Thursday, 25 July 2024

முஸ்லிம் வெறுப்பு வேரறுக்கப்பட வேண்டும்!!

 

முஸ்லிம் வெறுப்பு வேரறுக்கப்பட வேண்டும்!!


ஒவ்வோர் ஆண்டும் ஷ்ரவன் மாதத்தின் போது லட்சக்கணக்கான கன்வாரியர்கள் ஹரித்வாரில் இருந்து புனித நீருடன் முசாபர்நகர் வழியே செல்கின்றனர்.

இந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தாபாக்கள், உணவு விடுதிகள், இனிப்பு கடைகள், பழக்கடைகள் போன்றவை, தங்கள் கடையின் பெயர் மற்றும் அதில் பணிபுரிபவர்கள் பெயரை தெளிவாகவும் பெரியதாகவும் எழுதி வைத்திருக்க வேண்டும் என காவல்துறை மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் ஆணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையின் விளைவை கண்கூடாக பார்க்க முடிகிறது என்று பிபிசி நேரடியாக கள ஆய்வு செய்து காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது.

சிலர் அவர்களாக முன்வந்து எழுதி வைத்ததாக கூறினாலும், சிலர் காவல்துறையின் கட்டாயத்தின் பேரில் இதனை செய்ததாக கூறுகிறார்கள்.

ஹரித்வாரில் இருந்து வரும் பிரதான சாலை மதீனா சவுக் (Madina Chowk) வழியாக முசாபர்நகருக்குள் நுழைகிறது.

இப்போது, கடைகளின் வெளியே வெள்ளைப் பலகைகளில் சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்துகளில் இஸ்லாமிய உரிமையாளர்களின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி - ஹரித்வார் நெடுஞ்சாலை மற்றும் பிற பகுதிகள் மற்றும் நகர்ப்புற சாலைகளிலும் இதே சூழல் தான் நிலவுகிறது. ( நன்றி: பிபிசி தமிழ், 24/07/24 )

இந்த உத்தரவு, முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. 

பாஜக கூட்டணி கட்சிகள் உட்பட இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்நன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, முஸ்லிம் வணிகர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுதுவது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த பெயர்கள் எழுதும் முடிவு குறித்து 2 மாநில அரசுகளும் வரும் வெள்ளிக்கிழமை (இன்று) க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ( நன்றி: புதிய தலைமுறை, 22/07/2024 )

கன்வார் யாத்திரை என்றால்?

உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. 

 

இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை கடந்த திங்கட்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. இந்த யாத்திரை, ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. 

காரணம் என்ன?

குழப்பங்களை தவிா்ப்பதோடு, நல்லிணக்கத்தை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. ஆனால், இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான், உத்தரகண்டின் ஹரித்வாரிலும், ஏராளமான பக்தா்கள் காவடி யாத்திரை மேற்கொள்வா் என்பதால், அந்த மாநிலத்திலும் இதேபோன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது குறித்து அந்த மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி கூறுகையில், யாரையும் குறிவைத்து இந்த முடிவு மேற்கொள்ளப்படவில்லை. சிலா் தங்களது அடையாளத்தை மறைத்து, உணவகங்களை நடத்துகின்றனா். இதன் காரணமாக மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தவிா்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். ( நன்றி: தினமணி, 22/07/24 )

உண்மையில் இது அப்பட்டமான, திட்டமிட்ட "முஸ்லிம் வெறுப்பு" செயல் என்பதில் ஐயமில்லை.

முஸ்லிம் வெறுப்பு.....

சமீபகாலமாக நமது தேசத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார்.

அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வதோதரா மாநகராட்சி ஆணையர், மேயர், காவல் ஆணை யர் ஆகியோருக்கும் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். அதில், ‘‘வதோதரா ஹரினி பகுதி, இந்துக்கள் அதிகம் உள்ள பகுதி. இங்கு 4 கி.மீ சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம் குடியிருப்புகள் இல்லை.இங்கு முஸ்லிம் ஒருவருக்கு வீடு ஒதுக்குவது 461 குடும்பங்களின் அமைதியான வாழ்வில் தீயை பற்ற வைப்பது போன்றது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும்’’ என தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த முஸ்லிம் பெண் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் வசிக்காமல் வேறு பகுதியில் வசித்து வருகிறார். இதுதொடர்பாக குடியிருப்பு சொசைட்டி நிர்வாகத்தினருடன் பேச முஸ்லிம் பெண் முயன்றும் பயன் இல்லை. கடந்த 10-ம் தேதியும் அந்த குடியிருப்பில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோசமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து வதோதரா மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு திட்டத்தின்படி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் விண்ணப்பதாரர்களை மத அடிப்படையில் பிரித்து வீடு ஒதுக்கீடு செய்ய இடமில்லை. இந்த விவகாரத்துக்கு தீர்வு காண இருதரப்பினரும் நீதி மன்றத்தைதான் அணுக வேண் டும்’’ என்றனர். ( நன்றி: தமிழ் திசை இந்து, 15/06/2024 )

தெலுங்கானாவில்  ஹைதராபாத் மேடக் நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சிகிச்சை அளித்ததற்காக மருத்துவமனையை சூறையாடி, மருத்துவரின் காரை சேதப்படுத்திய பாஜக இளைஞர் அமைப்பினர்.

'நாங்கள் யாரையும் மதம் பார்த்து சிகிச்சை அளிப்பதில்லை எனவும் காயம் அடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்தது தவறா? எனவும் மருத்துவர் கேள்வி கேட்டுள்ளார். ( நன்றி: 

இதற்கு முன்னர் 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் முஸ்லிம் ஓட்டுநர் என்பதால் ஓலா காரில் பயணம் செய்ய இருந்த ஒருவர் புக்கிங்கை ரத்து செய்ததும், ஸ்விக்கி மற்றும் ஸொமோட்டோவில் ஆர்டர் செய்த உணவை முஸ்லிம் டெலிவரி பாய் ஒருவரால் டெலிவரி செய்த போது உணவை வாங்க மறுத்தது என பல்வேறு "முஸ்லிம் வெறுப்பு" சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன.

இவ்வளவு ஏன் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பிரதமர் மோடி உட்பட பாஜகவின் தலைவர்கள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தையே பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பரப்புரையாக முன் வைத்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

முஸ்லிம் வெறுப்பை முன் நிறுத்தி இந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரிய அளவிலான கட்டமைப்பை நோக்கி  ஃபாசிஸம் முன்னேற்றம் அடைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

கடந்த 12/03/2022 ம் தேதியன்று ஐநா பொதுச்சபை மார்ச் 15ஆம் தேதியை 'இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாள்' என நிர்ணயித்தது.

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (OIC) சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், இது தொடர்பான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். 

அது உலக அளவில் வாழும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்குடன் முன்மொழியப்பட்டது. ஓஐசி அமைப்பில் உள்ள 57 நாடுகளுடன் சேர்த்து, சீனா, ரஷ்யா உட்பட எட்டு நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்தன.

ஆனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதோடு இந்த தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பும் தெரிவித்தது.

 

'தி இந்து' நாளிதழின் முன்னணி ஆய்வாளர் அமித் பர்வா பிபிசியிடம் பேசுகையில், "இஸ்லாமோஃபோபியா தீர்மானம் தொடர்பாக இந்தியா மிகவும் விசித்திரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது," என்றார்.

இஸ்லாமிய வெறுப்பு ஒரு தீவிரமான பிரச்னை. அது இப்போது உலக அரங்கில் ஒரு தீவிரமான பிரச்னையாக உருவெடுத்திருப்பது நல்லது," என்று அவர் கூறினார். "இஸ்லாமிய வெறுப்பில் கவனம் செலுத்தாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பயங்கரவாதம்," என்கிறார் அவர்.இருப்பினும், ஐ.நா.வின் தீர்மானத்தை விட முக்கியமான அம்சம்,

உலக நாடுகள் அந்தந்த நாடுகளில் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அமித் பார்வா வாதிடுகிறார்.இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கேட்டதற்கு, "இந்து மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான மத வெறுப்பைப் பொருத்தவரை, இது பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் அறியாமையின் விளைவு" என்று அவர் பதிலளித்தார். "இந்தியா தமது உள்நாட்டு பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப இந்த நிலையை எடுத்துள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் இந்தியாவில் மிகப்பெரிய சிறுபான்மையினர் மற்றும் அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 14% உள்ளனர். இந்தோனீசியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, இந்தியா அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. எவ்வாறாயினும், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறை மற்றும் மத வெறுப்பு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.இத்தகைய சூழலில்தான் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக எழும் கேள்விகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகள் சில காலமாக கவலை வெளியிட்டு வருகின்றன. ( நன்றி: பிபிசி தமிழ், 19/03/2022 )

வெறுப்புப் பேச்சு சில புள்ளி விவரங்கள்…

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் வெறுப்புப் பேச்சுக்கள் காணப்படுகின்றன

கடந்த ஏழு ஆண்டுகளில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு-பேச்சு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் 500% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தெரிவித்துள்ளது. 

2014 ஆம் ஆண்டில் 323 வழக்குகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும், 2020 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,804 வழக்குகளிலும் பதிவாகியுள்ள நிலையில், வெறுப்புப் பேச்சுக் குற்றங்களில் ஆறு மடங்கு அதிகரிப்பை தரவு வெளிப்படுத்துகிறது .     அனைத்து மாநிலங்களிலும், தமிழகத்தில் அதிகபட்சமாக 303 வழக்குகள் பதிவாகியுள்ளன, 

 

மேலும் உத்தரப் பிரதேசத்தில் 243 வழக்குகளும், தெலுங்கானாவில் 151 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், வெறுப்பைக் கண்காணிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பான இந்துத்வா வாட்ச், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் முஸ்லிம்களைக் குறிவைத்து 255 வெறுப்பூட்டும் பேச்சுக் கூட்டங்களை ஆவணப்படுத்தியுள்ளது . 

இவற்றில் 70% சம்பவங்கள் 2023 மற்றும் 2024ல் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் நடந்துள்ளன. மேலும் 80% வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வெளிப்பட்டதாக சிஜேபி அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.

முஸ்லிம் வெறுப்பு துவங்கியது எப்போது?

இன்று நேற்றல்ல ஏகத்துவம் இந்த உலகில் நிலைபெற ஆரம்பித்த காலத்தில் இருந்தே முஸ்லிம் வெறுப்பு சிந்தனையும், பிரச்சாரமும் வேர் விட ஆரம்பித்தது.

அனைத்து நபிமார்களின் காலத்திலும் இந்த பிரச்சாரம் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டதாக குர்ஆன் சான்றுரைக்கிறது.

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறது.

قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ

அவர்கள்: தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 26: 111 )

இறைத்தூதர் ஷுஐபு (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறது.

قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَـنَرٰٮكَ فِيْنَا ضَعِيْفًا‌ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ‌ وَمَاۤ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ‏

(அதற்கு) அவர்கள் ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானவற்றை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11: 91 )

இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறது.

இறைத்தூதர் ஹூத் (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறது.

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறது.

وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِىْۤ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّه اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ‏

 

மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்என்று. ( அல்குர்ஆன்: 40: 26 )

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ۚ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَـكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ‌

(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான். ( அல்குர்ஆன்: 26: 49 )

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறது.

قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُ‌ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ‌ وَاهْجُرْنِىْ مَلِيًّا‏

(அதற்கு அவர்) இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்என்றார். ( அல்குர்ஆன்: 19: 46 )

நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இந்த முஸ்லிம் வெறுப்பு சிந்தனையை எதிர் கொண்டிருக்கிறனர்.

அம்ர் பின் ஆஸ் மற்றும் அப்துல்லா பின் அபீ ரபீஆ ஆகியோர் நஜ்ஜாஷி மன்னரை சந்தித்து,  மன்னரே..! உங்களது நாட்டில் நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்ற இந்த முஸ்லிம்கள், எங்களது முந்தைய மார்க்கத்தைத் துறந்து விட்டு புதியதொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு கலவரக்காரர்களாக இவர்கள் மாறி விட்டார்கள். அவர்களது புதிய மார்க்கத்தின் கொள்கையின் காரணமாக, இரத்த பந்தங்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுகின்றார்கள். தந்தையை மகனுக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். எங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் முன்னோர்களது வழிமுறைகளைக் கூட இவர்கள் உடைத்தெறிகிறார்கள். உங்களது பரந்த மனப்பான்மையின் காரணமாக இவர்களை நீங்கள் அமைதியாக இங்கு வாழ விட்டிருக்கின்றீர்கள், ஆனால் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். இந்த நாட்டிலே குழப்பத்தை உண்டு பண்ணக் காரணமாகி விடுவார்கள், ஏனெனில் இவர்கள் உங்களது மார்க்கமான கிறிஸ்துவத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் போல நீங்களும் பிரச்னைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இவர்களை நீங்கள் எங்கள் கையில் ஒப்படைத்து நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை, இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை எங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று கூறி முடித்தார்கள். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

முஸ்லிம் வெறுப்பு ஏன்?

முஸ்லிம் வெறுப்பு எனும் சித்தாந்தம் தோன்றியதன் பிண்ணனியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்த உலகில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஸ்லாம் மட்டுமே அனைவரது இதயத்தையும் ஆட்கொள்கிறது, வேகமாக பரவி வருகிறது இது தான் முஸ்லிம் வெறுப்பு சித்தாந்தம் வேர் விட்டு படர அடிப்படை காரணம்.

ஏன் இஸ்லாம் அனைவரது இதயத்தையும் ஆட்கொள்கிறது? ஏன் வேகமாக பரவுகிறது? என்ற இந்த கேள்விகளுக்கு பதில் மிகவும் விசாலமாக இருப்பதை எதிரிகள் உணராமல் இல்லை.

உலக சமயங்கள் எதுவும் போதிக்காத ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கை அந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட மறுநொடியில் இருந்தே தூய்மையான வாழ்க்கை முறை, கண்ணியமான வாழ்க்கை என்று வாழும் வாய்ப்பு கிடைப்பது கண்டு பொறுக்க முடியாமல் இது போன்ற கயமைத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

1. ஏகத்துவ கொள்கை பிடிக்காத காரணத்தால்....

قال ابن إسحاق-رحمه الله-: "وحدثنى يعقوب بن عتبة بن المغيرة بن الأخنس أنه حُدِّث: أن قريشًا حين قالوا لأبي طالب هذه المقالة بعث إلى رسول الله -صلى الله عليه وسلم- فقال له: يا ابن أخي، إن قومك قد جاؤوني فقالوا لي: كذا وكذا، للذي كانوا قالوا له، فأبق عليّ وعلى نفسك، ولا تحملنى من الأمر مالا أطيق. فظن رسول الله -صلى الله عليه وسلم- أنه قد بدا لعمه فيه أنه خاذله ومسلمه، وأنه قد ضعف عن نصرته والقيام معه. قال رسول الله -صلى الله عليه وسلم-: يا عمّ، والله لو وضعوا الشمس في يمينى والقمر في يساري على أن أترك هذا الأمر حتى يظهره الله، أو أهلك فيه ما تركته.

قال: ثم استعبر رسول الله -صلى الله عليه وسلم- فبكى ثم قام، فلما ولى ناداه أبو طالب، فقال: أقبل يابن أخي، قال: فأقبل عليه رسول الله -صلى الله عليه وسلم-، فقال: اذهب يا بن أخي، فقل ما أحببت، فوالله لا أسلمك لشيء أبدًا

பெருமானார் (ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரம் மக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக பரவவே அதை தாங்கிக் கொள்ள முடியாத குறைஷிகளின் தலைவர்கள் 25 பேர் அபூதாலிபிடம் சென்று உமது சகோதரன் மகன் முஹம்மத் எமது கடவுளர்களை ஏசுகிறார், எமது கொள்கைகளை விமர்சிக்கின்றார், எங்கள் மக்களை மடமைத்தனத்தின் பால் அழைத்துச் செல்கிறார், எமது மூதாதையர்களை வழிகேடர்கள் என்கிறார்.

இதை நீங்கள் தடுத்து நிறுத்துங்கள், அல்லது அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று முறையிட்டனர். அதற்கு அபூதாலிப் குறைஷித் தலைவர்களிடம் மென்மையான குறையிலும், அழகான முறையிலும் பதில் கூறி அனுப்பி வைத்தார்கள்.

இரண்டாம் முறையாக சில மாதங்கள் கழித்து குறைஷித் தலைவர்கள் அபூதாலிபைச் சந்தித்து அபூதாலிபே! உங்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆதலால் தான் முன்பொருமுறை உம்மிடம் வந்து உமது சகோதரன் மகன் குறித்து எச்சரித்துச் சென்றோம்.

ஆனால், முஹம்மத் (ஸல்) தம் போக்கை மாற்றிக் கொள்பவராய் இல்லை.

இனிமேலும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர் தமது கொள்கையையும், பிரச்சாரத்தையும் விட்டுவிடவில்லையென்றால் உங்களையும் அவரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம், போர் செய்வோம்இது தான் எங்களது இறுதி எச்சரிக்கையாகும் என்று உரத்த் குரலில் சொல்லி விட்டு வந்தனர்.

இதன் பின்னர், அபூ தாலிப், நபி (ஸல்) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை விளக்கி கூறி என்னால் இயன்றவரை உமக்கு உறுதுணையாய் இருப்பேன் அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினார்கள்.

அப்போது,:அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதாலிப் அவர்களிடம் இருந்து வந்த இந்த பதிலைக் கண்டு எதிரிகள் புதுயுக்தியை கையாள முயற்சிக்கின்றனர் என்பதை விளங்கிக் கொண்டு பெரிய தந்தையே!

என் வலக்கரத்தில் சூரியனையும், என் இடக் கரத்தில் சந்திரனையும் வைத்தாலும், என்னுடைய இந்த கொள்கையையும், பிரச்சாரத்தையும் ஒரு போதும் விடப்போவதில்லை!

அல்லாஹ் இந்த மார்க்கத்தை எழுச்சியடைச் செய்யும்வரை, அல்லது நான் உயிரை விடும்வரை இதை விட்டுவிடப் போவதில்லை! என்று கூறிவிட்டு, மாநபி (ஸல்) அவர்கள் அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள்.

திரும்பிச் சென்ற நபியவர்களை அபூதாலிப் அழைத்து என் சகோதர்ர் மகனே! நீ விரும்பிய படி வாழ்ந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணை! எந்த நிலையிலும் யாரிடமும் உம்மை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ( நூல்:  தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்:54,55,56 )

2. ஏற்றத் தாழ்வு நீக்கி சமத்துவம் பேணப்படுவதை ஜீரணிக்க முடியாமல்....

ஷஹாதா எனும் கலிமாவை மொழிந்த மாத்திரத்தில் ஒருவர் இனம் கடந்து, நிறம் கடந்து, மொழி மறந்து, தேசம் கடந்து சக சகோதரனாக பார்க்கப்படுவதை கண்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ ؕ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ‏

(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். ( அல்குர்ஆன்: 6: 52 )

قال المشركون : ولا نرضى بمجالسة أمثال هؤلاء - يعنون سلمان وصهيبا وبلالا وخبابا - فاطردهم عنك ; وطلبوا أن يكتب لهم بذلك ، فهم النبي صلى الله عليه وسلم بذلك ، ودعا عليا ليكتب ; فقام الفقراء وجلسوا ناحية ; فأنزل الله الآية . ولهذا أشار سعد بقوله في الحديث الصحيح : فوقع في نفس رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أن يقع

நபி ஸல் அவர்களின் சமூகம் தந்த இணைவைப்பாளர்களில் சிலர் கப்பாப், பிலால், ஸுஹைப், ஸல்மான் ஃபார்ஸி (ரலி - அன்ஹும்) ஆகியோர் அமர்ந்து இருக்கும் இந்த சபையில் அவர்களுடன் அமர்ந்து நாங்கள் உங்கள் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக, அவர்களை வெளியே அனுப்பி விடுங்கள். நாங்கள் உங்கள் அழைப்பை செவியேற்கிறோம் என்று சொன்ன போது மாநபி ஸல் அவர்களின் எண்ண ஓட்டத்தில் நிகழ வேண்டிய ஒன்று நிகழவே மேற்கூறிய இறைவசனத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறக்கியருளினான்.

روى مسلم عن سعد بن أبي وقاص قال: كنا مع النبي صلى الله عليه وسلم ستة نفر، فقال المشركون للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اطرد هؤلاء عنك لا يجترءون علينا، قال: وكنت أنا وابن مسعود ورجل من هذيل وبلال ورجلان لست أسميهما، فوقع في نفس رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ما شاء الله أن يقع، فحدث نفسه، فأنزل الله عز وجل" وَلا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَداةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ".

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான், இப்னு மஸ்வூத்,பிலால், ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர், மற்றும் இருவர் (அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன்) அண்ணல் நபி {ஸல்} அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.

அப்போது, “மக்கத்து இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இதோ இந்த ஏழைகளை உம்மை விட்டும் விரட்டி விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்கள் துணிச்சல் பெற்றுவிடுவார்கள்என்று கூறினார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்களின் மனதில் எது ஏற்பட வேண்டுமென அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது. அப்போது, தான் அல்லாஹ் “{முஹம்மதே {ஸல்} தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டி விடாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே, அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராக ஆகிவிடுவீர்!எனும் 6-ஆம் அத்தியாயத்தின் 52 –ஆம் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான். ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ )

3. பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் என்ற பெயரில் நடப்பதை இஸ்லாம் தடுப்பதால்.....

قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا‌ اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ‏

(அதற்கு) அவர்கள் ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்என்று (ஏளனமாகக்) கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11: 87 )

4. அனைத்து வகையான வழிகாட்டலும் வழங்கப்பட்டிருப்பதால்....

عن سلمان رضي الله عنه ، قال: قيل له: قد عَلَّمَكُمْ نَبِيُّكُم صلى الله عليه وسلم كل شيء حتى الخِرَاءَةَ، قال: فقال: أجَل «لقد نَهَانا أن نَستقبل القِبْلَة لِغَائِطٍ، أو بَول، أو أن نَسْتَنْجِيَ باليمين، أو أن نَسْتَنْجِيَ بِأَقَلَّ من ثلاثة أحْجَار، أو أن نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَو بِعَظْمٍ»

மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்களா? என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூதர் ஒருவர் கேலியாக கேட்டபோது, ஆம்! மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்) விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான்(ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

5. யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் வாழ்வதால்......

ஹிஜ்ரி 15 –ஆம் ஆண்டு பைத்துல் முகத்தஸ் வெற்றி சாத்தியம் ஆனது. முஸ்லிம்களின் வசம் பைத்துல் முகத்தஸ் நகரத்தின் திறவுகோல் ஒப்படைக்கப்பட்டது.

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் வெற்றியின் அடையாளமாக அந்த புனித தலத்தின் திறவு கோலை ஆண்டாண்டு காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த, பாரம்பர்யமாய் ஆண்டு கொண்டிருந்த மன்னர்களின் கையில் இருந்து பெறுகின்றார்கள்.

இந்த வெற்றி எப்படி சாத்தியமானது? இதன் பின்னர் எவ்வளவு பெரிய அதிகாரப் பிரயோகம் நடந்திருக்கும்? என்றெல்லாம் எண்ணியவர்களாக வரலாற்றின் பக்கங்களை திறந்து பார்ப்போமேயானால் வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவோம்!

ஆம்! திமிஷ்க்கை வெற்றி கொண்ட கையோடு ஃபலஸ்தீனை நோக்கி, பைத்துல் முகத்தஸை நோக்கி தங்களின் படையை திருப்பினார்கள் அபூ உபைதா அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள்.

வந்த நோக்கத்தை விளக்கி கடிதம் ஒன்றை எழுதி வீரர் ஒருவரின் மூலமாக அனுப்பினார்கள் படைத்தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள்.

நாங்கள் போரிட விரும்பவில்லை, அதே நேரத்தில் உங்கள் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை எங்களோடு உங்கள் ஆட்சித்தலைவர் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார் ஈலியா ஃபலஸ்தீனை உள்ளடக்கிய நகரத்தை மையமாகக் கொண்டு தலைமையிடமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அரசர்.

விவரத்தை அறிக்கையாக தயார் செய்து மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள்.

இதோ நான் புறப்பட்டு விட்டேன் என தங்களுக்கு முன்னால் பதில் கடிதத்தை தளபதி கையில் சேர்க்கும் வகையில் வந்த வீரரிடமே கொடுத்து அனுப்பினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

2400 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நீண்ட பயணம் ( தற்போதைய தொலை தூரத்தின் கணக்குப்படி ) தங்களின் பணியாளர் ஸாலிம் (ரலி) அவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு ஒரேயொரு ஒட்டகத்தை வாகனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, வழித்துணைக்கு தேவையான சில சாதனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மதீனாவில் இருந்து புறப்பட்டார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

ஸாலிம் (ரலி) அவர்களின் பலத்த மறுப்புக்கு பின்னர் முறை வைத்து பயணம் செய்வது என்ற முடிவெடுத்து பயணம் துவங்கப்பட்டது.

சிறிது தூரம் உமர் (ரலி) ஒட்டகத்தின் மீது பயணிப்பார்கள் ஸாலிம் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து வருவார். பின்னர் ஸாலிம் (ரலி) ஒட்டகத்தின் மீது பயணிப்பார்கள், உமர் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நடந்து வருவார்கள். பின்னர் இருவரும் ஓய்வெடுத்து, ஒட்டகத்துக்கும் ஓய்வு கொடுப்பார்கள்.

இப்படியே முறை வைத்து பயணம் செய்து ஃபலஸ்தீனின் எல்லையை அடைகிற போது ஸாலிம் (ரலி) அவர்களின் முறை ஆரம்பிக்கும்.

ஊரின் எல்லையைத் தொட்டதும் அங்கே தளபதி அபூஉபைதா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள்.

ஸாலிம் (ரலி) அவர்கள் பயணிக்க மறுக்கவே, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் பயணிக்கக் கேட்டுக் கொள்வார்கள். இப்படி முறை மாற்றி பயணிப்பது அநீதம், அல்லாஹ்வின் திருமுன் கேள்வி கேட்கப்படுவேன் எனக் கூறி ஸாலிம் (ரலி) அவர்களை ஒட்டகத்தின் மீது பயணிக்க வைத்து, ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றை பிடித்து நடந்து வருவார்கள்.

وعندما علمت جيوش المسلمين بمقدم أمير المؤمنين، هب قائدها أبو عبيدة مع قواده الأربعة ليستقبلوه استقبالا يليق بمقام خليفة المسلمين، حين شاهد ابو عبيدة ما ناب ساقي أمير المؤمنين من الوحل قال له عن طيب نية، والحرص على أمير المؤمنين عمر رضي الله عنه:" يا أمير المؤمنين لو أمرت بركوب، فإنهم ينظرون إلينا".
غضب عمر بعد مقولة أبي عبيدة هذه غضبته التاريخية الشهيرة، وصاح بوجه هذا القائد الذي هزم الدولة
" والله لو غيرك قالها يا أبا عبيدة لجعلته عبرة لآل محمد صلى الله عليه وسلم!!! لقد كنا أذلة فأعزنا الله بالاسلام، فإذا ابتغينا عزاً بغير الاسلام أذلنا الله".

சற்று தொலைவில், உமர் (ரலி) அவர்களின் இந்த நிலையைக் கண்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் அங்கே அரசர்களும், அரசப் பிரதானிகளும், உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர். நீங்கள் நடுவில் வாருங்கள்! நாங்கள் இருபுறமும் அணிவகுத்து உங்களை அழைத்துச் செல்கின்றோம்!என்றார்கள்.

முகம் சிவக்க, உமர் (ரலி) அவர்கள் அபூஉபைதாவே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித வாயால் சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட உம்மைத்தவிர இந்த வார்த்தையை வேறு எவர் கூறியிருந்தாலும் இந்த உம்மத்துக்கே பாடமாக அமையும் ஓர் தண்டனையைக் கொடுத்திருப்பேன்!

அபூஉபைதாவே! நாம் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப்பாரும்!

நாம் கேவலப்பட்டவர்களாக இருந்தோம்! அல்லாஹ் நமக்கு இஸ்லாம் எனும் இம்மார்க்கத்தின் மூலம் கண்ணியத்தைக் கொடுத்தான். நாம் இம்மார்க்கம் காட்டித்தராத வேறெந்த வழியின் மூலம் கண்ணியத்தைப் பெற முயற்சி செய்தோம் எனில் விளங்கிக் கொள்ளும்! அடுத்த கனமே அல்லாஹ் நம்மை கேவலப்படுத்தி விடுவான்!என்று கூறினார்கள்.

இறுதியாக, உமர் (ரலி) அவர்களின் கரங்களின் அம்மாநரத்தின் திறவு கோல் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க சில நிகழ்வுகளும், சில கையெழுத்துகளும் அங்கே நிகழ்ந்தன. ( நூல்: முக்ததஃபாத் மின் ஸியரத்தி உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி)… )

6. தூய்மையான வாழ்க்கை வாழ்கிறார்களே என்ற வயிற்றெரிச்சலால்....

وكان الذي يكلمه جعفر بن أبي طالب ، فقال له : أيها الملك ، إنا كنا قوما أهل جاهلية ; نعبد الأصنام ، ونأكل الميتة ، ونأتي الفواحش ، ونقطع الأرحام ، ونسيء الجوار ، ويأكل القوي منا الضعيف . فكنا على ذلك حتى بعث الله إلينا رسولا منا ، نعرف نسبه وصدقه وأمانته وعفافه ، فدعانا إلى الله لنوحده ونعبده ، ونخلع ما كنا نعبد وآباؤنا من دونه من الحجارة والأوثان ، وأمرنا بصدق الحديث ، وأداء الأمانة ، وصلة الرحم ، وحسن الجوار ، والكف عن المحارم والدماء ، ونهانا عن الفواحش ، وقول الزور ، وأكل مال اليتيم ، وقذف المحصنة ، وأمرنا أن نعبد الله لا نشرك به شيئا ، وأمرنا بالصلاة والزكاة والصيام .

قالت : فعدد له أمور الإسلام - فصدقناه وآمنا به واتبعناه ، فعدا علينا قومنا فعذبونا وفتنونا عن ديننا ليردونا إلى عبادة الأوثان ، وأن نستحل ما كنا [ ص: 433 ] نستحل من الخبائث ، فلما قهرونا وظلمونا وشقوا علينا ، وحالوا بيننا وبين ديننا ، خرجنا إلى بلدك ، واخترناك على من سواك ، ورغبنا في جوارك ، ورجونا أن لا نظلم عندك أيها الملك .

முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும், மார்க்கத்திற்கும் மக்கா எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இல்லை என்று நினைத்த போது, அண்ணலார் முஸ்லிம்களை ஹபஷாவிற்கு இடம் பெயர்ந்திடுமாறு அனுப்பி வைத்தார்கள்.                                               அங்கு சென்ற முஸ்லிம்கள் மிக நிம்மதியோடு இருப்பதை தெரிந்து கொண்ட மக்கா தலைவர்கள், முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு அம்ருப்னுல் ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ ஆகிய வீரமும், தீரமும் நிறைந்த இருவரை ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷியைக் காண அனுப்பி வைக்கின்றார்கள்.                                           

அங்கு நடை பெற்ற உரையாடல் நமக்கெல்லாம் தெரியும். என்றாலும், மக்காவில் இருந்து வந்த இருவரும் சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று முஸ்லிகளைப் பார்த்து மன்னர் நஜ்ஜாஷி கேட்ட போது        

ஜஅஃபர் இப்னு அபூதாலிப் {ரலி} அவர்கள் சொன்ன பதில் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.              

நஜ்ஜாஷி மன்னர் கேள்வியை கேட்டதும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜஅஃபர் இப்னு அபூதாலிப் {ரலி} அவர்களைப் பதில் கூறுமாறு அழைத்தனர்.           ஜஅஃபர் {ரலி} அவர்கள் இப்படிப் பதில் கூறினார்கள்: அரசே! நாங்கள் மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தோம்; கற்சிலைகளை இறைவனாக நினைத்து வழிபட்டு வந்தோம்;                       

செத்த பிராணிகளை உண்டு வந்தோம்; மானக்கேடான காரியங்களைச் செய்து வந்தோம்; உறவுகளை உதறித் தள்ளி, அண்டை வீட்டாருக்கு துன்பம் விளைவித்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர்கள் அநீதியால் ஆட்டிப் படைத்தோம்.                  

இப்படியே நாங்கள் சீர்கெட்டுப் போயிருந்த கால கட்டத்தில் தான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்கு தூதராக அனுப்பினான்.                                    அவரின் பாரம்பரியத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை உடையவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு விளங்கியிருந்தோம்.                                       

 

நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது முன்னோர்களும் தெய்வங்களாக கருதி வழிபட்டு வந்த கற்சிலைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்; சத்தியத்தையே சான்று பகர வேண்டும்;                       அடைக்கலப் பொருட்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டும்; அண்டை அயலரோடு அழகிய முறியில் நடந்து கொள்ள வேண்டும்;                                                                           அல்லாஹ் தடை செய்தவற்றையும், கொலை மற்றும் மாபாதகக் குற்றங்களை விட்டும் விலக வேண்டும் என அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்.                            மேலும், மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அநாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்களின் மீது அபாண்டம் சுமத்துதல் ஆகிவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார்.                 

அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு     தொழ வேண்டும்; ஏழைகளின் உரிமைகளை  கொடுக்க   வேண்டும்; என்றும் அத்தூதர் எங்களுக்கு ஆணையிட்டார்.             

எனவே நாங்கள் அவரை உண்மையாளராக ஏற்றுக் கொண்டோம்; அவரை விசுவாசித்தோம்; “அவர் எங்களுக்கு அறிமுகப் படுத்திய அல்லாஹ்வின் பாதையை மார்க்கத்தைப் பின் பற்றினோம்;” அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; இணை வைப்பதை விட்டொழித்தோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்.                                                     

இதனால் எங்களது இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களுக்கு சொல்லெனா துன்பம் விளைவித்தனர்; எங்களை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திருப்பிட முயற்சி மேற்கொண்டனர்.                    

எங்களின் உயிருக்கும் மார்க்கத்திற்கும் அவர்கள் தடையான போது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் புகலிடம் தேடி வந்தோம்.                

அரசே! இங்கு எங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என நாங்கள் நம்புகின்றோம்என்று கூறி ஜஅஃபர் இப்னு அபூ தாலிப் {ரலி} அவர்கள் விளக்கம் கூறிமுடித்தார்கள். (  நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:68,69,70. )

முஸ்லிம் வெறுப்பை விதைத்தவர்களின் முடிவு....

இந்த உலகத்தில் முஸ்லிம் வெறுப்பை விதைத்தவர்களின் முடிவு பெரும்பாலும் கோரமானதாக அமைந்ததாகவே அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.

மிகவும் சொற்பமானவர்களை மட்டுமே இறைவன் தனது ஹிதாயத் எனும் அருளில் இணைத்து அவர்களை இஸ்லாமின் மீதும், முஸ்லிம் உம்மாவின் மீது தீராக் காதல் கொண்டவர்களாக மாற்றினான்.

முஸ்லிம் வெறுப்பை எதிர் கொள்ளும் நாம் என்ன செய்வது?

முஸ்லிம் என்பதற்காக நாம் வதைக்கப்படுகிறோமே என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில்,

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

முஸ்லிம் எனும் அடையாளத்தையே அல்லாஹ் விரும்புகின்றான்..

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். ( அல்குர்ஆன்: 3: 102 )

அடையாளத்தை இழக்க விரும்பாத மேன்மக்கள்….

பைத்துல்லாஹ்வின் அஸ்திவாரத்தை உயர்த்திய இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் கை உயர்த்தி, தம் திருப்பணியை ஏற்றுக் கொள்ளுமாறு இறைஞ்சியதோடு,

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ

எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிகிற முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியில் இருந்தும் உனக்கு கீழ்ப்படிகிற முஸ்லிம்களையும் ஆக்கியருள்வாயாக!என்று பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 2:128 )

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ 

இப்ராஹீமும், யஃகூபும் தங்களுடைய இறுதி நேரத்தில் தங்களின் மக்களுக்கு என் மக்களே! நிச்சயமாக, அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான்; ஆகவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் என்று வஸிய்யத் செய்தார்கள்”.                   ( அல்குர்ஆன்: 2: 132 )

அல்லாஹ்வே! எங்களுக்கு கண்ணியத்தை வழங்கியருள்வாயாக! எங்களை விரும்பும் மக்களுடன் இணைந்து வாழச் செய்வாயாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ்
    அருமையான பதிவு.

    ReplyDelete
  2. சமூக ஊடகங்கள் மூலம் நாமும், ஜஃபர் இப்னு அபூ தாலிபாக மாறுவோம்,
    ஜுபைரை போன்று தோலுரிப்போம்...

    ReplyDelete