வானவர்களின்
தொடர்பு!!
ரமழான் – (1444 – 2023 )
– தராவீஹ் சிந்தனை:- 6.
ஆறாவது நாள்
தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, ஐந்தாவது நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு
உற்சாகமாகவும், ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும்
ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை
வழங்கியள்வானாக!
இன்று 165
வசனங்களைக் கொண்ட சூரா அல் அன்ஆம் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்...பெரிய சூராக்களில் ஒரு சூராவை (20 ரக்அத்களில்) ஒரே தராவீஹ்
தொழுகையில் ஓதி முடிப்பது ஆறாவது தராவீஹ் தொழுகையில் மட்டும் தான். இந்த சூரா
எப்படி ஒரே தடவையில் நபி {ஸல்} அவர்களுக்கு அருளப்பட்டதோ அதே போன்று ஒரே நாளின்
தராவீஹ் தொழுகையில் முழுமையாக ஓதி முடிக்கப்படுகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்
- அல்லாஹ்வின் புகழைக் கொண்டு ஆரம்பிக்கும் 5 சூராக்களில் இரண்டாவது
சூரா அல் அன்ஆம் சூராவாகும்.
கால்நடைகள்
குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த
அத்தியாயத்தின் 136,
138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது.
எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.
في
تفسير ابن كثير حديث رواه الحاكم في مستدركه وقال صحيح على شرط مسلم، أن جابرًا ـ
رضي الله عنه ـ قال: لما نزلت سورة الأنعام سبح رسول الله ـ صلّى الله عليه وسلم ـ
ثم قال:” لقد شيع هذه السورة من الملائكة ما سدّ الأفق
”
சூரத்துல் அன்ஆம்
இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று கூறிவிட்டு, இந்த ஸூராவிற்காக அடிவானத்தை அடைத்து கொள்ளுமளவிற்கு மலக்குகள் வருகை
தந்தார்கள்’
என்று கூறினார்கள்.
وروى
ابن مردويه عن الطبراني عن ابن عمر أن رسول الله ـ صلّى الله عليه وسلم ـ قال ”
نزلت على سورة الأنعام جملة واحدة، وتبعها سبعون ألفًا من الملائكة، لهم زَجَل
بالتسبيح والتحميد” . وجاءت روايات عن ابن عباس أنها نزلت بمكة ليلا جملة واحدة
"அன்ஆம் சூரா ஒரே
தடவையில் இறங்கியது அப்போது 70000 வானவர்கள் அல்லாஹ்வை
புகழ்ந்து கொண்டும் தஸ்பீஹ் செய்த வண்ணமும் பின் தொடர்ந்து வந்தனர்" என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
( நூல்: தப்ரானீ )
وأن
البخاري روى عن ابن عباس قوله: إذا سرّك أن تعلم جهل العرب فاقرأ ما فوق الثلاثين
ومائة من سورة الأنعام:( قَدْ خَسِرَ الذينَ قَتَلُوا أَوْلادَهَم سَفَهًا بِغَيرِ
عِلْمٍ ) إلى قوله:( وَمَا كَانُوا مُهْتَدِينَ
)
இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
அரபுகளின் மடமைத்தனத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால்
அன்ஆம் சூராவின் 130
ம் வசனத்திற்கு மேல் இருந்து 140 ம் வசனம் வரை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் ".
ولم
يذكر في فضل قراءتها أو قراءة شيء منها إلا حديثًا ذكره الثعلبي عن جابر مرفوعا
இந்த சூராவை
ஓதுவதன் சிறப்பு குறித்தோ அல்லது இந்த சூராவின் ஏதேனும் சில வசனங்களை ஓதுவதன்
சிறப்பு குறித்தோ இமாம் ஸஅலபீ ( ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களின் புறத்தில்
இருந்து அறிவிக்கும் ஒரேயொரு மர்ஃபூஆன ஹதீஸ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அந்த ஹதீஸ்
இது தான்.
” من قرأ ثلاث آيات من أول سورة الأنعام وكَّل الله به أربعين ألف ملك يكتبون له مثل عبادتهم إلى يوم القيامة، وينزل ملك من السماء السابعة معه مِرْزَبَّة من حديد، فإذا أراد الشيطان أن يوسوسَ له أو يوحيَ في قلبه شيئًا ضربه فيكون بينه وبينه سبعون حجابًا ” فإذا كان يوم القيامة قال الله تعالى:” امش في ظِلِّي يوم لا ظِلَّ إلا ظِلِّي، وكُلْ من ثمار جنتي، واشرب من ماء الكوثر، واغتسل من ماء السلسبيل، فأنت عبدي وأنا ربك “.
"எவர் அன்ஆம்
சூராவின் முதல் மூன்று ஆயத்துகளை ஓதி வருகின்றாரோ அல்லாஹ் அவருக்காக 40 ஆயிரம் வானவர்களை சாட்டுகின்றான். அவர்கள் மறுமைநாள் வரை அவர் வணக்க
வழிபாடுகள் செய்த நன்மைகளை எழுதுகின்றார்கள்.
மேலும், ஏழாவது வானத்தில் இருந்து ஒரு வானவர் இரும்பாலான பெரிய சுத்தியலை கொண்டு
வருகின்றனர். ஷைத்தான் அவருக்கு ஏதேனும் மன ஊசாட்டத்தை ஏற்படுத்தினாலோ, அல்லது மனக்குழப்பத்தை உண்டு பண்ணிணாலோ அந்த சுத்தியலால் ஷைத்தானை ஒரு அடி
அடிப்பார். அதற்குப் பிறகு அவருக்கும் ஷைத்தானுக்கும் இடையே 70 திரைகள் ஏற்பட்டு விடும்.
மறுமை நாளில் அந்த மனிதரைப் பார்த்து அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் "என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத இந்த நாளில் என்னுடைய நிழலை நோக்கி
நீ நடந்து செல்! சுவனத்தின் கனிகளை நீ சுவைத்து சாப்பிடு! கவ்ஸர் தடாகத்தில் நீ
நீர் அருந்து! ஸல்ஸபீல் நீரில் நீ குளித்துக் கொள்!" ஏனெனில் நீ என் அடியான்
நான் உன் இறைவன்!" என்று
சொல்வானாம்.
வானவர்களின் தொடர்பின் முக்கியத்துவம்..
ஒரு முஃமின் உடைய
வாழ்வில் வானவர்கள் உடனான தொடர்பு என்பது மிகவும் அற்புதமானது, அவசியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் தந்தையின்
இந்திரியத்துளியாக நம் தாயுடைய கருவிலே நுழைந்ததிலே இருந்து வானவர்களின் தொடர்பு
நமக்கு துவங்குகின்றது.
حَدَّثَنَا
الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ
زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: " إِنَّ
أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ
يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ
يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ:
اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ
يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا
يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ
كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ
بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ،
فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ
"
ஒருவரின் படைப்பு
அவரது தாய் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் அவ்வாறே
(நாற்பது நாட்களில்) கருக்கட்டியாக மாறுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது
நாட்களில்) சதைக் கட்டியாக மாறுகிறது. பின்னர் ஒரு வானவரை அல்லாஹ் அனுப்பி
"இவரது செயல்பாடுகளைப் பதிவு செய்! இவரது செல்வத்தைப் பதிவு செய்! இவரது மரண
வேளையைப் பதிவு செய்! இவர் நல்லவரா கெட்டவரா என்பதைப் பதிவு செய்!'' என நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. பின்னர் அவருக்கு உயிர்
ஊதப்படுகிறது.
உங்களில் ஒரு
மனிதனுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர்
(நல்ல) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று நரகவாசிகளின் செயலைச்
செய்து விடுவார். உங்களில் ஒரு மனிதனுக்கும் நரகத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (கெட்ட) செயல்களைச் செய்வார்.
முடிவில் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து விடுவார் என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : புகாரி 3208 , 3332, 6594,
7454 )
நம்முடன் எப்போதும் இரண்டு வானவர்கள்...
நமது செயல்களில்
ஒன்றுவிடாமல் அனைத்தையும் அவன் அறிந்தவனாக அல்லாஹ் இருக்கிறான். எனினும், நமது நடவடிக்கைகளைக் கண்காணித்து செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகளை
அல்லாஹ் படைத்துள்ளான்.
எந்நேரமும் நம்மை
நெருங்கியிருக்கும் சூழ்ந்திருக்கும் அவர்கள் நமது காரியங்கள் எதையும் விடாமல்
முழுமையாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பதிவு செய்யும் பணியை
மலக்குகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இறைவசனங்கள்
போதுமான சான்றுகளாக இருக்கின்றன.
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ
ஒவ்வொருவர் மீதும்
காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. ( அல்குர்ஆன்: 86: 4 )
وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ
كِرَامًا كَاتِبِيْنَۙ
يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ
உங்கள் மீது
மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள்
அறிவார்கள். ( அல்குர்ஆன்: 82: 10-12 )
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّآءَ
مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِىْۤ اٰيَاتِنَا ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ
مَكْرًا ؕ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ
மனிதர்களுக்கு
துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில்
அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு
செய்கின்றனர். ( அல்குர்ஆன்: 10:
21 )
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ
نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ
الشِّمَالِ قَعِيْدٌ
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
மனிதனைப்
படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி
நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல்
இருப்பதில்லை. ( அல்குர்ஆன்: 50: 16-18 )
اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْؕ
بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ
அவர்களது
இரகசியத்தையும்,
அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள்
நினைக்கிறார்களா?
அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு
செய்கின்றனர். ( அல்குர்ஆன்:43: 80 )
உயிரைக் கைப்பற்ற வருகை தரும் வானவர்கள்...
الَّذِيْنَ
تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ فَاَلْقَوُا السَّلَمَ
مَا كُنَّا نَـعْمَلُ مِنْ سُوْۤءٍؕ بَلٰٓى اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ
تَعْمَلُوْنَ
தமக்குத் தாமே
தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, “நாங்கள் எந்தக்
கேடும் செய்யவில்லை”
என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள்
செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். ( அல்குர்ஆன்: 16: 28 )
الَّذِيْنَ
تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ طَيِّبِيْنَ ۙ يَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُۙ
ادْخُلُوا الْجَـنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
நல்லோராக
இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில்
நுழையுங்கள்!”
என்று கூறுவார்கள் ( அல்குர்ஆன்: 16: 32 )
நல்லோர்களுக்கு சோபனம் சொல்லும் வானவர்கள்…
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا
تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا
وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக
எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால்
மலக்குகள் வந்து,
“நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் -
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ
ۚ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا
تَدَّعُوْنَ ؕ
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்)
உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள்
கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். ( அல்குர்ஆன்: 41: 30,31 )
தொடர்ந்து மண்ணறை, மறுமை நாளில்,
சுவனத்தின் வாசலில் வரவேற்று ஸலாம் கூறி சுவனத்தின் நம்
இருப்பிடம் வரை மலக்குமார்களின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
என்றாலும் உலகில்
வாழும் காலத்தில் அல்லாஹ்வை மகிழ்ச்சி படுத்தும் ஆனந்தப் படுத்தும் சில அடியார்களை
சிறப்பு படுத்தும் விதமாக கௌரவிக்கும் முகமாக அல்லாஹ் வானவர்களின் பெரும்
கூட்டத்தை உலகிற்கு அனுப்புகின்றான்.
இன்னும் சில போது
வானவர்களிடையே அவர் குறித்த அறிமுகத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விடுகின்றான்.
இன்னும் சில போது
சில அமல்களை செய்வதால் எப்போதும் வானவர்கள் சூழ இருக்கும் பெரும் பாக்கியத்தை
வழங்குகின்றான். உதாரணமாக இந்த சூராவின் முதல் 3 வசனங்களை ஓதுபவருக்கு கிடைக்கும் அந்தஸ்து போல.
பெரும் எண்ணிக்கையிலான வானவர்களின் வருகையை பெற்ற மேன்மக்கள்!
கந்தக் யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஒரு மாத காலத்திற்கு பின் ”ஸஅத் இப்னு மஆத் (ரலி) வஃபாத்தானார்கள்.
அன்னாரின் நல்லடக்க இறுதி ஊர்வலத்தில் இப்பூமிக்கு இதற்கு முன் வருகை தராத எழுபதினாயிரம் வானவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள் என நபி (ஸல்)
கூறியதாக ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கும் நபிமொழியொன்றை திர்மிதியில் காணலாம்.
عن جابر،
سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.
”ஸஅத் இப்னு மஆத் (ரலி) யின் மரணத்தால் அர்ஷ் நடுங்கியது என நபி (ஸல்) அவர்கள் கூறிய நபிமொழியை முதவாத்திரான அதிகமான அறிவிப்புகளின் மூலம் காணலாம்.
حينما سمع النبي أحد
المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول
الله:
"لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك
اليوم".
நாங்கள் ஸஅத்ப்னு மஆத் (ரலி)யின் உடலை சுமந்து சென்ற போது என்ன இலகுவாகக் கொண்டு செல்கிறார்கள் என முனாபிக்கள் விமர்சித்த போது வானவர்கள் ஜனாஸாவை சுமந்து வருகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியை திர்மிதியில் பார்க்கலாம்.
روى حديثه محبوب بن هلال المزني، عن ابن أبي ميمونة، عن أنس بن مالك
قال: نزل جبريل على النبي عليهما السلام وهو بتبوك، فقال: يا محمد، مات معاوية بن
معاوية المزني بالمدينة، فيجب أن نصلي عليه: قال: نعم، فضرب بجناحه الأرض، فلم تبق
شجرة ولا أكمة إلا تضعضعت، ورفع له سريره حتى نظر إليه، فصلى عليه وخلفه صفان من
الملائكة، في كل صف ألف ملك، فقال النبي صلى الله عليه وسلم لجبريل عليه السلام:
يا جبريل، بم نال هذه المنزلة ؟ قال بحبه " قلْ هُوَ الله أَحَدٌ " ،
وقراءته إياها جائياً وذاهباً، وقائماً وقاعداً، وعلى كل حال. وقد روى: في كل صف ستون ألف ملك.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
நபித்தோழர்களோடு தபூக்கிலே இருந்த தருணம் அது..
என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது.
அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தருகின்றார்கள்.
நபிகள் {ஸல்} அவர்கள் ஆச்சர்யம் மேலிட ”ஜிப்ரயீலே! என்றைக்கும் இல்லாத அளவிற்கு சூரியனின் பிரகாசம் இன்று மிகவும்
வெண்மையாய் அமைந்திருக்கின்றதே காரணம் தான் என்னவோ?” என
ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினார்கள்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இன்று
தங்களின் தோழர் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யி (ரலி) மதீனாவில் இறந்து
விட்டார்கள். (இன்னா லில்லாஹ்..)
அவருக்காக நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்த விரும்புகின்றீர்களா?” என அண்ணலாரிடம்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
ஆம் என நபிகளார் பதில் அளித்ததும், ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
தங்களது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.
தபூக்கில் இருந்தவாரே அண்ணலார் மக்காவையும் மதீனாவையும்
கண்டார்கள்.
பின்பு, அண்ணலார் தோழர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி ஜனாஸா
தொழுகைக்குத் தயாராகுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழவைத்தார்கள். நபிகளாரோடு ஜிப்ரயீல் (அலை) அவர்களும்,
இரண்டு ஸஃப் நிறைய வானவர்களும், (ஒவ்வொரு
ஸஃப்ஃபிலும் எழுபதினாயிரம் வானவர்கள் நின்றனர்), நபித்தோழர்களும்
கலந்து கொண்டார்கள்.
தொழுது முடித்த பின்னர், ஜிப்ரயீலை நோக்கிய நபிகளார் “ஜிப்ரயீலே! எதன் காரணத்தினால் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ இந்த
உயர் அந்தஸ்தை அடைந்தார்” எனக் கேட்டார்கள்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “உலகில் வாழும்
காலங்களில் அவர் அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார்; அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை ஓதியும்
வந்தார்” ஆதலால் அல்லாஹ் அவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி
கௌரவித்துள்ளான்” என பதில் கூறினார்கள்.
இந்தச் செய்தி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வாயிலாக
முஸ்னத் அபூ யஃலா வில் 4268 –வது ஹதீஸாகவும், இமாம் பைஹகீ (ரஹ்)
அவர்கள் தங்கள் சுனனில் பாகம்: 4, பக்கம்:50 –லும், அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்களின் வாயிலாக
இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் முஃஜமுல் கபீரில் 7537 –வது
ஹதீஸாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அல்லாமா இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல்
இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் எனும் நூலில் மேற்கண்ட மூன்று
அறிவிப்புக்களையும் பதிவு செய்து விட்டு இந்தச் செய்தி வலுவான அறிவிப்புத்
தொடர்களின் மூலம் இடம் பெற வில்லையென்றாலும் இது முன்கர் வகையைச் சார்ந்த ஹதீஸ்
அல்ல என்றும் சான்று பகர்கின்றார்கள்.
மேலே தரப்பட்டிருக்கின்ற அரபி வாசகம் உஸ்துல் ஃகாபா நூலில்
இடம் பெற்றுள்ளது. ( நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2,
பக்கம்:364,365. மற்றும் உஸ்துல் ஃகாபா )
வானவர்களிடம் அறிமுகம் ஆன மேன்மக்கள்!
حدثنا أبو عبد الله أحمد بن عبد الرحمن
أخي ابن وهب، حدثنا
عمي(عبد
الله ابن وهب)، حدثني أبو صخر أن يزيد الرقاشي حدثه
سمعت أنس بن مالك ولا أعلم إلا أن أنسا يرفع الحديث إلى رسول الله صلى الله عليه
وسلم
" أن يونس
النبي عليه السلام حين بدا له أن يدعو بهذه الكلمات وهو في بطن الحوت قال: (اللهم
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين) فأقبلت الدعوة تحت بالعرش فقالت
الملائكة يا رب صوت ضعيف معروف من بلاد غريبة فقال أما تعرفون ذاك ؟ قالوا: يا رب
ومن هو ؟ قال: عبدي يونس، قالوا: عبدك يونس الذي لم يزل يرفع له عملا متقبلا ودعوة
مجابة، قالوا: يا ربنا أولا ترحم ما كان يصنعه في الرخاء فتنجيه من البلاء ؟ قال:
بلى، فأمر الحوت فطرحه في العراء
ورواه ابن جرير، عن
يونس، عن ابن وهب
நபி யூனுஸ் {அலை} அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது “அல்லாஹ்வே! உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை! நீ தூய்மையானவன், திண்ணமாக, நான் குற்றம் செய்து விட்டேன்!” என்று அழுது பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
“இந்த அழுகுரல் அர்ஷைச் சுற்றியுள்ள
வானவர்களுக்கும் கேட்டது. அப்போது, வானவர்கள் “அல்லாஹ்வே! நாங்கள் அதிகம் அறிந்த ஓர் குரல் இப்போது எங்கேயோ தூரமாக இருந்து
அபயமும், மன்னிப்பும் கேட்பது போல் தெரிகின்றது.
அல்லாஹ்வே! அவரின் குரலில் நாங்கள் பலகீனத்தை உணர்கிறோம்! என்றார்கள்.
அதற்கு, அல்லாஹ் “நீங்கள் அந்த சப்தத்தை கேட்கின்றீர்களா? என்று கேட்டான். அப்போது, வானவர்கள் ஆம்! நாங்கள் கேட்கிறோம்! “அல்லாஹ்வே! யார் அவர்? என்று வினவினார்கள்.
அதற்கு, அல்லாஹ் “என்னுடைய அடியார் யூனுஸ்” என்று பதில் கூறினான்.
அப்போது, வானவர்கள் “அல்லாஹ்வே! உன்னுடைய அடியார் யூனுஸ் நல்ல நிலையில் இருக்கும் போது ஏற்றுக்
கொள்ளப்படுகிற அளவிலான இபாதத்களும், பதிலளிக்கத்தக்க நிறைய துஆக்களும்
செய்திருக்கின்றாரே! இப்போது, அவர் ஏதோ ஆபத்தில் இருப்பதாக நாங்கள்
கருதுகின்றோம். அல்லாஹ்வே! நீ அவரைக் காப்பாற்றி ஈடேற்றம் கொடுப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, அல்லாஹ் “ஆம்! அவரை நான் காப்பாற்றுவேன்! ஈடேற்றம்
நல்குவேன்” என பதில் கூறிவிட்டு, மீனுக்கு கரையில் வந்து யூனுஸ் {அலை} அவர்களைக் கக்குமாறு கட்டளையிட்டான்.
அவ்வாறே மீனும் யூனுஸ் {அலை} அவர்களை கரையில் வந்து கக்கி விட்டுச்
சென்றது. ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ )
عن علي بن أبي طالب رضي
الله عنه عن رسول الله صلى الله عليه وسلم
أنه أتاه جبرئيل عليه السلام ، فبينما هو عنده إذ
أقبل أبو ذر ، فنظر إليه جبرئيل فقال : هو أبو ذر . قلت : يا أمين الله ! وتعرفون
أنتم أبا ذر ؟ فقال : نعم والذي بعثك بالحق إن أبا ذر أعرف في أهل السماء منه في
أهل الأرض ، وإنما ذلك لدعاء يدعو به كل يوم مرتين ، وقد تعجبت الملائكة منه ،
فادع به فسل عن دعائه
அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது அங்கே அப்போது அந்த இடத்தை அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள்.
அதைக் கண்ட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இவர் அபூதர் அல் ஃகிஃபாரி தானே? என்று வினவினார்கள். ஆம்! அவர் அபூதர் தான் என கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ்வின் நம்பிக்கைக்குரியவரே! நீங்கள் எப்படி அவர்களை அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.
”உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீதாணையாக! பூமியில் எப்படி அவர் அறியப்படுகின்றாரோ, அது போன்றே வானுலகில் இருக்கிற வானவர்கள் அனைவரும் அவரை அறிவார்கள்.
”ஒவ்வொரு நாளும் இரண்டு நேரங்கள் அவர் கேட்கும் துஆவின் மூலம் வானவர்கள் ஆச்சர்யமடைந்ததோடு, அதுவே அவர் வானவர்கள் அறிந்து கொள்வதற்கு காரணமாகவும் ஆகிவிட்டது” என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறி விட்டு, வேண்டுமானால் நபியே! நீங்கள் அவரை அழைத்து அது எந்த துஆ என்று கேளுங்கள்!” என்று சொன்னார்கள்.
فقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر !
دعاء تدعو به كل يوم مرتين ؟ قال : نعم فداك أبي وأمي ، ما سمعته من بشر ، وإنما
هو عشرة أحرف ألهمني ربي إلهاما ، وأنا أدعو به كل يوم مرتين ، أستقبل القبلة
فأسبح الله مليا ، وأهلله مليا ، وأحمده مليا ، وأكبره مليا ،
மாநபி {ஸல்} அவர்கள் “அபூதர் (ரலி) அவர்களை அழைத்து, தினந்தோரும் நீர் ஏதோ ஒரு துஆவை அல்லாஹ்விடம் கேட்கின்றீராமே? அப்படியா? அது என்ன துஆ கொஞ்சம் ஓதிக் காட்டுங்கள்!” என்று கேட்டார்கள்.
அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் “என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு இல்ஹாமாக கற்றுத் தந்த 10 பத்து கலிமாக்களை உளூ செய்து விட்டு, கிப்லாவை நோக்கி அமர்ந்து அல்லாஹ்வை வேண்டிய அளவிற்கு தஸ்பீஹும், தஹ்லீலும், தக்பீரும், தஹ்மீதும் கூறிய பின்னர் கேட்கிறேன்” என்று பதில் கூறிவிட்டு அந்த துஆவை மாநபி {ஸல்} அவர்கள் திருமுன் ஓதிக்காண்பித்தார்கள்.
ثم أدعو بتلك العشر الكلمات : اللهم إني أسألك إيمانا
دائما ، وأسألك قلبا خاشعا ، وأسألك علما نافعا ، وأسألك يقينا صادقا ، وأسألك
دينا قيما ، وأسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام
العافية ، وأسألك الشكر على العافية ، وأسألك الغنى عن الناس
அல்லாஹ்வே! உன்னிடம் நிலையான இறைநம்பிக்கையை (ஈமானை) க் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் (உனக்கு மட்டுமே) அஞ்சுகிற இதயத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பயன் தருகிற கல்வியைக் கேட்கின்றேன்!
அல்லாஹ்வே! உன்னிடம் உண்மையான (தீனின்) உறுதிப்பாட்டைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் பரிபூரணமான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன்னிடம் நீடித்த, நிலையான ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் நற்பேற்றை உன்னிடம் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! உன் அன்றி பிற மனிதர்களிடம் தேவையாகாத தன்மையைக் கேட்கின்றேன்!” என்று துஆ கேட்பேன் என அபூதர் (ரலி) கூறினார்கள்.
قال جبرئيل : يا محمد ! والذي بعثك بالحق لا يدعو
أحد من أمتك هذا الدعاء إلا غفرت له ذنوبه وإن كانت أكثر من زبد البحر وعدد تراب
الأرض ، ولا يلقاك أحد من أمتك وفي قلبه هذا الدعاء إلا اشتاقت إليه الجنان ،
واستغفر له الملكان ، وفتحت له أبواب الجنة ، ونادت الملائكة : يا ولي الله ! ادخل
من أي باب شئت
அப்போது, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “முஹம்மத் {ஸல்} அவர்களே! உங்கள் உம்மத்தில் எவர் இந்த துஆவை ஓதுகின்றாரோ அவரின் பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும், பாலை மணலின் எண்ணிக்கையளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.
இந்த துஆ குடி கொண்டிருக்கும் இதயத்தை சுவனம் நேசிக்கின்றது! அவருக்காக
சதா இரு வானவர்கள் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர், அவருக்காக சுவனத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன! மறுமையில், வானவர்கள் “அல்லாஹ்வின் நேசம் பெற்றவரே! நீர் விரும்பிய வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பீராக!” என்று அழைப்பு கொடுப்பார்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
أخرجه الحكيم الترمذي في " نوادر الأصول "
(3/40-41) قال : ثنا عمر بن أبى
عمر
، قال ثنا أبو همام الدلال – محمد بن محبب (221هـ)، عن إبراهيم بن طهمان ، عن عاصم
بن أبى النجود ، عن زر بن حبيش ، عن علي بن أبي طالب به . – نقلنا الإسناد من
" جمع الجوامع " للسيوطي ، ، وعنه صاحب " كنز العمال " (2/678
لا حرج على من دعا بالكلمات
الواردة بهذا الدعاء ، إذ ليس فيها شيء مستنكر ولا مستغرب ، لكن دون أن يعتقد لها
هذا الفضل الذي لم ثبت
( நூல்: நவாதிருல் உஸூல் லிஇமாமி அல்ஹகீமித் திர்மிதீ (ரஹ்), கன்ஜுல் உம்மால், ஜம்உல் ஜவாமிஉ லிஇமாமிஸ் ஸுயூத்தீ (ரஹ்)…. )
மேற்கூறிய ஹதீஸை ஹதீஸ் விரிவுரையாளர்கள் சிலர் ளயீஃப் என்றும், மவ்ளூஃ என்றும் விமர்சிக்கின்றனர். இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் வருகிற உமர் இப்னு உமர் என்பவரே இதற்கு பிரதான காரணமானவர்.
எனினும் இந்த ஹதீஸுக்கு விளக்கம் தருகிற ஹதீஸ் விரிவுரையாளர்கள் ”இந்த வாசகத்தைக் கொண்டு துஆ ஓதுவதென்பது ஒன்றும் பாவமான செயல் இல்லை. ஆனாலும், மேற்கூறிய ஹதீஸில் சொல்லப்பட்ட சிறப்புக்களோ, சோபனங்களோ கிடைக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை”
என்று
கூறுகின்றார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் வானவர்களின் தொடர்பை பலப்படுத்துவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment