குர்பானியின் மாண்பும்... மகத்துவமும்...
இஸ்லாம் சில
இடங்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது. சில கால, நேரங்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது. சில இபாதத்களை கண்ணியப்படுத்தச்
சொல்கின்றது.
கண்ணியப்படுத்த
வேண்டிய இடங்கள்: ஹஜ்ஜின் கிரியைகளோடு தொடர்புள்ள மக்காவின் ஹரம் ஷரீஃப், கஅபா,
மகாம் இப்ராஹீம், ஸஃபா, மர்வா மஷ்அரில் ஹராம் முஸ்தலிஃபா, மினா, அரஃபா,
மதீனா ஹரம், இவைகள்.
நல்லறங்கள்
நடைபெறுகிற அனைத்து இடங்கள், குறிப்பாக மூன்று
மஸ்ஜிதுகள்,
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, பைத்துல் முகத்தஸ்,
மற்றும் அனைத்து மஸ்ஜித்கள்
கண்ணியப்படுத்த
வேண்டிய கால,
நேரங்கள்: சங்கை மிகுந்த நான்கு மாதங்கள், ரமலான் மாதம்,
ஜும்ஆ தினம், லைலத்துல் கத்ர் இரவு, அதிகாலை நேரம். ரமழான் கடைசி பத்து நாட்கள், துல்ஹஜ் முதல் பத்து நாட்கள், ஆஷூரா மற்றும் அரஃபா
தினம்.
கண்ணியப்படுத்த
வேண்டிய இபாதத்: குர்பானி வணக்கம் குர்பானி பிராணி, குர்பானிக்காக அடையாளமிடப்பட்டவைகள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஹஜ்ஜின் கியையைகளில் இடம் பெறும் சில வழிபாடுகளையும், அது தொடர்பான இடங்களையும் தன்னுடைய அடையாளச் சின்னங்கள் என்று அல்குர்ஆனில்
அடையாளப்படுத்துகின்றான்.
إِنَّ
الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ
اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ
خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
“நிச்சயமாக,
ஸஃபா மர்வா என்னும் இரு மலைக்குன்றுகளும் அல்லாஹ்வின்
அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் இறை இல்லம் கஅபாவை, ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்வாரோ அப்பொழுது அவ்விரண்டையும் வலம் வருவது அவர் மீது
குற்றமல்ல. மேலும்,
எவர் நன்மையை மிகுதியாகச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்
நன்றி பாராட்டுபவனும்,
அவருடைய நற்செயலை மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 2:
158 )
அதே போன்று தான்
குர்பானி பிராணியையும்,
அந்த வழிபாட்டையும் தன்னுடைய அடையாளச் சின்னம் என்று
அடையாளப்படுத்துகின்றான்
பின்னர் அந்த அடையாளச்
சின்னங்களை ஒரு முஃமின் எப்படி அணுக வேண்டும் என்று வழிகாட்டியும் இருக்கின்றான்.
وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
“ஒட்டகங்களை உங்களுக்கு
அல்லாஹ்வினுடைய மார்க்க அடையாளங்களில் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். உங்களுக்கு
அவற்றின் மூலம் நன்மைகள் இருக்கின்றன. ஆகவே, (அவற்றை இடது முன்னங்காலை கட்டி) மூன்று கால்களில்
நிற்கச்செய்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து விடுங்கள். அவற்றின்
விலாப்புறங்கள் கீழே விழுந்து உயிர் நீத்து விட்டால், அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், தேவையிருந்தும் பிறரிடம்
யாசிக்காதவர்களுக்கும், யாசித்துக் கேட்பவர்களுக்கும்
உண்ணக் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு இவ்வாறு நாம் அதை
உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளோம்”. (அல்குர்ஆன் : 22: 36 )
ஒட்டகத்தை அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில்
ஒன்று என்று குறிப்பிடும் அல்லாஹ் இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய வசனங்களில்
குர்பானி குறித்து பேசுகின்றான். எனவே, குர்பானி
பிராணியும், குர்பானி வணக்கமும்
அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் கட்டுப்பட்டதாகும்.
அல் ஹஜ் அத்தியாயம் 26- ம் வசனத்தில் இருந்து ஹஜ்ஜையும், ஹஜ்ஜின் இதர கிரியைகளையும் சிறப்பித்துக்
கூறி வரும் இறைவன் நடுவிலும்,
இறுதியாகவும்
“இவைகள் அல்லாஹ்வினால்
புனிதமாக்கப்பட்டவை” என்றும், ”அல்லாஹ்வின் சன்மார்க்க அடையாளங்கள்” என்றும் குறிப்பிட்டு விட்டு கண்ணியப்படுத்த
வேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.
குர்பானி என்பது...
குர்பானி என்பது அல்லாஹ் மற்றும் அவனது
திருத்தூதர் முஹம்மது ﷺ அவர்களால்
கட்டளையிடப்பட்ட அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களுல் ஒன்றாக
இருக்கின்றது.
நபி ﷺ அவர்களை நோக்கி
அல்லாஹ் ஆணையிடும் இந்த இரண்டு வசனங்கள் கவனிக்கத்தக்கவையாகும்.
قُلْ
اِنَّ صَلَاتِیْ وَنُسُكِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ
۟ۙ
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய
தொழுகையும்,
என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ( அல்குர்ஆன்: 6:
162 )
اِنَّاۤ
اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ
فَصَلِّ
لِرَبِّكَ وَانْحَرْ
اِنَّ
شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும்
கொடுப்பீராக. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (
அல்குர்ஆன்: 108:
1-3 )
وَلِكُلِّ
اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ
مِّنْ
بَهِیْمَةِ
الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ
“இன்னும் கால்நடை (ப்பிராணி) களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள
(ஆடு, மாடு,
ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக்
கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக)
ஆக்கியிருக்கிறோம்;
ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்-குர்ஆன் 22:34)
“நபி (ஸல்) அவர்கள்
மதீனாவில் பத்து வருடங்கள் தங்கியிருந்து, (ஒவ்வொரு ஆண்டும்
பெருநாள் தினத்தில்) குர்பானி கொடுத்தார்கள்.” அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
இப்னு உமர் (ரலி);
ஆதாரம்: அஹமது, திர்மிதீ
“நபி (ஸல்) அவர்கள் இரண்டு
கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள்
தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர்
கூறி, ‘தக்பீர்’
(அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்
என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்” அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5558
“தொழுகைக்குப் பிறகு
குர்பானி கொடுத்தவர் தனது கடமைகளை (ஈத்) முடித்து முஸ்லிம்களின் வழியைப்
பின்பற்றுகிறார்.”
அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி); ஆதாரம்:புகாரி
மேற்கண்ட திருமறை
வசனங்கள் மற்றும் நபிமொழிகளிலிருந்து குர்பானி கொடுப்பது என்பது அல்லாஹ் மற்றும்
அவனது தூதர் ﷺ அவர்களால் கட்டளையிடப்பட்ட
வணக்கவழிபாடுகளில் ஒன்று என்பதையும் இந்தக் குர்பானி எனும் கடமையைச் செய்தவரே
முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றுபவராவார் என்பதையும் விளங்கமுடிகின்றது.
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையா? அல்லது வலியுறுத்தப்பட்ட சுன்னாவா?
இதை வரையறுப்பதில்
மார்க்க அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.
சில அறிஞர்கள் குர்பானி கட்டாயக் கடமை என்றும் இந்தக்
கடமையை நிறைவேற்றாதவர்களுக்கு பாவம் வந்து சேரும் எனவும், மற்ற சில அறிஞர்கள் குர்பானி வலியுறுத்தப்பட்ட சுன்னா; இதை செய்யாமல் விடுவது விரும்பத்தக்கது அல்ல என்கின்றனர்.
உழ்ஹிய்யா என்பது
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு
சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
قال النّووي رحمه الله في " المجموع " (8/382):" قيل
سمّيت بذلك لأنّها تُفعل في الضّحى، وهو ارتفاع النّهار ".
இமாம் நவவீ (ரஹ்)
அவர்கள் “லுஹா உடைய நேரத்தில் அறுக்கப்படுவதால் அதற்கு உள்ஹிய்யா என்று பெயர் வந்தது” என கூறுகின்றார்கள்.
الإمام
أبي حنيفة أنّها واجبة على القادر.
இமாம் அபூ ஹனீஃபா
(ரஹ்) அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பது வாஜிப் என்று கூறுகிறார்கள். பின் வரும் ஹதீஸை
ஆதாரமாகக் கொண்டு
ما رواه
أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم
قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا ))
[حديث حسن].
قال
السّندي رحمه الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو
عقوبة له بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".
அபூ ஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு
வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )
இந்த ஹதீஸிற்கு
விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ (ரஹ்) அவர்கள் “உள்ஹிய்யா கொடுப்பவரின்
தொழுகை தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை அணுகாமல் உள்ஹிய்யா
கொடுப்பவர்களோடு இவர்கள் கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும் என்ற
பொருளிலேயே இதை அணுக வேண்டும். மேலும், இது ஒரு வகையில்
அவர்களைத் தண்டிப்பது போலவும் அமைந்திருக்கின்றது, மேலும்,
இந்த ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா வாஜிப்
எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்” என்று கூறுகின்றார்கள். இதற்கு ஆதாரமாக இன்னொரு
ஹதீஸையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ما رواه
أحمد وأبو داود عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا
أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).
மஃக்னஃப் இப்னு
ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்களே! உங்களில்
(சொந்தமாக) வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத்
وهو قول
الإمام أبي حنيفة، ورواية عن مالك وأحمد، والثّوري، والأوزاعي، وربيعة، والليث،
وهو الظّاهر للأدلّة
அபூஹனீஃபா (ரஹ்)
அவர்களின் இந்த கருத்தையே,
மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இமாம் மாலிக், இமாம் அஹ்மத்,
இமாம் ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ, இமாம் அவ்ஜாயீ,
இமாம் ரபீஆ, இமாம் லைஸ் (ரஹ் அலைஹிம்
) ஆகியோரும் கொண்டிருக்கின்றனர்.
للجمهور
أنّها سنّـة مؤكّدة، قال ابن قدامة في "المغني"(9/345):
" روي ذلك عن أبي بكر، وعمر، وبلال، وأبي مسعود البدري رضي الله
عنهم. وبه قال سويد بن غفلة، وسعيد بن المسيب، وعلقمة، والأسود، وعطاء، والشافعي،
وإسحاق، وأبو ثور، وابن المنذر " اهـ
ஆனால், ஜும்ஹூர் –
பெரும்பாலான அறிஞர்கள் இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப், இமாம் அல்கமா,
இமாம் ஸுவைத் இப்னு ஃகஃப்லா, இமாம் அதாஃ இப்னு அபீ ரபாஹ், இமாம் ஷாஃபீயீ, இமாம் இஸ்ஹாக்,
இமாம் அபூ ஸவ்ர், இமாம் இப்னுல் முந்திர்
(ரஹ் – அலைஹிம்) ஆகியோர் அபூபக்ர், உமர், பிலால்,
அபீ மஸ்வூத் அல்பத்ரீ (ரலி – அன்ஹும்) ஆகியோர் பதிவு செய்திருக்கிற ஹதீஸ்களை மேற்கோள் காட்டி ஸுன்னத்
முஅக்கதா வலியுறுத்தப்பட்ட ஸுன்னத் என்று கூறுகின்றார்கள் என்பதாக இமாம் இப்னு
குதாமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ( நூல்: அல்முஃனீ லி இமாமி இப்னு குதாமா, பாகம்:9,
பக்கம்: 345 )
முதல் இரண்டு
நபிமொழிகளின் அடிப்படையில் வசதி வாய்ப்புள்ள அனைவரும் தனித்தனியாக குர்பானி
கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
எனவே, தனியாக ஆடு,
மாடு குர்பானி கொடுக்க வசதி படைத்தவர்கள் ஆட்டையோ, மாட்டையோ வாங்கி அதை வளர்த்து, பராமரித்து அழகிய
முறையில் குர்பானி கொடுக்க வேண்டும்.
இன்று சமூகத்தில்
தனியாக ஆடு,
மாடு குர்பானி கொடுத்துக் கொண்டிருந்த அநேகம் பேர், வசதி வாய்ப்புகள் இருந்தும் கூட்டுக்குர்பானி கொடுப்பதில் ஆர்வம்
காட்டுகின்றார்கள். ஆனால்,
இது போன்றவர்களுக்கு கூட்டுக் குர்பானியை விட தனியாக
குர்பானி கொடுப்பதே அதிக நன்மைக்கும், சிறப்புக்கும்
உரியதாகும்.
எவைகளை உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்?..
رواه
مسلم عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: (( لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ
عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ
)).
ஜாபிர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “குர்பானி கொடுக்கப்பட வேண்டிய
பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க
வேண்டும்."முஸின்னா"வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது
கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
الثّني
من الإبل: هو ما أكمل خمس سنوات، ودخل في السّادسة.
والثّني
من البقر والمعز: هو ما أكمل سنتين ودخل في الثّالثة.
أمّا
الضّـأن [الكبش والنّعجة] فيجزئ فيها الجَذَع: وهو ما استكمل سنةً على الصّحيح
இந்த ஹதீஸில்
கூறப்பட்ட முஸின்னா என்ற வார்த்தை ஆடு, மாடு ஆகியவற்றில் இரண்டு
வயதை பூர்த்தியடைந்து மூன்றாவது வயதில் நுழைந்த வைகளுக்கு பயன்படுத்தப்
படுகின்றது.
ஒட்டகம் ஐந்து
வயது முடிந்தவுடனும்,
ஆடு,
மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது,
ஆடு,
மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக்
கூறப்படுகின்றது.
முஸின்னா
கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில்
அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னொரு ஹதீஸின் மூலம் அது ஒரு நபித்தோழருக்கு
மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் தெரிந்து கொள்ள முடிகின்றது.
حَدَّثَنَا
مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ
الْمُعْتَمِرِ عَنِ الشَّعْبِىِّ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَطَبَنَا
رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلاَةِ
فَقَالَ « مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسْكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ ،
وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ فَتِلْكَ شَاةُ لَحْمٍ » . فَقَامَ أَبُو
بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ نَسَكْتُ
قَبْلَ أَنْ أَخْرُجَ إِلَى الصَّلاَةِ ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ
أَكْلٍ وَشُرْبٍ فَتَعَجَّلْتُ وَأَكَلْتُ وَأَطْعَمْتُ أَهْلِى وَجِيرَانِى .
فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « تِلْكَ شَاةُ لَحْمٍ » . قَالَ
فَإِنَّ عِنْدِى عَنَاقَ جَذَعَةٍ ، هِىَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ ، فَهَلْ
تَجْزِى عَنِّى قَالَ « نَعَمْ ، وَلَنْ تَجْزِىَ عَنْ أَحَدٍ بَعْدَكَ » .
பர்ரா இப்னு ஆஸிப்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது
தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம்.
யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்)
அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார்.
அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்)
அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த
ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு
இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு
எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) செய்ய அனுமதியில்லை" என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
கூட்டு குர்பானி.....
உள்ஹிய்யாவுக்காக
அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள்
கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
رواه
مسلم عن جابر رضي الله عنه قال: ( نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ،
وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ ).
ஜாபிர் (ரலி)
அறிவிக்கின்றார்கள்: "ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர்
சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு
மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்" ( நூல்: முஸ்லிம் )
எது சிறந்தது?
தற்போது
மேற்குவங்கத்தில் நிலவுகிற அரசியல் குழப்பங்கள், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசின் மாடு அறுக்க விதிக்கப்பட்டுள்ள தடைகள்
மற்றும் நிபந்தனைகள் ஊடாக அங்குள்ள இமாம் ஒருவர் "மாடு குர்பானி"
கொடுக்க வேண்டாம் என்று விடுத்துள்ள வேண்டுகோளை சுட்டிக் காட்டி நாமும் இது போன்று
நம் பகுதியிலும் இதை நடைமுறைப்படுத்தலாமே என்று சிலர் கேட்கின்றனர்.
ஒட்டுமொத்த
இந்தியாவிலும் இது போன்ற தடைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்படுமானால் நாம்
மாற்று கருத்து குறித்து யோசிக்கலாம்.
அப்போதும் கூட
இந்த உம்மத்தின் உலமாக்கள் ஒன்று கூடி நமக்கான சட்ட வழிகாட்டலை வழங்குவார்கள்
அப்போது அதன் படி செயல்படுவதே சாலச் சிறந்ததாகும்.
எனவே, நமது தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் நிலவாத போது நாம் இது போன்ற நிலைப்பாடு
எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
குர்பானிப்
பிராணியை அறுப்பதில் எந்த பிராணியை அறுப்பது சிறந்தது? ஒட்டகமா?
மாடா? ஆடா? என்பது குறித்து இமாம்கள் விளக்கும் போது சிறந்த விளக்கத்தை நமக்கு
வழங்கியுள்ளனர்.
أفضل
الأضاحي : البدنة (البعير) , ثم البقرة , ثم الشاة , ثم شِرْكٌ (اشتراك) في بقرة .
وبهذا قال أبو حنيفة والشافعي واحمد. لقول النبي صلى الله عليه وسلم في الجمعة
:عَنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:- مَنِ
اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا
قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ
بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا
أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ
دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ
بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ
الذِّكْرَ رواه البخاري (881) ومسلم (850)
.
ஒருவர் ஜும்ஆ
நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு
ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில்
வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால்
கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு
கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக்
குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப்
போதனையைக் கேட்கின்றார்கள்”
என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலி, ( நூல்: புகாரி,
முஸ்லிம் )
மேற்கூறிய இந்த
ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு இமாம் அபூ ஹனீஃபா ரஹ் இமாம் ஷாஃபிஈ ரஹ் ஆகியோர் முதலில்
ஒட்டகம்,
இரண்டாவது மாடு, மூன்றாவது ஆடு என்று
வரிசைப்படுத்துகின்றனர்.
ووجه
الدلالة من ذلك : وجود المفاضلة في التقرب إلى الله بين الإبل والبقر والغنم ، ولا
شك أن الأضحية من أعظم القرب إلى الله تعالى ، ولأن البدنة أكثر ثمناً ولحماً
ونفعاً ، وبهذا قال الأئمة الثلاثة أبو حنيفة ، والشافعي ، وأحمد . وقال مالك :
الأفضل الجذع من الضأن ، ثم البقرة ، ثم البدنة ؛ لأن النبي صلى الله عليه وسلم
ضحى بكبشين ، وهو صلى الله عليه وسلم لا يفعل إلا الأفضل
மேலும், விலை மற்றும் அதிக இறைச்சி, அதிக பயன்பாடு ஆகியவற்றை
கவனித்து பார்க்கும் போது இந்த வரிசை முறை உகந்ததாக உள்ளதால் மூன்று இமாம்களும்
இந்த கருத்தை கூறியுள்ளார்கள்.
ஆனால், நபி ﷺ அவர்கள் சிறந்த காரியங்களையே
தேர்ந்தெடுத்து செய்வார்கள். ஆகவே, ஆடு கொடுப்பதே சிறந்தது
என்று இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.
والشاة
أفضل من شِرْكٌ (أي : الاشتراك) في بدنة ; لأن إراقة الدم مقصودة في الأضحية ,
والمنفرد يتقرب بإراقته كله . والكبش أفضل الغنم ; لأنه أضحية النبي صلى الله عليه
وسلم وهو أطيب لحما " انتهى من "المغني" باختصار (13/366) .
மற்ற இமாம்கள் ஆடு
உள்ஹிய்யா கொடுப்பதில் எந்த ஆட்டை உள்ஹிய்யா கொடுப்பது சிறந்தது என்று கூறும் போது
நபி ﷺ அவர்கள் கொடுத்த செம்மறி ஆட்டை கொடுப்பது சிறந்தது
என்று கூறுகின்றார்கள்.
மாட்டிறைச்சி தடை கடந்து வந்த பாதை...
26 மே 2017 அன்று,
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்கும் சட்டங்களின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள விலங்கு சந்தைகளில் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை
செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்தது , இருப்பினும் இந்திய உச்ச
நீதிமன்றம் ஜூலை 2017
இல் கால்நடைகள் விற்பனை மீதான தடையை நிறுத்தி வைத்தது.
அதன் பின்னர் இந்த
சட்டத்தை தழுவி பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை
நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள்
ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச்
சட்டம் அமலில் உள்ளது.
அந்த வரிசையில்
தற்போது மேற்குவங்க பாஜக அரசும் இணைந்துள்ளது.
எந்தவொரு
விலங்கும் முறையான ஆவணம் இல்லாமல் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை
செய்யப்பட்டுள்ளது. மீறினால்
ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது
மேற்குவங்க பாஜக அரசு.
மாட்டை வெட்டினால்
மகாராஷ்டிரத்தில் 5
ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள்,
அரியானாவில் 10 ஆண்டு வரை
கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர்,
லாரி டிரைவர், வெட்டுபவர், சமைப்பவர்,
சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி
தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு போலீசு ஏட்டுகூட வீடு புகுந்து சோதனை
செய்யலாம்.
கால்நடைச்
செல்வத்தைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று (மதச்சார்பற்ற
மொழியில் தந்திரமாகப் பேசுகின்ற,) அரசியல் சட்டத்தின்
வழிகாட்டும் கோட்பாடு பிரிவு 48-ன் கீழ்தான் இச்சட்டம்
பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம்
இயற்றப்பட்டிருக்கிறது.
மிருகவதை தடை
சட்டத்தின் 28-ம் பிரிவு மத சடங்குகளுக்காக விலங்குகளை பலியிடுவதை அனுமதிக்கிறது. ஆனால் 2017 ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் விதித்துள்ள விதிமுறைகள் பலியிடுவதை
தடை செய்கிறது. இதனால் மிருகவதை தடுப்பு தொடர்பான மூல சட்டத்துக்கு எதிராக இந்த
விதிமுறை அமைந்துள்ளது. என்பது கவனிக்கத்தக்கது.
இந்த அடிப்படையில்
மேற்குவங்கத்தில் மாடு வாங்கி குர்பானி கொடுப்பதை தவிர்க்கும் முகமாக மாட்டை
குர்பானி கொடுக்க வேண்டாம் என்று அந்த இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனடிப்படையில்
அங்குள்ள இஸ்லாமியர்கள் மாடு வாங்குவதை தவிர்த்து வருவதால் சந்தையில் மாடுகள் விலை
போகாமல் தேங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பசு பாதுகாப்பு குண்டர்களால் மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும்
தடுக்க முடியும் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.
பாஜக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் மாட்டிறைச்சி யின்
பெயரால் கும்பலாக சேர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித்களை படுகொலை
செய்வது கடந்த பதினோரு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
வீதிகளில்
மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்ல அனுமதிக்கும் அதே வேளையில், உலக சந்தையில் இறைச்சியை விற்று டாலர்களை ஈட்டுவதில் இந்த பாஜக அரசு தீவிரமாக
உள்ளது.
நாடாளுமன்றத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் இந்தியாவில் இறைச்சி
ஏற்றுமதி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வர்த்தக இணை அமைச்சர் ஜிதின்
பிரசாதா,
மாநிலங்கள் வாரியாக புள்ளி விவரங்கள் இல்லை எனவும், மொத்த இறைச்சி ஏற்றுமதி குறித்த பதிவுகளை மட்டுமே அரசாங்கம்
பராமரிப்பதாகவும்கூறினார்.
குறிப்பிட்ட
விவரங்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 ~ 2024-25) இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி 3.22 பில்லியன் டாலரிலிருந்து
4.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என விவரங்களை வழங்கியது. இது இந்திய ரூபாய்
மதிப்பில் தோராயமாக ₹26,726 கோடியிலிருந்து ₹34,528 கோடி வரை அதிகரித்துள்ளது. ( நன்றி: மக்கள் அதிகாரம், 28/03/2026 )
மாட்டிறைச்சியைப்
பிரச்சனையாக்கிக் கலவரத்தைத் தூண்டுவதென்பது இது முதன்முறையல்ல.
1870 இல் சிக் குகா
எனும் நம்தாரி இனத்தவர் பசுவைக் காத்தல் எனும் பெயரால் கலவரத்தில் இறங்கினர். 1882 இல் தயானந்த சரஸ்வதி என்பவர் கோரக்ஷினி சபா என்ற ஒன்றை ஏற்படுத்தி மாட்டிறைச்சி
சாப்பிடுவோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். 1880-90 களில் இந்தியாவில் பல இனக்கலவரங்கள் நடந்துள்ளன. ஆஸம்கார் (1893), அயோத்யா (1912),
ஷஹாபாத் (1917) முதலிய இடங்களில் பெரும்
கலவரங்கள் நடந்திருக்கின்றன.
ஆகவே மாட்டிறைச்சி
பிரச்சனை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே இந்துத்துவத் தீவிரவாதிகளால்
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுதந்திரத்திற்குப் பின்னரும் அவ்வப்போது
இப்பிரச்சனை தலைதூக்க முயன்றுள்ளது. ஆனால் இப்போதோ எப்போதுமில்லாத அளவிற்குத் தலை
விரித்தாடுகிறது.
எனவே, இஸ்லாமிய மார்க்க வழிகாட்டுதல் படி அவ்லவிய்யத் எதை முதன்மைப்படுத்துவது? என்ற முறைமையின் கீழ் மனித உயிர் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம் ஆகும்.
மனித உயிருக்கு
இடையூறு ஏற்படும் எனும் போது அந்த இடங்களில் மாடு குர்பானி கொடுப்பதை தவிர்த்து
விட்டு ஆட்டை குர்பானி கொடுப்பதே சிறந்ததாகும்.
மனித உயிரின் மாண்பு...
خَطَبَنا
النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يَومَ النَّحرِ، قال: أتَدرونَ أيُّ يَومٍ هذا؟
قُلنا: اللهُ ورَسولُه أعلَمُ، فسَكَتَ حتَّى ظَنَنَّا أنَّه سَيُسَمِّيه بغيرِ
اسمِه، قال: أليسَ يَومَ النَّحرِ؟ قُلنا: بَلى، قال: أيُّ شَهرٍ هذا؟ قُلنا:
اللهُ ورَسولُه أعلَمُ، فسَكَتَ حتَّى ظَنَنَّا أنَّه سَيُسَمِّيه بغيرِ اسمِه،
فقال: أليسَ ذو الحَجَّةِ؟ قُلنا: بَلى، قال: أيُّ بَلَدٍ هذا؟ قُلنا: اللهُ
ورَسولُه أعلَمُ، فسَكَتَ حتَّى ظَنَنَّا أنَّه سَيُسَمِّيه بغيرِ اسمِه، قال: أليسَت
بالبَلدةِ الحَرامِ؟ قُلنا: بَلى، قال: فإنَّ دِماءَكُم وأموالَكُم علَيكُم حَرامٌ
كَحُرمةِ يَومِكُم هذا، في شَهرِكُم هذا، في بَلَدِكُم هذا، إلى يَومِ تَلقَونَ
رَبَّكُم،
நபி ﷺ அவர்கள் மினாவில் இருந்தபோது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ எனக் கேட்டார்கள்.
அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். உடனே
அவர்கள் “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர்.
உடனே அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?’’ என்றதும் மக்கள்,
“அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். பிறகு நபி ﷺ
அவர்கள் “(இது) புனிதமிக்க மாதமாகும்!’’ எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது
போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம்,
மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!’’ எனக் கூறினார்கள். ( நூல்: புகாரி )
குர்பானி கொடுப்பதற்குப் பதிலாக அதன்
பணத்தை ஏழைகளுக்கு ஸதகாவாக கொடுக்கலாமா?
இன்று
நம்மில் சிலர் குர்பானி கொடுக்க செய்யும் செலவுகளை நம்மில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு
கொடுக்கலாமே என்று கூறுகின்றார்கள்.
குர்பானி
கொடுப்பதற்குப் பதிலாக அதன் விலையை (பணத்தை) ஏழைகளுக்கு ஸதகாவாக (தர்மமாக)க்
கொடுப்பது கூடாது என்பதே ஷரீஆவின் நிலைப்பாடாகும்.
شرع
الله الأضحية شعيرةً تُراق فيها الدماء تقرّبًا إليه، إحياءً لسنّة الخليلين
إبراهيم ومحمد عليهما الصلاة والسلام. قال تعالى: « فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ »
ஏனெனில், குர்பானி என்பது இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் கால்நடைகளில் (ஆடு மாடு
ஒட்டகம்) ஏதேனும் ஒன்றை அறுத்து (பலி கொடுத்து) இறைவனின் நெருக்கத்தை
பெறுவதற்காகவும்,
தன்னுடைய இரண்டு நேசர்களான நபி இப்ராஹீம் அலை மற்றும் நபி ﷺ அவர்களின் சுன்னத்தை நிறைவேற்றுவதற்காகவும் அல்லாஹ்
ஏற்படுத்தியுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த வணக்கமாகும்.
மேலும், நபி ﷺ அவர்களும் நபித்தோழர்களும் அவர்கள்
எதிர் கொண்ட எல்லா கால சூழ்நிலைகளிலும் உள்ஹிய்யா கொடுத்தே வந்துள்ளார்கள் என்று
வரலாறு கூறுகிறது.
ولذلك
ذهب جمهور العلماء إلى أنّ الأضحية عبادةٌ مقصودةٌ بذاتها لا يقوم مقامها الدفعُ
النقدي؛ فالذبح وإطعام اللحم جزءان من العبادة، بينما النقود صدقة لا تُحقّق
المقصود الأصلي. ومع هذا تبقى الصدقة النقدية عملًا عظيمًا، لكنها لا تُجزئ عن
الأضحية بنية السنة المؤكَّدة.
ஆதலால் தான்
பெரும்பாலான மார்க்க சட்ட அறிஞர்கள் உள்ஹிய்யா என்பது குறிப்பிட்ட ஒரு
வணக்கமாகும். அதற்கு பகரமாக பணத்தை ஸதகா செய்வதன் மூலம் அந்த வணக்கத்தை ஈடு செய்ய
இயலாது என்றும்,
மேலும், உள்ஹிய்யாவில்
பலிப்பிராணியை அறுப்பது அதை பிறருக் உண்ணக் கொடுப்பது என்ற இரண்டு இபாதத்கள்
இருக்கிறது என்றும்,
எனவே, பணத்தை ஸதகா செய்வதன்
மூலமாக உள்ஹிய்யா எனும் அடிப்படை வணக்கத்தை நிறைவேற்றியவராக ஆக முடியாது என்றும்
கூறுகின்றனர்.
மேலும், ஸதகா என்பது பொருளாதாரத்தை செலவிடுவதன் மூலம் மகத்தான நன்மைகளை பெறக் கூடிய
அமலாக இருந்தாலும் வலியுறுத்தப்பட்ட சுன்னாவான உள்ஹிய்யாவின் நிய்யத்தில் ஸதகா
செய்வது உள்ஹிய்யாவின் நன்மையை பெற்றுத் தராது என்று கூறுகின்றனர்.
فالجمهور
(الحنفية، المالكية، الشافعية، الحنابلة) يرى أنّ ذلك لا يجزئ؛ لأنه عدَلَ عن
السنّة بغير عذرٍ شرعي. لكن لا يُحرم فاعلها الثواب؛ إذ يُكتَب له أجر صدقة، لا
أجر أضحية.
الحنفية: لا تُجزئ القيمة عن الذبح لأن الذبح قربة مقصودة بذاتها
المالكية: لا تُجزئ ولو أنفع للفقراء اتباعًا لعمل السلف
الشافعية: لا يُكتفى بالقيمة مع القدرة لزوال المقصود من النسك
الحنابلة: لا تُجزئ إلا لعاجزٍ عن الذبح لمراعاة العجز والضرورة
நான்கு
மத்ஹபுகளின் இமாம்களும் ஒருமித்த கருத்தாக "ஒருவர் மார்க்கத்தில்
அனுமதிக்கப்பட்ட காரணங்கள் ஏதும் இல்லாமல் உள்ஹிய்யா கொடுக்காமல் அதன் பணத்தை ஸதகா
செய்வாரானால் அதற்கு ஸதகாவின் நன்மை மட்டுமே கிடைக்கும். உள்ஹிய்யா கொடுத்த நன்மை
கிடைக்காது. மேலும்,
உள்ஹிய்யாவுக்கு ஈடாகவும் அது ஆகாது. என்று
கூறுகின்றார்கள்.
وقال
ابن حبيب رحمه الله: “وهي أفضل من العتق ومن عظيم الصدقة؛ لأن إحياء السنة أفضل من
التطوع”.
இப்னு ஹபீப் ரஹ்
அவர்கள் கூறினார்கள்: உள்ஹிய்யா கொடுப்பது அடிமையை உரிமை விடுவதை விடவும், மகத்தான ஸதகா வழங்குவதை விடவும் சிறந்ததாகும். ஏனெனில், உள்ஹிய்யா என்பது நபி ﷺ
அவர்களின் சுன்னாவாகும். ஸதகாவும் அடிமையை உரிமை விடுதலும் உபரியான நன்மை தரும்
அமலாகும்".

#குர்பானிக்காக_மாடுகளை_வாங்கி_பலியிடுங்கள்_நாங்கள்_பாதுகாப்பாக_இருப்போம்..
ReplyDeleteமேற்கு வங்க பாஜக முதல்வர் #சுவேந்த்_அதிகாரி..
குர்பானிக்காக மாடுகளை வாங்க வேண்டாம் பலியிட வேண்டாம் என்று மேற்கு வங்க இமாம் ஒருவர் அறிவிப்பு செய்ததை
மேற்குவங்க முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு குர்பானிக்காக மாடுகளை வாங்குவதை தவிர்த்து விட்டனர்
ஆனால் குர்பானிக்காகவே மாடு வளர்த்த மக்கள் அரசு பல கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது
உங்களால் தான் முஸ்லிம்கள் எங்களிடம் மாடு வாங்க பயப்படுகிறார்கள் என்று சொல்லி மேற்குவங்கத்தில் உள்ள இந்துக்கள் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தியதோடு மட்டும் இல்லாமல் இப்போது மாடு விற்கவில்லை என்றால் எங்கள் சில ஆண்டு உழைப்பு எதிர்கால வாழ்வியலும் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படுத்தும் என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் முஸ்லிம் மக்களை அனைத்து சமூக மக்களையும் அழைத்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் நீங்கள் மாடுகளை வாங்குங்கள் பலியிடுங்கள் குர்பானிக்காக என்று அதற்கு மேற்குவங்கம் முழுக்க பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் மேற்குவங்க பாஜக முதல்வர் சுவைந்து அதிகாரி..
இப்ப நம்ம கவலை எல்லாம் இந்த சங்கி குண்டரில் இனி என்ன செய்யப் போறாங்க மாடுகளை பலியிட பாஜக அரசே தூண்டுகிறது
இப்ப பாஜக முதல்வரின் வீட்டின் முன் சென்று போராட்டம் நடத்துவார்களா..?
https://www.facebook.com/share/17LTbjSa9x/