Thursday, 17 August 2023

சீர் திருத்தப்பட வேண்டிய சிறார் பருவம்!

சீர் திருத்தப்பட வேண்டிய சிறார் பருவம்!


நாங்குநேரி பள்ளிக்கூடத்தில் படித்து வரும் பழங்குடியின +2 மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை ஆகியோர் சக பள்ளிகூடத்தில் படிக்கும் மேல்ஜாதி மாணவர்களால் வீடு புகுந்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த தருணத்தில் பொதுவாக சிறார்களின் சீர்திருத்தம், சிறார் நலன் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

நமது வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் குடும்பத்திற்கும்; சமுதாயத்திற்கும் ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள், நாளைய நமது  சமூகத்தின் ,நாட்டின் தலைவர்களாக உருவாக வேண்டியவர்கள்.

நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இளமைப் பருவம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலை என்று . கூறுகிறது 

ஆனால் நாட்டின் தேசிய குற்றப் பதிவேடு புள்ளிவிவரங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின்  எண்ணிக்கை பெருகி வருவதாக தெரிவிக்கின்றன.  இது ஒரு அபாய அறிவிப்பாகும்.

இந்திய துணைக் கண்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு குற்றச் செயல்கள் பெருகி, இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகிறார்கள். 

எந்தக் குழந்தையும் பிறக்கும்போது குற்றவாளியாக பிறப்பதில்லை. குடும்பத்தில் அல்லது சமூகத்தில் நிலவுகிற குறிப்பிட்ட சூழல்களில், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால், அக மற்றும் புறச் சூழல்களின் காரணமாக குற்றவாளிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.

வழிப்பறி, செயின் அறுப்பு, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, பாலியல் சித்திரவதைகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் இளங்குற்றவாளிகள் ஈடுபடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 16 முதல் 18 வயதுடையவர்களே!.  என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தருகிறது அந்த புள்ளி விவரங்கள்.

இளங்குற்றவாளிகள் உருவாக காரணமாக இருப்பது என்னென்ன ?

1.குடும்பம்:- குடும்பம் என்பது சமூக அமைப்பில் ஒரு முக்கிய அலகு. இளம் குற்றவாளிகள் உருவாவதற்கும் குடும்பம் என்பது  முக்கிய காரணமாகும். குடிகார தந்தை, குழந்தைப் பராமரிப்பின்மை, தாய் தந்தையரின் கட்டுப்பாட்டு குறைவு; சிதைந்த குடும்பம், குடும்பத்தில் நிலவும் வறுமை, வசதியின்மை.

2. அடிப்படை கல்வி இன்மை:- அனைவருக்கும் கல்வி, சமமான கல்வி, முறையான கல்வி, உடை, ஆரோக்கியமான உணவு, தனிமை போன்ற காரணங்கள் இளங்குற்றவாளிகள் உருவாவதற்கு மற்றொரு அடிப்படையாக இருக்கிறது.

3.தவறான புரிதல்:- வீரம் என்பது யாரையும் தாக்கி, தூக்கி அடிக்கும் துணிச்சல் என்று கருதுகிறார்கள். வன்முறையை தூண்டும் திரைப்படங்கள், ஆபாச திரைப்படங்கள், வீடியோ கேம் கம்ப்யூட்டர் கேம் ஆகியவற்றில் பெரும்பகுதி நேரத்தை செலவிடும் இளைஞர்கள் அங்கிருந்துதான் முதலில் தங்களது வன்முறை சிந்தனையை பெறுகிறார்கள். 

4. நுகர்வு கலாச்சாரம்:- எந்தப் பொருளையும் வாங்குவது, எல்லாவற்றையும் அடைவது எனும் நுகர்வு வெறி அதிகமாக அதிகமாக, அதனை நிறைவேற்றுவதற்கான பணம் வீட்டில் கிடைக்காத போது, அதனை சாதித்துக் கொள்ள வெளியே திருடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

5. சமூக அமைப்பு:- நீதி குறைந்த சமுதாயமானது பல குழந்தைகளை தெருவிற்கு வரும் நிலைக்கு  தள்ளிவிடுகிறது. சமத்துவமற்ற சமூக அமைப்பு சமூக வாழ்வில் ஒரு குற்றவியல் சார்ந்த தன்மையை உருவாக்குகிறது.

6. ஊடகங்கள் & போதைப்பழக்கம்:-  சமூக சிந்தனையற்ற திரைப்படங்கள்; வன்முறை வெறி இளஞ்சிறார்கள் மத்தியில் உருவாவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுகிறது. பெண்களை போகப்பொருளாக காட்டும் ஆபாச திரைப்படங்கள் அவனது காம இச்சையை தூண்டி விடுகிறது. நாட்டில் மதுபான விற்பனையை அரசே நடத்துவதால் சிறார்கள் தடம் புரளும் அபாயம் உள்ளது.

மதுவின் போதை சமூகக் குற்றங்கள் செய்வதற்கு ஒரு துணிச்சலை தருகிறது. சின்னத்திரையிலும் வரம்பற்ற வன்முறை காட்சிகள், பெண்களை போகப் பொருளாகக் காட்டும் ஆபாச ஆடல் பாடல் குத்தாட்டம்; வசன அமைப்புகள், காட்சி ஊடகங்கள் சமூகத்தில் இளம் குற்றவாளிகள் தழைத்தோங்கி வளர்வதற்கு உரமாகப் பயன்படுகின்றன.

தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் என்றால், வட இந்தியாவில் மதக் கலவரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

சிறு வயது முதலே சாதி வெறி, மத வெறி சூழலில் வளர்க்கப்படும் சிறுவர்கள் பெரும்பாலும் சிறார் குற்றவாளிகளாக பரிணமிக்கிறார்கள்.

ஒருவனுடைய உடலமைப்பில் காணப்படும் 16- விதமான மாற்றங்கள்தான், அவன் குற்றவாளி என்பதற்கான அடையாளம் என இத்தாலிய குற்றவியல் அறிஞரான சீஸர் லம்ப்ரசோ கூறுகிறார்.

குற்றவியல் அறிஞர் என்ரிகோபெர்ரி கூறும்போது, ”உடற்கூறினை வைத்து மட்டுமே ஒருவரை குற்றவாளி எனக்கூறிவிடமுடியாதுகுற்றவாளிகளை 1) பிறப்பிலேயே குற்றவாளி, 2) அவ்வப்பொழுது குற்றம் புரிபவன் 3) தீவிர உணர்ச்சி வசப்பட்ட நிலையில் குற்றம் புரிபவன் 4) மன நலம் குன்றிய நிலையில் குற்றம் புரிபவன் 5) குற்றச்செயலில் ஈடுபடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் என வகைப்படுத்துகிறார்.

''ஒருவன் தான் சார்ந்த சமூகத்தில் பலதரப்பட்ட குழுவினருடன் பழகும் போது  குற்றச்செயல்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறான்என்று அறிஞர் எட்வின் சதர்லாண்ட் விளக்கம் அளிக்கிறார்.

தமிழ்நாடு...?

கல்வி, விழிப்புணர்வு, வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் முன்னேறிய மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டில் சிறார் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் மூன்று ஆயிரத்திற்கும் சற்று அதிகமான சிறார்கள் காவல் துறையினரிடம் பிடிபடுகின்றார்கள்.

2019 & 2020 ம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில் "சிறார் குற்றங்கள்" அதிகமாக நிகழ்ந்த பெருநகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் பெற்றுள்ளது எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறார் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரே பெருநகரமாக சென்னை விளங்குகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

நம் நாட்டில் சிறார்கள் நிகழ்த்திய விபத்துகளில் 22% சதவீதம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் (2016 - 2020) கொடுங்குற்ற வழக்குகளில் தமிழக சிறார்களின் பங்களிப்பு என்பது மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதாக 2016 -ல் 48, 2017 -ல் 53, 2018 - ல் 75, 2019 - ல் 92, 2020 - ல் 104 குற்ற வழக்குகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் கொரோனா பெருந்தொற்று முதல் அலையின் போது (2020 -ல்) பொதுமுடக்கம் போடப்பட்டு அனைவரும் தத்தமது வீடுகளில் முடங்கி இருந்த நேரத்தில் 29,768 குற்ற வழக்குகளில் 35,352 சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9,287 திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள். 937 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 981, கொலை முயற்சி வழக்குகள், 842 கொலை வழக்குகள் என 12047 குற்ற வழக்குகளில் சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

விசாரணையும்... தண்டனையும்...

இப்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கு ஏனைய குற்றவாளிகளைப் போல காவல் நிலைய நடவடிக்கை, சட்ட நடவடிக்கை என எதுவுமே இல்லை.

 மாறாக, "இளைஞர் நீதிச் சட்டம்" எனும் பெயரில் தனிச் சட்டமும், அதை விசாரிக்க "இளைஞர் நீதிக் குழுமம்" எனும் பெயரில் தனி விசாரணை அமைப்பும் இருக்கின்றன.

இளைஞர் நீதிக் குழுமம் அனுமதி வழங்கினால் மட்டுமே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி விசாரணை நடத்த முடியும் என இளைஞர் நீதிச் சட்டம் கூறுகிறது.

ஓரிரு குற்றங்களில் மட்டுமே குற்றவியல் சட்டத்தின் படி விசாரணை நடத்த இளைஞர் நீதிக் குழுமம் அனுமதி வழங்குகிறது.

பெரும்பாலான சிறார் குற்றங்களை "இளைஞர் நீதிக் குழுமமே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பெரும்பாலான சிறார்கள் கூர்நோக்கு இல்லங்களிலும், குறைவான சிறார்கள் சிறப்பு இல்லங்களிலும் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும், ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகின்றனர்.

 

கூர்நோக்கு இல்லங்கள்?

சிறுவர் சீர்திருத்த சிறை என்பது சிறுவர் சீர்திருத்த பள்ளி என்று மாறி தற்போது கூர் நோக்கு இல்லம் என்று அழைக்கப்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டு இங்கு தங்க வைக்கப்படும் சிறார்களுக்கு மனநல மற்றும் கவுன்சிலிங் வகுப்புகள் நடத்தப்பட்டு நல்வழிப்படுத்தி சக சமுதாயத்தில் இணைந்து வாழ வழி செய்ய வேண்டும் என்பதே "இளைஞர் நீதிச் சட்டத்தின்" நோக்கமாகும்.

ஆனால், கள நிலவரம் என்னவென்றால் இளைஞர் நீதிச் சட்டம் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை. மாறாக, கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருந்த பல சிறார்கள் காலப் போக்கில் ரௌடிகளாக உருவாகுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். ( நன்றி:- Tnpsc thervupettagam.com 09/02/2022 )

சட்டத்தில் மாற்றம் வேண்டுமா?

ஒரு குழந்தை தானாக ஒரு குற்றத்தைச் செய்வது என்பது வேறு விஷயம். ஒரு குழுவோடு இணைந்து செயல்படுவது என்பதை மிக முக்கியமானதாகப் பார்க்க வேண்டும். 2000 ஆம் ஆண்டில் இளம் சிறார் நீதிச் சட்டத்தை (Juvenile Justice Act) அரசு கொண்டு வந்தது.

அதில், 2006 ஆம் ஆண்டில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை சட்டத்துக்கு முரண்பட்டவர்களாகத்தான் பார்க்க வேண்டும். அதனால் தான் குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்களின் மனநலம், உடல்நலம், கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவர்களை மாற்றுவதற்கான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஒருமுறை குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாகப் பார்க்கும் மனநிலை உள்ளது.  நிர்பயா வழக்கின் குற்றவாளிக்கு உரிய வயது வந்த பிறகு தூக்கில் போட்டனர். எனவே, குற்ற வழக்குகளில் அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது" என்கிறார் எவிடென்ஸ் கதிர். ( நன்றி: பிபிசி தமிழ், 23/11/2021 )

புதிய மசோதா சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா2014 என்ற புதிய மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி, 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் புரிந்துள்ள குற்றங்கள் கொடூர குற்றமாக இருப்பின்...அவர்கள் சிறார் என்ற மன நிலையில் செய்தனரா அல்லது இளைஞர் என்ற மன நிலையில் செய்தனரா?

என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பின் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்புவதா அல்லது பெரிய குற்றவாளிகளைப்...போன்று தண்டிப்பதா?என்பதை சிறார் சீர்திருத்த வாரியம் முடிவு செய்யும். புதிய திருத்தத்தின் படி 7-ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ தண்டனை என்கிற பெயரில் பெரியவர்களோடு சேர்த்து சிறை வைக்காமல், அதே கால அளவில் இவர்களுக்கென்றே தனிப்பட்ட முறையில், மறு வாழ்வினை ஏற்படுத்த, திறந்த வெளிச்சிறையில் தொழிற்பயிற்சி அளிக்கலாம். ( நன்றி: தினமலர், 13/10/2015 )

 

தீர்வு என்ன?

1.ஆபாசச் சீரழிவுகள், வன்முறை ஆகியவற்றைக் கொண்ட திரைப்படங்கள், ஆபாசப் படங்கள், வன்முறையை ஊக்குவிக்கும் விளையாட்டுக்கள், மற்றும் கேம்கள், இணைய விளையாட்டுக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். பெருகி வரும் இளம் குற்றவாளிகளை உருவாக்கும் சமூக அமைப்பை மாற்றாமல் இதற்கு ஒரு போதும் விடிவு காண முடியாது.

2.குழந்தைகள் என்றும் தங்கள் மீதான அன்புக்காகவும் கவனத்திற்காகவும் ஏங்குகின்றன. அவர்களுக்கான போதுமான அன்பையும் கவனத்தையும் பெற்றோர்கள் அளிப்பதற்கு முன் வர வேண்டும்.

எங்கோ ஒரு ஊரில், ஏதோ ஒரு சமூகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக நாம் எளிதாக கடந்து விட முடியாது. மேலும், நமது சமுதாய சிறார்கள் அப்படியெல்லாம் செய்பவர்கள் இல்லை என்று அச்சமற்று இருக்கவும் முடியாது. ஏனெனில், வாழும் சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

என்றாலும், சிறார்களுடனான நம் உறவுகள், கவனக்குவிப்புகள் எப்படி இருக்க வேண்டும் என நாம் இஸ்லாமிய வழிகாட்டலை அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

1.அறிவுரை எனும் மகத்தான ஆயுதம் எடுப்போம்!!

முன்பொரு காலத்தில் லுக்மான் (அலை) என்றொரு அறிஞர் வாழ்ந்து வந்தார். இவர் அடிமையாகவும் கருப்பராகவும் இருந்தார். ஆனால் அவர் ஞானம் மிக்கவராக இருந்தார். இஸ்லாம் நிறங்களைப் பார்க்காது அவரின் அறிவும் ஞானமும் அவருக்கு உயர்வைக் கொடுத்தது. அடிமையாக இருந்த அவர் தனது ஞானத்தால் உயர்வு பெற்றார்.

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார்.

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (13) وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ (14) وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (15) يَابُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16) يَابُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (17) وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19)

என்னருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிடாதே! இணை வைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு அடியான் செய்யும் மிகப்பெரும் அநியாயமாகும்.பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்! உனது பெற்றோர்கள் உனக்காகப் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார். உன் தாய் கஷ்டத்தின்மேல் கஷ்டத்தை அனுபவித்து உன்னைச் சுமந்தாள். கஷ்டப்பட்டு உன்னைப் பெற்றெடுத்தாள். அதன்பின்னும் இரண்டு வருடங்கள் உனக்குப் பாலூட்டினாள். எனவே அல்லாஹ்வுக்கும் நன்றியுடையவனாக இரு! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துபவனாக இரு!

என்னருமை மகனே! நீ செய்வது கடுகைப் போன்ற சிறிய செயலாக இருந்தாலும் அதை நீ பூமியிலோ வானத்திலோ பாலைவனத்திலோ யாரும் பார்க்காத வண்ணம் செய்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். எனவே தனியாக இருக்கிறோம், யாரும் பார்க்க மாட்டார்கள் என்று பாவம் செய்துவிடக் கூடாது. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இதை நீ மறந்துவிடக் கூடாது!

“என்னருமை மகனே! தொழுகையைப் பேணி தொழுதுவா! நன்மையை ஏவு, தீமையைத் தடு! இதனால் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்துக் கொள்! இதில் நீ பின்வாங்காதே! நீ பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! மக்களில் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை விட்டும் உன் முகத்தை திருப்பி விடாதே! அல்லாஹ் பெருமைப் பிடித்தவர்களை விரும்புவதில்லை.( மக்களுடன் சராசரியாக சாமானியமாகப் பழக வேண்டும்)

நீ நடந்தால் அந்த நடை நடுநிலையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது சப்தத்தை உயர்த்திப் பேச வேண்டாம். கழுதை கத்துவதைப் போல் கத்த வேண்டாம். கழுதையின் சப்தம் யாருக்கும் பிடிக்காதல்லவா?

இவ்வாறு லுக்மான் (அலை) தமது மகனுக்கு அறிவுரைக் கூறினார் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது அருள் மறையில் அவர் பெயரிலேயே ஒரு அத்தியாயத்தை இறக்கியருளி மேற்கூறிய அவர்களின் அறிவுரைகளை இடம் பெறச் செய்திருக்கின்றான்.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் எதுவென்றால் சிறு பிராயத்திலேயே அறிவுறுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சம். சக மனிதனை மனிதனாக பார்ப்பது, சக மனிதனை மதிப்பது, சக மனிதனை நேசிப்பது, சக மனிதனை மனித நேயத்துடன் நடத்துவது என்பது தான்.

லுக்மான் (அலை) அவர்கள் தமது மகனுக்கு கூறிய அறிவுரையில்...

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18)

"நீ பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! மக்களில் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை விட்டும் உன் முகத்தை திருப்பி விடாதே! அல்லாஹ் பெருமைப் பிடித்தவர்களை விரும்புவதில்லை. மக்களுடன் சராசரியாக சாமானியமாகப் பழக வேண்டும்!"

இன்று இது போன்ற அறிவுரை சிறார்களுக்கு மிகவும் அவசியமாகும்.

சிறார் பருவம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பருவம் என்பதையும், அந்த பருவத்தில் இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவங்கள், கொள்கைகள் போன்றவற்றை அவர்களுக்கு கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பதையும் பின் வரும் நபி (ஸல்) அவர்களின் வழியின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ

 يَا غُلَامُ أَوْ يَا غُلَيِّمُ أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ فَقُلْتُ بَلَى فَقَالَ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ وَإِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ فَلَوْ أَنَّ الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَإِنْ أَرَادُوا أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்! என்று கேட்டார்கள்.

நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள் “1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.

4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.

 6. அறிந்து கொள்! முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!

 

 7. அவ்வாறு தான் முழு மனித சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது.

8. அறிந்துகொள் சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக் காண்பாய்!

9. திண்ணமாக! அல்லாஹ்வின் உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக, மகிழ்ச்சி என்பது சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது! திண்ணமாக, இலகு என்பது கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது!என்று கூறினார்கள்.                              ( நூல்: திர்மிதீ )

இது சிறுவராயிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்த அடிப்படை மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த உம்மத்துக்கும் தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

هذا الحديث شرحه الحافظ ابنُ رجب الحنبليُّ في كتابه "جامع العلوم والحكم" شرحًا عظيمًا، ومما جاء في كلامه - رحمه الله -: "هذا الحديث تضمَّن وصايا عظيمةً، وقواعدَ كليةً من أهمِّ أمور الدين!".

இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகிற ஹாஃபிழ் இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் மகத்தான பல கருத்துக்களை பொதிந்திருக்கின்றது. மார்க்கத்தின் பல கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதை அமைந்திருக்கின்றது
                               ( நூல்: ஜாமிவுல் உலூமி வல் ஹிகம் )

قوله: ((احفظ الله)): يعني احفظ حدودَه وحقوقه، وأوامره ونواهيَه، وحفظُ ذلك هو الوقوف عند أوامره بالامتثال، وعند نواهيه بالاجتناب، وعند حدوده فلا يتجاوز ما أمر به وأذن فيه إلى ما نهى عنه، فمن فعَلَ ذلك فهو من الحافظين لحدود الله،

“1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான்.

அல்லாஹ்வின் கட்டளைகளை, கடமைகளை, ஏவல்களை பேணுகிற விஷயத்தில் அக்கறை காட்டுவது.

அவன் விலக்கியிருக்கிற அம்சங்களில் இருந்து விலகியும், வரம்பு மீறாமலும் வாழ்வது. அப்படி வாழ்கின்றவர்களை அல்லாஹ் பாதுகாப்பான்.

அல்லாஹ் வெற்றி பெற்ற நல்லடியார்கள், சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற நல்லடியார்கள் குறித்து அல்குர்ஆனில் புகழாரம் சூடுகிற போது அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணுதலோடு கடைபிடித்தவர்கள்என்று கூறுகின்றான்.

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ()

மேலும், அவர்கள் தங்கள் வெட்கலத்தலங்களை அல்லாஹ் தடுத்தவற்றில் இருந்தும் பாதுகாத்துக் கொள்வார்கள்”.                         ( அல்குர்ஆன்: 23: 5 )

وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ()

மேலும், தங்களுடைய தொழுகைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வார்கள்”.                                               ( அல்குர்ஆன்: 23: 9 )

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ () هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ ()

மேலும், சுவனம் இறையச்சம் கொண்டவர்களின் அருகில் கொண்டு வரப்படும். சிறிதளவு தூரம் கூட இருக்காது! (அவர்களை நோக்கி கூறப்படும்) இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக்கூடியவராகவும், (அல்லாஹ்வின் கட்டளைகளை, வரம்புகளை) மிகவும் பேணுதலோடு கடைபிடித்து வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் உரியது!                    ( அல்குர்ஆன்: 50: 31, 32 )

அல்லாஹ் மேற்கூறிய வசனங்களின் மூலம் நான்கு விஷயங்களை வலியுறுத்துகின்றான். ஒன்று தொழுகையை பேணித்தொழுவது, இன்னொன்று மர்ம உறுப்புக்களை ஹராமானதிலிருந்தும் பேணிப் பாதுகாப்பது, அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடப்பது, விலக்கல்களை விட்டும் தவிர்ந்து வாழ்வது.

ஆனால், இன்று உம்மத்தில் இந்த உயரிய அறிவுரை சிறார்களைச் சென்று சேர்ந்திருக்கின்றதா? சிறார்களின் தொழுகையின் நிலை எவ்வாறு இருக்கின்றது? சிறார்கள் ஹராமானதில் இருந்தும் தம் மர்ம உறுப்புக்களை பாதுகாக்கும் சூழல் இருக்கின்றதா?

சிறார்கள் இறைவனின் ஏவல்களை ஏற்று நடக்கின்றார்களா? விலக்கல்களில் இருந்தும் விலகி வாழ்கின்றார்களா? நாம் அவர்களின் கவனத்திற்கு இதை ஏன் கொண்டு செல்லவில்லை என்று நாம் ஒவ்வொருவரும் சுயமே இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்வோம்.

2.ஒழுக்கமும்... கருணையும்...

روى الترمذي (1920) عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ شَرَفَ كَبِيرِنَا

சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு சுஅய்ப் (ரழி) அவர்கள் தமது பாட்டனார் கூறியதாக கூறினார்கள். (அபூதாவூத் 4943, திர்மிதி : 1920)

சிறார்களுக்கு இரக்கம் காட்டுவது என்றால் அவர்கள் தவறு செய்யாமலிருக்க ஒழுக்க நெறிகளை வழிகாட்டுவதும், தவறிழைத்து விட்டால் அன்போடு அரவணைத்து சுட்டிக் காட்டி தவறிலிருந்து மாவில் சிக்கிய முடியை வெளியே எடுப்பது போல இலகுவாக வெளியே கொண்டு வருவதும் தான்.

இஸ்லாம் சிறுவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மிக மிக வலியுறுத்துகிறது.

பருவமடையாத சிறுவர்கள் கூட வீட்டுக்கும் பெற்றோரின் அறைக்கும் அனுமதி கேட்டே நுழைய வேண்டும்என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (58)

وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (59)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் லுஹர்நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன். ( அல்குர்ஆன்: 24: 58, 59 )

அப்பாவிச் சிறுவர்களின் அப்பாவித் தனத்தை சில பெரியவர்கள் பயன்படுத்துவதனாலேயே சிறுவர்கள் பலர் கெடுக்கப்படுகின்றனர். பரவலாக நோக்கும் போது பெரும்பாலான சிறுவர்கள் தூர அன்னியவர்களை விட மிக நெருக்கமான உற்றார், உறவினர் அல்லது மிக பக்கத்திலுள்ள மிக நம்பிக்கையுடையோர்களால் தான் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் சிறுவர்களுக்கு அன்பு செலுத்துவதை அவர்கள் தனது மகனுடன் நடந்துகொண்ட முறைகளும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் முறைகளை அவர்கள் தமது தகப்பனாருடன் நடந்து கொண்ட முறைகளும் எமக்குப் படிப்பினையாக உள்ளன.

தனது தந்தையைப் பாவத்திலிருந்து பாதுகாக்கும் போது யா அபத்தீஎன் தந்தையே! என்றுதான் அன்பாக - மரியாதையாக அழைத்தார்கள்.

தமது மகனை அழைக்கும் போது "யா புனைய்ய" என்று கருணையோடு தான் அழைத்தார்கள்.

தந்தைக்கு ஒரு நல்ல மகனாக, மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள்.

3. நெருக்கமான இறுக்கமான உறவு

நபி (ஸல்) அவர்கள் அனைத்துச் சிறுவர்-சிறுமியருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்கள். சிறுவர்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறுவார்கள். அவர்களுடன் உரையாடுவார்கள். அவர்களுக்கு துஆச் செய்வார்கள். சிறுவர்கள் உரிமையுடன் தன்னுடன் பழகுவதற்கு இடமளிப்பார்கள். இந்த உறவின் நெருக்கத்தின் காரணமாக தொழும் போது கூடக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு தொழுதுள்ளார்கள்.

حدثنا أبو قتادة قال: “خرج علينا النبي وأمامه بنت أبي العاص على عاتقه فصلى، فإذا ركع وضعها وإذا رفع رفعها.”

அபூகதாதா அல்அன்ஸாரி(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;

உமாமா(ரழி) அவர்களைச் சுமந்து கொண்டு தொழுபவராக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். (உமாமா நபியவர்களது பேத்தியாவார்கள். நபியவர்களின் மகள் ஸைனப்(ث) அவர்களது குழந்தையே உமாமாவாகும்.) ஸுஜூது செய்யும் போது பிள்ளையைக் கீழே வைப்பார்கள். எழும் போது சுமந்து கொள்வார்கள். (புகாரி)

அறிவுரைகளின் அனுபவம் என்ன செய்யும்?

சிறார்களாக இருக்கும் போது  பெற்றுக் கொள்கிற அறிவுரைகளால் சீர்திருத்தம் பெற்றவர்களே பின்நாளில் வாழ்நாளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் போதும் தெளிவான பாதையில் பயணிக்கின்றார்கள். அது போன்றே சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை முன்வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சமூகத்தின் கட்டமைப்பு காத்திட உதவுகின்றார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களின் தனிக் கவனத்தைப் பெற்று, அறிவுரைகளால் செதுக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்னாளில் இந்த உம்மத்தின் மகத்தான மனிதராக மாற்றம் பெற்றார்கள்.

அலீ (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் போது சீரிய சிந்தனையோடு செயல்பட்டு பெரும் பிளவு ஒன்றில் இருந்து இந்த உம்மத்தை காப்பாற்றினார்கள்.

أن عبد الله بن عمر رضي الله عنه كان يصلي خلف الحجاج بن يوسف الثقفي، وكذا أنس بن مالك، وكان الحجاج فاسقاً ظالماً،

இப்னு உமர் (ரலி) அவர்களும், அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் பின்னால் நின்று தொழுதிருக்கின்றார்கள். ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் அதீதமான ஆட்சியாளராக அறியப்பட்ட அந்த குழப்பான கால கட்டத்திலும் தெளிவாக அவர்களால் இயங்க முடிந்தது.

وفي الصحيح أن عثمان رضي الله عنه لما حصر صلى بالناس شخص، فسأل سائل عثمان: إنك إمام عامة وهذا الذي صلى بالناس إمام فتنة؟ فقال

يا ابن أخي، إن الصلاة من أحسن ما يعمل الناس، فإذا أحسنوا فأحسن معهم وإذا أساءوا فاجتنب إساءتهم

அப்துல்லாஹ் இப்னு அதீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டில் சிறைவைக்கப்பட்டு முற்றுகையிட்டிருந்த நேரத்தில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அப்போது உஸ்மான் (ரலி) அவர்களிடம் இந்த கலகக்காரர்களின் பின்னால் நின்று தொழலாமா?” என்று வினவினார்.

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் என் சகோதரனின் மகனே! மனிதர்கள் செய்யும் அமல்களில் மிகவும் அழகிய அமல் தொழுகைதான். உன்னோடு நல்ல முறையில் நடந்து கொள்பவர்களோடு நீயும் நல்ல முறையில் நடந்து கொள். உன்னோடு தீய முறையில் நடந்து கொள்பவர்களோடு நீ அவர்களுக்கு தீங்கு செய்வதில் இருந்தும் தவிர்ந்து வாழ்ந்து கொள்! அவ்வளவு தான். மற்றபடி தொழுகையை அவர்களோடு சேர்ந்தே நிறைவேற்றுஎன்று பதில் கூறினார்கள்.

بعث به الامام عليّ كرّم الله وجهه ذات يوم الى طائفة كبيرة منهم فدار بينه وبينهم حوار رائع وجّه فيه الحديث وساق الحجة بشكل يبهر الألباب..

ومن ذلك الحوار الطويل نكتفي بهذه الفقرة..

سألهم ابن عباس:

" ماذا تنقمون من عليّ..؟"

قالوا:

" ننتقم منه ثلاثا:

أولاهنّ: أنه حكّم الرجال في دين الله، والله يقول ان الحكم الا لله..

والثانية: أنه قاتل، ثم لم يأخذ من مقاتليه سبيا ولا غنائم، فلئن كانوا كفارا، فقد حلّت أموالهم، وان كانوا مؤمنين فقد حرّمت عليه دماؤهم..!!

والثالثة: رضي عند التحكيم أن يخلع عن نفسه صفة أمير المؤمنين، استجابة لأعدائه، فان لم يكن امير المؤمنين، فهو أمير الكافرين.."

وأخذ ابن عباس يفنّد أهواءهم فقال:

" أما قولكم: انه حكّم الرجال في دين الله، فأيّ بأس..؟

ان الله يقول: يا أيها الذين آمنوا، لا تقتلوا الصيد وأنتم حرم، ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوا عدل منكم..

فنبؤني بالله: أتحكيم الرجال في حقن دماء المسلمين أحق وأولى، أم تحكيمهم في أرنب ثمنها درهم..؟؟!!

அலீ (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் பெரும் தொல்லையாக உருவெடுத்த கவாரிஜ்களின் பிரச்சினைகளை முதலில் பேசித் தீர்க்கத்தான் கலீஃபா அலீ விரும்பினார். அவர்களைத் திருத்தித் தம்முடன் இணைக்கப் பெரும் முயற்சி செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ். அந்நிகழ்வை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் வெகு விரிவாக அறிவித்துள்ளார்.

யமன் நாட்டிலிருந்து கிடைத்த சிறந்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டார் இப்னு அப்பாஸ். நண்பகல் நேரம் அது. கவாரிஜ் மக்களிடம் சென்றார் அவர். மிக எளிய உடையிலான தோற்றம், இறை வழிபாடு என்று பழுத்த பக்திமான்களாக அவர்கள் இருப்பதைக் கவனித்தார் இப்னு அப்பாஸ். வந்தவரை வரவேற்றார்கள் அவர்கள்.

என்ன இது ஆடை அலங்காரம் இப்னு அப்பாஸ்?” என்றார்கள். இதில் என்ன குறை கண்டீர்கள்? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறந்த ஆடை அணிந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். தவிர, ‘(நபியே!) நீர் கேட்பீராக அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?”’ என்று சூரா அல் அஃராஃபின் 32ஆவது வசனம் வெளியாகியுள்ளதேஎன்றார் இப்னு அப்பாஸ்.

என்ன விஷயமாக வந்துள்ளீர்?” என்று விசாரித்தார்கள். நபியவர்களின் தோழர்கள், முஹாஜிரீன்கள், அன்ஸார்கள், தூதரின் மருமகனும் அவர்தம் பெரியப்பா மைந்தருமானவர் ஆகியோரிடமிருந்து வருகிறேன். அவர்கள் மத்தியில் குர்ஆன் அருளப்பட்டது. அவர்களுக்கு உங்களைவிட அதன் விளக்கங்களில் ஞானம் அதிகம். அவர்களுள் எவருமே உங்களுடன் இல்லை. எனவே அவர்கள் சொல்வதை உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் அவர்களுக்குத் தெரிவிப்பதை அவர்களிடம் அறிவிப்பேன்.

முதல் பேச்சிலேயே அவர்களது தவறான நிலையைச் சுருக்கமான வாக்கியங்களால் அழுத்தமாய் அடிக்கோடிட்டார் இப்னு அப்பாஸ். குர்ஆனின் வசனங்களுக்கு நீங்கள் உங்கள் புத்திக்குப் புரிந்த வகையில் விளக்கம் அளித்து, அதனால்தானே எதிர்க்கிறீர்கள். தோழர்களுள் மூத்தவர்கள், குர்ஆன் ஞானத்தில் மிகைத்தவர்கள் அனைவரும் அங்கு உள்ளனர்; அவர்களுள் ஒருவர்கூட உங்களுடன் இல்லையே. உங்கள் நிலையின் வித்தியாசம் புரியவில்லையா என்ற புத்திசாலித்தனமான வாக்கியம் அது.

 

இப்னு அப்பாஸ் பேச்சைத் தொடர அனுமதித்தனர். அல்லாஹ்வின் தூதரின் பெரியப்பா மைந்தரிடமும் நபித் தோழர்களிடமும் உங்களுக்கு என்ன விஷயத்தில் பிணக்கு?” என்று கேள்வியுடன் ஆரம்பித்தார் இப்னு அப்பாஸ்.

மூன்று விஷயங்கள்.

அவை யாவை?”

முதலாவது மார்க்கத்திற்குத் தொடர்புடைய ஒரு விஷயத்தில் அதன் தீர்ப்பையும் தீர்மானத்தையும் மக்களிடம் அவர் அளித்துவிட்டார். ஆனால் அல்லாஹ் என்ன சொல்கிறான் – ‘தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்என்கிறான். தீர்ப்பு, தீர்மான விஷயத்தில் மனிதனுக்கு என்ன வேலை?” என சூரா அல்-அன்ஆமின் 57ஆவது வசனத்தை அவர்கள் மேற்கோள் காட்டினர்

இது முதலாவது. அடுத்தது?” என்று கேட்டார் இப்னு அப்பாஸ்.

அவர் அவர்களுடன் போரிட்டார். ஆனால் அதன் முடிவில் எதிர் தரப்பினரின் பெண்களை, பொருள்களைக் கைப்பற்றவில்லை. அவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்று அவர் கருதியிருந்தால் அவர்களுடன் போர் புரிந்திருக்கக் கூடாதே!என்று தங்களின் இரண்டாவது வேறுபாட்டைத் தெரிவித்தார்கள்.

கலீஃபாவாகிய உங்களுக்கு அவர்கள் எதிரிகள் என்றால் அவர்கள் இறை நம்பிக்கையற்றவர்கள். அவர்களிடம் போரில் கைப்பற்ற வேண்டியதைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இல்லையில்லை. அவர்கள் நம்பிக்கையாளர்கள். அவர்களிடம் கைப்பற்ற முடியாது என்று சொன்னால், அவர்களுடன் முதலில் போர் புரிந்திருக்கவே கூடாதேஎன்பது கவாரிஜ்களின் வாதம்.

இது இரண்டாவது. மூன்றாவது?”

உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அமீருல் மூஃமினீன் என்ற தம் பட்டத்தை அவர் நீக்கிவிட்டார். மூஃமின்களுக்கு அவர் தலைவர் அல்ல எனில் இறை மறுப்பாளர்களின் தலைவர் அவர்.

தர்க்க ரீதியான கருத்து அது. அதையும் கேட்டுக்கொண்ட இப்னு அப்பாஸ், “வேறெதும் குறைகள் உள்ளனவா?” என்று கேட்டார்.

இல்லை. அவ்வளவே!

நல்லது. அல்லாஹ்வின் வேதமான குர்ஆனிலிருந்தும் அவனுடைய தூதரின் வழிமுறையிலிருந்தும் நான் உங்களுக்குச் சான்றுகளை முன்வைத்து பதில் அளித்தால் நீங்கள் உங்களுடைய நிலையினைத் திருத்திக் கொள்வீர்களா?”

ஆம்.

மார்க்கத் தொடர்புடைய பிரச்சினையில் தீர்மானிக்க, தீர்ப்பு வழங்க அலீ மனிதர்களிடம் ஒப்படைத்தார் என்ற உங்களது வாதத்திலிருந்து துவங்குவோம். கால் திர்ஹமே பெறுமானமுள்ள ஒரு விஷயம் தொடர்பாக மனிதர்கள் தீர்ப்பு வழங்க அல்லாஹ் அனுமதித்துள்ள வசனத்தை குர்ஆனிலிருந்து நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களுள் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்என்று சூரா அல்-மாயிதாவின் 95ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்களா இல்லையா?

இந்த வசனம் மனிதருள் இருவர் தீர்ப்பளிக்க வேண்டிய விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். மக்கள் போரிட்டு இரத்தம் சிந்துவதைத் தடுக்க அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பும் தீர்மானமும் எடுப்பது மனிதருள் இருவர் முனைவது, முயல் போன்ற பிராணிகளின் விஷயத்தில் தீர்ப்பு வழங்குவதைவிட முக்கியமானதா இல்லையா?

கணவன் மனைவிக்கு இடையிலுள்ள பிரச்சினையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். “(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்;“ என்று சூரா அந்-நிஸாவில் 35ஆவது வசனத்தில் அறிவித்துள்ளான்

நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். மக்கள் போரிட்டு இரத்தம் சிந்துவதைத் தடுக்க அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பும் தீர்மானமும் எடுக்க மனிதருள் இருவர் முனைவது கணவன் மனைவிக்கு இடையே தீர்ப்பு வழங்குவதைவிட முக்கியமானதா இல்லையா?”

ஆம். முக்கியமானதேஎன்று கவாரிஜ்கள் ஒப்புக் கொண்டார்கள்.

உங்களுடைய முதல் விஷயத்திற்கு நான் பதில் அளித்துவிட்டேனா?” என்று கேட்டார் இப்னு அப்பாஸ். ஆம்என்று ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்தது அவர் போரிட்டார். ஆனால் அதன் முடிவில் எதிர் தரப்பினரின் பெண்களை, பொருள்களைக் கைப்பற்றவில்லை என்ற உங்களின் குற்றச்சாட்டு. உங்களுடைய அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவைக் கைதியாகக் கைப்பற்றி, போரில் கைப்பற்றப்பட்ட பெண் கைதிகளைப்போல் உங்கள் அன்னையை பாவிப்பீர்களா? ஆம், மற்ற பெண்களைப்போல் அவர்களைப் பாவிப்பது அனுமதிக்கப்பட்டதே என்று நீங்கள் கூறுவீர்களாயின் நீங்கள் இறை மறுப்பாளர்களாக ஆகிவிடுவீர்கள். அல்லது அவர் எங்களுக்கு அன்னையில்லை என்று நீங்கள் கூறினால் அப்பொழுதும் நீங்கள் இறை மறுப்பாளர்களே.

சூரா அல்-அஹ்ஸாபின் 6ஆவது வசனத்தில் இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஆகவே எவ்வகையில் பார்த்தாலும் உங்களது நிலைபாடு வழிதவறிய ஒன்று.

உங்களுடைய இரண்டாவது விஷயத்திற்கு நான் பதில் அளித்துவிட்டேனா?”

ஆம்என்று ஏற்றுக்கொண்டார்கள்.

மூன்றாவது உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அமீருல் மூஃமினீன் என்ற தம் பட்டத்தை அவர் நீக்கிவிட்டார் என்ற உங்களின் குற்றச்சாட்டு. உங்களுக்கு ஒரு நிகழ்வை நான் சுட்டிக் காட்டுவேன். நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஹுதைபிய்யாவில், நபியவர்கள் காஃபிர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். நபியவர்கள், ‘அலீயே, எழுதவும். இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்என்றார்கள். அதற்கு குரைஷிகள், ‘நீர் அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஏற்றுக்கொண்டால், நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோமேஎன்று மறுப்புத் தெரிவித்தார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதன்தான் என்று கூறிவிட்டு, அலீயிடம், ‘ரஸூலுல்லாஹ்என்ற சொல்லை நீக்கிவிட்டு, இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும் என்று எழுதச் சொன்னார்கள். அவ்விதமே அவ்வார்த்தை நீக்கப்பட்டது. அல்லாஹ்வின்மீது ஆணையாக. அல்லாஹ்வின் தூதர் அலீயைவிட மேன்மையானவர்கள். அவர்களே அவ்வார்த்தையை நீக்கியது அவர்களது நபித்துவத்தை விட்டுத்தந்தாக ஆகாதே.

உங்களுடைய மூன்றாவது விஷயத்திற்கு நான் பதில் அளித்துவிட்டேனா?”

ஆம்என்று ஏற்றுக்கொண்டார்கள்.

இப்னு அப்பாஸின் அறிவின் விசாலம் மின்னிய அந்த விவாதத்தின் இறுதியில் கவாரிஜ்களுள் இரண்டாயிரம் மக்கள் தங்களது தவறை உணர்ந்தார்கள்; தீங்கிலிருந்து வெளியேறினார்கள்

மற்றவர்கள் கண்களையும் செவிகளையும் மூடிக்கொண்டு எவ்வித தர்க்கத்திற்கும் உடன்படவில்லை.  கொலை வெறி, குழப்பம் நிகழ்த்துவது என்று அக்கிரம அழிச்சாட்டியம் புரிய, அவர்களைப் போரிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு அலீ தள்ளப்பட்டார்.

அத்தகு குழப்பத்தில் ஒன்றுதான் பஸ்ரா மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியான ஸிஜிஸ்தான் ஆளுநரை கவாரிஜ்கள் கொலை செய்ததும் அவர்களை அடக்கி ஒழிக்க ஆளுநர் இப்னு அப்பாஸ் படை அனுப்பியதும். அமீருல் மூஃமினீன் அலீ அவர்களுக்குச் சிறந்த ஆலோசகராகத் திகழ்ந்த இப்னு அப்பாஸ் பஸ்ராவின் ஆளுநராக ஹி. 39ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். சில குறிப்புகள், ஹி. 40ஆம் ஆண்டு அலீ (ரலி) கொல்லப்படும்வரை அவரது சார்பில் பஸ்ராவை இப்னு அப்பாஸ் நிர்வகித்து வந்தார் என்கின்றன.

ஹிஜ்ரி 39ஆம் ஆண்டோ, 40ஆம் ஆண்டோ அதன்பிறகு இப்னு அப்பாஸ் மக்காவிற்கு இடம் பெயர்ந்தார். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் (ஸல்).... )

4. சிறார்களின் தனித் திறன்களை அங்கீகரிக்க வேண்டும்..

عن عمرو بن سلمة قال‏:‏ ‏(‏لما كانت وقعة الفتح بادر كل قوم بإسلامهم وبادر أبي قومي بإسلامهم فلما قدم قال‏:‏ جئتكم من عند النبي صلى اللَّه عليه وسلم حقًا فقال‏:‏ صلوا صلاة كذا في حين كذا وصلاة كذا في حين كذا فإذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكثركم قرآنًا فنظروا فلم يكن أحد أكثر قرآنًا مني لما كنت أتلقى من الركبان فقدموني بين أيديهم وأنا ابن ست سنين أو سبع سنين وكانت عليَّ بردة كنت إذا سجدت تقلصت عني فقالت امرأة من الحي‏:‏ ألا تغطون عنا إست قارئكم فاشتروا فقطعوا لي قميصًا فما فرحت بشيء فرحي بذلك القميص‏)‏‏.‏ والحديث سبق تخريجه .

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:- “நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம்.

வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார் என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்) என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்.

நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன்.

நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது.

ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணி) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. ( நூல்: புகாரி-4302 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது சிறார்களை சீராக்குவானாக! நமது சிறார்களை சீர்திருத்தும் பொறுப்பை நிறைவேற்ற நல்ல தவ்ஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

No comments:

Post a Comment