Thursday, 20 July 2023

ஹிஜ்ரி புத்தாண்டு 1445 :- நல்லுணர்வும்… சுய விசாரணையும்…

 

ஹிஜ்ரி புத்தாண்டு 1445 :- நல்லுணர்வும்… சுய விசாரணையும்…


அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ஹிஜ்ரி 1444 -ம் ஆண்டு நிறைவு பெற்று 1445 -ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நாம் புத்தாண்டின் முதல் ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

வரலாற்று சிறப்பும் முக்கியத்துவமும் பெற்ற ஹிஜ்ரத் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த இஸ்லாமிய ஆண்டு நமக்கு பல்வேறு நினைவூட்டல்களை, படிப்பினைகளை தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

மிக முக்கியமான ஒரு தருணத்தில் தான் இந்த ஹிஜ்ரி (இஸ்லாமிய)ஆண்டு இந்த உம்மத்திற்கு தேவை என்பதை ஸஹாபா சமூகம் உணர்ந்தது.

அதன் அடிப்படையில்  முக்கியமான அனைத்து நபித்தோழர்களையும் அழைத்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு இஸ்லாம் உயர்த்திக் கூறும் "ஷூரா" வின் ஒளியில் இரண்டாம் கலீஃபா அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் இந்த இஸ்லாமிய (ஹிஜ்ரி) ஆண்டை இந்த உம்மத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்.

ஹிஜ்ரி ஆண்டு அமைக்கப் (ஏற்படுத்தப்) பட்ட வரலாறு!

أن أبا موسى كتب إلى عمر أنه يأتينا منك كتب ليس لها تاريخ فجمع عمر الناس فقال بعضهم ارخ بالمبعث وبعضهم ارخ بالهجرة فقال عمر الهجرة فرقت بين الحق والباطل فأرخوا بها وذلك سنة سبع عشرة

அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லைஎன்று கூறியிருந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268 )

உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என்று ஆலோசனை கேட்டார்கள்.

இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் ஒன்று கூட்டப்பட்ட மக்களிடம் இருந்து வந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.

அப்போது அலீ (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் அந்த நாளை தேர்வு செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம்-4287 

ஹிஜ்ரத்தை தேர்வு செய்த பிறகு ஹிஜ்ரத் நிகழ்வு நடைபெற்ற மாதம் ரபீவுல் அவ்வல் மாதம் ஆகும். ஆகவே, ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமாக எந்த மாதத்தை நிறுவுவது என்று அந்த மஷ்வராவில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.

 

فلما اتفقوا قال بعضهم ابدءوا برمضان فقال عثمان بل بالمحرم فإنه منصرف الناس من حجهم فاتفقوا عليه

எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம் முஹர்ரம்என்று குறிப்பிட்டார்கள். ( நூல்: பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268 ) இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் தான். ஆனால் வருடத்தை ஹிஜ்ரீ என்று தேர்வு செய்த நபித்தோழர்கள் ஏன் ரபீவுல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்யவில்லை? என்ற கேள்விக்கு அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். ( நூல்: பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)

ஹிஜ்ரீ ஆண்டை தேர்வு செய்யத் தூண்டிய வசனம் நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்தது என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ؕ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான். ( அல்குர்ஆன்: 9: 108 )

இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறதுஎன்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இன்னும் சில அறிஞர்கள் "முஹர்ரம் மாதம் குறித்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது "ஷஹ்ருல்லாஹில் முஹர்ரம் - அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் " என்று குறிப்பிடுவதாலும், ரமழான் நோன்பிற்குப் பிறகு சிறப்பு வாய்ந்த நோன்பு ஆஷுரா நோன்பாகும்"  (ஆஷூரா நோன்பு முஹர்ரம் மாதம் பிறை 10 அன்று நோற்கப்படும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதாலும் நபித்தோழர்கள் ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமாக முஹர்ரம் மாதத்தை தேர்வு செய்தனர் " என்கின்றனர்.

 

ஆகவே, உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ( நூல்: பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268 )

நமக்கான படிப்பினைகள் என்ன?

பொதுவாக ஒரு முஸ்லிம் தன்னுடைய வாழ்வு‌ தொடர்பான விவகாரங்களை இஸ்லாமிய மயப்படுத்தி அமைத்துக் கொள்ள கடமை பட்டுள்ளார். 

அந்த வகையில்  ஒரு ஆண்டு கடந்து போய் புத்தாண்டு துவங்கி இருக்கும் நிலையில் இது குறித்து எவ்வாறான நிலைப்பாடுகளை ஒரு முஸ்லிம் மேற்கொள்ள வேண்டும்? என்று சிந்தித்து தன்னுடைய வாழ்க்கையை கட்டமைத்து கொள்ள வேண்டும்.

1.   முதலாவதாக எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முஸ்லிம் நல்லுணர்வு

பெற வேண்டும் என்று இஸ்லாம் நினைவூட்டுகிறது.

நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும் போது அந்த சம்பவங்களில் இருந்து ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் நல்லுணர்வு பெற்றதை அடையாளப் படுத்துகின்றான்.

وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏

மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.

 حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)என்று கூறிற்று.

 فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!என்று பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 27: 17 - 19 )

ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எறும்பு பேசுவதை கேட்டு ஆச்சரியம் மேலிட தம் வியப்பை வெளிப்படுத்தி இருந்தால் அது சாதாரண நிகழ்வு. ஆனால், அதன் இறுதியில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை ஒன்றை கேட்டார்களே! அது தான் நல்லுணர்வு.

قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏

பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.

 قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ۚ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏

ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.

 قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ

 لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்என்று (ஸுலைமான்) கூறினார். ( அல்குர்ஆன்: 27: 38 - 40 )

ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் அருகே கொண்டு வரப்பட்ட சிம்மாசனத்தைப் பார்த்து ஆச்சரியம் மேலிட தம் வியப்பை வெளிப்படுத்தி இருந்தால் அது சாதாரண நிகழ்வு. ஆனால், அதன் இறுதியில் இது என் அல்லாஹ்வின் மூலம் எனக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கருணை! என்று கூறி விட்டு தாம் எப்படி இந்த இறைவனோடு நடந்து கொள்ள போகிறோம் என்று தம் உள்ளத்து உணர்வுகளை  வெளிப்படுத்தினார்களே! அது தான் நல்லுணர்வு.

2. கடந்த காலத்தைப் பற்றிய ஒரு கவனமும், மீள்பார்வையும் இருக்க வேண்டும் என்ற நினைவூட்டலையும் புத்தாண்டின் மூலம் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் புறப்பட்டு மதீனா வந்தடைந்த போது அல்லாஹ்விடம் ..

رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا‏

என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! ( அல்குர்ஆன்: 17: 80 ) என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இந்த கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த மாதத்துடன் தொடர்புடைய நபிமொழி ஒன்று  அமைந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம்

وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.

சுய விசாரணையின் முக்கியத்துவம்!

ஒரு ஆண்டு முடிந்து இன்னொரு புது ஆண்டு துவங்குகிறது என்றால் நம் வாழ்நாளில் கடந்து போன அந்த ஆண்டின் நம் செயல்பாடுகளை மீள்பார்வை செய்ய நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். அதாவது நம்மை நாமே சுய விசாரணை செய்ய  வேண்டும்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்கள் இருக்கின்றது. அந்த முக்கியமான காரியங்களில் மிக முக்கியமான ஒன்று (محاسبة النفس) முஹாசபத்துன் நஃப்ஸ்.

ஒரு மனிதன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்வது, தன்னைத் தானே அவன் விசாரித்துக் கொள்வது, ஒரு மனிதன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்வது, ஏன் செய்தாய்? ஏன் செய்யவில்லை? ஏன் காலதாமதம் செய்தாய்? ஏன் அலட்சியம் செய்கிறாய்? இப்படியாக தன்னை தானே சரி செய்து கொள்வதற்காக தன்னுடைய அமல்களை குறித்து தனது நஃப்ஸிடத்திலே கேள்வி கேட்பது.

இந்த முஹாசபத்துன் நஃப்ஸ் மிக முக்கியமான ஒன்று. குர்ஆன் வலியுறுத்தக் கூடிய ஒன்று. நபி (ஸல்) அவர்களுடைய நபிமொழி வலியுறுத்தக் கூடிய ஒன்று. நம்முடைய கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் தாபியீன்கள் செய்த ஒன்றுதான் இந்த முஹாசபத்துன் நஃப்ஸ்.

 

தன்னைத் தானே பரிசோதனை செய்வது. நான் எப்படி இருக்கிறேன்? அல்லாஹ்வை வணங்குவதில், பாவங்களை விட்டு விலகுவதில், நன்மைகளை செய்வதில், தீமைகளை விட்டு விலகுவதில், நான் எந்த அளவு இருக்கின்றேன்?

சுய விசாரணை என்பது ஒரு வகையில் அதுவும் ஒரு இபாதத் தான்.

ومن التفكر: النظر فيما قدم الإنسان من عمل.

وقد أرشد القرآن إلى هذا بقوله: (يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ) الحشر/18 .

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். ( அல்குர்ஆன்:  59: 18 )

وهذه محاسبة النفس ، وفيها أثر عمر رضي الله عنه المشهور:

" " حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا ، وَزِنُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُوزَنُوا ، فَإِنَّهُ أَهْوَنُ عَلَيْكُمْ فِي الْحِسَابِ غَدًا ، أَنْ تُحَاسِبُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ ، وَتَزَيَّنُوا لِلْعَرْضِ الأَكْبَرِ، يَوْمَئِذٍ تُعْرَضُونَ لا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ " . رواه ابن أبي الدنيا في "محاسبة النفس" ص22 ، وأحمد في " الزهد " ( ص 120) ، وأبو نعيم في " الحلية " (1/52

உமர் (ரழி)அவர்கள் நீங்கள் விசாரிக்கப்பட முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள், நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்படும் முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

உமர் (ரழி) அவர்கள் தம்மைத்தாமே விசாரித்துக் கொள்வதுடன் தமக்குத்தாமே தண்டனையையும் விதித்துக் கொண்டுள்ளார்கள்.

وكان أنس -رضي الله عنه- يقول: سمعت عمر بن الخطاب - رضي الله عنه - دخلا حائطا فسمعته، يقول وبيني وبينه جدار: "عمر بن الخطاب.. أمير المؤمنين.. بخ بخ، والله لتتقين الله يا ابن الخطاب، أو ليعذبنك".

ஒரு தடவை உமர் ரலி அவர்கள் தோட்டம் ஒன்றில் நுழைந்தார்கள். நானும் அங்கு அவருடன் சென்றிருந்தேன். எனக்கும் உமர் ரலி அவர்களுக்கும் இடையே ஒரு சுவர் இருந்தது. சுவர் மறைவில் நின்றிருந்த உமர் ரலி அவர்கள் "உமரே! நீர் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் அல்லாஹ்வை அஞ்சவில்லையானால் உம்மை நான் கடுமையாக தண்டிப்பேன்!" என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டதை நான் கேட்டேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 

روي عن عمر -رضي الله عنه- أنه خرج إلى حائط له، ثم رجع وقد صلى الناس العصر، فقال: "إنما خرجت إلى حائطي ورجعت وقد صلى الناس العصر، حائطي صدقة على المساكين".

தோட்டம் ஒன்றை ஏழைகளுக்கு உமர் ரலி அவர்கள் தர்மமாக வழங்கிய போது, அவர்களிடம் காரணம் வினவப்பட்ட போது, உமர் ரலி அவர்கள் கூறினார்கள்;- ஒரு நாள் அஸர் தொழுகையின் நேரம் நான் என் தோட்டத்திற்கு சென்றேன். சிறிது நேரம் தாமதமாகி விட்டது.  அதற்குள் மக்கள் அஸர் தொழுகையை தொழுது விட்டார்கள். ஆகவே, தொழுகை தவறிப் போனதற்கு காரணமாக இருந்த தோட்டத்தை நான் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கி விட்டேன்" என்று கூறினார்கள்.

وقال الليث: "إنما فاتته الجماعة، وروينا عنه أنه شغله أمر عن المغرب حتى طلع نجمان فلما صلاها أعتق رقبتين".

லைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். மக்ரிப் தொழுகையின் நேரம் கடந்து போய் விட்டது. மக்ரிப் தொழுகையை தொழுததன் பின்னர் அதற்காக இரண்டு அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள் உமர் ரலி அவர்கள்.

وعن الأحنف بن قيس قال: كنت مع عمر بن الخطاب -رضي الله عنه- فلقيه رجل، فقال له: يا أمير المؤمنين انطلق معي فأعدني على فلان فقد ظلمني، فرفع عمر درته وخفق بها رأس الرجل، وقال له: تدعون أمير المؤمنين وهو معرض لكم مقبل عليكم، حتى إذا شغل بأمر من أمور المسلمين أتيتموه أعدني أعدني، فانصرف الرجل غضبان آسفا. فقال عمر: علي بالرجل، فلما عاد ناوله مخفقته، وقال له: خذ واقتص لنفسك مني، فقال الرجل: لا والله، ولكني أدعها لله وانصرف.   وعدت مع عمر إلى بيته، فصلى ركعتين ثم جلس يحاسب نفسه ويقول: ابن الخطاب كنت وضيعا فرفعك الله، وكنت ضالا فهداك الله، وكنت ذليلا فأعزك الله، ثم حملك على رقاب الناس، فجاءك رجل يستعديك فضربته فماذا تقول لربك غدا إذا لقيته؟.

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் பஹ்ரைனில் இருந்து வந்த தர்மப் பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அங்கே வந்தார். வந்தவர் நேராக உமர் (ரலி) அவர்களின் அருகே வந்து "அமீருல் முஃமினீன் அவர்களே! என்னோடு வாருங்கள்! எனக்கு ஒருவர் அநீதி இழைத்து விட்டார். எனக்கு நீதி பெற்று தாருங்கள்! என்றார்.

அப்போது உமர் ரலி அவர்கள் கையில் வைத்திருந்த ஆபரணக்கல் ஒன்றைக் கொண்டு தலையில் கொட்டினார்கள். பிறகு, உங்கள் அமீருல் முஃமினீன் அவர்கள் உங்களிடையே இருக்கும் போது முஸ்லிம்களின் பொதுக்காரியங்கள் ஒன்றின் முக்கியமான ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நீங்கள் வருவீர்கள்! வாருங்கள்! வாருங்கள்! நீதி பெற்று தாருங்கள்! என்று அழைப்பீர்கள்!? (என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? என்ற கருத்தில்) கடிந்து கொண்டார்கள்.

அப்போது, வந்த மனிதர் நிராசையோடும் கோபத்தோடும் வெளியேறினார். உமர் ரலி அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவர்களாக யாரோ இப்போது என்னை எங்கோ அழைத்தாரே? அவரின் தலையில் நான் கொட்டினேனே? அவர் எங்கே? என்று கேட்டார்கள்.

அவர் வந்தார். உமர் ரலி அவர்கள் ஆபரணக்கல்லை அவரின் கையில் கொடுத்து உம்மை அடித்ததற்காக என்னை நீ திருப்பி அடி! என்றார்கள். அவரோ அடிக்க மறுத்ததோடு அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இது குறித்து அல்லாஹ்விடம் முறையிடுவேன் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

உமர் (ரலி) அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன்.  வீட்டுக்கு வந்து உளூ செய்து விட்டு இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு சுய விசாரணையில் இறங்கி விட்டார்கள்.

தம்மைப் பார்த்து கத்தாபின் மகனே! நீ தாழ்ந்தவனாக இருந்தாய்!  அல்லாஹ் உம்மை உயர்வாக்கினான். நீ வழிகேட்டில் இருந்தாய்! அல்லாஹ் உமக்கு நேர்வழியை நஸீபாக்கினான். நீ இழிவானவனாக இருந்தாய்! அல்லாஹ் உமக்கு கண்ணியத்தை மரியாதையை வழங்கினான்.  

பின்னர் உம்மை மக்களின் விவகாரங்களை கையாளும் பொறுப்புதாரியாக ஆட்சியாளராக பரிணமிக்க வைத்தான். 

உம் பொறுப்பின் கீழ் உள்ள ஒரு மனிதர் உம்மிடம் வந்து நீதி பெற்றுத் தருமாறு வேண்டி நின்றால், நீதிக்கு ஆதரவாக செயல்பட உம்மை அழைத்தால் அவரை இப்படித்தான் அடித்து அவமதித்து அனுப்பி வைப்பீரோ? 

நாளை மறுமையில் உம்முடைய ரப்பை நீ சந்திக்கும் வேளையில் உம் ரப்பு இது குறித்து கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறாய்?" என்று.  ( நூல்: தாரீஃகே திமிஷ்க் லிஇமாமி இப்னு அஸாக்கிர் (ரஹ்) ... )

وتميم الداري - رضي الله عنه - كما ذكر ابن قدامة المقدسي: نام ليلة لم يقم يتهجد فيها، حتى الصبح، فقام سنة لم ينم فيها عقوبة للذي صنع.

நபித்தோழர் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தஹஜ்ஜத் தொழுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஒருநாள் தஹஜ்ஜத் தொழாமல் தூங்கி விட்டார்கள். அதிகாலை சுபுஹுத் தொழுகைக்குத் தான் எழுந்தார்கள். ஒரு நாள் தொழாத அந்த ஒரு காரணத்திற்காக தங்களுக்கு தாங்களே "ஓராண்டு காலம்" இரவில் தூங்காமல் தண்டனை கொடுத்துக் கொண்டார்கள்.

فاتت ابن عمر -رضي الله عنهما- صلاة جماعة، فأحيى الليل كله تلك الليلة، وإذا لم تطاوعه نفسه على الأوراد، فإنه يجاهدها ويكرهها ما استطاع

ஒரு நாள் இப்னு உமர் ரலி அவர்களுக்கு ஜமாஅத் தொழுகை ஒன்றை தவற விட்டார்கள். அன்று இரவு முழுவதும் கண் விழித்து இருந்து வணக்க வழிபாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

وروى ابن كثير أن معاوية -رضي الله عنه- لما دخل على أم المؤمنين عائشة -رضي الله عنها- فسلم عليها من وراء حجاب، وذلك بعد مقتله حجرا وأصحابه، قالت له: أين ذهب عنك حلمك يا معاوية حين قتلت حجرا وأصحابه؟!، فقال لها: فقدته حين غاب عنى من قومي مثلك يا أماه، ثم قال لها فكيف برى بك يا أمة؟ فقالت: إنك بي لبار. فقال يكفيني هذا عند الله، وغدا لي ولحجر موقف بين يدي الله عز وجل.   وروى ابن جرير أن معاوية جعل يغرغر بالصوت وهو يقول: إن يومي بك يا حجر بن عدي لطويل قالها ثلاث.

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்நிக்க வந்தார்கள்.  இந்த சந்திப்பு ஹிஜ்ர் இப்னு அதீ என்பவரும் அவரின் தோழர்களும் கொல்லப்பட்டதன் பின்னர் நடைபெற்றது.ஷதிரைக்கு பின்னால் இருந்து ஸலாம் சொல்லி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நலம் விசாரித்து பேசினார்கள்.

அப்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் " ஹிஜ்ர் இப்னு அதீயும் அவரின் தோழர்களும் கொல்லப்படும் போது உம்முடைய சாந்த குணம் எங்கே சென்றது முஆவியா?" என்று கேட்டார்கள்.

அதற்கு, முஆவியா (ரலி) அவர்கள் "உம்மாவே! உங்களைப் போன்ற என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்னை விட்டும் போனதில் இருந்து" என்று பதிலளித்தார்கள்.

தொடர்ந்து, உம்மாவே! என்னை எப்படிப்பட்ட மனிதனாக நீங்கள் பார்க்கின்றீர்கள்? கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் "உம்மை நான் நல்லவராகவே பார்க்கின்றேன். கருதுகிறேன்" என்று கூறினார்கள்.

அப்படி என்றால் ஹிஜ்ர் விஷயத்தில் இந்த ஒன்றே "அல்லாஹ்விடம் நான் பதில் சொல்வதற்கு போதுமாகும்" என்று கூறினார்கள். ( நூல்: ஸிஃபத்துஸ்  ஸஃப்வா )

சுய விசாரணையில் தொடரும் காலமெல்லாம்...

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகத்தின் பெரிய ஆட்சியை கொடுத்திருந்தான்.

குதிரைப் படைகள் அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டு மாலை  நேரத்திலே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. சுலைமான் நபி அந்த காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஜிஹாதுக்காக  நம்மிடத்திலே  இவ்வளவு பெரிய ஏற்பாடு இருக்கிறதே என்பதாக!. அதில் அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. 

நினைத்துப்பாருங்கள்! தொழுகையை மறப்பதற்கு காரணமாக இருந்த இந்த உலக அலங்காரங்கள் எனக்குத் தேவையில்லை என்பதாக அனைத்து குதிரைகளையும் அறுத்து அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்து விட்டார்கள்.

اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِىِّ الصّٰفِنٰتُ الْجِيَادُ ۙ‏

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:

 فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْ‌ۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ

              நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்என அவர் கூறினார்.


 رُدُّوْهَا عَلَىَّ ؕ فَطَفِقَ مَسْحًۢا بِالسُّوْقِ وَ الْاَعْنَاقِ‏

என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.” ( அல்குர்ஆன் 38 : 31 - 33 )

எவர் ஒருவர் இந்த உலகில் வாழும் காலத்தில் சுய விசாணையை மேற் கொண்டு தம் வாழ்க்கையை சீராக்கி கொள்கின்றாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரின் மறுமை வாழ்க்கையை எளிதாக்கி வைப்பதோடு இந்த உலகின் வாழ்க்கையை முன்பை விட அருட்கொடைகளால் அழகாக்குவான்.

ஆம்!  அல்லாஹ் ரப்புல் ஆலமீன்   நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் உடைய அந்தத் தியாகத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அல்லாஹ்  காற்றை வசப்படுத்திக் கொடுத்தான்.

குதிரையிலே வாகனித்துச்  சென்று கொண்டிருந்த  சுலைமான் நபி  அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் காற்றை வாகனமாக ஆக்கினான். அவர்களுக்கு மட்டுமல்ல,  அவர்களின் முழு  ராணுவங்களையும் தன்னிலே  சுமந்து செல்லக்கூடிய காற்றை அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான்.

فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ‏

ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. ( அல்குர்ஆன்: 38: 36 )

புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்து கொண்டாடும் இந்த நேரத்தில் கடந்து போன ஆண்டில் செய்து விட்ட பிழைகளுக்கு அல்லாஹ்விடம் தவ்பாவையும், புத்தாண்டின் ஒவ்வொரு நாட்களும் அமல்களால், நல்லறங்களால் வாழ்வை அலங்கரித்து அல்லாஹ்வின் அருளை, கருணையைப் பெறுவோமாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

5 comments:

  1. மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

    புதிய கோணத்தில் புதிய செய்திகளோடு அருமையான தொகுப்பு

    அல்லாஹு உங்களுக்கு அருள் பாலிப்பானாக

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹு தஆலா தங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  4. masha allah engalukku vaaram vaaram kurippugalai alli tharum மிஹ்ராப் விளக்குகளில் payanikkum anaivarukkum allah kirubai seivaanaaga aameen

    ReplyDelete
  5. மிகவும் அருமையான பதிவு

    ReplyDelete