Thursday, 30 March 2023

துஆ எனும் சிறந்த அருட்கொடையைப் பெற்ற சிறந்த சமுதாயம்!!!

 

துஆ எனும் சிறந்த அருட்கொடையைப் பெற்ற சிறந்த சமுதாயம்!!!


அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் அல்லாஹ் மகத்தான அருள் நின்றிலங்குகின்ற ரஹ்மத் உடைய முதல் பத்தின் இறுதி நாட்களின் ஜும்ஆ தினத்தில் நாம் வீற்றிருக்கின்றோம்.

அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்கிய ஏராளமான சிறந்த அருட்கொடைகளில் ஒன்று ரமழான் மாதம்.

அந்த ரமழானையும் அல்லாஹ் நமக்கு சும்மா தந்து விடவில்லை. மாறாக, பல்வேறு சிறப்புகளை இந்த ரமழானில் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்கியிருக்கின்றான்.

ரஹ்மத் உடைய பத்து நாட்கள், மக்ஃபிரத் உடைய பத்து நாட்கள், நரக விடுதலையைப் பெற்றுத் தருகிற பத்து நாட்கள், ஒற்றைப்படை இரவுகள், லைலத்துல் கத்ர் இரவு, இஃதிகாஃப், இந்த மாதத்தில் நாம் செய்யும் அமல்கள் ஒவ்வொன்றிற்கும் 70 முதல் 700 மடங்கு வரை நன்மைகள் என அருட்கொடைகளின் குவியல்களில் நம்மை திளைக்க வைத்திருக்கின்றான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ரமழானில் நமக்கு தந்திருக்கின்ற இன்னுமொரு சிறந்த அருட்கொடை, நாம் பெரும்பாலும் அலட்சியமாக அல்லது கவனக்குறைவாக அல்லது அதிகம் கண்டு கொள்ளாத ஒரு அருட்கொடை என்று கூட சொல்லலாம்.

ஆம்! துஆ எனும் அருட்கொடை. அதுவும் நோன்பாளி செய்யும் துஆ உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற சோபனம் நிறைந்த அருட்கொடை.

துஆ என்பது எவ்வளவு மகத்தான ஓர் அருட்கொடை?

முதலில் நாம் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். முன் சென்ற மூஸா (அலை) அவர்களின் சமூகமான பனூ இஸ்ரவேலர்கள் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் பேசுகின்றான்.

அதில் அல்பகரா அத்தியாயமும் ஒன்று. அந்த அத்தியாயத்தில் அந்த சமுதாயத்தின் ஒரு நிலையை இப்படி படம் பிடித்துக் காட்டுவான்.

அதாவது அவர்களுக்கு எது வேண்டும் என்றாலும் அது அவர்களின் நபியான மூஸா (அலை) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பின்னர் நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்து அந்த சமூகத்தாருக்கு அது வழங்கப்படும்.

யாமூஸா உத்வு லனா ரப்பக! “மூஸாவே! உம்முடைய ரப்பிடம் துஆச் செய்வீராக!” என்ற வார்த்தைப் பிரயோகத்தை நீங்கள் பார்க்கலாம்! இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். துஆ எனும் அருட்கொடை அவர்களுக்கு வழங்கப்படாததால் நம்முடைய ரப்பு என்று சொல்ல முடியாமல் “உங்களுடைய ரப்பு” என்று அல்லாஹ்வோடு தங்களை இணைத்துக் கூட கூற முடியாத ஒரு சூழ்நிலையை அந்த சமுதாயம் சந்தித்ததை நாம் குர்ஆனின் மூலமாக பார்க்கின்றோம்.

அவர்களின் சிறு சிறு ஆசைகள் முதல், பெரும் பெரும் தேவைகள், பிரச்சினைகள், தீர்வுகள் என தொடங்கி ஃபிர்அவ்னை அவர்கள் நைல் நதியின் அருகே சந்தித்தார்களே அது வரை தங்களுக்கான எல்லாத் தேவைகளையுமே அந்த சமூகம் நபி மூஸா (அலை) அவர்கள் மூலமாகவே அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றதாக, அனுபவித்ததாக அல்குர்ஆன் நமக்கு சொல்கிறது.

குடிப்பதற்கு தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ததாக இருக்கட்டும், வெங்காயம், பூண்டு, கீரையை கேட்டதாக இருக்கட்டும், கொலையுண்ட ஒருவரின் நிலை குறித்து அறிய விரும்பிய போதும் சரி இந்த எல்லா இடத்திலும் அவர்களால் நேரடியாக அல்லாஹ்விடம் எதையும் கேட்டுப் பெற முடியவில்லை. ( பார்க்க:- அல்பகரா வசனம் 60, 61, மற்றும் 67 முதல் 73 வரை )

அதே போன்றே நபி ஈஸா (அலை) அவர்களின் சமூகமும் தங்களுக்கு வானிலிருந்து உணவுத் தட்டு இறங்க வேண்டும் என்ற ஆசையை தங்கள் நபியிடம் தான் முறையிட முடிந்ததே ஒழிய தங்களால் நேரடியாக தங்கள் ஆசையைக் கேட்டுப் பெற முடியவில்லை.

ஆனால், அல்லாஹ் இந்த உம்மத்திற்கு “துஆ” எனும் சிறந்த அருட்கொடையை தந்துள்ளான். அதுவும் இந்த உம்மத் கேட்காமல் தந்துள்ளான்.

இதே அல்பகரா அத்தியாயயத்தில் பல இடங்களில் “யஸ்அலூனக” – நபியே உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் அவர்கள் கேட்கும் இந்த கேள்விக்கு இந்த மாதிரி உங்கள் ரப்பு பதில் சொல்கின்றான் என கூறுங்கள் என்று கூறும் இறைவன் (பார்க்க:- அல்பகரா 189, 215, 219, 220, 221 ) இதே பகரா அத்தியாயத்தில் “என் அடியார்கள் என்னை குறித்து கேட்டால், இதோ நான் மிகச் சமீபத்தில் இருக்கின்றேன்” என்று நபியே நீர் கூறுவீராக! என்னை ஈமான் கொண்டு, என்னை அழைத்து, என் பிரார்த்தனைக்கு பதிலளி என்றால் துஆச் செய்யும் அந்த அடியானுக்கு உடனடியாக நான் பதிலளிக்கின்றேன்” என்று நபியே! நீங்கள் கூறுங்கள்” என்கிறான். ( அல்பகரா:- 186 )

அப்படி என்றால் அல்லாஹ் “இந்த உம்மத்திற்கு துஆ என்பதை பெரும் அருட்கொடையாக, சிறந்த அருட்கொடையாக வழங்கி இருக்கின்றான்” என்று தானே பொருள்.

எனவே, நாம் துஆ எனும் அந்த சிறந்த அருட்கொடையை முழுமையாக பயன்படுத்த வேண்டும், முழுமையாக அனுபவிக்க வேண்டும்.

அல்லாஹ் நம்மை தேவையுடையவர்களாகவே படைத்துள்ளதாக கூறுகின்றான். எனக்கு இது தான் தேவை, எனக்கு இது தேவை இல்லை என்று நாம் எதையும் ஒதுக்கித் தள்ளிவிட இயலாது, அது முடியவும் முடியாது.

இன்று இந்த உம்மத்திற்கு எவ்வளவோ தேவைகள் இருக்கின்றது. நம் வீட்டிலிருந்து துவங்கி நம் தெருவில், நம் மஹல்லாவில், நம் ஊரில், நம் மாவட்டத்தில், நம் மாநிலத்தில், நம் நாட்டில், சர்வதேச அளவில், கல்வியில், அதிகாரத்தில், பாதுகாப்பில், நீதி நிர்வாகத்தில், அநீதி இழைக்கப்படும் விஷயத்தில் இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இந்த ரமழானில் இதோ நோன்பு வைத்த நிலையில் இருக்கிற நீங்களும், நானும் “துஆ செய்தால் விரைவாக ஒப்புக்கொள்ளப்படும் துஆவுக்கு பாக்கியமான சொந்தக்காரர்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் சோபனம் கூறியிருக்கின்றார்கள்.

சொல்லுங்கள்! கடந்த ஏழு நோன்புகளில் நாம் எத்தனை துஆக்களைக் கேட்டிருப்போம்? நம் மனதின் ஆசைகளை, ஆழ்மனதின் தேட்டங்களை, நம் கழுத்தை நெறிக்கும் பிரச்சினைகளை, நம் முதுகை கூனச் செய்யும் சுமைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றோம்?

நம்முடைய துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரங்கள் அனைத்திலும், குறிப்பாக நோன்பு திறக்கும் அந்த நேரத்திலாவது இந்த கரங்கள் அந்த வானை நோக்கி, அர்ஷில் இருக்கும் ரஹ்மானை நோக்கி சென்றதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன் சென்ற ஒரு சமூகத்தை விட அல்லாஹ் நம்மை அவனோடு இவ்வளவு நெருக்கி வைத்திருந்தும் நாம் ஏன் தூரமாக இருக்கின்றோம்.

நாம் என்ன நினைக்கின்றோம் என்றால்? துஆ தான, துஆ என்னங்க செய்திரும்? இப்படித் தான் நினைக்கின்றோம் என்றால் நூஹ் நபியின் ஒரு துஆ ஒரு சமூகத்தையே அழித்தது. மூஸா நபியின் ஒரு துஆ ஒரு சமூதத்தையே கரை சேர்த்துக் காப்பாற்றியது.

இதோ, நீங்களும் நானும் இன்று பள்ளியிலே அமர்ந்து இபாதத் செய்து கொண்டிருக்கின்றோமே அதற்கு காரணம் என்ன என்று நினைக்கின்றீர்கள்.

பத்ரின் போது மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்களே! “அல்லாஹ்வே! இந்த சின்னஞ்சிறு கூட்டத்தை நீ காப்பாற்ற வில்லையானால், நாளை இந்த பூமியில் உன்னை வணங்க ஒருவரும் இருக்கமாட்டார்கள்”.

நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அது பத்ரிலே வெற்றி பெறுவதற்காக நபி கேட்ட துஆ என்று. இல்லை, நீங்களும், நானும் இனி வர இருக்கிற இந்த உம்மத்தின் பிரதிநிதிகளும் ரப்பை வணங்கக் கூடியவர்களாக உருவாக வேண்டும்” என்பதற்காக.

கோவளத்தின் மஸாரில் இருக்கும் தமீமுல் அன்ஸாரி (ரலி) அன்ஹு அவர்கள் பத்ர் ஸஹாபி தானே, உக்காஷா (ரலி) அவர்கள் பத்ர் ஸஹாபி தானே! அந்த துஆவின் மக்பூலிய்யத் தான் நீங்களும் நானும் தமிழகத்தில் முஸ்லிம்களாக, இதோ இந்த பள்ளியில் அமர்ந்திருக்கின்றோம்.

நோன்பாளிக்கு அல்லாஹ் வழங்கிய மகத்தான அருட்கொடை…

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا تُرَدُّ دَعْوَتُهُمْ الإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الْغَمَامِ وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ رواه الترمذي (2525)، وصححه الألباني في "صحيح الترمذي" (2050).

மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்என்று கூறி விட்டு அவர்களின் துஆ மேகத்தை கடந்து சென்று அந்த துஆவிற்காக வான் மண்டலத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அப்போது அல்லாஹ் "என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இதோ நான் அவர்களின் துஆக்களுக்கு விரைவில் பதில் தருகிறேன்" என்று சொல்கிறான்" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ فِي الدُّعَاءِ، وَإِنَّ أَبْخَلَ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ " - شعب الإيمان

மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்''என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஷுஅபுல் ஈமான்)

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துஆவின் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கலாமா? தயங்கலாமா?

துஆ செய்தால்மூன்றிலொரு பலன் நிச்சயம் கிடைக்கும்...

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لَيْسَ بِإِثْمٍ وَلَا بِقَطِيعَةِ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السوء مثلها) قال: إذا يكثر؟ قال: (الله أكثر) - الأدب المفرد

பாவத்தை கொண்டோ உறவு முறிவைக் கொண்டோ தம்முடைய துஆவில் எந்த ஒன்றும் இல்லாமல் ஒருவர் துஆ கேட்டால்

கேட்டது கிடைக்கும் அல்லது துஆவின் பலன் மறுமையில் நன்மையாக கிடைக்கும் அல்லது அதற்கு பகரமாக உலகில்  நடக்கவிருக்கும் ஆபத்து நீக்கப்படும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

1.   இறைவனிடம் மனம் உருகி கெஞ்சி பணிவோடு கேட்க வேண்டும்.

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏ 

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும்,  அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:55)

2.   அல்லாஹ் நம் துஆவை ஏற்றுக்கொள்வான் என்கின்ற நம்பிக்கையோடும் பொடுபோக்கு இல்லாமலும் கேட்க வேண்டும்.

روى الترمذي عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ادعوا اللهَ وأنتم موقنون بالإجابة، واعلموا أن اللهَ لا يستجيب دعاءً من قلبٍ غافلٍ لاهٍ)؛ (حديث صحيح) (صحيح الترمذي - للألباني - حديث 2766).

3.   துன்பம் ஏற்படும்போது மட்டும் இறைவனை அழைக்காமல் இன்பமான நேரத்திலும் துஆச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن سره أن يستجيب اللهُ له عند الشدائد والكرب، فليُكثر الدُّعاء في الرخاء))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2693)

எவர் தன்னுடைய கஷ்டமான, சிரமமான நேரத்தில் துஆ அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் தான் நல்ல நிலையில் சந்தோஷமாக வாழும் போது அதிகம் துஆ செய்பவராக இருந்து கொள்ளட்டும்! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

4.   உங்களின் ஒருவரின் துஆ கண்டிப்பாகவும்  விரைவாகவும் கபூல் ஆகவேண்டுமா. அதுபோன்ற தேவையுள்ள மற்றவருக்காக நீங்கள் அந்த துஆவை செய்யுங்கள்.

" ﺩﻋﻮﺓ اﻟﻤﺮء اﻟﻤﺴﻠﻢ ﻷﺧﻴﻪ ﺑﻇﻬﺮ اﻟﻐﻴﺐ ﻣﺴﺘﺠﺎﺑﺔ، ﻋﻨﺪ ﺭﺃﺳﻪ ﻣﻠﻚ ﻣﻮﻛﻞ ﻛﻠﻤﺎ ﺩﻋﺎ ﻷﺧﻴﻪ ﺑﺨﻴﺮ، ﻗﺎﻝ اﻟﻤﻠﻚ اﻟﻤﻮﻛﻞ ﺑﻪ: ﺁﻣﻴﻦ ﻭﻟﻚ ﺑﻤﺜﻞ "

நபி (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்" என்று கூறினார்கள். என உம்முத் தர்தா (ரலி) & அபுத்தர்தா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். ( நூல்: ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள் )

மேன்மக்களின் துஆக்களில் இருந்து…

عن أبي ثابت بن شداد بن أوس رضي الله عنه قال: قال النعمان بن قوقل رضي الله عنه يوم أحد: اللهم إني أقسم عليك أن أُقتل، فأدخل الجنة، فقُتل، فقال رسول الله - صلى الله عليه وسلم -: «إن النعمان أقسم على الله، فأبره فلقد رأيته يطأ في حظيرتها ما به من عرج]).

நுஃமான் இப்னு கவ்கல் (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தின் போது "அல்லாஹ்வே! உன் மீது சத்தியமாக! இந்த யுத்தத்தில் நான் கொல்லப்பட வேண்டும்! சுவனத்தில் நான் நுழைய வேண்டும்" என்று துஆ செய்தார்.  அவர் துஆ செய்தது போன்று உஹத் யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டு ஷஹீத் ஆனார்.  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:-திண்ணமாக நுஃமான் துஆவில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டார். அல்லாஹ் அவரின் துஆவை அங்கீகரித்தான். இப்போது தான் அவரை நான் காலை ஊன்றி ஊன்றி சுவனத்தில் செல்ல கண்டேன்" என்று.

عن نافع، أن ابن عمر رضي الله عنهما أضاف رجلاً أعمى، فأكرمه ابن عمر رضي الله عنهما، وأنامه في منزله الذي ينام فيه، فلما كان في جوف الليل، قام ابن عمر رضي الله عنهما، فتوضأ، فأسبغ الوضوء، ثم صلى ركعتين، ثم دعا بدعاء فهمه الأعمى، فلما رجع ابن عمر رضي الله عنهما إلى مضجعه، قام الأعمى إلى فضل وضوء ابن عمر رضي الله عنهما، فتوضأ، وأسبغ، ثم صلى ركعتين، ثم دعا بذلك الدعاء، فرد الله عليه بصره، فشده الصبح مع ابن عمر رضي الله عنهما بصيرًا، فلما فرغ، التفت إلى ابن عمر رضي الله عنهما فقال: يا أبا عبد الرحمن دعاء سمعته منك البارحة تدعو به، فهمته، فقمت، فصنعت مثل الذي صنعت، فرد الله علي بصري، قال: ذاك دعاء علَّمناه رسول الله - صلى الله عليه وسلم -، وأمرنا أن لا نعلمه أحدًا يدعو به في أمر الدنيا، قال: «قل اللهم رب الأرواح الفانية، والأجساد البالية، أسألك بطاعة الأرواح الراجعة إلى أجسادها، وبطاعة الأجساد الملتئمة بعزتك، وبكلماتك النافذة فيهم، وأخذك الحق بينهم، والخلائق بين يديك ينتظرون فصل قضائك، ويرجون رحمتك، ويخافون عقابك، أن تجعل النور في بصري، واليقين في قلبي، وذكرك بالليل والنهار على لساني، وعملاً صالحًا فارزقني»([14]).

இப்னு உமர் (ரலி) அவர்களின் பணியாளர் நாஃபிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: பார்வையற்ற ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தம்மை விருந்தாளியாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவர்களை விருந்தாளியாக ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் உபசரித்தார்கள். இப்னு உமர் ரலி அவர்கள் வீட்டிலேயே அவரும் இரவு தங்கினார்.

இரவில் விழித்தெழுந்து அழகிய முறையில் உளூ செய்து இரண்டு ரக்அத்  தொழுது முடித்த இப்னு உமர் (ரலி) அவர்கள் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் பார்வையற்ற அந்த மனிதர் புரிந்து கொள்ளும் வகையில் துஆவை ஓதினார்கள். பின்னர் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் பார்வையற்ற அந்த மனிதர் எழுந்து இப்னு உமர் (ரலி) அவர்களின் உதவியுடன் உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது இப்னு உமர் (ரலி) அவர்கள் கேட்ட அந்த துஆவைக் கேட்டார். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரின் பார்வையைத் திருப்பி அளித்தான்.

இந்நிலையில் சுபுஹ் தொழுகைக்கான அழைப்பு கேட்கவே இப்னு உமர் ரலி அவர்களுடன் இணைந்து அவரும் நன்கு பார்க்கும் திறனோடு தொழச் சென்றார்.

தொழுது முடித்ததும் இப்னு உமர் (ரலி) அவர்களை நோக்கி திரும்பி அமர்ந்து " அபூ அப்துர்ரஹ்மான் அவர்களே! இன்று அதிகாலை நேரத்தில் நீங்கள் கேட்ட அந்த துஆவின் பொருளை நான் விளங்கிக் கொண்டேன். பின்னர் நீங்கள் செய்தது போல உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது நீங்கள் துஆ கேட்டது போன்றே நானும் கேட்டேன். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு பார்வையை தந்து விட்டான்" என்றார்கள்.

அதற்கு, இப்னு உமர் (ரலி) அவர்கள் "நபி ஸல் அவர்கள் அந்த துஆவை எங்களுக்கு கற்றுத் தந்தார்கள். மேலும், எங்களுக்கு அந்த துஆவை உலக நோக்கங்களுக்காக வேண்டி கேட்கும் நோக்கில் உள்ளவர்கள் எவருக்கும் கற்றுத் தரக் கூடாது " என்று கட்டளையும் பிறப்பித்தது இருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.

அந்த துஆவின் பொருள்:- அழிந்து போகும் ஆன்மாக்களின் இரட்சகனான அல்லாஹ்வே! சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் உடல்களின் இரட்சகனான அல்லாஹ்வே! உன்னிடத்தில் நான் ஒரு ஆன்மாவை கேட்கிறேன். அந்த ஆன்மா இந்த உடலில் சென்றால் உனக்கு வழிபடுமே, உன் பக்கம் மீளுமே அந்த ஆன்மாவை கேட்கிறேன்.

உன் கண்ணியத்தை கொண்டு உன் வழிபாட்டில் லயித்திருக்குமே அத்தகைய உடலைக் கேட்கிறேன்.

படைப்புகள் எல்லாம் உன்னுடைய தீர்ப்பை எதிர் பார்த்து இருக்குமே அந்நாளில் உன் அருளை ஆதரவு வைப்பவர்களில் ஒருவனாகவும், உன் தண்டனையை பயப்படுபவர்களில் ஒருவனாகவும் என்னை நீ ஆக்க வேண்டும் என்றும் நான் கேட்கிறேன். 

என் பார்வையில் ஒளி தர வேண்டும் என்று கேட்கிறேன்! என் உள்ளத்தில் உன்னைப் பற்றிய உறுதிப் பாட்டை கேட்கிறேன்! இரவிலும் பகலிலும் உன்னை திக்ரு செய்கிற நாவைக் கேட்கிறேன்! நல்ல அமல்களை செய்யும் தவ்ஃபீக்கை உன்னிடம் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீயே! வழங்கியருள வேண்டும் என்று உன்னிடம் கேட்கிறேன்!". ( நூல்: அல் மர்ஜிவு அஸ் ஸாபிக் லிஷ் ஷவ்கானீ (ரஹ்).. )

وقال عباس الدوري: حدثنا علي بن أبي فزارة جارنا قال: "كانت أمي مقعدة من نحو عشرين سنة، فقالت لي يوماً: اذهب إلى أحمد بن حنبل فسله أن يدعو لي، فأتيت، فدقّقت عليه وهو في دهليزه، فقال: من هذا؟ قلت: رجل سألتني أمي وهي مقعدة أن أسألك الدعاء، فسمعت كلامه كلام رجل مغضب فقال: نحن أحوج أن تدعو الله لنا، فوليت منصرفاً، فخرجت عجوز فقالت: قد تركته يدعو لها، فجئت إلى بيتنا ودققت الباب، فخرجت أمي على رجليها تمشي

அப்பாஸ் அத் தூரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எங்கள் பக்கத்து வீட்டுக்காரரான அலீ இப்னு அபூ ஃபஸாரா (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார். "என் தாயார் கால்களால் நடக்க முடியாத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக தவழ்ந்து தவழ்ந்தே சிரமப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு நாள் என்னிடம் "நீ போய் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களைச் சந்தித்து எனது தாயாருக்காக துஆ செய்ய வேண்டும் என்று எனது தாயார் கேட்டுக் கொண்டார்கள் என்று போய் சொல் " என்றார்கள். நானும் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் வீட்டுக்கு வந்து கதவை தட்டினேன். இமாம் அவர்கள் அவர்களின் சுரங்க அறையிலே இருந்தார்கள்.

உள்ளிருந்தவாறே யார்? என்று கேட்க, நான் இன்ன மனிதர் என் தாயார் இப்படி உங்களிடம் துஆ செய்ய சொல்ல சொன்னார்கள்" என்று கூறினேன். அதற்கு இமாம் அவர்கள் "நாங்களும் துஆவின் பால் தேவையுள்ளவர்களாக இருக்கின்றோம். நீங்களும் எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்" என்றார்கள். அப்போது இமாம் அவர்களின் பேச்சு சப்தம் கோபத்தோடு இருப்பவர் பேசுவுது போல இருப்பதை உணர்ந்தேன். உடனடியாக நான் அங்கிருந்து  திரும்பிய போது, உள்ளிருந்து வெளியே வந்த  மூதாட்டியொருவர் "அவரை தனிமையில் இருக்க விட்டு விடு! அவர் உன் தாயாருக்காக துஆ செய்வார்" என்று கூறினார்கள். இவைகளை அசை போட்டவாறே வீட்டிற்கு வந்து கதவைத் தட்டிய போது சுப்ஹானல்லாஹ்! என்ன ஒரு ஆச்சரியம்! இது நாள் வரை தவழ்ந்து தவழ்ந்து வந்து கதவைத் திறக்கும் என் தாயார் நடந்து வந்து கதவைத் திறந்தார்கள்.

முன் மாதிரி சமுதாயமாக மாற்றியது ஒரு சமுதாயத்தின் ஒரு துஆ!

இறைத்தூதர்கள் அனுப்பப்படும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர்.

தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ் நபியின் சமுதாயம் (லட்சத்திற்கும் மேற்பட்டோர்) இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது, தமது தவறைத் திருத்திக் கொண்டு (தௌபா) பாவமன்னிப்புக் கேட்டதால் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

இது போல் தண்டனைக்கான அறிகுறி வந்தபோது மற்ற சமுதாயமும் மன்னிப்புக் கேட்டு தப்பித்திருக்க வேண்டாமா? என்று இறைவன் யூனுஸ் (10 -ம்) அத்தியாயத்தின் 96 முதல் 100 வரையிலான வசனங்களின் ஊடாக கேட்கிறான்

اِنَّ الَّذِيْنَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُوْنَۙ‏

நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.

 وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰيَةٍ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ‏

நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.).

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ ۚؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏

எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.

 

وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًا‌ ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏

எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை  நாம் இறக்குகின்றோம்.

இந்த உம்மத்தை பேராபத்திலிருந்து காற்றிய நபி {ஸல்} அவர்களின் ஒரு துஆ!

عن صهيب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى همس شيئا لا نفهمه ولا يحدثنا به قال فقال رسول الله صلى الله عليه وسلم فطنتم لي قال قائل نعم قال فإني قد ذكرت نبيا من الأنبياء أعطي جنودا من قومه فقال من يكافئ هؤلاء أو من يقوم لهؤلاء أو كلمة شبيهة بهذه شك سليمان قال فأوحى الله إليه اختر لقومك بين إحدى ثلاث إما أن أسلط عليهم عدوا من غيرهم أو الجوع أو الموت قال فاستشار قومه في ذلك فقالوا أنت نبي الله نكل ذلك إليك فخر لنا قال فقام إلى صلاته قال وكانوا يفزعون إذا فزعوا إلى الصلاة قال فصلى قال أما عدو من غيرهم فلا أو الجوع فلا ولكن الموت قال فسلط عليهم الموت ثلاثة أيام فمات منهم سبعون ألفا فهمسي الذي ترون أني أقول اللهم يا رب بك أقاتل وبك أصاول ولا حول ولا قوة إلا بالله

 ஹுனைனில் நபிகளார் ஒரு நாள் சுபுஹ் தொழுகையை தொழவைத்தார்கள்.  தொழுகையிலோ அல்லது தொழுகையின் முடிவிலோ திடீரென நபி {ஸல்} அவர்கள் முனகும் சப்தத்தை நாங்கள் கேட்டோம்.

அந்த முனகல் சப்தமும், அதன் வார்த்தைகளும் எங்களுக்கு விளங்கவில்லை.  அதற்கான காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுது முடித்ததும் இது குறித்து நாங்கள் வினவினோம். அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் நீங்கள் அதை கேட்டீர்களா? என  எங்களிடம் வினவினார்கள்.ஆமாம், நாங்கள் கேட்டோம்  என்று கூறியதும்,  நபி  {ஸல்} அவர்கள் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்:

தோழர்களே! நமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நபி, தமது சமுதாயம் பெரும்பான்மை பலத்துடனும், எவராலும் எளிதில் வீழ்த்திட முடியாத ஆற்றலுடனும் வாழ்ந்து வருவத நினைத்து பெருமிதம் கொண்டார்.

خيـّر الله تعالى ذلك النبي وأصحابه بأمر من ثلاثة أمور
1- أن يسلط عليهم عدواً شديداً يحتل بلادهم ويستبيحها ، فيأسرهم ويستذلهم
2- أو أن يعاقبهم بالجوع الشديد
3- وإما أن يرسل عليهم الموت فيقبض منهم الكثير

இந்த பெருமிதம் மிகவும் ஆபத்தானது என்பதை அந்த நபிக்கு அறிவுறுத்திட  நினைத்த வல்ல ரஹ்மான் அந்த நபியிடத்தில் நபியே! உமது சமுதாயம், உம்முடைய பெருமிதத்தால் பெரும்பான்மை பலத்தை இழக்கும் அபாயகரமான ஓர் சூழ்நிலைக்கு  தள்ளப்பட்டு விட்டது.

அவர்களின் பெரும்பான்மை பலத்தை குறைத்திடுவதற்காக பின் வருகிற மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றை நீரும், உம் சமூக மக்களும் தேர்ந்தெடுத்து நம்மிடம்  தெரிவிக்க வேண்டும்.

1. பலமான எதிரிகளை அவர்களின் மீது நான் சாட்டுவதன் மூலம் அவர்களின்  எண்ணிக்கையை குறைத்திடுவேன். 2. பசி, பஞ்சம், பட்டினி போன்றவைகளை அவர்களின் மீது சாட்டி சோதித்திடுவேன் 3. இவ்விரண்டுமின்றி இயற்கையான மரணத்தின் மூலம் உம் சமூகத்தின்  எண்ணிக்கையை குறைத்திடுவேன்.

இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பீராக! என்று வஹீ மூலம்   அறிவித்தான்.

இறைச் செய்தியை பெற்றுக் கொண்ட அந்த நபி தம் சமூகத்தார்களை  ஒன்றிணைத்து நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறி, இது இறைவனின் கட்டளை  மூன்றில் எதை நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அம்மக்கள் நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதராய் இருக்கின்றீர்கள்!  எங்களின் வாழ்விற்கு எது சிறந்த முடிவாக இருக்கும் என்பதை தாங்களே நன்கு  அறிவீர்கள். ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுக்கிற எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள்  முழு மனதோடு, விரும்பி ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.

உடனடியாக, அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். நீண்ட நேரம் அந்த  இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். ஏனெனில், அந்த சமூகத்திற்க்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தொழுகையில் ஈடுபடுவார்கள்.

தொழுது முடித்ததும் அல்லாஹ் அவருக்கு தெளிவான முடிவெடுக்கும் ஆற்றலை வழங்கினான். தாம் தெரிவு செய்திருக்கிற அந்த முடிவை அல்லாஹ்வின்  சன்னிதானத்தில்  முறையிட்டார்!

என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பலம் வாய்ந்த எதிரிகளை நீ சாட்டி  விடாதே! அவர்கள் என் சமூக மக்களை கேவலப்படுத்தி விடுவார்கள்.

என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பசி, பட்டினி, பஞ்சம் போன்றவற்றை  சாட்டிவிடாதே! அதனால் உன் மீது இருக்கிற நம்பிக்கையில் என் சமூகத்தார்கள் குறைவு செய்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.

என் இறைவனே! இயற்கையான மரணத்தையே என் சமூக மக்களுக்கு வழங்கி  விடு! அது தான் கௌரவமாகவும், சிறந்ததாகவும் இருக்கும் என நான் கருதுகின்றேன்.  அதையே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம் என்று துஆ செய்தார்.

 

உடனடியாக, அல்லாஹ் அந்த துஆவை கபூல் செய்தான். ஆம்! அன்றைய  நாளிலேயே அந்த சமூகத்தின் எழுபதினாயிரம் மக்கள் இறந்து போனார்கள் என்று  கூறிய அண்ணலார் இந்தச் செய்தியை அல்லாஹ் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்.

أما أنا فأقول : " اللهم بك أقاتل ، وبك أحاول ، وبك أصاول ، ولا قوة إلا بك

ஆதலால், நான் அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! உன் அருளாலேயே நான்  சன்மார்க்க சேவை செய்கின்றேன். உன் துணை கொண்டே எதிரிகளை நான் எதிர்  கொள்கின்றேன். உன்னையன்றி எனக்கோ, என் சமூகத்திற்கோ எந்த ஆற்றலும்,  வலிமையும் இல்லை என்று மன்றாடினேன் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

فقال أصحابه من بعده : اللهم بك نقاتل ، وبك نحاول ، وبك نصاول ، ولا قوة إلا بك
وذلت ألسنتهم بها

இதைக் கேட்டதும், நபித்தோழர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெருமிதம் குறைந்து, அல்லாஹ்வின் மீதான அச்சமும், ஆதரவும் சூழ்ந்து கொள்ள  அனைவரும் வானை நோக்கி கையை உயர்த்தி அல்லாஹ்வே! உன் அருளாலேயே நாங்கள் எதிரிகளுடன் போர் புரிகிறோம். உன் துணை கொண்டே நாங்கள் தீனின் சேவையைச் செய்கிறோம். எங்களுக்கு உன்னையன்றி எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை”. என்று கூறினர்.

பெருமானார் {ஸல்} அவர்கள் ஆற்றிய உரை உடனடியாக அவர்களின் உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது அவர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்த பெருமையும் அகன்றது.

அல்லாஹ்வும் ஹுனைனின் வெற்றிக்குப் பிறகு நபித்தோழர்களின் இந்த செயல் குறித்து விமர்சித்து இறைவசனத்தை இறக்கியருளினான்.

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ  ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ

இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். இப்போது, ஹுனைன் போர் நடைபெற்ற நாளிலும் அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்தீர்கள். இன்று உங்களின் பெரும்பான்மை உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது.

ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் தரவில்லை. மேலும், பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் உங்களுக்கு குறுகிப் போய் விட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகிட்டு ஓடிவிட்டீர்கள்.

பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கியருளினான்

ஒரு துஆ என்னவெல்லாம் செய்யும் ஆற்றல் கொண்டது என்பதை நாம் விளங்கி இருப்போம்! எனவே, இனி வரும் ரமழானின் நாட்களில் துஆ கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்! வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு தங்களுக்கு அல்லாஹுத்தஆலா ஈரு உலகிலும் பரக்கத் செய்வாராக

    ReplyDelete
  3. Investing in a good Dream mattress-single and dual bed mattress is crucial for a good night's sleep and overall well-being. A quality mattress can alleviate back pain, reduce stress levels, and improve sleep quality. When shopping for a mattress, consider factors such as firmness, materials, and support. While good mattresses can be expensive, the long-term benefits are worth the investment. Don't skimp on sleep - prioritize your health and choose a good mattress.

    ReplyDelete