Thursday 27 June 2024

(பா) வதந்தியால் வதைக்காதீர்கள்!!!

 

(பா) வதந்தியால் வதைக்காதீர்கள்!!!


இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கி பல்வேறு டிவி சேனல்களில் தொகுப்பாளராக இருந்தவர்.

கடந்த நான்கு அல்லது ஐந்து தினங்களுக்கு முன்பாக உடல் நிலை சரியில்லாமல் மரணித்து விட்டார் என்ற செய்தி இலங்கை மற்றும் இந்தியாவின் சமூக ஊடகங்களில் பரவியது.

இதைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவே வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கிவிட்டன. 

இந்த வதந்தி தீயாய் பரவ அப்துல் ஹமீது ரசிகர்கள், நண்பர்கள் பலரும் வருத்தத்துடன் இது குறித்து விசாரிக்க அப்துல் ஹமீதின் நம்பருக்கு போன் செய்துள்ளனர். போனை எடுத்துப் பேசிய அப்துல் ஹமீது, தன்னைப் பற்றிப் பரவிய வதந்தி அறிந்து மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார்.

பிறகு அவரே காணொளி ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

அந்த காணொளியில் பல்வேறு விஷயங்களை அவர் பேசியிருந்தாலும் இரண்டு விஷயங்கள் நமக்கு தேவையான செய்திகளைச் சுமந்து நிற்கிறது.

1. தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு அழுதது.

அந்த காணொளியில் "நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலைக் கேட்டுக் கதறி அழுததை என்னால் தாங்க முடியவில்லை. 'இத்தனை ஆயிரம் அன்புள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை' என்று நினைத்துக் கொண்டேன்" என்று மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத படி பேசினார்.

2. மூன்றாவது முறையாக இவர் மரணச் செய்தி வதந்தியாக்கப்பட்டுள்ளது.

இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். ஆம். முதல் அனுபவம் 1983ம் ஆண்டு. இனக்கலவரத்தின்போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்துவிட்டார்கள் என்ற வதந்தி இங்கு இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும், தமிழ் பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய 'வானிலையில் வழிப்போக்கன்' என்னும் நூலில் பதிவு செய்திருந்தேன். இது முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப் தளத்தில் ஒருவர் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடையப் புகைப்படத்தைப் போட்டு, 'பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம்' என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை. இப்போது சமூகவலைதளங்களில் நான் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவியிருக்கிறது. இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுதிருக்கிறேனா என்று நகைச்சுவையாகத் தோன்றுகிறது" என்று அவர் பேசியிருக்கின்றார்.

இந்த சமூகம் இவரை மட்டுமல்ல இதற்கு முன்னர் சவூதி இமாம் அப்துர்ரஹ்மான் ஸுதைசியை பல முறை மௌத்தாக்கி இருக்கிறது. நாகூர் ஹனிபா அவர்களை பல முறை மௌத்தாக்கி இருக்கிறது.

மௌத் செய்தி மட்டுமல்ல அன்றாடம் ஏதாவது வதந்திகளை சமூக வலைதளங்களில் சிலர் உலவ விட்டு ரசித்து வருகின்றனர்.

இவர்களை ஒரு வகையான மன நோயாளிகள் என்றே நாம் கூறலாம்.

வதந்தீ  அறம் அல்ல!!

நாம் வாழும் இன்றைய நவீன காலம் Information Technology தகவல் தொடர்பு நுட்பம் (சாதனங்கள்) மிகைத்து நிற்கும் காலம். 

மிகச் சாதாரணமாக துவங்கிய இந்த சாதனங்கள் அசுர வளர்ச்சியை அடைந்து Artificial intelligence எனும் AI தொழில்நுட்ப கட்டமைப்பை கடந்துள்ளது.

பொதுவாக தகவல் தொடர்பு சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பானவைகளே  அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது. 

அத்தகைய உண்மைக்கு புறம்பானவைகளில் ஒன்று தான் வதந்தி.

ஆகவே, ஒரு முஸ்லிமாக, இறைநம்பிக்கையாளராக வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதையே இஸ்லாமிய மார்க்கம் மகத்தான வழிகாட்டலாக நமக்கு வழங்கியுள்ளது.

பார்த்ததையெல்லாம் பேசுவதும் கேட்டதையெல்லாம் பிறரிடம் சொல்வதும், கண்ணில் கண்டதையெல்லாம் பரப்புவதும் பகிர்வதும் நம்மில் பலரின் வேலையாகிப் போய் விட்டது. இங்கிருந்து தான் வதந்தி எனும் பேராபத்து துவங்குகிறது.

யார் முதலில் இந்த வதந்தியை துவக்கி வைக்கின்றாரோ அவருக்கும் அதை மக்களிடையே தீயாய் பரவச் செய்வதில் பங்காற்றியவர்களுக்கும் நாளை மறுமையில் அல்லாஹ்வின் திருமுன் விசாரணை கடுமையாக இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். ( அல்குர்ஆன்: 17: 36 )

சில போது நாம் நல்ல விஷயங்களைத் தானே பரப்புகின்றோம் என்றும், நமக்கு மிகவும் தெரிந்த ஒருவர் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலைத் தானே பிறருக்கு பகிர்கின்றோம் என்று மிகவும் இலேசாக கருதுகின்றோம். ஆனால், 

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏

 

(ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். ( அல்குர்ஆன்: 24: 15 )

ஒரு வேளை நாம் பரப்பும் அல்லது நாம் பகிர்ந்து கொள்ளும் செய்தி முற்றிலும் தவறாக இருக்கும் பட்சத்தில் நாம் பின்வரும் எச்சரிக்கைகளை மிகவும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடையே  மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். ( அல்குர்ஆன்: 24: 19 )

மேலும், யாரைப் பற்றி பகிர்ந்து கொண்டோமோ சம்பந்தப்பட்டவருக்கும் அவரின் உறவுகள் அபிமானிகள் என யாரெல்லாம் மன உளைச்சலும் வேதனையும் அடைகின்றார்களோ அதன் மூலமாக ஏற்படும் தண்டனை குறித்து அதிக கவனமும், எச்சரிக்கை உணர்வும் நமக்கு  வேண்டும்.

وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களையும் செய்யாத ஒன்றை (செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். ( அல்குர்ஆன்: 33: 58 )

கேட்பதை எல்லாம் பேசவோ, பிறரிடம் பகிர்வதோ அறிவுடமை அல்ல!

حفص بن عاصم رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: " كفى بالمرء كذباأن يحدّث بكل ما سـمع " (رواه مسلم)

ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரலி) அறிவிக்கிறார்கள்: "கேள்விப்படுவதை எல்லாம் (பிறரிடம்) எடுத்துச் சொல்பவன் பொய்யன்" என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )

வதந்தி நிம்மதியை சீர் குலைத்து விடும் ஆற்றல் கொண்டது..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கையிலேயே இந்த வதந்தி எந்த அளவுக்கு விளையாடியது என்பதை விளங்கிக் கொள்ள ஆயிஷா ரலி அவர்கள் மீது இட்டுக்கட்டி பரப்பப்பட்ட வதந்தி  சரியான எடுத்துக்காட்டாகும்.

ஒரு மாத காலத்திற்கும் மேலாக வஹி இறைச் செய்திக்காக காத்திருக்க வைத்து, மாநபி (ஸல்) அவர்களின் இதயத்தை ரணமாக்கி, குடும்ப வாழ்க்கையை நெருக்கடியாக்கி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி எவ்வளவு துன்பங்களை ஒரு வதந்தி ஏற்படுத்தி விட்டது.

இஸ்லாத்தை அழிக்க நினைத்த நயவஞ்சகர்கள் அதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தியது அவதூறையும், வதந்தியையும் தான் என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து தெளிவாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்ட போது,

இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறுஎன்று கூறியிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் 24:12) என்று அல்லாஹ் தன் திருமறையில் கேட்கின்றான்.

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ் விடம் பயங்கரமானதாக இருக்கிறது. ( அல்குர்ஆன்:  24: 15 )

இதை எளிதாகக் கருதி பரப்பாதீர்கள், அது அல்லாஹ்விடம் கடுமையானது என்கின்றான். இதைக் கேள்விப்பட்ட போது

இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறுஎன்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? ( அல்குர்ஆன்:  24: 16 )

வதந்தி வீரியம் நிறைந்தது!

உஹது யுத்த களம் முஸ்லிம்கள் மும்முரமாக போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று எதிரிகள் ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள்.

யுத்த களத்தின் மொத்த நிலையும் சீர் குலைந்து போனது. போரிட்டுக் கொண்டிருந்த வீரர்களின் மனநிலை மொத்தமாக மாறிவிட்டது.

இறுதியாக, அந்தப் போரில் 70 பேர் கொல்லப்பட்டு ஷஹீதுகளானார்கள். நபி ஸல் அவர்கள் உட்பட பங்கேற்ற அனைத்து நபித்தோழர்களும் காயமுற்றனர்.

பல நபித்தோழர்களின் வாழ்வின் இறுதி வரை உஹதின் காயங்கள் பல்வேறு நெருக்கடிகளை தந்தது.

ஆக வதந்தி ஒரு குழுவை, ஒரு சமூகத்தை, ஒரு சமுதாயத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வல்லமை கொண்டதாகும் என்பதை உணர முடியும்.

மறக்க முடியுமா? 

கோவிட் - 19 கொரோனா பெருந்தொற்று அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விடக் கூடிய விஷயம் அல்ல.

சர்வதேசமே முடங்கியது. சர்வமும் அடங்கியது. அந்த அளவுக்கு மனித சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்திய ஒன்று.

அந்த கொரோனா வைரஸ் பரவலின் துவக்க நிலையில் முதல் அலையில் முஸ்லிம்கள் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமானவர்கள் என்று திட்டமிட்டு ஃபாசிஸ பாஜக தலைவர்கள் தொண்டர்கள் என பரப்பினார்கள்.

 

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாஅத்தினர்தான் இந்தியாவில் கொரோனாவைப் பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள்" என்று பரப்பினார்கள்.

Coronajihad,” “CoronaTerrorism” “CoronaBombsTablighi” போன்ற ஹேஷ்டேகுகள் இந்தியாவில் டிரென்ட் ஆக ஆரம்பித்தன. 

தப்லீக் ஜமாத் உறுப்பினர்களால் தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என மைய நீரோட்ட ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.

அத்துடன் நிற்காமல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில், இந்தியாவிற்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் வந்திருந்த 950 -க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாஅத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தப்லீக் ஜமாஅத்தோடு தொடர்புடைய நாடு முழுவதுமுள்ள எல்லோரையும் சுற்றி வளைக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது 15 மாநிலங்களில் 27,000 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு (க்வாரன்டைன்) இருந்தார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் 10,000 ரூபாய் தரப்படும் என உத்தரப்பிரதேச காவல் துறை அறிவிப்பும் செய்தது.

திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த வதந்திகள் மூலம் நாட்டில் நடந்ததது என்ன?

சாமானிய மக்கள் முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்டனர்.

மருத்துவமனை உட்பட அனைத்து இடங்களிலும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டது. அல்லது துரத்தப்பட்டது.

வட மாநிலங்களின் சில இடங்களில் முஸ்லிம் சமூகத்தினர் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

சில பகுதிகளில் முஸ்லிம்கள் நுழையக்கூடாது என்று  மங்களூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 

கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கும் வரை எங்கள் பகுதிக்குகள் எந்த முஸ்லிமும் நுழைய முடியாதுஎன்று சொன்னது  ஒரு அறிவிப்பு. 

முஸ்லிம்களுக்கு ஆதரவும் இடமும் கொடுப்பவர்களுக்கு “500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஃபைன் விதிக்கப்படும்என அங்கனஹல்லி என்ற இந்துக்கள் அதிகம் கொண்ட கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பேசிய வீடியோ கார்டியன் ஊடகம் வெளியிட்டது.

கர்நாடகாவின் மராதாஹல்லி, தசரதஹல்லி மாவட்டங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கச் சென்ற ஸைய்யித் தப்ரேஸ் என்ற (23) என்ற நபரும் அவரது தாய் ஜரீன் தாஜும் (39) தாக்கப்பட்டார்கள்.

 

அந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் அடைந்த நெருக்கடியை வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது.

பிறகு நீதிமன்றம் தலையிட்டு கொரோனா பரவலுக்கு முஸ்லிம் சமூகமோ அல்லது தப்லீக் ஜமாஅத்தோ காரணமில்லை என்று கூறி மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்தது. ( நன்றி: https://www.theguardian.com, uyirmai.com ஏப்ரல் 16/ 2020 )

வதந்தி ஈமானை உரசிப் பார்க்கும் வல்லமை கொண்டது!

وقف النبي صلى الله عليه وسلم ينعي للناس قادة غزوة مؤتة وعيناه تذرفان بأبي هو وأمي صلى الله عليه وسلم، فقال عليه الصلاة والسلام: لقد أخذ الراية زيد بن حارثة فأصيب، ثم أخذ الراية جعفر فأصيب، ثم أخذ الراية ابن رواحة فأصيب، وعيناه تذرفان ثم قال: حتى أخذ الراية سيف من سيوف الله ففتح الله عليهم

சில நாட்களுக்கு முன்னர் தான் மாநபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்து ரோமானியர்களின் முஅத்தாவை நோக்கி தாம் அனுப்பி வைத்த படைப்பிரிவு யுத்த களத்தில் சந்தித்த மூன்று ஷுஹதாக்களின் வீரமரணக் காட்சியை ஒருவர் பின் ஒருவராக மாநபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று அழுதவர்களாக காட்சி படுத்தி கூறியதோடு, அடுத்த தளபதியாக "அல்லாஹ்வின் வாள்களில் இருந்தும் ஒரு வாள்" இஸ்லாமிய கொடியை கையில் ஏந்தி களம் காண்கிறார். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை வைத்துள்ளான்" என்று கூறியிருந்தார்கள்.

ஆனால், தற்போது மதீனாவின் எல்லையில் நடந்து கொண்டிருப்பதோ வேறு.

فقد رأى أولئك الصغار أن انسحاب 

خالد 

ومن معه

دون نصر حاسم أو شهادة في سبيل الله ـ فرارا يقابل بحثو التراب عليهم، وقالوا لهم: يا فرار، أفررتم في سبيل الله؟،

ஆம்!  எந்தப் படைத் தளபதியின் கரங்களில் அல்லாஹ் வெற்றியை வழங்குவான் என மாநபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து பேசினார்களோ அந்தத் தளபதியின் தலைமையில் பங்கேற்ற படையினரை மதீனாவின் மக்கள் தூற்றிக் கொண்டு இருந்தார்கள். படை வீரர்கள் மீது மண்ணை வாரி வீசிக் கொண்டிருந்தனர். எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரணடைந்த படையினர்களே!, புறமுதுகிட்டு ஓடி வந்த படையினரே! என்று பேசிக் கொண்டு இருந்தனர்.

மாநபி (ஸல்)  அவர்கள் செவிகளுக்கு இந்தச் செய்தி வந்த போது, மதீனாவின எல்லைக்கே வந்து காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களிடம் முஅத்தாவில் நடைபெற்ற யுத்தம், யுத்தத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தார்கள்.

அதற்கு, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்:- "அல்லாஹ்வின் தூதரே! எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். முஸ்லிம்களோ வெறும் பத்தாயிரம். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென அவர்கள் திருப்பித் தாக்குதல் நடத்தினால் நமது படைக்கே கடுமையான உயிர்ச் சேதம் ஏற்படும். ஆகவே, அதைத் தடுக்கும் விதமாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களை போரில் சந்தித்துக் கொள்ளலாம்" என்று கருதி தான் நான் படையை ஊர் திரும்புமாறு கட்டளையிட்டேன்" என்று கூறினார்கள்.

فقال النبي ـ صلى الله عليه وسلم ـ

ليسوا بالفرار، ولكنهم الكرار إن شاء الله تعالى )..

அப்போது, மண்ணை வாரி வீசி வார்த்தையால் தூற்றிக் கொண்டிருந்த மக்களை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் "இவர்கள் விரண்டோடி வந்தவர்கள் அல்லர். அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்விற்காக என்றென்றும் உறுதியுடன் நிற்பவர்கள், இன்ஷா அல்லாஹ்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

காரணம் இது தான் "படை மதீனாவுக்கு திரும்பும் முன்பாகவே படை குறித்த வதந்தி காட்டுத் தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாகப் பரவுகிறது. ஆம், இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் தோல்வி பயத்தால் பின் வாங்கி புறமுதுகிட்டு ஓடி வந்து விட்டது" என்று.

أن رسول الله ـ صلى عليه وسلم ـ بعث

الحارث بن عمير الأزدي 

 بكتابه إلى ملك الروم، فعرض له شرحبيل بن عمرو الغساني ـ وكان عاملا على البلقاء من أرض الشام ـ من قبل قيصرـ، فأوثقه رباطا، ثم قدمه فضرب عنقه، وكان قتل السفراء والرسل من أشنع الجرائم، وهو بمثابة إعلان حرب، فاشتد ذلك على رسول الله ـ صلى الله عليه وسلم ـ وعلى المسلمين، ومن ثم جهز رسول الله ـ صلى الله عليه وسلم ـ جيشا قوامه ثلاثة آلاف مقاتل، وأمر عليهم زيد بن حارثة ، وقال:( إن قتل زيد فجعفر ، وإن قتل جعفر فعبد الله بن رواحة ) ( البخاري )، وأمرهم أن يأتوا مكان مقتل الحارث بن عمير ، وأن يدعوا من هناك إلى الإسلام، فإن أجابوا، وإلا استعانوا بالله عليهم وقاتلوهم.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு கி.பி. 629 -ல் சிரியாவை சேர்ந்த புஸ்ராவில் உள்ள கிராக்கியஸ் மன்னரின் கவர்னருக்கு ஏகத்துவ அழைப்பை ஏந்திய கடிதம் ஒன்றை ஹாரிஸ் இப்னு உமைருல் அஸைதி (ரலி) அவர்களிடம் கொடுத்து தூதுவராக அனுப்பி வைத்தார்கள்.

பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதிக்கு தன்னந்தனியாக சுட்டெரிக்கும் பாலை மணல், ஏற்ற இறக்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு என நாட்கணக்கில் பயணித்து இன்றைய ஜோர்டான் நாட்டின் அல்கரக் பகுதியில் அமைந்துள்ள முஅத்தா எனும் இடத்திற்கு வந்து சேர்ந்த ஹாரிஸ் இப்னு உமைர் (ரலி) அவர்கள் கவர்னரிடம் மாநபி (ஸல்) அவர்களின் கடிதத்தை வழங்கினார்கள்.

ஆனால், கடிதம் வழங்கப்பட்ட அடுத்த நொடியே அந்த கவர்னர் ஹாரிஸ் இப்னு உமைர் (ரலி) அவர்களை கொலை செய்து விட்டான்.

தூதுவரை கொலை செய்வது மாபாதகச் செயல் என்ற பொதுவான சட்ட ம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் கொஞ்சம் கூட இரக்கம் இன்றி ஹாரிஸ் இப்னு உமைர் (ரலி) அவர்களை கொலை செய்து விட்டான்.

பெருமானார் (ஸல்) அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தி வந்த போது ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) தலைமையில் மூவாயிரம் வீரர்கள் கொண்ட படைப்பிரிவை முஅத்தாவை நோக்கி அனுப்பி வைத்தார்கள்.

படையை அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில் போர் நடைபெறும் காலத்தில்  அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) ஆகியோர் அடுத்த தளபதிகளாக இருந்து ஒருவர் பின் ஒருவராக தலைமை தாங்கி படையை வழிநடத்துவார்கள் என்றும் அதன் பின்னரும் நான்காவதாக ஒருவரை மக்களாக தேர்ந்தெடுத்து தளபதியாக்கி கொள்ளட்டும்! " என்று விசித்திரமான ஒரு முன்னறிவிப்பையும் செய்து வழியனுப்பி வைத்தார்கள்.

எதிரிகள் மூன்று லட்சம் பேர் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலை தூரம் அதை நோக்கி படை வீரர்கள் பயணித்தனர்.

மாநபி ஸல் அவர்களின் முன்னறிவிப்பு நடந்தேறியது. மூன்று தளபதிகளும் ஷஹாதா வீர மரணம் அடைந்தார்கள்.

நான்காவதாக ஸாபித் இப்னு அக்ரம்  (ரலி) அவர்களால் முன் மொழியப்பட்ட காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை படையினர் அனைவரும் தளபதியாக ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

புதிய தளபதி புதிய வியூகத்துடன் படை ரோமானியர்களை எதிர்த்து களமிறங்கியது.

மொத்தம் ஏழு நாட்கள் போர் நடைபெற்றது. காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையேற்ற முதல் நாளில் எதிரிகளோடு கடுமையான போர் நடந்தது. அன்றைய நாளில் மட்டும் காலித் இப்னு வலீத் ரலி அவர்களின் ஒன்பது வாள்கள் ஒடிந்து போயின.

نظر خالد بن الوليد وفي ظلام الليل وفي سرعة البرق والضوء وعدل صفوف الجيش، فجعل الميمنة مكان الميسرة، وجعل الميسرة مكان الميمنة، وجعل الساقة في المقدمة وأخر المقدمة إلى الساقة، وكلف طائفة من الجنود أن يتأخروا خلف الجيش، وعند مطلع الصباح أمرهم أن يثيروا غباراً، وأن يحدثوا صوتاً وصياحاً وجلبةً وضوضاء.

وفي الصباح الباكر بعدما بزغ الفجر، وجدت كتائب الروم وجوهاً غير الوجوه التي كانت تحاربها بالأمس، ورأت أعلاماً جديدة، ونظرت فوجدت غباراً، وسمعت صيحةً وصوتاً وجلبةً وضجيجاً، فظن الروم أن مدداً جديداً قد أقبل إلى جيوش المسلمين، فدب الرعب في قلوبهم، وبدءوا في الانسحاب المذهل المروع

முதல் நாள் போர் முடிந்து கூடாரங்களுக்கு திரும்பிய படை வீரர்களை இரவில் அழைத்து காலித் இப்னு வலீத் ரலி அவர்கள் தந்திரமான வியூகம் ஒன்றை அமைத்தார்கள்.

படை வீரர்களை பல குழுக்களாக பிரித்தார்கள். நாளை யுத்தம் ஆரம்பிக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியில் இருந்து பிரிந்து சென்று யுத்த களத்திற்கு நாலா புறத்தில் இருந்தும் சப்தமிட்டுக் கொண்டே, புழுதியைக் கிளப்பியவாறு வர வேண்டும் என்று நான்கு குழுக்களை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து, முதல் நாளில் முன்கள வீரர்களாக இருந்த அனைவரையும் பின்கள வீரர்களாக மாற்றினார்கள்.

இடது அணியிணரை வலதிலும், வலது அணியிணரை இடதிலும் மாற்றி அமைத்து அப்படியே நாளை நடக்கும் யுத்த களத்தில் நிற்க வேண்டும் என்று
கட்டளை பிறப்பித்தார்கள்.

இந்த மாற்றம் என்பது போர் நடக்கும் அத்துனை நாட்களிலும் மாறி மாறி நடக்க வேண்டும் என்று தீர்மானமாக கூறினார்கள். அதற்காக பல குழுக்களாக வீரர்களை பிரித்தார்கள்.

படையில் பயணித்த நபித்தோழர்கள் அனைவரும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் எண்ணவோட்டம் எதுவாக இருக்கும்? என்று கணிக்க முயன்றும் அவர்களால் கணிக்க முடியவில்லை.

இறுதியாக ஆலோசனை கூட்டம் முடிந்ததும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் "நாம் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றோம்" என்பதை எதிரிகள் கணித்து நாளை கடுமையான வேகத்துடன் போரிட வருவார்கள். ஆனால், நாம் பல குழுக்களாக பிரிந்து நாலா புறங்களில் இருந்து யுத்த களத்தை சூழும் போதும், முன்கள வீரர்களை பின்னிறுத்தி பின்கள வீரர்களை முன்னிறுத்தும் போதும் எதிரிப்படையினரின் முழு எண்ணவோட்டமும் "புதிதாக படையில் வீரர்கள் இணைந்திருக்கின்றார்கள்" என்று மாறி விடும்.

இது அடுத்தடுத்த நாட்களில் தொடரும் போது "புதிது புதிதாக படையில் வீரர்கள் இணைந்து கொண்டே இருக்கின்றார்கள். படை பெரிய படையாக இருக்கும்" என்று முடிவெடுத்து அவர்கள் பின்னோக்கி செல்வார்கள்.

நாம் அந்த தருணத்திற்காகவே காத்திருந்து முன்னோக்கி சென்று கடுமையாக தாக்கும் பட்சத்தில் அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள் வெற்றி நமது வசமாகும்" என்று கூறி முடித்தார்கள்.

இந்த விஷயத்தை கேட்ட மாத்திரத்திலேயே படை வீரர்கள் அனைவரும் உற்சாகமாகினர்.

காலித் இப்னு வலீத் ரலி அவர்களின் தீர்க்கமான இந்த அணுமானத்தைப் போலவே ஏழாவது நாளில் இரண்டு லட்சம் வீரர்களைக் கொண்ட ரோமானிய படை சொந்த மண்ணிலேயே புறமுதுகிட்டு ஓடியது.

குறிப்பிட்ட ஒரு பகுதி வரை விரட்டிச் சென்ற காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் ரோமானியர்கள் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்பதை உறுதி செய்து விட்டு மதீனா திரும்புமாறு படையினருக்கு கட்டளை பிறப்பித்தார்கள்.

மொத்தமாகவே இஸ்லாமிய படையில் ஏழு நாட்கள் நடந்த யுத்தத்தில் 12 நபித்தோழர்கள் ( 8 அன்ஸாரித் தோழர்கள் 4 முஹாஜிர்கள் ) ஷஹாதா வீர மரணம் அடைந்தார்கள்.

பெரிய அளவிலான பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏதும் இன்றி இஸ்லாமிய படையை பாதுகாப்பாக வெற்றியோடு அழைத்து வந்தார்கள் வீரத் தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

ஒரு தவறான செய்தி, வதந்தி நபித்தோழர்கள் சிலரை எங்கே கொண்டு வந்து நிறுத்தியது என்றால்
"
அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் தலைமையேற்று படையை வழிநடத்தும்! அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை வழங்குவான்" என்று மாநபி ஸல் அவர்கள்  சோபனமாக முன்னறிவிப்பு செய்திருக்க அதன் மீது  நம்பிக்கை வைப்பதில் இருந்து அவர்களை தடுத்து விட்டது.

வதந்தியான ஒரு தகவல் சில போது நம் ஈமானையே உரசிப் பார்த்து விடும் வல்லமை கொண்டது என்பதை நாம் உணர வேண்டும்.

எந்த செய்தியாயினும் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்!

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். ( அல்குர்ஆன்: 49: 6 )

எப்படி உறுதிப்படுத்துவது என்பதை இறைத்தூதர் ஸுலைமான் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற ஒரு நிகழ்வை பதிவு செய்து அல்லாஹ் வழிகாட்டுகின்றான்.

நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வசப்படுத்திக் கொடுத்தவைகளில் ஹுத்ஹுத் (கொண்டலாத்தி) பறவையும் ஒன்று

எப்போதும் அவர்களுடனே இருக்கும் அந்த பறவை சில நாட்களாக காணவில்லை

ஸுலைமான் (அலை) அவர்கள் அதன் இழப்பைக் குறித்து பெரிதாக அங்கலாய்க்கின்றார்கள்‌

அவர்களின் அங்கலாய்ப்பில் இருந்து ஒரு விஷயம் நமக்கு புலப்படுகிறது. ஹுத்ஹுத் எங்கே சென்றாலும் நபி ஸுலைமான் (அலை) அவர்களின் அனுமதி பெற்றே செல்லும் போலும்

தற்போது அது சொல்லாமல் சென்று இருக்க வேண்டும். ஆதலால் தான் நபி ஸுலைமான் (அலை) அவர்கள்

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ

அவர் பறவையை (ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்

لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏

 “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார். ( அல்குர்ஆன்: 27: 20, 21 

சில நாட்களுக்குப் பிறகு வந்த ஹுத்ஹுத் நபி ஸுலைமான் (அலை) அவர்களிடம

فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍۢ بِنَبَاٍ يَّقِيْنٍ

(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். என்றது.

اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ

“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது

وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ‏

“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை

اَلَّا يَسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ يُخْرِجُ الْخَبْءَ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ

“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா

இதைக் கேட்டதும் நபி ஸுலைமான் (அலை) அவர்கள் உடனே நம்பி விடாமல்..

قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ

(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 27: 22- 27 

தகவல் உறுதியானது தான் என்று தெரிந்த பின்னரே, தகவல் கொண்டு வந்த ஹுத்ஹுதை வைத்தே ஸபா நாட்டு அரசிக்கு ஏகத்துவ அழைப்பை ஏந்திய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்கள்

اِذْهَبْ بِّكِتٰبِىْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ

“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).(  அல்குர்ஆன்: 27: 28 )

இபாதுர் ரஹ்மானாக மாறி விட வேண்டும்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல் ஃபுர்கான் அத்தியாயத்தில் இபாதுர் ரஹ்மான் என்று தனது நேசத்திற்குரிய அடியார்களின் பண்புகள் பலவற்றை அடையாளப் படுத்தி கூறும் வரிசையில் 

وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا‏

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிப்புலன் இழந்தவர்களைப் போன்றும், பார்க்கும் திறன் இழந்தவர்களைப் போன்றும் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனை செய்து சீர்தூக்கி செவி சாய்ப்பார்கள்.) ( அல்குர்ஆன்: 25: 73 )

 

இறைவனின் சான்றுகள் பற்றி ஒரு செய்தியை, இறை மார்க்கம் தொடர்பான ஒரு செய்தியை கேட்டாலும் கூட அவர்கள் அதை சரி கண்ட பின்னரே அதன் மீது கவனம் செலுத்துவார்கள் என்று கூறுகிறான்.

அப்படியானால் சாதாரண விஷயங்களில் நாம் எவ்வளவு தூரம் அதன் உண்மைத் தன்மையை ஆராய கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வதந்திகளை நம்புவதில் இருந்தும் அதைக் கவனமின்றி அறியாமையால் பிறருக்கு பரப்புவதில் இருந்து நம்மை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

5 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியத்தை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  2. சமூக ஊடகங்களால் சங்கடங்களை ஏற்படுத்தாமலும் சந்திக்காமலும் சமூகம் தவிர்க்கவும் நிம்மதியாக வாழவும் தங்களது இந்த ஆக்கம் அருமையான வழிகாட்டி ஹஜ்ரத்.
    جزاكم الله خير الجزاء يا استاذ الكريم

    ReplyDelete
  3. الحمد لله
    உங்கள் கட்டுரை மிக அருமையாக உள்ளது ஹழ்ரத் ஆனால் தாமதமாக பதிவேற்றப்படுகிறது. வியாழன் மதியத்துக்கு முன் இருந்தால் பிரயோஜனமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் பெருந்தகை!

      பல்வேறு பணிகளுக்கிடையே மேற்கொண்டு வருவதால் வியாழக்கிழமை இரவு தான் பதிவு செய்ய இயல்கிறது. துஆ செய்யுங்கள்

      Delete