Tuesday, 11 April 2023

நாம் ஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்?..

 

நாம் ஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்?..

ரமழான் – (1444 – 2023) தராவீஹ் சிந்தனை:- 21.


இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட முஹம்மது அத்தியாயம் வசனங்களில் 24 வசனமும் ஒன்று. அதில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின் வருமாறு கேட்கிறான்.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்கள் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா? (குர்ஆன் 47:24)

இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க அல்லாஹ் தூண்டுகின்றான். ஆராய்ந்தால் என்ன கிடைக்கும் என்பதை பின்வரும் இன்னொரு வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்க்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (குர்ஆன் 38:29)

இஸ்லாம் சிந்திக்கத் தூண்டும் மார்க்கம். அல்குர்ஆனில் முதலாவதாக இறக்கியருளப்பட்ட வசனங்கள் முதற்கொண்டு எண்ணற்ற வசனங்கள் மனிதனை சிந்திக்கத் தூண்டுவதை அவதானிக்க முடிகின்றது.

எகிப்தில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற  பல்கலைகழகமான அல் - ஜாமிவுல் அஸ்ஹர் யுனிவர்சிட்டியில் இருந்து வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில்..

விஞ்ஞான ஆய்வுகள் சம்பந்தமாக  அல்குர்ஆனில் 750 இடங்களிலும்

இல்ம் - கல்வி சம்பந்தமாக அல்குர் ஆனில் 80 இடங்களிலும்

ஹிக்மத் - நுண்ணறிவு சம்பந்தமாக  அல்குர் ஆனில் 20 இடங்களிலும்

இன்னும் அக்ல் - அறிவு, ஃபிக்ஹ் - மார்க்கச்  சட்ட அறிவு, பிஃக்ர் - சிந்தனை அறிவு  ஆகியவை சம்பந்தமாக அல்குர் ஆனில்  பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாக அந்த  ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக - விஞ்ஞான அறிவு குறித்து

GEOGRAPHY- புவியியல், - புவியியலைப்பற்றிஅல்குர் ஆன்: 27:60 ம்      

CHEMISTRY - வேதியியல் - வேதியியலைப் பற்றி அல்குர் ஆன்: 67:30 ம் 

GENETICS -மரபியியல் - மரபியலைப் பற்றி   அல்குர் ஆன்: 80:24-31 ம்       

BIOLEGY - உயிரியல், - உயிரியலைப் பற்றி  அல்குர் ஆன்: 40:67 ம்

PHYSICS - இயற்பியல்               

BOTANY - தாவரவியல் - தாவரவியலைப் பற்றி  அல்குர் ஆன்: 27:60 ம்

FORESTRY - வனவியல்           

GARDENING - தோட்டவியல் 

CYTOLOGY - உயிரணுவியல்  

LOGIC - தர்க்கவியல் - தர்க்கவியலைப் பற்றி அல்குர் ஆன்: 22:8, 3:190, 22:54 ம்

அல்லாஹ் அல்குர்ஆனின்  பல இடங்களில்  இப்படியான அறிவுசார் ஆய்வுகளை 

மேற்கொள்ளுமாறு ஏவுகிறான்.

இன்னும் வானவியல், சந்திர மண்டலம் என  பல்வேறு விஞ்ஞான கல்விமுறைப்பற்றியும் அல்குர்ஆன் பல இடங்களில் பேசுவதைக் காண முடிகிறது.

“இஸ்லாமுக்கும் அறிவியலுக்கும் நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது. அது அறுந்துபோகாமல் பார்த்துக்கொள்வது இன்றைய இஸ்லாமியர்களின் கைகளில் இருக்கிறது” என்கின்றார் - பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை', ‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர்,

நல்லுணர்வு என்றால்?...

முன்னாள் கிறிஸ்தவ மத போதகராகவும் தற்போதைய இஸ்லாமிய மார்க்க போதகராகவும் திகழ்கின்ற அறிஞர் அஷ்ஷெய்க் யூசுஃப் எஸ்டஸ் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் தாம் ஏன் இஸ்லாத்தை தேர்தெடுத்தேன் என்று பேசுகையில் அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது.

அவர் கிறிஸ்தவராக இருந்த போது ஒரு முஸ்லிமானவரை கிறிஸ்தவராக்க முயற்சித்திருக்கிறார். அப்போது அந்த முஸ்லிமான நபர் நீங்கள் இஸ்லாத்தை விட கிறிஸ்தவம் சிறந்தது என்று நிருபித்தால் நான் கிறிஸ்தவத்தை ஏற்க தயாராக இருக்கிறேன்என கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மகிழ்ந்த யூசுஃப் அவர்கள், அந்த முஸ்லிமான நபரிடம், ‘நீங்கள் கிறிஸ்தவத்தை தழுவினால் உங்கள் மார்க்த்தில் செய்வது போன்று நோன்பு நோற்க தேவையில்லை, ஜகாத் கொடுக்க தேவையில்லை மற்றும் ஹஜ் செய்யத் தேவையில்லைஎன்பது போன்றவற்றைக் கூறி கிறிஸ்தவ மார்க்கம் எளிமையானது என கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த முஸ்லிமான சகோதரரோ எனக்கு எளிமையான மார்க்கம் தேவையில்லை. நான் உங்களிடம் கேட்டது கிறிஸ்தவ மார்க்கம் இஸ்லாத்தை விடச் சிறந்ததுஎன்பதற்கான ஆதாரம் (proof) தான் என கூறியிருக்கிறார்.

உடனே அவர் பைபிள் என்பது கடவுளின் வார்த்தைகள். இதற்கு ஆதாரம் எல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே நம்பிக்கைக் கொள்ள வேண்டும்என சொன்னதாக கூறி, இவ்வாறு தான் தாமும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறினார்.

அப்போது அந்த இஸ்லாமியர் இந்த கருத்துக்கு உடன் பட மறுக்கவே கிருஸ்தவம் தான் சிறந்தது என்பதை நிரூபிக்க குர்ஆனை கையில் எடுத்து எந்தெந்த விஷயங்களில் எல்லாம் இஸ்லாத்தை விட கிருஸ்துவம் சிறந்தது என்று ஆய்வு செய்ய வாசிக்க ஆரம்பித்த அவர்.

குர்ஆனின் வாசிப்பை முடித்த போது ஷஹாதா கூறி தம்மை தூய இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

இப்போது உலகின் அறியப்படும் அழைப்பாளர்களில் ஒருவராக மிளிர்கிறார்.

இது தான் குர்ஆனை ஆராய்ந்து பார்ப்பதால் கிடைக்கும் அல்குர்ஆன் கூறும் "நல்லுணர்வு" ஆகும்.

குர்ஆனை ஆராயும் மாற்றுக் கருத்துள்ள ஒருவருக்கு ஹிதாயத் என்கிற நல்லுணர்வு கிடைக்கும் என்றால், ஹிதாயத்துடன் இருக்கும் ஒருவர் குர்ஆனை ஆய்வு செய்தால் அவருக்கு இஸ்திகாமத் – தீனில் நிலைத்திருத்தல் எனும் நல்லுணர்வும், இந்த உலகம் தீர்வுகள் இன்றி சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எனும் நல்லுணர்வும் கிடைக்கும்.

ஏனெனில், இந்த குர்ஆன் இன்றைய நவீன விஞ்ஞானமும், ஆய்வுகளும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும், நிரூபித்துக் கொண்டிருக்கும் பல்வேறு அம்சங்கள்களை 14 நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே நமது நபி {ஸல்} அவர்களுக்கு 23 ஆண்டு கால இடைவெளியில் இறைத்தூதாக அறிவிக்கப்பட்டவையே என்பதை நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

சில நவீன கண்டுபிடிப்புகளும்.. அல்குர்ஆனின் முன்னறிவிப்பும்...

1.நீர் சுழற்சி முறை (Water cycle) குறித்து அல்குர்ஆன்:- 

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُخْتَلِفًا أَلْوَانُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهُ حُطَامًا إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)

இதைப் பற்றி “The Bible, The Qura’n and Science” என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura’n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:- “Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது.

நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர்.

உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)

 

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார்.

16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

அவ்வளவு ஏன்? 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது.

இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துள்ளது.

2. சூறாவளி வகைகள் அதன் வேகம் குறித்து அல்குர்ஆன்..

أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

 

சூராவளி என்பது என்ன?

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்

பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி டொர்னடோ எவ்வாறு உருவாகிறது?

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

 

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

1.   SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2.   LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

3.   GUSTNADO

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

4.   WATERSPOUT (வாட்டர் ஸ்பவ்ட்)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

5.   DUST DEVILS (டஸ்ட் டெவில்)

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது. மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

6.   FIREWHIRLS (ஃபைர் வைல்ஸ் - நெருப்புச் சுறாவளிகள்)

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும். ( நன்றி: இஸ்லாமியபுரம்.ப்ளாக் )

3. சூரியன் தனக்குரிய பாதையில் பயணிக்கின்றது என்று கூறும் அல்குர்ஆன்..

وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِؕ‏

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.( அல்குர்ஆன்: 36: 38 )

சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.

ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.

உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.' ( அல்குர்ஆன் (21:33)

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.' ( அல்குர்ஆன் 2:164 )

மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.

அடுத்து சூரியன் ஒரு இடத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அது நகரவில்லை என்றுதான் சமீபகாலம் வரை அறிவியல் அறிஞர்கள் நம்பி வந்தனர். கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் கூட சூரியன் நகரவில்லை. அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றே கூறி வந்தனர்.

அரை நூற்றாண்டு காலம் தமது மொட்டை மாடியில் வானத்தை ஆராய்ந்து 1783 ஆம் அண்டு விஞ்ஞானி ஹெர்ஷல் சூரியனும் நகர்கிறது என்ற உண்மையை கண்டு பிடித்தார். இதே கருத்தை 'சூரியனும் நீந்துகிறது' என்று அழகான வார்த்தைகளைப் போட்டு கூறிய குர்ஆனை நினைத்து பிரமிக்கிறோம்.

அறிவியல் அறிஞர் பி.டூயிக் அவர்கள் நட்சத்திரங்களின் நகர்வை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வெண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக் கூறின் பூமியிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும். நமது கண்களுக்கு நட்சத்திரங்கள் எதுவும் நகருவதாக பார்க்க முடியவில்லை. அப்படி நகருவதாக ஒரவர் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்வதாக இருந்தால் அவர் வானியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். அல்லது இந்த செய்தி இறைவனிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டும்.

The Sun orbits the center of the Milky Way galaxy at a distance of approximately 26,000 light-years from the galactic center, completing one revolution in about 225–250 million years. It's approximate orbital speed is 220 kilometers per second, plus or minus 20 km/s. This is equivalent to about one light-year every 1,400 years, and about one AU every 8 days. These measurements of galactic distance and speed are as accurate as we can get given our current knowledge, but will change as we learn more. # ^ Kerr, F. J.; Lynden-Bell D. (1986). "Review of galactic constants" (PDF). Monthly Notices of the Royal Astronomical Society 221: 1023–1038. ( நன்றி: சுவனப்பிரியன். ப்ளாக் 01/03/2012 )

அடுத்த கட்டத்தை நோக்கி இந்த உம்மத் பயணிக்க வேண்டும்!!

குர்ஆனின் கருத்துகள் நவீன அறிவியல் உண்மைகளோடு இணைந்து காணப்படுவதையும், இன்றைய பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை அல்குர்ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்புச் செய்துள்ளதையும், குர்ஆனின் பல கருத்துகளை நவீன அறிவியல் உண்மைகள் உறுதிப்படுத்து வதையும் விளக்கும் பல முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. இத்துறையில் விசேஷமாக கவனம் செலுத்தும் ஆய்வாளர் பலர் இன்று காணப்படுகின்றனர். பேராசிரியர் மொரிஸ் புகைல் (MOURICE BUCAILLE), கலாநிதி ஸக்லுல் அந் நஜ்ஜார், ஷெய்கு ஸிந்தானி போன்றோர் இத்துறையில் முக்கியமானவர்களாவர்.

மக்காவிலுள்ள ராபிததுல் ஆலமில் இஸ்லாமி நிறுவனம் குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள் (அல்-இஃஜாஸுல் இல்மீ) பற்றி ஆராய்வதற்கென்றே ஒரு தனித்துறையை அமைத்து ஷெய்கு ஸிந்தானீ அவர்களை அதன் பணிப்பாளராக நியமித்துள்ளது.

ராபிததுல் ஆலமில் இஸ்லாமீ இஸ்லாமாபாத்திலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தோடு இணைந்து இஸ்லாமாபாத்தில் குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்’ (Scientific Miracles of Quran) என்ற தொனிப் பொருளில் 1987ம் ஆண்டு ஒரு சர்வதேசிய மாநாட்டையே நடாத்தியது. இன்று இஸ்லாமிய உலகில் வெளிவரும் சஞ்சிகைகளில் குர்ஆனின் அறிவியல் விளக்கங்கள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

இவை பாரட்டப்பட வேண்டிய அம்சம் என்றிருந்தாலும் இதைத் தாண்டி நவீன பல பிரச்சினைகளின் தீர்வை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்திடும் வகையில் துறைசார் ஆய்வுகளை மேற்கொள்ள குர்ஆனை ஆராயும் விஞ்ஞானக்குழு ஒன்று இந்த உம்மத்தில் உருவாக வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் தேவையும் ஆகும்.

ஆகவே, அல்லாஹ்வின் அறை கூவலை ஏற்று “அல்குர்ஆனைச் சிந்திக்கும், ஆராயும்” ஒரு சமூகத்தைக் கட்டமைப்போம்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment