد على الشهامة، ومن ذلك ما روته السيدة أم سلمة
فتقول: إن قريشاً فرقت بينها وبين زوجها وابنها، وهاجر أبو سلمة وهي في بيتها
وابنها في الحبس، وبعد عام تركها أهلها لتذهب لزوجها فقررت الذهاب للمدينة وحدها
بدون ناقة، فقابلها عثمان بن طلحة عند التنعيم، وكان كافراً ومعادياً للمسلمين،
ولكن تحركت في قلبه الشهامة، فقال: إلى أين يا أم سلمة؟ قالت: أفر بديني منكم
وألحق بزوجي في المدينة، فقال: وحدك؟! قالت: نعم، قال: ما معك أحد؟ قالت: لا
والله، قال: ما ينبغي لك أن تسافري وحدك، اركبي يا أم سلمة على ناقتي. وأوصلها
للمدينة وهو يسير على قدميه. تخيل لو أن أحدهم طلب منك أن توصله للإسكندرية؟!
تقول أم
سلمة: فقلت والله ليشكرنه الله على ما فعل، تقول: ما وجدت رجلاً أكرم منه.. ما نظر
إليَّ نظرة ولا كلمني كلمة حتى اقتربنا من المدينة، فقال: هنالك زوجك انزلي فاذهبي
إليه، ثم أخذ الناقة وعاد. ظل كافراً بعدها ثماني سنوات. أسلم يوم فتح مكة.. تقول
أم سلمة: فوالله يوم أسلم قلت في نفسي مازلت أظن أن الله سيشكره عليها.
அபூ ஸலமா (ரழி)
அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி
ஹிஜ்ரத் பயணமாகத் தொடங்கினார்.
இதனை அறிந்த உம்மு
ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தார்கள் ஓட்டகத்தை மறித்து, அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு செல்ல விரும்புகின்றீர்களோ அங்கு நீங்கள் போய்க்
கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ
எங்களைச் சேர்ந்தவள்,
எனவே, அவரை நீங்கள் இங்கு
விட்டு விட்டுத் தான் போகவேண்டும். முன்பு அபிசீனியாவிற்கு அழைத்துச் சென்றீர்!
இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.
உம்மு ஸலமா (ரழி)
அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப் பட்ட அபூ ஸலமா
குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட்டு விட முடியாது, அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள்.
அபூ ஸலமா (ரழி)
அவர்கள் தனது மனைவியையும் மக்களையும் விட்டு விட்டு தன்னந் தனியாக மதீனாவை நோக்கிய
தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது மூன்று பிரிவாக பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும்
கண் கலங்கிய படி பார்த்துக் கொண்டு இருந்தார்கள் உம்மு ஸலமா
(ரழி) அவர்கள்,
பிரிவுத் துயர்
ஒவ்வொரு கணமும் அவர்களை வாட்டி வதைத்தது. ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் அந்த
வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர்
ஒருவர், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப்
பார்த்து விட்டு,
உம்மு ஸலமாவே..!உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்றுகேட்டார். நடந்த
அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரழி) மற்றும்
அபூ ஸலமா (ரழி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய் பேசி குழந்தைகளுடன் மதீனாவுக்குச்
செல்வதற்கும் அவர்கள் அனுமதி
வாங்கி தந்தார். ஆனால் அவருடன் மதீனா வருவதற்கு யாரும்
தயாராக இல்லை.
இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந் தனியாகவே தனது
பிள்ளைகளுடன் ஒட்டகம் இல்லாத நிலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அப்போது தன்யீம்
என்ற இடத்தை அடைந்த போது உஸ்மான் இப்னு தல்ஹா எதிரே வந்தார்.
வந்தவர் விபரத்தை
அறிந்து கொண்டு,
அப்போது அவர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவாதிருந்த போதும்
உம்மு ஸலமா ரலி அவர்களுக்கு உதவ முன் வந்தார்.
தனது ஒட்டகத்தில்
உம்மு ஸலமா (ரலி) அவர்களையும் அவர்களது மக்களையும் ஏற்றி ஒட்டகத்தை பிடித்து
நடந்தவாறு மதீனாவின் எல்கை வரை வந்து அபூ ஸலமா (ரழி) தங்கி இருக்கும் இடத்திற்கு
அருகில் விட்டு விடை பெறும் போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீது
ஆணையாக! அல்லாஹ் நிச்சயமாக அவரின் செயலுக்கு நன்றி பாராட்டுவான். ஏனெனில், நான் கண்ட மனிதர்களில் அவரை விட சங்கையான ஒரு மனிதரை நான் கண்டதில்லை. மேலும், தன்யீமிலிருந்து மதீனா வரும் வரை என்னை ஏறெடுத்து ஒரு பார்வை கூட பார்க்க
வில்லை. என்னிடம் எந்த ஒரு பேச்சும் பேச வில்லை" என்றார்கள்.
பின்நாளில் மக்கா
வெற்றியின் போது உஸ்மான் இப்னு தல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது உம்மு
ஸலமா ரலி அவர்கள் தங்களது மனதிற்குள் "எனக்கு உஸ்மான் செய்த உபகாரத்திற்காக
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டிப்பாக நன்றியுடன் நடந்து கொள்வான் என சதாவும் எண்ணிக்
கொண்டு இருந்தேன்" என்று சொன்னார்களாம்.
ومنها
موقف أسماء بنت أبي بكر يوم الهجرة وكانت هي الوحيدة التي تعرف محل إقامة النبي
-عليه الصلاة والسلام- في الغار، وكانت تذهب لهم بالطعام، أبو جهل شعر بذلك، فذهب
لها وقال: أين أبوك؟ قالت: لا أدري، فلطمها لطمة أسقطت القرط من أذنها وشقت شفتها،
فسالت الدماء، فذهب أبو سفيان يسترضيها شهامة وإنسانية منه، وظل يراضيها حتى هدأت.
ولما
علم أبو بكر قال: اللهم ادخرها لأبي سفيان. فهداه للإسلام بعد عشر سنوات، فما أعظم
شكر الله لعباده وما أروعها!.
அபூபக்ர் ரலி
அவர்களின் மகளார் அஸ்மா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களும் அபூபக்ர் ரலி அவர்களும் ஸவ்ர் குகையில் ஒளிந்து இருக்கும் போது அவர்களுக்கு உணவு கொண்டு வருவார்கள்.
உணவு கொண்டு சென்று வருவதை எப்படியோ அறிந்து கொண்ட அபூஜஹ்ல் அபூபக்ர் ரலி
அவர்களின் வீட்டுக்கு வேகமாகக் கதவைத்தட்டினான்! உள்ளே இருந்து வெளியே வந்த அஸ்மா
ரலி அவர்களிடம் உன் தந்தை எங்கே? என்று கேட்க அவர்களைப்
பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதும் தான் தாமதம்.
உரிய
பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் அதட்டினான்: மிரட்டினான் ஆனால் அஸ்மா (ரலி)
அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல்
அன்பே உருவான அஸ்மா (ரலி) அவர்களின் அழகிய கன்னத்தில் கையை ஓங்கி பளீரென
அறைந்தான்!
இந்த
செய்தியை கேள்விப்பட்டு அங்கு வந்த அபூசுஃப்யான் (அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டிருக்கவில்லை) அபூஜஹ்லை கண்டித்தார்.
நடந்த
செய்திகளை தம் தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது "அல்லாஹ்வே!
அஸ்மாவுக்காக பரிவுடன் நடந்து கொண்ட அபூசுஃப்யானுக்கு சிறந்த பகரத்தை
வழங்கியருள்வாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அல்லாஹ்
நன்றி மறவாதவன் பத்து ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றியின் போது அபூ சுஃப்யான் ரலி
அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கினான்.
ما جاء
من حديث أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: "جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ
مَخْطُومَةٍ، فَقَالَ: هَذِهِ فِي سَبِيلِ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ -صلى الله
عليه وسلم-: "لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعُ مِائَةِ نَاقَةٍ
كُلُّهَا مَخْطُومَةٌ" (مسلم(1892))،
அபூ மஸ்வூதுல்
அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் நபி ஸல் அவர்களின்
சமூகத்திற்கு (போருக்கும்,
பயணங்களில் சுமை தூக்குவதற்கும் ஆற்றல் கொண்ட) ஒட்டகம்
ஒன்றை கொண்டு வந்தார். அதுவும் மூக்கணாங்கயிறு பூண்ட நிலையில் கொண்டு வந்து நபி
(ஸல்) அவர்களின் கரங்களில் கொடுத்து "இதை அல்லாஹ்வின் பாதையில் பயன்
படுத்திக் கொள்ளுங்கள்!" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள் அவரிடம் "இதேபோல் எழுநூறு ஒட்டகைகளை அல்லாஹ் உமக்கு வழங்குவான். அவை
அனைத்தும் மூக்கணாங்கயிறு பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் " என்று
கூறினார்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அடியார்களின் சிறு சிறு சொல்லுக்கும் செயலுக்கும் எண்ணத்திற்கும் இவ்வளவு
நன்றியுடன் நடந்து கொள்கிறான் எனில் தனது ஹபீபாகிய மாநபி (ஸல்) அவர்களின்
தொல்லைகளும்,
துன்பங்களும், துயரங்களும் நிறைந்த
மக்கா வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திற்கும் எவ்வளவு நன்றியுடன் நடந்து
கொண்டிருப்பான்.
பெருமானார் (ஸல்)
அவர்கள் மக்கா வாழ்க்கையில் தங்களை எதிர்த்த எதிரிகளை நோக்கி எவ்வித எதிர்
வினையும் ஆற்றவில்லை. மாறாக, அனைத்தையும் தாங்கிக்
கொண்டார்கள்.
கவிஞர், சூனியக்காரர்,
பைத்தியக்காரர், ஆண் சந்ததி இல்லாதவர், ஊரை பிரிப்பவர்,
உறவை பிரிப்பவர் என்றெல்லாம் ஏளனமாக பேசிய போதும், கொலை முயற்சிகள் பலவற்றில் ஈடுபட்ட போதும், ஊர் விலக்கு செய்து
வாட்டிய போதும்,
சிறுவர்களை ஏவி கல்லால் தாக்கிய போதும் பொறுமையோடு
சகித்துக் கொண்டு மௌனத்தையும், புன்னகையையும்
பிரார்த்தனைகளையுமே பதிலாக தந்தார்கள்.
அதிக பட்சமாக
பெருமானார் (ஸல்) மூன்று முறை மட்டுமே பேசினார்கள்.
ஒன்று:-
وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
நீங்கள் உங்களுடைய
நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.'' (அல்குர்ஆன் 26:214)
என்ற வசனம் அருளப்பட்ட போது.
நபி (ஸல்) தங்களது
நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின்
வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர்.
நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு ''இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில்
கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில்
உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத்
தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும்.
தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான்
கண்டதில்லை''
என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல்
இருந்துவிட்டார்கள்.
இரண்டாவது
முறையாகவும் ஹாஷிம் கிளையாரை அழைத்து ''எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே! அவனையே புகழ்கிறேன். அவனிடமே உதவி தேடுகிறேன். அவன்மீது நம்பிக்கை
வைக்கிறேன். அவனிடமே பொறுப்பு ஒப்படைக்கிறேன். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்
ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை. அவனுக்கு இணை யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்'' எனக் கூறித் தொடர்ந்தார்கள்; ''நிச்சயமாக 'ராம்த்'
(போருக்கு செல்லும் வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற இடங்களையும், நீர்நிலைகளையும் அறிந்து வருவதற்காக அனுப்பப்படும் தூதர்)
பொய்யுரைக்கமாட்டார். எந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு
யாருமில்லையோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நான் குறிப்பாக உங்களுக்கும், பொதுவாக ஏனைய மக்களுக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அல்லாஹ்வின்
மீது ஆணையாக! நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள். நீங்கள் விழிப்பது போன்றே
எழுப்பப்படுவீர்கள். உங்களது செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படுவீர்கள்.
நிச்சயமாக அது நிரந்தர சொர்க்கமாக அல்லது நிரந்தர நரகமாக இருக்கும்'' என்று உரையாற்றி முடித்தார்கள்.
அப்போது அபூ
தாலிப் கூறினார்: ''உனக்கு உதவி செய்வது எங்களுக்கு மிகவும் விருப்பமானதே, உனது உபதேசத்தை ஏற்பதும் எங்களுக்குப் பிரியமானதே, உனது பேச்சை மிக உறுதியாக உண்மைப்படுத்துகிறோம். இதோ! உனது பாட்டனாரின்
குடும்பத்தார்! நானும் அவர்களில் ஒருவன்தான். எனினும், நீ விரும்புவதை அவர்களைவிட நான் விரைவாக ஏற்றுக் கொள்வேன். எனவே, உனக்கிடப்பட்ட கட்டளையை நீ நிறைவேற்றுவதில் நீ உறுதியாக இரு. அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் உன்னைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பேன். எனினும், எனது மனம் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை'' என்றார்.
அப்போது அபூ லஹப் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது (இந்த அழைப்பு) மிக இழிவானது. இவரை மற்றவர்கள்
தண்டிக்கும் முன் நீங்களே தடுத்துவிடுங்கள்'' என்றான். அதற்கு
அபூதாலிப் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இருக்கும்வரை அவரைப் பாதுகாப்போம்'' என்று கூறிவிட்டார். (அல்காமில்)
நிச்சயமாக நான்
உங்களது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உங்களுக்கு
நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப்
பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்'' என்று கூறி
முடித்தார்கள்.
இந்த எச்சரிக்கை
முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ''நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?'' என்று கூறினான். அவனைக் கண்டித்து ''அழியட்டும் அபூ லஹபின்
இரு கரங்கள்;
அவனும் அழியட்டும்...'' என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் இறங்கியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்,
ஜாமிவுத்திர்மிதி, ஃபத்ஹுல் பாரி)
இவ்வாறாக
ஏகத்துவக் குரல் ஓங்கியது. நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களிடம் நீங்கள்
இத்தூதுத்துவத்தை (நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை) ஏற்றால்தான் நம்மிடையே உறவு
நீடிக்கும். இதைத்தவிர அரபுகள் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளெல்லாம் அல்லாஹ்வின்
எச்சரிக்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று கூறித் தங்களது நிலையை
மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.
இரண்டு:-
குறைஷிகளின் வேண்டுகோலை ஏற்று
அபூதாலிப் அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை கை விடுமாறு பணித்த போது..
والله لو وضعوا الشمس في يمينى والقمر في يساري على أن أترك هذا
الأمر حتى يظهره الله، أو أهلك فيه ما تركته.
“ஓ, என்
பெரிய தந்தையே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த பணியை நான் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் என் வலது
கையில் சூரியனையும், சந்திரனை என் இடது கையிலும் வைத்தால், அல்லாஹ் என்னை வெற்றிபெறச் செய்யும் வரை அல்லது நான் அழிந்து போகும் வரை
நான் அதிலிருந்து திரும்ப மாட்டேன். என்று கூறினார்கள்.
மூன்று:- தாயிஃபில் இருந்து மாநபி {ஸல்} அவர்கள் இரத்தம் சொட்டச் சொட்ட
திரும்பும் போது ரப்பிடம் பேசினார்கள்.
«اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس، اللهم يا أرحم
الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني؟ إلى بعيد يتجهّمني أو إلى عدو
ملكته أمري، إن لم يكن بك عليّ غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع، إني أعوذ بنور
وجهك الذي أشرقت له الظلمات، وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو
تحل بي سخطك لك العتبى حتى ترضى لا حول ولا قوة إلا بك».
“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும்
மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம்
மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். நீ
என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக்
கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம்
இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே
எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம்
அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின்
ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி
என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே
பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத்
தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல்
முடியாது.”
இப்படி
அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொண்ட ஹபீப் (ஸல்) அவர்களுக்கு எப்படியான பிரதி
உபகாரத்தை வழங்கி இருப்பான்.
கொஞ்சம்
நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தமது ஹபீப் (ஸல்) அவர்களுக்கு
வெளிக்காட்டிய நன்றியே "மிஃராஜ் எனும் விண்ணேற்றப் பயணம்"
காலத்திற்கேற்ற அருமையான பதிவு மாஷா அல்லா
ReplyDelete