Thursday 1 August 2024

பேரிடர்களின் பேராபத்துகளில் இருந்து காத்தருள்வாய் யாஅல்லாஹ்!!!

 

பேரிடர்களின் பேராபத்துகளில் இருந்து காத்தருள்வாய் யாஅல்லாஹ்!!!


கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போதிருந்தே அங்கு கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கி 2 மாதத்திற்கு மேல் ஆன நிலையிலும் கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

வயநாட்டில் கடந்த 28 மற்றும் 29 ம் தேதி ஆகிய இரண்டு நாட்களாக (48 மணி நேரத்தில்) 57 செமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் 30/07/24 அன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு எற்பட்டது. 

முதல் நிலச்சரிவு 30/07/24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்தது. இதன்பின் 4.30-க்கு இரண்டாவது முறையாக நிலச்சரிவு நிகழ்ந்தது. சூரல்மலா பகுதியில் உள்ள ஒரு பள்ளி முழுவதும் மண்ணின் அடியில் புதைந்துவிட்டது. இதே நிலைதான் குடியிருப்புகளுக்கும் நிலவியது.இரவு தூங்கச் சென்றவர்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் 1200-க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக கூறப்படும் நிலையில் இதுவரை (01/08/24 வியாழன் நண்பகல் 2 மணி வரை) 291 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு கேரளாவில் இதுவரை ஏற்படாத பேரழிவு என்றும் அவர் கூறினார்.

வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவிலும் மழை நிற்காமல் பெய்தபடி இருந்தது. இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் தொடர்ச்சியாக நிலச்சரிவும் ஏற்பட்டது.

 30/07/24 அன்று அதிகாலை 2 முறை சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன.

5 அமைச்சர்கள் தலைமையில் தீயணைப்பு துறையினர், மீட்பு படையினருடன் இணைந்து ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. ( நன்றி: ஒன்இந்தியா, தி இந்து தமிழ் திசை, 30/07/2024 )

இவர்களுடன் தன்னார்வலர்களும் முஸ்லிம்சமூகத்தின்தேசிய அரசியல் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, எஸ்டிபிஐ கட்சியினரும் இணைந்து செயல்பட்டு வருவதை சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்து வருகின்றோம். 

வயநாட்டில் 45 முகாம்கள் உள்பட கேரள மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற சிறப்பு மருத்துவ குழுவினர் இடிபாடுகளுக்குள்ளும், மண் புதைவுகளில் இருந்தும் மீட்கப்படுபவர்களுக்கும் உடனடி சிகிச்சையில் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.( நன்றி: மாலை முரசு, 30/07/2024 )

இன்று காலை 02/08/24) நிலவரப்படி மீட்புக் குழுக்கள் இதுவரை 1,592 பேரை மீட்டுள்ளனர், இப்போது 82 நிவாரண முகாம்களில் 8,017 பேர் உள்ளனர். மருத்துவமனைகளில் இப்போது 90 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்க கூடும். ( நன்றி: வெள்ளிமமேடை, கோவை அஜீஸ் பாகவி)


நிலச்சரிவு என்றால் என்ன? -

நிலச்சரிவு என்பது பாறைகள், மண் பொருள்கள், குப்பைகள் போன்றவை திடீரென நகர்ந்து ஏற்படுகின்ற ஒரு புவியியல் நிழ்வாகும். 

இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்வது, கடுமையான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை காரணங்கள் அல்லது அதிக கட்டுமானம், காடுகள் அழிப்பு மற்றும் பயிர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. 

ஒரு நிலச்சரிவினைத் தூண்டும் காரணிகள் திடீரென ஏற்படுக்கின்றன அல்லது காலப்போக்கில் உருவாகின்றன.

இந்தியாவும் நிலச்சரிவு சாத்தியங்களும்....

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் டெக்டானிக் (பூமியில் அமைந்துள்ள பகுதி) நிலை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு ஆண்டு 5 செ.மீ., தூரம் வடக்கு நோக்கி நகர்வதால் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள நிலச்சரிவு வரைபடத்தில், நாட்டில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சில பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது. பனிமூடிய பகுதிகளைத் தவிர இந்தியாவின் 12.6 சதவீத பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் கொண்டவை. இவற்றில் 66.5 சதவீதம் வடமேற்கு இமையமலையிலும், 18.8 சதவீதம் வடகிழக்கு இமையமலையிலும், 14.7 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் உள்ளன.

கேரளாவை அதிகம் குறிவைக்கும் இயற்கைப் பேரிடர்கள்; என்ன தான் காரணம்?...

கடவுளின் தேசம் என எல்லோராலும் கொண்டாடப்படும் கேரளா, கொட்டித் தீர்க்கும் கன மழை, பாய்ந்தோடும் பெரு வெள்ளம், நடுங்க வைக்கும் நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்களாலும் கொரோனா வைரஸ், நிஃபா வைரஸ், பறவைக் காய்ச்சல் என பயமுறுத்தும் வைரஸ் தொற்றுகளாலும் படகு விபத்துகளாலும் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காணாமல் போயினர். 

அடுத்த ஆண்டே மீண்டும் பருவமழை வெளுத்து வாங்க, கேரளா அடுத்த இடரை எதிர்கொண்டது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளில் சிக்கி 470 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து 2020-லும் கனமழை கொட்டியதில், பெட்டிமுடி பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் கொரோனா வைரஸும் தாக்கியது.

ஒவ்வொரு முறையும் இன்னல்களில் இருந்து கேரளா மீண்டெழுந்து வந்தாலும் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலச்சரிவுகள் குறித்துத் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாக, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கேரளாவில் அடுத்தடுத்து இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட என்ன காரணம்? எப்படித் தடுக்கலாம்? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தராஜனிடம் பேசினோம். அவர் ABP Nadu-விடம் கூறியதாவது:

’’தமிழ்நாட்டில் இருந்து குஜராத் வரை சுமார் 1.60 லட்சம்  சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை நீண்டிருக்கிறது. உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றிய பழமையான மலை மேற்குத் தொடர்ச்சி மலை, இயல்பாகவே  மிகக் கடினமான பாறைகளைக் கொண்டது. இயற்கை நமக்குக் கொடுத்த இந்த பெருங்கொடையை நாம் அறிந்துகொள்ளவே இல்லை.

சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும்..

மழைக்கும் சூழலுக்கும் பிரதானமாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை படிப்படியாக அழித்து வருகிறோம். மலைப் பகுதிகளிலேயே சுற்றுலா விடுதிகள், பவர் ஹவுஸ், அணைகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கட்டிவிட்டோம். குவாரிகளை உடைத்துக் கொண்டிருக்கிறோம். 

இதனால் மேற்குத்தொடர்ச்சி மலையின் கற்களும் மண்ணும் இளகிக் கொண்டே இருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும் ஏற்படுகின்றன.

போதாதற்குப் புதைபடிமங்களை எரித்து சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நிலச்சரிவுக்கு திடீர் பெரு மழை காரணம்தான். ஆனால் அந்தப் பெரு மழைக்கு மக்களின் செயல்பாடுகளும் அரசுகளின் ஒழுங்கற்ற போக்குமே காரணம். எந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டலாம், கட்டக் கூடாது என்று அரசு கண்டிப்பாக முடிவெடுக்கத் தவறிவிட்டது’’ என்று தெரிவித்தார்.

கேரளாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவுக்கு காரணம் என்ன?

உந்தப்பட்ட நிலச்சரிவு (induced landslides)

’’கேரளாவில் பொதுவாக மே கடைசி வாரம் முதல் செப். கடைசி அல்லது அக். முதல் வாரம் வரை 3 ஆயிரம் மி.மீ. மழை பெய்யும். ஆனால் நேற்று ஒரு நாளிலேயே 333 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் ஏற்கெனவே இளகிக் கொண்டிருக்கும் மண்ணில் நீர் பாய்ந்தோடி, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதை உந்தப்பட்ட நிலச்சரிவு என்றே சொல்வேன்.

எப்படித் தடுக்கலாம்? பேரழிவு தணிப்பு (Disaster Mitigation)

 ஒரு பேரிடர் ஏற்படுவதை முழுமையாகத் தவிர்க்க முடியாது என்றாலும் அதன் தீவிரத்தைக் குறைக்க வேண்டியது முக்கியம். இதற்கு உலகம் முழுவதும் கார்பன் உமிழப்படும் அளவு குறைப்பு, புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

தகவமைப்பு (Adaptation)

இது புதிய இயல்பு என்பதை ஏற்றுகொண்டு, அதற்கேற்றவாறு நம்மைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். பெரு மழை அடிக்கடி பெய்து வருவதால், அதற்கேற்ற வகையிலான கட்டுமானங்களில் கவனம் செலுத்த வேண்டும். நிலச்சரிவு எச்சரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பேரிடர் மீள் திறன் (Resilience)

எந்த ஒரு பேரழிவாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவது முக்கியம். அரசுகள் சமவெளிக்கும் மலைப் பகுதிகளுக்கும் ஏற்றவாறு தனித்தனியாக வெவ்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும்.

மாதவ் கார்கில் குழு அறிக்கை, கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை, கேரள அரசின் அறிக்கை ஆகியவற்றைத் தொகுத்து உடனடியாக அமல்படுத்த வேண்டும். இனி மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்களையும் மீளாய்வு செய்ய வேண்டும்'’ என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார். ( நன்றி: https://tamil.abplive.com )

இந்தியாவை உலுக்கிய 5 நிலச்சரிவுகள்....

1) கேதர்நாத், உத்தராகண்ட் (2013): இமாலய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 5,700 பேர் உயிரிழந்தனர், 4,200-க்கும் அதிகமான கிராமங்கள் அழிந்து போயின. நாடு இதுவரை சந்தித்த மிகவும் மோசமான இயற்கைப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

2) டார்ஜிலிங், மேற்கு வங்கம் (1968): கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி திடீர் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 60 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை 91 துண்டுகளாகிப்போனது. இந்தப் பேரழிவினால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சொத்துக்கள், உள்கட்டமைப்புகள் தேயிலைத் தோட்டங்கள் பெருமளவிலான சேதத்தைச் சந்தித்தன.

3) குவஹாத்தி, அசாம் (1948): அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஒரு கிராமம் ஒட்டுமொத்தமாக புதையுண்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

4) மாப்லா கிராமம், பிரிக்கப்படாக உத்தரப் பிரதேசம் (1998): கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழு நாட்களில் தொடந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் ஒரு கிராமமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு 380-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவின் மிகப் பெரிய மனிதப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

5) மாலின் கிராம், மகாராஷ்டிரா (2014): கடந்த 2014-ம் ஆண்டு கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 151 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காணமல் போயினர். ( நன்றி: தி இந்து தமிழ் திசை, 30/07/2024 )

பொதுவாக இதுபோன்ற அகால மரணச் செய்திகளை ஒரு இறைநம்பிக்கையாளர் பார்க்கும் போதும் கேட்கும் போதும் என்னவாறான சிந்தனையில் இருக்க வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த மாதிரியான பாடங்களையும், படிப்பினைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு நீண்ட பட்டியலுடன் கூடிய வழிகாட்டுதலை இஸ்லாம் நமக்கு காட்டியுள்ளது. அந்த அடிப்படையில் இன்றைய இந்த அமர்வில் சில விஷயங்களைப் பேசவும், கேட்கவும் இருக்கின்றோம்!

1)   திடீரென மரணம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க வேண்டி துஆ செய்ய வேண்டும்...

நபி அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் திடீர் மரணங்களில் இருந்து பாதுகாப்பு தேடி கேட்க வேண்டிய ஓர் அற்புதமான, அழகான, அருமையான துஆவைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். இந்த துஆவை தினசரி ஓதுவருவதன் மூலம் எமது இறுதி முடிவான மரணத்தை நல்ல மரணமாக அமைய விழைய வேண்டும்.

اَلَّهُمَّ إِنِّي اَعُوْذُبِكَ مِنَ الْهَدْمٍ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا.

"அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹத்மி, வ அஊது பிக்க மினத் தரத்தீ, வ அஊது பிக்க மினல் கரகி, வல் ஹரகி, வல் ஹரமி, வ அஊது பிக்க அய் யத்தகப்பதனியஷ் ஷைத்தானு இன்தல் மவ்த், வ அஊது பிக்க அன் அமூத்த ஃபீ ஸபீலிக முத்பிரன், வ அஊது பிக்க அன் அமூத்த லதீகா,"

பொருள்:- "இறைவா நான் உன்னிடம் கட்டிடம் இடிந்து விழுந்து மரணித்து போவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் உயரமான இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு மரணித்துப் போவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் தள்ளாமையில் மரணித்துப் போவதை, தீயில் கருகி மரணித்துப் போவதை விட்டும்,நீரில் மூழ்கி மரணித்துப் போவதை விட்டும், நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் மரணத்தின் போது ஷைத்தான் என்னை உரசிச் செல்வதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், உன் பாதையை விட்டுப் புறமுதுகு காட்டியவனாக ஓடிவந்து மரணிப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் தேள் (பாம்பு போன்ற விஷ உயிரினங்கள்) கடித்து இறந்து போவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

2)   திடீர் மரணம் நல்லதா? கெட்டதா?

திடீர் மரணத்திற்கு مَوْتُ الْفَجْأَةِமௌவ்த்துல் ஃபஜ்அஹ்என்று அரபியில் சொல்லப்படும்.

மனிதர்களில் சிலர் நோயுற்று பல நாட்கள் படுக்கையிலிருந்து மரணிக்கிறார்கள். இன்னும் சிலர் விபத்துக்களில் சிக்கி திடீரென அகால மரணம் அடைகிறார்கள்.

இவ்விரு வகையான மரணம் நல்லவர்களுக்கும் வரலாம். கெட்டவர்களுக்கும் வரலாம். கெட்டவர்களுக்கே திடீர் மரணம் வரும் என்பது பிழையான கருத்தாகும்.

திடீர் மரணத்தில் இருந்து பாதுகாப்பு தேடிய மாநபி ஸல் அவர்கள் திடீரென மரணிப்பதை கெட்ட மரணம் என்று குறிப்பிடவில்லை என்பதை இங்கே நாம் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம்.

திடீர் மரணம் என்பது நீரில் மூழ்கி மரணித்தல், இடிபாடுகளுக்குள் சிக்கி மரணித்தல், வாகன விபத்தில் மரணித்தல், கொலை செய்யப்பட்டு மரணித்தல், மரம் அறுந்து விழுந்து அல்லது மரத்திலிருந்து விழுந்து மரணித்தல், தீப்பற்றி மரணித்தல், காலரா, வாந்தி பேதி, கொரோனா  போன்ற நோயினால், அல்லது வைரஸ் தொற்றால் மரணித்தல், பிரசவ நேரத்தில் தாய் மரணித்தல், அல்லது குழந்தை மரணித்தல் போன்றவையாகும்.

இது போன்ற மரணங்கள் நம்மைச் சுற்றி நிகழும் போது பொத்தாம் பொதுவாக கெட்டவர்கள்,  பாவிகள் ஆதலால் தான் இப்படியான மரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று ஒரு இறைநம்பிக்கையாளன் கருதி விடக்கூடாது. பொதுவெளியில் இப்படி பேசி விடவும் கூடாது.

மாறாக, இறந்து போனவர்களின் பாவமன்னிப்பிற்காக துஆச் செய்வதோடு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இது போன்ற திடீர் மரணங்களில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு தேட வேண்டும்.

அதே நேரத்தில் இது போன்ற திடீர் மரணங்கள் ஏற்படும் போது அந்த மரணம் நல்லவர்களுக்கு நல்லதாகவும் கெட்டவர்களுக்கு கெட்டதாகவும் அமையும் என்ற இஸ்லாம் கூறும் எச்சரிக்கையில் நாம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَوْتِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذَةُ أَسَفٍ لِلْفَاجِرِ»

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். நான் பெருமானார் {ஸல்} அவர்களிடம் திடீர் மரணம் பற்றிக் கேட்ட போது அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியானதாகவும், பாவம் செய்து வாழும் கெட்டவனுக்கு கைசேதமாகவும் அமைந்து விடுகிறதுஎன்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

ஆகவே, நாம் நல்லவராக இருப்பினும், பாவம் செய்பவராக இருப்பினும்  மாநபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்புத் தேடியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நாமும் திடீரென ஏற்படும் மரணத்தில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்வது சிறந்ததாகும்!

மேலும், திடீர் மரணம் என்பது நல்லவர்களுக்கு ஏற்படும் போது அதுவும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "

பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»

பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ( நூல்: புகாரி )

ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

வேண்டி விரும்பிக் கேட்ட ஷஹீத் அந்தஸ்து...

أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمَّا أُصِيْبَ، اسْتَخْلَفَ مُعَاذَ بنَ جَبَلٍ، يَعْنِي فِي طَاعُوْنِ عَمَوَاس، اشْتَدَّ الوَجَعُ، فَصَرَخَ النَّاسُ إِلَى مُعَاذٍ: ادْعُ اللهَ أَنْ يَرْفَعَ عَنَّا هَذَا الرِّجْزَ.
قَالَ: إِنَّهُ لَيْسَ بِرِجْزٍ، وَلَكِنْ دَعْوَةُ نَبِيِّكُم، وَمَوْتُ الصَّالِحِيْنَ قَبْلَكُم، وَشَهَادَةٌ يَخُصُّ اللهُ بِهَا مَنْ يَشَاءُ مِنْكُم.

அமவாஸ் எனும் காலாரா நோய் பரவியிருந்த காலம், ஃபலஸ்தீனின் கவர்னராக இருந்த அபூ உபைதா (ரலி) அவர்கள் காலராவின் கடுமையான தாக்குதலால் மரணத்தின் விளிம்பிற்கே வந்து விட்டிருந்த நேரத்தில், முஆத் (ரலி) அவர்களை அழைத்து தமக்குப் பின் ஃபலஸ்தீனிய மக்களுக்கு கவர்னராக இருக்குமாறு வஸிய்யத் செய்து விட்டு ஷஹீதாகிப் போனார்கள்.

கிட்டத்தட்ட 30,000 முஸ்லிம்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

மக்களெல்லாம் ஒன்று திரண்டு முஆத் (ரலி) அவர்களிடம் முஆத் (ரலி) அவர்களே! இந்தப் பிணி அகல அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்க்ககூடாதா?” என முறையிட்ட போது..

மக்களை நோக்கி முஆத் (ரலி) அவர்கள் மக்களே! இது பிணி அல்ல! இது உங்கள் நபியின் துஆவாகும். உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லடியார்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நல்ல மரணமாகும். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தான் இது போன்ற ஷஹாதா வீர மரணத்தை வழங்குகின்றான்.

قَالَ مُعَاذُ بنُ جَبَلٍ:
سَمِعْتُ رَسُوْلَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَقُوْلُ: (سَتُهَاجِرُوْنَ إِلَى الشَّامِ، فَيُفْتَحُ لَكُم، وَيَكُوْنُ فِيْهِ دَاءٌ كَالدُّمَّلِ، أَوْ كَالوَخْزَةِ، يَأْخُذُ بِمَرَاقِّ الرَّجُلِ، فَيَشْهَدُ - أَوْ فَيَسْتَشْهِدُ - اللهُ بِكُمْ أَنْفُسَكُم، وَيُزَكِّي بِهَا أَعْمَالَكُم).
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ مُعَاذاً سَمِعَهُ مِنْ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَأَعْطِهِ هُوَ وَأَهْلَ بَيْتِهِ الحَظَّ الأَوْفَرَ مِنْهُ.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஷாமை வெற்றி கொள்வீர்கள்.  அங்கே ஒரு கொள்ளை நோய் ஏற்படும். அல்லாஹ் உங்களை அது கொண்டு வீர மரணம் அடையச் செய்வான். அது கொண்டு உங்களின் செயல்களை தூய்மை படுத்துவான்என்று.

அல்லாஹ்வே! இந்த முஆத் அந்த சத்தியத் தூதர் உரைத்த அந்தச் செய்தியை உண்மையிலேயே செவியேற்றிருந்தால் எனக்கும், என் குடும்பத்தார்களுக்கும் உடனடியாக அந்த ரஹ்மத்தைக் கொடுத்து விடு!என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் முஆத் அவர்களின் துஆவைக் கபூல் செய்தான். ஆம்! அந்த நோய் அவர்களுக்கும், அவர்களின் இரண்டு மகன்கள், இரண்டு மனைவியர்களுக்கும், பற்றிக் கொண்டது.

என்ன இலவசங்களா? அன்பளிப்புகளா? எனக்கும் கொஞ்சம் கொடு!. என் குடும்பத்தாருக்கும் கொஞ்சம் கொடு! என்று கேட்பதற்கு..

உலகமகாச் சோதனைகளைக் கூட இறைவனிடமிருந்து சோபனமாகவே பெற்றுக் கொண்டார்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள்.

فَمَاتَتْ ابْنَتَاهُ، فَدَفَنَهُمَا فِي قَبْرٍ وَاحِدٍ، وَطُعِنَ ابْنُهُ عَبْدُ الرَّحْمَنِ، فَقَالَ - يَعْنِي لاِبْنِهِ لَمَّا سَأَلَهُ كَيْفَ تَجِدُكَ؟ - قَالَ: {الحَقُّ مِنْ رَبِّكَ فَلاَ تَكُنْ مِنَ المُمْتَرِيْنَ} [آلُ عِمْرَانَ: 60].
قَالَ: {سَتَجِدُنِي إِنْ شَاءَ اللهُ مِنَ الصَّابِرِيْنَ} [الصَّافَّاتُ: 102].
قَالَ: وَطُعِنَ مُعَاذٌ فِي كَفِّهِ، فَجَعَلَ يُقَلِّبُهَا، وَيَقُوْلُ:
هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ حُمُرِ النَّعَمِ.

கொஞ்சம் தலைவலி அதிகமானால் இறைவனை நிந்திக்கும் நாம் எங்கே? வாழ்வையே நிலைகுலைத்திடும் தீராத நோயில் தமக்கும், தம் குடும்பத்தாருக்கும் பங்கு கேட்ட முஆத் (ரலி) அவர்கள் எங்கே?

முஆத் (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு நோயின் தாக்குதல் தீவிரமடைந்து மரணத்தின் விளிம்பில் இருந்த போது தம் மகனைச் சந்திக்க முஆத் (ரலி) அவர்கள் வருகை தந்தார்கள்.

அருகில் அமர்ந்த தன் தந்தையை நோக்கி, தனயன் அப்துர்ரஹ்மான் அவர்கள் இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே, இதனைச் சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்”. எனும் பொருள் உள்ள 2 –ஆம் அத்தியாயத்தின் 147 –ஆம் வசனத்தை ஓதினார்.

அதற்கு, முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடினால்.. என்னை நீங்கள் பொருமையானவர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்”. எனும் பொருள் உள்ள 37 –ஆம் அத்தியாயத்தின் 102 –வது இறைவசனத்தை பதிலாகக் கூறினார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

குர்ஆனே அவர்களின் மூச்சாகவும், பேச்சாகவும் இருந்தது. குர்ஆனில் உருவான சமூகம் அல்லவா அவர்கள்?

இறுதியில், அவர்களின் இரு மகன்களும், இரண்டு மனைவியர்களும் இந்த நோயின் தாக்கத்தால் ஷஹீத் ஆனார்கள்.

கடைசியாக, முஆத் (ரலி) அவர்களுக்கும் அந்த நோய் பற்றிக் கொண்ட போது இந்த நோய் எனக்கு செந்நிற ஒட்டகைகள் அன்பளிப்பாக கிடைப்பதை விட மிகவும் மேலானதுஎன்றார்களாம். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

3)   நல்ல மரணத்தை விரும்ப வேண்டும்!...

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُمَيْعٍ، قَالَ: حَدَّثَتْنِي جَدَّتِي، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ خَلَّادٍ الْأَنْصَارِيُّ، عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ الْأَنْصَارِيَّةِ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا غَزَا بَدْرًا، قَالَتْ: قُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِي الْغَزْوِ مَعَكَ أُمَرِّضُ مَرْضَاكُمْ، لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَنِي شَهَادَةً، قَالَ: «قَرِّي فِي بَيْتِكِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْزُقُكِ الشَّهَادَةَ»، قَالَ: فَكَانَتْ تُسَمَّى الشَّهِيدَةُ، قَالَ: وَكَانَتْ قَدْ قَرَأَتِ الْقُرْآنَ فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَّخِذَ فِي دَارِهَا مُؤَذِّنًا، فَأَذِنَ لَهَا، قَالَ: وَكَانَتْ قَدْ دَبَّرَتْ غُلَامًا لَهَا وَجَارِيَةً فَقَامَا إِلَيْهَا بِاللَّيْلِ فَغَمَّاهَا بِقَطِيفَةٍ لَهَا حَتَّى مَاتَتْ وَذَهَبَا، فَأَصْبَحَ عُمَرُ فَقَامَ فِي النَّاسِ، فَقَالَ: مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذَيْنِ عِلْمٌ، أَوْ مَنْ رَآهُمَا فَلْيَجِئْ بِهِمَا، فَأَمَرَ بِهِمَا فَصُلِبَا فَكَانَا أَوَّلَ مَصْلُوبٍ بِالْمَدِينَةِ،

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள், “உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள். போரில் காயப்படுவோருக்கு நான் சிகிச்சை அளிப்பேன். அதனால் அல்லாஹ் எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை தருவான்எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான்எனக் கூறினார்கள்.

இதனால் அப்பெண்மணி வீர மரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப்படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார்.

(வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு) தனது வீட்டாருக்கு இமாமத் செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று அவர் எழுதிக் கொடுத்திருந்தார். உமர் (ரலி) காலத்தில் ஒரு நாள் இரவு அவ்விருவரும் அவரை போர்வையால் மூடி கொன்று விட்டு ஓடிவிட்டனர். காலையில் உமர் (ரலி) அவர்கள், இந்த இருவர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால், அல்லது கண்டால் பிடித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். பிறகு கொலையாளிகள் பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டனர். மதீனாவில் இவர்கள் தான் முதலில் சிலுவையில் அறையப்பட்டனர். என தனது பாட்டியும், அப்துர் ரஹ்மான் பின் அல்கல்லாத் அவர்களும் அறிவித்ததாக வலீத் பின் ஜுமைஃ அறிவித்தார். ( நூல்: அபூதாவூத் )

أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عنْه قالَ: اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً في سَبيلِكَ، واجْعَلْ مَوْتي في بَلَدِ رَسولِكَ صَلَّى اللهُ عليه وسلَّمَ.

உமர் (ரலி) அவர்களுடைய விருப்பமும் துஆவும் மிகவும் ஆச்சரியமானது.

அவர்கள் வாழ்ந்த காலத்தின் மதீனா மிகவும் அமைதியான,  நிம்மதியான சூழலில் இருந்தது. 

அவர்கள் தான் அன்றைய பரந்து விரிந்த இஸ்லாமிய நிலப்பரப்பின் ஆட்சியாளராக இருக்கின்றார்கள்.

போர் மேகம் சூழ்ந்த காலமுமில்லை.  பெருமானார் (ஸல்) அவர்களுடைய புனித மறைவிற்குப் பிறகு படையை வழி நடத்தும் தளபதியாகவோ,  படை வீரராகவோ பங்கேற்கவும் இல்லை.

எனினும் உமர் (ரலி) அவர்களுடைய துஆ மிகவும் விசித்திரமானதாக அமைந்திருந்தது.

"அல்லாஹ்வே! உன் பாதையில் உயிர் நீத்து ஷஹீத் ஆகும் நஸீபைத் தந்தருள்வாயாக! உனது தூதர் முஹம்மது ஸல் அவர்களுக்கு மிகவும் நேசமான மதீனாவின் பூமியிலேயே அந்த வீர மரணத்தையும் வழங்கியருள்வாயாக!" என்பதாக அமைந்திருந்தது. 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அபூ லுஃலுவுல் ஃபைரோஸ் எனும் மஜூஸியின் மூலமாக உமர் (ரலி) அவர்களுடைய இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தான்.

ஆம்! ஹிஜ்ரி 23 முஹர்ரம் மாதத்தின் இறுதி நாட்களின் ஒரு நாள் ஸுப்ஹுத் தொழுகையை இமாமாக நின்று நடத்திக் கொண்டிருக்கும் போது தொழுகையில் வைத்து கூர்மையான குறுவாளால் அபூ லுஃலுவுல் ஃபைரோஸ் என்பவனால் குத்தப்பட்டு அந்த காயத்தின் வீரியத்தால் மூன்றாவது நாளில் ஷஹீதாகின்றார்கள்.

மரணத்தருவாயில் இருக்கும் போது மேலான தம்முடைய அடுத்த ஆசையை வெளிப்படுத்தி உமர் (ரலி) அவர்கள் வாழும் காலத்தில் தாம் அதிகமாக நேசித்த சர்தார் நபி ஸல் மற்றும் அபூபக்கர் (ரலி) ஆகியோருக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படும் பெரும் பேற்றைப் பெற்றார்கள்.  ( நூல்: புகாரி )

روى ابن أبي حاتم في "الجرح والتعديل"

حدثنا أبو سعيد الأشج، أخبرنا أبو اسامة، قال: " كثيرا ماكنت أسمع سفيان يقول: اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ، رَبِّ بَارِكْ لِي فِي الْمَوْتِ، وَفِيمَا بَعْدَ الْمَوْتِ.

இப்னு அபூ ஹாத்திம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் " அல்லாஹ்வே! நீ சாந்தியளிப்பவன்! எனக்கு நீ சாந்தி நிறைந்த வாழ்வைத் தருவாயாக!அல்லாஹ்வே! என்னுடைய மரணத்தில் நீ பரக்கத் செய்வாயாக! மரணத்திற்குப் பின் உண்டான அனைத்து நிலைகளிலும் பரக்கத் செய்வாயாக!" என்று அதிகமதிகம் துஆச் செய்ய நான் கேட்டிருக்கின்றேன்" என்று அபூ உஸாமா (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ( நூல்: அல் ஜுர்ஹு வத் தஅதீல் )

لأن البركة: هي الخير الكثير الثابت. ومن أوجه بركة الموت أن يكون شهادة يؤجر عليها، أو خاتمة حسنة، أو يكون بالموت نجاة للمسلم من الفتن.

மரணத்தில் என்ன பரக்கத் இருக்கிறது? என்று கேட்டால் ...

பரக்கத் என்றாலே நிலையான நிறைவான நலவுகள் என்றே பொருள்.

ஷஹாதாவின் நிலையிலோ அல்லது ஷஹாதாவிற்கான கூலி வழங்கப்பட்ட நிலையிலோ மரணம் நிகழலாம். அல்லது இறுதி முடிவு இனிமையான நிலையில் அமையலாம். குழப்பமான கால கட்டத்தில் வாழும் போது அந்த குழப்பங்களில் இருந்து ஈடேற்றம் பெற்ற நிலையில் கூட மரணம் அமையலாம்.

மரணத்திற்குப் பின்னர் அனைத்து நிலைகளிலும் பரக்கத் என்றால்...

ويتمنى أيضا أن يكون حاله بعد الموت فيه كل خير، من غفران الله تعالى ورحمته ورضوانه.

அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பும், திருப்பொருத்தமும், பெருங்கருணையும் கிடைக்க வேண்டும் என்பதாகும்.

எனவே, நமது இறுதி முடிவு இனிமையானதாக அமைய நாம் ஆசைப்பட வேண்டும்.

இறுதி முடிவு இனிமையானதாக அமைய வேண்டும் எனில்?...

இறுதி முடிவு நல்லதாக அமைய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அல்லாஹ் தனது வேத நூலாகிய அல்குர்ஆனில் எல்லா இறைவிசுவாசிகளுக்கும் உணர்த்துகின்றான். 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணத்துவிட வேண்டாம்”. ( அல்குர்ஆன்: 03:102 )

وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ

உம்மிடம் (மரணம் எனும்) உறுதியானது வரும் வரை உமது இரட்சகனை நீர் வணங்குவீராக!”. ( அல்குர்ஆன்: 15:99 )

இறுதி முடிவை அழகாக அடைந்து  கொள்வதற்கு  இறையச்சமும் வணக்க வழிபாடும் மரணம் வரைக்கும் தொடர்ந்திருக்க வேண்டும் என்று இங்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. 

4)   இறுதி முடிவு குறித்து மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் வாழ வேண்டு்ம்.

قال أنس رضي الله عنه: ( إنكم لتعملون أعمالا هي أدقّ في أعينكم من الشّعر كنّا نعدّها في عهد رسول الله صلّى الله عليه وسلم من الموبقات ). « رواه البخاري 

நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இவ்வாறு  கூறுகிறார்கள்: நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. ஆனால், அவற்றை நாங்கள் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்களாக நபி (ஸல்)  அவர்களின் காலத்தில் கணக்கிட்டு  வந்தோம்”. ( நூல்: புகாரி ).

قال ابن مسعود رضي الله عنه: ( المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه ). « رواه البخاري

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:    "இறைநம்பிக்கையாளர் தன் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலை தன் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் பார்ப்பார்”. ( நூல்: புகாரி )

நமது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிலச்சரிவால் உயிரிழந்த முஸ்லிம் சமூக மக்களுக்கு ஷஹீத்களின் அந்தஸ்து கிடைக்க 

துஆச் செய்வதோடு, காயமடைந்தவர்களுக்கு பரிபூரண ஷிஃபா கிடைப்பதற்கும், தங்களது நெருங்கிய உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு தகுந்த பகரத்தையும், மன ஆறுதலையும் வழங்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும், உடமைகளையும், வசிப்பிடத்தையும் இழந்து நிர்க்கதியாக நிராயுதபாணியாக தவிக்கும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயர் துடைக்க பேருதவி செய்யுமாறும் கோரியுள்ளது. 

எப்போதுமே மனிதநேயப் பணிகளில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் முஸ்லிம் சமூகம் 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயர் துடைக்க பேருதவி செய்து பெருங்கருணையாளன் அல்லாஹ்வின் மகத்தான நற்கூலிகளை ஈருலகிலும் பெற்றுக் கொள்வீர்களாக!

அல்லாஹ் ரப்புல் அனைத்து மக்களையும் பேரிடர்களில் இருந்து காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கு ஏற்ற வரிகள்

    ReplyDelete
  3. جزاكم الله خيرا.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்.அருமையான பதிவு.அல்லாஹ் உங்களின் சேவையில் பரகத் செய்வானாக! ஆமீன்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
    என் மனதில் ஏற்பட்ட கருத்துக்களை தாங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமான மகிழ்ச்சி. அது என்னவென்றால் பேரழிவு ஏற்படும் போதெல்லாம் அது "இறைவனின் கோபம். பாவிகளுக்கான தண்டனை" என்று உடனடியாக சிலர் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
    அவ்வாறு கருதுவது தவறு என்பதை தங்களது இந்த ஆக்கம் உணர்த்துகிறது.
    அல்ஹம்துலில்லாஹ். ஜஸாகுமுல்லாஹ் கைரா உஸ்தாத் 💖👍🤲

    ReplyDelete