நபி (ﷺ) அவர்கள் ஆசைப்பட்ட முஸ்லிம் சமூகம்!!
பெருமானார் {ஸல்}
அவர்கள் இந்த பூமியில்
ஒப்பற்ற ஓர் சமூகம்
உருவாக வேண்டும் என்று
ஆசைப்பட்டார்கள்.
தாம் வாழும்
போதே அந்த சமூகத்தை
உருவாக்கி அல்லாஹ்வின் புறத்தில்
இருந்து அந்த சமூகத்திற்கான
தரச்சான்றையும் பெற்றுத் தந்தார்கள்.
பெருமானார் {ஸல்}
அவர்களின் புனித மறைவிலிருந்து
இந்த உலகம் அழியும்
நாள் வரை வரவிருக்கும்
அத்துனை மனித சமூகம்
இறைநம்பிக்கை விஷயத்தில் அவர்களின்
இறைநம்பிக்கை போன்று அமைத்தால்
மட்டுமே அவர்கள் நேர்வழியில்
நீடிக்க முடியும் என்கிற
மகத்தான சான்றை அல்லாஹ்
மாநபி {ஸல்} அவர்கள்
உருவாக்கிய அந்த சமூகத்திற்கு
வழங்கினான். மேலும், அவர்களைப்
பின்பற்றி வாழ்கிறவர்களுக்கு அல்லாஹ்வின்
பொருத்தம் கிடைக்கும் என்கிற
சோபனத்தையும் அல்லாஹ் பதிவு
செய்கிறான்.
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَا اٰمَنْتُمْ بِه فَقَدِ اهْتَدَوْا
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள்
நேர்வழியை பெற்றுவிடுவார்கள். ( அல்குர்ஆன்: 2: 137 )
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ
وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ
رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ
تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
இன்னும்
முஹாஜிர்களிலும்,
அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான்
கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும்
பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே
என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும் ( அல்குர்ஆன்:
9: 100 )
மாநபி {ஸல்}
அவர்கள் எப்படியெல்லாம் இந்த
சமூகம் உருவாக வேண்டும்
என்று ஆசைப்பட்டார்கள் என்பதை
வரலாற்றின் ஒளியின் நாம்
பார்ப்போம்.
لَقَدْ
جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ
عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
(முஃமின்களே!) நிச்சயமாக
உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க
வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர்
பெரிதும் விரும்புகிறார்;
இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும்
உடையவராக இருக்கின்றார். (
அல்குர்ஆன்: 9: 128 )
عن أبي
هريرة رضي الله عنه: عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: ((لولا أن أشقَّ
على أمتي لأمرتُهم بالسواك مع كل وضوء))؛ أخرجه مالك، وأحمد، والنسائي، وصحَّحه
ابن خزيمة، وذكره البخاري تعليقًا.
"என்
சமுதாயத்தினருக்கு நான் கஷ்டம் அளித்தவனாகுவேன் என்ற (எண்ணம்) இல்லாதிருந்தால்
ஒவ்வொரு தொழுகைக்கும் (மிஸ்வாக்) பல்துலக்கும்படி அவர்களுக்கு நான்
ஆணையிட்டிருப்பேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள் ( அபூஹுரைரா (ரலி), நூல்கள் : திர்மிதி (22,23),
நஸயீ (7,528)...)
அல்லாஹ் கூறுவதைக்
கவனியுங்கள்!
“நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் வார்த்தையைக் கவனியுங்கள்!
"என்
சமுதாயத்தினருக்கு நான் கஷ்டம் அளித்தவனாகுவேன் என்ற (எண்ணம்)
இல்லாதிருந்தால்"...
இயல்பாகவே நாம்
துன்பத்திற்குள்ளாவதையோ,
அல்லது வணக்க வழிபாடுகளின் பெயரால் சிரமத்திற்குள்ளாவதையோ
மாநபி ஸல் அவர்கள் விரும்பவில்லை.
உபதேசம் செய்யும்
விஷயத்தில் கூட தன் சமூதாய மக்கள் சலிப்படைந்து விட கூடாது என்பதில் கவனமாக
இருந்தார்கள். ”
நாங்கள் சலிப்பு அடைந்திடுவோம் என்பதை நபி(ஸல்) அவர்கள்
அஞ்சி உபதேசங்களை அளவோடு செய்வார்கள்”
(அறிவிப்பவர்:
அப்துல்லாஹ்பின் மஸ்வூது(ரழி), நூல்கள் : திர்மிதி (3015,3016), )
எல்லா வகையிலும்
நமக்கு நன்மைகள் ஏற்படவே மாநபி (ஸல்) அவர்கள் ஆசைப்பட்டார்கள்.
1.
மலக்குமார்களின் நெருக்கமும் தொடர்பும் கிடைக்க வேண்டும் என்று
ஆசைப்பட்டார்கள்.
எப்படி பெருமானார்
{ஸல்} அவர்கள் தாம் வானவர்களோடு தொடர்பில் இருந்தார்களோ அது போன்றே தம் சமூகமும்
வானவர்களோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடன் இருக்க வேண்டும் என்று
ஆசைப்பட்டார்கள்.
عن أبي
ربعي حنظلة بن الربيع الأسيدي الكاتب- رضي الله عنه- أحد كتاب رسول الله صلى
الله عليه وسلم قال: لقيني أبو بكر رضي الله عنه فقال: كيف أنت يا
حنظلة؟ قلت: نافق حنظلة! قال: سبحان الله ما تقول؟! قلت: نكون عند
رسول الله صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بالجنة والنار كأنا رَأْىَ عَيْنٍ فإذا
خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عَافَسْنَا الأزواج والأولاد
وَالضَّيْعَاتِ نسينا كثيرا، قال أبو بكر رضي الله عنه : فوالله إنا
لنلقى مثل هذا، فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم
. فقلت: نافق حنظلة يا رسول الله! فقال رسول الله صلى الله عليه وسلم
: «وما ذاك؟» قلت: يا رسول الله، نكون عندك تذكرنا بالنار والجنة كأنا
رأي العين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينًا
كثيرًا. فقال رسول الله صلى الله عليه وسلم : «والذي نفسي بيده، لو
تدومون على ما تكونون عندي، وفي الذِّكْر، لصافحتكم الملائكة على فرشكم وفي
طُرُقِكُمْ، لكن يا حنظلة ساعة وساعة» ثلاث مرات.
[صحيح] - [رواه مسلم]
நபி (ஸல்) அவரகளின் எழுத்தாளர்களில் ஒருவரான அபூரிப்ஈ என்ற ஹன்ளலா இப்னு ரபீஉ அல் உஸைதி (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு தடவை என்னை அபூபக்கர் (ரழி) அவர்கள் சந்தித்து "ஹன்ளலா எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு "ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டான் என்று நான் கூறினேன். "ஸுப்ஹானல்லாஹ் என்ன
கூறுகிறீர்" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நபி (ஸல்) அவர்களிடம் நாம் இருக்கும் போது சொர்கத்தையும், நரகத்தையும் நாம் நேரில் பார்ப்பது போலவே நினைவு கூர்கிறோம். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நாம் வெளியேறிவந்துவிட்டால் மனைவியரை,குழந்தைகளை கவனிப்பதிலும் வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைப்பதிலும்
மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமானதை மறந்து விடுகிறோம்." என்று கூறினேன்.
"அல்லாஹ்வின்
மீது சத்தியமாக நிச்சயமாக இது போன்றே நானும் உணர்கிறேன்" என்று அபூபக்கர் (ரழி) கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். "இறை தூதர் அவர்களே!ஹன்ளலா நயவஞ்சகன்
ஆகிவிட்டார்." என்று கூறினேன். "என்ன கூறுகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "இறைதூதர் அவர்களே! உங்களுடன் இருக்கும் போது
கண்ணால் பார்ப்பது போல் சொர்க்கத்தையும்,நரகத்தையும் நினைவு
கூர்கிறோம். உங்களை விட்டும் நாங்கள் வெளியேறி விட்டால் மனைவியர், குழந்தைகள்,
வாழ்க்கைத் தேவை என மூழ்கி அதிகமாக மறந்துவிடுகிறோம்."
என்று கூறினேன். "எனது ஆத்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக
என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும்
இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து
மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே வணக்த்திற்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு." என்று மூன்று முறை
கூறினார்கள்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் தங்களின் ஆசையை வெளிப்படுத்திய பின்னர் மாநபி {ஸல்} அவர்களோடு தோழமை
கொண்டிருந்த அந்த சமூகம் எந்த வகையிலாவது இந்த பேற்றை அடைந்திட வேண்டும் என்று
விரும்பியது. அதற்காக முழு முயற்சியையும் மேற்கொண்டது.
இந்த நேரத்தில்
தான் மனித உருவத்தில் வந்து சென்ற வானவர்களை தாம் பார்த்ததாக அந்த சமூகத்தில் ஆயிஷா
(ரலி), உமர் (ரலி), போன்ற பெரிய நபித்தோழர்கள் கூறலாயினர்.
சில
நபித்தோழர்களின் பெயர் கூறி அவர்களுக்கு தம் புறத்தில் இருந்தும் அல்லாஹ்வின்
புறத்தில் இருந்தும் வானவர்களின் வாயாற ஸலாம் பெறும் பாக்கியத்தைப் பெற்றனர்.
ஒரு கட்டத்தில்
ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் ஜனாஸாவிலும், முஆவியா இப்னு முஆவியா (ரலி) அவர்கள்
ஜனாஸாவிலும் அதுவரை பூமிக்கி வருகை தராத 70000 எழுபதாயிரம் வானவர்கள் பங்கேற்று
சிறப்பித்தனர்.
இம்ரான் இப்னு
ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும்
விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு
வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப்
போனார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.
ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும்
சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம்
விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.
அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் “தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க
விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.
فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟!
قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-:
"شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى
بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله
أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي
ليس عقوبة وإنما يختبر رضائي عنه،
இன்னொரு முறை
அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே
நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின்
தஸ்பீஹை கேட்கிறேன்.
அவர்களை
சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக
விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக
எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள் ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா )
2. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை
பொருந்திக் கொள்ள வேண்டும்,
அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்
கொள்ள வேண்டும் என்று
விரும்பிய பெருமானார் {ஸல்}
அவர்கள்.
தபூக் யுத்தம் முடிந்து
திரும்பி வரும் வழியில் அண்ணலார் {ஸல்}
அவர்களும்,
அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.
அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.
அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல்
பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.
பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர்
இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள்.
பின்னர் தாங்களே
நல்லடக்கமும் செய்தார்கள். அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக
இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்.”( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )
இது போன்று பல
சந்தர்ப்பங்களில் ஒரு சில நபித்தோழர்களிடம் இடம் பெற்றிருந்த உயர் பண்புகளைக் கூறி
இந்த உம்மத்தில் எல்லோரும் அந்த பண்புகளைப் பெற்றவர்களாக ஆகி விட வேண்டும் என்றும்
பெருமானார் {ஸல்} அவர்கள் ஆசைப்பட்டார்கள்.
அதற்கு
உடனடியாகவும், சிறிது கால தாமதத்திற்குப் பின்னரும் விடை கிடைத்துக் கொண்டே
இருந்தது.
முதல் பார்வையில்… முதல் சந்திப்பில்…
ஹிஜ்ரி 5 அல்லது அதற்கும் சில நாட்களுக்கு முன்பாக அப்துல் கைஸ் என்கிற
குழுவினர் முதன் முறையாக மாநபி {ஸல்} அவர்களைச்
சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வருகை தந்தனர்.
வந்த அவசரத்திலும், நபிகளாரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்திலும், வாகனங்களை அப்படியே விட்டு விட்டு, பொருட்களை ஆங்காங்கே வைத்து விட்டு அழுக்கடைந்த ஆடையோடும், புழுதி படிந்த முகத்தோடும் நபிகளாரின் சபைக்குள் நுழைந்தனர்.
ஆனால் அவர்களின் தலைவர் அஷஜ் அப்துல் கைஸ் (ரலி) அவர்கள் வாகனத்தை ஓரமாக கட்டிவிட்டு, பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, நன்றாக குளித்து ஆடை மாற்றி அண்ணலாரின் முன்வந்து ஸலாம் முகமன் கூறி நின்றார்கள். மாநபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி
إن فيك
خصلتين يحبهما الله: الحلم والأناة
“உம்மிடம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் விருப்பமான இரு பண்புகள் உள்ளன. அவை சகிப்புத் தன்மையும், கம்பீரமான நிதானமும் தாம்” என்று கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! இயற்கையாகவே என் சுபாவமா?அல்லது அல்லாஹ்வே அதை எனக்கு பிரத்யேகமாக வழங்கியிருக்கானா?என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவை அல்லாஹ் உமக்கு பிரத்யேகமாக வழங்கியவையே!” என்றார்கள்.அதற்கவர் “அல்லாஹ்வ்ம், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற இரு பண்புகளை எனக்குள் ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும்!என்று கூறினார் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.அஷஜ் அப்து கைஸ் என்பது பட்டப்பெயர்.அவரின் இயர்பெயர் முந்திர் இப்னு ஆயித் (ரலி) என்பதாகும்.
நூல்: அஹமது பாகம்:4, பக்கம். 205 இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:89 )
இந்த நிகழ்வு
நடந்து சற்றேறக்குறைய இரண்டு
ஆண்டுகளில் ஆசர்யமான ஒரு
நிகழ்வு நடக்கின்றது. அந்த
நிகழ்வு தான் மாநபித்தோழர்கள் மாநபி {ஸல்}
அவர்கள் விரும்பும் சமூகமாக
உருவாக வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசையும் ஆர்வமும்
கொண்டிருந்தார்கள் என்பதை
வெளிச்சம் போட்டு காட்டியது.
عن سهل بن سعد
أن رسول الله ﷺ قال يوم خيبر
لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله، يفتح الله
على يديه، فبات الناس يدوكون ليلتهم أيهم يعطاها فلما أصبحوا غدوا على رسول الله ﷺ
كلهم يرجو أن يعطاها، فقال: أين علي بن أبي طالب؟ فقيل: هو يشتكي عينيه.
فأرسلوا إليه فأتي به، فبصق في عينيه؛ ودعا له فبرأ كأن لم يكن به وجع، فأعطاه
الراية فقال: انفذ على رسلك حتى تنزل بساحتهم، ثم ادعهم إلى الإسلام، وأخبرهم
بما يجب عليهم من حق الله تعالى فيه، فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك
من حمر النعم.
நபி (ஸல்) அவர்கள்
கைபர் போரின்போது,
‘நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக்
கொடுப்பேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர்
எனில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்’ என்றார்கள்.
மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?’ என்று தமக்குள் (‘இன்னாரிடம் கொடுப்பார்கள்’ என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக்
கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ்லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில்
கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம்
வந்தவுடன்) ‘அலீ எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
‘அலீ அவர்களுக்குக் கண்
வலி’ என்று சொல்லப்பட்டது. எனவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரண்டு கண்களிலும் தம் எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக
(வலி நீங்கிட) பிரார்த்தித்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று
குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘அவர்கள் நம்மைப் போன்று (இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக)
ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்’ என்று அலீ அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை
ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்களின் மீது
கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்
வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான)
சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி),( நூல்: புகாரீ )
மாநபித்தோழர்களிடையே
அல்லாஹ் நம்மையும் நேசிக்கின்றான், அல்லாஹ் நம்மை
நேசிப்பதற்கான தகுதி நம்மிடையே இருக்கின்றது என்கிற ஆழமான நம்பிக்கை ஒவ்வொருவரிடமும்
இருந்தது.
அல்லாஹ் சிரித்த நிலையில்
வர வேற்க வேண்டும் என்று விரும்பினார்கள்..
ضرب أعلى مثل في حب الرسول صلى الله عليه وسلم
والبر بالوالدين.. كان يشتاق إلى لقاء الرسول الكريم ليبايعه على
الإسلام.. ويصبح من الشباب المسلم الذي يجاهد بنفسه في سبيل الله وإلاء راية
دينه رغم صغر سنه، وذات يوم أراد أن يحقق هذه الأمنية.. فانطلق إلى المسجد فوجده
حافلا بالمهاجرين والأنصار...يستمعون إلى حبيبهم المصطفى صلى الله عليه وسلم..
فأخذ مكانه في مؤخرة الصفوف، حيث يجلس الصبية الغلمان .إنه الصحابي طلحة بن البراء
رضي الله عنه.
ولما فرغ رسول الله صلى الله عليه وسلم، من حديثه، وبدأ الصحابة رضوان
الله عليهم يأخذون طريقهم إلى خارج المسجد...اقترب طلحة بن البراء من رسول الله،
وأخذ يقبل يديه في شغف ومحبة...ويقول له: أنا طلحة بن البراء ابن عمر.. جئت أبايعك
على الإسلام....فمرني بما أحببت...لا أعصي لك أمرا...وينظر الرسول إلى هذا الغلام
الذي أقبل عليه يطلب مبايعته، ويربت كتفه قائلا: " وإن أمرتك بقطيعة
والديك؟". فيرد طلحة "لا".. لأن له أما يبرها أشد البر....ويحبها
أعمق الحب...ولا يتصور أن يصبح عاقا لوالديه.... فيكرر عليه الرسول العبارة
السابقة...ويكرر طلحة الرد نفسه.., لكنه في المرة الثالثة قال: "نعم"..
தல்ஹா இப்னு பர்ராவு அவர்கள் பெருமானார் {ஸல்} அவர்களைக்காண மஸ்ஜிதுன் நபவீக்கு வருகை தருகின்றார்கள். அங்கே, தொழுகை முடிந்து முஹாஜிர்களும், அன்ஸாரிகளும் சூழ அமர்ந்திருக்க மாநபி {ஸல்} அவர்கள் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.
சிறுவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் போய் அமர்ந்த தல்ஹா இப்னு பர்ராவு அவர்கள் மாநபி {ஸல்} அவர்கள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார்கள். பேசி முடித்ததும் சபை கலைந்து அவரவர்கள் தங்களின் வழியே பிரிந்து சென்று கொண்டிருந்தனர்.
அண்ணலாரின் அருகே வந்த அந்த இளவல் “நான் தல்ஹா இப்னு பர்ராவு இப்னு உமர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, உங்களின் கரங்களைக் கொடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் இஸ்லாத்தின் மீது பைஅத் (பிரமாணம்) கொடுக்க வந்திருக்கின்றேன். நீங்கள் விரும்பியதை எனக்கு கட்டளை இடுங்கள்! உங்களுக்கு ஒரு போதும் நான் மாற்றம் செய்ய மாட்டேன். என்று கூறி நின்றார்.
“உம் பெற்றோர்களை விட்டு விட்டு வந்து விடு” என்று நான் உமக்கு ஏவினால் நீர் என்ன செய்வீர். நான் அப்படி செய்ய மாட்டேன் என்றார். ஏனெனில், தன் பெற்றோரின் மீது ஆழமான அன்பு வைத்திருப்பவர் தல்ஹா. அவர்களுக்கு அழகிய முறையில் பணிவிடை செய்து வருபவர் தல்ஹா.
மீண்டும் முன்பு போன்றே பெருமானார் {ஸல்} அவர்கள் கூற, மீண்டும் தல்ஹா அதே பதிலையே கூறினார். மூன்றாம் முறையாக மாநபி {ஸல்} அவர்கள் அதே போன்று கேட்ட போது “அல்லாஹ்வின் தூதரே! நான் விட்டு விட்டு வந்து விடுகின்றேன்” என்றார்.
அது கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்த முகத்தோடு அவரை நோக்கி, “தல்ஹாவே! உறைவை முறித்து வாழ்வது நம் தீனுடைய பண்பாடல்ல. உம் தீனில் எவ்வித சந்தேகமும் நீ கொண்டு விடக்கூடாது என்று நான் விரும்பினேன். ஆகவே, உம்மிடம் இவ்வாறு கூறினேன்” என்றார்கள்.
தல்ஹா இப்னு பர்ராவு (ரலி) இஸ்லாத்தை ஏற்றார்கள். சில காலம் மாநபி {ஸல்} அவர்களோடு தோழமை கொண்டிருந்தார். ஆர்வத்தோடு குர்ஆனைக் கற்றார். போர் முறை கற்றுக்கொண்டார். போரில் பங்கெடுத்தார். ஒரு போரில் காயம் அடைந்தார். அந்த காயத்தின் காரணமாக திடீரென அவர் உடல் நிலை சரியில்லாமல் ஆனார். சில நாட்களில் மரணத்தின் விளிம்புக்கே வந்து விட்டார்.
எப்போதும் பள்ளியோடு தொடர்பில் இருந்த தல்ஹாவை காணாத நபி {ஸல்} அவர்கள் தோழர்களிடத்தில் விசாரிக்க, தோழர்கள் அவரின் நிலையை கூறினார்கள். நபி {ஸல்} அவர்கள் நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். ஆனால், அவர் நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்தார். பெருமானார் {ஸல்} அந்த தோழர் குறித்து அருகில் அமர்ந்திருந்த தோழர்களிடம் “இவர் இந்த நோயிலேயே இரவு நேரத்தில் இறந்து போனால் எந்நேரம் ஆனாலும் என்னிடம் வந்து தகவல் சொல்ல வேண்டும்” என்று கூறி விட்டு சென்று விட்டார்கள்.
பெருமானார் {ஸல்} அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கண் விழித்தார். பெருமானார் {ஸல்} அவர்கள் வந்ததையும், சொன்னதையும் தல்ஹா (ரலி) அவர்களிடம் கூறிய போது “நான் இதே நிலையில் இறந்து விட்டால் நபி {ஸல்} அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், இரவு நேரம் பெருமானார் {ஸல்} அவர்களுக்கு விரோதிகளாலோ, விஷ ஜந்துக்களாலோ ஏதும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது. நான் ஸலாம் சொன்னதாக சொல்லி விடுங்கள். எனக்காக மாநபி {ஸல்} அவர்களிடம் துஆச் செய்ய சொல்லுங்கள்” என்றார். சிறிது நேரத்தில் இந்த உலகை விட்டும் விடை பெற்றார் தல்ஹா இப்னு பர்ராவு (ரலி) அவர்கள்.
وي أَنه توفي ليلًا، فقال: ادفنوني وأَلحقوني بربي، ولا
تَدْعوا رسول الله صَلَّى الله عليه وسلم، فإِني أَخاف عليه اليهود أَن يصاب في
سببي، فأَخبر رسول الله صَلَّى الله عليه وسلم حين أَصبح، فجاءَ حتى وقف على قبره،
وَصَفَّ الناس معه، ثم رفع يديه وقال
"اللَّهُمَّ، الْقَ طَلْحَةَ وَأَنْتَ تَضْحَكُ إِلَيْهِ وَهُوَ
يَضْحَكُ إِلَيْكَ"
அவரின் வஸிய்யத் அடிப்படையில் இரவோடு இரவாக இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கமும் செய்யப்பட்டது. மறுநாள் சுபுஹ் தொழுகைக்கு வந்த மாநபி {ஸல்} அவர்களிடம் தகவல் சொல்லப்பட்டது. தொழுது முடித்த பின் மாநபி {ஸல்} நபித்தோழர்களோடு தல்ஹா (ரலி) அடக்கம் செய்யப்பட்ட மண்ணறைக்கு வந்து ”அல்லாஹ்வே! நீ அவரை மகிழ்ச்சியோடு சிரித்த நிலையில் சந்திக்க வேண்டும். அவரும் உன்னை மகிழ்ச்சியோடு சிரித்த நிலையில் சந்திக்க வேண்டும்” என்று துஆச் செய்தார்கள்.
( நூல்: தபகாத்துல் குப்ரா, அல் இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா )
தனித்தனியாக நபித்தோழரிடமும்
புதைந்து கிடந்த தனிப்பெரும் பண்புகளையெல்லாம் ஒட்டு மொத்த நபித்தோழர்களிடமும் இடம்
பெற வேண்டும் என்பதற்காக வேண்டி பல தருணங்களில் அவர்களுக்கான சோபனங்களை மாநபி {ஸல்}
அவர்கள் நபித்தோழர்கள் முன்னிலையில் அறிவித்தார்கள்.
ஜுலைபீப் (ரலி) அவர்களைக்
குறித்து “இவர் என்னைச் சார்ந்தவர்! நான் அவரைச் சார்ந்தவர்!” என்றும், ஸல்மான் ஃபார்ஸீ
(ரலி) அவர்களை “ஸல்மான் எமது குடும்பத்தைச் சார்ந்தவர்” என்றும், சில நபித்தோழர்களை
பெயர் கூறியும், சில நபித்தோழர்களை சூசகமாகவும் “இவர் சுவனவாசி” என்றும், ஸஅத் இப்னு
ரபீஉ (ரலி) அவர்கள் “வாழும் போதும், இறக்கும் போதும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும்
உண்மையோடு நடந்து கொண்டவர்” என்றும் கூறி இத்தகைய பண்புகளின் பால் எல்லோரும், இத்தகைய
சோபனத்திற்குரிய வாழ்வை எல்லோரும் மேற்கொண்டு உயர்வடைய வேண்டும் என்றும் நபி {ஸல்}
அவர்கள் ஆசைப்பட்டார்கள்.
ஒரு கட்டத்தில் மாநபி {ஸல்}
அவர்கள் “சுவனம் நான்கு பேர்களை விரும்புகின்றது! அலீ, மிக்தாத், ஸல்மான், அம்மார்
(ரலி – அன்ஹும்) சுவனத்தை நாம் விரும்பும் ஒரு வாழ்க்கை இருப்பது போல், சுவனமே நம்மை
விரும்பும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்று கூறி அதற்குறிய சமூகமாக இந்த சமூகம் தம்மை
உருவாக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
இந்த ஆசையும், விருப்பமும்
மாநபி {ஸல்} அவர்களின் காலத்தோடு முடிந்து விட்டவை அல்ல. அந்த ஆசையும், விருப்பமும்
இன்றும் இருக்கவே செய்கின்றது.
பெருமானார் {ஸல்} அவர்கள்
ஆசைப்பட்ட, விரும்பிய சமூகமாக வாழ நாமும் முயற்சி செய்வோமாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அதன் பாதையை நமக்கு இலகுவாக்கி தருவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு தங்களுடைய பதிவை ஒவ்வொரு வாரமும் எதிர்பார்க்கிறோம் உஸ்தாத் அவர்களே
ReplyDelete