Sunday, 13 August 2023

செயற்கை நுண்ணறிவு குறித்த இஸ்லாமிய வழிகாட்டல்!!!

 

செயற்கை நுண்ணறிவு குறித்த இஸ்லாமிய வழிகாட்டல்!!!


இன்றைய விஞ்ஞான உலகில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக உலாவந்து கொண்டிருக்கிறது. 

இப்படிப்பட்ட தொழில்நுட்ப யுகத்தில் நாம் பின்பற்றும் மார்க்கம் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகமுரணாக அமைந்து விடுமானால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் மார்க்கம் என நாம் உயர்த்திக் கூறும்  பிரகடனங்கள் பிசுபிசுத்துவிடும். 

பல நேரங்களில் இஸ்லாம் கூறும் எந்த ஒரு தீர்வும் அறிவியல் முடிவுகளுடன் பொருந்திப்போவது நம்மை பிரமிக்க வைக்கிறது. 

அறிவியல் தீர்வுகள் இஸ்லாமியச் சித்தாந்தத்துடன் முரண்பட்டால் அறிவியல் தீர்வுதான் மாற்றம் பெறுகிறது மறுபரிசீலனைக்குள்ளாகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

அறிவியல் ரீதியாக அருள்மறையும், நபிமொழியும் அன்றே கூறிய பல விஷயங்கள் இன்று உண்மைப் படுத்தப்பட்டிருப்பதை நாம் கண் கூடாக பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில், ரோபோட் அமைப்புடன் தற்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகிற Artificial intelligence - செயற்கை நுண்ணறிவு குறித்து நாம் அறிந்து கொள்வதோடு அது குறித்த இஸ்லாமிய வழிகாட்டலை தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

மிகச் சமீபத்திய நாட்களில் ஊடகங்களில் அதிக அளவில் எழுதப்பட்ட, காட்சி படுத்தப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்குமெனில் Artificial intelligence -  (AI) ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் என்பதாகும்.

மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டறிய மனித சமூகம் முயன்று வருகிறது.

இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது மனித குலத்துக்கே சவால்விடும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பூதங்களுக்கு அடுத்தபடியாக ஆறாவது பூதம் என்று சொல்லப்படும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு இன்று அசுர வளர்ச்சியடைந்து வருவதை நாம் சமீப நாட்களாக அவதானித்து வருகின்றோம்.

இன்று செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. மனிதர்கள் செய்யும் பல பணிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திரங்கள் கண் இமைக்காமல் செய்யத் தொடங்கியுள்ள வளர்ச்சி அதன் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற வியப்பையும் ஆவலையும் கூட்டியுள்ளது.

என்னென்ன துறைகளில்....

மனித குலத்தின் எதிர்கால தேவைகளை கட்டமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று இதனை ஆதரிப்போர் கூறிவருகின்றனர்.

Artificial intelligence -  (AI) ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் என்றால் என்ன?

மனிதன் சிந்தித்துச் செயல்படுவது போன்று, பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி, அவற்றைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு இயந்திரத்தைச் சிந்தித்துச் செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் மைல்கல்லாகக் கருதப்படும் சாட்ஜிபிடி’ (ChatGPT), 2022இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இந்தத் தொழில்நுட்பம் மனித மூளையை விஞ்சும் நுண்ணறிவாகவே பார்க்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில், நுண்ணறிவின் இருப்பிடமான மூளை, மனதின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் பார்ப்பது அவசியம்.

செயற்கை நுண்ணறிவால் மனித அறிவுக்கு எட்டாத செயல்பாடுகளைக்கூடச் செய்யவைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், மனித மூளைக்கே உரித்தான அனுதாப உணர்வு (Empathy), கருணை, அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டதை வைத்து சூழ்நிலைகளை அணுகும் சமயோசித புத்தி போன்றவற்றைச் செயற்கையாக உருவாக்குவது சாத்தியமில்லை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஏனென்றால் செயற்கை நுண்ணறிவானது, ஏற்கெனவேவலைதளங்களில் இருக்கும் கணினி நிரல்கள், தரவுகளைத் திரட்டி அவற்றை ஒருங்கிணைப்பதன் அடிப்படையிலேயே கணித்துத் தீர்வுகளை முன்வைக்கிறது; அந்த வகையில், இது மனிதமூளையின் இயற்கையான சிந்திக்கும் செயல்பாட்டி லிருந்து வித்தியாசப்படுகிறது. ( நன்றி: இந்து தமிழ் திசை, 20/07/2023 )

செயற்கை நுண்ணறிவில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அவர்களது தன்னிச்சையான செயல்பாடு, அறிவு மற்றும் செயல் திறன்.

தமது தன்னிச்சையான செயல்பாடுகளால் அனைத்தையும் படைக்கும் அல்லது உருவாக்கும் திறன் மனிதர்களுக்கு உள்ளது. ஒருநாள் காலையில் விழித்தெழும் ஒரு மனிதர், ஒரு கவிதை அல்லது கதையைப் படைப்பது குறித்துச் சிந்திக்கலாம். ஆகச் சிறந்த படைப்பை உருவாக்குவது குறித்து கற்பனை செய்யலாம். வாழ்வின் தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து அவர் புதிய கற்பிதங்களை, அனுபவங்களை இந்த உலகுக்கு அளிக்கலாம்.

மனிதர்களின் இதுபோன்ற தன்னிச்சையான செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள இயலாது. ( நன்றி: இந்து தமிழ் திசை, 22/07/2023 )

செயற்கை நுண்ணறிவில் இருந்து மனிதர்களை தனித்துவப்படுத்திக் காட்டும் மற்றொரு காரணி அவர்களது எண்ணங்கள்.

மனிதர்களின் எண்ணங்களை வெறும் ஆசைகள் அல்லது உள் உளவியல் நிலைகளாகக் குறைத்து மதிப்பிட முடியாது என்று ‘Intension’ எனும் நூலில் குறிப்பிடுகிறார் எலிசபெத் அன்ஸ்காம்ப்.

எண்ணம் என்பது ஒரு செயலின் இன்றியமையாத பண்பு என்றும், அது தார்மீகப் பொறுப்புடன் உள்ளார்ந்த தொடர்புடையது எனவும் அன்ஸ்கோம்ப் விளக்குகிறார். எனவே ஒரு செயல் தார்மீகரீதியாக சரியா, தவறா என்பதைத் தீர்மானிக்கும்போது, அதிலிருந்து நோக்கத்தைப் பிரிக்க முடியாது என்கிறார் அவர்.

ஒரு செயலின் விளைவுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நெறிமுறைக் கோட்பாடுகளை விமர்சிக்கிறார் எலிசபெத் அன்ஸ்காம்ப்.

நெறிமுறைகள் மற்றும் நீதி முறைமைகள் எதுவும் இல்லாததால் செயற்கை நுண்ணறிவுக்கு என்று தனிப்பட்ட எண்ணம் இல்லை. இந்த எண்ணம் அதன் செயற்பாட்டைத் தீர்மானிக்கும் புரோகிராமுடன் தொடர்புடையதாக உள்ளது.

ஒரு மனிதர் சமூகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும், அவரது எதேச்சையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு சட்ட விதிமுறைகள், நெறிமுறைகள், மதக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அதோடு தான் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்ற தெளிவும் மனிதர்களுக்கு உள்ளது.

ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கோ, இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்படும் இயந்திரங்களுக்கோ மனிதரைப் போன்று எந்த நெறிமுறைகளும், கோட்பாடுகளும் இல்லை.

தங்களுக்குள் முன்பே புகுத்தப்பட்ட செயல்பாட்டு விதிமுறைகள், நிரல்கள் அல்லது கட்டளைகளின்படி மட்டுமே அவற்றால் செயல்பட முடியும். எனவே மனிதர்களால் கடைபிடிக்கப்படும் பல்வேறு நெறிமுறைகளை, செயற்கை நுண்ணறிவால் பின்பற்ற முடியாது என்பது தெளிவாகிறது.

நன்மை, தீமைகளை வேறுபடுத்தி அறியும் பகுத்தறிவாக நெறிமுறைகள் விளங்குகின்றன.

ஆனாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளும் வரும் காலத்தில் வகுக்கப்படலாம் என்கிறார் இயற்பியலாளர் ஜோஸ் இக்னாசியோ லடோரே. அவர் “Ethics for machines” என்ற தமது படைப்பில் இதுகுறித்து விளக்குகிறார்.

உலகளவில் இன்று பிரபலமாக உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் செயலியான ChatGPT, உணர்திறன் மிக்க உள்ளடக்கங்களை ஒளிபரப்பு செய்யாதபடியும், ஆழமான அணுகலுக்கு அனுமதி அளிக்காதபடியும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

முறையான நெறிமுறைகளைப் பின்பற்றும் மனிதர்களால்தான் ChatGPT-இன் இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் காலப்போக்கில் மாறலாம். அப்போதும் இதற்கான நெறிமுறைகளின் அடிப்படையானது மனிதனுடன் தொடர்புடையதாகவே இருக்குமேயன்றி, தன்னிச்சையாக அமையாது. ( நன்றி: இநது தமிழ் திசை,  22/07/2023 )

செயற்கை நுண்ணறிவு ஓர் அறிமுகம்!

மனிதனுக்கு இருக்கும் நுண்ணறிவுத் திறனை அஃறிணையான இயந்திரங்களுக்கு கொண்டு வரும் ஸ்மார்ட் முயற்சியாக 20-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் அதாவது 1956-ல்  AI சார்ந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சுகள் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

படிப்படியான பரிணாம வளர்ச்சியை எட்டி இன்று மனிதர்களுக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது AI.

பல்வேறு ஃபீல்ட்களை உள்ளடக்கி இந்த ஆராய்ச்சி அமைந்தது. இன்று ஃபேஷியல் ரெகக்னேஷன் தொடங்கி பயனர்களை டார்கெட் செய்து தேடுபொறிகளில் வரும் விளம்பரங்கள், பரிந்துரைகள், வெர்ச்சுவல் அஸிஸ்டன்ட்ஸ், தானியங்கு வாகனங்கள் என அனைத்தும் ஏஐ நுட்பத்தால் சாத்தியமாகி உள்ளது. அதே போல குறிப்பிட்ட சில துறைகளில் தனித்துவ பயன்பாட்டுக்காகவும் ஏஐ பயன்படுத்தப்படுகிறது.

சுகாதாரத் துறைக்கு உறுதுணைபுரிய, போர் புரிய, இசை அமைக்க, புத்தகம் எழுத, பயோ-டேட்டாவை சரிபார்க்க என பல்வேறு பணிகளுக்கு AI உதவி வருகிறது.

கணினியின் தந்தை என போற்றப்படும் சார்லஸ் பாபேஜ், உலகின் முதல் கணினி நிரலாளர் ஏடா லவ்லேஸ் (Ada Lovelace) போன்ற அறிஞர்கள் கூட இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறனை பிற்காலத்தில் பெறும் என எண்ணியிருக்க மாட்டார்கள். 

AI சார்ந்த ஆராய்ச்சிகள் தொடங்கி 100 ஆண்டுகள் கூட முழுமையாக எட்டாத நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. AI சார்ந்த ஆராய்ச்சியின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக அறியப்படுகிறார் மார்வின் மின்ஸ்கி.

செயற்கை நுண்ணறிவும்... மனிதர்களின் அணுகுமுறையும்...

சமீப நாட்களாக மக்கள் மனநல மருத்துவர்கள் அல்லது மதப் பெரியவர்களிடம் தங்கள் பிரச்னைகளைக் கூறி ஆறுதல் தேடுவதற்கு பதிலாக பிரமுகர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகளான சாட்பாட்களிடம் ஆறுதல் தேடத் துவங்கியுள்ளனர் என்கிறார், ருமேனியாவைச் சேர்ந்த இறையியல் வல்லுநரான மரியஸ் டோரோபன்ச்சு.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டோரோபான்ச்சு, தினசரி ஆன்மீக விஷயங்களில் ChatGPT போன்ற கருவிகளின் வழிகாட்டுதலைத் தேடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.

கொள்கை அளவில் செயற்கை நுண்ணறிவு எந்த மனிதனையும் விடவும், ஒட்டுமொத்த மனிதகுலத்தை விடவும், மேலும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட விதத்திலும் புத்திசாலித்தனமானதாக மாறக்கூடும்," என்று தனது 2022-ம் ஆண்டின் ஆய்வறிக்கையில் டோரோபான்ச்சு குறிப்பிடுகிறார்.

செயற்கை நுண்ணறிவு வழிபாடு:

ஒரு புதிய மத வடிவம்என்ற தலைப்பில் சமீபத்தில் பேராசிரியர் மெக்ஆர்தர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.

அதில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட நூல்களைப் பின்பற்றும் புதிய வழிபாட்டு முறைகள் அல்லது பிரிவுகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, அவரே ChatGPT-யுடம் மதம் சார்ந்த கேள்விகளைக் கேட்டார்."எனக்கு ஒரு புனித நூலை எழுதித்தருமாறு நான் அதனிடம் கேட்டேன். அது 'என்னால் அதைச் செய்ய முடியாது' என்று பதிலளித்தது," என்று பேராசிரியர் மக்ஆர்தர் கூறுகிறார்.

"அதன்பிறகு, ஒரு புதிய மதத்தைத் தொடங்கும் ஒரு இறைதூதரைப் பற்றிய ஒரு நாடகத்தை எழுதித்தருமாறு நான் அதைக் கேட்டபோது, அது அன்பு மற்றும் அமைதியின் கோட்பாடுகளைப் போதிக்கும் ஒரு ஒரு மதத்தலைவர் பற்றிய கதையை உடனடியாக உருவாக்கித் தந்தது,” என்கிறார். "அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது," என்று மேலும் கூறுகிறார் பேராசிரியர் மக்ஆர்தர். ( நன்றி: பிபிசி தமிழ் 30/07/2023 )

செயற்கை நுண்ணறிவு எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்தாலும் பல்வேறு விஷயங்களில் "மனிதனை நெருங்கவோ, மனிதனுக்கு நிகரான ஆற்றல் கொண்டதாகவோ ஆக முடியாது என்பதையும் அறிவியல் உலகம் ஒத்துக் கொள்கிறது.

செயற்கை நுண்ணறிவு வரமா? சாபமா?

1.செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்!..

உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு இது தொடர்பான விவாதக் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது.

 

அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று (18/07/2023) மாலை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரிட்டன் தலைமையேற்று நடத்தியது. கூட்டத்தின் தலைவராக பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணனறிவுத் தொழில்நுட்பத்தின் சாதக, பாதங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குட்டரஸ் பேசும்போது, “செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் சைபர் தாக்குதல்கள் ஏற்கெனவே .நா.வின் அமைதி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது, நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும். இதில், உயிர் சேதங்களும் ஏற்படும். செயற்கை நுண்ணறிவு - சாட் ஜிடிபி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் செய்திகள், உருவங்கள், படங்கள் தவறான தகவல் மற்றும் வெறுப்பை பரப்பி மனித செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்" என்று கூறினார். ( நன்றி: இந்து தமிழ் திசை, 19/07/2023 )

1.      அழிவை ஏற்படுத்தும் அபாயம்

செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

"செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ChatGPTஎன்னும் அரட்டை செயலியை உருவாக்கிய OpenAI இன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind)-ன் தலைமை நிர்வாகி டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (Demis Hassabis) மற்றும் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டரியோ அமோடி (Dario Amodei) ஆகியோர் செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் இந்த பதிவை ஆதரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவினால் என்ன மாதிரியான பேரிடர்கள் ஏற்படும் என்பது குறித்த சில சூழ்நிலைகளை செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மிண்அணு கருவிகளை பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம்.

செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து "பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும்."

செயற்கை நுண்ணறிவின் சக்தி, மிகக்குறைவான கைகளில் அதிக அளவில் குவிந்து, உலக அரசுகள் பொதுமக்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கத் தொடங்கலாம். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவவும் உதவும்.

•Wall-E திரைப்படத்தில் காட்டப்பட்டது போல், மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும்.

அதிபுத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக்கான மையத்தின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான யோசுவா பெங்கியோவும் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்துள்ளார்.

டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், பேராசிரியர் யோசுவா பெங்கியோ, மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் யான் லீகுன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர்களின் அற்புதமான ஆரம்பகட்ட பங்களிப்புக்களுக்காக செயற்கை நுண்ணறிவின் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் மூவரும் கூட்டாக 2018-ம் ஆண்டின் டூரிங் விருதை வென்றனர். இது கணினி அறிவியலில் ஒருவரின் மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

ஆக்ஸ்போர்டின் இன்ஸ்டிடியூட் ஃபார் எதிக்ஸின் மூத்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் எலிசபெத் ரெனிரிஸ், செயற்கை நுண்ணறிவினால் நிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள், மென்பொருட்களும், கருவிகளும் தாமாகவே முடிவெடுக்கும் அளவைப் பரவலாக்கும். அது பாரபட்சமானதாக, வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாம். அதே நேரம் நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள் எடுக்கப்படும் ஆபத்தும் உள்ளது," என்று அவர் கூறினார். அவை, "தவறான தகவல்களின் அளவு மற்றும் பரவலில் மிக மோசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு இதன் மூலம் எதார்த்தத்தை உடைத்து, பொது நம்பிக்கையை சீர்குலைக்கும்."

அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்தது நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவினால் மனித குலத்துக்கு ஆபத்து என்ற செய்தியின் மீது ஊடகங்கள் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.

அந்த கடிதத்தில், "செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் (non human minds)ஒரு கட்டத்தில் மனிதர்களை விட திறமை மிக்கவைகளாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது போன்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என பலர் விமர்சித்துள்ளனர்.

மெட்டாவில் பணிபுரியும் பேராசிரியர் LeCun, மனித அழிவு குறித்த இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவைகளாகவே இருக்கின்றன என்ற கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதே போல் செயற்கை நுண்ணறிவினால் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பல வல்லுநர்கள் முழுமையாக ஏற்கவில்லை. இது போன்ற அச்சம் நம்பக்கத்தகுந்த வகையில் இல்லை என்கின்றனர் அவர்கள். ஏற்கெனவே நாம் எதிர்கொண்டு வரும் சவால்களை முறியடிப்பதற்கான பாதையிலிருந்து இது போன்ற அச்சங்கள் நமது கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

 

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானியான அரவிந்த் நாராயணன், அறிவியல் புனைகதை போன்ற பேரழிவுக் காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என்று பிபிசியிடம் கூறினார்:

 "தற்போதைய செயற்கை நுண்ணறிவின் திறன்கள், இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துமளவுக்கு பெரிய அளவில் ஆற்றல் பெற்றவையாக இல்லை என்கிறார் அவர். மேலும், இது போன்ற அதீத அச்ச உணர்வுகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படப் போகும் சிறிய அளவிலான ஆபத்துக்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களின் கவனம் திசை திருப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ( நன்றி:  பிபிசி தமிழ், 31/05/2023 )

2. வேலை இழப்பு ஏற்படும் அபாயம்!

ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. 

இந்தியாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக இது திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமாக மென்பொருள் புரோகிராமர்கள் உள்ளனர். அவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறுவு கருவிகளான சாட்ஜிபிடி போன்றவற்றின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட் மோஸ்டாக் கூறியிருக்கிறார்.

ஏனெனில், தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

ஒரு கணினியின் முன் அமர்ந்து ஒருவர் செய்யும் வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால், அது மிகப் பெரிய தாக்கம் என்று கூற வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் திறமையான பட்டதாரிகளைப் போல செயலாற்றுகிறது. ( நன்றி: மாலை மலர் 18/07/2023 )

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தனது வாடிக்கையாளர் சேவை பணியாளர்களில் 90 சதவீதம் பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான் (Dukaan) .காமர்ஸ் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனமும் சி...வுமான சுமித் ஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஒரு செய்தி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த பதிவில், “செயற்கை நுண்ணறிவு சாட்போட் காரணமாக எங்களது வாடிக்கையாளர் சேவை குழுவைச் சேர்ந்த 90 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். இது கடினமானதாக இருந்தாலும் அவசியமானதும் கூட.

இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய நேரம் என்பது 1.44 நிமிடங்கள் என்பதில் இருந்து உடனடியாக மாறியது. அவர்களின் குறைகளை தீர்க்கும் கால அளவு என்பது 2 மணி நேரம் 13 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்கள் 12 நொடிகளாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைக்கான செலவின் அளவு 85 சதவீதம் குறைந்துள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார். ( நன்றி: பிபிசி தமிழ் 16/07/2023 )

செயற்கை நுண்ணறிவும்... இந்தியாவும்...

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பற்றி, ஒரு சர்வதேச மாநாடு ஓசை இன்றி நடந்து முடிந்திருக்கிறது.

சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020’ (RAISE 2020) என்ற பொருளில், தொழில் துறை மற்றும் அறிஞர்களுடன் கைகோத்து இந்திய அரசாங்கம் நடத்திய இந்த உச்சி மாநாட்டில், சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் விவாதிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் விற்பன்னர்கள் கலந்து கொண்டு கருத்துகள் தெரிவித்தனர். உலகளாவிய வர்த்தகத் தலைவர்கள், முக்கிய முடுவு எடுப்பவர்கள், அரசுப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பங்கு பெற்றனர். 

ஐந்து நாட்களில்  செ.நு. வழியே உலகை மாற்றுதலில் - நம் முன்னே உள்ள பாதை; 100 கோடி மக்களுக்கு அதிகாரம் வழங்குதல்; மொழிகளுக்கு இடையிலான தடைகளை செ.நு. மூலம் நீக்குதல், தொடர்பு சாதனங்களை இணைத்தல்; unlocking Maps for Societal impact; ஆய்வுக்கூடத்தில் இருந்து சந்தைக்கு (Lab to Market), செ.நு.வால், சுகாதாரத்துறையில் புதுமைகள்; பொறுப்பான செ.நு.வில் தரவுகளின் பங்கு, செ.நு. செயலாக்கத்தில் அரசாங்கத்தின் பங்கு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

மேலும், இதற்கு முன்னர் ஜூன் 2018-ல் - செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம் (National Strategy for Artificial Intelligence) வெளியிடப்பட்டது. இதன்படி, 2035-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சியை, 1.3% உயர்த்துதல்; சுகாதாரம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இடம் நகர்தல் (mobility) ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருதல் என முடிவாயிற்று.

நிதி ஆயோக் அமைப்பின் அப்ரோச் பேப்பர்ஸ்’, ஆரோக்கியமான செ.நு. அமைப்புக்கு, நான்கு முக்கிய பரிந்துரைகளை முன் வைக்கிறது. 1. ஆய்வுகளை மேம்படுத்துதல் 2. பணியாளர் திறன் வளர்த்தல் 3. செ.நு. தீர்வுகளை தகவமைத்தல் 4. பொறுப்பான செ.நு.க்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.

2035-ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்துக்கு, 957 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதல் வருமானம் தருகிற வல்லமை, இந்தியாவின் செ.நு. துறைக்கு இருக்கிறது. ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துகிற ஆற்றல் செ.நு.வுக்கு இருப்பதை உணர்ந்த நிதி ஆயோக், புதிய தொழில் நுட்பங்களின் மீது ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக தேசிய நிகழ்வு (National Program on AI) ஒன்றைத் தீட்டி இருக்கிறது. இதை நோக்கியே, 2018 ஜூன் 4 அன்று, ’தேசிய திட்டம்வெளியிடப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் பயன்கள்...

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பெருகி வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன
மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவத்துறையில்...

AI, மருத்துவத்திலும் கோலூன்றி வருகிறது என நிபுணர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள். இதற்கு AI Therapy என்று பெயர். அதாவது மனநல ஆலோசனைகள் வழங்கும் செயற்கை நுண்ணறிவு.

உங்களுக்கு மன அழுத்தம் அல்லது மனச் சோர்வு இருப்பதை AI-யிடம் தெரிவித்ததும், உங்கள் பிரச்னையை AI பொறுமையாகக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொரு கேள்வியாக அன்போடு கேட்டு, உங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டதும், நீங்கள் சந்திக்கும் சிக்கலை எப்படிக் கையாளலாம் என்று சில வழிமுறைகளைக் கொடுக்கிறது. 

ஆலோசனைகள் வழங்குவதற்கு முன், உங்கள் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்க ஓர் அங்கீகரிக்கப்பட்ட மனநல மருத்துவரை அணுகவும் என்று எச்சரிக்கை செய்யும் AI, தொடர்ந்து மனிதனின் மூளையை, மனதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து அதற்கான உதவிகளை வழங்குகிறது. ;

இந்தியா, உலகளவில் தற்கொலையின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் இங்கு 2.6 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தற்கொலைக்கு முயன்று தோல்வியடையும் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. 60-70 மில்லியன் மக்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள்.

தெருவுக்குத் தெரு மருத்துவமனைகள் இருப்பது போல, எளிதில் அணுகக் கூடிய மனநல நிபுணர்களும் நம் நாட்டில் தேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் உளவியல் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும், ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. 

இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியாவில் வெறும் 9000 மனநல மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். அப்படியானால், சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு 0.75 மருத்துவரே இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் சிகிச்சைக்கான செலவும் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவு மனநல மருத்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

இது குறித்து மன நல மருத்துவர், Dr. கெளதம் தாஸ் சில முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். மனநல மருத்துவம், ஒரு மனிதரின் உணர்ச்சிகள், அறிவாற்றல் மற்றும் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு அதற்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவமாகும். எல்லோரும் நினைப்பது போல, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்னைகளால் மட்டும் உளவியல் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

சில உயிரியல் காரணங்களால் மரபணுவில் ஏற்படும் சில மாற்றங்கள், வாழ்க்கையில் சந்திக்கும் சில அழுத்தங்களால் தூண்டப்பட்டு, உளவியல் பிரச்னையாக வெளிப்படுகின்றன. இந்த வெளிப்பாடு ஒருவரது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் வரலாம். 

சிலருக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டு அதனால் தனக்கோ அல்லது சுற்றி இருப்பவருக்கோ ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் செயல்படும் போது, அதை ஒரு உளவியல் பிரச்னையாக மருத்துவர்கள் கருதுவார்கள். இதில் 5% மக்கள் மட்டுமே கடுமையான உளவியல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். 80% மக்கள் மருந்து மற்றும் உளவியல் ஆலோசனைகள் மூலம் குணப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

மீதியிருக்கும் 15% மக்கள், லேசான உளவியல் பிரச்னைகளைக் குறுகிய காலத்திற்குச் சந்திக்கிறவர்கள். அவர்களுக்கு வெறும் உளவியல் ஆலோசனைகள் வழியாகவே அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்ற மனத்திடத்தைக் கொடுத்துவிட முடியும்.

அப்படிப்பட்ட அந்த 15% மக்களுக்கு மட்டும் வேண்டுமானால் AI மூலம் உளவியல் ஆலோசனைகள், வழிமுறைகள் வழங்கலாம். இருந்தாலும் அவர்களது பிரச்னையின் தீவிரம் குறையாமல் அதிகரிக்கும் போது அந்தச் சமயம் நிச்சயம் ஒரு மனநல மருத்துவரின் தலையீடு இருக்க வேண்டும். ( நன்றி: விகடன், 23/07/2023 )

வேளாண் துறையில்....

தெலுங்கானா மாநிலத்தில் மாநில வேளாண் துறையுடன் இணைந்து உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமான AI பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து உலக பொருளாதார கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய நவீன உலகமய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக இந்தியாவில் மருத்துவத்தில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வணிகம், கல்வி, தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்புத்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலங்கானா மாநில வேளாண் துறையுடன் இணைந்து விவசாயத் துறையில் AI தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 7 ஆயிரம் மிளகாய் பயிரிடும் விவசாயிகளிடம் AI தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து இரண்டாவது கட்ட நடவடிக்கையின் போது 20,000 மிளகாய் மற்றும் கடலை பயிரிடும் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம்  விளைச்சல் அதிகரித்து விவசாயம் நடைபெறுவதற்கு வழி ஏற்படும். இப்படி மண்ணின் தன்மை, நீரின் தேவை, காற்றின் அளவு, மழை காண வாய்ப்பு, விளைபொருளுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான அளவு போன்ற விவசாயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு வழி ஏற்பட்டிருக்கிறது என்றும், மேலும் பருவநிலை மாற்றம் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சவால்களை சந்திப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ( நன்றி: கல்கி ஆன்லைன் 23/07/2023 )

பத்திரிகை துறையில் (பரிசோதனை கட்டத்தில்) ......

பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

 

இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது. இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.

எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும். 

ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது.

கூகுளின் இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திடம் பரிசீலிக்கப்பட்ட கூகுளின் ஏஐ கருவி "ஜெனிசிஸ்" என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது. முன்னரே சில பதிப்பகங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு (content) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்களுக்கு விரைவாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உள்ளடக்கத்தை உருவாக்க, ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் மென்பொருள் கருவி பயன்படுகிறது

உரைகள், படங்கள், ஒலிகள், அனிமேஷன், முப்பரிமாணம் (3D) அல்லது பிற வடிவங்களில் இவற்றின் உள்ளீடுகள் (inputs) மற்றும் வெளியீடுகள் (outputs) இருக்கும்.

இருந்தாலும், இது போன்ற மென்பொருள் கருவிகள், உண்மைக்கு புறம்பான தகவலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியும் திறனும் இவற்றிற்கு இல்லை.

இக்காரணங்களால் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால் கூகுள் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மென்பொருள் கருவிகளில், இத்தகைய பயன்பாட்டு சிக்கல்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் பதிப்பக துறையிலும், செய்தி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் கூகுளின் முயற்சி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. ( நன்றி: மாலைமலர், )

சைபர் கிரைமில் (விரைவில்)...

National Security Advisor (NSA) Ajit Doval on Monday attended the 'Friends of BRICS' meeting in the South African capital of Johannesburg. In the meeting, the issue of cybersecurity was discussed at length. In addition to BRICS, the following Friends of BRICS countries - Belarus, Burundi, Iran, UAE, Saudi Arabia, Egypt, Kazakhstan and Cuba - also participated in the discussions.

Doval also emphasised that the gravity of cyber risks will increase exponentially with the advent of disruptive technologies such as artificial intelligence (AI), Big Data and Internet of Things.

He spoke about the connection between cyber criminals and terrorists, including the use of cyber space for financing, money laundering, radicalizing, lone wolf attacks, recruitment and secured communications.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவிர வாதிகளும், இணையதள குற்றவாளிகளும் பல்வேறு வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு பெரும் தீங்கை ஆற்றி வருகின்றனர். மேலும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் சவாலாக இருக்கின்றனர்.

 

எனவே, அதே AI - பயன்படுத்தி சர்வதேச அளவில் சைபர் குற்றங்களை தடுத்து நிறுத்த விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், AI - தீவிர வாதிகளும், இணையதள குற்றவாளிகளும் தவறாக பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிப்பது, இணையதள ரகசியங்களை வைத்து மிரட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கடந்த 24/07/2023  (திங்கட்கிழமை)அன்று தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற்ற " FRIENDS OF BRICS - ஃப்ரண்ட்ஸ் ஆஃப் பிரிக்ஸ்" (பெலாரஸ்புருண்டி, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, எகிப்து, கியூபா, கஜகஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட) மாநாட்டில் தெரிவித்தார். ( நன்றி: Hindustantimes.com, 24/07/2023 )

செயற்கை நுண்ணறிவும்இஸ்லாமிய வழிகாட்டலும்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த உலகில் கண்டுபிடிப்பாளனாகவோ அல்லது கண்டுபிடித்த சாதனங்களை பயன்படுத்துபவனாகவோ இருக்கிறான். எனவே, இந்த இரு நிலைகளிலும் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளான்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயத்தில் இஸ்லாமிய வழிகாட்டலை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

1. அறிவும்... ஞானமும்...

 وَفَوْقَ كُلِّ ذِىْ عِلْمٍ عَلِيْمٌ‏

கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான். ( அல்குர்ஆன்: 12: 76 )

இந்த இறைவசனத்திற்கு இரண்டு விதமான பொருள்களை திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் தருகின்றனர். ஒன்று:- நேரடியாக இது அல்லாஹ்வையே குறிக்கிறது. இரண்டு:-  சமகாலத்தில் ஒருவர் பெற்றிருக்கும் அறிவு ஞானத்தை விட  இன்னொருவர் கூடுதலாக பெற்றிருப்பார்.

இந்த இரண்டாவது பொருளின் படி அறிவு ஞானம் என்பது விசாலமாகிக் கொண்டே போகிற ஒரு அம்சமாகும். ஒரு காலத்தில் வாழ்பவர்கள் பெற்றிருக்கும் அறிவு ஞானத்தை விட இன்னொரு காலத்தில் வாழ்பவர்கள் கூடுதலான அறிவு ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

எனவே, காலத்திற்கு காலம் அறிவு ஞானம் என்பது விரிவடைந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் நாம் தற்போது செயற்கை நுண்ணறிவு என்பதை உருவாக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். 

2. எல்லாம் அறிந்தவன்...

விந்தையான, வியப்பூட்டும் அரிய கண்டுபிடிப்புகளை தாம் பெற்றிருக்கும் கல்வியால், அறிவு ஞானத்தால் மனிதன் பெறுகிறான் என்பதற்காக அவன் எல்லாம் அறிந்தவனாக ஆகிட முடியாது.

وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ

அல்லாஹ் அனைத்தையும் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். ( அல்குர்ஆன்: 2: 216 )

3. உச்சத்தை அடைந்தவனா?...

 

நவீன சாதனங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்று மனித அறிவு படிப்படியான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் மனிதன் அறிவு ஞானத்தின் உச்சத்தை தொட்டு விட்டான் என்று பெருமை கொள்ள முடியாது.

وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏

இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை”  ( அல்குர்ஆன்: 17: 85 )

4. எல்லைகளுக்கு உட்பட்டே நிற்க வேண்டும்...

மனிதனின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள், சாதனங்கள் என எதுவாக இருந்தாலும் அதற்கென ஒரு எல்லையை அல்லாஹ் வரையறுத்துள்ளான். அந்த வரையறையைத் தாண்டி அவன் செயல் பட கூடாது. அவன் செயல் படவும் முடியாது.

அதை மீறி ஒரு மனிதன் செயல் படுவான் எனில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவனே பொறுப்பாளியாவான். நாளை மறுமையில் அதற்காக நீதி விசாரணை நடத்தப்படும்.

இங்கே அல்லாஹ் அறிவு ஞானத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அவனுடைய முக்கியமான மூன்று உறுப்புகளுக்கு பங்குண்டு என்பதால் அவை ஒவ்வொன்றும் தனித்தனியே விசாரணையை எதிர் கொள்ளும் என்று எச்சரிக்கை செய்கிறான்.

பொதுவாக மனிதன் அறிவு ஞானத்தை கண்களால் பார்த்தும், செவியால் கேட்டும் மனதால் உணர்ந்தும் சிந்தனையின் ஊடாக பெற்றுக் கொள்கின்றான்.

ஆகவே, அவன் கண்டுபிடிக்கும் அறிவியல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் எதுவும் மனித சமூகத்திற்கு பாரிய எதிர் விளைகளை, பாதிப்புகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்கமான) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். ( அல்குர்ஆன்: 17: 36 )

5. மாபெரும் சக்தியாக கருதுவது

செயற்கை நுண்ணறிவு எனும் நவீன இந்த கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் தன்னை மாபெரும் சக்தியாக முன்னிருத்த விளைவது பெரும் ஆபத்தை உண்டாக்கும். மேலும், இறை நிராகரிப்பு எனும் பெரும் பாவத்தின் பக்கம் தள்ளி விடும்.

ஏனெனில், செயற்கை நுண்ணறிவு எனும் இந்த நவீன கண்டுபிடிப்பை மனித சக்தியை விட பன்மடங்கு ஆற்றல் கொண்டதாக நிறுவுவதற்கு "அறிவு சார்" சமூகம் முனைகிறது.

اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏

அறிந்து கொள்ளுங்கள்! அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அவனுக்கே படைப்பாற்றலும், படைத்ததை பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும் சொந்தமாகும். அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன் ஆவான். ( அல்குர்ஆன்: 7: 54 )

மனிதனை விட உயர்ந்த படைப்பு இந்த உலகில் இல்லை.

உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்துப் படைப்புகளும் தனித்தனியே அது சிறந்த படைப்பாகும்.

 

உயிரினங்கள் தாவரங்கள் விலங்குகள் பறவைகள் என ஒவ்வொன்றும் தனித்துவமான படைப்பாகும்.

ஆனால், மனிதனோ ஒட்டுமொத்த படைப்புகளை எல்லாம் விட சிறந்த, அழகிய படைப்பாவான்.

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். ( அல்குர்ஆன்: 95: 4 )

وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். ( அல்குர்ஆன்: 17: 70 )

இந்த உலகில் கோடான கோடி படைப்புகள் இருந்தாலும் மனிதன் மட்டுமே இறைவனின் பிரதிநிதியாவான்.

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً

நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறியதை நினைத்துப் பாருங்கள். ( அல்குர்ஆன்: 2: 30 )

மனிதனை உலகின் பிரதிநிதியாக ஆக்கியதோடல்லாமல் பிரபஞ்சம் முழுவதையும் மனிதனுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் வானம் மற்றும் விண்வெளி பூமி ஆகியவற்றை மனிதனுக்கு  (மனிதன் விரும்பும் வகையில் பயன்படுத்த) வசப்படுத்தியும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தந்துள்ளான்.

وَسَخَّرَ لَـكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ‌ اِنَّ فِىْ 

ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. ( அல்குர்ஆன்: 45: 13 )

அந்த வகையில் AI என்பதை மறுக்கவோ, புறக்கணிக்கவோ இஸ்லாம் கூற வில்லை. மாறாக, எந்த ஒன்றையும் தனக்கும் தான் சார்ந்த சமூகத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்திடும் வகையில் பயன்படுத்தக் கூடாது. மாறாக, பிறருக்கு பயன் தரும் வகையில் ஒரு முஸ்லிம் எல்லா நிலைகளிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

 

 وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ وَاَحْسِنُوْا اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். ( அல்குர்ஆன்: 2: 195 )

அறிவுசார் துறையில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு..

 

ஒரு சுவாரஸ்யமான ஆய்வை அமெரிக்க அறிவியல் வரலாற்றாசிரியர் சார்லஸ் கோல்ஸ்டன் கில்லிஸ்பி செய்தார்.

ஏழாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிவியல் துறையில் பங்காற்றிய அந்த விஞ்ஞானிகளின் பட்டியலைத் தயாரித்து, தற்போதைய சகாப்தத்தின் அறிவியல் புரட்சிக்கு அடித்தளமிட்டார்.

இந்த பட்டியலில் 132 விஞ்ஞானிகள் உள்ளனர், அவர்களில் 105 பேர் இஸ்லாமிய உலகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 10 பேர் இஸ்லாம் அல்லாத உலகத்தைச் சேர்ந்தவர்கள்

அதாவது ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம் ஸ்பெயினின் (கோர்டோவா, கிரனாடா, முதலியன) பல்கலைக்கழகங்களில் தங்கள் கல்வியைப் பெற்றனர் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 90 சதவீத விஞ்ஞானிகள் இஸ்லாமிய உலகில் இருந்து வந்தவர்கள்.விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைக்கான புள்ளிவிவரங்களும் இதேபோல் இருந்தன.

20 ஆம் நூற்றாண்டில், 1981 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, அதிக எண்ணிக்கையிலான அறிவியல் இதழ்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் எந்த இஸ்லாமிய நாடும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டது.

1996ல் உலகம் முழுவதும் முஸ்லிம் எழுத்தாளர்களின் சதவீதம் ஒன்று கூட இல்லை. உலக மக்கள்தொகையில் முதல் பிரிவில் முஸ்லிம்கள் 15 சதவீதமாக இருந்தபோது, ​​அறிவியல் நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாடு 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது,

தற்போது முஸ்லிம் மக்கள் தொகை 22சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் பிரதிநிதித்துவம் அறிவியல் துறைகள் 1 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்துள்ளன.

பாக்தாத் அறிவியல் உலகின் மையமாக இருந்த காலம் ஒன்று இருந்தது. முத்தனப்பி தெருவில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன, அவை புனித குரான் முதல் வானியல், மருத்துவம், கணிதம், வேதியியல் போன்ற புத்தகங்கள் வரை விற்கப்படுகின்றன. மக்கள் தனிப்பட்ட நூலகங்களை வைத்திருந்தனர்.

அறிஞர் கூட்டங்கள் இடைவிடாமல் நடத்தப்படும்; புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய அறிவியலின் வெளிச்சத்தில் புனித குர்ஆன் மீது தீவிர விவாதங்கள் நடத்தப்பட்டன.

இன்று, அல்-ராஸி, ஜாபிர் இப்னு ஹயான் அல்லது அல்-கிண்டி ஆகியோரின் படைப்புகளை எந்த முஸ்லீம் நிறுவனத்திலும், கடையிலும் அல்லது தனிப்பட்ட நூலகத்திலும் காண முடியாது.

சையத் அபுல் ஹசன் அலி ஹஸனி நத்வியின் வார்த்தைகளில் கூறுவதானால், விஞ்ஞான உலகிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்கள், தங்கள் கடினமான ஆராய்ச்சிகளையும், அறிவார்ந்த பண்புகளையும் மறந்து விட்டார்கள் என்பது வரலாற்றில் மிகவும் முரண்பாடான மற்றும் துரதிர்ஷ்டவசமான திருப்புமுனையாகும். மற்றும் முன்மாதிரி மற்றும் பாரம்பரிய மனநிலைக்கு பலியாகிவிட்டார். அதனால்தான் அவர்கள் தங்கள் கால்களை இழந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மேற்கு நாடுகளுக்குப் பின்தங்கினார்கள்.  ( நன்றி:   Konark Publishers  வெளியிட்ட The Scientific Muslim: எனும் நூலில் Understanding Islam in a New Light என்ற பகுதியில் இருந்து.. )

ஒரு முஸ்லிமின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?..

நன்மையான காரியங்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிடுவது இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக உள்ளது. உதவி என்பது பொருள் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது உடல் சார்ந்தும் அமையலாம். உழைப்பு சார்ந்தும் அமையலாம். அறிவு சார்ந்தும் அமையலாம்.

உண்மையான இறைநம்பிக்கை என்பது நற்கருமங்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதும், பாவமான காரியங்களுக்கு உதவிடுவதை நிறுத்துவதும், துணை போகாமல் இருப்பதும் தான். இத்தகையவர்கள்தான் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும். இவர்களைப் பார்த்துதான் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:-

 "இறைநம்பிக்கையாளர்களே, நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். இறைவனை அஞ்சுங்கள், நிச்சயமாக இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்’. (திருக்குர்ஆன் 5:2)

ஒருவன் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

1.       தான் பெற்றிருக்கும் அறிவு ஞானத்தின் மூலம் தான் சார்ந்த சமூகத்திற்கு நற்பலன்களை உருவாக்க வேண்டும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைத்தூதர் ஸுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸபா நாட்டு அரசி குறித்தான செய்திகளை அந் நம்ல் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.

சுருக்கமாக சொல்வதானால் "ஹுத்ஹுத் பறவை தாம் கண்ட காட்சி ஒன்றை ஸுலைமான் அலை அவர்களிடம் சொன்ன தகவலின் அடிப்படையில் ஸபா நாட்டு அரசிக்கு கடிதம் எழுதி ஹுத்ஹுதிடம் கொடுத்தனுப்பி அரண்மனையில் போடச் சொல்லி அங்கு நடப்பவைகளை கண்காணித்து வருமாறு கூறினார்கள்.

அங்கு நடந்தவைகளை கண்காணித்து வந்து அங்கு நடந்தவைகளை சொன்னது. அதில் ஒரு விஷயம் கடிதம் குறித்தான அரசவை பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஆகும்.

அந்த கலந்துரையாடலில் அரச பிரதானிகளின் போர்ப் பிரகடன அறிவிப்பை நிராகரித்ததோடல்லாமல் போரால் ஏற்படும் சமகால பாதகங்களை பட்டியலிடுவார் அந்த அரசி.

தான் பெற்றிருந்த அறிவு ஞானத்தின் வாயிலாக தாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு ஏற்பட இருந்த மாபெரும் அழிவை தடுத்து நிறுத்தினார் அந்த அரசி.

அந்த நிகழ்வின் தொடரில் ஸுலைமான் (அலை) அவர்கள் ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனம் குறித்து ஹுத்ஹுத் சொன்னதை கேட்டு அந்த சிம்மாசனம் ஸபா நாட்டின் அரசி தமக்கு முன் வருவதற்கு முன்னர் தம்மிடம் வந்து சேர வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து தம் சபையில் இருந்த ஆற்றல் மிக்க ஜின்களிடமும் அறிவு ஞானம் நிறைந்த கல்விமான்களிடமும் வேண்டுகோளாய் வைப்பார்கள்.

அப்போது அந்த சபையில் இருந்த கல்விமான் ஒருவர் தாம் அதைக் கொண்டு வருவதாகப் பொறுப்பேற்று  சொன்னது போலவே கொண்டு வந்தும் விடுவார்.

அதன் பிறகு நடந்தவை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பதிவு செய்ததை பார்ப்போம்.

قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَـنْظُرْ اَتَهْتَدِىْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏

(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.

 فَلَمَّا جَآءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِ‌ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ‌ۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَ كُنَّا مُسْلِمِيْنَ‏

ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறதுஎன்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).

 وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِيْنَ‏

அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.

قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا

قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ

قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ

அவளிடம்: இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!என்று கூறினார். (அதற்கு அவள்) இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்எனக் கூறினாள்.  ( அல்குர்ஆன்: 27: - 44 )

இந்த வரலாற்று நிகழ்வுக்கு விளக்கம் தரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் சிலர் ஸபா நாட்டு அரசிக்கும், நாட்டின் அரச பிரதானிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை நஸீபாக ஆக்கியதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று:- ஸபா நாட்டு அரசி தமது அரச பிரதானிகள் கூறிய போர் பிரகடன ஆலோசனையை நிராகரித்தது. இரண்டு:- ஸுலைமான் (அலை) அவர்களின் அரசவையில் இருந்த கல்விமான் கொண்டு வந்து சேர்த்த அரியாசனம்.

தம்மிடம் இருந்த அறிவாற்றல் மூலம் தாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு நன்மையை கொண்டு வந்து சேர்த்ததால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த சமூகத்தை நேர்வழியின் வாசலில் கொண்டு வந்து சேர்த்தான்.

ஆகவே, நம் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு நன்மை அளிப்பதாய் அமைய வேண்டும். அதே போன்று அதைப் பயன்படுத்தும் நாம் நன்மையான காரியங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுக்கான விதை...

In addition artificial intelligence is actually not something new in the Islamic world. Long before the introduction of modern civilization, it is described in the Qur'an that the basic artificial intelligence has been carried out by Samiri as mentioned in the QS. Thaha; 87-88.

சமீபத்திய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு என்பது இஸ்லாத்திற்கு ஒன்றும் புதிதல்ல. மாறாக, எவ்வித நவீனமும் தோன்றாத காலத்திலேயே செயற்கை நுண்ணறிவுக்கான விதை இவ்வுலகில் தோன்றியதாக அல்குர்ஆனில் தாஹா அத்தியாயம் 77 மற்றும் 78 - வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ

உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார  (ஆபரண) ங்களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை (க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான் என்று அவர்கள்  கூறினார்கள்.

 فَنَسِىَفَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி)  வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட)  சிலர் இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்;  ஆனால் அவர் இதை மறந்து விட்டார் என்று சொன்னார்கள்.

மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது.

மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செளியுங்கள்என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு இருந்தது.

அதேவேளை அவர்கள் மாட்டையும் நேசித்தனர். மூஸா நபி சமூகத்தில் ஸாமிரி என்ற ஒருவன் இருந்தான். இந்த ஸாமிரி என்பவன் மூஸா நபியுடன் உரையாடிக் கொண்டிருந்த ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடிபட்ட மண்ணை எடுத்து வைத்திருந்தான். மூஸா நபி தலைமைப் பொறுப்பை ஹாரூண் நபியிடம் கொடுத்துவிட்டு, அல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் சென்று விட்டார்கள்.

அப்போது இந்த ஸாமிரி, மக்களின் நகைகளையும் அணிகலன்களையும் வாங்கினான். அவற்றை உருக்கினான். ஒரு காளை மாட்டை சிலை வடித்தான்.

அதன் மீது ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி தடம்பட்ட மண்ணைப் போட்டான். ஒரு அதிசயம் நடந்தது. அந்தக் காளை மாட்டுச் சிலை மாடு போன்று கத்தியது. அதற்கு சதையும் உண்டானது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஏமாந்தனர். அதிசயங்கள் ஆதாரமாகாது

அல்லாஹ் சோதிப்பதற்காக கெட்டவன் மூலமாகக் கூட அதிசயத்தை வெளிப்படுத்தலாம். மக்கள் அந்த காளை மாட்டுச் சிலையை வணங்க ஆரம்பித்தனர். ஹாரூன் நபி இது என்ன சிலை? அல்லாஹ் சோதிக்கின்றான். வழிதவறி விடாதீர்கள்என்று எடுத்துச் சொன்னார். ஆனால் கேட்கும் நிலையில் அவர்கள் இருக்கவில்லை. மாட்டின் மீதுள்ள மோகம் அதிகரித்தது. ஹாரூன் நபியைக் கொலை செய்யவும் முற்பட்டனர்.

மூஸா நபிக்கு அல்லாஹ் நடந்ததைச் சொன்னான். ஆத்திரப்பட்ட அவர் தன் சமூகத்திடம் வந்தார். ஹாரூன் நபி மீது கோபப்பட்டு விசாரித்தார். அவர் நடந்ததை விவரித்தார்.

மூஸா நபி, ஸாமிரியை அழைத்து விசாரித்தார். அவனைக் கண்டித்தார். நீ எங்கு சென்றாலும் தீண்டாதேஎன நீ கூறும் நிலைதான் இருக்கும். நீ வணங்கிய உனது கடவுளைப் பார்எனக்கூறி அதை எரித்து அதைக் கடலில் தூவினார். காளை மாட்டுச் சிலைக்குக் கடவுளின் தன்மை இல்லை என்பதை நிரூபித்தார்

இந்த சம்பவம் அடங்கிய செய்திகள் திருக்குர்ஆனில் பின்வரும் இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 20:83-98, 7:148-149, 7:138. )

எனவே, நம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய வழிகாட்டலை அறிந்து அதன் மூலம் செயல்படுவோமாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment