காட்டுத்தீ… காஸா டூ கலிஃபோர்னியா!
பிறர் துன்பத்தில் மகிழ்வுறலாமா ஒரு முஸ்லிம்?...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.
மலைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் காட்டுத் தீ அதிவேகமாக பரவியது.
தற்போது பாலிசேட்ஸ்,
ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ்
நகரில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்.இதில் காட்டுத் தீ பரவும் பகுதிகளில்
இருந்து சுமார் 4
லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
காட்டுத் தீயில் இதுவரை 25
பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த தீக்காயம்
அடைந்துள்ளனர்.
இந்த காட்டுத் தீ
தற்போது பிரெண்ட்வுட் பகுதியிலும் பரவி பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி
வருகிறது.
காட்டுத்தீ
மேற்கொண்டு பரவுவதைத் தடுக்க தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் செயல்பட்டு
வருகின்றனர்.
காட்டுத்தீயை
கட்டுப்படுத்த, அமெரிக்க அரசு 7500,
தீயணைப்பு வீரர்கள், 1162 தீயணைப்பு வண்டிகள்,
31 ஹெலிகாப்டர்கள் 6 வாட்டர் டேங்கர்
விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
சூப்பர் ஸ்கூப்பர்
என்றழைக்கப்படும் இந்த ‘சி415’
விமானங்களையும் அமெரிக்கா பயன் படுத்தி வருகிறது. இந்த வகை
விமானங்கள் சாகசம் செய்யக் கூடியவை . ஏறி குளங்களில் நேரடியாக இறங்கி தண்ணீரை
பெரிய டாங்கிகளுக்குள் உறிஞ்சிக் கொண்டு பின்னர் அப்படியே தீப்பிளம்புகளில் கொட்டும் தன்மை கொண்டவை.
கடுமையான வெப்பமோ
புகை மூட்டமோஇவற்றை பாதிக்காது.
இத்தனைக்குப் பின்னரும் தற்போது வரை தீயை முழுவதுமாக
கட்டுப்படுத்த
முடியாமல்
வேகமாகப் பரவும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி
வருகின்றனர்.
மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதி உள்ளது. அங்கு முன்னணி
திரைப்பட நிறுவனங்கள்,
அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன.
இதற்கிடையில், ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் பரவிய தீ குறையத் தொடங்கியுள்ளது, ஆனால் அதுவும் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.
ஹாலிவுட் ஹில்ஸ்
பகுதியில் உள்ள வீடுகள்,
பள்ளிகள் மற்றும் வணிக கட்டடங்கள் உட்பட 5,300 கட்டடங்கள் அழிந்துள்ளன.
காட்டுத் தீயால்
வீடுகளை இழந்தவர்களின் எண்ணிக்கை பெருகி இருப்பதோடு இழந்த வீடுகளில் காப்பீடு
செய்யப்பட்ட வீடுகளின் இழப்பீடு என்பது சுமார் 8 பில்லியன்
டாலர் மதிப்புள்ள காப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க
காப்பீட்டுத் துறையானது,
அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் விலையுயர்ந்த காட்டுத்
தீயாக இருக்கும் என்று அஞ்சுகிறது. ஏனெனில் தீயினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின்
மதிப்பு மிக அதிகமாக உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.
காட்டுத்தீ பரவுவதற்கான காரணங்கள்...
லாஸ் ஏஞ்சலிஸில்
ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலையே காரணம் என உள்ளூர்
வானிலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வானிலையால்
மரங்கள்,
செடிகள் காய்ந்து, தீ பரவுவது
எளிதாகிவிட்டது.
ஆனால், தீக்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று
வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியா
தீயணைப்பு சேவைத் தலைவர் டேவிட் அகுனாவின் கூற்றுப்படி, இப்பகுதியில் ஏற்படும் 95 சதவீதம் காட்டுத்தீ
மனிதர்களால் ஏற்படுகிறது. இருப்பினும் தற்போதைய தீ எவ்வாறு தொடங்கியது என்று
அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸ்
காட்டுத் தீயால் அமெரிக்காவுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி வரை
இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார்
வானிலை நிறுவனம் இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது, இந்தியாவில் பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2024-2025ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தி பாலிசேட்ஸ், ஈட்டன்,
கென்னத் மற்றும் ஹர்ஸ்ட் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால்
163 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், தி பாபாலிசேட்ஸ் பகுதியில் 17% மற்றும் ஈட்டன் பகுதியில்
35% காட்டுத்தீ நேற்று கட்டுக்குள் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.
இதில், தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17
பேரும் உயிரிழந்து உள்ளனர். எனினும், மொத்த சேத மதிப்பு பற்றிய விவரங்கள் பின்னர் மதிப்பிடப்படும். ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89
லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என
முதல்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது. காட்டுகாட்டுத்தீயால் கலிபோர்னியாவில்
பேரிடர் ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி பைடன் அறிவித்து உள்ளார்.( தினத்தந்தி, பிபிசி தமிழ் 12/01/2025
& 16/01/2025 )
அமெரிக்க காட்டுத்தீ நடப்பது என்ன?
தோழர்கள் எனும்
நூல் எழுதிய பிரபல எழுத்தாளர் அண்ணன் நூருத்தீன் அமெரிக்காவில் இருந்து 12/01/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சத்திய மார்க்கம் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில்
இருந்து சில....
அமெரிக்காவில், ஐந்து பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய
வீட்டிலிருந்து வெளியேற்றி இருக்கின்றது.
ஸான் ஃபெனாண்டோ (San Fernando) நகருக்கு வடக்கே பரவியுள்ள ஹர்ஸ்ட் தீ (Hurst Fire) 771 ஏக்கரை அழித்துள்ளது. அதற்கு வட கிழக்கே ஆக்டான் (Acton) பகுதியில் 394
ஏக்கரையும் கலபாசஸ் (Calabasas) பகுதியில் தொடங்கியுள்ள தீ மூன்று மணி நேரத்தில் 960 ஏக்கரையும் பாசடீனா (Pasadena)
அருகே, நகரின் கிழக்குப்
பகுதியில் பரவியுள்ள தீ 13,690
ஏக்கரையும் எரித்துள்ளது.
ஆகப் பெரிய அழிவு
பாலிசேட்ஸ் தீ (Palisades).
பசிபிக் பாலிசேட்ஸ் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ள
இந்தத் தீயின் கோரத்தாண்டவத்தில் எரிந்த நிலம் 19,978 ஏக்கர்.
பசிபிக்
பாலிசேட்ஸ் அழகான மலைப்பகுதிகள், கட்டடங்கள், தோட்டங்கள் கொண்ட பிரமாதமான கிராமம். புகழ்பெற்ற பிரபலங்களின் வீடுகள் அங்கு இருந்தன. மின்னல் வேகத்தில் பரவிய தீயில் அனைத்தும் முற்றிலுமாக அழிந்து
சுடுகாடாக மாறி,
சாம்பல் மேடுகள் குவிந்து, வெண்புகை மட்டும் வானில். இங்கு 5,300 கட்டடங்கள்
அழிவுக்கு உள்ளாகியுள்ளன என்று இதுவரை கணக்கிட்டிருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சலீஸ்
அதிகாரிகள்,
‘வறண்டிருந்த பூமி, ஒரே பகுதியில்
தொடர்ச்சியாக ஏற்பட்ட தீ,
100 மைல் வேகத்துடன் வீசிய சூறாவளிக் காற்று, அதன் விளைவாக ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு விமானங்களைப்
பயன்படுத்த இயலாத நிலை;
காற்றின் உதவியால் மின்னல் வேகத்தில் பரவிய தீ, ஆகியவை இந்தப் பேரழிவை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டன,’ என்கின்றனர்.
அது மட்டுமின்றி, “இவ்வகையான பிரம்மாண்ட தீ விபத்தை எதிர்கொள்ளும் நீர் அமைப்பு உலகத்தில்
எங்குமே இல்லை என நான் நினைக்கிறேன்,” என்று UCLAவின் நீர் வள நிபுணர் கிரெக் பியர்ஸ் (Greg Pierce) கூறியுள்ளார்.
இது லாஸ் ஏஞ்சலீஸ்
நகரில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த எந்த இயற்கைச் சீற்றத்தையும் விட மிக மிகப்
பெரிது. அமெரிக்காவில் இதுவரை நிகழ்ந்த தீ விபத்துகளிலேயே மிக மோசமான ஒன்றாக இது
வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, “இந்த தீவிபத்துகள்
அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை,” என்று UCLA
பருவநிலை விஞ்ஞானி டேனியல் ஸ்வெய்ன் கூறியுள்ளார்.
“இது முற்றிலும்
முன்மாதிரியற்ற தீ விபத்து”
என்று மேயர் கேரன் பாஸ் (Karen Bass) தெரிவித்துள்ளார். ( நன்றி: நூருத்தீன் அண்ணன் அவர்கள், & சத்திய மார்க்கம்.காம் )
இது தண்டனையா?
இயற்கைப் பேரிடரா?
தீ பரவலுக்கு இரு
நாட்களுக்கு முன்பாக 05/01/2025
அன்று ஆணவத்தின் உச்சத்தில் “All hell will break out in the Middle
East” முழு வளைகுடா நாடுகளுக்கும் நரகத்தின் காட்சி
காண்பிக்கப்படும் என்று ட்ரம்ப் கர்ஜித்தார்!
அதுவும் தாம் பதவி
ஏற்க இருக்கும் 20/01/2025
க்குள் காஸாவில் இருந்து இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ்
விடுவிக்கவில்லை எனில் முழு வளைகுடா நாடுகளுக்கான நரகத்தின் காட்சி காஸாவில்
இருந்து துவங்கும் என்றே ட்ரம்ப் கொக்கரித்தார்.
ட்ரம்ப்பின் இந்த
அறிக்கையை வைத்து நடைபெற்ற காட்டுத்தீ பேரிடரை இறைவனின் சாபமாகவும் தண்டனையாகவும்
சிலர் குறிப்பிடுகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் தீ
விபத்து பற்றி நம் சமூக மக்களின் ஒப்பாய்வு இறைவனின்
"தண்டனைகள்" என்று சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் எழுதித்
தள்ளுகின்றனர்.
அங்கு ஏற்பட்டிருக்கும்
கடுமையான இழப்புகளை காஸாவின் இழப்புகளோடு ஒப்பிட்டு ஒரு வகையான மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
இது எந்தளவு
ஆரோக்கியமான வாதம் என்று நம்மால் உணர முடியவில்லை.
பொதுவாகவே இதற்கு
முன்பும் சுனாமி,
நிலநடுக்கம், பூகம்பம் போன்ற இயற்கை
பேரிடர்கள் ஏற்படும் போது அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் மீது பழி சுமத்தி
அவர்களின் பாவங்களாலையே இந்த பேரிடர் ஏற்பட்டிருக்கிறது என்று சிலர் கூறினர்.
இப்படியே நம்மை நாமே தூய்மை படுத்திக் கொண்டு எத்தனை காலம் வரை பிறரை குறை கூறி
விமர்சித்துக் கொண்டிருக்கப் போகின்றோம்.
சிந்திக்க சில விஷயங்கள்..
1) இஸ்ரேலிய
ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலைக்கு
ஆதரவாகவும் மக்கள் திரள் போராட்டங்கள் இடம் பெற்ற நாடுகளில் முன்னணியாக நின்ற நாடு
அமெரிக்கா. இந்த தீயினால் அமெரிக்க அதிகார வர்க்கம் பாதிக்கப்பட்ட அளவிற்கு பொது
மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2) அமெரிக்க
உலகெங்கிலும் இழைத்து வரும் அநியாயங்கள் மீதான வெறுப்பை புரிந்து கொள்ள முடிகிற
இந்த நேரத்தில். இது போன்ற இயற்கை பேரிடர்களை நாம் தண்டனைகள் என்று ஒப்பீடு
செய்வோமேயானால் வெகுஜன மக்கள் இஸ்லாத்தை குறித்தும் முஸ்லிம் சமூகத்தை குறித்தும்
தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
3) இயற்கை பேரிடர்
என்பது பாதிக்கப்பட்ட நல்லவர்களுக்கு சோதனையாகவும், பாதிக்கப்பட்ட
கெட்டவர்களுக்கு தண்டனையாகவும்,
பாதிக்கப்படாதவர்களுக்கு படிப்பினையாகவும் இருக்கிறது என்ற
நமது முன்னோர்களின் வழிகாட்டுதல் என்பது ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியாக இதைப்
புரிந்து கொள்வதற்கான அடிப்படையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இந்த
நல்லவர்கள்,
கெட்டவர்கள் என்பதைத் தீர்மானிப்பது நம்முடைய பணி அல்ல. அதை
தீர்மானிக்கும் நீதிபதிகளும் நாம் அல்ல என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
4)
அமெரிக்காவை
தாக்கும் தீ விபத்து குறித்து சமகால அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி ஹஃபிழஹுல்லாஹு
அவர்கள்
"இந்த தீ விபத்து
அல்லாஹ்வின் தண்டனையா?
இது குறித்த முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?'' என்று கேட்கிறார்கள்.
நமது பதில்:
மக்களுக்கு ஏற்படும் சோதனைகள் மூலம் அல்லாஹ் என்ன நாடுகிறான்? என்று நமக்குத் தெரியாது. அவை தண்டனையாகவோ, சோதனையாகவோ, பாடமாகவோ கூட இருக்கலாம். அல்லது கவனக்குறைவில் இருந்து மக்களை தட்டி
எழுப்புவதற்காகவும் இருக்கலாம்.
உயிரினங்களின்
சமநிலையை நிர்வகிப்பதில் அனைத்தையும் அறிந்த - நமது அறிவுக்கு எட்டாத -
அல்லாஹ்வின் ஞானமாகவோ அல்லது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவோ கூட இருக்கலாம்.
இது அல்லாஹ்வின் தண்டனைதான் என்று உறுதியாகக் கூறுவது அனுமதிக்கப்பட்டதல்ல.
ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வஹி (வேத வெளிப்பாடு) இறங்குவது நின்றுவிட்டது.
எனவே அல்லாஹ் என்ன
விரும்புகிறான் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவ்வாறு நாமே தீர்ப்பு கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
அல்லாஹ்
கூறுகிறான்: "நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதையும்
அல்லாஹ் தடை செய்துள்ளான்''
( அல்குர்ஆன்: 7: 33 )
எனவே இந்தத் தீ
விபத்து அல்லாஹ்வின் தண்டனைதான் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு எதிராகப்
பேசுவதாகும். நமது கொள்கை,
நபிகளாரின் நெறிமுறை ஆகியவற்றுக்கு முரணாகும்.
முஸ்லிம்
நாடுகளில்கூட பேரழிவுகள் நடந்துள்ளன, இப்போதும் நடக்கத்தான்
செய்கின்றன. டெர்னா பெருவெள்ளம், சிரியா நிலநடுக்கம், துருக்கியின் வலிமிகுந்த பூகம்பம் போன்றவை இதற்கான உதாரணம்.
இவை எல்லாம்
பாவிகளுக்கு அல்லாஹ்வின் தண்டனைதான் என்று கூறுவது எவ்வாறு கூடாதோ; அவ்வாறே அமெரிக்க தீ விபத்து குறித்து கூறுவதும் கூடாது.
அல்லாஹ்வின்
தண்டனைதான் என்ற தவறான சந்தேகம் ஒருவருக்கு ஏற்பட்டால் குறைந்த பட்சம் அதை
மறைத்துக்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள்
முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் விஷயத்தில்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உண்மையான இஸ்லாத்தின் வழிகாட்டுதல் அல்ல.
மனிதர்கள்
பாதிக்கப்படுவதைக் கண்டு கருணை நபி (ஸல்) வேதனையடைந்துள்ளார்கள். ஏன்.. பறவைகள், கால்நடைகள்,
விலங்குகள் பாதித்ததைக் கண்டு கண் கலங்கியுள்ளார்கள்.
(மக்காவில் பஞ்சம் ஏற்பட்டபோது மதீனாவிலிருந்து உதவிகளை அனுப்பியுள்ளார்கள்)
லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தைப் பொறுத்தவரை...
பூமியில்
அமைதியைக் குலைத்து,
குற்றவாளிகளை ஆதரித்து, அப்பாவிகளையும்
பலவீனர்களையும் கொல்லும் ராணுவ, அரசியல்
விவகாரங்களையும்..
அமெரிக்காவில்
நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள், இஸ்லாமிய மையங்களைக்
கட்டி, மில்லியன் கணக்கான முஸ்லிம் ஆண், பெண், குழந்தைகளைப் பராமரிக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி யூத,
கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளையும்..
ஒரு முஸ்லிம்
கட்டாயம் வேறுபடுத்திப் பார்க்கத்தான் வேண்டும்.
கொளுந்து விட்டு
எரியும் தீயை அணைக்கவும் அவற்றின் சேதத்தைக் கட்டுப்படுத்தவும் சாத்தியமான அனைத்து
உதவிகளையும் செய்வதுதான் முஸ்லிமின் மீது கடமையாகும்.
அவ்வாறு செய்ய முடியவில்லையா...?
பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் கருணை காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இம்மை
மறுமை நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றுமாறு உளமுருகி துஆ கேட்க வேண்டும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்! ( நன்றி: நூஹ் மஹ்ழரி, அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி அவர்களின் முகநூல் பதிவின் மூலத்தை நாம் தேடினோம் அது
கிடைக்கவில்லை. இது எழுத்தாளர் நூஹ் மஹ்ழரியின் தமிழாக்கம் )
நடக்கும் நிகழ்வுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதே ஒரு முஸ்லிமின் உயரிய பண்பு!
போர்க்களமாக
இருந்த போதிலும் அந்த போருக்கு சம்பந்தமில்லாத, அந்த போரில் கலந்து
கொள்ளும் ஆர்வமில்லாத,
ஆனாலும் ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக அந்த போரில் பங்கு
பெற்றவர்களும் இருப்பார்கள். அவர்களைக் கொல்லாமல் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து
கொள்ள வேண்டும் என்று நமது தீன் நமக்கு வழிகாட்டுகிறது.
இவ்வாறு உயர்ந்த
வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ள நாம் கலிஃபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் ஃபலஸ்தீன மற்றும் உலகளாவிய அளவில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித
தீங்கும் விளைவிக்காத,
தீங்கையும் நாடாத மக்களும் பெருமளவில் வாழ்வார்கள் என்று
மறந்து விடுகின்றோம்.
எனவே, நாம் நமது எழுத்துக்களில், நமது அறிக்கைகளில் அளவு
கடந்து சென்று விடக்கூடாது.
நமது ஒப்பீட்டில்
நாம் தவறிழைத்து விடக்கூடாது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணமும் இது
தான்.
لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى
الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ
تُقْسِطُوْۤا اِلَيْهِمْ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
மார்க்க
(விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து
உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை; நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை நேசிக்கிறான். ( அல்குர்ஆன்: 60:
8 )
حديث
ابن عباس رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال لأصحابه يومئذ: ((إني
قد عرفت أن رجالاً من بني هاشم وغيرهم قد أخرجوا كرهاً، لا حاجة لهم بقتالنا؛ فمن
لقي منكم أحداً من بني هاشم؛ فلا يقتله، ومن لقي أبا البختري بن هشام بن الحارث بن
أسد؛ فلا يقتله، ومن لقي العباس بن عبد المطلب عم رسول الله صلى الله عليه وسلم؛
فلا يقتله؛ فإنه إنما أخرج مستكرهاً)) . قال: فقال أبو حذيفة (ابن عتبة بن ربيعة)
: أنقتل آباءنا وأبناءنا وإخواننا وعشيرتنا ونترك العباس؟! والله؛ لئن لقيته؛
لألحمنه السيف. قال: فبلغت رسول الله صلى الله عليه وسلم، فقال لعمر بن الخطاب:
((يا أبا حفص! (قال عمر: والله؛ إنه لأول يوم كناني فيه رسول الله صلى الله عليه
وسلم بأبي حفص) أيضرب وجه عم رسول الله صلى الله عليه وسلم بالسيف؟!)) . فقال عمر:
يا رسول الله! دعني؛ فلأضرب عنقه بالسيف، فوالله؛ لقد نافق. فكان أبو حذيفة يقول:
ما أنا بآمن من تلك الكلمة التي قلت يومئذ، ولا أزال منها خائفاً؛
பத்ர்
யுத்தத்திற்கான தயாரிப்புகளை சரி செய்து முடித்த பின்னர் நபித்தோழர்களை நோக்கி
மாநபி (ஸல்) அவர்கள் ”நாளை நடைபெறும் யுத்தத்தில் உங்கள் எதிரே பனூ ஹாஷிம் கிளையார்களில் யாரையும்
கண்டால் அவர்களை கொன்று விட வேண்டாம். அவர்கள் நிர்பந்தமாக அழைத்து
வரப்பட்டுள்ளார்கள்.
மேலும், அப்பாஸ் அவர்களையும்,
அபுல் புக்தரி அவர்களையும் கொன்று விட வேண்டாம்” இவர்கள் இருவரும் வற்புறுத்தல் மற்றும் நிர்பந்த்ததின் அடிப்படையில் அழைத்து
வரப்ட்டுள்ளனர். கண்ணில் படுகின்ற எந்த ஒரு இறைவிரோதியையும் விட்டுவிடக் கூடாது
என்கிற தீர்மானத்தோடு இருந்த தோழர்களிடையே இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.
குறைஷிகளின்
மாபெரும் தலைவர்களில் உத்பா இப்னு ரபீஆவும் ஒருவன் பத்ரில் குறைஷிப் படையை
வழிநடத்தி வந்திருப்பதில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.
ஆச்சர்யம்
என்னவென்றால் உத்பாவின் மகன் அபூஹுதைஃபா முஸ்லிம்கள் அணியில் இருக்கிறார்.
அவர்களால் இந்த அறிவிப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உணர்ச்சி வசப்பட்ட
அவர் இப்படிச் சொன்னார்! “எங்கள் தந்தையரையும்,
சகோதரர்களையும், சொந்த பந்தங்களையும்
நாங்கள் போரில் கொல்ல வேண்டும்”
ஆனால், அப்பாஸை கண்டால் மட்டும்
விட்டுவிட வேண்டுமா?
படைத்த ரப்பின்
மீது ஆணை! “அவரைப் போர்க்களத்தில் எங்கு கண்டாலும் என் வாளால் முகம் சிதைக்க வெட்டுவேன்” என்றார் ஆவேசமாக.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறிய விபரம் தெரிய வந்த போது, உமர் (ரலி) அவர்களை அழைத்து “ஹஃப்ஸாவின் தந்தையே” நாளை நடக்கும் போரில் அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையின் முகம் வாளால்
வெட்டப்படுமா?“
– என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி)
அவர்கள்: “அனுமதி மட்டும் தாருங்கள் நயவஞ்சகனாக மாறிவிட்ட அபூஹுதைஃபாவின் தலையை இந்த
இடத்திலேயே கொய்து விடுகிறேன்” என்றார்கள். வேண்டாம் என
மாநபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை தடுத்து விட்டார்கள். ( நூல்: தஹ்தீப்
சீரத் இப்னு ஹிஷாம்,
பக்கம்: 132 )
அபூஹுதைஃபா
ஒன்றும் சாமானியர் அல்ல,
நபித் தோழர்களில் மிகச் சிறப்பு பெற்றவர். இரண்டு ஹிஜ்ரத்திலும்
கலந்து கொண்டவர்,
இரண்டு கிப்லாவிலும் தொழும் பாக்கியம் பெற்றவர், என்ற போதிலும்,
குடும்பப்பாசம், உணர்வு அவரை இவ்வாறு
பேசத்தூண்டியது.
ஆனாலும், அவர் அந்த உணர்ச்சி வெளிபாட்டிற்குப் பின் பெரிதும் வருத்தப்பட்டார்.
சந்திக்கும் நபர்களிடத்திலும் சந்தப்பம் கிடைக்கும் போதிலும்
அபூஹுதைஃபா (ரலி) இப்படிச் சொல்வார்களாம்: “பத்ரில் நான் சொன்ன அந்த வார்த்தை என் நிம்மதியை சீர்குலைத்துவிட்டது. அப்பாஸ்
அவர்கள் குறித்து நான் அன்று கூறிய வார்த்தைகளை நினைத்து சதா பயந்து கொண்டே
இருந்தேன்.அதற்கு பரிகாரம் போர்க்களத்தில் நான் ஷஹீத் ஆவது தான் என்று
உறுதிகொண்டேன்”.
இப்னு அப்துல் பர்
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ”பத்ருக்குப்ப பின் நடந்த அனைத்து
யுத்த களங்களிலும் கலந்து கொண்டார்கள். இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில்
நடந்த யமாமா போர்க்களத்தில் ஷஹீத் வீர மணரம் அடைந்தார்கள். ( நூல் : இஸ்தீஆப்: பாகம்: 3 )
ஆனாலும், பத்ர் யுத்தத்தில் அபுல் புக்தரி கொல்லப்பட்டார். அப்போது "தாம் ஏன்
அபுல் புக்தரியை கொல்லக்கூடாது" என்று கூறியதற்கான காரணத்தையும்
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
حضر مع المشركين
موقعة بدر في العام الثاني للهجرة (624م)، ونهى النبي محمد عن قتل ابو
البختري . إلاّ أن الصحابي المجذر بن زياد البلوي قتله، ثم اعتذر إلى النبي فقال:
والذي بعثك بالحق لقد جهدت عليه أن يستأسر فآتيك به فأبى إلاّ أن يقاتلني، فقاتلته
فقتلته"، إذ أنه حين التقى به في ميدان المعركة قال زياد إن رسول الله
قد نهانا عن قتلك "، فقال أبو البختري:"وزميلي" (يعني زميله جنادة
بن مليحة بنت زهير بن الحارث بن أسد الليثي الذي خرج معه من مكة)، فقال المجذر ما
أمرنا رسول الله إلا بك وحدك، فقال أبو البختري لا والله، ما نحن بتاركي
زميلك لا والله، إذن لأموتن أنا وهو جميعا، لا تتحدث عني نساء مكة أني تركت زميلي
حرصا على الحياة".
பத்ருப் போர்
முடிந்திருந்த தருணம் அது. மாநபி {ஸல்} அவர்களும் மாநபித் தோழர்களும் மட்டில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்
கொண்டிருந்த பொன்னான தருணமும் கூட.
ஒருவரின் மனம்
மட்டும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. எங்கே மாநபி {ஸல்}
அவர்களின் கட்டளைக்கு மாறு செய்து விட்டோமோ? என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.
மாநபி {ஸல்}
அவர்கள் கேள்விபட்டால் என்ன சொல்லி விடுவார்களோ? என்று பரிதவித்துக் கொண்டிருக்கின்றது.
யாரும் நபி {ஸல்}
அவர்களிடம் சொல்வதற்கு முன்னால், இதை யார் செய்தார்?
என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டு விடும் முன்பாக நாமே சென்று மாநபி {ஸல்}
அவர்களைப் பார்த்து நடந்த சம்பவத்தை, நிகழ்வின் பிண்ணனியை சொல்லி விட வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.
முஜத்தர் பின்
ஸியாத் (ரலி) எனும் நபித்தோழர் மாநபி {ஸல்} அவர்களுக்கு முன்னால் வந்து நின்றார். துக்கத்தின் ரேகைகள் முகத்தில்
படர்ந்திருந்தன.
“அல்லாஹ்வின் தூதரே!” என்று அழைத்தார் முஜத்தர் (ரலி) அவர்கள். அந்த அழைப்பில் ஒரு பயம் இருந்தது.
நபிகளார் திரும்பிப் பார்த்தார்கள். நபிகளாரைப் பார்த்ததும் அந்த பயம் கண்ணீராக
கொட்டத் தொடங்கியது.
அல்லாஹ்வின்
தூதரே! “நடைபெற்ற போரில் அபுல் புக்தர் பின் ஹிஷாமை கொல்லக் கூடாது என்று நீங்கள் ஆணை
பிறப்பித்திருந்தீர்கள். ஆனால் அவரை நான் தான் போரில் எதிர்கொண்டேன்.
போர்க்களத்தில் எனக்கு முன்னால் அவர் பல முறை வாளுயர்த்தி வந்தபோதெல்லாம் இயன்றவரை
அவரை நான் தவிர்த்தேன்”.
அப்போது அவர்
கேட்டார்: “நீ ஏன் என்னோடு சண்டை செய்ய மறுக்கின்றாய்?” அதற்கு, நான் “உங்களை போர்க்களத்தில் கண்டால் கொல்லக்கூடாது என்று நபி {ஸல்}
கட்டளையிட்டுள்ளார்கள்” என்றேன்.
“என்னுடன், எனது நண்பன் ஜினாதா பின் மலீஹாவும் உண்டு. அவருக்கும் இது பொருந்துமா?” என்று கேட்டார். அதற்கு நான் “உங்கள் நண்பரைக் குறித்து
நபிகளார் எதுவும் கூறவில்லை. ஆகவே அவரை நாங்கள் நிச்சயம் பொருட்படுத்தமாட்டோம்” என்று கூறினேன்.
“அப்படியென்றால் நாங்கள்
இருவரும் சேர்ந்து உங்களுடன் போர் செய்வோம். ‘ஆபத்து வேளையில் நண்பரைக்
கைவிட்டவன்’
என்று மக்கத்துப் பெண்கள் கூறும் இழி சொல்லை என்னால் கேட்க
முடியாது”
என்றார். “இவ்வாறு கூறிக்கொண்டே திடீரென அவர்
என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்காக வந்தார். அவரை எப்படியாவது கைது செய்து
உங்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விட வேண்டும் என்று நான் கடுமையாக
முயற்சித்தேன். ஆனாலும்,
அல்லாஹ்வின் தூதரே! கடைசி வரை என்னால் இயலவில்லை. ஒரு
கட்டத்தில் எனது உயிரைக் காப்பதற்காக அவரை நான் கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, கொன்று விட்டேன் அல்லாஹ்வின்தூதரே!” என்று கண்ணீர் மல்க கூறி
முடித்தார்.
அப்போது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இந்த விஷயத்தில் உங்களை
நான் குற்றம் சுமத்த மாட்டேன். அபுல் புக்தரிக்கு நாம் செய்ய வேண்டிய பெரும்
நன்றிக்கடனை நினைத்துதான் அவ்வாறு ஆணை பிறப்பித்திருந்தேதேன்” என்று கூறினார்கள். ( நூல்: இஸ்தீஆப், தபகாத் அல் குப்ரா, ஸியரு அஃலா மின் நுபலா )
என்ன நன்றிக்கடன்
என்றால் ஷுஃபே அபூதாலிப் பள்ளத்தாக்கில் மக்காவின் முஷ்ரிக்குகள் பெருமானார் {ஸல்}
அவர்களையும், நபித்தோழர்களையும் ஊர்
விலக்கம் செய்து,
உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை தடுத்து வைத்திருந்த
தருணத்தில் மாநபி {ஸல்}
அவர்களுக்கு ஆதரவாக பேசி, அப்போது மிகவும் மும்முரமாக எதிர்த்து நின்ற அபூஜஹ்லையும் அடித்து, மக்காவில் தொங்க விட்டிருந்த ஊர் நீக்க தீர்மானத்தை கிழித்தெறிந்து மாநபி {ஸல்}
அவர்களுக்கும் மாநபித்தோழர்களுக்கும் ஊர் விலக்க தடை நீங்க
அடிப்படை காரண்மாய் திகழ்ந்தார் அபுல் புக்தரி எனவே தான் அவரை கொல்லக் கூடாது என
நபி {ஸல்}
அவர்கள் போர்க்களத்தின் போது கண்டால் கொல்ல வேண்டாம் என
கட்டளை பிறப்பித் திருந்தார்கள்.
காட்டுத்தீயும்…
கலிஃபோர்னியாவும்….
காட்டுத்தீ ஒன்றும்
கலிஃபோர்னியாவிற்கு புதிதல்ல.
காட்டுத்தீயும் கலிஃபோர்னியாவும் இந்த
விஷயத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்
போன்று.
காட்டுத்தீ என்பது
பேரழிவினை ஏற்படுத்தும் சூழல்சார் பிரச்சனையாகும். இதன்காரணமாக உயிரின பல்வகைமை
அழிகின்ற சூழ்நிலை உருவாகின்றது. காட்டுத்தீயானது காடுகள், புல்வெளிகள் மற்றும் காடு சார்ந்த நிலங்களில் ஏற்படுகின்றது.
அமெரிக்காவில்
வருடாந்தம் 10000
காட்டுதீகளும் அதன்முலம் 4.5மில்லியன் ஏக்கர் காடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. 2018களில் உலகளாவிய ரீதியில் 52303 காட்டுத்தீக்களும் 8.5மில்லியன் ஏக்கர் காடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
காட்டுத்தீயின் வகைகள்
1)புதர் தீ- Bush fire
2)பாலைவன தீ- Desert fire
3)காட்டு தீ- Forest fire
4)புல்நில தீ- Grass fire
5)மலைப்பகுதி தீ- Hill fire
6)கரிய தீ- Peat fire
7)தாவரங்களில் ஏற்படும் தீ-
Vegetation
fire
8)திறந்த புல்வெளி
தீ(தென்னாப்பிரிக்காவில் வெல்ட் புல்வெளி தீ)- Veld fire
உலகில் காட்டுத்தீ ஏற்படும் பிரதேசங்கள்
1)1898- தென் கலிபோர்னியா காட்டுத்தீ (2500000 ஏக்கர் காடுகள் அழிவு)
2)1923- கலிபோர்னியா காட்டுத்தீ
(50 பேர் இறப்பு, 624 கட்டிடங்கள்
அழிவு)
3)1933- கலிபோர்னியா காட்டுத்தீ (29பேர் இறப்பு, 150 பேர் காயம்,
19 ஹெக்கடேயர் காடுகள் அழிவு).
4)1953- கலிபோர்னியா காட்டுத்தீ
(15 பேர் இறப்பு, 1300 ஏக்கர் காடுகள்
அழிவு)
5)1956- கலிபோர்னியா காட்டுத்தீ
(11 பேர் இறப்பு, 4000 ஏக்கர் காடுகள்
அழிவு)
6)1961- கலிபோர்னியா காட்டுத்தீ (484 வீடுகள் அழிவு, 112 பேர் காயம்,
16090 ஏக்கர் காடுகள் அழிவு)
7)1970- கலிபோர்னியா காட்டுத்தீ (382வீடுகள் அழிவு, 70902 ஹெக்கடேயர் காடுகள் அழிவு)
8)1990- கலிபோர்னியா காட்டுத்தீ
(ஒருவர் இறப்பு., 480 கட்டிடங்கள் அழிவு, 2000 ஹெக்கடேயர் காடுகள் அழிவு)
9)1991- கலிபோர்னியா காட்டுத்தீ (25பேர் இறப்பு, 3469 வீடுகள் அழிவு,
620 ஹெக்கடேயர் காடுகள் அழிவு)
10)1993- கலிபோர்னியா காட்டுத்தீ (441வீடுகள் அழிவு, 5802 ஹெக்கடேயர் காடுகள் அழிவு)
11)1995- கலிபோர்னியா காட்டுத்தீ
(45வீடுகள் அழிவு, 4999 ஹெக்டேயர் காடுகள்
அழிவு)
12)2003- கலிபோர்னியா காட்டுத்தீ (6பேர் இறப்பு, 993 வீடுகள் அழிவு,
36940 ஹெக்டேயர் காடுகள் அழிவு)
13)2006- கலிபோர்னியா காட்டுத்தீ
(5பேர் இறப்பு, 16300 ஹெக்கடேயர் காடுகள் அழிவு)
14) 2007- கலிபோர்னியா காட்டுத்தீ
(9பேர் இறப்பு, 85 பேர் காயம், 1500 வீடுகள் அழிவு)
15)2013- கலிபோர்னியா காட்டுத்தீ
(102520 ஹெக்கடேயர் காடுகள் அழிவு)
16)2017-
தென் கலிபோர்னியா காட்டுத்தீ (114078 ஹெக்டேயர் காடுகள் அழிவு)
17)2017-
வடகலிபோர்னியா காட்டுத்தீ (44பேர் இறப்பு, 8900 கட்டிடங்கள் அழிவு,
97000 ஹெக்டேயர் காடுகள் அழிவு )
18)2018- கலிபோர்னியா காட்டுத்தீ
(1604 கட்டிடங்கள் அழிவு, 92936 ஹெக்டேயர் காடுகள் அழிவு)
19)2018 கலிபோர்னியா காட்டுத்தீ
(83பேர் இறப்பு, 370 கட்டிடங்கள் அழிவு, 60000 ஹெக்டேயர் காடுகள் அழிவு )
காட்டுத்தீயினை ஏற்படுத்தும் காரணிகள்
1)அதிகளவிலான வெப்பநிலை
இன்றைய உலகில்
காலநிலை மாற்றத்தினால் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. 19ம் நூற்றாண்டில் இறுதியில் பூகோள வெப்பநிலை 0.5 செல்ஸியஸ் இனால் அதிகரித்தது. 1950-
1993 களில் 0.75 செல்ஸியஸ் இனால்
அதிகரித்தது. இன்று பூகோள வெப்பநிலை 1.4- 5.8 செல்ஸியஸ் இனால் அதிகரிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இவ் அதிகரித்த
வெப்பநிலை காரணமாக காடுகள் தாமாகவே பற்றி கொள்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
இதனால் காட்டுத்தீ உருவாகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் 80% காட்டுத்தீ வெப்பநிலை அதிகரிப்பினால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2)வரட்சி
நிலை
அதிகரித்து வரும்
வெப்பநிலை காரணமாக உலகில் வரட்சி நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக அதிகளவிலான
காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2014ம் ஆண்டு
கலிபோர்னியாவில் வரடசியின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் 2500 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. இதுதவிர 2017ம் ஆண்டு மேற்கு
அமெரிக்கா மற்றும் மெஸ்சிக்கோவில் வரட்ச்சியின் நிமிர்த்தம் ஏற்பட்ட
காட்டுத்தீயினால் 3.3
மில்லியன் ஏக்கர் காடுகள் அழிவுற்றன.
3)மரங்களின் உராய்வு தன்மை
அதிக வரட்ச்சி
காரணமாக காற்றின் தீவிர தன்மை கூடுதலாக காணப்படும் வேளை மரங்கள் ஒன்றுடன் ஒன்று
உராய்வதனால் நெருப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக இவ்வாறான நிலைக்கு மூங்கில்
மரங்களின் உராய்வு உடனடியாக தீயினை ஏற்படுத்தி விடுகின்றன. 2008ம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு அடிப்படை காரணமாக மூங்கில்
மரங்களின் உராய்வு தன்மை காரணமாகும்.
4)இடி மின்னல் தாக்கம்
மழை பொழிகின்ற
களங்களில் இடிமின்னல் தாக்கம் என்பது அனைத்து பகுதிகளில் நிகழும் ஒரு சாதாரண
நிகழ்வாகும். இதன்போது ஏற்படும் தீப்பொறிகள் காடுகளில் விழும்போது காடுகள்
எரிவடைகின்றன. உலகில் 12%ஆன காட்டுத்தீ இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்படுகின்றது. 2017ம் ஆண்டு கலிபோர்னியாவில் Ventura வில் ஏற்பட்ட
காட்டுத்தீயினால் 4500
ஏக்கர் காடுகள் அழிவுற்றன.
5)புவிநடுக்கம்
உலகில் ஏற்படும்
நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் காடுகளில் ஏதேனும்
ஒரு காரணமாக தீயானது பரவுகின்றது. இதன்போது காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2017ம் ஆண்டு Santo
rosa என்ற இடத்தில 4.0 ரிக்டர் அளவில்
ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் அப்பகுதியிலுள்ள காடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால்
கலிபோர்னியாவில் 3061
வீடுகள் அழிவடைந்ததுடன் 3400 ஏக்கர் காடுகளும் அழிந்தன.
6)எரிமலை வெடிப்பு
ஒரு பிரதேசத்தில்
எரிமலை கக்குகை இடம்பெறும் போது வெளித்தள்ளப்படும் லாவா குழம்பானது நகர்ந்து
தாவரப்போர்வைகளினை தங்குமிடத்து வெப்பத்தின் காரணமாக காடுகள் அழிகின்றன. இவ் லவா
குழம்பானது 2000
பரணைட் வெப்பநிலை தன்மையினை கொண்டதாகும். குறிப்பாக 2018ம் ஆண்டு மே மாதம் காவாய் எரிமலை கக்குகையினால் காவாய் தீவில் காட்டுத்தீ
ஏற்பட்டது. இதனால் 104
ஏக்கர் காடுகள் அழிந்தன. அத்துடன் 26 வீடுகள் அழிவடைந்தது.
7)யுத்தம் மற்றும் கலவரங்கள்
இன்று உலகில் அதிகளவிலான கலவரங்கள் மற்றும் யுத்தங்கள்
நாடுகள் மத்தியில் ஏற்படுகின்றன. இதனால் ஆயுததாரிகள் பயன்படுத்தும் குண்டுகள், ஆட்லறி செல்கள் போன்றன காடுகளில் விழும் சந்தர்ப்பத்தில் காட்டுத்தீ ஏற்படுகின்றது.
குறிப்பாக 2ம் உலக மகா யுத்தத்தினால் தென்-மேற்கு பெர்லின் நகரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக
காட்டுத்தீ ஏற்பட்டது. இதன்போது 500 ஏக்கர் காடுகள்
அழிக்கப்பட்டன. 2016ம் ஆண்டு இஸ்ரேலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் 2000 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்படத்துடன் 77 கட்டிடங்களும் 1600 மக்களின் வீடுகளும் அழிக்கப்பட்டன.
8)மனிதர்களின் புகைத்தல் செயற்பாடுகள்
சுற்றுலா பயணிகள்
காடுகளில் சுற்றி பார்க்க வரும் வேளை தற்செயலாக சிகரட், பீடி ஆகியவற்றினை வீசுகின்றபோது அவை நெருப்பாக மாறி கடுகளினை அழித்துவிடுகின்றன.
குறிப்பாக 2017ம் ஆண்டு ஏதென்ஸ் இல் சுற்றுலாப்பயணிகள் அசண்டையீன செயற்பாடுகள் காரணமாக 200 வாகனங்கள் அழிவுற்றதுடன் 7 பயணிகள் இறந்தனர்.
அத்துடன் 56
பேர் காயமடைந்தனர்.
காட்டுத்தீயினால் ஏற்படும் விளைவுகள்
1)காடுகள் மற்றும் தவரங்கள் அழிவடைதல்
காட்டுத்தீ ஏற்படுவதனால் காடுகள் எரிகின்றன. இதன் காரணமாக
காட்டுவாழ் உயிரினங்கள் அழிவடைகின்றன. குறிப்பாக 2017ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20000 ஹெக்டேயர் புல்நிலங்கள் அழிவடைந்தன. 2017ம் ஆண்டு Santa rosa பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 3400 ஏக்கர் காடுகள்
அழிவடைந்தன, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 153000 ஏக்கர் காடுகள் அழிவடைந்தன.
2)உயிரிழப்புகள் ஏற்படுதல்
காட்டுத்தீ
ஏற்படுவதன் காரணமாக அதில் சிக்குண்டு பல உயிர்கள் அழிவடைகின்றன. குறிப்பாக 1991ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்,
2017ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 11 பேர் உயிரிழந்தனர்,
2018ம் ஆண்டு கிரீஸ், லாட்வியா, சுவீடன் போன்றவற்றில் ஏற்பட காட்டுத்தீயின் காரணமாக 92 பேர் உயிரிழந்தனர்,
2018களில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 98 பேர் உயிரிழந்தனர்.
3)வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிவடைதல்
ஒரு பிரதேசத்தில்
காட்டுத்தீ ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் ,
போன்றவற்றில் அத்தீயானது பரவுகின்றது. இதன் காரணமாக அவை
அழிவடைகின்ற நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக 2007 ஆண்டு
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1500 வீடுகள்
அழிக்கப்பட்டன,
107ம் ஆண்டு வட கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 8900 பொதுக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன, 2017ம் ஆண்டு சிலியில்
ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1000 பொது கட்டிடங்கள்
அழிவுற்றன,
2017ம் ஆண்டு Santa rosa பகுதியில் ஏற்பட்ட
காட்டுத்தீயினால் 3061
வீடுகள் தீக்கிரையாகியதோடு மட்டுமில்லாமல் 5400 பொதுக்கட்டிடங்களும் அழிவுற்றன, 2018ம் ஆண்டு
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1604 பொதுக்கட்டிடங்கள்
அழிவுற்றன.
4)சூழல் வெப்பநிலை அதிகரித்தல்
ஒரு பிரதேசத்தில் காட்டுத்தீ ஏற்படுகின்ற வேளையில்
அப்பகுதியில் வெப்பநிலையானது அதிகரித்து காணப்படும். இவ் அதிகரித்த வெப்பநிலை
காரணமாக மேலும் பூகோள வெப்பமயமாதல் தொடர்பான பிரச்சனைகள் எழுகின்றன.
5)நோய்கள் ஏற்படும்
காட்டுத்தீயினால் ஏற்படும் சாம்பல் மற்றும் துணிக்கைகள்
காற்றின் பரவி மனிதனில் புகும்போது சுவாசநோய்கள், சரும நோய்கள் போன்றன ஏற்படுகின்றன. குறிப்பாக தீயின் மூலம் காபனீரொடசைட், மொனக்சைட்டு,
நைதரசன் ஒக்சைட்டு போன்றவற்றினால் சுவாசரீதியான நோய்கள்
ஏற்படுகின்றன. 2007ம் ஆண்டு San
Dieyo இல் ஏற்பட்ட காட்டுத்தீயினால் அதிகளவிலான மக்கள் ஆஸ்துமா
நோயினால் பாதிக்கப்பட்டனர்.
6)நீர் மாசடைதல்
ஏற்படுகின்றது.
7) விலங்குகளின்
புகலிடம் அழிவடைதல்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இது போன்ற பேரிடர்களில்
இருந்தும், இது போன்ற பேரிடர்களில் நமது உயிர், உடமை, உறைவிடம் போன்றவை அழிவில் சிக்குவதில்
இருந்தும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற பல நல்ல கருத்துக்கள் நிறைந்த அருமையான கட்டுரை அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete