ஆசிரியர் என்பவர்…?
இந்த வாரம்
சமூகத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளன.
இரண்டுமே
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான நிகழ்வுகள் ஆகும்.
ஒன்று:-
இந்தோனேசியாவின் பிரதான தீவான கிழக்கு ஜாவா தீவில் உள்ளது லாமங்கன் நகரம்.
இங்குள்ள அரசு
ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப்
முக்காடுகளை சரியாக அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை
அவமானப்படுத்தும் வகையில் ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார்.
14 மாணவிகளின்
தலைமுடியை பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார். இதனால் மாணவிகள் அவமானத்தில்
கூனிக்குறுகினர்.
இந்த விவகாரம்
கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி
நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக
சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆனால், தவறு செய்த ஆசிரியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள்
வலியுறுத்தின. ( நன்றி: தினத்தந்தி, 28/08/2023 )
இரண்டு:- உத்தரப்
பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை மாணவர் ஒருவருக்கு
தண்டனை கொடுக்கும் விதமாக சக வகுப்புத் தோழர்களை ஏவி அடிக்கச் செய்த வீடியோ
ஒன்று இணைத்தில் வைரலானது.
அந்த வீடியோவில்
த்ரபதி தியாகி என்ற ஆசிரியர் 2-ஆம் வகுப்பு சிறுவனிடம்
வாய்ப்பாடு சொல்லும்படி சொல்கிறார். அந்தச் சிறுவனால் அதனை சரியாகச் சொல்ல
முடியவில்லை. உடனே சக மாணவர்களை எழுப்பி அந்தச் சிறுவனை கன்னத்தில் அறையச்
சொல்கிறார்.
அந்தச் சிறுவன்
அழும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினை (முஸ்லிம்) சுட்டிக்காட்டி, அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை
செலுத்ததால்தான் இதுபோன்ற அந்தச் சமூக சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகக்
கூறி, அந்தச் சிறுவனை இன்னும் பலமாகத் தாக்கும்படி கூறுகிறார்.
தற்போது இந்தச்
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. ( நன்றி: இந்து தமிழ் திசை, 26/08/2023 )
நாட்டின் பல்வேறு
அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
பெண்களின் தலைமுடியை கத்தரித்ததும், மழித்ததும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
ஒரு மாணவரை சக
மாணவர்களை வைத்து அடிக்கச் செய்வது என்பது மிகவும் மோசமான சிந்தனையாகும். அதுவும்
மத ரீதியாக செய்வது இந்த நாட்டில் முஸ்லிம்களை யார் வேண்டுமானாலும் எது
வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனையை தூண்டுவது போல் இருக்கிறது.
எதிர் வரும்
செப்டம்பர் 5
- ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்ற
நிலையில் நமது தேசத்தின் ஒரு பகுதியில் வகுப்பறையை தவறுதலாக பயன்படுத்திய அந்த
ஆசிரியரின் செயலை மிகவும் கண்டிப்பதோடு ஆசிரியப் பணி என்பது எவ்வளவு மகத்தான பணி
என்பதை இது போன்ற மனோ நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், எதிர்காலத்தில்
ஆசிரியர்களாக உருவாக வேண்டும் என்ற கனவைச் சுமந்திருப்பவர்களுக்கும், ஆசிரியர்களை
உருவாக்க இருக்கும் பெற்றோருக்கும், இந்த சமூகத்திற்கும் சொல்ல வேண்டிய கடமையும்
கடப்பாடும் நமக்கு இருக்கின்றது.
ஆசிரியர் தினம்
கொண்டாட்டங்கள்..
உலகம் முழுவதும் அமெரிக்கா,
கனடா, ஆஸ்திரேலியா மற்றும்
பிலிப்பைன்ஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் அக்டோபர் 5ம் தேதி சர்வதேச ஆசிரியர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், சீனாவில் செப்டம்பர் 10,
ஈராக்கில் மார்ச் 1, மலேசியாவில் மே 16, சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஸ்பெயினில் நவம்பர் 27
ஆசிரியர்கள் தினம் தனிப்பட்ட முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில்
கல்வி தொடர்பாக பிள்ளைகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி ராதாகிருஷ்ணனை நினைவு
கூறவே செப்டம்பர் 5
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக
இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் என்பவர்...?
ஒரு ஆசிரியர் என்பவர்
மூன்றாவது கண் போன்றவர் ஆவார். ஏழாவது அறிவு போன்றவர் ஆவார். உலகின் எட்டாவது
அதிசயம் போன்றவர் ஆவார். எனவே, ஆசிரியர் என்பவர் நல்லவைகளைப் பார்ப்பதற்கு வழிகாட்டக்
கூடியவராகவும், நல்லவைகளைச் சிந்திப்பதற்கு
தூண்டக்கூடியவராகவும், சமூகத்திற்கும், நாட்டிற்கும்
பயன் தருகின்ற வகையில் உருவாக்க முன் வர
வேண்டும்.
தொடக்கப் பள்ளி
முதல் பல்கலைக்கழகங்கள் வரை ஒரு மாணவன் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தான் கல்வி பயிலும் காலத்தில் சந்தித்து
விடுகிறான்.
ஆனாலும் அவனை
உசுப்பி விட்ட ஊக்கப்படுத்திய என்றென்றும் நெஞ்சில் நிழலாடுகின்ற ஆசிரியர்கள்
என்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இருப்பார்கள்.
வகுப்பறையும்… ஆசிரியரும்…
உலகில் இரண்டு
புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன்
அறிவைப் பெற்று உயர்வு பெறுகிறான்.
உலகில் முன்னேறிய 10 நபர்களிடம் பேட்டி எடுத்தார்கள், “நீங்கள்இவ்வளவு
உயர்வு பெற்றதன் காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்” என்றார்கள். அதற்கு 8
பேர் சொன்ன பதில் என்ன தெரியுமா? எங்கள் உயர்வுக்கு மிக முக்கிய காரணம் எங்களது ஆசிரியர்கள் தான் என்றனர்.
"நான் உயிரோடு
இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என்
ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
பெங்களூரு இந்திய
அறிவியல் கல்வி மையத்தில் (ஐ.ஐ.எஸ்சி.) கடந்த ஆண்டு, தங்கள் ஆசிரியையின்
பெயரில் ரூ.1
கோடிக்குக் கட்டடம் கட்டி பெருமைப்படுத்தியுள்ளனர்
மாணவர்கள். இப்போதும் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டி தங்கள்
மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள்
என்றுமே முன்மாதிரிதான்.
முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளியில் படித்தபோது பறவைகள் பறப்பது குறித்துப்
பாடம் நடத்தியது புரியவில்லை என்று கூறினாராம். கடற்கரைக்குச் சென்று
பறவைகள் பறப்பதைப் புரிய வைத்த ஆசிரியர் கலாமின் மனதில் என்ன தாக்கத்தை
ஏற்படுத்தியிருப்பார் என்பது இப்போதைய ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாகும்.
கல்வியும்… மாணவனும்… ஆசிரியரும்…
கல்விவியலாளர்களின்
கருத்துப்படி கல்வி அறிவானது மனிதனுக்கு மூன்று வழிகளில் கிடைக்கப் பெறுகின்றது.
1) Informal - இம்முறையானது ஒருவனது குழந்தைப் பருவத்தில் 5 ½ வயது வரை தனது பெற்றோர், உறவினர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் மூலம் கற்கும் கல்வி. இப்பருவத்தில் மூளையின்
வளர்ச்சி அதி தீவிரமாக இருக்கும். குழந்தைகள் கூடுதலாக கேள்விகள் கேட்கும் பருவம்.
2) Formal - இம்முறை பாடசாலை சென்று
கல்வி கற்கும் முறை. இது ஒருவரின் 5 ½ வயதில்
பாடசாலையில் ஆரம்பமாகி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம்
ஆகியவற்றில் கற்கும் கல்வி.
3) Non formal - இம்முறையானது பாடசாலை, பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து நண்பர்கள், மீடீயாக்கள். இதர
பொழுதுபோக்கு சாதனங்கள் மூலம் கற்கும் கல்வி.
மாணவர்களைப்
பொருத்த வரை அவர்கள் மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்படுகின்றனர்.
1) அதி விவேகமுள்ள
மாணவன் (Gifted
child)
2) சராசரி மாணவன் (Normal child)
3) பின் தங்கிய
மாணவன் (Backward
child)
ஒரு
வகுப்பறையிலுள்ள இம்மூன்று வகை மாணவர்களையும் சமாளிக்கக்கூடிய தகுதி ஆசிரியருக்கு
இருக்க வேண்டும். சளிப்படையாமல் பின் தங்கிய மாணவனை அலட்சியம் செய்யாமல் கூடுதல்
கவனம் எடுக்க வேண்டும். அன்புடனும், ஆதரவுடனும் அம்மாணவனை
அணுகினால் ஏனைய சக மாணவர்கள் மத்தியில் பின் தங்கிய மாணவனும் ஒரு நாள் சாதாரண
மாணவனாக மாறி, ஒரு கட்டத்தில் அதிவிவேகமுள்ள மாணவனாக மாறுவான்.
இறைவனே முதல் ஆசான்...!
இறைவனே
மனிதனுக்குக் கல்வி அளித்து அவனது அறியாமையை அகற்றினான்.
وَعَلَّمَ
اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ
اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு
விவரியுங்கள்”
என்றான்.
அவனே
வானவர்களுக்கு ஆசான்..!
قَالُوْا
سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ
الْعَلِيْمُ الْحَكِيْمُ
அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும்
எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்”
எனக் கூறினார்கள். ( அல்குர்ஆன்: 2: 31, 32 )
அவனே அனைத்து படைப்புகளுக்கும் ஆசான்..!
وَٱلشَّمْسُ
تَجْرِى لِمُسْتَقَرٍّ لَّهَا ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள்
அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
وَاَوْحٰى
رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ
الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ
உம் இறைவன்
தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும்,
உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
ثُمَّ
كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا ؕ يَخْرُجُ
مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِؕ
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
“ பின்,
நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன்
இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித
நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு
(பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும்
சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. ( அல்குர்ஆன்: 16:
68, 69 )
குர்ஆனில்
முதன்முதலாக இறக்கியருளப்பட்ட வசனத் தொடரில்
اِقْرَاْ
وَرَبُّكَ الْاَكْرَمُۙ
ஓதுவீராக: உம்
இறைவன் மாபெரும் கொடையாளி. ( அல்குர்ஆன்: 96: 3 )
الَّذِىْ
عَلَّمَ بِالْقَلَمِۙ
அவனே எழுது கோலைக்
கொண்டு கற்றுக் கொடுத்தான். (
அல்குர்ஆன்: 96: 4 )
عَلَّمَ
الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
மனிதனுக்கு அவன்
அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
( அல்குர்ஆன்: 96: 5 )
اَلرَّحْمٰنُۙ
(நபியே!) அளவற்ற அருளாளன்தான், ( அல்குர்ஆன் : 55:1
)
عَلَّمَ
الْقُرْاٰنَ
இந்தக் குர்ஆனை
(உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். ( அல்குர்ஆன் : 55:2
)
பேராசிரியர் பெருமானார் {ஸல்}…
இறைவனிடம் இருந்து
பெற்ற திருவேதத்தை இவ்வுல மக்களுக்குக் கற்றுக்கொடுத்து வழிகாட்டவே நபியர்கள்
வருகை தந்தார்கள்.
وَاِنْ
كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ لَقَدْ
مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ
اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ
الْكِتٰبَ وَالْحِكْمَةَ
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக
ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு
அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை
பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்
பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர். ( அல்குர்ஆன் : 3:164
)
إِنَّ اللهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا، وَلَا مُتَعَنِّتًا،
وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا
அல்லாஹ் என்னைக்
கடினமான போக்கு உள்ளவனாகவோ,
எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ( நூல்: முஸ்லிம்-2946 )
முன்மாதிரி ஆசிரியராக மாறுங்கள்!
சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க
விரும்புபவர்கள் சிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அப்படி சிறந்த ஆசிரியர்களாக
இருக்க விரும்புபவர்கள் முன்மாதிரி ஆசிரியரான பெருமானார் {ஸல்} அவர்களின் வாழ்வில்
இருந்து பாடங்களையும், படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
1.
உங்கள் பிள்ளைகளைப் போல எண்ணுங்கள்.!
மாணவர்களிடம் ஒரு
தாயைப் போல,
ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள்.
மாணவர்களின்
நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும்
கொடுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நபித் தோழர்களைப் பார்த்து
கூறினார்கள்:
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ
حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ
الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّمَا أَنَا لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ أُعَلِّمُكُمْ
“நிச்சயமாக ஒருவருக்கு
அவருடைய தந்தையைப் போல உங்களைப் பொறுத்தவரையில் நான் இருக்கிறேன். நான் உங்களுக்கு
அவருடைய ஸ்தானத்தில் இருந்து கற்றுத்தருகின்றேன்” (அபூதாவூத்,
அந்நஸாஈ, இப்னு மாஜா)
ஒரு தந்தை தனது
பிள்ளைகளுடன் எந்தளவு அன்பாக, அக்கறையாக இருக்கின்றாறோ
அந்தளவுக்கு அல்லது அதைவிட அதிக அக்கறையுள்ளவனாக நான் உங்கள் விடயத்தில்
இருக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள்.
நபியே!
அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களோடு நளினமாக, நயமாக,
அன்பாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும்
கடின உள்ளம் படைத்தவராகவும் இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டும்
விரண்டோடியிருப்பார்கள்.”
( அல்குர்ஆன்: 3: 159 )
நபி (ஸல்)
அவர்களிடமிருந்த உன்னதமான பண்பே அன்புதான். மக்களோடு, மற்றவர்களோடு அன்பாக இருத்தல் எனும் உயரிய பண்பைப் பெற்றிருந்தார்கள்
நபியவர்கள். தன்னோடு பணியாற்றிய எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் தண்டித்ததில்லை.
நபி (ஸல்) அவர்களிடம்
10 வருடங்கள் பணியாளராக சேவை புரிந்த அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ سَمِعَ سَلَّامَ بْنَ مِسْكِينٍ قَالَ
سَمِعْتُ ثَابِتًا يَقُولُ حَدَّثَنَا أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ
سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ وَلَا لِمَ صَنَعْتَ وَلَا أَلَّا صَنَعْتَ
“அந்த பத்து வருடங்களில்
ஒரு நாளாவது நபியவர்கள் நான் ஒரு வேலையைச் செய்ததற்காக ஏன் செய்தீர்கள் என்றோ
ஒன்றை செய்யாமல் விட்டதற்காக ஏன் இதனைச் செய்யவில்லை என்றோ கேட்டதில்லை.”
7 -ஆம் நூற்றாண்டில்
மனிதர்கள் நாகரிகமற்று,
பண்பாடற்று இருந்த காலத்தில் இத்தகைய உயர்ந்த
நாகரிகத்தையும் பண்பாடுகளையுமே நபியவர்கள் கற்றுத் தந்தார்கள்.
2. மாணவர்களின் பெயரைச் சொல்லி அழையுங்கள்..!
உங்கள் வகுப்பில்
பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ
حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ حَدَّثَنَا بُرَيْدُ بْنُ
عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ عَنْ
أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ
مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ
அபூ மூஸா அஷ்அரி
(ரலி) அவர்கள் அருமையாக அல்குர்ஆனை ஓதக்கூடியவர். நபியவர்கள் அவரை அழைத்து அபூ
மூஸாவே! அல்குர்ஆனைக் கொஞ்சம் ஓதுங்கள். நீங்கள் ஓதுவதை நான் செவியேற்க
விரும்புகிறேன் எனக் கூறுவார்கள். “தாவூத் (அலை) அவர்களுடைய
புல்லாங்குழல்”
என்று அவரை வர்ணிப்பார்கள். அபூமூஸா அல் அஷ்அரி (ரலி)
அவர்களும் நபியவர்களின் வேண்டுகோளை ஏற்று சந்தோஷமாக ஓதுவார்கள்.
عن أنس
رضي الله عنه قال: كان لي أخ يقال له أبو عمير، كان إذا جاءنا رسول الله صلى الله
عليه وسلم قال: «يا أبا عمير، ما فعل النُغير-طائر صغير» (رواه البخاري [6203]،
ومسلم [2150]).
அபூ தல்ஹா உம்மு
ஸுலைம் தம்பதிக்கு மற்றொரு மகன் பிறந்தார். அவருக்கு அபூ உமைர் என்று பெயர்!
இவரும் அன்புக்குரிய குழந்தையாய் இருந்தார்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் உம்மு ஸுலைமின் இல்லத்திற்கு வருகை தந்தால் அபூ உமைர் மீது அன்பு மழை
பொழிவார்கள்! அவருடன் கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்.
ஒருமுறை அண்ணலார்
வருகை தந்தபோது அபூ உமைரின் முகம் வாடியிருந்தது. என்ன விடயம்? இன்று அபூ உமைர் சோர்ந்திருக்கிறார் என்று உம்மு ஸுலைமிடம் கேட்டார்கள்!
அல்லாஹ்வின் தூதரே! அபூ உமைருக்கு நுகைர் என்று ஒரு குருவி இருந்தது. அதனுடன் விளையாடிக்
கொண்டிருப்பார். இன்று திடீரென அது இறந்துவிட்டது.
அண்ணல் நபியவர்கள்
அபூ உமரை அருகில் அழைத்துத் தமது அன்புக் கரத்தை அவருடைய தலை மீது வைத்துத் தடவிக்
கொடுத்தார்கள்.
பிறகு மாஃப அலந் நுகைர் யா அபா உமைர் (என்னுடைய உமைர், என்னவாயிற்று நுகைர்?) என்று சொல் நயத்துடன் அண்ணலார் கேட்டதும் சிறுவர் அபூ உமைர் தம் கவலையை மறந்து சிரித்தபடி மீண்டும் விளையாடுவதில் ஈடுபட்டார்.
3.
நம்பிக்கையைக் கொடுங்கள்..! மாணவர்களிடமுள்ள திறமையைப் பாராட்டுங்கள்..!.
அபூதர் (ரலி)
அவர்கள் கூறியதாவது:- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப்
பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்” என்றார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் : 5144. )
وقد صح من حديث أبي موسى قال: قال رسول الله: لو رأيتني وأنا
أستمع قراءتك البارحة لقد أوتيت مزمارًا من مزامير آل داود، فقلت يا رسول الله، لو
علمت أنك تسمع قراءتي لحبرته لك تحبيرًا.
அபூமூசா (ரலி)
அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் என்னிடம்,
(நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), “நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது
நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்).
(இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய
குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் : 1454
).
சலமா பின்
அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
وفي هذا اليوم قال الرسول لأصحابه
"
خير رجّالتنا، أي مشاتنا، سلمة بن الأكوع " !!
(நீண்ட ஹதீஸின் சுருக்கம்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றைய தினத்தில்
நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில்
மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்” என்று (பாராட்டிக்)
கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக)
எனக்கு வழங்கினார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் : 3695. )
மாணவர்களிடமுள்ள
திறமைகளைப் பாராட்டுவது. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பரிசுகளை
வழங்குவது போன்ற பண்புகள் ஆசிரியர்களிடம் இருந்தால் திறமையான மாணவர்கள் உருவாகுவது
மட்டுமல்லாமல் ஆசிரியர்,
மாணவர் என்ற உறவில் நல்லிணக்கம் ஏற்படவும் அது காரணமாக
இருக்கும்.
உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில்
மிகப்பெரிய சக்தி உண்டு.
இந்த வார்த்தைகளை
அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள்.
இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.
4.
பாடப்புத்தகத்தை தாண்டி கற்றுக் கொடுங்கள்...
வாழ்க்கை மிகப்
பெரியது. இந்தப் பெரிய உலகத்தை
சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப்
பார்க்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பாடநூல்கள்
தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே
பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும்
அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு
உணர்த்திடுங்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள்,
நபி
{ஸல்}
அவர்களுடைய சபையை கெட்டியாக பிடித்துக்
கொண்டவர்கள்,
நெருக்கமாக இருந்தவர்கள். எந்தளவுக்கென்றால், ஒரு சமயம் நபி {ஸல்} சபையில் அமர்ந்திருந்த போது, நபியை ஒட்டி வலது பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.
அந்த இடத்தில்
எந்த நபித்தோழரும் அமர மாட்டார்கள். அபூபக்ருக்காக நியமித்த இடம். ஏனென்றால், நபி {ஸல்} அவர்களுடைய முதல் ஆலோசகர், முதல் மந்திரி அபூபக்கர் (ரலி)
அவர்கள்.
அவர்கள்
அமரக்கூடிய இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} அவர்களை பொறுத்தவரை ஒரு சபையில் யாராவது அமர்ந்து
விட்டால்,
அவர்களை அந்த சபையிலிருந்து எழுப்பமாட்டார்கள்.
அப்போது, நபி {ஸல்} அவர்களுக்கு குடிப்பதற்கு ஒரு பானம் வந்து விட்டது. (பால் அல்லது தேன் கலந்த
ஏதோ ஒரு பொருளோ வந்து விட்டது.) அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} அவர்கள் குடித்தார்கள்.
அதற்கு பிறகு, அந்த பானத்தை தங்களுடைய தோழர்களுக்கு கொடுப்பதற்காக பார்க்கும் பொழுது வலது
பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். வலது பக்கத்தில் இருப்பது இந்த குட்டி பையன்
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
மற்றவர்களெல்லாம்
பெரும் பெரும் தோழர்கள். அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} இப்னு அப்பாஸை பார்த்து உரிமையோடு
கேட்டார்கள்.
«يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَهُ الأَشْيَاخَ»، قَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِفَضْلِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ، فَأَعْطَاهُ إِيَّاهُ
( உறவு முறையில் ஒரு பக்கம் சாச்சாவின் மகன்.) சிறுவரே! உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நீ விட்டுக் கொடுப்பாயா? என்று.
இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் உடைய வார்த்தையை அல்லாஹ்வுடைய தூதரின் எச்சிலுக்கு நான் வேறு யாரையும்
விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள். ( அறிவிப்பாளர்
: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : எண் : 2351, 2366, 2451,
2605. )
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாம் வயதில் மூத்தவராய்
இருந்தும், அல்லாஹ்வின் நபியாக இருந்தும் தங்களது பேரன் வயது கூட ஆகியிருக்காத ஒரு
சிறுவரிடம் சென்று அனுமதி கேட்கின்றார்கள். ஒருவரின் உரிமையை எவ்வாறு பேண வேண்டும்
என்பதில் உள்ள நியாயத்தை உணர்த்துகின்றார்கள். தமக்கு உறவு முறை இருந்தும் கூட தங்களுக்கான
உரிமையை அந்த இடத்தில் நபி {ஸல்} அவர்கள் பயன்படுத்த வில்லை. ஒரு சபையில் ஒரு சொல்லின்
மூலம், ஒரு செயலின் மூலம் விசாலமான பார்வையை மாநபி {ஸல்} அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
5.
அழகிய முறையில் கற்றுக் கொடுங்கள்..!
ارِهِمْ،
فَقُلْتُ: وَاثُكْلَ أُمِّيَاهْ، مَا شَأْنُكُمْ؟ تَنْظُرُونَ إِلَيَّ، فَجَعَلُوا
يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ، فَلَمَّا رَأَيْتُهُمْ
يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، فَبِأَبِي هُوَ وَأُمِّي، مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ
وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ، فَوَاللهِ، مَا كَهَرَنِي وَلَا
ضَرَبَنِي وَلَا شَتَمَنِي، قَالَ: «إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا
شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ
وَقِرَاءَةُ الْقُرْآنِ» أَوْ كَمَا
நான் (ஒரு நாள்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது
கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்”
(அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி)
கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது
தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி
விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்“ என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் (ரலி) ( நூல்: முஸ்லிம்-935 )
“அவர்களுக்கு முன்னரோ
பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என்
வாழ்நாளில்) கண்டதேயில்லை”
என்று நபித்தோழர் கூறுகிறார். இதன் மூலம் அல்லாஹ்வின்
தூதருடைய அணுகுமுறை எந்தளவுக்கு நன்றாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
6.
காலத்திற்கும் நினைவில் நிற்கும் படி கற்றுக் கொடுங்கள்..!
أَنَّهُ
سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ
كُنْتُ
غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ
يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ
مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
நான்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை)
என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே!
அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு
அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா (ரலி) ( நூல்: புகாரி-5376 )
7. சலிப்படையாதவாறு கற்றுக்கொடுங்கள்…
أَتَيْنَا
إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ
مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا
ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا
عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى
أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ
أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا كَمَا
رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ
أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»
சம வயதுடைய
இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள்
தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும்
இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி
(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள்.
நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக்
கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை
நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்‘ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.
அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) ( நூல்: புகாரி-631
)
அல்லாஹ்வே! எங்களின் ஆசிரியர்களை மன்னிப்பாயாக!
எங்களின் மாணவர்களுக்கு கல்வி ஞானத்தை அதிமாக்குவாயாக! சமூகத்தின் சிறந்த ஆளுமைகளாக
ஆக்குவாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
அல்ஹம்துலில்லாஹ்! அற்புதமான தொகுப்பு மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்
ReplyDeleteமாஷா அல்லா மிக அருமையான காலத்திற்கு தேவையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற் பாக்கியங்களை தருவானாக ஆமீன்
ReplyDeleteஅல் ஹம்து லில்லாஹ் ஹழ்ரத் அருமையான கட்டுரை பாரகல்லாஹ்
ReplyDeleteவழக்கம்போல பிச்சுட்டேல்
ReplyDeleteJazakallah
ReplyDelete