Thursday 20 June 2024

மது விலக்கை அமுல் படுத்துக!!!

 

மது விலக்கை அமுல் படுத்துக!!!



கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20/06/2024) மாலை வரை 37 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் எத்தனை பேர் இறந்து போவார்களோ என்ற அச்சம் நம்மை பிடித்து ஆட்டுகிறது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரை போலீசு கைது செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சமய்சிங் மீனா உள்ளிட்ட சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் மற்றும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது. ( நன்றி: வினவு, 20/06/2024 )

கள்ளச்சாராய சாவுகள்:-

இந்தியாவிலேயே கள்ளச்சாராய சாவுகள் அதிகமாக நிகழ்வது , "மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட" குஜராத் மாநிலத்தில்தான் என்கின்றன புள்ளி விவரங்கள். கடந்த 50 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில்தான் மிக அதிகமாக கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்துள்ளன. இந்தப் பட்டியலிலும் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது துயரம்தான்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் மதுவிற்பனைக்கு அனுமதி இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சாமானிய மக்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நம்பி குடித்து கொத்து கொத்தாக செத்து மடிகிற துயரம் காலந்தோறும் நிகழ்கிறது.

50 ஆண்டுகளில் இந்தியாவின் கள்ளச்சாராய சாவு சம்பவங்கள்:

1976- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் பலி
1984-
ஹரியானாவில் 44 பேர் பலி
1981-
கர்நாடகாவில் 308 பேர் உயிரிழப்பு
1982-
கேரளாவில் 78 பேர் மரணம்
1986-
குஜராத்தில் மேலும் 108 பேர் பலி
1987-
குஜராத்தில் மீண்டும் 200 பேர் உயிரிழப்பு
1992-
ஒடிஷாவில் 200க்கும் அதிகமானோர் மரணம்
2001-
மகாராஷ்டிராவில் 27 பேர் பலி
2001 -
தமிழ்நாட்டின் பண்ருட்டியில் 53 பேர் பலி
2004-
மகாராஷ்டிராவின் மும்பையில் 87 பேர் மரணம்
2006-
ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் 22 பேர் பலி
2008-
கர்நாடகா, தமிழ்நாட்டில் 148 பேர் உயிரிழப்பு
2009-
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 27 பேர் இறந்தனர்
2009-
உ.பி.யில் 29 பேர் பலி
2009-
குஜராத்தில் 136 பேர் மரணம்
2010-
உ.பி.யின் 2 மாவட்டங்களில் 35 பேர் பலி
2010-
கேரளாவிம் மலப்புரத்தில் 23 பேர் உயிரிழப்பு
2011-
ஆந்திராவில் 17 பேர் மரணம்
2011-
மேற்கு வங்கத்தில் 170 பேர் பலி
2012-
ஆந்திராவில் மீண்டும் 17 பேர் உயிரிழப்பு
2012-
ஒடிஷாவில் மேலும் 31 பேர் மரணம்
2012-
பஞ்சாப்பில் 18 பேர் உயிரிழப்பு
2013-
உ.பி.யில் 40 பேர் மரணம்
2015-
மகாராஷ்டிராவின் மும்பையில் 90 பேர் இறப்பு
2019-
உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்
2019-
அஸ்ஸாமில் 156 பேர் பலி
2023-
தமிழ்நாட்டின் மரக்காணம், செங்கல்பட்டில் 30க்கும் மேற்பட்டோர் பலி
2024-
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் தற்போது வரை 40 பேர் பலி ( நன்றி: ஒன் இந்தியா, 20/06/2024 )

கள்ளச்சாராயம்....

மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் தமிழகத்தில் மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவுசெய்த குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மையை உணர முடியும். 

1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்துசெய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் சிக்கி இருக்கிறார்கள்.

1961 - 1,12,889 பேர்

1962 - 1,29,977 பேர்

1963 - 1,23,006 பேர்

1964 - 1,37,714 பேர்

1965 - 1,65,052 பேர்

1966 - 1,89,548 பேர்

1967 - 1,90,713 பேர்

1968 - 2,53,607 பேர்

1969 - 3,06,555 பேர்

1970 - 3,72,472 பேர்

இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 'ஆனந்த விகடனில்அவர் எழுதி வந்த 'நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இதை எடுத்துப்போட்டார். ( நன்றி: விகடன் )

மதுவிலக்கு அமலில் இருந்த போது குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள் இது தான் வரலாறு.

மது விலக்கை அமுல் படுத்தினால் அரசை வழி நடத்த இயலாதா?

அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து சொல்லப்படும் காரணம் நிதியிழப்பு ஏற்படும் வருவாய் பாதிப்பு உருவாகும் என்பது தான்.

தமிழ்நாடு எந்தத் துறையில் அபார வளர்ச்சி கண்டு வருகிறதோ இல்லையோ, மது விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த 20 ஆண்டுகளில் மது விற்பனை மூலம் நமது அரசாங்கத்துக்குக் கிடைத்த வருமான டேட்டாவைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே விளங்கும்.

2003-2004-ம் நிதி ஆண்டில் இந்த வருமானம் வெறும் ரூ.3,639 கோடியாக மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகளில் ஏறக்குறைய 15 மடங்கு வருமானம் உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்றைக்கு மொத்தம் 5,329 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் 500 கடைகளை மூடுவதற்கு இப்போது தமிழக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.44,985 கோடி தமிழக அரசாங்கத்துக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதாவது, கடந்த 2021-2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 -ம் ஆண்டு சுமார் ரூ.8,000 கோடி வருமானம் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் நிதியாண்டில் 50,000 கோடி ரூபாய் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.50,000 கோடி ரூபாய் வருமானம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், மக்களின் ரூ.1,00,000 கோடி மதிப்புள்ள ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

டாஸ்மாக் மதுபானம் லாபம் மட்டுமே அரசுக்கு பளிச்சென்றுதெரிகிறது. அதன் விளைவாக ஏற்படும் விபத்துக்கள், மனித ஆற்றல் இழப்புகள், கல்லீரல் ,கிட்னி, இதயம் போன்ற உடல் உறுப்புகள் சிகிச்சைக்காக அரசு செய்யும் செலவு அரசின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தை விட மூன்று மடங்கு மக்களின் உடல் நலத்திற்காக அரசு செலவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளால் காவல்துறையினருக்கு ஏற்படும் நேர விரயம் போன்ற பல இழப்புகளை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை!  சாலை விபத்துகள் அதிகம் நிகழ்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு டாஸ்மாக் மதுக்கடைகள் தான் முக்கிய காரணம்.

மதுவிலக்கை அமல்படுத்தினால் பெரிய அளவிலான மக்கள் நலத் திட்டங்கள் தடைபடும் என்று பூச்சாண்டி காட்டும் போக்கை சிலர் செய்கின்றனர்.

ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் முதலமைச்சராக இருந்தபோது  மதுவிலக்கு அமலில் இருந்தது . அவர்கள் ஆட்சியில்  மது வருவாய் இல்லாமல் சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏராளமான கல்விக்கூடங்களை காமராஜர் திறந்தார்.  அணைகள் கட்டினார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மதுபான வருமானம் இல்லாமலேயே அரிசியை மிகக் குறைந்த விலைக்கு அண்ணா வழங்கினார்.

திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டால் குடிப்பழக்கம் உள்ளவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தும் மது மூலம் கிடைக்கும் வருமானம் தான் ஒரு அரசை இயங்க வைக்கும் என்பது போன்ற  தப்பெண்ணமும் அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் அதை குடித்துவிட்டு ஏராளமானோர்  செத்து மிதப்பார்கள் என்ற பரப்புரையும்  பித்தலாட்டம், ஏமாற்றும் வாதங்கள் என்பதை காலம் உணர்த்தி விட்டது.

எனவே, இது போன்ற அர்த்தமற்ற விஷயங்களை மக்களின் மனதில் புகுத்தி மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர முன் வர வேண்டும்.

மதுப்பழக்கம் வரையறை

 

மதுப்பழக்கம் ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுமற்றும் மது சார்புஎன்றும் அழைக்கப்படுகிறது. குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஒரு நபர் சிரமப்படுகிறார், இருப்பினும் மது அருந்துவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், ஒரு நபர் மது அருந்துவதை மேலும் தொடரும் போது, அது பொதுவாக ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கும்.

 

அதிகமாக மது அருந்துவது ஒரு நபர் குடிகாரனாக மாறும் அபாயத்தை ஏற்படுத்தும்.

 

வாரத்திற்கு 15 அல்லது அதற்கு மேற்பட்ட பானங்களை அருந்துபவர், அல்லது ஒரு நேரத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பானங்களை அருந்துபவர், வாரத்திற்கு 12 அல்லது அதற்கு மேற்பட்ட பானங்களை அருந்திய பெண் அல்லது ஒரு நேரத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட பானங்களை அருந்துபவர் நிறைய மது அருந்துபவர் என வரையறுக்கலாம்.

 

ஒரு பானம் என்பது 12-அவுன்ஸ் பாட்டில் பீர், 5-அவுன்ஸ் கிளாஸ் ஒயின் அல்லது 1 1/2-அவுன்ஸ் மதுபானம் என வரையறுக்கப்படுகிறது.

 

மதுப்பழக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்

 

மதுப்பழக்கத்திற்கான காரணம் தெரியவில்லை, இருப்பினும் ஒரு நபரின் குடிப்பழக்கத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. அவை மரபியல், உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக மது அருந்துவது மூளையின் இயல்பான செயல்பாட்டை மாற்றிவிடும். இது மதுவுடன் தொடர்புடைய இன்ப உணர்விற்கும் வழிவகுக்கிறது. படிப்படியாக, இது அதிக மதுவுக்கு ஏங்குகிறது மற்றும் இறுதியில் இதற்கு அடிமையாகிறது.

 

மதுப்பழக்கம் அறிகுறிகள்

 

மதுப்பழக்கம் அறிகுறிகள் லேசான, மிதமான அல்லது கடுமையானதாக இருக்கும், அது அந்த நபரின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டவை.  ( நன்றி: https://www.apollohospitals.com )

 

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

 

தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டு மது வரலாறு....

 

பிரிட்டிஷார் காலத்தில் அதிகபட்ச சுதந்திரத்தை அனுபவித்தவர்கள் மதுப் பிரியர்கள்தாம். மதுவை விற்கவோ, அருந்தவோ எந்தத் தடையும் இருக்கவில்லை. மது தனிமனித உரிமை. தவிரவும், ரகசியமாகத் தயாரிக்கிறோம் என்ற பெயரில் தரக்குறைவான மது, மனித உயிருக்கு ஆபத்து என்பது பிரிட்டிஷாரின் நிலைப்பாடு. 

 

கள்ளுக் கடைகளை மூடு என்று அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று காந்தியிடம் சொன்னார் ராஜாஜி. அதன் மூலம் மக்களையும் திரட்ட முடியும் காங்கிரஸையும் பலப்படுத்த முடியும் என்பது அவருடைய கணிப்பு. 

 

காந்தியும், ராஜாஜியும் மனதில் நினைத்ததைச் செயலில் கொண்டுவர 1937-ன் தேர்தல் வெற்றிகள் வாசல் திறந்துவிட்டன.

 

காங்கிரஸ் ஆளும் அனைத்து மாகாணங்களிலும் மூன்றாண்டுகளில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்றது காங்கிரஸ். சென்னை, பம்பாய், பிஹார், ஐக்கிய மாகாணம் உள்ளிட்ட அரசுகள் சம்மதித்தன. 

 

களத்தில் முன்னணியில் நின்றது சென்னை. உபயம்: ராஜாஜி. என்ன ஒன்று. சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது.

 

ஆனால், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண முதல்வர்கள் பதவி விலகினர். அத்தோடு, மதுவிலக்கு நடவடிக்கையும் பாதை மாறியது. 

 

பின்னர், 1946 தேர்தலுக்குப் பிறகு சில மாகாண முதல்வர்கள் மீண்டும் மதுவிலக்கில் ஆர்வம் செலுத்தினர். இப்போதும் சென்னை மாகாணமே முதலில் நின்றது. ஓமந்தூர் ராமசாமியின் உழைப்பால் 1948-ல் சென்னையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.

 

அன்று தொடங்கி, சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்குத் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. 

 

ஆனால், இதர பிராந்தியங்களில் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த முடியாமல் அரசுகள் தடுமாறின. வருவாய் இழப்பு, சட்ட ஒழுங்குச் சிக்கல்கள் என்று பல காரணங்கள். ஆனால், பூரண மதுவிலக்கை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றது காங்கிரஸ். அதற்காக 6 டிசம்பர் 1954-ல் ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் மதுவிலக்கு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓராண்டுகால ஆய்வுக்குப் பிறகு, அந்தக் குழு 15 பரிந்துரைகளைக் கொடுத்தது.

 

ஆனால், அவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் 1956-ல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மதுவிலக்கு இணைக்கப்பட்டது. 

 

தேசிய அளவில் மதுவிலக்கைக் கொண்டுவரத் தேவையான செயல்திட்டத்தை வகுக்குமாறு திட்ட குழுவைக் கோரியது நேரு அரசு. மதுவின் பயன்பாட்டைக் குறைக்க இன்று பேசப்படும் கடைகளின் எண்ணிக்கைக் குறைப்பு, நேரக் குறைப்பு போன்ற பெரும்பாலான வழிமுறைகளைத் திட்ட குழு பரிந்துரைத்தது. முக்கியமாக, மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அமைக்கவும் திட்டக் குழு பரிந்துரை செய்தது.

 

பரிந்துரைகள் வந்த பிறகும், மாநில அரசுகள் அதே பல்லவியைத்தான் பாடின. மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை. ஆனாலும், மத்திய அரசு மதுவிலக்கு விஷயத்தில் மனம் தளரவில்லை. 1963 ஏப்ரலில் பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேக் சந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழு 1964 ஏப்ரலில் அறிக்கை தாக்கல் செய்தது.

 

அதில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளைச் செய்திருந்தது. அவற்றின் அடிப் படையில், தேசிய அளவிலான பூரண மதுவிலக்குக்காக மீண்டும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. 30 ஜனவரி 1970 - காந்தியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது நாடு முழுக்க மதுவிலக்கு வந்திருக்க வேண்டும்.

 

ஆனால், அந்த இலக்கைப் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் வருவாயைத்தான் காரணமாகக் காட்டின. அந்தச் சமயத்தில், குஜராத்திலும் தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது.

 

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அண்ணாவும் மதுவிலக்கில் உறுதிகாட்டினார். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு அண்டை மாநிலங்களில் நடக்கும் மதுவிற்பனையைச் சுட்டிக்காட்டியும்,  நிதி நெருக்கடியைக் காரணமாகச் சொல்லியும், மதுவிலக்கை ரத்து செய்யத் தீர்மானித்தது கருணாநிதி அரசு. அதனை ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் எதிர்த்தனர். 

 

அப்போது, 30 ஆகஸ்ட் 1971 அன்று மதுவிலக்கு தள்ளிவைக்கப் பட்டது. இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்று சொல்லியிருந்தார் கருணாநிதி. அதுபோலவே, 30 ஜூலை 1973 அன்று கள்ளுக் கடைகளும் 1 செப்டம்பர் 1974 முதல் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி மதுவிலக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் அமலுக்கு வந்துவிட்டது. அது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும் நீடித்தது.

 

கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்தன. இந்தச் சூழலில் மதுவிலக்கை ரத்து செய்த எம்.ஜி.ஆர், 1 மே 1981 அன்று மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார்.

 

கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் ஏலம் விடப்பட்டன. சாராய உற்பத்தியில் தனியார் ஈடுபடுத்தப் பட்டனர். மது தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், 1983 ஜூலையில் டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கினார். மதுவை மொத்தமாக விற்பனை செய்யும் பணிகளை அது செய்தது. பின்னர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, 1989-ல் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே, பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை ரத்து செய்தார்.

 

அதைத் தொடர்ந்து, மீண்டும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்தன. மது ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏராளமானோர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஒருகட்டத்தில் மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கினார் ஜெயலலிதா. அன்று தொடங்கி, மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து எழுவதும், வருவாய் காரணத்தை மறைமுகமா கவும், கள்ளச்சாராயச் சாவுகளை நேரடியாகவும் சொல்லி, மதுவிலக்கு விஷயத்தில் தற்போது வரை இருபெரும் திராவிடக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் நிற்கின்றன. ( நன்றி: தமிழ் திசை தி இந்து, 24/07/2015 )

நாகரிகம் வடித்தலில் தொடங்குகிறது (Civilization begins with distillation) என்றார் நோபல் எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர். 

 

நாகரீகமும் வடித்தலும் ஒன்றோடொன்று இணைந்தது ' என ஆதாம் ரோஜர் (Adam Rogers) தன் "Proof: The Science of Booze" நூலில் குறிப்பிட்டுள்ளார். 

மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது . மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது என்று சொல்லும் அளவுக்கு அது, மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே மாறி இருக்கிறது.

நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே சிதைக்கும் அளவுக்கு மிகவும் மோசமான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.

மதுவின் வரலாறு அறிவோம்...

மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான்.

இந்தியாவில் வேத காலத்திலேயே மது இருந்திருக்கிறது. மது உற்பத்தி, விற்பனை, விநியோகம், மது அருந்துவது குறித்தெல்லாம் ஏராளமான விதிகளை வகுத்திருக்கிறது அர்த்தசாஸ்திரம். சங்க காலத்தின் இறுதியில் தமிழர்களிடையே மதுப் பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. இந்தச் சூழலில்தான் திருவள்ளுவர் கள்ளுண்ணாமை குறித்து எழுதினார்.

முதன்முதலாக எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள்தான் ஒயின் தயாரித்தார்கள். இஸ்லாம் மதுவைத் தடை செய்யும் முன்பாகவே அதன் வேதியியல் தயாரிப்பு முறையான வடித்தெடுத்தலை வளர்த்தெடுத்தவர்கள் அரேபியர்களே. 

அதன் பின்பே 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளில் அரேபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பா வரை ஆல்கஹால் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

இவ்வாறாக, மதுவின் வரலாறு குறித்து ஏராளமான தகவல்களைத் தனது குடிக் கலாச்சாரமும் கலாச்சாரக் குடிகளும்என்கிற நீண்ட கட்டுரையில் மிகவும் ஆழமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜமாலன். ( நன்றி: 01/12/2014 தமிழ் திசை இந்து )

காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான். அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . 

அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானமான பீர் . முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்க வைத்த போது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது.

போதைப்பொருளின் வகைகள்...

மது பானம் மட்டுமல்லாது, கஞ்சா, புகையிலை, அபின், ஹெராயின், கசகசா, பாக்கு போன்றவைகளில் இருந்தும் போதை பெறப்பட்டது. 

உயரமான  தென்னை, பனை, ஈச்சை போன்ற ஒற்றைத்தடி புல்வகை மரங்களில் இருந்து கள் வடிக்கும் முறையும் கண்டறியப்பட்டது மட்டுமல்ல, அதனை செய்வதற்கு என்று சமூகத்தில் சாணார், ஈழவர், நளவர் என சாதிகளையும் உருவாக்கியது, இந்தியாவில் குப்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியர் மதுவை விற்பது அரசின் செயல்களில் ஒன்றாக அறிவித்தார்.

உழைக்கும் மக்களிடம் இருந்து விசுவாசத்தையும், உழைப்பையும் அரசு நிரந்தரமாக பெற வேண்டுமானால் கட்டுப்பாட்டோடு கூடிய மது பழக்கத்தை அரசே பொறுப்பேற்று செய்திட வேண்டும் என அதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர் சாணக்கியர் ஆவார். (அர்த்தசாஸ்திரம் 2.25 ஆம் அத்தியாயம் 17 முதல் 34 வரை ). ( நன்றி: தினமணி, 19/04/2017 )

மது தீமைகளின் பிறப்பிடம்...

இன்று நாட்டில் நடக்கும் பல குற்ற நிகழ்வுகளுக்கு மதுவே மூலக் காரணமாக அமைந்து வருகிறது. 

குடிபோதையால் தற்கொலை, கொலை, கொள்ளை, சூறையாடல்கள், தெருச்சண்டைகள், கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் கொலை, சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் அதனால் ஏற்படும் உயிர் பலிகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் ஆகியவைகளுக்கும், சமூகத்தில் நிலவும் அனைத்து குற்றங்களுக்கும், தீமைகளுக்கும் மது பழக்கம் காரணமாகியுள்ளது.

மாவீரன் அலெக்சாண்டரை அடிமையாக, கோழையாக மாற்றியது மது.

ரோமானிய சாம்ராஜ்யம் அதீதமான மது பழக்கத்தினாலேயே அழிந்து போனதாக வரலாறு தெரிவிக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர் கி.மு.330}ஆம் ஆண்டு பெர்சேபோலிஸ் நகரில் இருந்த அரச மாளிகை தீக்கிரையான போது மது போதையில் இருந்ததாக புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

அவன் மது நோய்க்கு அடிமையாகி தான் இறந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மது எனும் தீமையில் இருந்து மக்களை காத்திட...

மதுபானத்தை நிறுத்துங்கள் என்று கூறுவதைவிட அதை நிறுத்துவதற்குரிய பின்னணிகளை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் தமது வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்குரிய சூழலை உண்டு பண்ண வேண்டும். 

கடைசிவரை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற தகவலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

மதுவை தொடர்ந்து பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சம் மக்களின் மனங்களில் உருவாக்கப்பட வேண்டும்.

இது தான் இஸ்லாம் மதுவை மக்களிடம் இருந்து அகற்றுவதற்கு பயன் படுத்திய வழிமுறைகளாகும்.

இதுவே உலகில் இருந்து மதுவை விரட்டுவதற்கான பொருத்தமான வழியுமாகும். 

மதுவின் தீமையும்... தண்டனையும்...

روى البيهقي بإسناد صحيح عن عثمان بن عفان أنه قال :- فاجتنبوا الخمر فإنها لا تجتمع هي والإيمان أبداً إلا أوشك أحدهما أن يخرج صاحبه

உஸ்மான் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:மது அருந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஏனெனில், அது அனைத்து வகையான பாவங்களுக்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறை நம்பிக்கையும், மது அருந்துவதும் ஒரு மனிதனிடத்தில் ஒரு போதும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்றை மற்றொன்று அகற்றிவிடும்என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                              ( நூல்: நஸாயீ )

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நிரந்தரமாக மது அருந்திய நிலையில் மரணிப்பவன் சிலை போன்று எழுப்பப்படுவான்என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(
நூல்:ஸில்ஸிலா அஸ் ஸஹீஹ், ஹ.எண்:677. )

جاء في سنن ابن ماجه عن عبد الله بن عمرو بن العاص أن النبي قال:-  مَنْ شَرِبَ الْخَمْرَ وِسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادِ فَشَرِبَ فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادِ ـ أي في الرابعة ـ كَانَ حَقّاً عَلَى اللهِ أَنْ يَسْقِيَهُ مِنْ رَدْغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ قَالُوا: يَا رَسُولَ اللهِ! وَمَا رَدْغَةُ الْخَبَالِ قَال  ((عُصَارَةُ أَهْلِ النَّارِ))

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
மது அருந்தி போதையில் திளைத்தவனின் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது. அவன் அதே நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். அதன் பிறகும் மது போதையில் திளைத்தால் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது; அவன் மரணித்தால் நரகம் புகுவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். இதன் பிறகும் அவன் அந்த இழிச் செயலை தொடர்வானேயானால், அவனுக்கு மறுமையில் ரத்ஃகத்துல் ஃகிபாலைகுடிக்க வைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது”.              
                அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ரத்ஃகத்துல் ஃகிபால்என்றால் என்ன? என்று வினவினார்கள்.              
                அதற்கு நபி {ஸல்} அவர்கள் அது நரக வாசிகளின் சீழ், சலம் ஆகும்என்றார்கள். ( நூல்:ஷரஹுஸ் ஸுன்னா, பாகம்:6, பக்கம்:118 )

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் {ரலி} அறிவிக்கின்றார்கள்:

மது அருந்துபவர்கள் நோயுற்று விட்டால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:தஃக்லீக் அத் தஃலீக் லி இப்னி ஹஜர்,பாகம்:5,பக்கம்:126. )

في سنن أبي داود من طريق ابن عمر

 لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه وآكل ثمنها

அப்துல்லாஹ் இப்னு உமர் {ரலி}  அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

மது சம்பந்தமாக பத்து நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபித்தார்கள்: 1. மதுவைக் தயாரிப்பவர். 2. தயாரிக்க உதவுபவர். 3. அதைக் குடிப்பவர். 4. அதனை ஊற்றிக் கொடுப்பவர்.  5. அதனைச் சுமந்து செல்பவர். 6. அதற்கு துணை  போனவர்.  7. அதனை விற்பவர். 8. அதனை வாங்குபவர்.  9. அதனை அன்பளிப்புச் செய்பவர். 10. அதை விற்பனை செய்பவர்".   ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ , ஹ.எண்:5091 )

மதுவைப் பற்றியுண்டான இந்த அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் நபிகளார் முன்வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்,  அல்லாஹ்வும் தன் திருமறையின் மூலம் மதுவின் விபரீதங்களை விளக்கிக் கொண்டிருந்தான்.

ஆரம்பமாக, அல்லாஹ் 2:219-ம் வசனத்தை இறக்கியருளினான். மக்களில் பாவமென கருதியவர்கள் விட்டனர்.

பின்னர் இரண்டாம் கட்டமாக,  அல்லாஹ் 4:43-ம் வசனத்தை இறக்கியருளினான். இஷாத் தொழுகைக்குப் பின்னர் சிலர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

ஆனால், முன்பை விட மக்கள் இப்போது மதுவை விட்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ் 5:90,92,93. 
ஆகிய இறைவசனங்களை இறக்கியருளினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மது தடை செய்யப் பட்டதாக அறிவித்த போது அம்மக்கள் மதீனாவின் வீதிகளில் மதுப்பானைகளைக் கொட்டினார்கள். அதன் காரணமாக தெருக்களில் மது ஆறு ஓடியதாகக் கூட வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.

அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நன்கு புளித்த மது எங்களிடம் இருந்து வந்தது; அபூதல்ஹா, அபூ அய்யூப் {ரலி} ஆகியோருக்கும், இன்னும் சிலருக்கும் அதிலிருந்து நான் ஊற்றிக் கொடுத்துக்  கொண்டிருந்தேன்;                               
அப்போது என்னருகே ஒருவர் வந்து, “மதுபானங்களை அருந்துவதற்கு அல்லாஹ்வின் தூதர்  {ஸல்}  அவர்கள் தடை செய்து விட்டார்கள்  என்று கூறினார்.                                         

உடனே, அங்கிருந்தோர் அனைவரும் மதுபானங்கள் வைத்திருந்த குடுவைகளையும், மண்பாண்டங்களையும் அப்படியப்படியே கவிழ்த்துக் கொட்டி விடுமாறு கூறிவிட்டனர். இச்சட்டம் வந்ததும்  அவர்களில் எவருமே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அம்மனிதர் தெரிவித்த செய்தியை அவமதிப்பும் செய்யவில்லை. ( நூல்: புகாரி, பாடம்: பாபு ஸப்புல் கம்ரி ஃபித்தரீக்கி )

மதீனா வீதியெங்கும் மது ஆறு ஓடியது என்று கூறும் அளவுக்கு மதுப் பீப்பாக்கள் கொட்டிவிடப்பட்டன. மதுபானச் சட்டிகள் உடைக்கப்பட்டன. வாயில் ஊற்றிய மதுவையும் கீழே துப்பினர். இவ்வாறு படிப்படியாகப் போதித்து இஸ்லாம் மது ஒழிப்பில் ஒரு மகத்தான புரட்சியையே ஏற்படுத்தியது.

இதன் பின்னர் மிக மிகச் சொற்பமானவர்களே மது குடித்ததற்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் தண்டிக்கப்பட்டனர்.

அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மது அருந்திய குற்றத்திற்க்குத் தண்டனையாகப் பேரீச்ச  மட்டையாலும், செருப்பாலும் அடித்திடும்படி அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்

அபூஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மது அருந்திய மனிதர் மாநபி  {ஸல்}  அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவர்கள் இவரை அடியுங்கள்  என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர்; இன்னும் சிலர் செருப்பால்  அடித்தனர்; இன்னும் சிலர் முறுக்கப்பட்ட தமது துணியால் அடித்தனர். தண்டனை முடிந்து அவர் திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மை கேவலப்படுத்துவானாக! என்று சாபமிட்டனர். அப்போது அண்ணலார்  {ஸல்} அவர்கள் இவ்வாறு கூறி இவருக்கெதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்கள் என்றார்கள். ( நூல்: புகாரி, பாடம்: பாபு மாஜாஅ ஃபீ ளர்பி ஷாரிபில் கம்ரி, பாபு அள் ளர்பி பில் ஜரீதி வன் நிஆல் )

மதுப் பிரியர்களாக காணப்பட்ட அந்த மக்களை கட்டம் கட்டமாக அல்லாஹு தஆலாவும், அல்லாஹ்வின் தூதரும் புனித தீனுல் இஸ்லாத்தின் வழிக்கு மாற்றியமைத்தார்கள்.

மது போதைக்கு அடிமையான ஒருவரை எடுத்த எடுப்பிலேயே அந்தப் பழக்கத்தை விட்டும் விடுவிக்க முடியாது என்பதையே மேற் கூறப்பட்ட திரு வசனங்கள் மற்றும் நபிமொழிகள் மூலம் நாம் விளங்குகின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் போதையற்ற, சமுதாய வியல் மீது அக்கறை கொண்ட சமூகத்தை கட்டியமைக்க உதவி புரிவானாக!

அப்படியான சமூகத்தின் மீது ஆவல் கொண்ட ஆட்சியாளர்களை நம் நாட்டிற்கு தந்தருள்வானாக!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு நிகழ்காலத்திற்கு தேவையான அருமையான செய்திகள் ஹஜரத் இன்னும் கொஞ்சம் நிறைய செய்திகளை எழுதி இருக்கலாம் ஆவலோடு காத்திருக்கின்றோம் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்கூலியை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத் காலத்திற்கேற்ற பதிவு. மது குறித்த புள்ளி விபரமான தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
    جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖👌

    ReplyDelete