Thursday 18 January 2024

அபாபீல்கள் அல்லாஹ்வின் உத்தரவுக்காக காத்திருக்கின்றன!!

அபாபீல்கள் அல்லாஹ்வின் உத்தரவுக்காக காத்திருக்கின்றன!!


முஸ்லிம் சமூகம் இந்த உலகில் ஏகத்துவக் கோட்பாட்டைச் சுமந்த நாள் முதற்கொண்டு பலவீனமடையும். நோய்வாய்ப்படவும் செய்யும். ஆனால் அது முற்றாக அழிந்து போய்விட்டதாக, வீழ்ச்சியின் அதாலபாதாளத்தில் அது வீசப்பட்டு காணாமல் போனதாக வரலாற்றில் எங்கும் பார்த்திட இயலாது.

வீழ்ச்சி காணும் போதெல்லாம்மீண்டும் எழுச்சியின் சிகரங்களை அது தொட்டிருக்கிறது.

பலவீனம் அடையும் போதெல்லாம் மீண்டும் அது சக்தி பெற்று,  அதிகார சக்தியாக ஆட்சிபீடத்தில் பல நூற்றாண்டு காலம் அமர்ந்திருக்கிறது.

இந்த வரலாற்று நியதி இறந்த காலத்திற்கு மட்டும் உரியதல்ல. அது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தழுவியது.

சர்வதேச அளவிலான புள்ளிவிவரங்கள் எப்போது 2050 –ல், 2070 –ல், இஸ்லாம் இன்னின்ன நாடுகளில் முழுமையாக ஆட்கொண்டு விடும், நிலைபெற்று விடும் என்று அறிவிக்கத் தொடங்கியனவோ அன்றிலிருந்தே இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் முன்பை விட வேகமெடுக்கத் துவங்கி விட்டன. ஊடகங்களில் எதிர்மறை பிரச்சாரம் களைகட்டத் துவங்கியது. அவதூறு பிரச்சாரம் அலை, அலையாய் தொடரத்துவங்கியது.

அந்த புள்ளி விவர நாடுகளில் இடம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று.

அது முதற்கொண்டு ஃபாசிஸத்தின் கைகள் ஓங்கத்துவங்கி, இன்று எங்கு வந்து நாம் நின்று கொண்டிருக்கின்றோம் என்பது நாம் புரிந்து வைத்திருக்கின்றோம்.

அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி ஃபாசிஸம் நகரத்துவங்கி விட்டது. இன்னும் நாம் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றோம்.

அடுத்து அவர்கள் மதுரா பள்ளிவாசலை நோக்கி புறப்பட்டு விட்டார்கள். இனி அவர்களின் கரங்களில் உள்ள பட்டியலை நோக்கி மெல்ல படரத் துவங்குவார்கள். சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாம் அவர்களின் கரங்களில் தஞ்சம் புகுந்து மஞ்சத்தில் உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில் பள்ளிவாசல்கள் குறித்தான மாண்புகளை, சிறப்புகளை நாம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

படைத்தவன் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்று இஸ்லாம் உரக்கச் சொல்கிறது. 

இந்தக் கோட்பாடு என்பது எழுத்தளவில், வாயளவில் இல்லாமல்,  நடைமுறை வாழ்விலும் சாத்தியமாக்கிக் காட்டுகிறது. 

ஆம்! இந்தப் புரட்சிக்குரிய முக்கியக் களமாக, மனித ஒற்றுமையை, சமத்துவத்தை பிரதிபலிக்கும் இடமாக 

பள்ளிவாசல் திகழ்வதன் மூலம் அதன் சிறப்பையும், புகழையும் நாமெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 

பள்ளிவாசலைப் பற்றிப் பேசாமல் இஸ்லாத்தை முழுமையாகப் போதிக்க இயலாது என்கிற அளவுக்கு பள்ளிவாசல் இஸ்லாத்தோடும், இஸ்லாமிய சமூகத்தின் இதயத்தோடும் இரண்டறக் கலந்த தொடர்பைப் பெற்றிருக்கிறது.

மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டும், புணர் நிர்மாணம் செய்யப்பட்டும் வந்துள்ளதை வரலாற்றின் ஊடாக நாம் புரிந்து கொள்கின்றோம்.

எனவே தான், முதல் மனிதரும், முதல் இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்கள் மூலமாகவே இந்த பூமியில் பள்ளிவாசல் நிறுவப்பட்டு விட்டது. 

ஆதம் நபி அவர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல், மக்காவிலுள்ள கஅபதுல்லாஹ் என்பதையும் இரண்டாவது பள்ளிவாசல் ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸ் என்பதையும் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். ( அல்குர்ஆன்: 3: 96 )

 

حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ التَّيْمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلَ قَالَ ‏ ‏الْمَسْجِدُ الْحَرَامُ ‏ ‏قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ‏ ‏الْمَسْجِدُ الْأَقْصَى ‏ ‏قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ بَعْدُ ‏ ‏فَصَلِّهْ فَإِنَّ الْفَضْلَ فِيهِ ‏

நான் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம் மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்‘’  என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா’’ என்று பதிலளித்தார்கள்.

நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது’’ என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்’’ (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது). பிறகு, “நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது’’ என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) ( நூல்: புகாரி )

அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான இடம்...

இரண்டாவதாக நாம் பள்ளிவாசல்களை நேசிக்க வேண்டும். நமக்கு பிரியமானவைகளில் ஒன்றாக, நம் நேசத்திற்குரியவைகளில் ஒன்றாக பள்ளிவாசல்களுக்கும் இடமளிக்க வேண்டும். நம் மஹல்லா பள்ளிவாசல்களில் துவங்கி உலகின் முதல் ஆலயமான கஅபத்துல்லாஹ் வரை இந்த நேசப் பிணைப்பு நம் இதயத்தில், நம் உணர்வில் இரண்டறக் கலந்து விட வேண்டும். அப்படியான உணர்வு கொண்டவர்களை ஏந்தல் நபி {ஸல்} அவர்கள் “நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய அர்ஷின் நிழலில் இளைப்பாற இடம் தரும் ஏழு சாரார்களில் ஒரு சாரார்” என அடையாளப்படுத்தினார்கள். ஏனென்றால், பள்ளிவாசல் என்பது இந்த பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த, விருப்பமான இடமாகும்.

عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: ((أَحَبُّ البلاد إلى الله مساجدُها، وأبغضُ البلاد إلى الله أسواقها))؛ رواه مسلم.

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (1190)

மூன்றாவதாக, பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் சகிதமாக வணக்க வழிபாடுகளால் பள்ளிவாசல்களை நிரப்பமாக்க வேண்டும்.

நான்காவதாக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது காலைத்தைய, நபித்தோழர்களது காலத்தைய, தாபிஈன்கள், தபவுத்தாபிஈன்கள், இமாம்கள், நல்லோர்கள் காலத்தைய பள்ளிவாசல்களாக நாம் நமது பள்ளிவாசல்களை அமைக்க வேண்டும்.

இன்று நமது மஸ்ஜித்களோடு இணைந்த மருத்துவமனைகள், நூலகங்கள், மதரஸாக்கள், கலாசாலைகள், மக்களின் துயர் நீக்கும் பைத்துல்மால்கள் அமைத்திருக்கின்றோமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

இன்று நமது மஸ்ஜிதின் வளாகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் வைப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் நாம் ஒரு பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ கட்டுவதற்கு முன்வருகின்றோமா? அல்லது முன்னுரிமை கொடுக்கின்றோமா?

ஐந்தாவதாக, பள்ளிவாசல்களுக்கு கண்ணியமும், மரியாதையும் வழங்கி முழுமையாக பாதுகாக்க முன்வர வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பள்ளிவாசலுக்கு நம்மாலோ, பிறராலோ கண்ணியக்குறைவும், ம்ரியாதையின்மையும் ஏற்பட்டு விட அனுமதிக்கக் கூடாது.

ஆறாவதாக, பள்ளிவாசலின் வளர்ச்சியில் நம்மால் இயன்ற அளவுக்கு அல்லாஹ் நமக்கு அளித்துள்ள சக்தி, ஆற்றலுக்கு தக்கவாறு பொருளாதாரத்தால், அடையாளத்தால், செல்வாக்கால், உடல் உழைப்பால், அறிவால், நிர்வாகத்தில் இடம் பெற்று அதிகாரத்தால் பங்கு பெற வேண்டும்.

ஏழாவதாக, அந்த மஸ்ஜிதும், அந்த மஸ்ஜிதைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் வாழையடி வாழையாக மறுமை நாள் வரை நிலைத்திருக்க வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.

இவைகள் எல்லாம் ஒரு மஸ்ஜித் ஒரு பகுதியில் நிலைத்திருக்க நாம் பேண வேண்டிய அம்சங்களாகும்.  

ஒருக்கால் நாம் எதிர்பாராத அசம்பாவிதங்கள், ஆக்கிரமிப்புகள், இடிப்புகள் நடைபெற்று அந்த மஸ்ஜித் பாழ்படுத்தப்படுமானால் மீண்டும் அந்த இடத்தில் அந்த மஸ்ஜித் எழுப்பப்படும் வரை அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டு நாம் வாழும் காலத்தின் நிலைக்கு ஏற்ப நம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

பள்ளிவாசல்களுக்கு எதிரான சிந்தனை?

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் வரலாறு முழவதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஃபலஸ்தீனின் பைத்துல் முகத்தஸும், நம் தேசத்தின் பாபரி மஸ்ஜிதும் எதிரான சிந்தனை கொண்டவர்களாலேயே ஆக்கிரமிப்புக்கும், இடிப்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் சரி இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் முதலில் அவர்கள் கையில் எடுத்தது பள்ளிவாசல்களை இடிப்பது தான்.

நபி {ஸல்} அவர்கள் பிறப்பதற்கு முன்பே ஆப்ரஹா என்ற மன்னனுக்கு ஏற்பட்டிருந்ததை வரலாற்றின் மூலம் நாம் அறிகின்றோம்.

உலகில் எங்கெல்லாம் இஸ்லாமிய எதிர்ப்பு கிளம்புகின்றதோ அங்கெல்லாம் முதலில் அவர்கள் கையில் எடுப்பது பள்ளிவாசல்களுக்கு எதிரான சிந்தனையைத் தான்.

வரலாறு மீண்டும் திரும்பும்!!!

கி.பி 1612.கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்து வெளியேறிய ஆண்டு இது.

850 ஆண்டு கால இஸ்லாமிய பண்பாட்டை, பாரம்பரியத்தை, வரலாற்றை தாத்தாரிய, மங்கோலிய, சிலுவைப்படை வீரர்கள் அழித்து இனி இஸ்லாம் இந்த மண்ணில் தழைக்காது என்று கருதிய போது "உஸ்மானிய்யா பேரரசு" எனும் புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கினார் முஹம்மது அல் ஃபாத்திஹ் (ரஹ்).

கி. பி 1435 –ஆம் ஆண்டு ஹிஜ்ரி 857 –இல் 2,65000 இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் வீரர்களோடு காண்ஸ்டாண்டி நோபிளை நோக்கி படையெடுப்பை நடத்தினார்.

சுமார் 53 நாட்களாக கடல் வழியாகவும், தரை வழியாகவும் மிகப் பெரிய முற்றுகையிட்டு மகத்தான வெற்றி வாகை சூடினார்.

ஹிஜ்ரி 52 –இல் முஆவியா (ரலி) அன்ஹு அவர்களிடம் இருந்து துவங்கிய மகத்தான ஒரு போராட்டத்திற்கு வெற்றி வாகை சூடி சுமார் 805 ஆண்டு கால தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

வரலாற்றில் முஹம்மத் அல் ஃபாத்திஹ் என்ற நிரந்தர புகழுக்குச் சொந்தக் காரராக மாறிப்போனார்.

மேற்கூறிய சாதனையை செய்து உதுமானியப் பேரரசு உருவாகுவதற்கு முன்பாக இங்கே இஸ்லாமிய உலகு கண்ட நெருக்கடியும், சோதனையும் சொல்லி மாளாது.

உஸ்துல் காபா, அல் காமில் ஃபித் தாரீக் போன்ற வரலாற்று நூற்களை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கிய வரலாற்று ஆசிரியர் அந்த சோதனையான காலத்தில் வாழ்ந்து தன் சொந்த அனுபவத்தை வரலாற்று நூற்களில் இப்படி பதிவு செய்தார்கள்.

இந்த வெற்றியின் பிண்ணனியில் முஹம்மத் அவர்களின் தந்தை, ஆக் ஷம்சுத்தீன் (ரஹ்) அவர்களின் மகத்தான பங்களிப்பும், 800 ஆண்டு கால தொடர் முயற்சியும் உழைப்பும், அர்ப்பணிப்பும், தியாகங்களும் இருக்கின்றது. 

 நாம் வாழும் இந்த உலகின் 100 ஆண்டு கால ஏகாதிபத்திய, மேற்குலக, ஃபாஸிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்த உம்மத்திற்கு மகத்தான வெற்றியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்க வேண்டுமானால் நாமும் வெற்றிப் பாதையை நோக்கி முயற்சியும், உழைப்பும், அர்ப்பணிப்பும், தியாகங்களும் செய்திட முயற்சிக்க வேண்டும்.

மங்கோலிய தாத்தாரியப் படையெடுப்பும்,சிலுவைப் போர்களும் முஸ்லிம்  சமூகத்தை இரத்த வெள்ளத்தில் அமிழ்த்தியது. பாக்தாதில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மாங்கோலியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டபோது ஈராக்கே இரத்த வெள்ளத்தில் மிதந்தது.

அப்போது உயிர் வாழ்ந்த இப்னுல் அஸீர் (ரஹ்) என்ற வரலாற்றாசிரியர் தனது வாலாற்று நூலில் பாக்தாதில் நடந்த கொடுமைகள் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

حتى قال ابن الأثير _ رحمه الله _ : (( فيا ليت أمي لم تلدني ، وياليتني مت قبل حدوثها وكنت نسياً منسياً )) .

எனது தாய் என்னைப் பெறாமல் இருந்திருக்கக்கூடாதா? எனது கண்களால் இக்கொடுமைகளைக் காணாமல் இருந்திருக்க வேண்டுமேஎன்று.

ஆனாலும், அந்த வீழ்ச்சியிலிருந்து முஸ்லிம் சமுதாயம் மீண்டும் ஒருமுறை அல்லாஹ்வின் உதவியால் எழுச்சி பெற்று எழுந்தது. உஸ்மானியப் பேரரசு என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டியெழுப்பியது.

அந்த எழுச்சி என்பது உலக நிலப்பரப்பின் அரைவாசி அதன் ஆதிக்கத்தின்  கீழிருந்தது.

உலகில் முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கியவர்கள் பெரும்  மரியாதைக்குரியவர்களாக நோக்கப்பட்டார்கள். பொருளாதாரச் செழிப்பும் நீதியும் சமத்துவமும் உலகை ஆண்டது. இது பல நூற்றாண்டுகள் நீடித்தது.

முஸ்லிம் சமுதாயம் பலவீனமடையும். நோய்வாய்ப்படவும் செய்யும். ஆனால் அது முற்றாக அழிந்து போய்விட்டதாக, வீழ்ச்சியின் அதாலபாதாளத்தில் அது வீசப்பட்டு காணாமல் போனதாக வரலாற்றில் எங்கும் பார்த்திட இயலாது.

வீழ்ச்சி காணும் போதெல்லாம்மீண்டும் எழுச்சியின் சிகரங்களை அது தொட்டிருக்கிறது.

பலவீனம் அடையும் போதெல்லாம் மீண்டும் அது சக்தி பெற்று,  அதிகார சக்தியாக ஆட்சிபீடத்தில் பல நூற்றாண்டு காலம் அமர்ந்திருக்கிறது.

இந்த வரலாற்று நியதி இறந்த காலத்திற்கு மட்டும் உரியதல்ல. அது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தழுவியது.

850 ஆண்டு கால சிறப்புக்குரிய, மாண்புக்குரிய இஸ்லாமிய ஸ்பெயின் அத்தோடு முடிந்து போனதா? இல்லை, இல்லை இன்று மீண்டும் அங்கே இஸ்லாம் துளிர் விட்டு தழைத்தோங்க துவங்கியுள்ளது.

மீண்டும் வானுயர்ந்த மினாராக்களை கொண்ட பிரம்மாண்டமான மஸ்ஜிதுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதை தற்போதைய ஸ்பெயின் வரலாறு நமக்கு பறைசாற்றுகிறது.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் சத்தமில்லாமல்  ஒரு இன அழிப்பை ரஷ்யா மேற்கொண்டது.

(1940-1945) மாபெரும் இனப்படுகொலை நடந்த இடம் செச்சன்யா . இது ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதி .

இங்கு அழிவுக்குள்ளானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள். அழிவை ஏற்படுத்தியவர்கள் ஜோசப் ஸ்டாலின் என்பவரை தலைவராக கொண்டிருந்த ரஷ்யர்கள் அல்லது பொதுவுடைமை தத்துவம் பேசுபவர்கள் .

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 இலட்சமாகும் . கம்யூனிஸ்டுகளின் கணக்கின் படி 4,78,479 ஆகும்.  ( ஆதாரம்: Radiance News Week 11th Feb 2007 )

இத்தனை இலட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்தியை , இரும்புத்திரை போட்டு மூடிவிட்டார்கள் ரஷ்யர்கள்.

இந்த மாபெரும் இனச்சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை நடந்த நாள் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 . இதை உலக செச்சன்யா நாள் ( World Chechn Day) என அழைக்கின்றார்கள்.

ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. சுமார் 800 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பூட்டு போடப்பட்டன.

1953 வரலாறு திரும்பியது. மீண்டும் செச்சன்யா முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களின் ஊடாக தங்களுடைய முயற்சிகளை முன்னெடுத்தனர்.

1953 இல் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் இறந்தான் . அதுவரை செச்சன்யா முஸ்லிம்கள் நிம்மதியற்ற வாழ்கை அநீதி ,அவமானம் மரணம்  இவற்றையே சந்தித்தார்கள். ஸ்டாலினுடைய மரணத்திற்கு பின்னர் செச்சன்யா முஸ்லிம்கள் தாங்கள் மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதி அளிக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள்.அத்தோடு சோவியத் அரசின் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் செய்தது கொடுமை என்பதை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் . நிவாரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அழுத்தமாகப் போராடினார்கள் .

இவர்களின் இடைவிடாத போராட்டத்தின் பயனாக 1956 இல் கம்யூனிச கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் -மாபெரும் கூட்டம் சோவியத் அதிபர் குருச்சேவ் செச்சன்யா மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமைதான் என்பதை ஒப்புக்கொண்டார்,

இந்த தவறை அவர் ஏற்றுக் கொண்டவுடன் செச்சன்யா மக்கள் தங்களுடைய சொந்த இடம் நோக்கி பயணம் செய்தார்கள். இந்தப் பயனத்தின் போது புதைக்கப்பட்ட தங்கள் சொந்தபந்தங்களின் எலும்புகளை தங்களுடன்  எடுத்து வந்தார்கள். அவற்றை தங்கள்  மூதாதையர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் புதைக்க வேண்டும் என விரும்பினார்கள்.

இவர்கள் செச்சன்யா வந்து சேர்ந்த போது தங்களுடைய குடியிருப்புகள் எல்லாம் ரஷ்ய மக்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டிருப்பதை  பார்த்தார்கள் . ஆகவே அங்கே  இன்னொரு போராட்டத்தை அவர்கள் தொடங்க வேண்டியதாயிற்று .அவர்கள் அங்கு வாழ்ந்தபோது ஏற்படுத்தி வைக்கபட்டிருந்த இஸ்லாமிய அடையாளங்கள்  அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் அல்லாமல் 800 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்  பூட்டப்பட்டு கிடந்தன . 400 மார்க்க கல்லூரிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருந்தன .பெரும்பாலான  பள்ளிகளும் மார்க்க கல்லூரிகளும் மியூசியங்களாக மாற்றப்பட்டிருந்தன . செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

1978 க்கு பிறகுதான் அதாவது அவர்கள் நாடு கடத்தப்பட்டு  34 வருடங்களுக்கு பின்னரே அவர்களால் கௌகாஸ் பகுதியில் 40 பள்ளிகளை திறக்க முடிந்தது. அதுபோது அவர்களிடம் 300  உலமாக்கள் மட்டும்தான் உயிருடன் இருந்தார்கள்.

செச்சன்யா முஸ்லிம்களிடம் ஒரு  பழக்கம் இருந்தது அவர்கள் தங்களுடைய வரலாற்றை நினைவாற்றல் வழியாகவே பாதுகாத்து வந்தனர். முழுமையாக வரலாறு தெரிந்த ஒருவர் தனக்கு தெரிந்த வரலாற்றை தன்னுடைய சந்ததியிடம் ஒப்படைப்பார் . இப்படி அவர்களுடைய வரலாறும் கலாச்சாரமும் பாதுக்காக்கப்பட்டு வந்தன.

ஆனால், சோவியத் அதிபர் கம்யூனிச தலைவர் ஜோசப் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த வரலாற்று தடம் தடைப்பட்டது. இந்த வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் செச்சன்யா  மக்கள் மீண்டும் உழைக்கலானார்கள்.

இந்நிலையில் செச்சென்ய மக்களின் இடைவிடாத போராட்டத்தினால்  அவர்களுக்குத் தன்னாட்சி உரிமை கிடைத்தது. இதனை செச்சென் இங்குஷ் தன்னாட்சி பொது உடமை குடியரசு என ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு அழைத்தது.

அதன்பிறகு அவர்கள் இன்று வரை தங்களுடைய மறு வாழ்வை, தங்கள் வாழ்கையை புனரமைத்து கொள்ளும் பணிகளில் ஈடபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை புனரமைப்பு என்பது அவர்களை பொறுத்தவரை இஸ்லாமிய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தங்களுடைய பூர்வீக வரலாறு ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்புவது தான்.

செச்சன்யா முஸ்லிம்களின்  தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்கையை வளப்படுத்திட  விரும்புவதை விட இஸ்லாமிய ஒழுக்கங்களையும் இஸ்லாமிய வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதையே அதிகமாக விரும்புகின்றார்கள். அவர்களை பொறுத்தவரை வாழ்கையின் அனைத்து பகுதிகளை விட இறை நம்பிக்கையும் இஸ்லாமிய வாழ்க்கை முறையும்தான் முக்கியம்.
(
நன்றி: மு . குலாம் முகம்மது அவர்கள், ஆசிரியர் : வைகறை வெளிச்சம் )

பகரமில்லாமல் எந்தச் சோதனையும் இல்லை..

قال النبي صلى الله عليه وسلم: «يقول الله تعالى: من أذهبت حبيبتيه فصبر واحتسب لم أرض له ثوابا دون الجنة» (صحيح الجامع: 8140).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை (ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : புகாரி 5653

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடியானின் பிரியத்திற்குரிய அருட்கொடைகளை இழந்ததற்கு பகரமாக சுவனத்தை மறுமையில் தருவான் என்கிற போது இந்த உலகில் அவனுக்கே பிரியமான ஒன்றை, அவனுக்கு பிரியமானதாக இருக்கும் ஒன்றை அடியான் தனக்கு பிரியமான ஒன்றாக ஆக்கி அதை அந்த அடியான் இழந்தான் என்றால் பகரம் தராமல் விட்டு விடுவானா?

நபி அய்யூப் (அலை) அவர்களுக்கு இந்த உலகிலேயை தந்தது போன்று இழந்ததை அப்படியே தந்து, அது போன்ற இன்னும் பல அருட்கொடையை தருவான்.

நபி யஅகூப் (அலை) அவர்களுக்கு அவர்கள் இழந்த மகனை மீண்டும் தந்தது போன்று, இழந்த பார்வையை மீண்டும் தந்தது போன்று மீண்டும் தருவான்.

என்ன சந்தேகமாக இருக்கிறதா? நடக்குமா என்று மனசுக்குள் கேள்வி எழுகிறதா?

தற்போதைய உலகின் பல பாகங்களின் வரலாற்றை வாசித்துப் பாருங்கள்!

இன்று உலகில் நாள் தோறும் எங்காவது ஒரு மூலையில் ஒரு இறையில்லம் உருவாகுவதற்கான அஸ்திவாரம் போடப்பட்டு கொண்டே இருக்கிறது.

வரலாறு மாறிக் கொண்டே இருக்கிறது. பள்ளிவாசல்களே இல்லை. முஸ்லிம்களே கிடையாது என்று சொல்லப்பட்ட பல நாடுகளில் இன்று முஸ்லிம்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. பள்ளிவாசல்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

சீனாவில் முஸ்லிம்கள் வசிக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பள்ளிவாசல்கள் எண்ணிக்கை! 

ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிருவனமான ஏஎஸ்பிஐ ஒரு அறிக்கையை கடந்த 25/09/2020 ல் வெளியிட்டு இருந்தது. அதில் சீனா கடந்த 2018,2019,2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் சீனாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 16000 பள்ளிவாசல்களை இடித்துள்ளது”. என்று. இதற்கு பதிலளித்த

சீன அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், வெய்சூ பிராந்தியத்தில் சுமார் 24,000 மசூதிகள் இருப்பதாகவும், ஜிங் ஜியாங்கின் மொத்த மசூதிகளின் எண்ணிக்கை அமெரிக்காவிலுள்ள எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார். மேலும், சில முஸ்லிம் நாடுகளைவிட ஒரு முஸ்லிம் நபருக்கு சராசரி மசூதிகளின் எண்ணிக்கை என்பது இங்குதான் அதிகமாக இருக்கிறது என்றும் வாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ( நன்றி: விகடன், 26/09/2020 )

கத்தோலிக்க கிருஸ்துவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரான்ஸில் 2014 ம் ஆண்டுகளுக்கு முன்பு 30 லட்சம் முஸ்லிம்களே வாழ்ந்து வந்தனர். 20 பெரிய பள்ளிவாசல்களே இருந்தது. ஆனால், இன்று (10 ஆண்டுகளில்)  அங்கு ஆயிரம் பள்ளிவாசல்களை நெருங்கி விட்டது.

ஜெர்மனியில் 1999 –ல் 40 பள்ளிவாசல்கள் இருந்த நிலையில், 2014 ம் ஆண்டு கணக்குப்படி (15 ஆண்டுகளில்) 2200 பள்ளிவாசல்கள் இருந்தது. ஆனால், இன்றோ 4000 ஆயிரத்தை தொட்டு நிற்கின்றது.

இங்கிலாந்தில் கி. பி 1890 –ல் ஒரு பள்ளிவாசலே இருந்தது. பர்மிங்ஹாம், பிராட்போரட், லண்டன், கிளாஸ்கோ, மான்செஸ்டர் ஆகிய நகரங்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருக்கின்றது. மேலும், இங்கிலாந்து முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையும், கட்டப்படும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அல்பேனியா, பல்கேரியா, ஓக்லாந்து, போலந்து, கிரேக், சைப்பிரஸ், டென்மார்க், சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையும், கட்டப்படும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியின் குர்ஷித் ஆலம் குறிப்பிடுகின்றார்.

இப்படியாக இன்று உலகெங்கும் புதிய பள்ளிவாசலுக்கான அஸ்திவாரங்கள் போடப்பட்டு வருகின்றன.

இந்த உலகில் அவனுக்கு பிடித்தமான இடத்தை நிர்யாணிப்பதை யார் தடுக்க முடியும்?

ஆக்கிரமிப்பு செய்து, இடித்து தரை மட்டமாக்கி, வேறொரு வழிபாட்டு தலத்தை ஏற்படுத்திய இடத்தில் மீண்டும் அவனுக்கு பிரியமான மஸ்ஜிதை அவன் கொண்டு வர விரும்பினால் யார் முட்டுக்கட்டை போட முடியும்?

ஆப்ரஹா மன்னனின் ஆசை நிறைவேறியதா? அப்துல் முத்தலிபின் நம்பிக்கை நிறைவேறியதா?

அவன் நினைத்தால் அசைக்க முடியாத ஆற்றல் கொண்ட யானைப்படையை சிறு காற்றுக்கே தாக்குப்பிடிக்க முடியாத அபாபீல்களைக் கொண்டு சிதறடிக்க முடியும். இன்றும் அல்லாஹ் இருக்கின்றான். அபாபீல்கள் இருக்கின்றன. அவைகள் ஒரு உத்தரவுக்காக மட்டுமே காத்திருக்கின்றன.

அபாபீல்கள் வரும்! பாபரி மீட்கப்படும்!! இன்ஷா அல்லாஹ்... மீட்கப்படும் வெகு விரைவில்!!! 

No comments:

Post a Comment