Thursday, 10 August 2023

இந்தியாவில் இஸ்லாத்திற்குப் பாதுகாப்பைத் தா! யாஅல்லாஹ்!!!

 

இந்தியாவில் இஸ்லாத்திற்குப் பாதுகாப்பைத் தா! யாஅல்லாஹ்!!!


ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு தனது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நேரத்தில், தேசபக்தி உணர்வை இதயத்தில் தாங்கி நின்ற ஒப்பற்ற ஓர் சமூகமான இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய நிலைகளை இந்த தேசத்தின் வெகுஜன சமூகம் மௌனித்து கடந்து போவது தான்  ஏன் என்று தெரியவில்லை? இந்த தேசத்தின் ஊடகங்கள் ஏன் மௌனம் காக்கிறது என்றும் புரியவில்லை? 

முஸ்லிம்களைஅஃறிணையாக்கும்  (thingification) செயல்முறை இந்த தேசத்தில் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. 

உயிரற்ற பொருட்களாக அவர்களை உருமாற்றுவது, மற்றமையாகக் கட்டமைப்பது, வெறுமனே புள்ளிவிவரமாகவும் இலக்கமாகவும் அவர்களை மதிப்பிழக்கச் செய்வது இங்கே தொடர் கதையாகி வருகிறது. 

முஸ்லிம் சமூகம் தேசத்திற்கு வெளியே நிறுத்திப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் வெறும் வேற்று மனிதர்களாக மட்டுமல்லாமல், பகை மனிதர்களாகவே நிலை நிறுத்தப்படுகிறார்கள். 

இந்தியாவில் உள்ள பல மதங்களில் இஸ்லாம் தனித்துவமான மற்றும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 

உலகில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 33 நாடுகளின் மக்கள் தொகையை சேர்த்தால், அது இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு (200 மில்லியன்) சமமாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு.

ஆனால், சுதந்திர இந்தியாவுக்குப் பின் தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளை, இழப்புகளை இந்த தேசத்தில் சந்தித்து வரும் ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம் தான் என்றால் அது மிகையாகாது.

நாட்டில் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகம் முஸ்லிம் சமூகம்.

நாட்டில் சிறையில் அதிகம் கைதிகளை கொண்டுள்ள சமூகம் முஸ்லிம் சமூகம். நாட்டில் அதிக பொருளாதார இழப்புகளை சந்தித்த சமூகம் முஸ்லிம் சமூகம். நாட்டில் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படும் சமூகம் முஸ்லிம் சமூகம்.

அரசியல், அதிகாரம், கல்வி, அரசு வேலைவாய்ப்பு என அத்தனை தளங்களிலும் பின்தங்கி, புறக்கணிக்கப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது. இத்தனைக்கும் இந்த சமூகம் ஒன்றும் சாமானிய சமூகம் அல்ல.

இந்த தேசத்தின் கட்டமைப்பில், இந்த தேசத்தின் விடுதலையில் பெருங்கொண்ட தலைவர்களையும், விசாலமான பொருளாதாரத்தையும், லட்சக்கணக்கான உயிர்களையும் அர்ப்பணிப்பு செய்த சமூகம்.

இந்திய தேசிய விடுதலை போராட்ட களத்தின் அத்தனை வடிவங்களிலும் முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது.

 

ஆனால், இன்று அந்த சமூகத்தின் நிலை நித்தமும் தங்களை இந்த தேசத்தின் நேசர்களாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்படும் நிலை கவலையளிக்கிறது.

இந்த நேரத்தில் இந்திய தேச விடுதலையில் பங்கேற்ற மௌலானா முஹம்மது அலி அவர்களின் பிரார்த்தனையை நினைவு கூற நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

மௌலானா முஹம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைச் சீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :

இறைவா...

என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !

சுதந்திரம் பெற்ற இந்தியாவில்

இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !

மௌலானா முகம்மது அலி அவர்களின் பிரார்த்தனையான 'சுதந்திர இந்தியா' மலர்ந்து இன்றுடன் 77 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால்,  தேசத்தின் விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை - தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது. எனவே மௌலானா கேட்ட ''சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா'' ! என்ற பிரார்த்தனை... மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

அல்லாஹ்வே! ''சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்திற்கு வாழ்வைத்தா''!

எப்படியான சுதந்திர வேட்கையை எம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள் தெரியுமா?

மேடை போட்டு எதிரிகளை விமர்சிப்பவர்கள் அல்ல முஸ்லிம்கள். வலை விரித்து தந்திமாய் சிங்கத்தை வேட்டையாடுபவர்கள் அல்ல முஸ்லிம்கள். சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை வேட்டையாடி தோளில் தூக்கி வருபவர்கள் முஸ்லிம்கள். ஆம்! எதிரிகளின் கோட்டைக்கே சென்று, எதிரிகளின் கண் முன்னே நின்று தம் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள்.

வரலாறு இப்படி அடையாளம் காட்டும்...

1930 - இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது.

மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :

* ''I Want to go back to my country''. He said in a loud voice. ''If I can go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to give me a grave here.''

- Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231.

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !*

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. 

எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் 'அல்-அக்ஸா' பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ( நூல்: Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231. )

இன்று இந்த தேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல்வேறு  திட்டங்கள் போடப்பட்டு சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டு ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு மாபெரும் ஒரு "இன அழிப்பபை" நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அதில் சிலதை இங்கே குறிப்பிட்டு சொல்கிறேன்.

1.   இந்திய முஸ்லிம்களின் வரலாற்றை மாற்ற முயற்சி...

நரேந்திர மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக ஜூன் 11, 2014 அன்று மக்களவையில் பேசினார்.

மோடி தனது முதல் உரையில், "1200 ஆண்டுகால அடிமை மனநிலை கவலைக்குரியது. பல முறை நம்மை விட சற்று உயரமான நபரை சந்திக்கிறோம், அப்போது தலையை உயர்த்தி பேசும் துணிவு கூட நமக்கு இல்லை." என்று கூறியிருந்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சு ஒரே நேரத்தில் பல கேள்விகளை எழுப்பியது. இந்தியா 1200 ஆண்டுகளாக அடிமையாக இருந்ததா? பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியா அடிமையாக இருந்ததா? என்கிற கேள்விகள் எழுந்தன.

பிரதமர் மோடி 1,200 ஆண்டுகால அடிமைத்தனம் பற்றிப் பேசியபோது, ​​எட்டாம் நூற்றாண்டில் (கி.பி. 712) சிந்துவின் இந்து மன்னர் மீதான மீர் காசிமின் தாக்குதலில் இருந்து 1947 வரை இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது என்ற பொருளில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏறத்தாழ 1757 முதல் 1947 வரை அதாவது 190 ஆண்டுகள் இருந்ததாகக்  கருதப்படுகிறது. அதன்படி, இந்தியா ஆயிரம் ஆண்டுகளின் அடிமைத்தனத்தை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் கழித்தது என்று அது பொருள் தருகிறது.

இந்தியா எத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்தது? இந்தக் கேள்விக்கு ஒரு சாதாரண இந்திய குடிமகனின் பதில் என்னவாக இருக்கும்?

இந்தியாவில் பள்ளிப் புத்தகங்களின்படி, 1757 ல் பிளாசிஃப் போரில் வங்காள நவாபுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதிலிருந்துதான் இந்தியா அடிமையாக இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால்,  இப்போது இந்தியாவில் (முஸ்லிம்கள் ) வரலாற்றை மாற்றுவது பற்றி பேசப்படுகிறது. இடைக்கால முஸ்லீம் ஆட்சியாளர்கள் படையெடுப்பாளர்கள் என்றும் அவர்கள் இந்தியாவை அடிமையாக வைத்திருந்தனர் என்றும் மாற்றிக் கூறப்படுகிறது.

உண்மையில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் அடிமையாக இருந்ததா இந்தியா?..

இந்தியாவின் இடைக்கால வரலாற்றில் வல்லுநரான இர்ஃபான் ஹபீப் இதுபற்றிக் கூறும்போது, "இடைக்காலம் குறித்து வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன.

சமய ரீதியான வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, இந்துக்களும் முஸ்லிம்களும் கூடச் செய்தார்கள். இந்திய வரலாற்றை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது புதிய விஷயம் அல்ல. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள், இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமையாக இருந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால் இந்துத்துவவாதிகள் இந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பே அந்நியப் படையெடுப்பு ஆட்சி இருந்தது என்று கூறுகிறார்கள்," என்கிறார். மேலும், ஆனால் 1950 களில் இருந்து ஆர்எஸ்எஸ் சொல்ல ஆரம்பித்த வரலாறு முற்றிலும் வேறுபட்டது.

அவர்கள் வரலாற்று உண்மைகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்களுக்கு வரலாறு என்பது என்ன நடந்தது என்பது அல்ல, அவர்களைப் பொருத்தவரை, என்ன நடந்திருக்க வேண்டுமோ அதுதான் வரலாறு. இவை அனைத்தும் இந்திய அரசியலில் வரும் காலங்களில் அதிகம் காணப்படும்.

மேலும் இர்ஃபான் ஹபீப், "இடைக்காலத்தின் பல ஆட்சியாளர்கள் வெளிநாட்டில் பிறந்தனர், ஆனால் அவர்கள் தங்களை இந்தியர்களாகவே கருதியிருந்தார்கள். சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், பிரிட்டிஷ் ஆட்சி அவர்களுக்கு முந்தைய முஸ்லீம் மன்னர்களின் சகாப்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று வாதிடுகின்றனர்.

ஏனெனில், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சொத்தைக் கொள்ளை அடித்து வெளியே எடுத்துச் சென்றனர், ஆனால் முஸ்லிம் பேரரசர்கள் இந்தியாவின் சொத்துகளை இந்தியாவிலேதான் வைத்திருந்தனர்," என்கிறார். ( நன்றி: பிபிசி தமிழ்.

இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்கள்...

இந்திய வரலாறு பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா மற்றும் நவீன இந்தியா என பிரிக்கப்பட்டுள்ளது. குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் முடிவையும் இடைக்கால இந்தியாவின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

பண்டைய இந்தியாவில் இந்து மதம், புத்த மதம் மற்றும் சமணம் தோன்றியது.

இடைக்காலம், முகலாயர் காலம் அதாவது 1526 முதல் ஔரங்கசீப்பின் மரணம் வரை (1707) மிக முக்கியமானது. ஔரங்கசீப் கிட்டத்தட்ட இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தார். ஔரங்கசீப்புக்குப் பிறகு, முகலாயர் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. 1857 இல், முகலாய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் பகதூர் ஷா ஜாஃபர், ஆங்கிலேயர்களால் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

பகதூர் ஷா ஜாஃபருக்குப் பிறகு, இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் அது நவீன காலம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் இந்த பிரிட்டிஷ் காலத்தை நவீன காலம் என்று அழைப்பது குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.

இர்ஃபான் ஹபீப் என்ற அதே பெயருடைய மற்றொரு வரலாற்றாசிரியர் "கொடுமைகள் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியை நவீன காலம் என்று அழைப்பது முற்றிலும் அபத்தமானது," என்று கூறுகிறார்.

இடைக்கால இந்தியா தொடர்பான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஹர்பன்ஸ் முகியா, "பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் மில் தனது 'பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் முதல் முறையாக இந்திய வரலாற்றை மத ரீதியாகக் கட்டமைக்க முயன்றார். இந்தப் போக்கு பிரிவினை சக்திகளால் விரும்பப்பட்டது. ஜேம்ஸ் மில் பண்டைய இந்தியா இந்து ஆட்சி, இடைக்கால இந்தியா முஸ்லீம் ஆட்சி மற்றும் தங்கள் (கொடுங்கோல் ஆட்சி) நவீன இந்தியா என்று வரையறுத்தார்."என்று கூறுகிறார்.

ஒட்டுமொத்தமாக மோடி இடைக்கால மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி காலம் இரண்டையும் அடிமைக்கால ஆட்சி என்று கூறி"முஸ்லிம்களின் வரலாற்றை மாற்றிப் பேசுகிறார். ( நன்றி:- பிபிசி தமிழ்.

இவர்கள் எப்படி வரலாற்றை மாற்றுகின்றார்கள்?...

பாபர் மசூதியை இடித்துத் தள்ளி சட்டத்தின் துணை கொண்டு, நீதியின் கை கொண்டு சில போது  மாற்றுகின்றார்கள்.

இன்னும் சில போது தொடர்படியான வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டு மாற்றுகின்றார்கள்.

2014-ல் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 1130 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்கிறது என்.டி.டிவி-இன் அறிக்கை. வெறுப்புப் பேச்சுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட 58 எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் என்கிறது, ஜனநாயக மறுசீரமைப்பிற்கான கூட்டமைப்பின் அறிக்கை. ( நன்றி:  வினவு 03/05/2022 )

இன்னும் சில போது பின் வரும் நிகழ்வு போன்றும் மாற்றுகின்றார்கள்.

வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்....

இந்திய மண்ணை சொந்தம் கொண்டாட இந்து மதத்தைப் போன்றே இஸ்லாத்திற்கும் உரிமை உண்டு. இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்குள்ள மக்களின் மதமாக இருந்து வருவதைப் போன்று இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக அவர்களின் மதமாக இந்தியாவில் இருந்து வருகிறது. ஒரு இந்து தான் ஓர் இந்தியன் என்றும், இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன் எனவும் பெருமையுடன் கூறுவது போல, ஒரு முஸ்லிமும் தான் ஒரு இந்தியன், நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்று பெருமையுடன் கூறலாம். இதேபோல கிறிஸ்தவர்களும் தான் ஓர் கிறிஸ்தவன் என்பதை இந்த நாட்டில் பெருமையுடன் கூறலாம்".

இது 1940ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் மெளலானா அபுல் கலாம் ஆசாத் நிகழ்த்திய உரையின் சிறு துளி.

அபுல் கலாம் ஆசாத் யார்?.

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், 1888 நவம்பர் 11ம் தேதி இந்திய குடும்பத்தில் பிறந்தவர் அபுல் கலாம். இவர் பிறந்து சில ஆண்டுகள் கழித்து இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது.

சிறு வயதில் இருந்தே கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருந்த அபுல் கலாம், தனது 12வது வயதிலேயே சிறுவர் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்துவிட்டார். 1912ல் 'அல் ஹிலால்' எனும் பத்திரிகையை தொடங்கிய அவர் இந்திய விடுதலை குறித்து தொடர்ந்து எழுதினார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இவரது பத்திரிகைக்கு தடை விதித்ததோடு அபராதம் கட்டவும் உத்தரவிட்டது. 1916ல் வங்காளத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அபுல் கலாம், ராஞ்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தியை சந்தித்து ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு 1920ல் அபுல் கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சுதந்திர போராட்டத்தில் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதால் பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1923ல் காங்கிரஸ் தலைவராக அபுல் கலாம் ஆசாத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 35.

இதன் மூலம் காங்கிரஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைமை பொறுப்பை அலங்கரித்தவர் எனும் பெருமை இவருக்கு கிடைத்தது. இந்து - முஸ்லிம் எனும் இரு பெரும் சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி சுதந்திர போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டினார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இந்து - முஸ்லிம்களை பிரித்து தனி நாடு ஒன்றை உருவாக்குவது எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என கடுமையாக எச்சரித்தார்.

அபுல் கலாம் ஆசாத்தும் நேருவும் ஏறத்தாழ ஒத்த வயதுடையவர்கள். இருவரிடையே பரஸ்பர புரிதலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையும் இருந்தது. காந்தி நேருவை நெருக்கமாக்கிக் கொண்டதை போன்று, நேரு அபுல்கலாம் ஆசாத்தை நெருக்கமான வட்டத்தில் வைத்திருந்தார்.

அரிஸ்டாட்டில், பிளாட்டோ பிதாகரஸ் ஆகிய மூவரின் திறமைகளையும் ஒருங்கே பெற்றவர் என மகாத்மா காந்தியால் போற்றப்பட்டவர் மெளலானா அபுல் கலாம் ஆசாத். அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதல் கல்வி அமைச்சர் பொறுப்பை வழங்கினார் ஜவஹர்லால் நேரு.

11 ஆண்டுகளாக இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தின் சேவைகள் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பல வகையில் அடித்தளமிட்டன. நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவசக் கல்வி கொடுக்க வேண்டும், அனைத்து கல்வி திட்டங்களும் மத சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

உலகளவில் இன்று வரை பல பெருமைகளுக்கு வித்திட்டு வரும் நாட்டின் சிறந்த உயர் கல்வி கூடங்களான இந்திய அறிவியல் கழகத்தை (ஐ.ஐ.டி) உருவாக்கிய பெருமை அபுல் கலாம் ஆசாத்தையே சாரும். இவரது தலைமையின் கீழ் 1951-ல் காரக்பூரில் முதலாவது ஐஐடி கல்வி நிறுவனமும், 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) தொடங்கப்பட்டது. பெருநகரங்களான சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் ஐஐடி உருவாக்கப்பட்டன.

இந்தியாவின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அபுல் கலாம் ஆசாத் பிப்ரவரி 22, 1958ல் மறைந்தார். அவரை போற்றும் விதமாக 1992ல் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது. கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் (நவம்பர் 11) தேசியக் கல்வி தினமாக 2008 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

திசை மாறும் வரலாறு....

நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மை மக்களுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்ய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தால் 2009 -ல் மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் (MAEF) எனும் அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் மூலம் சிறுபான்மை மக்கள் தங்கள் உயர்கல்வி பயிலவும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவும் ஊக்கத்தொகை பெறலாம். கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையினர் மற்றும் நலிந்த பிரிவினரின் நலனுக்காக கல்வித் திட்டங்களை வகுப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் நவீன கல்வியை உறுதி செய்வது என அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவமான கல்வியை வழங்குவதற்காக உருவாக்கப்பதுதான் மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டெசன். இந்த அமைப்பு தொடங்கப்பட்டது முதல் 31.03.2021 வரை 11,23,770 மாணவ & மாணவிகளுக்கு ரூ.793.27 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

MAEF-ன் இன்றைய நிலை என்ன?

மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் (MAEF) அமைப்புக்கு ஆண்டுதோறும் மத்திய சிறுபான்மை அமைச்சகம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வருகிறது. 2021 - 22 நிதியாண்டில் இந்த அமைப்பிற்கு 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2022 - 23ம் நிதியாண்டில் வெறும் 0.01 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மெளலானா ஆசாத் எஜூகேசன் பவுண்டேசன் அமைப்புக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு பாஜக சிறுபான்மை அணியின் மாநில துணை தலைவர் ஜான்சனை தொடர்பு கொண்டு பிபிசி கேட்ட போது, 

"மெளலானா அபுல் கலாம் ஆசாத்தை மத்திய அரசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பிற்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் தேவைக்கேற்ப கூடுதல் நிதிகளும் ஒதுக்கப்படும். 0.01 ரூபாய் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருந்தாலும் அதில் ஏதேனும் தவறுகள் இருக்கலாம். 

பிரதமர் நரேந்திர மோடி அரசு சிறுபான்மை மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறது. ஹஜ் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தேவைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார். ( நன்றி: பிபிசி தமிழ், 22/02/2022 )

ஆனால், 11 மாத இடைவெளியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த 2022 ம் ஆண்டின் டிசம்பரில் நடந்த  பாராளுமன்றக் கூட்டத்தில் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் சமர்பித்தார். 

இந்த திட்டம் மூலம், இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்கல்வி மாணவர்கள், பிஎச்டி படித்து முடிக்க மவுலானா ஆசாத் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.

ஐந்து ஆண்டுகள் ஸ்காலர்ஷிப்பில், முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்களுடைய ஆராய்ச்சி திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், அது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் தொடரப்படும். ஒரு உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் வேறு நலத்திடங்கள் மூலம் பயன்பெற முடியாது என்பது ஏற்கனவே மத்திய அரசு வகுத்திருக்கும் விதி. 

ஆனால், மவுலானா ஆசாத் திட்டம் ரத்து செய்வதற்கான காரணமாய், அமைச்சர் ஸ்மிருதி இரானி, அது போலவே பல நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், 2022-23 கல்வி ஆண்டு முதல் மவுலானா ஆசாத் உதவித்தொகை திட்டத்தை மத்திய அமைச்சகம் முழுமையாக நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். ( நன்றி: விகடன். 15/12/2022 )

வரலாற்று பாட நூலில் இருந்து பெயர் நீக்கம்...

இந்திய அரசமைப்பை உருவாக்குவதில் அரசியல் நிர்ணய சபையில் முக்கிய பங்காற்றியவர் ஆசாத். அதற்காக அமைக்கப்பட்ட 8 பெரிய குழுக்களில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல், மௌலானா ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கியது ஏற்கனவே பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றி 11-வது வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சில பகுதிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியிருக்கின்றது.

தற்போது வழங்கப்பட்டுள்ள  11-வது வகுப்பிற்கான புதிய பதிப்பில் ஆசாத்தின் பெயர் மட்டும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ( நன்றி: ஒன் இந்தியா. 13/04/2023 )

பெயர்களை மாற்றுவதும். வரலாறை திரிப்பதும், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்தவர்களை தியாகிகள் போல சித்தரிப்பதும், உண்மையிலேயே தேசபக்தியுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய விடுதலை வீரர்களை எதிரிகள் போல அடையாளப் படுத்துவதும் பாசிஸ பாஜகவின் கொள்கையாகும். இவர்களுடைய இந்துத்துவ கொள்கைகளை ஏற்கும் முஸ்லிம்களை இவர்கள் கொண்டாடுவார்கள், ஆனால் அதற்கு எதிராக செயல்படும் அனைவருமே இவர்களுக்கு எதிரிகளாகத்  தான் பார்ப்பார்கள்.

அடுத்து கல்வித் தந்தை எனும் பட்டத்தை பறிப்பார்கள். அதற்கடுத்து நவம்பர் 11 நினைவு தினத்தை ரத்து செய்வார்கள். பின்னர் எவனோ ஒரு சங்கியை கொண்டு வந்து இவன் தான் கல்வித் தந்தை என்பார்கள். 

2. கலவரங்கள் மூலம் கும்பல் கொலை மூலம் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வது....

"இனப்படுகொலைக்கான பாதையின் விளிம்பில் உள்ள இந்தியாஎன்ற தலைப்பில் சர்வதேச அளவிலான இணையவழி உச்சி மாநாடு ஒன்று கடந்த 2022 -ம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்றது.

நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை சரக்கு இரயில்களில் ஏற்றிச் சென்று, வதைமுகாம்களில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்றான் பாசிசக் கொடூரன் ஹிட்லர். இசுலாமிய மக்களைக் குறிவைத்து, அத்தகையதொரு பாசிசப் படுகொலை நம் நாட்டிலும் ஆயுதமேந்திய அரசுப்படைகளாலோ அல்லது தனியார் படைகளாலோ நடத்தப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச வல்லுநர்கள்.

கம்போடியாவில் உள்ள இனப்படுகொலைக்கான ஆவண மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மவுங் ஜர்னி, இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப்போக்கு இந்தியாவில் தொடங்கிவிட்டதாகத் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் மதத்திற்கு அச்சுறுத்தலானவர்களாக சித்தரிப்பது குறித்து குறிப்பிடும் அவர், இன்னும் வெளிப்படையானதொரு இனப்படுகொலை நடக்காவிட்டாலும் மனிதநேயத்தை இழக்கத்தொடங்கிவிட்டதே (Dehumanisation) இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப் போக்குதான் என்கிறார்.

வெறுப்புப் பேச்சுகளிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதிலும் மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான குணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் மிதாலி ஜெயின்.

ஐ.நா சபையின் இனப்படுகொலைத் தடுப்பு சிறப்பு ஆலோசகரான அடாமா டியாங், நீண்ட மற்றும் போற்றத்தக்க சமாதான சகவாழ்வு வரலாறு கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால் சகிப்புத்தன்மையின்மையும் பாகுபாடும் அதிகரித்திருக்கிறது என்று தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியவர்கள், அந்நியர்கள், தேசவிரோதிகள் தீவிரவாதிகள், சட்டவிரோத குடியேறிகள் என்று முஸ்லீம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல். 

எந்தவொரு இனப்படுகொலையும் திடீரென நடந்துவிடுவதில்லை. இத்தகைய நிகழ்ச்சிப் போக்கின் வளர்ச்சியில்தான் நடந்தேறுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேற்சொன்ன அத்தனை அறிகுறிகளும் இப்படுகொலைகளுக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் உருவாக்கப்பட்டன.

நாடு; நாட்டுக்காக கட்சி; கட்சிக்காக தலைவன். இம்மூன்றுக்காக யாரையும் பலியிடலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் சித்தாந்தம். நாட்டு வளர்ச்சிக்காக ஒரு மாநிலத்தையும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு ஊரையும் பலியிடலாம் என்று முன்பு ஒரு முறை இல.கணேசன் சொன்னதை இந்நேரம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கலவரங்கள்...

கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் கலவர வழக்குகள் ஒட்டுமொத்தமாக 2.76 இலட்சத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.

கடந்த காலங்களில் நாடுமுழுவதும் நடந்த கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என்று சசி தரூர் மற்றும் சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வியெழுப்பினர். குறிப்பாக ராஜஸ்தானில் மதக் கலவரங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இக்கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகும் கலவர வழக்குகளை இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி பதிவு செய்து வருகிறது. இருப்பினும் கும்பல் படுகொலைகளுக்கான தனி தரவு எதுவும் என்.சி.ஆர்.பி.யால் பராமரிக்கப்படவில்லைஎன்று கூறினார்.

 

மதக் கலவரம் என வகைப்படுத்தக் கூடிய வழக்குகளின் விவரங்களைப் பொறுத்தவரை, 2016 முதல் 2020 வரை ஆண்டு வாரியான விவரங்களை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக சமர்பித்தார்.

இந்தியா முழுவதும் கலவர வழக்குகள் மற்றும் மதக் கலவர வழக்குகள் முறையே, 2016-ம் ஆண்டில் 61,964 மற்றும் 869; 2017-ல் 58,880 மற்றும் 723; 2018-ல் 57,828 மற்றும் 512; 2019-ல் 45,985 மற்றும் 438. 2020-ல் 51,606 மற்றும் 875 பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 2,76,273 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளது. அவற்றில் 3,399 மதக் கலவரங்கள் என்று அறிக்கை கூறுகிறது. ( நன்றி: வினவு, 07/04/2022 )

3.   மாட்டுக்கறி அரசியலும், இந்துத்துவாவின் சதியும்...

பசுவை புனிதப் படுத்தி முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான தாக்குதல்களில் பலியானவர்கள் முஸ்லிம்களும் தலித்களும் தான்.

2014 க்கும் 3018 க்கும் இடைப்பட்ட காலத்தில் 115 முஸ்லிம்களும், 2016 க்கும் 2017 க்கும் இடைப்பட்ட காலத்தில் 23 தலித்களும் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம். அதற்கு பிந்தைய காலத்தில் பலியானவர்களின் கணக்கெடுப்பு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளில் இல்லை என்கிறது அந்த புள்ளி விவரம்.

இந்த தேசத்தில் கால்நடை உரிமையாளர்களாக இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் சீக்கியர்கள், 30 சதவீதத்தினர் இந்துக்கள், 18.6 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள், 15 சதவீதத்தினர் கிறிஸ்துவர்கள் மேலும், 15 சதவீதத்தினர் மட்டுமே மாடு அல்லாத மற்ற விலங்குகளை வளர்க்கின்றனர் என்கிறது அந்த புள்ளி விவரம்.

இந்த தேசத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8 கோடி பேர் மட்டுமே மாடு அல்லது எருமை இறைச்சி உண்பவர்கள் என்றும், இந்த தேசத்தின் இஸ்லாமிய மக்கள் தொகையில் 40 சதவீத  (அதாவது 6.34 கோடி) மக்கள் இறைச்சி உண்பவர்கள் என்றும், 1.25 கோடி இந்து சமய மக்கள் இறைச்சி உண்பவர்கள் என்றும் அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. ( நன்றி: வினவு, 22/02/2019 )

சமீபத்தில் எடுக்கப்பட்ட  புள்ளிவிவரமொன்று பசுவின் பெயரால் 60 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. அவற்றில் 97% 2014க்குப் பிறகு நடந்திருக்கின்றன. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84% முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ( நன்றி: மெய்ப்பொருள்.காம்  14/07/2018 ) 

மாட்டிறைச்சி முஸ்லிம்களின் சொத்தா?

புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். 

 

பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார். 

புனிதப்பசு எனும் கட்டுக்கதைஎன்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதுஎன்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்" என்பதை இந்த நூலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் பசு நிச்சயமாக ஒரு   உணவுதான்என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

4. புல்டோசர் கலாச்சாரமும்... வீடுகளை இழக்கும் முஸ்லிம்களும்....

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், 2023 ஜூலை 31 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் கலவரத்தைத் தூண்டும் நோக்கோடு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. தங்களின் திட்டத்திற்கேற்ப அந்நாளில் கலவரத்தையும் அரங்கேற்றின.

ஹரியானா மாநிலத்திலேயே முஸ்லீம்கள் பெரும்பான்மை வகிக்கும் ஒரே மாவட்டம் நூஹ் தான். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நூஹ் மாவட்டத்தில் வசிக்கும் 2,80,000 பேரில் கிட்டத்தட்ட 77 சதவீதம் மக்கள் முஸ்லீம்கள். இந்தியா பாகிஸ்தான் வகுப்புவாத பிரிவினையின் போது கூட மதக்கலவரங்கள் நடக்காத பகுதியாக நூஹ் விளங்கியது.

இந்துத்துவ கும்பல்கள் நடத்திய தாக்குதலின் பதட்டம் தணிவதற்குள் அரசு அதன் பங்கிற்கு தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து 150-க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை போலீசு கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்தது

இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

தகரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஆன சிறிய கடைகளை இடிக்க புல்டோசர் ஓட்டுநர் தயங்கியபோது, ​​அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரிடம், “இவையெல்லாம் அந்த யாத்திரையின்போது கற்களை வீசி வன்முறையைத் தூண்டியவர்களின் கடைகள். யாருக்கும் கருணை காட்டவேண்டாம். அவற்றை முழுவதுமாக அழித்துவிடு,” என்று கூறியுள்ளார். அரசு எந்திரம் பாசிச மயமாகி வருவதற்கு இது தக்க சான்று.

இங்கு மட்டுமல்ல. இதற்கு முன்னர் மத்திய பிரதேசம், கோவா, டெல்லி, உ.பி, ராஜஸ்தான் என பல மாநிலங்களில் இது போன்று முஸ்லிம்களின் வீடுகளை இடித்து அவர்களை நடுத்தெருவில் நிராயுதபாணிகளாய் நிறுத்தி இருக்கின்றனர். ஒரு புறம் குடியுரிமையை பறிக்க திட்டம், இன்னொரு புறம் சொந்த வீட்டில் வசிக்கும் முஸ்லிம்களை கலவரத்தின் பேரிலும், சட்ட விரோத குடியிருப்பை அகற்றுகின்றோம் என்கிற பெயரில் இடித்துத் தள்ளுவது, இன்னொரு புறம் குடியிருக்க முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பது என முஸ்லிம்களை அகதிகளாக்க முனைப்புடனே செயல் பட்டு வருகிறது இந்துத்துவ அமைப்புகள்.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லத்துடிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

1. அநியாயக்காரர்களை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை....

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்!        ( அல்குர்ஆன்: 14: 42 )

அநியாயக்காரர்களின் முடிவு தாமதமாக்கப் படுவதில்லை....


 
وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

மேலும், கொடுமை புரிகின்றவர்கள் அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்”.  (அல்குர்ஆன்:26:227)

3. வல்லவர்கள் என்ன? எந்த கொம்பனாக இருந்தாலும் அத்து மீறினால் அழிவு நிச்சயம்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ () فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا

ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமும் இன்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். எங்களை விட வலிமை மிக்கவர் யார் இருக்கின்றார்கள்என்று. அவர்களைப் படைத்த இறைவன் அவர்களை விட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்கு புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், அபசகுணம் உடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்களை சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக!    ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

2. தொடர்ந்து பிரார்த்தனை செய்வது.

اللهم أنج المستضعفين من المؤمنين والمسلمين في بلاد الهند، وفي مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين، واجعل لهم فرجاً ومخرجاً

اللهم انصر المستضعفين من المؤمنين والمسلمين، وألّف بين قلوبهم، ووحّد صفوفهم، ووفقهم لاتباع كتابك وسنة نبيك، ويسّر لهم أسباب النصر

اللهم اجعلهم من الذين إن مكنتهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر، ولله عاقبة الأمور

اللهم أنت ربنا و إلهنا و خالقنا قصدناك و رجوناك فلا تخيب رجاءنا و دعوناك فاستجب دعاءنا

اللهم انصرأهلنا في سوريا و اليمن وفلسطين و ليبيا و العراق و مصر و تونس والسودان وكافة بلاد المسلمين نصراً عزيزاً من عندك على من يحاربونك و يحاربون سنة نبييك
ودينك و يقتلون عبادك ،

اللهم كِن سلاحهم واضرب وجوههم و مزقهم و فتتهم
واجعل أمرهم شتاً شتاً ، واجعل بيننا وبينهم سداً سداً ،
و صب عليهم العذاب صباً صباً ، و أطفأ نارهم و شلّ إرادتهم

اللهم جردهم من حولهم وقوتهم و سلطهم على أنفسهم
و اجعل بأسهم بينهم

اللهم زلزل الأرض من تحت أقدامهم وألق الرعب فى قلوبهم وانصر اهلنا الابرياء فى كل مكان

اللهم انصر عبادك المؤمنين على القوم الفاسدين
أللهم أن الأعداء قد استهانوا بدينك وبعبادك
اللهم انهم أظهروا علينا قوتهم فأرنا فيهم قدرتك
اللهم زلزلهم أللهم أجعلهم عبرة للعالمين

أللهم يا أكبر من كل كبيرعليك بمن تجبر وتكبر
أللهم أنصرشعوب المسلمين وأشف جرحاهم وفك قيد اسراهم وأرحم شهدائهم وموتاهم
اللهم أرزقهم النصر على عدوهم وألأمان
أللهم أرزقهم الرزق الحلال وعوض عليهم
أللهم عوض عنهم خسائرهم و وسع عليهم ارزاقهم
يا ألله يا ألله يا ألله
حسبنا الله و نعم الوكيل

3. அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டி நம்பிக்கையுடன் அவன் உதவியை எதிர்பார்த்து இருப்பது..

குர்ஆனுடைய பல வசனங்களை பார்ப்போமேயானால் தவக்கும் குறித்து இரண்டு வழி முறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஒன்று இருக்கிறது பொதுவாக அல்லாஹ்வை சார்ந்து இருத்தல். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவனாகவே வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தையும் செய்தல்.

இன்னொன்று இருக்கிறது.சில இக்கட்டான முக்கியமான தருணங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது உண்டு. எதிரிகள் சூழ்ந்து கொள்ளும்போது, அல்லது ஆபத்துகள் சூழ்ந்து கொள்ளும்போது, அல்லது வறுமை பஞ்சம் பசி பட்டினி, அல்லது பொருளாதார நஷ்டம், அல்லது வேறு ஏதாவது மனதிற்கு பயம் ஏற்படுகின்ற, அல்லது மனதிற்கு விருப்பமில்லாத, மனதிலே துக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, இப்படி ஏதாவது ஒரு ஆபத்துகள் சூழ்ந்து கொள்ளும் பொழுது. அந்த நேரத்திலே அல்லாஹ்வுடைய உதவி எனக்கு கண்டிப்பாக வரும், என்று அந்த தவக்குலில் உறுதியாக இருப்பது.

ஒன்று தவக்குல், மற்றொன்று அந்தத் தவக்குலில் உறுதியாக இருப்பது.

இது ஈமானுடைய குணங்களில் மிகவும் முக்கியமான ஒரு குணம் ஆகும்.

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அல்லாஹ்வை சார்ந்து இருப்பவர்களை நேசிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 3 : 159)

ஃபிர்அவ்ன் உடைய சபையில் ஏகத்துவம் பக்கம் அழைக்கின்ற ஓர் அடியார், ஃபிர்அவ்னுடைய சபையிலிருந்து எழுந்து மூஸா (அலை) அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். அந்த ஏகத்துவத்தை உறுதிப்படுத்தியவராக பேசுகின்றார். ஃபிர்அவ்ன் எச்சரிக்கை செய்கிறான்.

எப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மூஸா (அலை) அவர்களை நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக, தன்னுடைய அந்த கட்டளையை மீறினார்கள் என்பதற்காக, மாறுகால் மாறுகை வெட்டி, அவர்களை கழுமரத்தில் ஏற்றி, துடிக்கத் துடிக்க அவர்களை கொன்று குவித்தான் என்றால்! எப்பேற்ப்பட்ட கல்நெஞ்சம் உடையவனாகவும், கடுமையாக வேதனை செய்பவனாகவும்,இருந்தான் என்பதை நீங்கள் புரியலாம். ஒருவரை கூட அவன் மன்னிக்கவில்லை.(அல்குர்ஆன் 20 : 71)

இத்தகைய எதிரிக்கு முன்னால் ஆட்சி, அதிகாரம், படைபலம், எல்லாம் அவனுக்கு ஆதரவாக இருக்கின்ற நேரத்தில், துணிந்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அல்லாஹ்வின் பக்கம் அழைத்துவிட்டு, நல்லடியார் கூறியதை ரப்புல் ஆலமீன் தன் திருமறையில் கூறுகிறான்;

وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ

நான் எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.அடியார்களை அல்லாஹ் உற்று நோக்குகிறான்.(அல்குர்ஆன் 40 : 44)

இறுதியாக அந்த நல்லடியாரைப் பாதுகாத்ததாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பதிவு செய்கிறான்.

فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ

ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது. ( அல்குர்ஆன் 40 : 45 )

நல்லவர்களை எந்தத் தருணத்தில், எப்படி பாதுகாக்க வேண்டும்?என்பதைஅல்லாஹ் அறிந்தவன். எதிரியை எந்த நேரத்தில், எந்த தருணத்தில், அழிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

நமது நபி (ஸல்)  அவர்களுக்கும் அல்லாஹு தஆலா இது போன்ற சில வசனங்களை இறக்கினான். 

நபியே! நீங்கள் அவசரப்படாதீர்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் வேதனையை அவர்கள் சுவைக்க செய்யலாம். இல்லை என்றால் உங்களுடைய மரணத்திற்குப் பிறகும் சுவைக்கச் செய்யலாம். இல்லையென்றால் அவர்களுக்கு மரணத்தை கொடுத்து அவர்கள் மறுமையில் வருவார்கள் அப்பொழுது அவர்களை எப்படி செய்ய வேண்டுமோ செய்து கொள்வேன். (அல்குர்ஆன் 10:46,13:40,40:27)

எத்தனை எத்தனையோ இறை வசனங்கள் அல்லாஹ்வின் உதவி "அல்லாஹ்வைச் சார்ந்து" வாழ்பவர்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ

அல்லாஹ் உடைய கருணை நல்லவர்களுக்கு, சுத்தமான ஈமான் உள்ளவர்களுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது.  ( அல்குர்ஆன்: 7 : 56 )

كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ

 

நான் விதித்து விட்டேன்; நானும் என்னுடைய தூதர்களும் தான் வெற்றி பெறுவோம்என்று.  ( அல்குர்ஆன் 58 : 21)

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

முஃமின்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக  இருக்கிறது. ( அல்குர்ஆன்: 30 : 47 )

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால், அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். உங்களது பாதங்களை பலப்படுத்துவான்.  ( அல்குர்ஆன்: 47: 7 )

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை சார்ந்து இருந்து, ஈமான் உங்களிடத்திலே உறுதியாக இருந்தால்! (நீங்கள் ஏன் கோழையாக வேண்டும். நீங்கள் ஏன் பலவீனப்படவேண்டும்.) நீங்கள்தான் உயர்ந்தவர்கள். ( அல்குர்ஆன் 3 : 139 )

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا

ஒருக்காலும் அல்லாஹுத்தஆலா உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது காஃபிர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்த மாட்டான்.  ( அல்குர்ஆன் 4 : 141 )

தவக்குல் எப்படி இருக்க வேண்டும்?

மூஸா (அலை) அவர்களுடைய தாய் எத்துணை சோதனையான காலகட்டத்தில், நபி மூஸா (அலை) அவர்களை  பெற்றெடுக்கின்றார்கள். பிறக்கின்ற அத்துணை ஆண் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்ற ஃபிர்அவ்னின் கட்டளை இருக்கும் தருணம் அது.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தன் சேவகர்களை நிறுத்தி இஸ்ரவேலர்களின் வீடுகளிலே குழந்தை பிறக்கின்றதா? என்று கண்காணித்துக் கொண்டிருக்கும் காலம் அது.

அல்லாஹ் அத்துணை பேர்களின் கண்களையும் மறைத்து மூஸா (அலை) அவர்களுடைய தாயை கர்ப்பமடைய செய்தான்.  குழந்தை மூஸாவையும் பெற்றெடுத்து விடுகின்றார்கள்.

இந்த குழந்தை ஃபிர்அவ்னுடைய கையால் கொல்லப்பட்டு விடுமோ! என்ற அச்சத்தில் பயப்படுகிறார்கள். அல்லாஹுத்தஆலா மூஸா (அலை) தாயின் உள்ளத்திலே அந்த தன்னைப் பற்றிய சிந்தனையை போடுகின்றான்.

وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்.) (அல்குர்ஆன் 28 : 7)

மூஸாவுடைய தாய்க்கு அல்லாஹ்வின் இந்த வாக்கின் மீது அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டது. குழந்தையை கடலில் போட்டுவிட்டார்கள்.

فَرَدَدْنَاهُ إِلَى أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும்படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள். ( அல்குர்ஆன்: 28 : 13 )

இது தான் தவக்குல். இப்படித் தான் இருக்க வேண்டும் தவக்குல் என்பது.

இறுதியாக...

ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மையையும், அடாவடித்தனத்தையும் சொல்லிய பிறகு அல்லாஹ் அந்த சமூகத்திற்கு அளித்த நம்பிக்கை வார்த்தைகள் இதோ!!

وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏

ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.

 وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ‏

இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்). ( அல்குர்ஆன்: 28: 5, 6  )

அந்த நம்பிக்கை வார்த்தைகள் நமக்குமானது தான். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 2024 பாராளுமன்ற தேர்தலோடு ஃபாசிஸ பரிவாரங்களை கூண்டோடு அகற்றி இந்த தாச மக்களுக்கு நம்பிக்கை அளித்து நல்லருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment