Thursday, 30 November 2023

What Is Islam’s Connection with Education? – இஸ்லாத்திற்கும் கல்விக்கும் என்ன தொடர்பு?

 

What Is Islam’s Connection with Education? –

இஸ்லாத்திற்கும் கல்விக்கும் என்ன தொடர்பு?


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12 –ஆம் வகுப்புகளுக்கான 2023 – 2024 கல்வியாண்டுக்கான  பொதுத்தேர்வு அட்டவணையை கடந்த 16/11/2023 வியாழக்கிழமையன்று வெளியிட்டார்.

10 –ஆம் வகுப்புக்கு பிப் 23 – பிப் 29 வரை செய்முறை தேர்வும், மார்ச் 26 – ஏப்ரல் 8 –ஆம் தேதி வரை பொதுத் தேர்வும்,

11 –ஆம் வகுப்புக்கு பிப் 19 பிப் 24 வரை செய்முறை தேர்வும், மார்ச் 4 மார்ச் 24 –ஆம் தேதி வரை பொதுத்தேர்வும்,

12 –ஆம் வகுப்புக்கு பிப் 12 பிப் 17 வரை செய்முறை தேர்வும், மார்ச் 1 மார்ச் 22 –ஆம் தேதி வரை பொதுத்தேர்வும் நடைபெறும் என்று அறிவித்து வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக மார்ச், ஏப்ரலில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த தேடல்களை, தீர்மானங்களை, ஆலோசனைகளை மேற்கொள்ளும் நாம் இந்த ஆண்டு தற்போது முதலே நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து திட்டமிட கடமைப்பட்டுள்ளோம்.

1903-ம் ஆண்டில் தமிழகத்தில் வெறும் 10 முஸ்லீம் மாணவர்கள் மட்டுமே. அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு 2002-2003 தமிழக புள்ளி விபரப்படி தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 25,000க்கு மேலாக உயர்ந்திருந்தது.

தற்போது 2023 -ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கடந்த 20 ஆண்டுகளில் இலட்சக்கணக்கான எண்ணிக்கையை தொட்டிருக்கும் என்று நாம் நினைத்தால் உண்மையில் நம்மை விட ஏமாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அடுத்த கல்வியாண்டின் உயர்கல்விக்கான தேடலை, தீர்மானத்தை, திட்டமிடலை நாம் துவங்க வேண்டியதன் அவசியம் இப்போதே ஏன் வந்து விட்டது என்று நீங்கள் கேட்பீர்களேயானால் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான “இரண்டு கட்டுரைகள்” முஸ்லிம் சமூகத்தின் உயர்கல்வி லட்சணத்தை தோலுரித்து காட்டுவதோடு, வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவில் முஸ்லிம் சமூகம் மட்டுமே தொடர்ந்து வறுமை எனும் விஷச் செடியில் சிக்குண்டு இருப்பதை புள்ளி விவரங்களோடு அந்த இரண்டு கட்டுரைகளும் விவரிக்கின்றன.

சுருக்கமாக சொல்வதானால் “உயர்கல்வியில் முஸ்லிம் சமூகம் கடந்த 2020 – 2021 –ல் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கல்வி இன்மையால் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது” இது தான் அந்த இரண்டு கட்டுரைகளின் சாராம்சம்.

புள்ளிவிவரங்களுடன் கூடிய துல்லியமான விரிவான அந்த இரண்டு கட்டுரைகள் இதோ உங்கள் பார்வைக்கு..

உயர்கல்வியில் வீழ்ச்சி குறித்து விவரிக்கும் கட்டுரை..

இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் இஸ்லாமிய மாணவர்களின் விகிதம், 2020-21-ல் எஸ்சி, எஸ்டி-யினரின் விகிதத்தைவிட குறைந்துள்ளது.

உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு (AISHE) சார்பில் 2020-21-க்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய AISHE-ன் கணக்கெடுப்பின்படி, 2020-21-ல் உயிர் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் 8% குறைந்துள்ளனர். அதேநேரத்தில், ஓபிசி பிரிவு 4 சதவீதமும், எஸ்சி பிரிவு 4.2 சதவீதமும், எஸ்டி பிரிவு 11.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர் கல்வி பயில சென்ற இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரம் மட்டுமே.

உத்தரப் பிரதேசத்தில் 36 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 26 சதவீதமும், மகாராஷ்ட்டிராவில் 8.5 சதவீதமும், தமிழகத்தில் 8.1 சதவீதமும் இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் சரிந்துள்ளது

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி மாநிலம் கல்வியில் முன்னேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அங்கு 12-ம் வகுப்பு முடித்த இஸ்லாமிய மாணவர்களில் 20 சதவீதம் பேர் உயர் கல்விக்குச் செல்லவில்லை. அதேபோல், உத்தரப் பிரதேசத்திலும் உயர் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இருந்தும் அங்கு இஸ்லாமிய மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது.

கேரளாவில் மட்டுமே இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி விகிதம் 43% என்ற நல்ல நிலையில் உள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவர்களில் 36 சதவீதம் பேர் ஒபிசி வகுப்பையும், 14 சதவீதம் பேர் எஸ்சி வகுப்பையும் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் இஸ்லாமியர்களின் விகிதம் 14% ஆக உள்ள போதிலும், உயர் கல்வி பயிலும் இஸ்லாமியர்கள் 4.6 சதவீதம் மட்டுமே உள்ளனர். இதில், ஆச்சரியம் தரும் விஷயமாக, இஸ்லாமிய ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி பயில்கிறார்கள்.

உயர் கல்வி பயிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைவதால், அது ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது. ஆசிரியர்களில் பொதுப் பிரிவினர் 56 சதவீதம் உள்ளனர். ஓபிசி 32 சதவீதமும், எஸ்சி 9 சதவீதமும், எஸ்டி 2.5 சதவீதமும் உள்ளனர். இஸ்லாமியர்கள் 5.6 சதவீதம் உள்ளனர்.

ஆசிரியர்களில் 100 ஆசிரியர்களுக்கு 75 ஆசிரியைகள் மட்டுமே உள்ளனர். ஓபிசி பிரிவில் 100 ஆசிரியர்களுக்கு 71 ஆசிரியைகளும், எஸ்டி பிரிவில் 100 ஆசிரியர்களுக்கு 75 ஆசிரியைகளும் உள்ளனர். அதேநேரத்தில், முஸ்லிம் ஆசிரியர்களில் 100 ஆண் ஆசிரியர்களுக்கு, 59 பெண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

2020-21ல் உயர் கல்வியில் சேர்ந்தவர்கள் மொத்தம் 41 லட்சத்து 38 ஆயிரத்து 71 பேர். இதில், ஆண் மாணவர்களின் விகிதம் 51.33, மாணவிகளின் 48.67 சதவீதம். ( நன்றி: தமிழ் திசை இந்து, 30/05/2023 )

கல்வியின்மையும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி. குறித்த கட்டுரை..

தொழிலாளர் வர்க்கம் குறித்து தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம்’ (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. வெவ்வேறு மதக் குழுக்களுடைய பொருளாதார, கல்வி அளவுகோல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் வறுமையிலேயே சென்று முடியும் விஷ வட்டத்துக்குள் சிக்கியிருப்பது தெரிகிறது.

என்எஸ்எஸ்ஓ-வின் 68-வது சுற்று (2011-12), வெவ்வேறு மதங்களுக்கிடையில் கல்விநிலை, வேலைவாய்ப்புக் குறியீடுகளை ஒப்பிடுகிறது. கல்வியில் எல்லா மதத்தினரையும்விட முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளனர்.

நகர்ப்புறங்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1,000-க்கு 15 பேர்தான் முஸ்லிம்கள். பிற மதத்தினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களுடன் ஒப்பிடுகையில் இது நான்கு மடங்கு குறைவு. முஸ்லிம் மகளிரும் குறைவாகவே உள்ளனர். முஸ்லிம்களுக்குள்ளேயே ஆண் பட்டதாரிகள் ஆயிரத்துக்கு 71. இது பிற சமூகங்களைவிட பாதி; மேல்நிலைப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி வரையில் படித்த முஸ்லிம்கள் 1,000-க்கு ஆடவர் 162, பெண்கள் 90 என்று உள்ளது. இந்த எண்ணிக்கையும் பிற மதங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.

கல்வியில் ஏற்படும் சவால்கள்

பள்ளிக் கல்வியில் முஸ்லிம்கள் மிக மிகப் பின்தங்கியிருப்பதாலேயே இப்படி நேர்கிறது. எழுத்தறிவில்லாதவர்கள் முஸ்லிம்களில் 1,000-க்கு 190. இதுவே இந்துக்களில் 84, சீக்கியர்களில் 79, கிறிஸ்தவர்களில் 57 ஆக உள்ளது. பதினைந்து வயதுக்கு அதிகமானவர்களில் தொடக்கக் கல்வி அல்லது நடுநிலைக் கல்வி பயின்றவர்கள் முஸ்லிம்களில் 1,000-க்கு ஆடவர் 257, மகளிர் 198 ஆக இருக்கிறது. உயர் கல்வி, மேல்நிலைக் கல்வி, நடுநிலைதொடக்கநிலைக் கல்வி என்று மூன்று நிலைகளிலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம்கள் படிக்கச் செல்லும் நாட்களும் மற்ற மதத்தவர்களைவிடக் குறைவாகவே இருக்கிறது. 5-14 வயதுப் பிரிவில் 1,000-க்கு 869 பேரே அதிக நாட்கள் படிக்கச் செல்கின்றனர். இதில் கிறிஸ்தவர்கள் 981, சீக்கியர்கள் 971, இந்துக்கள் 955. இந்துக்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் இதில் பின்தங்கியுள்ளனர். 14 வயதுக்கு மேற்பட்டோரில் இந்த வேறுபாடு மேலும் தீவிரமாக இருக்கிறது.

முஸ்லிம்களின் கல்விநிலை உயர உயர வருகைப் பதிவு குறைவதற்கு ஒரு காரணம், படிப்புக்கான செலவு அதிகமாவதும் அதைச் சமாளிக்க முடியாமல் படிப்பைக் கைவிடுவதும்தான். முஸ்லிம்களின் நபர்வாரி அன்றாட நுகர்வுச் செலவு ரூ.32.66. சீக்கியர்கள் ரூ.55.30, கிறிஸ்தவர்கள் ரூ.51.43, இந்துக்கள் ரூ.37.50. 2014-ல் என்எஸ்எஸ்ஓ தயாரித்த 71-வது ஆய்வறிக்கையின்படி கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கவும் தொழில்நுட்பப் படிப்பு படிக்கவும் சராசரியாக அரசுக் கல்லூரிகளில் தலா ரூ.25,783, ரூ.64,442 ஆகிறது. முஸ்லிம்களின் நபர்வாரி வருவாயுடன் இதை ஒப்பிட்டால் அவர்களால் ஏன் உயர் கல்வி படிக்க முடியவில்லை என்பது விளங்கும்.

14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி இலவசம் என்று கல்வி உரிமைச் சட்டம் வகை செய்துள்ளது. உயர், ஆரம்பக் கல்விக்கு சராசரியாக ரூ.508 கட்டணமாக இருக்கிறது. கல்விக் கட்டணங்கள் எல்லா மதத்தினருக்கும் சமம்தான் என்றாலும் முஸ்லிம்களின் குறைந்த வருவாய் காரணமாக அவர்களுக்குச் சுமை அதிகமாகிவிடுகிறது. உயர், ஆரம்பக் கல்விக்கு முஸ்லிம்கள் செலவழிப்பது அவர்களுடைய மொத்த வருவாயில் 8.5%. அதுவே இந்துக்களுக்கு 7.4%, கிறிஸ்தவர்களுக்கு 5.4%, சீக்கியர்களுக்கு 5.03% ஆக இருக்கிறது.

கல்வியின்மையும் வறுமையும்

முஸ்லிம்களில் படிக்காதவர்கள் அதிகம் இருப்பதும், உயர் கல்வி கற்றவர்கள் குறைவாக இருப்பதும் அவர்களைத் தொடர்ந்து வறுமைச் சுழலிலேயே ஆழ்த்துகின்றன. உயர் கல்வி இல்லாததால் நல்ல வேலைவாய்ப்பிலும் அவர்கள் பின்தங்கியுள்ளனர். தொழிலாளர் சந்தையில் நல்ல வேலை கிடைக்க அறிவும் தொழில் திறனும் அவசியம். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆர்) என்பது வேலையில் உள்ளோர், வேலை தேடுவோர், வேலை செய்யும் விருப்பம், கல்வித்தகுதி ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. வேலைவாய்ப்பின் தரம், கல்வி, திறன் நிலைகளுடன் நேரடி வீதத்தில் தொடர்புள்ளது. எனவே, கல்வியில் பின்தங்கிய சமூகம் தொடர்ந்து வறுமைச் சுழலிலேயே சிக்குகிறது. அரசின் தலையீடு இல்லாமல் இதை உடைப்பது எளிதல்ல.

முஸ்லிம்களின் வறுமைச் சுழலை அவர்களுடைய மிகக் குறைந்த நுகர்வு, சுமாரான வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்பு அந்தஸ்து, மொத்த மக்கள்தொகையில் எத்தனை பேர் தொழிலாளர்கள் என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். முஸ்லிம் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கு 342 (நகரம்), 337 (கிராமம்) என்று உள்ளது. மகளிர் பிரிவிலும் முஸ்லிம்கள் இதில் பின்தங்கியுள்ளனர். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில்தான் வாழ்கின்றனர். நகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் என்றாலும் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதால்தான் வேலைவாய்ப்பிலும் பின்தங்குகின்றனர்.

நகரங்களில் நிரந்தர வேலையில் ஈடுபடும் முஸ்லிம்கள் ஆயிரத்துக்கு 288 (ஆடவர்), 249 (மகளிர்) என்று இருக்கிறது. கிறிஸ்தவர்கள் (494 ஆடவர், 647 மகளிர்), இந்துக்கள் (463 ஆடவர், 439 மகளிர்), சீக்கியர்கள் (418 ஆடவர், 482 மகளிர்) என்று உள்ளனர். நிரந்தரமான மாதச்சம்பளம் வாங்கும் முஸ்லிம்களின் விகிதமும் பிற மதத்தைவிடக் குறைவாகவே இருக்கிறது.

இந்த விஷ வட்டத்திலிருந்து முஸ்லிம்கள் விடுபட மத்திய, மாநில அரசுகள்தான் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் கல்வி கற்க அவர்களுக்குக் கல்வி மானியம், ஊக்குவிப்புகள் தரப்பட வேண்டும். இதனால் ஆரம்பநடுநிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் உயர்நிலைமேல்நிலைக் கல்வி வரை படிக்கவும், அடுத்த நிலையில் கல்லூரிகளில் படிக்கவும் முடியும். பொதுப் பாடப்பிரிவுகளில் படிக்க விரும்பாத மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் தொழில் கல்வி அளிக்க வேண்டும். ( நன்றி:  தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழ் திசை இந்து 18/11/2023 தமிழாக்கம் செய்த கட்டுரை )

கல்வியும்.. இஸ்லாமும்...

வ்வொரு மனிதனின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன் தனக்கும் தம் சமுதாயத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து கொள்வதற்கு இது ஒரு முக்கியமான கருவியாகும்.

கல்வி தனக்குத்தானே ஆசைப்படுவதில் இல்லை மாறாக அது சில இலக்குகளை அடைவதற்கான வழிமுறையாகும். ஒவ்வொரு நாகரிகத்திலும் கல்வியின் நோக்கங்களும் அதன் புரிதல் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் நாகரிகத்திலும் கல்வியின் நோக்கங்கள், அதன் அகமியங்கள், அதனால் ஏற்படும் பாரிய உயர்வுகள், சுய மற்றும் சமூக மாற்றங்கள் என மிக ஆழமாகவே இடம் பெற்றுள்ளன.

எனவே, ஒரு முஸ்லிம் பெறும் கல்வி என்பது மிகச் சாதாரண்மாய் அமைந்து விடாமல், அவனுக்கும் அவன் சமூகத்திற்கும் பயனுள்ளதாய் அமைந்திருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் விரும்புகின்றது. அதையே உலக மக்களின் முன்மாதிரி மனிதர் முஹம்மது அவர்களும் விரும்பினார்கள் என்பதை நாம் அவர்களின் வரலாற்றின் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

எதிர்காலத்தைச் சீர்படுத்தக் கூடிய கல்வி என்பது நமது குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக அமைந்து, அதன் மூலம் பிறருக்கும் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். அப்படி அமைவதற்காக, பயனற்ற கல்வியை விட்டும் படைத்தவனிடம் நாள்தோறும் பாதுகாப்புத் தேட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் வள்ளல் நபி அவர்கள்.

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

وَعَنْ زَيْدِ بنِ أَرْقَم  قَالَ: كَانَ رَسُولُ اللَّه ﷺ يقَولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، والبُخْلِ وَالهَرم، وعَذَاب الْقَبْر، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ ولِيُّهَا وَموْلاَهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلمٍ لا يَنْفَعُ، ومِنْ قَلْبٍ لاَ يخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشبَعُ، ومِنْ دَعْوةٍ لا يُسْتجابُ لهَا رواهُ مُسْلِمٌ.

ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறி வந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனை யிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப் படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.

இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்தி லிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.) ( நூல்: முஸ்லிம் 5266 )

பயனுள்ள கல்வியைப் பெற்றவர் மூலமே சமூகம் மேம்படும்..

மனித குலத்தின் நலனுக்கானது பூமியில் இருக்கும் போது நுரை வெளியேறுவது போல் குப்பைகள் மறைந்துவிடும் இதுவே குர்ஆனின் விதியாகும்.

فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً‌‌ وَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِ‌ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَؕ‏

அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான். ( அல்குர்ஆன்: 13: 17 )

எது பயனுள்ள கல்வி?

தற்போது ஃபலஸ்தீன மக்கள் துன்புறும் காட்சியை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம். ஏன் ஃபலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் சரிக்கு சரி நிகர் நின்று போராட முடியவில்லை. ஈமானிய உறுதியும், சன்மார்க்க நேசமும் இருப்பதோடு அவர்களை அதாவது இஸ்ரேலை எதிர்கொள்ள தேவையான வலிமை இல்லை. அந்த வலிமை மட்டும் இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் குண்டுகள், ஏவுகணைகள், துப்பாக்கித் தோட்டாக்கள் மூலம் கண் முன்னே கொத்து கொத்தாய் மடிந்து மாய்ந்து போய் இருக்குமா?

இஸ்ரேல் ஒரு சிறிய நாடு, ஆனால் முழு இஸ்லாமிய உலகத்தையும் விட அதில் மட்டுமே அதிக விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களும் உள்ளனர்.

முஸ்லீம் நாடுகளில் எந்த உயர் பல்கலைக்கழகமும் இல்லை. ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளாக, முஸ்லீம்கள் எந்த அறிவியல் துறையிலும் குறிப்பிடத்தக்க மற்றும் விகிதாசார முன்னோடி பங்களிப்பை வழங்கவில்லை. எந்த முக்கியமான கண்டுபிடிப்பு அல்லது பெரிய முன்னேற்றம் அவர்களுக்கு காரணமாக இல்லை, அதே போல் முஸ்லீம் நாடுகளில் பெரிய ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.

மனிதவளம், புவிசார் அரசியல், முஸ்லீம்களின் மையப்பகுதியின் இருப்பிடம் மற்றும் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களிடம் பெரும் வளங்கள் உள்ளன, ஆனால் எந்த பயனும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், இன்றைய உலகில் அவர்கள் மனிதகுலத்திற்கும் இயற்கையின் சட்டத்திற்கும் பயனுள்ளவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் இருப்பதை நிரூபிக்கவில்லை, இல்லை, 

இறை நம்பிக்கையுடன் கூடிய அறிவியல் முன்னேற்றத்தையே இஸ்லாம் வலியுறுத்தி நிற்கின்றது. பல திறன்களையும் அபார ஆற்றல்களையும் பெற்றிருந்த நபி ஸுலைமான் (அலை) அவற்றை வைத்து அத்துமீறலிலோ, அட்டகாசத்திலோ ஈடுபடவில்லை; பெருமையோ இறுமாப்போ கொள்ளவில்லை. மாறாக 'இது எனது இறைவன் எனக்களித்த அருளாகும்' என்று பணிவுடன் பகர்ந்தார்கள்.

துல்கர்ணைன் (அலை) அவர்கள் தனது அபார அறிவியல் ஆற்றலைப் பிரயோகித்து ஒரு பெருமதிலைக் கட்டிய போது மக்கள் அதற்காக அவருக்கு சன்மானம் வழங்க முற்பட்ட போதும் மிகவும் அடக்கமாக 'இது எனது இறைவன் எனக்கு அளித்த அருளாகும். எனது இறைவனின் குறித்த வாக்களிக்கப்பட்ட நாள் வந்து விடும் போது இந்த மதில் தவிடு பொடியாகிவிடும்' என்றார்கள்.

இத்தகைய ஈமானிய உள்ளம் படைத்தவர்களிடம் இடம் பெற்றது போன்று அறிவும், ஆராய்ச்சியும் எப்போது நாம் பெறுகின்றோமோ, நமது சந்ததிகள் பெறுகின்றார்களோ அப்போது தான் இந்த உலகம், அறிவியலால் உன்னதமான பயனைப் பெற முடியும்; அறிவியல் ஆக்கத்திற்கும், மனித வாழ்வின் சுபிட்சத்திற்கும் வழிவகுக்க முடியும் என்பதை நாம் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.

கல்வியின் முக்கியத்துவம்...

இந்த உலகில் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள கல்வி வழிகாட்டல் போல் வேறெந்த சமூகத்திற்கும் வழங்கப்படவில்லை என்று கூறினால் அது மிகையாகாது.

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல, அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமுமாகும். அது அறிவு ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும்.

கல்வியைப்பற்றியும் அதனைக் கற்பவரைப்பற்றியும், அதனைக் கற்பிப்பவரைப் பற்றியும் இஸ்லாம் விரிவாகப் பேசியுள்ளது.

அல்குர்ஆனை ஆராய்ந்து நோக்கும் போது அது அறிவுத்துறைக்கு கொடுத்திருக்கும் அழுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

'அறிவு' எனும் பொருள்படும் 'இல்ம்' எனும் பதம் அல்குர்ஆனில் எண்பது இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. இப்பதத்திலிருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தை கொடுக்கும் 'அல்-அல்பாப்' எனும் சொல் அல்குர்ஆனில் 16 தடவைகள் இடம் பெற்றிருக்கின்றது.

குறித்த பொருளைத் தரும் 'அந்நுஹா' எனும் சொல் இரு தடவைகள் இடம்பெற்று இருக்கின்றது. அல்குர்ஆனில் 'அல்-அக்ல்' எனும் பதம் அறிவு என்னும் பொருளைத்தரும். அதில் இடம்பெற்றுள்ள இந்த வினைச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் பதம்'அல்-பிக்ர்' என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. 'அல்-பிக்ஹ்' விளக்கம் என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன.

'அல்-ஹிக்மா' (ஞானம்) என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் எனும் பொருள்படும் 'அல்-புர்ஹான்' என்ற சொல் 7 தடவைகளும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆராய்தல், நோக்குதல், சிந்தித்தல் போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்குர்ஆனில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன

இவை அனைத்துக்கும் மேலாக அல்குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய வசனங்களோ, அறிவைப்பற்றியும் அறிவின் அடிப்படைகளகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதை பார்க்கின்றோம்.

ஆகவே, இந்த உம்மத்திற்கு கல்வி கற்பதில் இருந்து பின்னடைவைச் சந்திக்கவோ, கல்வி கற்பதில் இருந்து தூரமாகவோ எவ்வித அவசியமும் இல்லை எனலாம்.

மேலும், முழு உலகமும் இந்த முஸ்லிம் உம்மத்திடம் இருந்து தான் கல்வியறிவை, கண்டுபிடிப்பின் மூலத்தை ரகசியத்தை அடைந்து கொண்டது எனும் போது இந்த உம்மத்தை உயர் கல்வியில் இருந்து எது தான் தடுக்கின்றதோ? தெரியவில்லை.

மேற்கத்திய உலகம்  ஆழமான  அறிவைப்பெற விரும்பியபோதும் புராதன  சிந்தனையோடு அதன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள முற்பட்ட  போதும் முதலில் அது 
கிரேக்க மூலாதாரங்களை நோக்கியன்றி அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது. 
பேராசிரியர் (George Sarton) என்பவரது  அறிவியல் வரலாற்றிற்கு ஓர் அறிமுகம் (Introductio of History of Science) எனும் நூலில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

வியப்பூட்டும் சில செய்திகள்...

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வியப்பூட்டும் செய்திகள் இந்த சமூகத்தில் இருந்து வெளிப்படாமல் இல்லை. எனினும், பெரும் எண்ணிக்கையில் உள்ள ஒரு சமூகத்தில் இருந்து விரல் விட்டு எண்ணிடும் அளவிற்கான விஞ்ஞானிகளும் சாதனையாளர்களும் போதுமாகி விடுமா? என்பதை சமூகம் தான் தீர்மானிக்க வேண்டும்.

சந்திரயான் 3 திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பேக் என்ட்டில் பணியாற்றி சாதனை புரிந்துள்ளனர்.

இதில் செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்மனி இடம் பெற்றிருந்ததை முகநூல், வாட்ஸ்அப் வாயிலாக பரப்பி ஆனந்தமடைந்தது நம் சமூகம்.

கடந்த 2018 -ம் ஆண்டு தெலுங்கானா சிறுபான்மையினர் குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (TMREIS) சார்பாக ஆறு மாணவர்கள் 2018 நாசா சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

 

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) என்பது சிவிலியன் ஸ்பேஸ் புரோகிராம் மற்றும் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பொறுப்பான அமெரிக்க மத்திய அரசின் நிர்வாகக் கிளையின் ஒரு  நிறுவனம் ஆகும்.

7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் சையது இப்ராகிம் அலி, மகாவீன் முகமதி, சஃபா மஹீன், ஃபெரோஸ் ஹசனனைன், முஸ்கான் தபாசும் மற்றும் ஃபெரோஸ் அகமது ஆகியோர் அடங்கிய குழுவை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வாழ்த்தினார். ( நன்றி: இந்தியா டுடே வெப் டெஸ்க், 14/04/2018 )

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) கடந்த 2017 -ம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.

இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது.

ஏனென்றால் 64 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை உருவாக்கியது வேறு யாருமல்ல, தமிழ்நாட்டின்  (கரூர்) பள்ளப்பட்டியைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞன். இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் 18 வயது மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்.

3டி பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோள், வெறும் 64 கிராம் எடை கொண்டது, இது உலகின் மிக இலகுவான செயற்கைக்கோள் ஆகும். 

பிரபல விஞ்ஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான APJ அப்துல் கலாமின் பெயரிடப்பட்ட "KalamSat" என்ற செயற்கைக்கோள், ஜூன் 21 ஆம் தேதி நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது.

நாசா மற்றும் கல்விக் குழுவான           'ஐ டூடுல் லேர்னிங்' இணைந்து நடத்திய "கியூப்ஸ் இன் ஸ்பேஸ்" என்ற போட்டியில் ஷாரூக்கின் செயற்கைக்கோள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தில் பணிபுரியும் போது அவர் இந்த சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினார்.

செயற்கை கோள் என்பது...

"செயற்கைக்கோள் முக்கியமாக வலுவூட்டப்பட்ட கார்பன் ஃபைபர் பாலிமரால் ஆனது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு க்யூப் செயற்கைக்கோள்களில் நாங்கள் நிறைய ஆராய்ச்சி செய்தோம், எங்களுடையது மிகவும் இலகுவானது என்பதைக் கண்டறிந்தோம். சில கூறுகளை வெளிநாட்டில் இருந்து பெற்றோம், சில உள்நாட்டில் உள்ளன" என்று ஷாரூக் கூறினார் . என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. 

ஷாரூக் ஆரம்பத்திலிருந்தே விண்வெளி அறிவியலில் ஈர்க்கப்பட்டவர். 2015 இல், அவர் 1,200 கிராம் ஹீலியம் வானிலை பலூனை வளிமண்டலத்தில் செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ( நன்றி: இந்தியா டுமாரோ ஜேர்னலிஸம் ஆஃப் விஷன் & ஆப்டிமிசம் 17/05/2017 ) 

கர்நாடக மாநிலம் பிதாரில் அமைந்துள்ள ஷாஹீன் குழும கல்வி நிறுவனம், இந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றதன் சாதனையை கொண்டாடியுள்ளது. 

ஷாஹீன் குழும நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் அப்துல் காதீர் கூறுகையில், “வரவிருக்கும் நீட் 2023ல், மாணவர்களுக்கு 500 எம்பிபிஎஸ் இடங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 80 ஹாஃபிழ்கள் நீட் தேர்வில் 600 க்கு 600 என்று வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் இன்னொரு கல்வி நிறுவனமான அல் அமீன் மிஷன், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு  கல்வி நிறுவனம், இந்த ஆண்டு அதன் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இன்னொரு கல்வி நிறுவனமான மௌலானா முகமது வாலி ரஹ்மானியின் பயிற்சி நிறுவனம்,  நீட் 2023 தேர்வில் 41 மாணவர்கள் 600 மதிப்பெண்களைத் தாண்டி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் கர்நாடக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த சிறந்த முடிவுகள் இந்த முஸ்லிம் பயிற்சி நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்களை அவர்களின் மருத்துவ ஆசைகளுக்கு ஏற்ப தயார்படுத்தி, மக்கள் சமூக நலத்துறையில் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கின்றன. ( நன்றி: ஸலாமீ வத்தன், த ஹிந்தி Fortnightly(இரண்டு வாரத்திற்கு ஒரு முறை)நியூஸ் பேப்பர் 17/06/2023 )

மாஷா நஸீம்

மாஷா நஸீம் தற்போது 30 வயதை தாண்டி நிற்கும் பெண்.

பள்ளிக்கூடத்தில் அறிவியல் திட்டங்களின் ஒரு பகுதியாக அறிவியல் மாதிரிகளை வடிவமைப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். 

9 வயதில் இருந்து இதுவரை ஏழு பதக்கங்கள், இரண்டு சர்வதேச விருதுகள், இளம் விஞ்ஞானி உட்பட ஐந்து தேசிய விருதுகள் பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்று 11 லட்சம் மாணவர்களை சந்தித்துள்ளார்.

இவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் 5 தேசிய விருதுகள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது கண்டுபிடிப்புகளில் 14 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டு பிரதமர்கள் (மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகியோருடன்) சந்திப்பு, 14 மாநில முதலமைச்சர்களுடனான சந்திப்பு, 10 க்கும் மேற்பட்ட கவர்னர்களுடனான உரையாடல் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிரம்பிய சபையில் இரண்டு முறை உரையாடல் என தமது 9 வயதில் இருந்து 25 வயது வரை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

 

இவர் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர்கடை எனும் ஊரைச் சேர்ந்த காஜா நஜிமுத்தீன் சுமைய்யா பேகம் தம்பதியரின் மூத்த மகளாவார். தற்போது துபை அரசின் முக்கிய துறையின் கீழ் பணி புரிந்து வருகிறார். (தகவல்: ஆளூர், பேராசிரியர் அஸ்கர் அவர்கள், இயக்குனர், இ. எம் ஹனீஃபா எஃப். எம் ) ( இவர் குறித்த மேலதிக தகவல்களுக்கு கூகுளில் தேடினால் நிறைய கிடைக்கும் ).

20 கலைக்கல்லூரிகள், 7 பெண்கள் கலைக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 10 பாலிடெக்னிக்குகள் என பலதரப்பட்ட கல்லூரிகளையும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் தமிழகத்தில் நடத்தி வருகிற முஸ்லிம் மருத்துவக்கல்லூரிகளையும், தொழில் நுட்பக் கல்லூரிகளையும் எதிர்காலத்தில் நடத்த முன்வருவதோடு, முஸ்லிம் சமூக மாணவர்களை நீட் தேர்வு, மற்றும் மாநில அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி, தேர்வு, மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடும் அளவில் தயாராகிட இலவச மற்றும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி மையங்களை நிறுவி சேவையாற்றிட முன் வர வேண்டும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் பயணிக்கும் அரசியல் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இதில் மிகவும் முக்கியத்துவத்துடன் களப்பணியாற்றி எதிர் வரும் தலைமுறையை உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாண்பாளர்களாய் மாற்றிட கரம் கொடுக்க வேண்டும். மேலும், அனைத்து ஜமாஅத்துகளும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மஹல்லா மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேன்மையடைவதை உறுதி செய்ய வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயமும், அவசியமும் ஆகும்.

வல்ல ரஹ்மான் நம் சமூகத்தின் வெற்றிக்கும், வெற்றியை நோக்கிய முயற்சிக்கும் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!

1 comment:

  1. "மருத்துவக்கல்லூரிகளையும், தொழில் நுட்பக் கல்லூரிகளையும் எதிர்காலத்தில் நடத்த முன்வருவதோடு, முஸ்லிம் சமூக மாணவர்களை நீட் தேர்வு, மற்றும் மாநில அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி, தேர்வு, மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடும் அளவில் தயாராகிட இலவச மற்றும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி மையங்களை நிறுவி சேவையாற்றிட முன் வர வேண்டும்."
    இதுவே எனது கருத்துமாகும்.

    ReplyDelete