இறை நேசர்களின் இலக்கு எது?
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனின் இரண்டு வகையான வாழ்க்கை குறித்து பேசுகின்றான்.
அந்த இரண்டு
வகையான வாழ்க்கையை வாழ்கிற அந்த அடியார்களுக்கு பல்வேறு வகையான சிறப்புகளை அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் வழங்குவதாக போற்றிப் பாராட்டி பேசுகின்றான்.
முதலாம் வகை
இறைநம்பிக்கையுடன் கூடிய நல் அமல்கள் நிறைந்த வாழ்க்கை அதற்கு அல்லாஹ் இந்த உலகில்
வாழும் போதும்,
இந்த உலகை விட்டு விடை பெற்றுச் செல்லும் போதும், நாளை மறுமையிலும் சிறப்பான அந்தஸ்துகளை வழங்குகின்றான்.
இந்த உலகில்....
مَنْ
عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ
حَيٰوةً طَيِّبَةً وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا
يَعْمَلُوْنَ
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்
செயல்களைச் செய்தாலும்,
நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய
வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்)
அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை
நிச்சயமாக நாம் கொடுப்போம். ( அல்குர்ஆன்: 16: 97 )
اِنَّ
الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ
وُدًّا
நிச்சயமாக எவர்கள்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான்
(யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். ( அல்குர்ஆன்: 19: 96 )
உலகை விட்டு விடை பெறும் வேளையில்....
اِنَّ
الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰه ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ
الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ
الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக
எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால்
மலக்குகள் வந்து,
“நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் -
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
نَحْنُ
اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ وَلَـكُمْ فِيْهَا
مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்)
உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள்
கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். ( அல்குர்ஆன்: 41: 30, 31 )
இரண்டாவது வகை
வாழ்க்கை இறைநேசத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை. இப்படியான வாழ்க்கை
வாழ்பவர்களுக்கு இறை நம்பிக்கையாளர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும் சிறப்புகள் அனைத்தையும் வழங்குவதோடு அதை விட சிறப்பான அந்தஸ்துகளையும் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் வழங்குகின்றான்.
اَلَاۤ
اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(முஃமின்களே!) அறிந்து
கொள்ளுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
الَّذِيْنَ
اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ
அவர்கள் ஈமான்
கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
لَهُمُ
الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ لَا تَبْدِيْلَ
لِـكَلِمٰتِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ
அவர்களுக்கு
இவ்வுலக வாழ்க்கையிலும்,
மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும்
வெற்றி ஆகும். ( அல்குர்ஆன்: 10: 62 - 64 )
குறிப்பாக, பஷாரத் எனும் சோபனத்தை இறை நம்பிக்கையாளர்கள் உலகை விட்டு விடை பெறும்
தருணத்தில் பெறுகின்ற வேளையில், அதே பஷாரத்தை இறைநேசர்கள்
உலகில் வாழும் காலத்திலேயே பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஆகவே தான் இறை
நேசர்கள் நேசிக்கப்படுகின்றார்கள். இறை நேசர்களின் வாழ்க்கை கொண்டாடப்படுகிறது
என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இறை நம்பிக்கையாளர்
ஒருவர் பெறுகிற சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்து எதுவெனில் அவர் சுவனத்தில் நபிமார்கள், வாய்மையாளர்கள்,
ஷுஹதாக்கள் இந்த வரிசையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
"ஸாலிஹீன்கள்" என்று இறை நேசர்களையும் இடம் பெறச் செய்கின்றான்.
وَمَنْ
يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ
عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ
وَالصّٰلِحِيْنَ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا
யார்
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள்
அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள்
(சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள்
(நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான
தோழர்கள் ஆவார்கள்.
ذٰ لِكَ
الْـفَضْلُ مِنَ اللّٰهِ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا
இந்த அருட்கொடை
அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்)
அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4:
69, 70 )
இறை நேசருடனான
இறைவனின் தொடர்பு என்பது இறை நம்பிக்கையாளருடனான இறைவனின் தொடர்பை விட முற்றிலும்
வேறுபட்டதாகும்.
பின்வரும் நபிமொழி
மூலம் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம்.
عَنْ
أَبِي هُرَيْرَةَقَالَ قَالَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَلِي وَلِيًّا فَقَدْآذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا
تَقَرَّبَإِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّاافْتَرَضْتُ عَلَيْهِ
وَمَا يَزَالُ عَبْدِييَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ
فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُبِهِ وَبَصَرَهُ الَّذِي
يُبْصِرُبِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُبِهَا وَرِجْلَهُا لَّتِي يَمْشِيبِهَا
وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ
وَمَاتَرَدَّ دْتُ عَنْشَيْءٍ أَنَ افَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ
يَكْرَهُ الْمَوْتَ وَأَنَاأَكْرَهُ مَسَاءَتَهُ
அல்லாஹ்கூறினான்
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடண்ம் செய்கிறேன்.
எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விடவேறு எதன் மூலமும் என்
அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான
(நபிலான) வணக்கங்களால் என் பக்கம்நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை
நான் நேசிப்பேன். அவ்வாறுநான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக
அவன் பார்க்கின்றகண்ணாக அவன் பற்றுகின்ற கையாக அவன் நடக்கின்ற காலாக நான்
ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன்
பாதுகாப்புக்கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புகாரி6502)
இறைநேசர்களை
பகைத்துக்கொள்பவரோடு அல்லாஹ் போரிடுகிறான் என்ற நபிமொழிக்கு விளக்கம் கூறுகிற
இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்தவாசகம் இறைநேசர்களை நேசிப்பவர்களை
அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்ற கருத்தை தருவதாக குறிப்பிடுகிறார்கள்.
இறை
நம்பிக்கையுடைய ஒருவரின் வாழ்க்கைக்கும் இறை நேசர் ஒருவருடைய வாழ்க்கைக்கும்
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.
இறை
நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் இறையச்சத்தை கவனத்தில்
கொண்டு செயல் பட வேண்டும்.
ஒரு இபாதத்தை
செய்தால் கூட அதன் மூலம் இறையச்சம் கிடைக்கப் பெற வேண்டும் என்று ஆதரவு வைக்க
வேண்டும்.
ஆனால், இறை நேச்சர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கை முழுவதும் இயல்பாகவே
இறையச்சத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் என்று அல்லாஹ் சான்று
வழங்குகின்றான்.
الَّذِيْنَ
اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ
அவர்கள் ஈமான்
கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். ( அல்குர்ஆன்: 10: 63 )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இறை நேசர்களின் விஷயத்தில் விஷேசமான கவனத்தை செலுத்துகின்றான்.
நபி மூஸா
அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொடர்பு.
நபி ஸுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான ஆஸிமுல் பர்கிய்யா அவர்களின் தொடர்பு.
நபி தாவூத்
அலைஹிஸ்ஸலாம் அவர்களடனான தாலூத் அவர்களின் தொடர்பு என ஒரு நீண்ட பட்டியலுக்கு
உரியது இறைநேசர்களின் மீதான அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய தனிக் கவனம்.
இறை நேசர்களின் இலக்கு இது!!
அவ்லியாக்கள்
எனும் இறைநேசர்கள் இந்த உலகில் வாழும் காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் நபி
மொழிக்கு ஒப்ப வாழ்ந்தவர்கள்.
இறைவனின் பக்கமும் இறையருளின் பக்கமும் நெருக்கி வைப்பதிலும், இறை மார்க்கமான இஸ்லாத்தின் பால் மக்களை அழைப்பதிலும் அதிக ஈடுபாடு
கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்.
ஆதலால் தான்
உலகெங்கும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள வலிமார்களின் மஜார்களை ஜியாரத் செய்யும்
போது ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஊரில் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ள இறைநேசர் உலகின் ஏதோ ஒரு பாகத்தில் இருந்து வந்து அந்த ஊர்
மக்களுக்கும் அதற்கு அருகே உள்ள பகுதிகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை
எடுத்தியம்பும் பணியில் தம்மை அர்ப்பணித்து அங்கேயே வாழ்ந்து மரணித்து அடக்கம்
செய்யப்பட்டவர்களாவர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைநேசர்களைப் பொருந்திக்
கொள்வானாக!
நபித்தோழர்களான
ஸஹாபாக்கள் எப்படி இந்த உலகில் பரவி விரவிச் சென்று இந்த உலக மக்களின் மனங்களில்
இஸ்லாத்தை கொண்டு வந்து சேர்த்தார்களோ அதே போன்று தான் இறைநேசர்களும்.
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
"என்னிடமிருந்து
ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு)
எடுத்துரையுங்கள்" என்கிற ஒற்றை நபிமொழி எப்படி
நபித்தோழர்களை உசுப்பியதோ,
தீனை கொண்டு சேர்ப்பதற்கு ஊக்கம் தந்ததோ அதே போன்று தான்
இறைநேசர்களான வலிமார்களுக்கும் ஒற்றை நபிமொழி தஃவா எனும் அழைப்புப் பணி செய்திட
உத்வேகம் கொடுத்தது.
عن
سهل رَضِيَ اللَّهُ عَنْهُ، يَعْنِي ابْنَ سَعْدٍ، قَالَ: قَالَ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ الرَّايَةَ
غَدًا رَجُلًا يُفْتَحُ عَلَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ
اللَّهُ وَرَسُولُهُ»، فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَى،
فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ، فَقَالَ: «أَيْنَ عَلِيٌّ؟»، فَقِيلَ يَشْتَكِي
عَيْنَيْهِ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ، فَبَرَأَ كَأَنْ لَمْ يَكُنْ
بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ فَقَالَ: أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟
فَقَالَ: «انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ
إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لَأَنْ
يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ
النَّعَمِ»
ஸஹ்ல் இப்னு
ஸஅத்(ரலி) அறிவித்தார்: “(கைபர் போரின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ்
அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்' என்று சொன்னார்கள். எனவே
மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம்
மூழ்கியிருந்தனர். காலையானதும மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட
வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி(ஸல்) அவர்கள்
'அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?' என்று கேட்டார்கள்.
மக்கள் 'அவருக்குக் கண்வலி இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். உடனே
நபி(ஸல்) அவர்கள் 'அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரண்டு கண்களிலும்
(தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள்.
அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி
நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக்
கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) 'இறைத்தூதர் அவர்களே!
அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான்
அவர்களுடன் போரிடட்டுமா?
என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை
இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும் இஸ்லாத்தில் அவர்களின் மீது
கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை
அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட
உங்களுக்குச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.
( நூல்: புகாரி )
இன்று நாம்
முஸ்லிம்களாக வாழ்வதற்கு என்றோ, எப்போதோ நம்
மூதாதையர்களைச் சந்தித்து அவர்களின் இதயங்களில் இஸ்லாத்தை இடம் பெறச் செய்தவர்கள்
இறைநேசர்கள் தாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வகையில் “இறை
நேசர்கள்” என்பவர்கள் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட மகத்தான அருட்கொடை ஆவார்கள்.
எனவே, அல்லாஹ் வழங்கிய நிஃமத்தான – அருட்கொடையான இறை நேசர்களை அடிக்கடி நினை
கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இறை நேசர்கள் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டே இருக்க
வேண்டும்.
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக்
கொண்டிருப்பீராக. ( அல்குர்ஆன்: 93: 11 )
முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஜீலானி (ரஹ்)…
ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் முதல் பிறையன்று (கி.பி. 1077-1078) அப்துல் காதிர்,
ஜீலான் நகரை ஒட்டிய நீப் எனும் கிராமத்தில பிறந்தார்.
தந்தையின் பெயர்,
ஸெய்யிது அபூ ஸாலிஹ், அன்னையர் பெயர் உம்முல்
கைர் ஆவார்கள்.
முதல் அழைப்பே முத்தாய்ப்பான அழைப்பானது!
மார்க்ககல்வி
கற்பதற்காக பாக்தாத் செல்லப் பெற்றோரிடம் அனுமதி பெற்றார்கள் ஜிலானி (ரஹ்)
அவர்கள். சன்மார்க்க ஞானப் பாதையில் அடியெடுத்து வைக்கும் தம் மகனுக்கு 40
தீனார்கள் கொடுத்து, வாழ்க்கையில் எந்த
தருணத்திலும். எக்காரணம் கொண்டும் பொய் பேசிடவே கூடாது என்ற வாக்குறுதி
பெற்றுக்கொண்டு மகனை அனுப்பினார்கள் உம்முல் கைர் அவர்கள்.
பிரயாணத்தின்
வழியில் கொள்ளையர் கூட்டம் ஒன்று வழிமறித்தது. கொள்ளையர் களில் ஒருவன், ஒரு புறமாக நின்ற அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களிடம் ஒரு பேச்சுக்காக, அவரிடம் எதுவுமே இருக்காது என்ற நம்பிக்கையோடு, “நீ என்ன வைத்திருக்கிறாய்?” என வினவினான். “என்னிடம் நாற்பது தீனார்கள் இருக்கின்றன” என்று பதில் வந்தது.
ஏழ்மை யான உடையுடனிருந்த அப்துல் காதிரிடம் அத்தனை பொற்காசுகள் இருக்காது என்ற
நம்பிக்கையில் கண்டு கொள்ளாமல் சென்றான் கொள்ளையன். கொள்ளை யடிக்கப்பட்ட
பொருள்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தனது தலைவனிடம் அவன் அப்துல் காதிர்
ஜீலானி சொன்னதைத் தெரிவித்தான். அத்தலைவன் அப்துல் காதிரை அழைத்து, “எங்கே அப்பணம்?”
என்று வினவ, சட்டைப் பையில் உள்ளது
எனச் சுட்டிக் காட்டினார் அப்துல் காதிர். உடனே ஒரு கொள்ளையன், சட்டப் பையில் இருந்து நாற்பது பொற்காசுகளை எடுத்துத் தன் தலைவனிடம்
கொடுத்தான்.
அந்தத் தலைவனுக்கு
ஒரே வியப்பு. தன்னிடம் பணம் இருக்கிறது எனக் கூறி, அதை இழக்க ஒரு வாலிபன் துணிவது அவன் அதுவரை காணாத ஒரு புதிய காட்சியாய்
இருந்தது. இத்தனை அபாயமான நிலையிலும், உண்மையைக் கூறுவதேன்
என்று அத்தலைவன் கேட்டான்.
எவ்வித நிலையிலும்
உண்மையையே கூறுவதாக எனது தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன்; ஞானம் தேடிச் செல்லும் பாதையில் அந்த வாக்கை நான் காப்பதுதானே முக்கியம்” என்று அப்துல் காதிர் ஜீலானி பதிலளித்தார்.
அப்துல் காதிர்
(ரஹ்) அவர்களின் பதிலைக் கேட்ட கொள்ளை கூட்டத்தின் தலைவன் மனதில் இறையச்சம் உண்டாகியது. அவனுடைய
நெஞ்சிலே
பெரும் மாறுதல் உண்டானது.
“தாயின் ஒரு ஆணையை மீறாது
நீர் வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டீர்; யானோ கொலை கொள்ளைகளில்
ஈடுபட்டு,
இறைவனின் எத்தனையோ ஆணைகளை மீறி நடந்துவருகிறேன். இனி எனக்கு
இந்த வாழ்வு வேண்டாம்”
என்று கூறி அவன் கொள்ளையிட்ட பொருள்களை உரியவர்களிடம்
ஒப்படைக்கச் செய்தான். அவனது கூட்டாளிகளும் மனந்திருந்தினர்.
பாக்தாத் நகரை
அடைந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உயர் மார்க்கக் கல்வியை பெற்றார்கள்.
ஆனால், தாம் கற்ற கல்விக்கும் தாம் பார்க்கும் மக்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு
இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார்கள்.
இருபத்து ஐந்து
ஆண்டுகள் கடுந்தவமிருந்து தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்ட மாபெரும் தவசீலர்
முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் மகத்தான மாற்றத்தை மக்களிடையே
ஏற்படுத்த வேண்டும் என்று சபதமேற்று அழைப்புப் பணியை கையில் எடுத்தார்கள்.
பல லட்சக்கணக்கான
மக்களை தங்களுடைய உருக்கமான உபதேசத்தால் நேர்வழிப்படுத்தி சன்மார்க்கத்திற்குப்
புத்துயிர் தந்தார்கள் . ஆகையால், ‘முஹியித்தீன்’ ஆனார்கள்.
தொடர்ந்து
நாற்பதாண்டுகள் சன்மார்க்கத்தின் அழைப்புப் பணியில் முழுமையாக தம்மை அர்ப்பணித்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஹிஜ் 561
-இல் உடல் நலம் குன்றினார்கள்.
இறுதிக் கணம்
வந்ததும் மூன்று முறை அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ் என்று அழைத்தார்கள். 91வது வயதில், ரபீவுல் ஆகிர் பிறை பதினொன்றில்
(கி.பி. 1166இல்) இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்றார்கள்.
இறைநேசர்களை
விரும்பும் நாம்,
இறைநேசர்களை கொண்டாடும் நாம், இறைநேசர்களை நினைவு கூறி விழா எடுக்கும் நாம் தடுக்கி விழுந்த ஒரு இடம்
இருக்கிறது. நாம் மறந்து போன ஒரு சுவடு இருக்கிறது.
ஆம்! அது தான்
தஃவா எனும் அழகிய அழைப்புப் பணி, சத்திய சன்மார்க்கத்தை
நோக்கி மக்களை அழைக்கும் பணி! அவர்களின் வழி நின்று மகத்தான அந்த அழைப்புப் பணியை
நாம் முன்னெடுக்கும் போது தான் அவர்களின் மீதான நமது நேசம் முழுமை பெறும்.
அழைப்புப் பணி ஏன்?
1) ஆதாரங்கள் நிலை நாட்டப்பட:
رُسُلًا
مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلاَّ يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ
بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
தூதர்கள் வந்தபின்
அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும்
பொருட்டு,
தூதர்கள் (பலரையும்) நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 4: 165 )
2) நம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்தவற்காக!:
وَمَا
كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَى بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ
‘(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.” ( அல்குர்ஆன்: 11: 117 )
3) நஷ்டத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக:
وَالْعَصْرِ
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا
الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
‘காலத்தின் மீது
சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர
(அவர்கள் நஷ்டத்திலில்லை).”
(அல் அஸ்ர் 103: 1-3).
அழைப்புப் பணியின் சிறப்பு!
1) அழகான வார்த்தை: –
وَمَنْ
أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي
مِنَ الْمُسْلِمِينَ
‘எவர் அல்லாஹ்வின் பக்கம்
(மக்களை) அழைத்து,
ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும்
உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால்
அழகியவர் யார் (இருக்கின்றார்)?” (புஃஸ்ஸிலத் 41: 33).
2) சிறந்த சமுதாயம்:
كُنْتُمْ
خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ
عَنْ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ
خَيْرًا لَهُمْ مِنْهُمْ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمْ الْفَاسِقُونَ
‘மனிதர்களுக்காக
தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல்
(திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும்
(உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு
நன்மையாகும் –
அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3:
110).
3) சமமான கூலி: –
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ
مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى
ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا
يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا (مسلم).
‘எவர் நேர்வழியின் பால்
மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. எவன் வழிகேட்டின் பால் மக்களை
அழைக்கின்றானோ அவனுக்கு அதை செய்தவர்களின் கூலி போன்று உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி),
முஸ்லிம்).
4) நல்வாழ்த்து:
عن بْنِ
مِلْحَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ …إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا وَيَرْجِعُ غَرِيبًا
فَطُوبَى لِلْغُرَبَاءِ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي
مِنْ سُنَّتِي (سنن الترمذي).
‘நிச்சயமாக மார்க்கம்
(இஸ்லாம்) பரதேசமான முறையில் ஆரம்பித்தது, அதே நிலையை மறுபடியும்
அடையும். பரதேசிகளுக்கு சுப சோபனம் உண்டாகட்டுமாக! அவர்கள் யாரெனில் எனக்குப் பின்
எனது வழிமுறைகளை விட்டும் சீர்கெட்டு இருந்தவர்களை சீராக்குபவர்கள் தான் அவர்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு மில்ஹா தனது தந்தை, பாட்டன் வழியாக அறிவிக்கின்றார். ( நூல்:
திர்மிதி).
அழைப்புப் பணி செய்யுமாறு அல்லாஹ்வின் கட்டளை: –
اُدْعُ
إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ
بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ
وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
‘(நபியே!) உம் இறைவனின்
பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக்
கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான
முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத்
தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அல்குர்ஆன்: 16:
125).
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا
حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ
النَّارِ (البخاري)
‘என்னைப் பற்றி ஒரு செய்தி
தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள். நீஙகள் பனூ இஸ்ரேவலர்களைப்
பற்றி பேசுவது குற்றமில்லை. எவர் என் மீது வேண்டுமென்று பொய்யுரைப்பாரோ அவர் தனது
தங்குமிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) நூல்: புகாரி).
அழைப்புப் பணியை கையில் எடுத்து வெற்றிபெற்ற சமூகமாய் மிளிர்வோம்!!
وَلْتَكُنْ
مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ
وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ )
‘மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை)
விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.” (அல்குர்ஆன்: 3: 104)
இறைநேசர்களை நேசிப்பதோடு நின்று விடாமல் இறைநேசர்களின்
வழித்தடத்தில் பயணித்து இறைநெருக்கம் பெறுவோம்! வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு
ReplyDeleteசுலைமான் நபி ஆஸிமுல் பர்கிய்யா தொடர்பு அது என்ன சம்பவம் விளக்கம் தாருங்க ஜீ
ReplyDeleteபெயர் தவறாக பதிவு செய்துள்ளதற்காக மன்னிக்கவும்.
Deleteஆஸிமுல் பர்கிய்யா அல்ல.
அல்குர்ஆனில் அந்நம்ல் அத்தியாயத்தில் சிம்மாசனத்தை கொண்டு வந்து சேர்த்த சம்பவம் அது